Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகல்கவி சிலையமுதே

அகல்கவி 11

 

அகல்கவி சிலையமுதே 11

 



Advertisement

“நா.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று தயக்கத்தோடு ஆரம்பித்த யுவன், “ஏ.. ஏன் என்கிட்ட சொல்லல அகல் நீ என்னை காதலிக்கிறேன்னு..” என்று கேட்டான் கூரிய பார்வையோடு.

 

அவனை உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட ஒரு பார்வைப் பார்த்தவாறு, “உங்ககிட்ட யார் சொன்னது மாமா?” என்று இறுகிய குரலில் அவள் கேட்க, அவளின் முகபாவனையை புரியாது பார்த்தவாறு, “அது.. பொன்னி அத்தைதான்” என்றான் அவன் சாதாரணமாக.

Advertisement

 

Advertisement

அகல்யாவுக்கு தன் தாயை என்ன செய்தால் தகும் என்றிருந்தது.

 

விழிகளை அழுந்த மூடித் திறந்தவள், “நான் உங்கள காதலிக்கல மாமா” என பட்டென்று சொல்லிவிட, அவனுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

Advertisement

 

“என்ன சொல்ற அகல்! பொன்னி அத்தை நீ காதலிக்கிறதா தப்பா நினைச்சாங்கன்னு சொல்றியா.. அப்போ என் ஃபோட்டோவ அவங்க பார்த்ததா..” அவன் பதற்றமாக இழுக்க, “அவங்க சரியாதான் புரிஞ்சிருக்காங்க, ஆனா..” என்றாள் வார்த்தைகள் தடுமாற.

 

அவளுடைய விழிகள் பதற்றத்தில் அலைபாய்ந்தன.

 

இதழை நாவால் ஈரமாக்கியவள் அவன் விழிகளை பார்க்க முடியாமல் பார்வையை எங்கோ பதித்திருக்க, “ஆனா என்ன அகல், வாய திறந்து சொல்லு.. எனக்கு தலையே வெடிக்குற மாதிரி இருக்கு” என்றவனுக்கு அவளின் அமைதியில் பிபி ஏகத்துக்கும் எகிறிச் சென்றது.

 

அவள் காதலித்திருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காகத்தானே அவளுடனான  திருமணத்திற்கு அவன் சம்மதித்தது.. இப்போது அவள் இல்லையென்று சொல்ல அவனுக்கோ தவறு செய்துவிட்டோமோ என்ற பதற்றத்தில் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது.

 

“அது.. நான்.. நான் வந்து..” என்று திக்கித்திணறினாள் அகல்யா.

 

யுவனோ அவள் முகத்தையே கழுகுப் பார்வை பார்த்திருக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவளோ ஒரு முடிவெடுத்தவளாக அவன் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தாள்.

 

“அது.. நான் யுகன் மாமாவ காதலிக்கிறேன். அவர் ஃபோட்டோவதான் அம்மா பார்த்தாங்க. ஆனா நீங்கன்னு…” அவளுடைய வார்த்தைகள் தந்தியடித்தன.

 

யுவனுக்கு இப்போது அவள் சொன்னதைக் கேட்டு மயக்கம் வருவது போல இருந்தது. தலையைத் தாங்கியபடி குனிந்துக்கொண்டவன் விழிகளை மட்டும் நிமிர்த்தி அவளை ஒரு பார்வைப் பார்க்க, விழிகள் கலங்க வலி நிறைந்த பார்வைப் பார்த்தாள் அகல்யா.

 

“என்னை மன்னிச்சிருங்க மாமா, என்னாலதான் உங்க வாழ்க்கை…” என்றவளுக்கு அழுகையில் தொண்டை அடைக்க, முயன்று தன்னை மீட்டு, “உங்கள பார்க்கும் போது எனக்கு யுகா மாமா என் முன்னாடி இருக்குற மாதிரி தோனும், ஆனா நீங்க அவரு கிடையாதுன்னு நான் உணர்றப்பா எனக்கு எப்படி இருக்கும்னு தெரியுமா.. என்னோட வலிய எனக்குள்ள மறைச்சுக்க நான் படுறபாடு எனக்குதான் மாமா தெரியும். ஆனா இப்போ…” என்றவள் இறுதியில் வெடித்து அழுதுவிட்டாள்.

