Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனாய் மாறிய அன்பனே"

அசுரனாய் மாறிய அன்பனே 7

பகுதி 7

        வீரலட்சுமி காலையிலேயே கவுசியிடம் போனில் அதட்டிக் கொண்டு இருந்தார். “இங்க பாரு டீ இன்னும் பத்து நாள்ல உன் அக்காவுக்கு கல்யாணம். பரிசம் எல்லாம் போட்டாச்சு.

        நானும் மதினியும் போய் போன வாரம் டவுன்ல இருந்து ட்ரெஸ், நகை எல்லாம் வாங்கியாந்துட்டோம். உனக்கும் புடவை ரவிக்கை எல்லாம் தைக்கப் போட்டாச்சு. நீ எந்த சாக்கும் சொல்லாமல் காலேஜுக்கு லீவு போட்டு ஒரு வாரத்தில் வந்துடனும்”.. என்று அதட்டினாள்.

           “சரிமா”.. என்று கவுசல்யா சொன்னாலும் அவள் மனதில் ஒரே தவிப்பு. பாவம் அக்கா.. இந்த சூழ்நிலையை எப்படி தான் சமாளிப்பளோ? அகல்யா நிச்சயம் அவளை சிக்கலில் மாட்டி விட்டு ஓடிப் போக மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தது.



Advertisement

       அதே சமயம் மாணிக்கத்தை அகல்யா கணவனாக நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஹரி குணத்துக்கும் மாணிக்கம் குணத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

        ஹரியிடம் ஆடம்பரமான கார், வீடு, நகை என்று வசதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஹரியின் வசீகர சிரிப்பும், கம்பீரமான தோற்றமும், யார் என்று பாராமல் உதவும் குணம் என்று அகல்யா மயங்கியதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

       அவளால் நிச்சயம் ஹரி இடத்தில் மாணிக்கத்தை பொருத்தி பார்க்க முடியாது. அப்போ என்ன தான் செய்வாளோ என்று தவித்தது மனம். இப்போது பேசினால் ஆபத்து. இரவு எல்லாரும் தூங்கியதும் தமக்கையிடம் பேசலாம் என்று காத்துக் கொண்டு இருந்தாள்.

Advertisement

       இங்கு அகல்யா சித்திரவதை அனுபவித்துக் கொண்டு இருந்தாள். முன்பாவது மாணிக்கத்திடம் தன் வெறுப்பை நேரடியாக காட்டி விடுவாள். ஹரி சொல்லி விட்டான் என்று இயல்பாக இருப்பது போல நடிக்கிறேன் என்ற பெயரில் மாணிக்கத்திடம் பரிசம் போட்ட அன்று லேசாக சிரித்து விட்டாள்.

Advertisement

       அவ்வளவு தான்.. அவனின் உரிமையான பேச்சும், அவள் மேல் எல்லை மீறி படியும் பார்வையும் அகல்யாவை நெருப்பாய் சுட்டது. ஒரே ஒரு ஆறுதலான விஷயம் வீரலட்சுமி வீட்டிலேயே இருப்பது தான். அந்த ஒரு காரணத்தினால் தான் மாணிக்கம் அவளை நெருங்காமல் இருந்தான்.

        ஹரி அப்படி சொன்னதில் ஒரு அர்த்தம் இருந்தது. அகல்யாவுக்காக அவர்கள் விதித்து வைத்து இருந்த கட்டுப்பாடுகள் சிறிதளவு அவள் மாற்றத்தில் குறைந்து இருந்தது. முக்கியமாக அவள் கைக்கு அவள் ஃபோனை முழுமையாக கொடுக்கா விட்டாலும். . இந்தா இதை ஆர்டர் போடு.. அந்த திலகவதி அத்தைக்கு பத்திரிக்கை வந்துடுச்சான்னு போன் போட்டு கேளு.

          என்று கட்டளைகள் வரும். அது போதாதா.. அந்த இடைவெளியில் அகல்யா ஹரியிடம் சாட் செய்து அதை ஞாபகமாக டெலிட்டும் செய்து விடுவாள். எனக்கு பயமா இருக்கு ஹரி. எப்படா என்ன வந்து கூட்டிட்டு போவ என்று அழாத குறையாக கெஞ்சி விடுவாள்.

