Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 14.2

தனது எண் கூட இவரிடம் இருக்கிறதா? தனது தங்கைக்காக இத்தனை கோடிகள் செலவிட்டு பொட்டிக் ஆரம்பித்திருக்கிறார், அவளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக காத்திருக்கிறார். எனில் தங்கையின் உணர்வுகளை மதிக்கிறார் என்றுதானே அர்த்தம் என யோசித்தபடி பொற்செல்வனின் பின்னோடு வர, திரும்பியவன், “டியூட்டிக்கு போகலையா?” என்றான்.

“நடந்தா போறது? அம்மாகிட்ட சொல்லிட்டு கார் எடுத்துட்டு போக வந்தேன்” என்று இளவரசனும் கடையை நோக்கியே நடந்தான்.

கடைக்கு அருகில் வந்தவன் அப்படியே நின்றான். நவீனா முதுகு காட்டி நின்றிருக்க, செல்வி வெளிப்புறத்தை பார்த்தபடிதான் நின்றிருந்தாள். ஆனாலும் பொற்செல்வனும் இளவரசனும் வெளியே நிற்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தாள் நவீனாவோடு.

“ஆமாம்க்கா, அங்கயிருக்க கிளைமேட், ப்ளஸன்ட் சரௌண்டிங், குயில் சத்தம், பூக்களோட வாசனை இதெல்லாம் எங்கேயும் கிடைக்காது. அதெல்லாம் கோல்டன் டேஸ்” என்றாள் மலர்ந்த முகத்தோடு.



Advertisement

பொற்செல்வன் இளவரசனை பார்க்க, இளவரசனும் பொற்செல்வனைத்தான் பார்த்தான்.

“ம் அப்புறம் முக்கியமான விசயம் சோறு… கெமிக்கல் கலக்காத நேச்சுரல் ஃபெர்டிலைஸர்ல விளைஞ்ச காய், கீரை, நெல்… இதெல்லாம் நான் அங்க வந்துதான் தெரிஞ்சிக்கிட்டேன். சமைக்காத காய்கறிகளே அவ்வளோ டேஸ்ட்டா இருக்கும். இல்லக்கா?” என்றாள்.

பொற்செல்வன் “உங்கப்பாக்கு ஸ்டார் ஹோட்டல்தானே பிஸ்னஸ்? இந்தியாவில இருக்க ஒன்பது ஹோட்டல் பத்தாம குவைத்லயும் இரண்டு ஹோட்டல் இருக்கு. ரைட்…?

Advertisement

நிறைய ஸ்டார்ஸ், வி.ஐ.பி‘ஸ், ரெகுலர் கஸ்டமர்னு கேள்விபட்டேன், ஆனா உங்க தங்கைக்கு என்ன பிடிக்குதுனு கேட்டிங்களா?” என்றான்.

Advertisement

“ம்… நாலு ரிசார்ட்ஸ் கூட இருக்கு, சின்ன வயசுல டென்டேஸ்க்கு மேல அங்க தங்கியிருக்கோம். அங்கேயும் குயில் கூவுற சத்தம் கேட்டுச்சு, அதெல்லாம் இவளுக்கு குயிலாவும் தெரியல, நினைவுலயும் இல்லை” என்றான் ஏமாற்றமாக.

இவர்களைப் பார்த்த செல்வியின் பேச்சு தன்போல் நிற்க, இருவரும் உள்ளே வந்தனர்.

“ம்மா, இன்னைக்கு நைட் வீட்டுக்கு வரமாட்டேன், வீட்டுக்கு போகனும்னா டிரைவர்க்கு கால் பண்ணுங்க” என்றவன், நவீனாவிடம், “நீங்க வந்த பின்னாடிதான் என் தங்கை முகத்துல இயல்பை பார்க்குறேன், தேங்க்ஸ் ஃபார் கம்மிங்” என்றான்.

