Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 11.1

அத்தியாயம் 11

செந்தமிழ்செல்விக்கு மிக அருகில் போய் வண்டியை நிறுத்த, பயத்தோடு அதிர்ந்து நிமிர்ந்தவள், பொற்செல்வனைக் கண்டதும் வெடுக்கென முகத்தை திருப்பி கண்ணீரை துடைத்தாள்.

“நானொன்னும் உன்னை பார்க்க வரல, மொபைல், வண்டிலாம் விட்டுட்டு போய்ட்டானு அண்ணி ஒரே புலம்பல், சீக்கிரம் எழுந்துக்கோ” என்றான்.

இவள் கையை நீட்ட, “வண்டியை வாங்கிட்டு நீ போய்ட்டா அப்புறம் நானெப்படி போறது? கார் அண்ணி வீட்டுக்கிட்ட நிற்குது. வந்து வண்டில உக்காரு” என்றான் கட்டளைபோல.



Advertisement

அதிக தூரம் நடக்கமாட்டேன் என்று தன்னை அறிந்தே வந்திருப்பான் என்று ஓர்மனம் நினைக்கத்தான் செய்தது. ஆனாலும் தன் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறான். நவீனா அக்கா புலம்பியதால் வந்திருக்கிறான் என்றும் தோன்றியது.

பொற்செல்வன் தன்னையே பார்த்திருக்க, “நீங்க நவீனாக்காகிட்ட போங்க, நான் அங்க வந்து வண்டியை எடுத்துக்கிறேன்” என்றாள்.

“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? அங்க பாரு… வேலை செய்திட்டிருக்கவங்க என்னை என்ன நினைப்பாங்க?” என்றான்.

Advertisement

காட்டில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் பொற்செல்வனைத்தான் பார்த்திருந்தனர்.  இவள் அமர்ந்தேயிருக்க, “சைல்டிஸா பிகேவ் பண்ணாம வந்து உக்காருடீ” என்றான்.

Advertisement

வேலை கற்றுக்கொள்ளும் காலத்திலிருந்து, லூசு, முட்டாள் என்று சில நேரம் செல்லமாகவும், சில நேரம் கோபமாகவும் திட்டுவான்தான், ஆனால் இப்படி ‘டீ‘ என்றெல்லாம் பேசியதில்லை.

‘டீ’ என்ற ஒற்றை எழுத்து உடலைத் தொட்ட உணர்வை கொடுக்க திண்டாடிப்போனாள்.

கண்ணைப் பார்த்துதான் பேசுகிறான், தவறான பார்வை இல்லைதான். ஆனாலும் அவனின் பார்வையிலுள்ள உரிமை, முன்பு அறியாத உணர்வை கொடுத்தது.

Advertisement

கல்லூரிக்கு சேர்ந்த புதிதில் ஓர்நாள் பேசிக் கொண்டிருந்தபோது, தந்தையைப் பற்றி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லால் கூட அல்ல, முக பாவனையை வைத்தே உணர்ந்திருந்தவன் அதன் பின்னே ஓர்நாள் கூட தனது தந்தையின் பேச்சை எடுத்ததில்லை.

அன்று குதிரை மீது ஏற்றி முத்தம் கொடுத்தது தனக்கு பிடிக்கவில்லை என்று உணர்த்திய பின்னே மன்னிப்பு வேண்டினான், அதன் பின்னே காதல் என்ற பெயரில் தன்னை தொல்லை செய்யவில்லை என்று பொற்செல்வனைப்பற்றி புரிகிறது. ஆனாலும் அமர்ந்தே இருந்தாள்.

“நாம ஃப்ரண்ட்ஸ்னு இங்க இருக்கவங்க எல்லாருக்கும் தெரியும். வேலையை விட்டு நின்னதில்லாம, இப்படி முகத்தை திருப்பிட்டிருந்தா தேவையில்லாம யோசிப்பாங்க. வந்து உக்காரு” என்றான் பொறுமையாக.

