Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 16

அத்தியாயம் 16 

 

வந்தியத்தேவன் மணிமேகலை இருவரும் நேரே வீட்டிற்கு வந்து பத்தும்மாவிடம் விஷயத்தை மகிழ்ச்சியாக கூறினார்கள். தெரிந்த விஷயம் தான்.. இருந்தாலும் இருவரும் தங்கள் நேசத்தை பரிமாறிக்கொண்டதை கேட்டதும் உள்ளமெல்லாம் பூரித்து போனது அவருக்கு. எப்பொழுதும் லொட லொட என்று பேசுபவருக்கு வார்த்தைகள் இன்றி போனது.

 



Advertisement

தனக்கு பின்பு மகன் தனியாக நின்றுவிடுவானோ என்ற கவலை பல நாட்களாக அவருக்குள் அரித்து கொண்டு தான் இருந்தது.

 

அதன் பின் எல்லாம் மின்னல் வேகம் தான். மணிமேகலை நான் வராஹி வல்லபன் கிட்ட முதலில் சொல்லிடறேன், என்று கூற..

Advertisement

 

Advertisement

“நீ அவங்ககிட்ட சொல்லிடு மேகா. உங்க அப்பா நம்பரை கொடுத்திட்டு போ நான் அவர் கிட்ட பேசிடறேன்”

 

“சரி பத்து.. நான் உங்களுக்கு நம்பர் மெசேஜ் பண்ணிடறேன்.”

Advertisement

 

வந்தியத்தேவன் அமைதியாக அம்மாவின் பரபரப்பை ரசித்துக் கொண்டிருந்தார்.

 

மணிமேகலைக்கு அவர் பெற்றோர்கள் சம்மதத்தை பற்றி எல்லாம் கவலை இல்லை. பிள்ளைகள் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற பரிதவிப்பு மட்டுமே இருந்தது.

 

பள்ளியில் இருந்து வந்ததும், இருவரையும் அமர வைத்து பக்குவமாய் விஷயத்தை கூறினார். 

 

இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சி.

 

“சூப்பர் அத்தை” என்று ஆர்பரித்துவிட்டு வராஹி வீர்யாவிடம் சொல்ல ஓடிவிட்டாள்.

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் வீர்யாவும் சம்பவ்வும் வந்து விட்டார்கள்.

 

“உடனே ஓகே எதுக்கு சொன்ன வரா?அத்தை சொன்னாலும் நாம சரியான்னு பார்க்கணும் இல்ல?” என்று ஆரம்பித்தாள் வீர்யா. 

 

மணிமேகலைக்கு சிரிப்பாக வந்தது. ‘இந்த வாண்டுக்கு எல்லாம் விவரத்தை பாரேன்’ என்று நினைத்து கொண்டார்.

 

“அத்தை, சொல்லுங்க அவங்க சொந்த ஊர் எது? மிலிட்டரி மேன்க்கு கூட பிறந்தவங்க யார் எல்லாம். கல்யாணம் ஆனதும் இந்த வீட்ல தானே  இருப்பாங்க?” என்று கேட்டாள் வீர்யா.

 

வீர்யா பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வந்தியத்தேவனும் பத்தும்மாவும் வந்து விட்டார்கள்.

 

“அரை டிக்கெட், என்ன கேள்வி கேட்கிற நீ?” என்று ஆரம்பித்தார் பத்தும்மா.

 

“நாங்க பொண்ணு வீட்டுக்காரங்க. நாலையும் கேட்க தானே செய்வோம்.”

 

“அடேங்கப்பா…”

 

“விடுங்க ம்மா, பிள்ளைங்க மேகா மேல உள்ள பாசத்துல தானே கேட்குறாங்க. நம்ம பதில் சொல்லுவோமே” என்றார் வந்தியத்தேவன் இலகுவாகவே.

 

அதன் பின் வீர்யா கேட்ட கேள்விகளுக்கு அவள் வயதிற்கு தெரிந்துகொள்ளும் அளவில் பதில் கூறினார் வந்தியத்தேவன்.

