“அஸ்வத் போ” என கட்டளையிட குதிரை ஓட ஆரம்பிக்கவே, “உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்” என கத்தினாள் செந்தமிழ்செல்வி.
ஒரு சுற்று முடிந்து அவளிடம் வரும்போது குதிரை மேலிருந்து இறங்காமல் “நாளைக்குத்தான வர சொன்னேன்” என்றுவிட்டு நில்லாமல் சென்றான்.
செந்தமிழ்செல்வி கோபத்தில் நின்றிருக்க, அதற்குள் குதிரை ஐநூறு மீட்டருக்கு மேல் ஓடியிருந்தது. கத்தி பேசினால் வேறு யாரும் கேட்டுவிடுவார்கள் என்று அடுத்த சுற்று வரும்வரை காத்திருந்தவள், “ஒரு அஞ்சு நிமிஷம் நில்லுங்க, முக்கியமான விசயம் பேசனும்” என்றாள்.
குதிரைமேல் இருந்தபடியே “உன்கிட்ட பேசுற மூட்ல நான் இல்ல, நாளைக்கு பேசலாம், இப்போ ஒழுங்கா போய்டு, அடுத்த ரௌண்ட்கும் இருந்த… அன்னைக்கு மாதிரி தூக்கிடுவேன்” என்று தூக்குவதுபோல் பாவனை செய்து, தூக்காமல் கடந்து சென்றான் வேகத்தோடு.
Advertisement
தன்மையாக சொன்னதுபோலத்தான் இருந்தது குரல். ஆனால் அவனின் முகச்சிவப்பும், புடைத்திருந்த நரம்புகளும் சொன்னது அவனின் கோபத்தை.
“இவன் மேல கோபப்பட வேண்டியவ நானு, ஆனா என்மேல கோபப்படுறான். என்ன ஏதுனே கேட்காம குதிரை ஏறிட்டிருக்கான். வேலையை விட்டுட்டு போனவ திரும்ப வந்திருக்காளே, முக்கியமான காரணமாக இருக்கும் என யோசிக்க வேணாம்… முட்டாள்” என்று புலம்பியபடி வேக நடைபோட்டாள்.
அப்படியே கிளம்பிவிடலாம், நாளை போனில் பேசிக்கொள்ளலாம் என்றுதான் நினைத்தாள். ஆனாலும் நவீனாவின் முகம் மனதை பிசைய, செந்தமிழ்செல்வியின் வேகம் குறைந்தது.
Advertisement
வெகுதூரம் நடந்து வந்தவள், ரைடிங் முடிஞ்சி வந்துதான ஆகனும் என்று ஓர் மரத்தடியில் அமர்ந்தாள். இன்று எப்படியும் ஃப்ளைட்டை பிடிக்க முடியாது. நாளைக்கு எந்த நேரம் விமானம் உள்ளது என்று மொபைலில் ஆராய்ந்து, நாளை பயணங்ளை திட்டமிட்ட பின்னே நிமிர்ந்து பார்க்க, முன்பை விட அதிக வேகத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தான் பொற்செல்வன்.
Advertisement
எவ்வளோ திமிர் இருந்தா இன்னொரு பொண்ணோட கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டு, அன்னைக்கு போல இன்னைக்கும் குதிரை மேல தூக்குவேனு சொல்வான்? என்று முறைத்துப் பார்த்திருந்தாள்.
முறைத்துப் பார்த்ததென்னவோ சில நொடிகள்தான். அன்றைய நிகழ்வு நியாபகம் வர, முன்பை போல உடல் சிலிர்க்கவில்லை, மாறாக கண்ணீர் வந்தது.
பொற்செல்வனும் செந்தமிழ்செல்வியும் நல்ல நண்பர்கள். அது பொற்செல்வன் குடும்பத்தாருக்கும், உடன் வேலை செய்யும் அனைவருக்கும் தெரியும். ஆணும் பெண்ணும் சிரித்து பேசிக்கொண்டாலே காதலென யோசிப்பவர்கள் கூட இவர்களை அப்படி நினைத்ததில்லை.