Advertisement

பின்னே தங்கையிடம், “இனி உன்னோடத்தான இருக்கப்போறாங்க, ஆல்ரெடி ட்ராவல் டையர்ட்ல இருப்பாங்க, மனசுல உள்ளதெல்லாம் ஒரேநாள்ல பேசனும்னு இல்ல, நீயும் டையர்ட் ஆகி, அவங்களையும் டையர்ட் ஆக்காத. பாய்…” என்றான்.

ஆனாலும் பொற்செல்வன் தங்கையை விரும்புகிறான் என்றறிந்த பின்னே தங்கையை விட்டு பணிக்கு செல்ல மனம் வராமல் போகவே, “நவீனா என் சிஸ்டர் மாதிரி, அவங்களைப் பத்தி கவலைப்படாதிங்க. உங்க பிஸ்னஸ் பத்தியும், பிஸி ஸ்கெட்யுல் பத்தியும் அம்மா சொல்லியிருக்காங்க, ஈவ்னிங் வரைக்கும் இங்க இருந்து என்ன பண்ணப்போறிங்க?” என்றான்.

“இளவரசா…” என சாம்பவி அதட்ட, “அங்க உள்ள பிஸ்னஸ் பணம் சம்பாதிக்க, இந்த பிஸ்னஸ் ஃபேமலிக்காக, அதை விட இது முக்கியம்தானே?” என்றான் பொற்செல்வன்.

பின்னே நியமிக்கப்பட்ட செக்யுரிட்டி வர, யாரோ அதிகாரி.. பர்ச்சேஸ் பண்ண வந்திருக்காங்க போல என நினைத்து, “வாங்க” என்றாள் நவீனா.

“அண்ணி இவர்தான் செக்யுரிட்டி, ரிட்டையர்ட் இன்ஸ்பெக்ட்டர், எனக்கு தெரிஞ்சவர்தான். தமிழர்தான், ஆனா இங்க பேசுற மார்வாடியும் தெரியும். உங்களுக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுலா இருப்பார்” என்றான்.

பொற்செல்வனின் பொறுப்பை மனதினுள் பாராட்டியபடி, அன்னையிடம் விடைபெற்று இளவரசன் கிளம்பிவிட, “தம்பி, அவன் ஏதோ புரியாம பேசிட்டான்” என்றார் வருத்தத்தோடு.

பரவாயில்லை என்பதாக சாம்பவியிடம் தலையசைத்து, ராகுலிடம் பணியாள்கள் பற்றி பேச ஆரம்பிக்க, பேசி முடிக்கும்வரை காத்திருந்து “இரண்டு பேரும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுத்தான் போகனும்” என்றார் சாம்பவி.

“கண்டிப்பா ஆன்ட்டி, ஆனா இன்னைக்கு இல்ல, நான் உங்க வீட்டுல வந்து சாப்பிடறது இளவரசனுக்கும் உங்க பொண்ணுக்கும் ஓகேவானு கேட்டுட்டு கூப்பிடுங்க, அப்போ வரோம்” என்றான்.

இளவரசன் பேசியது பொற்செல்வனை பாதித்திருக்கும் என்பதை அறிவார் சாம்பவி. ஆனால் இளவரசன் பேசியதற்கு அவனல்லவா மன்னிப்பு வேண்ட வேண்டும் என்று நினைத்தபடி, “என் மகனே உங்களை கூப்பிடுவான். அப்போ கண்டிப்பா வருவிங்கதானே?” என்றார்.

“ம்… உங்க மகன்கிட்ட பேசிட்டு கூப்பிடுங்க, விருந்தே சாப்பிடறேன்” என்று, “நாங்க கிளம்பறோம், அண்ணியை பார்த்துக்கோங்க” என்றான்.

“நவீனா பத்தி கவலைப்படாதிங்க, என் பொண்ணு மாதிரி” என்றார் மகிழ்வோடு.

ராகுல் செல்வியிடம் பேசிக்கொண்டிருந்தான். “ராகுல் பேசிட்டு வா, நான் வெளில வெய்ட் பண்றேன்” என்றவன், “அண்ணி தினமும் கால் பண்ணுங்க, பிஸ்னஸ்ல கான்சன்ரேட் பண்ணுங்க… பாய். பாய் ஆன்ட்டி” என்று வெளியேறினான்.

