வீரலட்சுமி மயக்கம் போடாத குறையாக மேடையைப் பார்த்து நிற்க, அங்கு ஹரியும் அகல்யாவும் எழிலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
“அய்யோ அய்யோ… இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா”.. என்று கத்திக் கொண்டு வந்தவள் சத்தம் ஸ்பீக்கர் சத்தத்தில் மட்டுப்பட்டு இருக்க.. “அந்த எழவை முதல்ல நிறுத்தச் சொல்லு டீ”.. என்று மரகத்திற்கு உத்தரவிட்டு… மேடைக்கு ஓடினாள்.
அதே நேரம் பாட்டுச் சத்தம் நிறுத்தப்பட ஆக்ரோஷமாய் வந்த தாயைப் பார்த்து அகல்யா ஹரியோடு ஒட்டிக் கொண்டாள். “அடியே மானங்கெட்டவளே!!.. பெத்தவ நான் இப்படி குத்துக் கல்லாட்டம் நிற்கும் போது இப்படி ஒரு அனாதைக் கழுதையை இழுத்து வந்து இருக்கியே.
Advertisement
இவனை எல்லாம் என்னால மருமகனா ஏத்துக்க முடியாது. முதல்ல இவன் கட்டின தாலியை அறுத்துப் போடு”.. என்று வீரலட்சுமி தான் சொன்னதைச் செய்ய அகல்யாவை நெருங்க.. அவளோ ஹரி பின்னால் பாதுகாப்பாக ஒளிந்து கொண்டாள்.
“அத்தை கொஞ்சம் பொறுமையா இருங்க”.. என்று ஹரி சொல்ல..
“யாருக்கு யாருடா அத்தை. ஒரு அன்னக்காவடி பையன்!!.. நீ எனக்கு மருமகனா??. ஒரு சொத்து சொகம்! வீடு வாசல்!, தாய தகப்பன்! என்று ஒன்னுமே இல்லாத வெறும் பையன். உனக்கு என் பொண்ணு கேட்குதா” . என்று வீரலட்சுமி கத்த.
Advertisement
அது வரை அமைதி காத்து நின்ற இளங்கோவன்.. “அம்மா.. ஏதோ பெத்த தாயி ஆதங்கத்தை கொட்டுறீங்க என்று ஒதுங்கி நின்றால் ரொம்ப பேசுறீங்க!..” .. என்று அவர் கேட்க.
Advertisement
“அய்யா.. பெரிய மனுசரே.. நீங்க என் அண்ணன் மகனுக்கு தீர்ப்பு வழங்கி அவன் வாழ்க்கையை முடிச்சி வச்சதும் இல்லாம இப்போ என் பொண்ணு வாழ்க்கையிலும் மண்ணைப் போட்டுட்டீங்களே!!. “.. என்று பெருத்த ஒலி எழுப்ப.. அந்நேரம் பின்னால் ஓடி வந்திருந்த வேல்முருகன் பதறிப் போய்
“அய்யா இது என் தங்கச்சி தான். மன்னிச்சிடுங்க. இவளை நான் பார்த்துக்கிறேன். என்றவன் “லட்சுமி வாயை மூடு”.. என்று வெளியே இழுத்துப் போனான்.
இளங்கோவன் இது போல பல சம்பவங்களை ஏற்கனவே கண்டதினாலோ என்னவோ அவர் பெரிதாக எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அடுத்த மணமக்களுடன் புகைப்படம் எடுக்க மும்முரமானார்.
Advertisement
“அண்ணே.. என் கைய விடு. நீ உன் பிள்ளைக்கு என்னமும் பண்ணு. ஆனா என் மகள் வாழ்க்கை சீரழிஞ்சு போக நான் விட மாட்டேன். அந்த அனாதைப் பயலை விரட்டி விட்டு என் மகளைக் கூட்டி வரணும். “ என்று கத்த.