Advertisement
பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் பகுதி நேர வேலைக்கு வந்தவளிடம் சிறுமியிடம் பேசுவதுபோலத்தான் பேசுவான் பொற்செல்வன். வேலைகள் சொல்லிக்கொடுப்பதும் அப்படித்தான். இப்படியாக மூன்று வருடங்கள் கழிந்த பின்னும் அதே அக்கறையும் கணிவையும் தன் நன்நடத்தையால் தக்க வைத்துக்கொண்டாள் செந்தமிழ்செல்வி.
கல்லூரி படிப்பு முடிந்து முழு நேர வேலைக்கு சேர்ந்த பின்னே, மதிய உணவு இடைவெளி, அல்லது மாலையில் நான்கு மணிபோல் இருவரும் தொழில் சார்ந்து பேசுவார்கள்.
செந்தமிழ்செல்வியிடம் தந்தை குடும்பத்தை பற்றி பேசினால் அவளுக்கு பிடிக்காது என்பதால் படிப்பு சார்ந்துதான் அதிகம் பேசுவான். ஒரு டிகிரி பத்தாது. மேலே படி, என்ன படிக்க விருப்பம்? என்றெல்லாம் கேட்பான்.
அடிக்கடி பேசுவதுதான் என்றபோதும், “என்ன எப்போப்பாரு படிக்க சொல்லிட்டே இருக்கிங்க? படிக்கத் தோணினா படிக்கமாட்டேனா?” என இவள் கோபித்தாள்.
ஆம் கோபிக்கத்தான் செய்தாள். அப்பொழுதெல்லாம் பொற்செல்வனிடம் முறைப்பதோ, கோபப்படுவதோ என்று ஏதும் செய்ததில்ல, செந்தமிழ்செல்விக்கு அப்படி வரவும் வராது.
தன்னிடம் அவள் காட்டும் முதல் கோபத்தை ரசித்தவாறே “வேற என்ன பேசுறது உன்கிட்ட?” என்றான்.
“ஓ… பேச விசயமில்லைனுதான் படிப்பை பத்தி பேசுனிங்களா?” என ஆசுவாசப்பட்டவள், “என்கிட்ட நிறைய விசயம் இருக்கு. அம்மாகிட்ட கூட சொன்னதில்ல, யார்கிட்டயும் சொல்லமாட்டேனு சத்தியம் பண்ணுங்க, உங்ககிட்ட சொல்றேன்” என்று தனது வலக்கையை நீட்ட, அவளின் பாவனையை ரசித்தவாறும் சிரித்தவாறும் அவள் கை மேல் தனது கையை வைத்து சத்தியம் செய்தான்.
பதினொன்றாம் வகுப்பில் தனக்கு வந்த முதல் ப்ரப்போஸலில் ஆரம்பித்து, கல்லூரியில் எத்தனை பேர் காதல் சொன்னார்கள், எப்படி சொன்னார்கள் என்றெல்லாம் விவரித்தாள்.
செந்தமிழ்செல்வி சொல்வதிலேயே யாரிடமும் அவள் மயங்கவில்லை என்பது புரய, “ம்.. இதுக்கெல்லாம் உன் ரியாக்ஷன் என்ன? யாரெல்லாம் இப்போ வரைக்கும் உன்னை ஃபாலோ பண்றாங்க?” என்றான் சுவாரஸ்யமாக.
“அவனுங்க பண்ற வெட்டி வேலைக்கு நான் வேற ரியாக்ட் பண்ணனுமா? ரியாக்ட்லாம் பண்ணமாட்டேன், ஜஸ்ட் அவாய்ட் பண்ணிடுவேன்”
“ஆனா பசங்க விட்டுருக்கமாட்டாங்களே, திரும்ப தொல்லை பண்ணலையா?”
“காட் கிரேஸ், அப்படி ஏதும் நடக்கல, ஆனா சரியான அல்டாப் ராணி, உனக்கெல்லாம் மொட்ட ராஜேந்திரன் மாதிரிதான் மாப்பிள்ளை கிடைப்பானு சாபம் விடுவாங்க” என்றாள்.
பொற்செல்வன் சிரிக்க, “எதுக்கு சிரிக்கிறிங்க?” என முறைத்தாள்.
“இல்ல, அப்படி கிடைச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்” என்று இன்னும் சத்தமாய் சிரிக்க, “நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சிக்கோங்க, எனக்கொன்னும் இல்ல. ஏன்னா… நான் கல்யாணமே பண்ணிக்கப்போறதில்ல” என்றாள் உர்ரென்ற முகத்தோடு.