 

வராஹியும் வல்லபனும் அத்தை பக்கத்தில் அமர்ந்து வேடிக்கை மட்டும் பார்த்தனர்.

 

“அவ்வளவு தானா இன்னும் வேற எதாவது கேட்கணுமா? இப்ப மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேள்வி கேட்கலாமா?” என்றார் பத்தும்மா நொடிப்பாக.

 

“அத்தை எதுக்கும் இந்த மாப்பிள்ளை வேணுமான்னு யோசிச்சுக்கோங்க.. மாப்பிள்ளை என்னமோ நல்லவர் தான், ஆனா மாமியார்க்கு தான் வாய் ஜாஸ்தி” என்று வீர்யா கூற, 

 

“உன்னை இப்ப என்ன பண்றேன் பாரு, எனக்கா வாய் ஜாஸ்தி” என்று பத்து வீர்யாவை துரத்த, அவள் வீட்டை சுற்றி ஓட, வேண்டாம் பத்தும்மா என்று வராஹி பத்தும்மாவை பிடித்து தடுக்க, “எங்க வீர்யா கேட்டதுல என்ன தப்பு” என்று சம்பவ் குறுக்கே புக, ஒரே தள்ளு முள்ளானது..

 

அனைவர் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்து இருந்தது.

 

சிறிது நேரத்தில் நிவேதாவும் நிரஞ்சனும் வந்து மணிமேகலை வந்தியத்தேவன் இருவருக்கும் வாழ்த்து கூறினார்கள்.

 

பிள்ளைகள் ட்ரீட் கேட்கவும் வந்தியத்தேவன் இன்று இரவு அனைவரும் வெளியே சென்று உண்ணலாம் என்று கூறினார்.

 

சரி என்று அனைவரும் அங்கே அமர்ந்து சிறிது நேர பேசிக்கொண்டிருந்தார்கள்.

அங்கே டைனிங் டேபிளில் இருந்த பூசணிக்காயை அவ்வப்பொழுதது பார்த்து சிரித்துக்கொண்டார் பத்தும்மா.

 

“என்ன ம்மா நீங்களா பூசணிக்காயை பார்த்து சிரிச்சிட்டு இருக்கீங்க” என்று நிவேதா கேட்க, பூசணிக்காய் கதையை போட்டு உடைத்தார் பத்தும்மா..

 

அனைவரும் கொல்லென்று சிரிக்க.. மணிமேகலை வந்தியத்தேவன் இருவருக்கும் வெட்கமாக போனது.

 

“ஏன்டா.. உனக்கு லவ்வை சொல்ல வேற ஒன்னுமே கிடைக்கலையா.. இப்படியா என் மானத்தை வாங்குவ?” என்றார் வந்தியதேவனை பார்த்து.

 

“நீ தானேம்மா நான் மெதுவா யோசிச்சு சொல்றேன் சொன்னதுக்கு அதுக்கு எல்லாம் எனக்கு பொறுமை இல்ல.. பருப்பு இல்லன்னு அவசரப்பட்டீங்க… அதான் உடனே சொல்ல முடிவு செஞ்சுட்டேன்.. அங்க இனிப்பா இது மட்டும் தான் இருந்துச்சு..”

 

“முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிற கதை மாதிரி இது முழு பூசணிக்காயை வச்சு காதல் சொன்ன கதை பத்தும்மா” என்றாள் வீர்யா.

 

பின் திட்டமிட்டபடி அனைவரும் வெளியே சென்று அன்று இரவு உணவை முடித்து வீடு திரும்பினார்கள். 

 

மறுநாள் வந்தியத்தேவன் பத்தும்மாவுடன் மணிமேகலையும் மருத்துவமனைக்கு சென்றார்.

 

மருத்துவர் அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இனி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து சென்றால் போதும் என்று கூறவே, மூவருக்கும் மேலும் நிம்மதியானது.

 

“தேவ், வீட்டுக்கு போறதுக்கு முன்ன ஏதாவது கோவிலுக்கு போய்ட்டு போலாம்டா” என்றார். பின் கோவிலுக்கும் சென்று வீடு திரும்பினார்கள்.