“தம்பி உங்களுக்கு ஃப்ளைட் நைட் ஏழு மணிக்குத்தானே? இப்போவே ஏன் கிளம்புறிங்க? உள்ள வாங்க” என்றவர், உள்ளே சென்று, “செல்வி… உன் அண்ணன் பேசியது செல்வா தம்பியை கஷ்டப்படுத்தியிருக்கு. நீயும் அவர்கிட்ட சரியா பேசல, அதனாலதான் ஏழு மணி ஃப்ளைட்டுக்கு இப்போவே கிளம்பறார், போய் அவரை உள்ள வர சொல்லு” என்றார்.

“ம்மா… நான்”

“நவீனாக்காகத்தான் இங்க வந்திருக்கார். சூழ்நிலை சரியில்லைனு வந்தவரை நீயும் உன் அண்ணனும் அவமானப்படுத்துறிங்க, இளவரசனை விடு. அவனுக்கு செல்வாவைப் பத்தி தெரியாது. செல்வா தம்பியும் அவர் குடும்பமும் நம்மளை எப்படி ட்ரீட் பண்ணினாங்கனு உனக்கு தெரியும்தானே?” என்றார்.

செல்வி “சார், அவரை கூப்பிடுங்க” என்றாள் ராகுலிடம்.

“ஓ… நீ கூப்பிடமாட்டியா? அப்போ இவரை அவாய்ட் பணத்தான் சென்னைக்கு வேலைக்கு போயிருக்க, உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு நானே கேட்டு தெரிஞ்சுக்கிறேன்” என்று சாம்பவி வெளியேற எத்தனிக்க,

“ம்மா… நீ நினைக்கிற மாதிரி ஏதும் இல்ல, அவர் ஆட் பண்ண சொன்ன கோபம் இன்னும் எனக்கு போகல, மத்தபடி எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல… நானே போய் கூப்பிடறேன்” என்று வெளியேறினாள் வேகமாக.

கடையிலிருந்து சற்று தூரத்தில் நின்று போனில் பேசிக்கொண்டிருந்தவனுக்கு செல்வியின் கொலுசொலி கேட்க, கடையிலிருந்து பார்த்தால் தெரியாதபடி இன்னும் சற்றுதூரம் நடந்தான்.

செல்வி சற்று வேகமாக நடப்பது அவளின் கொலுசொலி சொல்ல, இவள் வருவதை அறியாதது போல ஓர் கட்டிடத்தின் வளைவில் நின்று, “நான் அப்புறம் பேசுறேன்” என்று இணைப்பை துண்டித்து காத்திருந்தவன், செல்வி அருகே வந்ததும் திரும்பினான்.

“நான் வரேனு தெரிஞ்சேதான் அலைய விட்டிங்களா?”

“ம்… அங்க நின்னு பேசினா கடைக்குள்ள இருக்கவங்களுக்கு தெரியும், அதான் இங்க வந்தேன்”

“அவங்களுக்கு தெரிஞ்சா என்ன? அம்மாதான் அனுப்பி வச்சாங்க”

“ஓ… சரி என்ன விசயமா வந்த?”

“என்னாலதான் இவ்வளோ சீக்கிரமா போறிங்களாம்?”

“ஆமாம்”

“அப்போ எதுக்கு வந்திங்க? நவீனாக்காவை ராகுல் அண்ணா கூட அனுப்பி வைக்க வேண்டியதுதானே?”

“என் அண்ணி கடை ஓபனிங்க்கு நான் வரக்கூடாதா?”

“வந்தா யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி நடந்துக்கனும்” என்றாள்.

“என்னால அப்படி நடிக்க முடியல”

“ஓ… அப்போ நான் நடிக்கிறேனா?”

“பின்ன இல்லையா?”

“என்ன நடிக்கிறேன்?”

“நான் ப்ரப்போஸ் பண்ணினதை ஆன்ட்டிகிட்ட சொன்னியா?”