பொற்செல்வனுக்கு இத்தனை பொறுமை தன்னிடத்தில் மட்டும்தான் என்றறிவாள். ஐந்து வருடப் பழக்கம் என்பதோடு, செல்விக்கு இருக்கும் ஒரே நண்பனும் இவன்தான். நல்லவனாகத்தான் இருந்தான். ஆனால் இப்போது இல்லையே என்ற வருத்தத்தில், தற்போதும் மறுப்பாகத்தான் பார்த்தாள்.

கோபம் ஒருபுறம் இருந்தபோதும் என்னயிது? ஹேர்கட் கூட பண்ணாம இத்தனை பெரிய தாடி, மீசை என்று இருக்கிறான், இப்படியெல்லாம் ஓர்நாளும் பார்த்ததில்லை. உடலும் சற்று இளைத்திருந்தது போல் தோன்ற, ‘ம்ப்ச்… இவனைப் பற்றி நான் ஏன் கவலைப்படனும்?‘ என மனதை அதட்டினாள்.

“செல்வி” என சத்தமாக அதட்டி அவளின் கவனத்தை தன் புறம் திருப்பியவன், செல்வியை முறைத்துக் கொண்டிருக்க, “நான் உங்களோட வரமாட்டேன், நீங்க வண்டியை எடுத்துட்டு போங்க” என்றாள்.

வண்டியிலிருந்து இறங்கி சாவியையும் பர்சைஸயும் அவளின் மடியினில் எறிந்தவன், “போடீ” என்றான்.

‘டீ’ என்று சொன்னதில் தன்னால் இவன் நடந்து போக வேண்டுமே என்று வருத்தமெல்லாம் பறந்தோடியது.

எழுந்து வண்டியை கிளப்பியவள், “என்னை எவ்வளோ கஷ்டப்படுத்துறிங்க, ஆனாலும் என்னால உங்களை பழிவாங்க முடியல. கொஞ்ச தூரம் நடங்க, ஒன்னும் குறைஞ்சிப் போய்டாது” என்று கோபமாக சொல்லி வண்டியின் வேகத்தை கூட்ட, செல்வி மீதான கோபம் போய் சிரிப்பு வந்தது பொற்செல்வனுக்கு.

இன்று செல்வியை சந்திப்போம் என்று நினைக்கவில்லை. ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவளைப் பார்த்ததில் பெரு மகிழ்வு பொற்செல்வனுக்கு. சிறு விசயத்திற்கு கூட கோபப்படுத்துகிறாள் என்றபோதும் அவளை பார்த்ததில் மனம் இதமாய் உணர்ந்தது.

செல்வியால் அதிக தூரம் நடக்க முடியாது என்பதற்காக வண்டி எடுத்து வந்தாலும், வீட்டில் பத்து நிமிடம் மட்டுமே பார்த்தது போதவில்லை. தன்மீதான பழைய கோபத்தோடு கன்னத்தின் காயத்தை விசாரிக்காததில் ஏமாற்றமடைந்திருப்பாள். நிச்சயம் தன்னிடம் ஒட்டமாட்டாள் என்றறிந்தேதான் வந்தான்.

அவளோடு சற்று நேரம் இருந்தால் போதும் என்று வந்தவனுக்கு, அவளின் கோபம் இதத்தை உண்டாக்கியது. விலகிப்போனவள் தற்போது கோபப்பட ஆரம்பித்திருக்கிறாள். நல்ல முன்னேற்றம் என்று நினைத்தபடி நின்றிருந்தான் செந்தமிழ்செல்வி சென்ற திசை பார்த்தபடி.

மொபைல் ஒலிக்கவே கவனம் கலைந்து, “ம்… சொல்லுங்கம்மா” என்றபடி நடக்கலானான்.

“நவீனாவைப் பார்த்தியா? எங்க இருக்கா?” என்றார் அமிர்தவள்ளி.