 

வீட்டிற்கு வந்ததும், பத்தும்மா சுந்தர்ராஜனுக்கு அழைத்தார்.

 

“சொல்லும்மா தங்கச்சி.. எப்படி இருக்க? உடம்பு எல்லாம் பரவாயில்லையா?”

 

“நல்லா இருக்கேன் அண்ணா. ஆமா நீங்க என்ன சென்னை பக்கம் ஆளே காணும்?”

 

“அடுத்த வாரம் வர்றேன் ம்மா.. என்ன விஷயம், மணி நீங்க போன் நம்பர் வாங்கி இருக்கிறதா சொன்னுச்சு..”

 

“என்ன விஷயம்னு சொல்லலையா?”

 

“இல்லையே தங்கச்சி..”

 

“எல்லாம் நல்ல விஷயம் தான். என் பையனுக்கு உங்க பொண்ணை கேட்கலாம்னு தான்”

 

“என்ன? என்ன சொல்றீங்க?” அவருக்கு ஒரு நிமிடம் கேட்டது உண்மை தானா என்று நம்ப முடியவில்லை.

 

“என் மகன் வந்தியத்தேவனுக்கு உங்க மகள் மணிமேகலையை கல்யாணம் செஞ்சு வைக்க கேட்கிறேன்” என்று நிறுத்தி நிதானமாக கூறினார் பத்தும்மா.

 

“ம்மா.. தங்கச்சி.. எனக்கு.. நான்..வந்து..மணி..நான்” வார்த்தைகள் இன்றி  தடுமாறினார்.

 

“என்ன அண்ணே நீங்க, தேவ் லவ் சொன்னப்ப மேகா கூட இப்படி பதில் சொல்ல முடியாம தடுமாறலை.. நீங்க என்ன இப்படி உளர்றீங்க?”

 

“என்னது? லவ்வா?”

 

“என்ன அண்ணா நீங்க.. இப்படி எல்லாத்துக்கும் அதிர்ச்சி ஆனா எப்படி?”

 

“நீங்க திடீர்னு இப்படி கேட்கவும் எனக்கு சந்தோஷத்துல வார்த்தையே வரலை.. மணி என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். மணிக்கு விருப்பம்னா எனக்கு இதைவிட சந்தோசம் என்ன இருக்க முடியும் சொல்லுங்க?”

 

“நான் தான் பெரியவங்க முதல்ல பேசினா தான் நல்லா இருக்கும்னு சொல்லிட்டேன். அதான் மேகா சொல்லலை. நீங்க இனி அவகிட்ட பேசுங்க.. அப்படியே சீக்கிரம் வீட்ல பேசிட்டு கிளம்பி வரப்பாருங்க..” 

 

“சரிம்மா .. ரொம்ப சந்தோசம். நான் வீட்ல பேசிட்டு திரும்ப கூப்பிடுறேன்..”

 

————————

உடனே மகளுக்கு அழைத்துவிட்டார். 

“அம்மாடி மணி..” குரல் கரகரத்தது தந்தைக்கு.

 

“பத்து பேசினாங்களா அப்பா? உங்களுக்கு ஓகேவா அப்பா?”

 

“நல்ல தம்பி ம்மா வந்தியத்தேவன். உனக்கு பொருத்தமா இருப்பாரு. நல்ல குடும்பம். நம்ம கும்பிடற கடவுள் நமக்கு வழி காட்டிட்டாரு மணி”

 

“அவங்க தான் அப்பா முதலில் விருப்பம்ன்னு சொன்னாங்க. எனக்கும் பிடிச்சிருந்தது ப்பா. அதான் நான் சம்மதம் சொல்லிட்டேன்”

 

“உன் அருமை தெரிஞ்சு கேட்டிருக்காரு டா.. ரொம்ப சந்தோசம் டா”

 

மணிமேகலை சுருக்கமாக அனைத்தையும் கூறினார். வராஹியையும் வல்லபனையும் அவர்கள் வீட்டு பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதை கூறியதும் சுந்தர்ராஜனுக்கு இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று எண்ணி உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது.

