Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 20 2

அத்தியாயம் 20.2

“இப்படி முதுகெலும்பு இல்லாத ஆள்கூட இனியும் என்னால வாழ முடியாது. நானும் என் பையனும் எங்க வாழ்க்கையைப் பார்த்துக்கறோம். இனிமே எங்க வாழ்க்கையில குறுக்க வராதீங்க!”என்று சொன்ன ரஞ்சிதா, அலமாரியில் வைத்திருந்த துணிமணிகளை அவசரமாகப் பையில் அடைத்தாள்.

கட்டிலில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த சித்தார்த்தை மெதுவாகத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டாள். அவனுடைய முகம் அவளின் கழுத்தோடு ஒட்டியிருந்தது. தூக்கத்திலும் அவளுடைய சேலையை இறுகப் பற்றியிருந்தான்.

ரஞ்சிதா மகனை எடுத்துக் கொண்டு கிளம்பும் காட்சியைப் பார்த்த ராஜீவனின் இதயம் வலித்தது.
இரண்டு வருடங்களாகத் தானாகவே விலகி நின்றவன் அவன்தான். இப்போது அவள் விலகிச் செல்லப் போகிறாள் என்றதும் அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



Advertisement

“ரஞ்சிதா…” என்றவனுடைய  குரல் உடைந்தது.அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.பையை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.

“ரஞ்சிதா, ஒரு நிமிஷம் நில்லு! ப்ளீஸ்… போகாதே!”
அவள் நிற்கவில்லை.

“என்னால நீ இல்லாம வாழ முடியாது ரஞ்சிதா!”அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ரஞ்சிதாவின் கால்கள் ஒரு நொடி தயங்கின. ஆனால், அடுத்த நொடியே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் நடந்தாள்.

Advertisement

ராஜீவனின் அந்தக் குரல் வீட்டின் அமைதியைக் கிழித்தது.அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

Advertisement

“நீ என்னை வெறுக்கிறதை என்னால தாங்கிக்க முடியும். நீ என்னைப் பார்த்துப் பேசாம இருக்கிறதைக்கூட என்னால பொறுத்துக்க முடியும். ஆனா… நீயும் என் பையனும் என்னை விட்டுப் போறதை மட்டும் என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியல!”

ரஞ்சிதா ஒரு நொடி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.அவளுடைய முகத்தில் வலியும் கோபமும் கலந்திருந்தன.

“இப்போ எதுக்காக அழறே?” – ரஞ்சிதா

Advertisement

“……” ராஜீவன் பதில் சொல்ல முடியாமல் நின்றான்.

“நான் உனக்காக அழுதப்போ எங்க போனே? உனக்காக  காத்திருந்தப்போ எங்க போனே? என் பையன் பிறந்தப்போ, அவன் முதல்ல தவழ்ந்து, நடந்தப்போ, அவன் உடம்பு சரியில்லாம அழுதப்போ, அவனோட முதல் பிறந்தநாள்ல… அப்போ எல்லாம் நான் எவ்வளவு அழுதே தெரியுமா?அந்த நாட்கள்லே ஒரு நிமிஷமாது நீ என்னையும் பையனையும் நினைச்சு பாத்திருப்பையா?”

அவளின் ஒவ்வொரு கேள்வியும் அவன் நெஞ்சில் இறங்கியது.

“நான் தப்பு பண்ணிட்டேன் ரஞ்சிதா…”

“தப்பு பண்ணிட்டேனு இப்போ புரியுதா? அப்போ புரியலையா?”

“உனக்கு  நான் வேண்டாம்னு முடிவு பண்ணுனே.என்னை மனைவியா ஏத்துக்கவும் இல்ல.நீ அதைச் சொல்லியிருக்கலாம்.என் வாழ்க்கையை நான் பார்த்திருப்பேன். ஆனா, சக மனிஷியா கூட என்னை நீ மதிக்கல. உன் மனசுல இருந்த குழப்பத்துக்காக என் வாழ்க்கையை ஏன் தண்டிச்சே?”

ராஜீவன் தலைகுனிந்தான்.அவளிடம் சொல்ல அவனிடம் எந்தச் சமாதானமும் இல்லை.

“இப்போ நீ அழறேன்னு நான் திரும்ப இந்த பழைய வாழ்க்கையை ஏத்துக்கிட்டா, நாளைக்கு மறுபடியும் என்னை இப்படியே விட்டுட மாட்டேனு என்ன நிச்சயம்?”