“உங்க பேர் கெட்டுடக்கூடாதுனுதான் சொல்லல”

“ப்ரப்போஸ் பண்றதுக்கெல்லாம் பேர் கெட்டுபோகுமா? அப்படி கெட்டுப்போனா போகட்டும், என் பேர்தானே கெடுது? அதைப்பத்தி நீ ஏன் கவலைப்படுற?”

“அதானே? நான் ஏன் கவலைப்படனும்? இன்னைக்கே சொல்லிடறேன்” என்றவள், “உங்களுக்குத்தான் நடிக்க தெரியாதே… நீங்க ஆன்ட்டிக்கிட்ட சொன்னிங்களா?” என்றாள்.

“மறைக்கனும்னு எனக்கில்ல, என் அம்மாகிட்ட சொன்னா நான் ஏமாந்திடக்கூடாதுனு உடனே உன்னை பொண்ணு கேட்பாங்க, உனக்கு விருப்பமில்லாத விசயத்தை அவாய்ட் பண்ணத்தான் சொல்லல”

‘இவனை மாதிரி பதில் சொல்ல நமக்கு தெரிய மாட்டேங்குது‘ என நினைத்தவள், “சரி உங்க அம்மாகிட்ட சொல்ல வேண்டாம், தைரியம் இருந்தா என் அம்மாகிட்ட சொல்லுங்க பார்ப்போம்” என்றாள்.

“வாவ் சூப்பர், சொல்லிட்டா போச்சு” என்று இவன் வேக நடைபோட, இப்படி செய்வான் என எதிர்பார்க்காதவள், “நில்லுங்க, நில்லுங்க, இப்போ சொல்ல வேண்டாம்” என்றாள்.

“ஏன் வேண்டாம்? சொல்றதுனு ஆகிடுச்சு, அதை எதுக்கு தள்ளிபோடனும்?”

“சொல்லாதிங்க” என்றாள் சன்னக்குரலில்.

“என் தைரியத்தைப் பத்தி நீ கேட்டதுக்கப்புறம் சொல்லாம இருக்க என்னால முடியாது”

தனக்கு விரைவில் திருமணம் செய்ய நினைக்கும் அன்னையிடம் இந்த விசயத்தை சொன்னால் கோபப்படமாட்டார், கல்யாணம் செய்து வைக்கத்தான் பார்ப்பார் எனப்பதறியவள், “ப்ளீஸ், சொல்லாதிங்க” என்றாள்.

பொற்செல்வன் செல்வியையே பார்த்திருக்க, “நீங்க தைரியமான ஆள்தான், ஒத்துக்கிறேன்” என்றாள்.

செல்வி குரல் கெஞ்சலாக வரவும், “ஆன்ட்டிகிட்ட நான் சொல்லலைனாலும், அவங்களுக்கு தெரிஞ்சிடும்” என்றான்.

“நீங்களும் நானும் சொல்லலைனா எப்படி தெரியும்? நான் இதுவரை யார்கிட்டயும் அந்த விசயத்தை சொல்லல”

“ஆனா நான் சொல்லிட்டேனே”

“யார்கிட்ட?” என்றாள் அதிர்ந்தபடி.

“உன் அண்ணாகிட்ட”

“எப்போ? ஏன் இப்படி? நிஜமாவா சொல்றிங்க? அச்சோ” என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட, “எதுக்குடீ அழற?” என்றான் கடுப்பாக.

“என் அண்ணா கேட்டா என்ன பதில் சொல்வேன்? எதுக்கு அவன்கிட்ட சொன்னிங்க?”

“நீ சந்தோசமா இல்லைனு என்கிட்ட புலம்பினான், உன்னைப் பத்தி தெரிஞ்சிக்க நினைச்சான், எல்லாமும் சொல்லும்போது இதையும் சொல்ற மாதிரி ஆகிடுச்சு, கவலைப்படாத… உண்மையை மட்டும்தான் சொன்னேன்”

“என்ன உண்மை?”