 

“அப்பா சீக்கிரம் கிளம்பி வர்றேன். வந்து மத்ததை எல்லாம் நேர்ல பேசிக்கலாம்” என்று கைபேசியை வைத்துவிட்டு,

 

“பரிமளா.. பரிமளா.. பரி.. எங்க இருக்க? சீக்கிரம் வா” என்று சத்தமாக மனைவியை கூப்பிட்டார்.

 

 சுந்தர்ராஜனின் கூவலில் என்னமோ ஏதோவென்று ஓடி வந்தார் பரிமளா.. ஹரியும் சாம்பவியும் கூட வந்துவிட்டனர்.

 

“விஷயம் தெரியுமா பரிமளா? அய்யோ என்னால நம்பவே முடியலையே!

மருமகளே வீட்ல ஏதாவது இனிப்பு இருந்தா கொண்டு வாம்மா..”

 

சாம்பவியும் உள்ளே சென்று இனிப்பை கொண்டு வந்தாள்.

 

“என்னன்னு சொல்லிட்டு தான் ஆர்ப்பாட்டம் பண்ணுங்களேன்..”

 

“பரிமளா, நம்ம கும்பிட்ட சாமி கண்ணை திறந்திச்சு.. நம்ம மணிக்கு ஒரு நல்ல வழியை காட்டிடுச்சு..” மனிதர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்.

 

“என்ன ப்பா விஷயம்?” என்றான் ஹரி. 

 

“முதல்ல எல்லாரும் இனிப்பை சாப்பிடுங்க சொல்றேன்..”

 

அனைவரும் ஆவலுடன் அவரையே பார்க்க,

 

“நம்ம மணியை, சென்னைல மணி வீட்டு மாடியில் இருக்காங்கல்ல  பத்மாம்மா அவங்க பையனுக்கு கல்யாணம் செஞ்சுக்க சொல்லி கேட்கிறாங்க” 

 

சுந்தர்ராஜன் சொன்னதை கேட்டதும் அம்மாவும் ஹரியும் உறைந்த நிலைக்கு சென்றுவிட்டனர். சுந்தர்ராஜன் போல அதிர்ச்சியோ மகிழ்ச்சியோ அடைந்தனரா பரிமளாவும் ஹரியும் என்று தெரியவில்லை.

 

சாம்பவி தான் , “ரொம்ப நல்ல விஷயம் மாமா.. பத்தும்மா ரொம்ப நல்லவங்க. அவங்க பையன் பார்க்கவும் ஆள் நல்லா இருந்தாரு.. அன்னைக்கு புத்தக கண்காட்சிக்கு போனப்ப ரொம்ப கண்யமா நடந்துக்கிட்டாரு. உண்மையிலும் அண்ணிக்கு  பொருத்தமா இருப்பாங்க மாமா” என்றாள் மகிழ்ச்சியுடன்.

 

“நல்லா கேட்டீங்களா? அவங்களா பொண்ணு கேட்டாங்களா? இதுல வேற எதாவது காரணம் இருக்க போகுது” என்றார் பரிமளா.

 

“உண்மையிலே நீ தான் மணியோட அம்மாவான்னு எனக்கே சந்தேகமா இருக்கு” என்றார் சுந்தர்ராஜன் கடுப்பாக.

 

“பொண்ணு மேலே அக்கறை இருக்கிறதுனால தான் நாலையும் யோசிக்க வேண்டியதா இருக்கு. அந்த அம்மாக்கு மணியை பிடிக்கத்தான் செய்யும். ஏன்னா அவங்க முடியாம இருக்கிறப்ப இவ தானே கவனிச்சு பார்த்துகிறா, அதனால நர்ஸ் வேலை பார்க்க கட்டிக்கலாம்னு நினைக்கிறாங்களோ என்னமோ?” என்றார் பரிமளா.

 

“கரெக்டா பாயிண்ட் பிடிச்ச ம்மா… நான் கூட எப்படி மணியை கேட்டாங்கனு யோசிச்சுட்டு இருந்தேன்” என்றான் ஹரி.

