Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 15

அத்தியாயம் 15.

அந்தி மாலை நேரம்…. வானம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க… ஃபோன் பேசியபடி மொட்டை மாடிக்குச் சென்ற ராஜீவனுக்கு அங்கே கண்ட காட்சி ஒரு நொடி அவனை அப்படியே ஆச்சரியத்தில் நிறுத்தியது.அவனது கண்கள் விரிந்தன.

நீல நிற சங்குப் பூக்கள்…!அவனை வரவேற்பது போல மொட்டை மாடி முழுவதும் நீல நிறத்தில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.

இத்தனை சங்குப்பூக்களை…
எதற்காக வளர்க்கிறாள்?என்ற கேள்வி அவனுள் எழுந்தது.



Advertisement

அவன் அவளருகில் செல்ல,ரஞ்சிதா அவனைப் பார்த்ததும்,எதுவும் பேசாமல் முன்புபோல் அமைதியாகத் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

அவனுடைய பார்வை அவள் கையில் இருந்த பூக்களின் மீது விழுந்தது.

“இவ்வளவு பூவை என்ன பண்ணப் போற?”எனக் கேட்டான்.

Advertisement

ரஞ்சிதா ஒரு நொடி அவனைப் பார்த்துவிட்டு,“அது உங்களுக்கு தேவை  இல்லாத விஷயம் …” என்று மெதுவாகச் சொன்னாள்.

Advertisement

அவளுடைய அந்த அலட்சியம் ராஜீவனின் மனதைக் குத்தியது.

அதற்குள் சித்தார்த் அங்கே இருந்த தண்ணீரைத் தன் மீது இரைத்துக் கொண்டு ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த ரஞ்சிதா பதறியபடி அவன் அருகே சென்று,“உனக்கு எவ்வளோ டைம் சொல்றது சித்து… தண்ணில விளையாடாதேன்னு! சளி பிடிச்சுக்கும் இல்லையா?”என்று செல்லமாகக் கடிந்து கொண்டவள், அருகில் கிடந்த துண்டால் அவன் முகத்தையும் தலையையும் துடைத்தாள்.

Advertisement

“வா… கீழே போய் டிரெஸ் மாத்தலாம்.”
என ஒரு கையில் பூக்கள் நிறைந்த கூடையையும், மறுகையில் மகனையும் பிடித்துக் கொண்டாள்.

தண்ணீரில் விளையாடிய உற்சாகத்தில் சித்தார்த் இன்னும் துள்ளிக் கொண்டே படி இறங்க….

“சித்து… மெதுவா வா. படியில பார்த்து கால் வை.”என ஒவ்வொரு படியிலும் அவனுடைய கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அக்கறையுடன்  அழைத்துச் சென்றாள்.

அவர்கள் இருவரும் படிகளில் இறங்கிச் செல்ல..ராஜீவன் மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

கீழே இறங்கிக் கொண்டிருந்த ரஞ்சிதாவையே அவனுடைய கண்கள் பின்தொடர்ந்தன.

காற்றில் மெல்ல அசைந்த அவளுடைய கூந்தல்…ஒரு கையில் நீல நிற சங்குப்பூக்கள் நிறைந்த கூடை…
மறுகையில் தன் மகனின் கையை இறுக்கமாகப் பற்றியிருந்த விதம்…

“மெதுவா… பார்த்து…” என்று ஒவ்வொரு அடியிலும் மகனைப் பார்த்து பார்த்து அழைத்துச் சென்ற அந்த அக்கறை…
அவளுடைய முகத்தில் இருந்த அந்த அமைதி…

இவையெல்லாம் அவனை அவளிடம் நிலை கொள்ளச் செய்தது.அவள் அழகாக இருப்பதை அவன் இதற்கு முன்பும் பார்த்திருக்கிறான்.
திருமண நாளிலும்… அதன்பின் அவள் வீட்டில் இருந்தபோதும்… அவனுடைய வாழ்க்கையில் அவள் இருந்த ஒவ்வொரு நாளிலும் அவளைப் பார்த்திருக்கிறான்.

ஆனால்…இன்று அவள் அவனுக்கு வேறொரு பெண்ணாகத் தெரிந்தாள்.
அழகாக மட்டுமல்ல… பிடித்தமானவளாகவும் தெரிந்தாள்.
அந்தப் பிடித்தம் இன்று புதிதாகத் தோன்றியதல்ல.
அது எப்போதோ அவனுக்குள் வந்துவிட்டது.அதை அவன் உணரவில்லை. உணர்ந்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

அதற்குக் காரணம் ‘பிரியா’…
அவளுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன்…’
என்ற ஒரே எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு, என் வாழ்க்கையை நானே தண்டித்து விட்டேன். ஆனால்… அந்தத் தண்டனையை அனுபவித்தது நான் மட்டும் அல்ல. ரஞ்சிதாவும்தான்…