 

யுவனுக்கு என்ன பதில் சொல்வதென்று கூட தெரியவில்லை. எல்லாமே சுத்த சூனியமாக இருந்தது.

 

கையிலிருந்த அலைப்பேசியை சுவற்றில் விட்டெறிந்தவன் அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்து தன்னை ஆசுவாசப்படுத்த முயற்சித்தான்.

 

ஆனால் அப்போதும் தோல்வியே.. இதில் அவளை குத்தம் சொல்லி என்ன பயன்!

 

தலையை அழுந்த கோதி விழிகளை மூடித் திறந்தவன், “ரெடியா இரு! நாளைக்கு சென்னைக்கு கெளம்புறோம்” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறியிருக்க, போகும் அவனை விழி விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அகல்யா.

 

அவளுடைய நினைவுகள் நடந்த பழைய கசப்பான சம்பவங்களை மீட்டிப் பார்த்தன.

 

சாரதா மற்றும் சிவலிங்கத்துக்கு பிறந்தது என்னவோ இரட்டைப் புதல்வர்கள்தான். யுகனாதித் மற்றும் யுவனாதித்.

 

தன் ஊரையும் வீட்டாற்களையும் எதிர்த்து சாரதா சிவலிங்கத்தை காதலித்து திருமணம் செய்திருக்க, வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொண்டனர் சாரதாவின் குடும்பத்தினர்.

 

தாய் தந்தை இல்லாத சிவலிங்கமோ மனைவியை அவருடைய குடும்பத்தாரை விட்டு பிரிக்க மனமில்லாமல் அந்த ஊரிலேயே தங்கிவிட, அவ்வப்போது தன் கணவருக்கும் அண்ணன்களுக்குமிடையே வரும் பிரச்சனைகளை சமாளித்து பல வருடங்களை கடத்தினார் சாரதா.

 

யுவனும் யுகனும் கூட அங்கேயே தங்களின் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் இறுதியாண்டையும் நெருங்கிவிட, யுவனுக்கும் மித்ராவுக்குமிடையில் அப்போதே  காதல் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

 

ஆனால், அகல்யாவுக்கோ  யுகனின் மேல் ஒரு தனி ஈர்ப்பு.

 

காதலை சொல்லாமல் தூரமாக நின்றே அவனை ரசிப்பவள் தன் காதலை தனக்குள்ளேயே புதைத்துக்கொள்ள, அப்போதுதான் அந்த அசம்பாவிதமும் நடந்தது.

 

“டேய் யுகா, எல்லாரும் குளத்துல குளிக்க போறோம். நீயும் வா..” என்று  அவன் நண்பனொருவன் அழைக்க, உறங்கிக்கொண்டிருந்த யுவனை பார்த்துவிட்டு துண்டை எடுத்துக்கொண்டு வெளியில் ஓடினான் யுகன்.

 

சரியாக சாரதாவை பார்க்கும் சாக்கில் யுகனை பார்க்கவென்று அகல்யா உள்ளே வரவும், “கார்த்தி…” என்று நண்பனின் பெயரை கத்திக்கொண்டு யுகன் ஓடி வரவும் நேரம் சரியாக இருந்தது.

 

இருவருமே மோதிக்கொள்ள போய் அப்படியே அதிர்ந்து நின்றுக்கொள்ள, “ஊஃப்ப்.. நீதானா அகலு, ஜஸ்ட்டு மிஸ்ஸு” என்றான் அவன் தலையை அழுந்த கோதியபடி.

 

அகல்யாவின் நிலையோ பரிதாபம்!

 

நூலிடைவெளியில் தன்னை நெருங்கி நின்றிருந்தவனை எச்சிலை விழுங்கியபடி பார்த்தவள், எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி உள்ளே வேகமாக சென்றாள்.

 

அவளின் அமைதியான குணத்தை யுகன் அறியாதவன் இல்லையே!

 

போகும் அவளை புரியாமல் பார்த்துவிட்டு தோளைக் குலுக்கியவன் தன் நண்பனின் பின்னால் ஓட, இவனுக்காகவே காத்திருப்பது போல நீச்சல் குளத்தினருகே நின்றிருந்தனர் அவனின் நண்பர்கள் நன்கைந்து பேர்.