 

“உனக்கும் உன் மகனுக்கும் தான் என் பொண்ணோட அருமை புரியலை. அவங்களுக்கு அது புரிஞ்சு இருக்கு. அந்த தம்பி மணிமேகலையை மனசார பிடிச்சு போய், மணிகிட்ட அவர் காதலை சொல்லி தான் சம்மதம் கேட்டிருக்காரு”

 

“என்னங்க சொல்றீங்க?”

 

“ நிஜமாலுமேவா? மணியை காதலிச்சாரா?” என்று வாய் பிளந்தான் ஹரி..

 

“ஒரு வேலை அந்த பையனுக்கும் எதாவது வியாதியா இருக்குமோ?” என்று பரிமளா கேட்கவும், வெறுத்தே போய் விட்டது சுந்தர்ராஜனுக்கு.

 

சாம்பவிக்கும் எரிச்சலாக வந்தது.

 

“எப்படி நீங்க ரெண்டு பேரும் இப்படி பேசுறீங்க.. சீ சீ” என்று முகத்தை சுழித்தாள்.

 

“இதுங்க எல்லாம் திருந்தாத ஜென்மம்.. எவ்வளவு சந்தோசமா இந்த விஷயத்தை சொன்னேன்.. நீயம் நானும் மட்டும் சென்னை போலாம் ம்மா மருமகளே, இவங்ககூட எல்லாம் பேசுறதே வேஸ்ட்” என்று எழுந்து சென்று விட்டார்.

 

சாம்பவியும் ஹரியை முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். 

 

மீண்டும் இரவு உணவு வேலையின் போது  “எங்களுக்கும் சந்தோஷம் தான் .. ரொம்ப பண்ணாதீங்க.. நாங்க என்ன சொல்ல வர்றோம்ன்னு முழுசா கேட்காம” என்று ஆரம்பித்தார் பரிமளா. 

 

“நீ இனி ஒன்னும் சொல்ல வேண்டாம்.. என் பொண்ணு கல்யாணத்தை இனி நானே பார்த்துகிறேன்.. ஆனா ஒன்னு, அதுக்கு முன்ன நம்ம கல்யாணத்தை நான் முடிச்சுக்கலாமான்னு யோசிக்கிறேன்“

 

பரிமளாவிற்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. எப்பொழுதும் பல விஷயங்களில் இவருக்கும் சுந்தர்ராஜனுக்கும் ஒத்து வராது. ஆனால் எவ்வளவு கோவம் வந்தாலும் இப்படி ஒரு வார்த்தை அவர் வாயில் இருந்து வந்ததில்லை.

அவர் மகனை யோசனையாக பார்க்க,

 

ஹரியோ சாம்பவியை பாவமாக பார்த்து கொண்டிருந்தான்.

 

“நீங்க சுயநலவாதின்னு தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஆனா நீங்க மனசாட்சியே இல்லாதவருன்னு இப்ப தான் தெரியுது.. நிஜாமுலுமே உங்க கூட வாழத்தான் வேணுமான்னு என்னை யோசிக்க வச்சிட்டீங்க” என்று சற்று முன்பு தான் தங்கள் அறையில் சாம்பவி ஹரியை ஒரு காட்டு காட்டி இருந்தாள்.

 

“நம்ம வாய் தான் ஹரி நமக்கு எதிரி” என்றார் பரிமளா மகனிடம் மெதுவாக.

 

“கொஞ்ச நாளைக்கு அடக்கி தான் வாசிக்கணும் போல ம்மா. இல்லைனா எல்லாரும் சேர்ந்து நம்மளை கழட்டி விட்ருவாங்க.”

 

சுந்தர்ராஜன் அடுத்து பெரிய மகள் வீட்டிற்கு நேரில் சென்று விஷயத்தை கூறினார். 

 

மகாவிற்கும் வெங்கட்டுக்கும் மிகவும் மகிழ்ச்சி. 

 

“என்ன செய்யணும்னு சொல்லுங்க மாமா, நாங்க செய்றோம்” என்றார் வெங்கட் உண்மையான அக்கறையுடன்.