ராகுலிடம் இதுப்பற்றி பேசியிருக்கமாட்டார்கள், வீட்டிற்கு வரும்வரை நவீனாவிற்கும் எங்கே தங்கப்போகிறோம் என்று தெரியாது, ஆனாலும் அண்ணிக்கு போன் செய்திருப்பாங்களே என்று யோசித்தவன், “அதை நீங்களே அண்ணிகிட்ட கேட்க வேண்டியதுதானே?” என்றான்.

“எந்த உரிமையில போன் பண்றதுனு உன் அப்பாதான் போன் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டார்” என்றார் வருத்தமாக.

“அப்பா சொல்றதும் சரிதான், அண்ணி சேஃபா இருக்காங்கம்மா, அண்ணிப்பத்தி கவலைப்படாதிங்க” என்றான்.

“இல்ல செல்வா, அவங்கப்பாம்மாவும் பக்கத்துல இல்லாம, நானும் இல்லாம தனியா விட ரொம்ப கஷ்டமா இருக்கு, மனசுக்குள்ளேயே வச்சி புழுங்குவா”

“ஆமாம்… வேதனையோடதான் இருப்பாங்க, என்ன பண்றது? அண்ணனை கட்டிக்கிட்டதுக்கு இதெல்லாம் அனுபவிச்சாகனும்தானே?”

“என்னடா இப்படி சொல்ற?” என்றவர் குரல் உடைந்துபோனது.

“ப்ம்ச் ம்மா… அண்ணா அண்ணியோட வாழனுமா? வேண்டாமா?”

“வாழனும்டா”

“அப்போ அண்ணியைப் பத்தி நினைக்காதிங்க, நான் பார்த்துக்கிறேன், அண்ணியைப் பத்தி அண்ணாகிட்ட ஏதும் கேட்காதிங்க”

“இரண்டு பேரும் ஒன்னாகிட்டாங்கனா போதும். அதுவரை நீ சொல்ற மாதிரியே நடந்துக்கிறேன்.  ஆனா இவ்வளோ பெரிய விசயத்தை சம்மந்திகிட்ட மறைக்கிறோமே, ரொம்ப குற்றவுணர்வா இருக்கு செல்வா”

“ஆமாம்மா, அவங்ககிட்ட சொல்லனும். போன்ல சொல்ல வேண்டாம்னுதான் சொல்லல, நாளைக்கு அண்ணி வீட்டுக்கு போய் பேசிடறேன், நீங்க கவலைப்படாதிங்க”

“தேவா உனக்காக சாப்பிடாம காத்திட்டருக்கான்” என்றார்.

“வரேன்ம்மா, நான் வரதுக்குள்ள அண்ணாக்கு சாப்பிட கொடுத்து, மாத்திரை குடிக்க நியாபகம் பண்ணுங்க” என்று இணைப்பை துண்டித்து, வீட்டிற்கு வந்தான்.

“அண்ணி” என்று அழைப்பு மணியை அழுத்தினான்.

நவீனா கதவை திறக்க, உள்ளே வந்தவன் வீட்டை ஆராய்ந்து, “கம்ஃபர்டபிளா இருக்காண்ணி? வேற எதாவது தேவையா?” என்றான்.

ஏதும் தேவையில்லை என்பதாய் நவீனா தலையசைக்க, “சாப்பிட்டிங்களா?  சமைக்க வந்தாங்களா?” என்றான்.

“வந்தாங்க, இனி வர வேண்டாம்னு சொல்லிடுங்க, நான் சமைச்சிக்கிறேன்”

“சமைக்க ஆசையாயிருந்தா சமைங்க, அவங்க ஹெல்ப் பண்ணட்டும், வீட்டை க்ளீன் பண்றது, பாத்திரம் தேய்க்கனு மற்ற வேலைகளையும் பார்க்கனும்ல? அவங்க வரட்டும்”

“இல்ல, எனக்கு போரடிக்கும், என் ஒருத்திக்குத்தானே? நான் பார்த்துக்கிறேன்”

“எப்படி போரடிக்கும்? நாளைலயிருந்து நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வரப்போறிங்க”

“இல்ல, நான் வரல”

“அண்ணன் கூட வாழ வேண்டாமா?”