Advertisement

       அன்று அவர்கள் ஊரே விழாக் கோலம் கொண்டது. அமைச்சர் இளங்கோவன் அவர்களே வருக !!வருக!!.. என்று பேனர்களும் போஸ்டர்களும், கட்சிக் கொடிகளும் ஆர்ப்பரிக்க.. பாட்டு ஆட்டம் பாட்டம் என்று திருவிழா ஒரு பக்கம் களை கட்டியது.

             “ஏக்கா வீரலட்சுமி!!.. பால்குடம் எல்லாம் எடுத்துட்டாங்களாம். இப்போ கொஞ்சம் கூட்டம் கம்மியா இருக்கும். வாரியா போய் சாமிய பார்த்துட்டு வந்து விடலாம்.”.. என்று அழைத்து இருந்தாள் பக்கத்து வீட்டு மரகதம். வீரலட்சுமிக்கு ஆசைதான்.

      வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள்.. அசந்து தூங்கிக் கொண்டு இருந்தாள் அகல்யா. மரகதத்திடம் “செத்த இரு டீ”.. என்றவள் இரண்டு நிமிடத்தில் பட்டுபு புடவை மாற்றிக் கொண்டு வந்து இருந்தாள். வீட்டை பூட்டிச் சென்று விடலாம்.. என்று நினைத்தவள் சட்டென்று மனம் மாறினாள்.

        “மரகதம் நீ போ. நான் அப்புறம் போய் பார்த்துக்கிறேன்”.. என்றாள் சின்ன சந்தர்ப்பம் கூட அகல்யாவுக்கு கொடுத்து விடக் கூடாதே என்ற பயத்தில்.

          “ஏக்கா.. அரை மணி நேரத்தில் என்ன ஆகிடப் போவுது?.. பூட்டை உடைச்சிட்டு எவன் உன் பொண்ணை தூக்கிட்டு போகப் போறான்”.. என்று அவள் சடைத்துக் கொள்ள..

           “ஆஹா.. உன்ன மாதிரி என் மகள் என்ன அன்னக்காவடியா?.. அவளை கொத்திட்டுப் போக ஆயிரம் பேர் காத்திட்டு இருக்கான். போ டீ உன் வேலைய பார்த்திட்டு”.. என்று வீரலட்சுமி சிடுசிடுக்க.

     “ம்ம்.. ஹுக்கும்!!.. பொல்லாத பிள்ளைய பெத்துட்டா. பெரிய ஊரில் இல்லாத பேர் அழகின்னு நினைப்பு.”.. என்று கன்னத்தை தோள்பட்டை வரை சிலுப்பி விட்டுச் சென்றாள்.

       அடுத்த அரைமணி நேரத்தில் மரகதம் திடு திடுவென ஓடி வந்தாள்.

    “ஏக்கா.. உங்க அய்யன் உன் தலையில் பெரிய இடியை இறக்கிட்டார். உடனே ஓடி வா.. அங்க பெரிய பஞ்சாயத்து கூடி இருக்கு”.. என்று மூச்சிரைக்க வந்து நின்று இருந்தாள்.

        வீரலட்சுமியால் அவள் சொன்ன விஷயத்தை நம்ப முடியவில்லை. கை கால்கள் நடுங்கத் துவங்கி விட்டன. எத்தனை நாட்கள் கனவு. கூடாது அது நடக்கவே கூடாது.. என்று யோசித்தவள் நொடியும் தாமதிக்காமல் வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு கோவில் மண்டபம் நோக்கி வேக நடை இடத் தொடங்கினாள்.

    மரகதத்திடம் “ஏண்டி.. செத்த நேரத்துக்கு முன்ன நான் கடுசா பேசினேன்னு என்கிட்ட பொய் எதுவும் சொல்லையே” என்று தவிப்புடன் கேட்க.

    “ஏக்கா.. நான் அப்படி பொய் எதுவும் சொன்னா.. நீ என்ன உசுரோட விட்டுறுவியா என்ன?”.. என்று மரகதம் கேட்க..

      “ம்ம்.. அந்த மாரியாத்தா தான் காப்பாத்தனும். நீ சொன்ன சங்கதி பொய்யா போகணும்”.. என்று வீரலட்சுமி சொல்ல இருவரும் கோவில் மண்டபத்தை எட்டி இருந்தனர்.

         அந்நேரம் அங்கு அரசியல் பிரமுகர்கள் அத்தனை பேரும் கூடி இருக்க.. மாணிக்கத்தின் குரல் கேட்டது. “ஐயா.. இந்த பொண்ணு என் மேல அபாண்டமா பழி போடுது. எனக்கு அடுத்த வாரம் என் அத்தை மகளோடு கல்யாணம். என் வாழ்க்கையை இவள் கெடுக்கப் பார்க்கிறா”.. என்றான் மாணிக்கம்.