 

“என்னடா.. யுவா வரல்லையா?” என்று ஒருவன் கேட்க, “இல்லடா, அவனுக்கு உடம்புக்கு முடியல” என்றவன் முட்டி வரையேயான ஷார்ட்ஸை மட்டும் அணிந்தபடி குளத்தின் கரையோரப் பகுதியில் அமர்ந்து குளிக்க ஆரம்பித்தான்.

 

“டேய் யுகா முன்னாடி வாடா.. இங்கதான் நல்லாருக்கும்” என்று ஒருவன் அழைக்க, யுகன் பதில் சொல்வதற்கு முன், “டேய் அவனுக்கு நீச்சலே தெரியாது. யுவான்னு நினைச்சியா..” என்றான் இன்னொருவன் அவனின் சகோதரனோடு ஒப்பிட்டு கேலி செய்வது போல.

 

யுகனின் முகமோ அந்த வார்த்தைகளில் சட்டென இறுகியது.

 

“வாய மூடுங்கடா! எனக்கொன்னு தண்ணிய பார்த்தா பயம்லா இல்ல” முறைப்போடு சொன்னவனுக்கு அடிவயிறு பயத்தில் கலங்கினாலும் அதை மறைத்துக்கொண்டு முன்னேறிச் சென்றான்.

 

கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்குள்ளிருந்த பயம் விலக, பயத்தை மறந்து நண்பர்களோடு விளையாடியவனுக்கு ஒரு குருட்டு தைரியத்தில் அவர்கள் நின்றிருந்த இடத்தையும் தாண்டி நடுப்பகுதிக்கு மெல்ல நகர்ந்தான்.

 

“டேய் விமலு சீக்கிரம் வாடா, உங்க அப்பா உங்காத்தாவ போட்டு அடிச்சிட்டு இருக்காரு” அங்கு குளத்தினருகே ஓடி வந்த ஒருவன் யுகனின் நண்பன் விமலை நோக்கி கத்த, விமலோ அடித்துப் பிடித்து குளத்திலிருந்து வெளியேறிச் செல்ல, மற்ற நண்பர்களும் வேகமாக அவன் பின்னால் ஓடினர்.

 

“டேய் யுகா, நீ வரல்லையா?” என்று அவனின் நண்பனொருவன் கேட்க, “நீங்க முன்னாடி போங்க, நான்  வர்றேன்” என்றவன் இன்று நீச்சலை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் நீரிலேயே தங்கிவிட்டான்.

 

சில நிமிடங்கள்தான் கடந்திருக்கும். ஏதோ ஒரு ஆர்வத்தில் நடுப்பகுதிக்கு சென்றவன் சற்றும் எதிர்பார்க்காது ஆழமான பகுதியில் காலை வைக்க, கால்களோ உள்ளே இழுத்துக்கொண்டது.

 

சற்று தன்னை நிதானப்படுத்தியிருந்தால் கூட அவன் தப்பித்திருக்கலாம் போலும்!

 

ஆனால், நீச்சல் தெரியாதவனுக்கு இயல்பிலேயே நீருக்குள் உண்டாகும் பதற்றம் உச்சத்தை தொட, மூச்சுக்காக திணற ஆரம்பித்துவிட்டான் யுகனாதித்.

 

அவனின் துரதிஷ்டம் சுற்றி யாருமே இல்லை.

 

கொஞ்சம் கொஞ்சமாக அவன் உயிர் பிரிந்திருக்க, அடுத்தநாள் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் ஆட்கள் கூடியிருக்க சடலமாக வீட்டு ஹாலில் வைக்கப்பட்டிருந்தது யுகனின் பூத உடல்.

 

அந்த குடும்பம் எதிர்பார்க்காத பெரிய இழப்பு அது.

 

தன் இரட்டை சகோதரனை இழந்த வேதனையில் யுவன் தவிக்க, உணர்வற்ற நிலையில் யுகனின் சடலத்தையே வெறித்திருந்தாள் அகல்யா.

 

நடந்தது மொத்தத்தையும் நினைத்துப் பார்த்தவளின் விழிகளிலிருந்து விழிநீர் விடாமல் ஓடியது.