எங்களுக்கு கிடைச்ச திருமண வாழ்க்கையும்… என்னை எதுக்கும் வற்புறுத்தாம எனக்காகக் காத்திருந்த அவளையும்…
என்னுடைய முடிவால காயப்படுத்திட்டு இருந்திருக்கே…

‘பிரியாவுக்கு நான் துரோகம் செஞ்சிட்டதா நினைச்சு… ரஞ்சிதாவுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை நான் ஏன் கொடுத்தேன்?உண்மையில்… நான் துரோகம் செஞ்சது யாருக்கு?பிரியாவிற்கா?’என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவன்,அடுத்த நொடியே கீழே சென்ற ரஞ்சிதாவைப் பார்த்தான்.

அவள் மகனின் ஈரமான ஆடையை மாற்றுவதற்காக அவசரமாகச் சென்று கொண்டிருந்தாள்.
அந்தக் காட்சியைப் பார்த்ததும் அவனுடைய மனம் மெதுவாக பதில் சொல்ல ஆரம்பித்தது.

‘இல்லை…நான் துரோகம் செஞ்சது பிரியாவிற்கு அல்ல, ரஞ்சிதாவிற்கு என…’

மேலும், இந்த ரஞ்சிதாவை… எப்படி என்னால் இரண்டு வருடங்களாக இவ்வளவு தூரம் தள்ளி வைக்க முடிந்தது?’என மற்றொரு கேள்வியும் எழுந்தது. ஆனால் அந்த கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

‘இரண்டு வருடங்களாகத் தான் காதலுக்கு துரோகம் செய்கிறோம்’  என நினைத்து….ஒரு பெண்ணின் வாழ்க்கையையே தண்டித்திருக்கிறான்.

அதுவும்…தன் விருப்பமின்றி தன் மீது எந்த உரிமையையும் எடுத்துக் கொள்ளாமல்,தன் மகனை மட்டும் அணைத்து வாழ்ந்து கொண்டிருப்பவளை..

ராஜீவன் மெதுவாகத் தன் கண்களை மூடினான்.
அவனுக்குள் முதல் முறையாக ஒரு உண்மை தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.

அவன் ரஞ்சிதாவை வெறுத்ததில்லை.
அவளிடம் இருந்து தப்பித்துக் கொண்டிருந்தான்.
அந்த இரண்டுக்கும் இருந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள அவனுக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டிருந்தது.

கீழே எங்கோ இருந்து சித்தார்த்தின் சிரிப்புச் சத்தம் கேட்டது.அதோடு ரஞ்சிதாவின் குரலும்…“சித்து… அங்க போகாதடா…”

அந்தக் குரலைக் கேட்டபடி ராஜீவன் மெல்லச் சிரித்தான். அவனுக்கே தெரியாமல்…அந்தச் சிரிப்பில் கணவனின் உணர்வும்…
தந்தையின் பாசமும்… காதலின் தொடக்கமும் கலந்திருந்தது.

அதே சமயம் ரஞ்சிதாவின் நிலை வேறாக இருந்தது. அவள் அவனிடம் எதையும்  எதிர்பார்க்கவில்லை.இரண்டு வருட பிரிவிற்கான  எந்த விளக்கத்தையும் அவனிடம் கேட்கவில்லை.
அவனுக்காகக் காத்திருக்கவும் இல்லை.அவளுடைய உலகம் அவளுக்கும்… அவளுடைய மகனுக்கும் என்று அழகாக நகர்ந்து கொண்டிருந்தது.

கீழே சித்து சோபாவின் மீது இரண்டு கைகளையும் வைத்து தலையை அதன் மீது வைத்து நின்று கொண்டிருந்தான். ரஞ்சிதா அவனிடம், “சித்து! அம்மா நாளைக்கு பேண்ட் எடுத்து தரேன். இப்போ இதை போட்டுக்கடா” என டிரவுசரை வைத்து கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“நோ… சிட் பேண்ட்…” என தலையை ஆட்டி விட்டு மீண்டும் சோபாவின் மீது தலையை வைத்துக் கொண்டான்.

அதைப் பார்த்த ராஜீவனுக்கு சிரிப்பு வந்தது.மெல்ல அருகில் சென்று “கொடு நான் போட்டு விடறே” என்றான்.

“இவரால எப்படி இவன சமாளிக்க முடியும்?”என்று எண்ணிய படி அமைதியாக டிரவுசரை அவன் கைகளில் கொடுத்தாள்.

அடுத்த நொடி சித்தார்த் அவன் கைகளில் இருந்து அதைப் பிடிங்கி ரஞ்சிதாவிடம் கொடுத்து சமத்தாக அணிந்து கொண்டான்.