“ஏத்தா.. உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு. நாளைக்கு எல்லா பேப்பரிலும் உன் மகள் போட்டா அந்த பயலோடு வரப்போவுது. அதுக்கு அப்புறம் எந்த மூஞ்சி வச்சிட்டு அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்ப.”. என்று வேல்முருகன் சொல்ல..
வீரலட்சுமி முகத்தில் ஏமாற்றமும் அதிர்ச்சியும் சேர்ந்து தெரிய..
“எனக்கு உன் நிலைமை புரியுது லட்சுமி. ஆனா இப்போ எல்லாம் கை மீறிப் போயிடுச்சு. அந்த பையன் அப்புராணி என்று நாம தப்புக் கணக்கு போட்டுட்டோம். அவன் இப்படி ஒரு சதி பண்ணி.. அமைச்சர் முன்னாடி வந்து நிப்பான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. என்னை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி என்னை கையால் ஆகாதவனா ஆக்கி வச்சிட்டான்.”.. என்று சொல்ல.
அதே நேரம் அங்கு தூரத்தில் ஒரு கார் வர மண்டபத்தில் இருந்து வெளிவந்த ஹரியும் அகல்யாவும் அதில் ஏறப் போனார்கள்.
வேல்முருகன் கையை உதறி விட்ட வீரலட்சுமி .. “அடேய்.. என்னைக் கதற விட்டுட்டு என் பிள்ளையைப் பிடுங்கிட்டுப் போரீல.. எழுதி வச்சுக்கோ.. என் மகள் நீயும் வேணாம்!.. நீ கட்டின தாலியும் வேணாம்ன்னு உன் முகத்தில் தூக்கி எறிஞ்சி என்னைத் தேடி வருவா!!. இது நடக்குதா இல்லையான்னு பாரு!”.. என்று கத்த..
அகல்யா, ஹரியுடன் அந்த கார் புறப்பட்டு இருந்தது.
வீரலட்சுமியைப் பார்க்கவே வேல்முருகனுக்கு பாவமாக இருந்தது. “ ஏத்தா.. நீ ஒன்னும் வருத்தப்படாத. எத்தனை நாளைக்கு அகல்யா அவனோடு இருப்பாள்னு நினைக்கிற. அவள் வசதியா வாழ்ந்தவா. இந்த பயலோடு வாழுற வாழ்க்கை சீக்கிரமே அலுப்பு தட்டிடும். கொஞ்ச நாள்ல அம்மா என்னை மன்னிச்சிடு என்று உன்னைத் தேடி வந்திடுவா. “.. என்றான் அவளை சமாதானம் செய்யும் நோக்கத்தோடு.
“எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு அண்ணே. ஆனாலும் ஏமாத்துக்காரி!!.. அவனை மறந்துட்டேன் என்று எத்தனை நாடகம் போட்டா தெரியுமா?”.. என்று கதறி அழுது விட்டாள்.
“சரி சரி கண்ணைத் தொடச்சுக்கோ லட்சுமி. உன் புள்ளை வாழ்க்கை மட்டுமா என் புள்ளை வாழ்க்கையும் தான் போச்சு. உன் மருமகன்னாலும்.. ஏதோ பார்க்கிறதுக்கு நல்லா சினிமாக்காரன் மாதிரி இருக்கான்.
என் மகன் ஒன்னைப் பிடிச்சி வந்து இருக்கான் பாரு.. நல்லா பேட்டை ரவுடி மாதிரி இருக்கு. “.. என்று அவன் சொல்ல. மரகதம் அவர்கள் அருகில் வந்து இருந்தாள்.
“இந்தா மரகதம் என் தங்கச்சியைப் பத்திரமா வீட்டுக்கு கூட்டிப் போய்ச் சேர். அவளுக்கு ஆறுதலா இரண்டு வார்த்தை பேசு” என்று அனுப்பி வைத்தான்.