“வேண்டாம், அவருக்கு என்னைப் பிடிக்கல” என்றவளுக்கு கண்களும் குரலும் கலங்கியது.

“ஆனா எனக்கு வேற அண்ணி வேண்டாம். நீங்கதான் வேண்டும்” என்றவன், “இனி நீங்க அண்ணாவை தேடி போக வேண்டாம். அண்ணாவே உங்களைத் தேடி வருவாங்க. அதுவரை உங்களை நீங்க பிஸியா வச்சுக்கோங்க. யார் இல்லைனாலும் நிமிர்வா வாழ முடியும்னு ப்ரூஃப் பண்ணுங்க” என்றான்.

நவீனாவின் முகம் நம்பிக்கையற்று இருக்க, “நான் சொல்ற மாதிரி நீங்க இருந்தா கண்டிப்பா அண்ணன் உங்களைத் தேடி வருவார் அண்ணி” என்றான்.

நவீனா புரியாமல் பார்க்க, “இவ்வளோ நாள் அண்ணாதானே உங்களை அவாய்ட் பண்ணினார்? இனி நீங்க அவாய்ட் பண்ணுங்க” என்றான்.

“நீங்க சொல்றமாதிரி நடந்துக்கிட்டாலும் ரொம்ப வசதியா விலகிடுவார்”

“முதல்ல நீங்க நினைக்கிறதுதான் நடக்கும், அப்புறம் அவரே டிவோர்ஸ் வேணாம்னு எல்லார் முன்னாடியும் சொல்லுவார்”

பொற்செல்வன் வார்த்தையில் நம்பிக்கையில்லை நவீனாவிற்கு. ஆனாலும் சரி என்பதாய் தலையசைத்தாள்.

“என்ன சமைச்சாங்க?” என்றவன், நவீனாவின் முக பாவனை வைத்தே, இன்னும் உண்ணவில்லை என்று புரிந்து, “எடுத்து வைங்க, இரண்டு பேரும் சாப்பிடலாம்” என்று கை கழுவி வந்தான்.

நவீனா பரிமாற, “கோர்ட்டுக்கு டைம் ஆகுது, நீங்களும் சாப்பிடனும்” என்றான் கட்டளையாக.

“இல்ல, எனக்கு பசிக்கல, இப்போதான் காஃபி குடிச்சேன்”

“பரவால்ல, இரண்டு இட்லி சாப்பிடுங்க”

உண்ணவில்லை என்றால் கிளம்பமாட்டான் என்று உண்ண அமர்ந்தாள்.

“தினமும் உங்களை இப்படி பார்த்துக்க முடியாது அண்ணி. சாப்பிடாம இருந்தா எதையும் சாதிக்க முடியாது. உங்களை நீங்கதான் பார்த்துக்கனும்” என்று தானும் உண்டான்.

நவீனாவின் முகம் மிகுந்த வேதனையில் இருக்க, “அண்ணாவோட சாய்ஸ்க்கே எப்போவும் வளைஞ்சு கொடுத்து பழக்கியிருக்கிங்க, அதனால அண்ணாக்கு உங்க வேல்யூ தெரியல. டிவோர்ஸ் அண்ணா சாய்ஸ்தான்.

எப்போவும் போல அண்ணா ஆசைக்கு வளைஞ்சு கொடுங்க, இந்த முறை நீங்க வளைஞ்சு கொடுக்குறதால கண்டிப்பா சந்தோசப்படமாட்டார்” என்று ஐந்து நிமிடம் வரை நவீனாவிற்கு அறிவுரை கூறினான்.

பின்னே ராகுலுக்கு அழைத்து, “ராகுல், ரித்தேஷ் ஏன் இன்னும் வரல?” என்றான்.