“ஹேய் செல்வி, அவனுக்கு சாபம்லாம் பலிக்குமா என்ன? உனக்கு நல்ல பையனா கிடைக்கனும்னு நான் ப்ரே பண்ணிக்கறேன், கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லைனு சொல்லி உன் அம்மா நிம்மதியை கெடுத்துடாத” என்றான் உண்மையாக.
‘என் அம்மா நிம்மதியே அவங்க கல்யாணம் செய்ததாலதான் போனது’ என மனதில் நினைத்தபோதும் பொற்செல்வனிடம் அதை சொல்லாமல் மௌனமாய் இருந்தாள்.
அவளின் பெற்றோர் வாழ்க்கைதான் இப்படி நினைக்க வைக்கிறது, வயதிற்கான பக்குவம் வரும்போது புரிந்துகொள்வாள் என்று நினைத்து அவளோடு வாதம் செய்யாமல் “சரி போகலாம் வா” என்று கிளம்பினான்.
அடுத்த நாள் அலுவலகத்திலும் உர்ரென இருக்க, “மைண்ட் சரியில்லனா வீட்டுக்கு போ” என்றான் இவனும் கோபமாக.
“சாரி” என்றாள்.
ஹப்பா… சரியாகிட்டாளா என நினைத்தவன், “போய் வேலையைப் பாரு” என்றான் கனிவாக. பொற்செல்வன் கோபம் போனதும் செந்தமிழ்செல்விக்கு மகிழ்வாகிட, தனது வேலையில் கவனமானாள் வழக்கம்போல.
ஆனால் அன்றிலிருந்து செந்தமிழ்செல்வி மீதான பொற்செல்வன் பார்வை மாறியிருந்தது. தவறாக அல்ல. சிறுமி என்பதிலிருந்து மாறி பருவப்பெண் என்பதாக.
இரண்டு மாதங்கள் கடந்திருக்க, பணி நேரம் முடிந்த பின்னேயும் செந்தமிழ்செல்வி அலுவலகத்திலருந்து கிளம்பவில்லை. பொற்செல்வனை பார்த்து இருபது நாள்களுக்கு மேல் ஆகியிருக்க, இன்று அவன் அலுவலகம் வருவதாக சொல்லியிருந்தான் ஆகையால் அவனின் வருகைக்காக காத்திருந்தாள்.
தொழில் விசயமாக வெளியூர் சென்றிருந்தவன் மதியம் மூன்று மணிபோல் வீட்டிற்கு வந்திருந்தான். குளித்து உண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து அலுவலகம் வர மாலை ஆறு மணியாகியிருந்தது.
“ஹேய் செல்வி, கிளம்பலையா?” என்றபடி உள்ளே வந்தான்.
“உங்களை பார்க்கத்தான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன்” என்றவள் கடந்த இருபது நாள்களாக அலுவலகத்தில் நடந்தவைகளை ஒப்புவிக்க ஆரம்பித்தாள்.
சற்று நேரம் கேட்டவன், “ராகுல்க்கு டெய்லி போன் பண்ணி கேட்டுட்டுத்தான் இருக்கேன், நீ வேற எதுக்கு பேசி டையர்ட் ஆகற? டைமாச்சு, ஆஃபீஸ்ல யாரும் இல்ல, இப்படிலாம் தனியா இருக்காத, கிளம்பு” என்றான் கட்டளையாக.
ஆம், கட்டளையாகத்தான் சொன்னான். வெளி மாநிலம் சென்ற நாளிலிருந்து செல்வி முகம்தான் அதிகம் இம்சித்தது. அவளை காணாமல் இருப்பது இவ்வளவு கடினமா என யோசித்த அடுத்த கணமே மனம் அவளை விரும்புகிறது என்றும் அறிந்துகொண்டான்.
அவளின் அண்ணனோடு கூட சரிவர பேசமாட்டாள் என்று செல்வியின் தாயார் புலம்பியதாக அன்னை சொன்னது நினைவு வர, அலுவலகத்திலும் தன்னிடம் போல் வேறு யாரிடமும் பேசுவதில்லை என்பதை உணர்ந்தான்.