“நிச்சயம் விட மாட்டேன்!” என உடனே பதில் சொன்னான்.

“இந்த முறை உன்னையும் என் பையனையும் விடவே மாட்டேன் ரஞ்சிதா. உன்னை என்னால இழக்க முடியாது!”

“அது உன் விருப்பம். ஆனா, என்னால இனி ஒரு நொடியும் உன்கூட வாழ முடியாது!”அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வாசலை நோக்கித் திரும்பினாள்.

“ரஞ்சிதா!”என ராஜீவன் அவளை நோக்கி ஓரடி வந்தான்.

“நான் உன்னை நேசிக்கிறேனா இல்லையான்னு எனக்கே புரியாம இருந்தேன். பிரியாவை நினைச்சு, நான் அவளுக்குத் துரோகம் செய்துட்டேன்னு என்னை நானே தண்டிச்சுக்கிட்டேன். ஆனா, அந்தத் தண்டனையை அனுபவிச்சது நீயும், என் பையனும்தான்!”என்றவனுடைய குரல் தழுதழுத்தது.

“இப்போதான் எனக்குப் புரியுது. உன்னை விட்டுத் தனியா வாழ்ந்தது நான் நினைச்ச மாதிரி எனக்கு நானே கொடுத்த தண்டனை இல்ல… எனக்கு நான் கொடுத்த தண்டனையை விடப்  பெரிய தண்டனையை உனக்குக் கொடுத்திருக்கேன்!”
ரஞ்சிதாவின் கண்களில் கண்ணீர் திரண்டது. அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“இப்போ இதையெல்லாம் சொல்லி என்ன பிரயோஜனம்? – ரஞ்சிதா

“எனக்குத் தெரியல…” என்றவன் அவன் கண்களில் வழிந்த  கண்ணீரைத் துடைக்கக்கூட முயலவில்லை.

“உன்னை எப்படி நிறுத்தணும்னு தெரியல. என்ன சொல்லி உன் மனசை மாத்தணும்னும் தெரியல. ஆனா, என்னை விட்டுப் போயிடாதேன்னு மட்டும் சொல்லத் தோணுது. நீ இல்லாம என்னால இருக்க முடியாது ரஞ்சிதா!”
அந்த வார்த்தைகளைக் கேட்டவளின் முகம் இறுகியது.

“என்னாலயும் உன்னை விட்டுப் போக முடியாதுதான்!”- ரஞ்சிதா

ஒரு நொடி ராஜீவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.அந்த வார்த்தைகளை சொன்னவளின் குரலும் உடைந்தது.

“எத்தனை முறை உன்னை வெறுக்கணும்னு நினைச்சிருக்கேன் தெரியுமா? உன்னைப் பத்தி நினைக்கவே கூடாதுன்னு எவ்வளவு முயற்சி பண்ணியிருக்கேன் தெரியுமா? ஆனா, என்னால முடியல! இன்னைக்கும் உன்னைப் பார்த்தா என் மனசு வலிக்குது. உன் மேல கோபம் வருது. அதே நேரம்… நீ இப்படி அழறதைப் பார்த்தா என்னால நிம்மதியா இருக்க முடியல!”

தன் தோளில் கிடந்த  சித்தார்த்தை  இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு,“ஆனா, அதுக்காக மறுபடியும் அதே வாழ்க்கைக்குள்ள என்னால வர முடியாது. உன் மனசுல எனக்கு இடம் இருக்கான்னு தெரியாம, நீ எப்போ வேணாலும் என்னை விட்டுப் போயிடுவேனு பயத்தோட என்னால வாழ முடியாது!”

ராஜீவன் அவளையே பார்த்தபடியே நின்றான்.

“நீ என்னை நேசிக்கறையா இல்லையான்னு இப்போ நீ சொல்ல வேண்டாம். முதல்ல உனக்கு அது புரியட்டும். ஆனா, என் வாழ்க்கையை மறுபடியும் பரிசோதனைக்கூடமாக்க நான் விரும்பல” என  திரும்பி நடந்தாள்.

அப்போது அவளுடைய தோளில் இருந்த சித்தார்த் அசைந்தான்.
“ம்மா…” என தூக்கக் கலக்கத்துடன் முணுமுணுத்தான்.