“வந்திட்டிருக்கார் சார்” என்றதும், இணைப்பை துண்டித்தவன், “இப்போ ரித்தேஷ் வருவார், ரொம்ப நல்ல மாதிரி. ராகுலோட க்ளோஸ் ஃப்ரண்ட். உங்க டிரைவரா இருக்கப்போறார். எங்க போகனும்னாலும் நம்பி போலாம். கோர்ட்டுக்கு அவரோட வந்திடுங்க. நான் அண்ணாவை கூட்டிட்டு வரேன்” என்றவன், ரித்தேஷ் வந்தபின்னே அவரிடம் அவருக்கான வேலைகளை சொல்லி கிளம்பினான்.

பதினொரு மணிபோல் தேவராஜை அழைத்துக்கொண்டு கோர்ட்டிற்கு வந்தான் பொற்செல்வன். கை கால்களில் உள்ள காயங்களை உடை மறைத்திருக்க, தேவராஜின் தலையில் உள்ள கட்டை பார்த்ததும் கலங்கிவிட்டாள் நவீனா.

பொற்செல்வன் எத்தனை சொல்லியிருந்த போதும் தேவராஜை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை நவீனாவால். தேவராஜோ நவீனா இருக்கும் பக்கம் பார்வையை திருப்பவில்லை.

பொற்செல்வனை கண்களால் அழைத்தவள், “அவருக்கு என்னாச்சு?” என்றாள்.

“அவருக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன? அண்ணனை பார்க்க வேண்டாம்னுதானே சொன்னேன்?” என கடுகடுத்து, “உள்ள போனதும் டிவோர்ஸ்க்கு விருப்பமானு ஜட்ஜ் கேட்பாங்க, அழுது ஏது வச்சிடாதிங்க. பரிபூரண சம்மதம்னு நிமிர்வா சொல்லனும். சரிங்களா?” என்றான்.

விவாகரத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்றல்லவா மிரட்டியிருக்கிறான்? ஆகையால் கண்ணீரோடு சரி என்பதாய் தலையசைத்தாள்.

நவீனா பொற்செல்வனிடம் பேசிகொண்டிருக்கும்போது அவளைத்தான் பார்த்திருந்தான் தேவராஜ். அவளின் அழுகையும், முக பாவனையும் பார்த்தபடி அவளிடம் வந்தவன், “ஜட்ஜ்கிட்ட டிவோர்ஸ்க்கு சம்மதம் சொல்லிடுவதானே?” என்றான்.

கணவன் குரல் கேட்டபோதும் நிமிர்ந்து பார்க்கவில்லை. நவீனாவிற்கு தொண்டை அடைத்தது. பொற்செல்வன் வேறு வழியில் முயற்சிக்கிறார், நண்மையில் முடிந்தால் நிம்மதி. அப்படியில்லை என்றாலும் விவாகரத்திற்கு சம்மதம் சொன்னால் கணவன் நிம்மதியடைவான் என்பதற்காகவும் மனதை திடப்படுத்தி, “அதுக்குத்தானே இங்க வந்திருக்கேன்” என்றாள்.

நவீனாவின் பதிலில் பொற்செல்வனுக்கே ஆச்சர்யம்தான். மனதினுள் பாராட்டியவன், “அதான் சொல்லிட்டாங்கள்ல? வாங்க” என்று தேவராஜை அழைத்துப் போனான்.

சற்று நேரத்தில் இருவரையும் நீதிபதி விசாரித்தார். இருவரும் விருப்பத்தோடு பிரிவதாக சொன்னார்கள். காரணம் கேட்கப்பட்டது. அதற்கு தேவராஜ் பதில் சொல்லும் முன்னே, “எனக்கு அவரை பிடிக்கல” என்றாள் நவீனா.

ஆனால் நீதிபதியின் முகத்தையும் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. மந்திரம் போல் விவாகரத்திற்கு சம்மதம் என்று சொல்லி, தேவராஜ், பொற்செல்வன் இருவரும் வெளியே வரும் முன்னே கிளம்பியிருந்தாள் நவீனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!