இங்கு காரில் சென்று கொண்டிருந்த அகல்யா கண்கள் குளமாகின. என்ன தான் அவர்கள் ஆசைப்பட்டது நடந்து இருந்தாலும்.. வீரலட்சுமியின் ஒவ்வொரு சொல்லும் அவர்கள் இருவரையும் ரணமாக தாக்கியது. “அகல்.. அழாத. அம்மா ஏதோ கோபத்தில் சொல்லுறாங்க. கொஞ்ச நாள் போனால் சமாதானம் ஆகிடுவாங்க.”. என்றான் அவளை தோளோடு அணைத்தபடி.
“இல்லடா.. எங்கம்மாவுக்கு கருநாக்கு. அவங்க சாபம் விட்டா.. அப்படியே பலிக்கும். நான் உன்னை விட்டு பிரிஞ்சி போய் விடுவேன் என்று சொல்லிட்டாங்க”.. என்று துடித்து அழுதாள்.
“ஹே லூசு!!.. அவங்க எதையும் உணர்ந்து பேசல. நம்ம மேல உள்ள கோபத்தில் அப்படி பேசுறாங்க. அவ்வளவுதான். அவங்க கண்ணு முன்னாடி நாம சந்தோசமா வாழ்ந்து காட்டுவோம். அவங்க சாபத்தை பொய் ஆக்குற மாதிரி குடு குடுன்னு வயசாகுற வரை ஒண்ணுக்குள்ள ஒண்ணா இப்படி சேர்ந்தே இருப்போம்”.. என்று அவன் அணைப்பை இறுக்க.
“ம்ம்.. ஆமா. நாம நல்லா வாழ்ந்து காட்டணும். நாம ரெண்டு பேரும் நல்ல வேலைக்குப் போய் சம்பாதிச்சு கவுரவமா வாழணும். சரி.. நாம இப்போ எங்க போறோம்?”.. என்றாள் அகல்யா புரியாமல்.
“என் பழைய ஹோட்டல் முதலாளி கிட்ட கேட்டு ஒரு வீடு ஏற்பாடு பண்ணிட்டேன் அகல்யா. ஆனா அது இப்போ ஒரு மாதத்துக்கு தான். சீக்கிரமே வேற நல்ல வீடா பார்த்திடலாம்.” என்றான்.
அதேநேரம் ஹரி கைபேசியில் அழைப்பு வர கவுசல்யா தான் அழைத்தாள். “இந்தா அகல்.. உன் தங்கச்சி தான் கூப்பிடறா”.. என்று அவன் கைபேசியை நீட்ட..
“கவுசி”.. என்று அழுது விட்டாள். பின் குரலை சரி செய்து .. “நடந்ததை எல்லாம் சுருக்கமாக கூறியவள்.. அம்மா ரொம்ப கோபமா இருக்காங்க கவுசி. எங்களை நிறைய திட்டிட்டாங்க. அது பரவாயில்லை. நீ ரெண்டு நாள் லீவ் போட்டு.. அம்மாவை கூட இருந்து பார்த்துக்கோ. அப்பா கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன் என்று சொல்லு”.. என்றாள்.
“சரிக்கா.நீ கவலைப்படாத நான் அம்மாவை பார்த்துக்கிறேன். அப்பா கிட்டயும் சொல்றேன். நல்லவேளை அந்த மாணிக்கம் மாமாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இனி தைரியமா நம்ம ஊர் பக்கம் போகலாம். எல்லாம் ஹரி.. சாரி சாரி.. ஹரி மாமாவோட பிளான் தான். மாணிக்கம் ஏமாத்த நினைச்ச அந்த பொண்ணு ஊருக்கே போய்.. நீங்க இந்த தேதியில் அமைச்சர் வரும் நேரம்.. ஊர் பெரியவங்க எல்லாரும் சேர்ந்து போனால்.. அந்த பொண்ணுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.