           “ஐயா இந்த ஆளோட புள்ளை என் வயித்துல வளருது. நாங்க காதலிச்ச போது எடுத்துகிட்ட போட்டோவை எல்லாம் பாருங்க. “.. என்று ஒரு பெண் குற்றச்சாட்டுடன் பக்கத்து ஊரில் இருந்து அவர்கள் ஊர் தலைவர்களையும் பொது மக்களையும் சேர்த்து அழைத்து வந்து இருந்தாள்.

       அந்த பெண் பொய் சொல்ல வில்லை என்பது அவள் கொடுத்த புகைப்படங்களை பார்த்ததும் தெரிந்து போனது.

       “ஆமா. நானும் அவளும் பழகினோம். அதுக்காக இவளைப் போய் கல்யாணம் பண்ண முடியுமா??.. என் அந்தஸ்துக்கும் வசதிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. அவளை எவ்வளவு வேணும்னு கேட்க சொல்லுங்க. இப்பவே கணக்கை தீர்த்து விடலாம்”.. என்றான் மாணிக்கம் திமிராக.

      வேல்முருகன் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக.. தன் மகனை மனதுக்குள் திட்டிக் கொண்டு இருந்தார். இப்படி ஒரு விஷயத்தை செய்ததை விட வளர விட்டது எவ்வளவு பெரிய தப்பு. அதுவும் தைரியமாக அமைச்சர் முன்பே ஒத்துக் கொண்டானே.. என்று வேல்முருகனும் அவன் தந்தையும் அடுத்து என்ன நடக்கும் என்று அனுமானித்து விட்டனர்.

        பெரிய சலசலப்பு வாக்குவாதம் எல்லாம் தொடர.. இளங்கோவன் “நிறுத்துங்க”. என்று கத்தி இருந்தார்.

        “எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க… பாவம் உங்களால இந்த அம்பது ஜோடிகளும் கல்யாணம் செய்ய காத்திருக்கிறாங்க. இங்க பாரு மாணிக்கம்.. நீ செஞ்சது பெரிய தப்பு. இந்த இளங்கோவன் மக்களுக்கு சேவை செய்ய வந்தவன். என் முன்னாடி நீதி கேட்டு வந்த இந்த அவலைப் பெண்ணுக்கு நிச்சயம் நீதியை வழங்குவேன்.

          நீ இப்போ இங்கேயே இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டணும். இல்லைன்னா நானே போலீசில் புகார் கொடுத்து உன்னை ஜெயிலுக்கு அனுப்பிடுவேன்”.. என்றார் ஆக்ரோஷமாக.

        அதை எல்லா மீடியாக்களும் கவர் செய்கிறதா என்று பார்த்துக் கொண்டார். அவரைப் பொறுத்தவரை அவர் ஹீரோவாக மாற வாய்ப்பு அல்லவா!!.. எப்படி தவற விடுவார்?

       மாணிக்கம் அருகில் சென்று இருந்த வேல் முருகன் ஏதோ அவன் காதில் சொல்ல.. முதலில் மறுத்த மாணிக்கம்..

    ‘அய்யா.. நீங்க சொல்லி உங்க பேச்சை மீறுவேனா. “.. என்று நொடியில் மாணிக்கம் மாறி பேசி இருந்தான்.

        இளங்கோவனும்.. “ம்ம்.. சொன்னா மட்டும் பத்தாது. இந்த பொண்ணை கண் கலங்காம பார்த்துக்கணும். இந்தா தாலிய கட்டு”.. என்று தட்டில் இருந்த தாலியை அவன் புறம் நீட்டி இருந்தார்.

      வீரலட்சுமி துடித்துப் போனாள். வேல்முருகன் அருகில் சென்று.. “அண்ணே என்ன அண்ணே!. என் பிள்ளைக்கு பரிசம் போட்டு இருக்கீங்க அண்ணே. நிறுத்தச் சொல்லு”.. என்று கைபிடித்து கதறினாள்.

         “என்னை.. என்ன செய்யச் சொல்லுற லட்சுமி. அந்த கிறுக்கு பையன் இப்படி பண்ணுவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே”.. என்றான்.