 

“நிச்சயம் கல்யாணம் எல்லாம் எப்ப என்னன்னு பேசிட்டீங்களா அப்பா” என்றார் மகா.

 

“இல்ல மகா, எங்க உங்க அம்மா தானே அடுத்து என்ன எதுன்னு பேசணும். அதைவிட்டுட்டு என்னென்னமோ பேசுறா. எனக்கு மனசே விட்டு போச்சு..”

 

“விடுங்க மாமா.. அத்தை பத்தி தான் தெரியுமே.. நாம இப்ப மணியை பத்தி மட்டும் யோசிப்போம்” என்றார் வெங்கட்.

 

“அவளுக்கு நாம நியாயம் செய்யலன்னு ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கு அப்பா. நான் உங்க கூட இருக்கேன் ப்பா. நாம எந்த குறையுமில்லாம மணி கல்யாணத்தை நல்ல படியா முடிப்போம்” என்றார் மகா.

 

மகளும் மாப்பிள்ளையும் பேசினது மனதிற்கு ஒரு தெம்பை கொடுத்தது. பின் மகா குடுத்த காஃபியை குடித்துவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

 

“வெங்கட், எனக்கு வர கோவத்துக்கு பேசாம உங்க அத்தையை டைவோர்ஸ் பண்ணிட்டா என்னன்னு கூட தோணுது” என்றார் வீட்டில் நடந்த சம்பாஷணைகளை கூறி.

 

“ஏற்கனவே நம்ம குடும்பத்துல ஒருத்தன் வாங்குனது போதாதா? அது என்ன அவார்டா.. வாங்கி வாங்கி வச்சு அழகு பார்க்க? “ என்றார் மகா சூடாக.

 

“அது இல்ல மகா.. மனசு ஆற மாட்டேங்குது.. அதுவுமில்லாமல் சாம்பவி பொண்ணு தான் பாவம். உன் தம்பி குணத்துக்கு எப்படி தான் பொறுத்து போகுதோ?”

 

“அது எல்லாம் கடவுள் ஜாடிக்கேத்த மூடியா தான் சேர்த்து வைப்பாரு. சாம்பவியை கல்யாணம் செஞ்சதுக்கு அப்புறம் ஹரி எவ்வளவோ நல்ல விதமா  மாறி இருக்கான். என்ன பிறவி குணம்னு ஒன்னு இருக்கு இல்ல. அது அப்பப்ப தலை தூக்க தான் செய்யும். அவங்களை விடுங்கப்பா.. நீங்க கல்யாண விஷயத்தை பாருங்க” என்றார் மகா.

 

“நான் முதல்ல சென்னை போய் அவங்க கூட நேர்ல பேசிட்டு அப்புறம் என்னன்னு தகவல் சொல்றேன்” என்று கூறி மகிழ்ச்சியாகவே புறப்பட்டார்.

 

அடுத்து பெரிய மகனிடம் அழைத்து விஷயத்தை கூறினார்.

 

“ரொம்ப சந்தோசம் அப்பா..” என்றார் ராம்பிரசாத் உடனே.

 

பின் மாப்பிள்ளை பற்றி விசாரித்து, “நான் மணிகிட்டயும் பேசுறேன் ப்பா” என்று வைத்துவிட்டார்.

 

எங்கே பெரிய மகன் தன் பிள்ளைகள் பற்றி மட்டும் சுயநலமாக யோசிப்பானோ என்று சஞ்சலத்தோடு தான் அவருக்கு அழைத்து பேசினார் சுந்தர்ராஜன். ராமின் பதில் அவருக்கு ஒரு நிம்மதியை கொடுத்து.

 

பரிமளா தானும் சென்னைக்கு வருகிறேன் என்று எவ்வளவு குட்டிக்கர்ணம் அடித்தும் அவரை உடன் அழைத்து செல்லவில்லை சுந்தர்ராஜன்.

 

மறுநாளே அவர் மட்டுமே மகளை பார்க்க சென்னை வந்து இறங்கினார் சுந்தர்ராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!