 

கூடவே நேரமும் காலில் சக்கரத்தைக் கட்டியது போல வேகமாக ஓட, அதேநாள் இரவு மகளைத் தேடி அறைக்குள் வந்தார் பொன்னி.

 

“அடியே என்னடீ இது, காலையிலதான் கல்யாணமாகியிருக்கு. இப்போ எதையோ பறிகொடுத்த மாதிரி உக்கார்ந்திருக்க. நேரத்தை பார்த்தியா.. சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா, சாந்தி முகூர்த்தத்துக்கு உன்ன ரெடி பண்ண வேணாமா..”

 

அவர் படபடவென பொரிந்துக்கொண்டே போக, தன் தாயை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க முறைத்துப் பார்த்தாள் அகல்யா.

 

“என்னடீ ஆச்சு உனக்கு? இம்புட்டு பேசுறேன், மசமசன்னு நிக்கிற. போடீ போ, எவ்வளவு கஷ்டப்பட்டு நானும் உன் அப்பாவும் இதை பண்ணியிருக்கோம், நீ என்னடான்னா…” என்று பெரியவர் ஆரம்பிக்க, நடந்ததை சொல்ல வந்தவள் பின் என்ன நினைத்தாளோ!

 

வார்த்தைகளை விழுங்கிவிட்டு அமைதியாக குளியலறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

 

அதேநேரம் வெளியே சோஃபாவில் அமர்ந்திருந்த சிவலிங்கத்தின் முகம் வெளிறிப் போயிருந்தது.

 

இத்தனை நேரம் நடந்ததை நினைத்து மனம் நொந்துப் போய் நெற்றியை நீவி விட்டவாறு அமர்ந்திருந்த யுவனின் விழிகளுக்கு தன் தந்தையின் முகம் சரியாகத் தென்பட, அவரை புரியாமல் பார்த்தான் அவன்.

 

“என்னாச்சுப்பா?” அவன் வாய்விட்டு கேட்டுவிட, “அது..” என்று இழுத்தவாறு அவனை அழைத்துக்கொண்டு அங்கிருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்துக்கொண்டவர், “உன் அத்தை மேகல உன் ஆத்தாகிட்ட நடந்தத போட்டு கொடுத்திருக்காடா, உன்னோட சேர்த்து என்னையும் வீட்டு பக்கம் வந்துராதன்னு சொல்லிட்டா.. அதான் என்ன பண்றதுன்னு…” என்றார் பதற்றமாக.

 

யுவனுக்கு நிலைமையின் தீவிரம் நன்றாகவே புரிந்தது. ஆனால், இங்கிருந்து புலம்பி என்ன செய்வது!

 

“நாளைக்கு காலையிலயே கெளம்புவோம்ப்பா, அம்மா கண்டிப்பா பிரச்சனை பண்ணுவாங்க” என்று இடதுபக்க புருவத்தை நீவி விட்டவாறு யுவன் சொல்ல, சிவலிங்கமோ அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தார்.

 

“டேய் சாந்தி முகூர்த்தத்துக்கு ரெடியாகாம என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?” என்ற தந்தையின் கேள்வியில் அவரை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தவன், “இப்போ இது ரொம்ப முக்கியமா?” என்று கேட்டான் பற்களைக் கடித்தபடி.

 

“உன் அம்மாவ எல்லா சமாளிச்சுக்கலாம்டா, உன்னையே மனசுல நினைச்சுக்கிட்டு இருந்த பொண்ணாமே அவ, பொன்னி சொல்லிச்சு.. போய் அவ கூட சந்தோஷமா இருக்குற வழிய பாரு” சிவலிங்கம் சொல்ல, ‘இருக்குற வேதனையில இவர் வேற..’ என்றுதான் நினைக்கத் தோன்றியது அவனுக்கு.

 

அடுத்த பத்து நிமிடங்கள் கழிய, சுற்றியிருந்தவர்கள் இரட்டை அர்த்தத்தில் கேலி செய்து சிரிப்பதை இரு பக்கமும் சலிப்பாக தலையாட்டிப் பார்த்தவாறு அறைக்குள் நுழைந்தான் யுவனாதித்.