என்று அவங்களுக்கு எடுத்துச் சொல்லி அவங்களை அனுப்பி வச்சது ஹரி தான். “
“ம்ம்.. நிச்சயம் ஹரி எதாவது செய்வான்னு தெரியும். நானும் அந்த நம்பிக்கையில் தான் காத்து இருந்தேன்.”.. என்றவள் இதழ்களில் மெல்லிய புன்னகை.
“மாமா கோவையில் தான் வீடு எடுத்திருக்கிறதா சொன்னார். நீ நாளைக்கு முடிஞ்சா வா டீ”..; என்று கவுசியிடம் சொன்னாள்.
“இல்லக்கா இப்ப வேணாம். அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். இன்னொரு நாள் வரேன்.”.. என்றவள் ஃபோனை துண்டித்து இருந்தாள்.
அவன் தோழர்கள் மூன்று பேர் வேறொரு காரில் அவனுடன் வந்து இருப்பார்கள் போல. “மச்சான் நாங்க முன்னாடி போய் வீட்டுக்கு தேவையானது எல்லாம் வாங்கி வைக்கிறோம் டா”.. என்ற அவர்கள் குரல் செல்ஃபோனையும் தாண்டி வெளியே கேட்டது.
“சரிடா.. நீங்க போங்க. நாங்க பின்னாடி சாப்பிட்டு வரோம். அவள் நிச்சயம் சாப்பிட்டு இருக்க மாட்டா. நான் சாப்பிட வச்சிட்டு வரேன்.”.. என்றவன் அவளை சொன்னது போல சாப்பிட வைத்தான்.
மாலை அவர்கள் வீட்டுக்குப் போக . ஆரத்தித் தட்டுடன் அவன் கல்லூரி தோழர்களும் தோழிகளும் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுக்கு தேவையானதை ஓரளவுக்கு வாங்கி வைத்து இருந்தனர். பின் வாழ்த்து கூறி விடை பெற்று சென்று இருந்தனர்.
சின்ன வீடு தான். ஆனால் புதிய வீடாக இருந்தது. ஒரு இன்டக்சன் அடுப்பு, சில பாத்திரங்கள். காபி போட தேவையான பொருட்கள். சின்ன மெத்தை, பக்கெட் மக் என்று தேவையான பொருட்கள் இருந்தன.
அகால்யாவுக்கு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தோம் என்ற நிம்மதி இருந்தாலும்.. தாய் தந்தைக்கு பெருத்த அவமானத்தை கொடுத்து விட்டோமே என்று உறுத்தலாகத் தான் இருந்தது. அதிலும் வீரலட்சுமி சபித்துக் கொண்டு சொன்ன சொற்கள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன.
அவளது வாடிய முகத்தைப் பார்த்த ஹரிக்கு அவள் வேதனை புரியாமல் இல்லை. அவளை மனமாற்றும் எண்ணத்தோடு.. “அகல்யா.. எதையும் யோசிக்காம தூங்குடி. அம்மா கொஞ்ச நாள்ல சமாதானம் ஆயிடுவாங்க”.. என்றான்.
“இல்ல ஹரி எங்கம்மாவுக்கு வைராக்கியம் ஜாஸ்தி. அவ்வளவு லேசில் என்ன மன்னிக்க மாட்டாங்க.”.. என்று அவன் தோளில் சாய்ந்து அழுது விட்டாள்.
அன்று இரவு அவள் உள் அறையில் படுத்துக் கொள்ள அவன் ஹாலில் படுத்து தூங்கி இருந்தான். இருவர் மனமும் கனத்து இருக்க.. அவர்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
மறுநாள் காலையில் வேகமாக எழுந்த ஹரி அவளுக்கு காலை உணவை வாங்கி வைத்தான். அவளை எழுப்ப உள் அறைக்கு வர.. அவள் அப்போதும் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அவள் கழுத்தில் தாலி பளிச்சிட.. அவள் புடவை லேசாக விலகி இருந்தது.