இருவரும் இரவு சப்பாத்தி சுடுவதற்காக சமையலறைக்குள் சென்றதும், ரஞ்சிதாவிற்கு அடுத்த போர்க்களம் தயாரானது.

தானும் மாவு பிசைந்து தருவதாக ஒரே பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

“ம்மா…ம்மா…”என்று அவன் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தான்.

“சித்து… நீ பண்ணினா சப்பாத்தி மாவு  எல்லாம் உன் மேலதான் இருக்கும்.”
என்று ரஞ்சிதா கண்டிப்புடன் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை.

அவனுடைய பிடிவாதத்திற்கு முன்பு எப்போதும் தோற்றுப் போகும் ரஞ்சிதா, இன்றும் வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்.கிச்சன் ஸ்லாப் மீது அவனை அமர வைத்தாள்.

“சரி… இந்தா. இது மட்டும். இதை வச்சு நீ பண்ணு. அம்மா சப்பாத்தி சுடுறேன். கீழே இறங்கக்கூடாது, சரியா?”என்று ஒரு சிறிய மாவு உருண்டையை அவன் கையில் கொடுத்தாள்.

சித்தார்த்தின் முகம் உடனே மலர்ந்தது.
அவன் கையில் கிடைத்த அந்தச் சிறிய மாவு உருண்டை அவனுக்கு சப்பாத்தி மாவாகத் தெரியவில்லை. விளையாடுவதற்குக் கிடைத்த ஒரு புதிய பொம்மையாகத்தான் தெரிந்தது.

மாவு கைகளில் கிடைத்த அடுத்த நொடி, அது அவனுடைய கைகளிலிருந்து கன்னத்திற்குச் சென்றது.பின் கன்னத்திலிருந்து மூக்கிற்கு… மூக்கிலிருந்து நெற்றிக்கு…சிறிது நேரத்தில் தலைமுதல் கால் வரை மாவை அப்பிக் கொண்டு நின்றான்.

ரஞ்சிதா திரும்பிப் பார்த்ததும் அவனைப் பார்த்து வாய்விட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
“அடப்பாவி… சித்து!”என்று சிரித்தபடி அவனருகே வந்து நெற்றியில் முத்தமிட.. “ம்மா” என கன்னத்தை தொட்டு காட்ட அங்கேயும் முத்தமிட்டாள்.
மீண்டும் மூக்கை தொட்டு காட்ட அங்கேயும் முத்தமிட்டாள்.

அந்த நேரத்தில் சமையலறை வாசலில் நின்றிருந்த ராஜீவனின் பார்வை..
அவர்களை இருவரையும் தாண்டி செல்லவே இல்லை.

தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற சாக்கில் சமையலறைக்குள் வந்தவன், அங்கே நடந்து கொண்டிருந்த அந்தச் சிறிய உலகத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவன் உள்ளே வருவதைப் பார்த்த சித்தார்த்தின் முகம் மட்டும் சட்டென்று மாறியது.

அருகில் இருந்த டம்ளரை எடுத்தவன்,
“பேட் பாய்…!”என்று சொல்லிக் கொண்டே அதை ராஜீவன் மீது தூக்கி வீசினான். டம்ளர் அவன் அருகே விழுந்து உருண்டது.

“சித்து…! என்ன இது பழக்கம்? எதுக்கு இப்படி பண்ணுனே?” என்று பதறிய ரஞ்சிதா,அவனைப் பிடித்து ஒரு அடி வைத்தாள்.

அவ்வளவுதான்…
சித்தார்த்தின் முகம் உடனே சுருங்கியது. “ஆ…!”என்று அழ ஆரம்பித்தான்.அவன் அழுவதைப் பார்த்த ராஜீவனுக்கோ அதற்குமேல் பொறுக்கவில்லை.

“இப்ப எதுக்கு அவனை அடிச்சே?” என்று ரஞ்சிதாவிடம் நியாயம் கேட்கும் விதமாகக் கேட்டான்.

“இதைப் பாருங்க… என் பையனுக்கு உங்களைப் பார்த்தாலே பிடிக்க மாட்டேங்குது. தயவு செஞ்சு… அவன் முன்னாடி இனிமேல் வராதீங்க.”

ரஞ்சிதா சொன்ன வார்த்தைகள் ராஜீவனின் முகத்தில் அறைந்தது போல இருந்தது.

“என்னது… உன் பையனா?”அவன் குரல் சற்றே உயர்ந்தது.

“அவன் எனக்கும் தான் பையன்” என்றான் நொடியும் யோசிக்காது.

அவனுடைய அந்த வாதத்திற்கு ரஞ்சிதா உடனே பதில் சொல்லவில்லை.

அவள் சித்தார்த்தின் கன்னத்தில் ஒட்டியிருந்த மாவைத் துடைத்துக் கொண்டே,“சரி…
அப்பாங்கிற முறையில… நீங்க இதுவரைக்கும் என் பையனுக்காக என்ன பண்ணியிருக்கீங்க?”