 

அகல்யா யோசனையோடு கட்டிலில் அமர்ந்திருக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்..” என்று தொண்டையை செருமியவாறு அவளெதிரே சென்று நின்றான் அவன்.

 

சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தவள் உடனே எழுந்து, “மாமா..” என்று பதற்றமாக அழைக்க, ஒரு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டவன் ஒரு முடிவெடுத்தவனாக அவளை தீர்க்கமாக ஒரு பார்வைப் பார்த்தான்.

 

“நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும் அகல்” என்று அவன் ஆரம்பிக்க, “நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு தெரியும் மாமா, இந்த கல்யாணத்துல உங்களுக்கு இஷ்டம் இல்ல, நான் காதலிச்சதா அம்மா சொன்னதாலதான் நீங்க கட்டிக்கிட்டீங்க. ஆனா இப்போ.. இப்போ அதுவும் இல்ல. அதனால… வெளியுலகத்துக்கு வேணா நாம புருஷன் பொண்டாட்டியா இருக்கலாம், ரூமுக்குள்ள நாம தனியாவே இருந்துக்கலாம், கொஞ்சநாள்ல நாம பிரிஞ்சு…” என்று அவனை குறுக்கிட்டு அவள் பாட்டிற்கு பேசிக்கொண்டு போனாள்

 

அவளின் வார்த்தைகளில் ‘ஙே’ என அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் யுவன்.

 

அவளை முறைத்துப் பார்த்தவன், “வாவ் அகலு! நீ இம்புட்டு புத்திசாலியா.. பரவாயில்லயே! அதிகமா சீரியல் பார்ப்பியோ?” என்று போலி ஆச்சரியத்தோடு கோபத்தை அடக்கிய குரலில் கேட்க, அவளோ திருதிருவென்று விழித்தாள்.

 

“ஏன் மாமா இப்படி கேக்குறீங்க?” அவள் வெகுளியாய் கேட்க, “ஊஃப்ப்..’ என்று இடுப்பில் கைக்குற்றி சலிப்பாகப் பார்த்தான் அவன்.

 

“இங்க பாரு அகல், நீ என்னை காதலிக்கலையோ இல்லயோ இப்போ நமக்கு கல்யாணம் ஆகிருச்சு, உன்னை விட்டு பிரிஞ்சு போகணும்னு எல்லா நான் யோசிச்கல. அதுமட்டுமில்லாம.. இதை பத்தி நான் அத்தை மாமாகிட்டயோ இல்லன்னா என் வீட்டாளுங்ககிட்டயோ சொல்ல போறதில்ல. நடந்தது நடந்துருச்சு. இதுக்கப்பறம் எதுவும் பண்ண முடியாது”

 

கோபம், இயலாமை, வலி என பல உணர்ச்சிகள் அவனின் வார்த்தைகளுக்குள் அடங்கியிருக்க, அமைதியாக அவனையே பார்த்திருந்தாள் அவள்.

 

அதற்குமேல் எதுவும் பேசாமல் கட்டிலில் சென்று ஒருபக்கமாக ஒருக்களித்து படுத்துக்கொண்டவன், தரையில் பாயை விரிப்பவளை பார்த்து கோபத்தில் வெடித்தே விட்டான்.

 

“கடவுளே! என்னை சோதிக்காத” என்று வாய்விட்டு கத்தியவன், “அம்மணி இதுக்கு முன்னாடி ஏதாச்சும் சீரியல்ல ஆக்ட் பண்ணீங்களோ! ஒழுங்கா மூடிட்டு வந்து இங்கேயே படுத்துக்கடீ, இருக்குற கடுப்புல இவ வேற..” என்றான் கடுப்பாக.

 

அவனின் கத்தலில் விதிர்த்துப் போனவள் மறுகணம் அவனின் பக்கத்திலேயே சற்று  தள்ளி படுத்துக்கொள்ள , உறக்கம்தான் இருவரையும் தழுவியபாடில்லை.

 

இருவரின் மனநிலையும் என்னவென்று சொல்ல முடியாத வலியில் தவிக்க, அடுத்தநாளும் விடிந்தது.

 

 

-Sheha zaki

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!