வழக்கமாக பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்பவனுக்கு இன்று.. “இவள் என்னவள் எனக்கானவள்.. என்று ஒரு எண்ணம் தோன்ற.. அவளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஆவல் தோன்றியது.
இருந்தும் மன வருத்தத்தில் இருப்பவளிடம் தன் உணர்வுகளை காட்ட மனமின்றி சற்று விலகியே நின்று கொண்டான்.
“அகல்.. நான் காலேஜ் போய் விட்டு வரேன். நீ ஜாக்கிரதையா இரு. எதுவும் வேணும்னா உன் போன் இருக்குல மெசேஜ் பண்ணு“ .. என்று அவள் நெற்றியில் மென் முத்தம் பதித்துச் சென்றான்.
குளித்து வந்தவளுக்கு மனம் கேட்கவில்லை. பக்கத்து வீட்டு மரகதம் அக்கா மகள் அவள் சிநேகிதி தான். அவள் எண்ணுக்கு அழைத்து விட்டாள். “அர்ச்சனா.. பக்கத்துல யாரும் இருக்காங்களா” என்று தயக்கத்துடன் துவங்க..
“இல்ல டீ. எனக்கு ஒன்னும் இல்லை. அம்மா எப்படி இருக்காங்க. இன்னும் அழுதுட்டே இருக்காங்களா? சாப்பிட்டங்களா?”.. என்று கண்களில் நீரைத் துடைத்த படி கேட்டு இருந்தாள்.
எதிர்முனையில் அர்ச்சனாவுக்கு அவள் துயரம் நன்றாகவே புரிந்தது. “அகல்யா.. நீ அழாதே. நல்லவேளைக்கு நீ தப்பிச்சு போயிட்ட. நீ இந்த மாதிரி அமைச்சர் முன்னாடி கல்யாணம் பண்ணவில்லை என்றால். நிச்சயம் ஹரியைக் கொன்னு போட்டு உன்னை இழுத்து வந்து இருப்பாங்க”.. என்று சொல்ல.
அதிர்ந்து போன அகல்யா.. “அர்ச்சனா என்ன டீ சொல்லுற”.. என்று கேட்க.
“ஆமா அகல்யா.. இங்க அப்படி தான் பேசிட்டு இருந்தாங்க. அது மட்டும் இல்லை.. உங்களை நிம்மதியா வாழ விடக் கூடாது ஏதாவது மந்திரம் பண்ணலாமா?.. இல்ல சூனியம் வச்சாவது ஹரியை உன்கிட்ட இருந்து பிரிச்சு உன்னை இங்க திரும்ப கூட்டிட்டு வரலாமா என்று தான் யோசிச்சுட்டு இருக்காங்க.”.. என்று அர்ச்சனா சொல்ல.
“என்ன டீ சொல்லுற.. அம்மா நான் இல்லாமல் கஷ்டப்படுறாங்களோ என்று விசாரிச்சா.. எனக்கே குழி வெட்ட இந்த அம்மா திட்டம் போட்டு இருக்கா”.. என்று கோபம் தான் பொங்கியது அகல்யாவுக்கு.
“அது உன் தப்பு. இத்தனை வருடம் இருந்து இருக்க. உங்கம்மா புத்தி உனக்கு தெரியாதா?. அந்த அமைச்சருக்கு பயந்துட்டு இப்போதைக்கு உங்க மேல கை வைக்க மாட்டாங்க. ஆனா நிச்சயம் கொஞ்ச நாளுக்கு அப்புறம் தேட ஆரம்பிப்பாங்க.”
“என்ன டீ பயங்காட்டுற”
“ பயம் எல்லாம் காட்டலை. இரண்டு மூணு வருஷம் இவங்க கண்ணில படாம இருன்னு சொல்றேன். வேற ஊருக்கு போய் இரு. கோவை வேணாம்.” என்றாள் அர்ச்சனா.