இத்தனை நம்பிக்கையாக தன்னிடம் இருப்பவளிடம் காதல் சொன்னால் பயந்துவிடுவாள். சற்றே நெருக்கத்தை குறைத்துக்கொண்டால் தனக்கும் நல்லது. அவளுக்கும் நல்லது.
இனி இவளிடம் சுத்த முதலாளியாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் முடிவெடுத்திருந்தான் ஆகையால், செல்வியை விரட்டுவதில் குறியாய் பேசினான்.
தன்னை நிராகரிப்பதுபோல் செல்விக்கு தோன்ற, “அம்மாக்கு ஒர்க் முடிக்க இன்னும் ஒன் ஹார் ஆகுமாம், ஆனாலும் நான் கிளம்பறேன்” என்று கிளம்பினாள் செந்தமிழ்செல்வி.
தன்னிடம் பேசத்தான் காத்திருந்தாளோ? என நினைத்தவன் மனம் சந்தோசத்தில் திளைத்தது. இப்படி உணர்வுகள் பொற்செல்வனுக்கு புதிது. இருபத்தி எட்டு வயதை பூர்த்தி செய்யப்போகிறான்.
வெளிநாட்டில் படித்தவன், தொழில் விசயமாக மாதம் ஓர் மாநிலத்திற்கு சென்று வருபவன். பல பெண்களை கடந்து வந்திருக்கிறான். மற்ற பெண்களைப் போல செந்தமிழ்செல்வியை கடப்பது சிரமம் என்று மலைப்பாக நினைத்தபோதும், அவளிடம் காதல் சொல்வதும் சரி என்று தோன்றவில்லை.
பெருமூச்சிழுத்தபடி தனது இருக்கையில் அமர்ந்தவன் வேலை ஏதும் செய்யத் தோன்றாமல் ஒரு மணி நேரம் கழித்து கிளம்பிவிட்டான் வீட்டிற்கு.
அடுத்து வந்த நாள்களிலும் செந்தமிழ்செல்வியிடமிருந்து விலகியே இருந்தான். அலுவலகம் வந்தாலும் வேலையில் கவனமாக இருப்பான். ஓய்வு நேரத்தில் இவர்கள் பேசுவது வழக்கம் ஆகையால் ஓய்வு நேரத்திற்கு சற்று முன்பாகவே கிளம்பிடுவான்.
அவளை நிராகரித்தால் அவள் மீதான விருப்பம் குறையும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அலுவலகத்தில் தனது நேரத்தை குறைத்துக் கொண்டு, தொழிற்சாலையில் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்தினான். தொழில் சார்ந்த ப்ரயாணங்கள் என்று தன்னை பரபரப்பாக வைத்துக்கொண்டான்.
மேலும் இரண்டு மாதம் சென்றிருக்க, மனம் சற்று சமன்பட்டதை போல இருந்தது. வெகு நாள்களுக்குப் பிறகு மனம் அஸ்வத்தை நாட, காலையில் உடற்பயிற்சி முடித்ததும் குதிரைமேல் அமர்ந்து கிளம்பினான்.
இன்று இளவரசன் வருகிறான் என்று அன்னை சொன்னதும், அண்ணனை காணப்பிடிக்காமல், முடிக்க வேண்டிய வேலையிருக்கிறது என்று அன்னையிடம் சொல்லி நேரமாகவே அலுவலகம் கிளம்பியிருந்தாள் செந்தமிழ்செல்வி.
அலுவலகத்தை திறக்கும் உதவியாளர் வராமல் இருக்கவே, தனது தந்தையையும் தந்தை குடும்பத்தையும் நினைத்தவாறு மெல்ல நடைபோட்டவள் குதிரை சத்தத்தை கேட்ட பின்னேதான் இத்தனை தூரம் நடந்து வந்திருக்கிறோமா என்று வியந்தாள்.
வெகுநாள்கள் கழித்து பொற்செல்வன் தரிசனம். கையில்லாத பனியனும் சார்ட்சும் அணிந்திருந்தான். குதிரை கனைத்த பின்னேதான் செந்தமிழ்செல்வியை கவனித்தான்.