“நான்தான் ப்ரப்போஸ் பண்ணினேன், அவளுக்கு இதுல விருப்பமில்லைனு சொல்லிட்டானு சொன்னேன்”

“போச்சு… அம்மாகிட்ட சொல்லாம இருக்கமாட்டான்”

“சொன்னா என்ன?” எனக் கேட்டதும் அழுகைதான் வந்தது செல்விக்கு.

“நீதான் அக்ஸப்ட் பண்ணலையில்ல, என்னைத்தானே தப்பா நினைப்பாங்க, எதுக்கு அழற?”

“ஒருவேளை உங்களை தப்பா நினைக்கலைனா?”

புருவம் சுருக்கியவன், பின்னே  உயர்த்தி, “ஆமாம்ல, ஆன்ட்டி என்னை தப்பா நினைக்கலைனா?” என்றான் ஆர்வமாக.

“நான் போறேன்” என்று இவள் திரும்பவே, கைப்பிடித்து நிறுத்தியவன், “உனக்கு பிடிச்சது என்னனு யோசி. ஆன்ட்டி உனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறதா உன் அண்ணன் சொன்னான், கண்டிப்பா நல்ல பையனாத்தான் பார்ப்பாங்க, ஆனா அவனோட உன்னால வாழ முடியுமானு நினைச்சுப் பார். யார் கூட வாழ்ந்தா சந்தோசமா இருப்பனு யோசிச்சு முடிவெடு” என்றான் தன்மையாக.

பதிலேதும் சொல்லாமல் இவள் கையை உருவப்பார்க்க, “என்னை பிடிக்கலதானே உனக்கு?” என்றான்.

இவள் ஆமாம் என்பதாக தலையசைக்க, “ஆன்ட்டி உன்னை அடிச்சதுக்கு, நான் விசாரிக்கனும்னு எதுக்கு எதிர்பார்த்த?” என்றான்.

“எப்போ…? அம்மா என்னை அடிக்கவேயில்ல” என சமாளித்தாள்.

“என்கிட்ட பொய் சொல்லி என்னை ஏமாத்துறதா நினைச்சிட்டிருக்க, உண்மையா ஏமாந்துபோறது நீதான்டீ, உனக்கு அது புரியலையா? கொஞ்சம் முன்னாடி கடைக்குள்ள நீ என்னை பார்க்கும்போது, நான் உன்னை அவாய்ட் பண்ணியிருந்தா ஏமாந்துடுவனுதான் சிரிச்சேன்”

“உனக்கு நம்ம ஊர் பிடிக்கும், நான் பிடிக்கும், ஆனா என்னை கல்யாணம் செய்துக்க மட்டும் பிடிக்காது, வேறவனை கல்யாணம் செய்துட்டு நிம்மதியா இருக்க முடியுமா உன்னால?” என்றதும் செல்வியின் கண்ணீர் அதிகமானது.

“அன்னைக்கு சொன்னதேதான் இன்னைக்கும் சொல்றேன், வெறுக்கனும்னா என்னை முழுசா வெறுத்துட்டு உனக்கான வாழ்க்கையை அமைச்சிக்கப் பார். இல்லைனா ரொம்ப கஷ்டப்படுவ. உனக்கே பிடிக்கலைனாலும் நீ கஷ்டப்படுறதை ரொம்ப நாள் வேடிக்கை பார்த்திட்டிருக்கமாட்டேன்” என்று அவளின் கையை விடுவித்தான்.

“என்ன செய்விங்க?” என்று அதிர்ந்து பார்க்க,

“போடீ” என்றான் அதட்டலாக.

“என்னை டீ போட்டு பேசாதிங்க, எனக்கு பிடிக்கல”

“இன்னும் கொஞ்ச நேரம் இங்கயிருந்த… நான் பேசுறதையும், கொடுக்குறதையும் உன்னால தாங்கிக்க முடியாது, ஒழுங்கா போய்டு” என்ற மிரட்டலில் உண்மையாக பயந்து அவ்விடம் விட்டு நடந்தாள் வேகமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!