“ம்ம். சரி டீ. அங்க நடக்குற விஷயம் எல்லாம் அப்பப்போ தகவல் கொடு”.. என்று ஃபோனை வைத்து இருந்தாள்.
இவர்கள் திருந்தவே மாட்டார்களா.. என்று மனதில் புலம்பிக் கொண்டாலும் மனதில் ஒரு நிம்மதி பரவி இருந்தது. வீரலட்சுமிக்கு துரோகம் பண்ணி விட்டோமே என்ற குற்ற உணர்வில் இருந்து வெளி வந்து இருந்தாள்.
அர்ச்சனாவிடம் பேசியதை சுருக்கமாக ஹரிக்கு அனுப்பியவள். எனக்கு இனிமே யாரும் வேண்டாம். நீ மட்டும் போதும். உன் அன்பு மட்டும் போதும் “.. என்று அனுப்பி இருந்தாள்.
அவள் செய்தி ஹரியை பெரிதாக தாக்கியது. யாருமே இல்லை என்று வாழ்ந்தவனுக்கு தனக்காக, தன் அன்புக்காக மட்டுமே ஒருவள் காத்து இருக்கிறாள் என்று எண்ணும்போதே.. இறக்கை இல்லாமல் பறப்பது போல ஜிவ்வென்ற ஒரு உணர்வு.
பலமுறை அவள் செய்தியை வாசித்தவன் பதில் மட்டும் போட வில்லை. வகுப்பிலும் பிசியாக இருந்து விட்டான்.
கடைசி வகுப்பில் நேரம் கிடைத்ததும். கைபேசியில் அவன் ஏதோ செய்தி அனுப்ப.. அகல்யா எடுத்து பார்த்தாள். “ஹாய் பொண்டாட்டி..”
“சொல்லுடா..”
“நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஞாபகம் இருக்கா?” என்று அவன் அனுப்ப..
“ஏன் இல்லாம. அது தான் நீ கட்டின தாலி என் நெஞ்சைத் தொட்டுக் கிட்டே இருக்கே”.
“ம்ம்.. கொடுத்து வச்ச தாலி. எனக்கு எப்போ அந்த பாக்கியம் கிடைக்குமோ”..
முதல் முறையாக ஹரி இப்படி பேச.. அகல்யா முகம் குங்குமமாய் மாறியது. அவளுக்கு நம்பவே முடியவில்லை. “அடப்பாவி.. உனக்கு இப்படி எல்லாம் பேச வருமா”? என்று அதிசயித்தாள்.
“ம்ம்.. இவ்வளவு நாள் நீ என் காதலி. என் ஆசைகளுக்கு தடைக் கல் போட்டு இருந்தேன். இப்போ நீ என் பொண்டாட்டி. எனக்கு இல்லாத உரிமையா?”..
“ம்ம்.. உரிமையா?? பேச்சு எல்லாம் ஒரு மாதிரி போவது”.. என்று அவள் வெட்கத்தை மறைத்தபடி அனுப்ப..
“என் உரிமை என்னன்னு வந்து சொல்றேன். ரெடியா இரு. சரி அப்புறம் பேசறேன். . பை”.. என்று அனுப்பி இருக்க..
அகல்யாவுக்கு ஹரியின் இந்த புதிய பரிமாணம் மிகவும் பிடித்து இருந்தது. இன்று தான் முதல்முறையாக அவன் காதலைச் சொன்னது போல் ரத்தம் சூடேறி கன்னங்கள் ரோஜாப்பூவாய் சிவந்து போயின.
“ச்ச.. ஒரு மெசேஜ்லே இப்படி ஆயிட்டேன். இவன் காதல் பார்வை எல்லாம் பார்த்தால் என்ன ஆவேனோ”.. என்று எண்ணியவளுக்கு அவனுக்காக காத்துக் கொண்டு இருக்கும் ஒவ்வொரு நொடியும் யுகமாகத் தோன்றியது.