     “அண்ணே.. அந்த ஆளு பாட்டுக்கு ஏதோ ரோட்ல போற பொண்ணை நம்ம மாணிக்கம் தலையில் கட்டப் பார்க்கிறாரு. நீயும் அமைதியா நிக்கிற. நான் சொல்லட்டுமா”.. என்று அவள் திரும்ப.

     அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தான் வேல்முருகன்.

      “சும்மா இரு டீ. என் அரசியல் எதிர்காலமே அவர் கையில் தான் இருக்கு. நீ ஏதாவது பேசின உன்னை சாகடிச்சிடுவேன்”.. என்று நிறுத்தி இருந்தான்.

      அதே நேரம் மாணிக்கம் அந்த பெண் கழுத்தில் தாலி கட்ட..

      ம்ம்.. கெட்டி மேளம் கெட்டி மேளம்.. எல்லாரும் தாலி கட்டலாம். என்று ஏற்கனவே கொடுக்கப்பட்ட தாலி கொண்டு அத்தனை ஜோடிகளும் தங்கள் துணைக்கு தாலி கட்டி இருந்தனர்.

        வீரலட்சுமியால் அந்த ஏமாற்றத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. இத்தனை வருடங்களாக தன் தாய் வீட்டில் இருக்கும் அத்தனை சொத்து சுகங்களுக்கும் தன் மகள் தான் ஏக வாரிசாகப் போகிறாள்.. என்று எத்தனை கனவு கண்டு இருப்பாள். அத்தனையும் நிராசை ஆகி விட்டதே”.. என்று அவரது கண்கள் குளமாகின.

      நெஞ்சில் அடித்து ஒப்பாரி வைத்து இருப்பாள். அண்ணனுக்கு பயந்து கண்ணீரோடு நிறுத்திக் கொண்டாள். ”அந்த நாசமா போறவா இப்படியா என் மகள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போடுவா”.. என்று மரகதத்திடம் புலம்பினாள். .

       ஒரு பக்கம் அவளைப் போலவே வேல்முருகன் மனைவியும் அழுது கொண்டு தான் இருந்தாள்.

       மேடையில் இரண்டு இரண்டு ஜோடியாக அமைச்சர் இளங்கோவனிடம் ஆசிர்வாதம் வாங்கி, போட்டோ எடுத்து பரிசு பெற்றுச் சென்று கொண்டு இருந்தனர். எல்லாருக்கும் கல்யாண விருந்து சாப்பாடு வடை பாயசத்தோடு காத்துட்டு இருக்கு. நம்ம இளங்கோவன் அய்யா ஏற்பாடு. எல்லாரும் சாப்பிட்டு போங்க “.. என்று மைக்கில் அறிவித்தார்கள்.

           “எக்கா.. நடந்தது நடந்து போச்சு. நம்ம புள்ளைக்கு நல்ல மாப்பிள்ளையா கடவுள் காட்டுவார். நீ தைரியமா இரு” என்றாள் மரகதம்.

       “ம்ம்”.. என்று முந்தானையில் கண்ணீரை துடைத்த படி மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் வீரலட்சுமி. “என்ன பண்றது அப்படிதான் மனசைத் தேத்தனும்”.. என்று சொல்ல.

    “அக்கா.. வந்தது வந்துட்டோம். ஒரு வாய் சாப்பிட்டு போவோமா. வடை பாயசம் எல்லாம் இருக்காம்”.. என்றாள் மரகதம்.

     “எனக்கு வேண்டாம் டீ. நான் வீட்டுக்கு போறேன். நீ சாப்பிட்டு வா”.. என்று வீரலட்சுமி போக முயற்சிக்க..

   “ஏக்கா.. இங்க பாரு”.. என்று அதிர்ச்சியில் மரகதம் கண்கள் நிலை குத்தி நிற்க..

  இவள் ஏன் இப்படி பேய் அரைஞ்ச மாதிரி நிக்கிறா என்று நினைத்த வீரலட்சுமி அவள் காட்டிய திசையைப் பார்க்க..

       இப்போது வீரலட்சுமி கண்களும் நிலைகுத்திப் போய் சிலையாகி விட்டாள்.

    அங்கு மேடையில் இளங்கோவனுடன் மணக்கோலத்தில் இருந்தது வேறு யாரும் அல்ல.. ஹரி அகல்யா தம்பதியர் தான். அகல்யா கழுத்தில் மஞ்சள் கயிறு பளிச்சிட தாலி மின்னியது.

   தொடரும்.

இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே . அன்புடன் லக்ஷ்மி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!