தன்னை கண்டதும் மகிழ்வோடு விழிவிரித்தவளிடம் மயங்காமல் இருக்க முடியவில்லை. செந்தமிழ்செல்வியை நோக்கி குதிரையை பயணிக்க வைத்தான். பொற்செல்வனோடு பேசும் ஆவலில் இவளிருக்க, இவளின் ஆவல் முகம் பொற்செல்வனை இம்சிக்க, குதிரையிலிருந்த படியே மின்னல் வேகத்தில் செல்வியை தூக்கி தனக்கு முன்னே அமர வைத்தான்.
சுத்தமாய் இதனை எதிர்பாராத செந்தமிழ்செல்வி, “எனக்கு பயமாயிருக்கு, இறக்கி விடுங்க” என்றாள்.
“நானிருக்கேன்ல? எதுக்கு பயம்?” என கிசுகிசுத்தபடி செல்வியின் கழுத்தில் அழுந்த முத்தமிட்டு “யூ ஆர் மைன் செல்வி, கேர்ஃபுல்லா பார்த்துப்பேன்” என்றான்.
பொற்செல்வனின் பேச்சை கிரகிக்க முடியாமல் சொற்ப நொடிகள் திண்டாடினாலும், பிறகு சுதாரித்து “இறக்கி விடுங்க என்னை” என்றாள் கோபமாக.
பிறகுதான் அவளோடு தனது நெருக்கத்தை உணர்ந்து குதிரையை நிற்க பணித்து, செல்வியின் இடையை பிடித்து கவனமாக இறக்கிவிட்டு தானும் இறங்கினான்.
பலம் முழுதும் திரட்டி கன்னத்தில் அடிக்க ஓங்கினாள். அடி என்பதாக அவள் புறம் முன்னேறி அவளின் உயரத்திற்கு முகத்தை தாழ்த்தினான் பொற்செல்வன். ஓங்கிய கை பலமிழந்து போகவே கை தன்போல் கீழிறங்க, அவளின் கையை பிடித்து “அடி” என்றான்.
இடது கையால் அவனின் நெஞ்சை தொட்டு பின்னுக்கு தள்ளி வலது கையை அவனிடமிருந்து விடுவித்து, திரும்பியும் பாராமல் சென்றுவிட்டாள்.
பொற்செல்வன் செந்தமிழ்செல்வி இருவருக்குமே இந்நிகழ்வுகள் வலம் வர, எத்தனை முறை மன்னிப்பு கேட்டுட்டேன், மன்னிக்கவும் இல்ல, என்னை நம்பவும் இல்ல.
அதனாலதான வேலையை விட்டுட்டு போனா? அப்புறம் என்ன இதுக்கு என்னை பார்க்க வந்துருக்கா? என்ற கோபத்தோடே சுற்றிக்கொண்டிருந்தவன், “அஸ்வத், வீட்டுக்கு போலாம்” என்று குதிரையிடம் பணிக்க, அஸ்வத் முதலாளியின் உத்தரவை ஏற்று பாதையை மாற்றி பயணித்தான்.
தன்னைத் தாண்டித்தானே செல்ல வேண்டும் என்று இவன் வருகையை எதிர்பார்த்து அமர்ந்திருந்தவள் எழுந்து நிற்க, “அஸ்வத் வேகமா போ” என்று பொற்செல்வன் கட்டளையிட, நிற்கமாட்டான் என்று செல்விக்குப் புரிய, தன்னிடம் வரும் வரை காத்திருந்து அருகே வரும் நேரம் குதிரைக்கு நேர் எதிரே போய் நின்றாள்.
“உன் ஹெல்ப்ல என் அண்ணிக்கு வாழ்க்கை அமைய வேண்டாம். அவங்களை பார்த்துக்க நாங்க இருக்கோம்” என்று குதிரையை விரட்ட, “நில்லு அஸ்வத்” என்று தன் கட்டளைக்கு குதிரையை பணிய வைத்து, “அவங்க உயிர் பிரச்சனை இது” என்றாள் மன்றாடலாக.
“என் அண்ணியை பார்த்துக்க எனக்கு தெரியும் போடீ. இன்னொரு முறை என் முன்னாடி வந்த…” என்று எச்சரித்து அவ்விடம்விட்டு விலகினான் பொற்செல்வன்.