ரஞ்சிதா அவனைச் சற்றே சரிசெய்து அணைத்துக்கொண்டாள்.“தூங்கு சித்து… அம்மா இருக்கேன்.” என அவனை தட்டிக் கொடுத்தாள்.

ஆனால், அவன் கண்களைத் திறந்துவிட்டான்.எதிரே நின்றிருந்த ராஜீவனின் முகத்தைப் பார்த்தான்.
ஒன்றும் விளங்கவில்லை.ஆனால் ராஜீவனின் கன்னங்களில் வழிந்துகொண்டிருந்த கண்ணீரைப் பார்த்ததும் சித்தார்த்தின் தூக்கக் கலந்த முகம் மாறியது.

“ப்பா…?” என்றான் இரு கைகளையும் ராஜீவனை நோக்கி நீட்டியபடி….

அந்த ஒரு வார்த்தை ராஜீவனின் காதுகளில் விழுந்ததும், அவன் அப்படியே உறைந்து போனான்.
ரஞ்சிதாவும் அசையவில்லை.
தன்னுடைய கண்ணீருக்கு நடுவே மகனைப் பார்த்த ராஜீவன், அவன் தன்னை அழைத்ததை நம்ப முடியாமல் பார்த்தான்.

“சித்து… என்னடா சொன்ன?” என அவன் குரல் மிக மெலிதாக வெளிவந்தது.

சித்தார்த் மீண்டும் தன் சிறிய கைகளை அவனை நோக்கி  நீட்டினான்.ராஜீவன் அவன் அருகே வரலாமா? என்று ரஞ்சிதாவைப் பார்த்தான். அவள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவனைத் தடுக்கவும் இல்லை.
அவன் மெதுவாக அருகில் சென்றான்.

சித்தார்த் தன் பிஞ்சு விரல்களால் ராஜீவனின் கன்னத்தைத் தொட்டான்.
“ப்பா… நோ…” என  வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று ராஜீவனுக்குப் புரியவில்லை.
சித்தார்த் மீண்டும் அவன் கண்ணீரைத் துடைத்தான். பிறகு தன்னுடைய குட்டிக் கைகளால் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

அவ்வளவுதான்.ராஜீவனால் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை.
“சித்து… என் சித்து குட்டி!” என மகனைத் தன்னுடைய மார்போடு அணைத்துக் கொண்டு அழுதான்.

இரண்டு வருடங்களாகத் தன்னுடைய  மகனின் முகத்தைக்கூடப் பார்க்க விரும்பாதவன். இன்று அதே மகன் தன் கண்ணீரைப் பார்த்து,அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் துடைத்து விடுகிறான்.எவ்வளவு பெரிய சொர்க்கத்தை வாழும் போதே கடவுள் எனக்குத் தந்திருக்கிறார்.ஆனால் அதை அனைத்தையும் இவ்வளவு நாளாக தள்ளி வைத்திருந்தேனே என நெகிழ்ந்து போனான்.

மகனுடைய சின்னஞ்சிறு மனதில் தன்னையும் ஒரு அப்பாவாக ஏற்றுக்கொள்ளும் இடம் உருவாகியிருக்கிறது என்பதை உணர்ந்த ராஜீவன், மகனின் தலையில் முத்தமிட்டான்.“சாரிடா கண்ணா… உன்னை இவ்வளவு நாள் சரியா பார்த்துக்காம விட்டுட்டேனடா!” என மீண்டும் முத்தமிட்டான்.

சித்தார்த் அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்தான்.ராஜீவனின் கண்ணீரைப் பார்த்து அவனுக்கும் அழுகை வந்தது. தற்போது அவன் சிரிக்க இவனும் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே அவனை கட்டியணைத்தபடி மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.

“ப்பா…” “ம்மா…”என்று சொல்லிக்கொண்டே ரஞ்சிதாவை நோக்கிக் கையை நீட்டினான். அவள் அருகில் வந்ததும், ஒரு கையால் தந்தையின் கழுத்தையும் இன்னொரு கையால் தாயின் கழுத்தையும் கட்டிக்கொண்டான்.மூவரும் ஒரே இடத்தில் நின்றார்கள்.

ராஜீவனுக்கு மகனின் அணைப்பு கிடைத்துவிட்டது.ஆனால், அவன் மனைவி இன்னும் அவனிடமிருந்து விலகியே நின்றாள்.

— கவிதை எழுதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!