அவ்வளவுதான்.
அங்கே இருந்த சத்தங்கள் எல்லாமே சட்டென்று அடங்கிவிட்டது போல இருந்தது.

ராஜீவன் அவளைப் பார்த்து,பதில் சொல்ல முயன்றான்.

ஆனால்…அவனிடம் அமைதி மட்டுமே.
ஏதாவது செய்திருந்தால்தானே அவனும் சொல்ல முடியும்.

“நான்…”என்று அவன் வாயைத் திறந்தான். ஆனால் அடுத்த வார்த்தை வரவில்லை.

ரஞ்சிதா அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.அவன் தடுமாறுவதை உணர்ந்தவள்,“அப்பான்னு சொல்லிக்கிற உரிமை மட்டும் இருந்தா போதாது… அந்த உரிமைக்குப் பின்னாடி… ஒரு குழந்தைக்காக செய்திருக்க வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கு.”

அவன் பிறந்த நாள்ல இருந்து அவன்கூட இருந்திருக்கனும். அவன் முதல் சிரிப்பைப் பார்த்திருக்கனும். முதல் தடவை நடந்ததைப் பார்த்திருக்கனும். காய்ச்சல் வந்தா இரவு முழுக்க தூங்காம அவன் பக்கத்துல உட்கார்ந்திருக்கனும். அவன் அழும்போது யாரைத் தேடுறான்னு தெரிஞ்சிருக்கனும்.

அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவனுடைய கடந்த இரண்டு வருடங்களை அவன் கண்முன்னே நிறுத்தியது.

“இப்போ வந்து… ‘நான் அப்பா’ன்னு சொன்னா மட்டும் என் பையன் உங்கள ஏத்துக்கணுமா?”

ராஜீவனின் கண்கள் சித்தார்த்தின் மீது சென்றன.

அவன் இன்னும் ரஞ்சிதாவை கட்டிக்கொண்டு,
“அம்மா…”என்று அழுதுகொண்டிருந்தான்.

“வலுக்கட்டாயமா என் பையன் மேல எதையும் திணிக்க முடியாது.அவன் உங்கள ஏத்துக்கற வரைக்கும் தள்ளியே இருங்க..”என்றவள் சித்தார்த்தை தூக்கிக் கொண்டு சென்று விட்டாள்.

அந்த நேரத்தில் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. கந்தசாமி, சரோஜா, பிரியா மூவரும் உள்ளே வந்தனர்.

அம்பிகாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டு, ஹாலில் அமர்ந்தனர்.ரஞ்சிதா சித்தார்த்திற்கு இரவு உணவை ஊட்டினாள்.

ராஜீவா இனி என்ன பண்ணலாம்னு இருக்கே?-கந்தசாமி.

குஜராத்ல ஒரு பெரிய ப்ராஜெக்ட்  போய்ட்டு இருக்குங்க மாமா… அது முடிய எப்படியும் ரெண்டு வருஷம் ஆகும்.

நான் உன்னோட வேலைய பத்தி கேக்கல.உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையே பத்தி கேக்கறே.

ஒரு நொடி ரஞ்சிதாவிடம் அவன் பார்வை சென்றது. அவள் சித்தார்த் மீது தன் கவனத்தை வைத்திருந்தாள்.

இரண்டு வருஷமா பிரியா, எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா தெரியுமா?” என்று சரோஜா மெதுவாக ஆரம்பித்தாள்.

இந்த வார்த்தையை கேட்ட ராஜீவனின் முகம் இறுகியது.

“நான் சுத்தி வலச்சு பேச விரும்பல, இவ்வளவு நாளா ராம மூர்த்தி மாமாவுக்காக நீயும் என் பொண்ணும் கஷ்டபட்டது எல்லாம் போது.நான் என்ன சொல்ல வரேனு உனக்கு புரியும்னு நினைக்கறே ராஜீவா. ஒரு நல்லா முடிவா சொல்லு.என் பொண்ணு உனக்காக இப்பவும் காத்துட்டு இருக்கா.”என்றான் கந்தசாமி

அதுவரை உணவை ஊட்டிக் கொண்டிருந்த ரஞ்சிதாவின் கை ஒரு நொடி அப்படியே நின்றது.ராஜீவனை நோக்கி தன் கூர்மையான பார்வையை வீசினாள்.

அந்த பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவன்.அடுத்த நொடி அவளை எதிர் கொள்ள முடியாமல் தவித்தான். இதற்காகதானே இரண்டு வருடம் யாரையும் பார்க்காமல் தவிர்த்தான். மீண்டும் அதே நிலை வர… யாரிடமும் எதுவும் சொல்லாமல் குஜராத் கிளம்பி விட்டான்.

–கவிதை எழுதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!