Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நின்னோடு தமியனாய்

நின்னோடு தமியனாய் 2

அத்தியாயம் 2

விவி நேசனல் லெதர் ஃபேக்டரியினுள் நுழைந்தவன்.காரை பார்க் செய்து விட்டு…சாவியை வலது கையின் ஆட்காட்டி விரலில் மாட்டி சுற்றிக் கொண்டே, இடது கையை பேன்ட் பாக்கெட்டில் விட்டபடி…
“இளமை இதோ இதோ…
இனிமை இதோ இதோ…
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது
கண்கள்..”என்ற பாடலுக்கு ஏற்றவாறு விசில் அடித்தபடி ஃபேக்டரியினுள் நுழைந்தான்.

எப்போதும் இந்த ஃபேக்டரி துடிப்பான ஒரு மனிதனைப் போலவே இருக்கும். வேலையாட்களின் பேச்சு,சிரிப்பு,புதிய படங்களின் திரை விமர்சனம், சூடான அரசியல் விவாதம், இயந்திரங்களின் ஓசை, தோலின் வாசனை,எண்ணெயின் மணம்… என சுறுசுறுப்பாக இயங்கும்…

என்னதான் அரட்டைக் கச்சேரி ஒரு புறம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாலும்…வேலையும் அதன் போக்கில் சுறுசுறுப்பாக நடைபெறும். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக மயான அமைதியாக இருந்தது.



Advertisement

ஃபேக்டரி வாசலில் நுழைந்ததும்,அதன் அமைதி ஏன்? என்ற கேள்வியைத் தர… யோசனையோடு எதிரே தெரிந்த பெரிய கொட்டகையினுள் சென்றான். அந்த கொட்டகையினுள் தான் பல இடங்களில் இருந்து வந்து இறங்கிய ஆடு,மாடு, எருமை என அனைத்து விலங்குகளின் மூலத் தோல்களும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

வழக்கமாக ஒரு இருபது தொழிலாளர்களாவது அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்வர்,ஆனால் இன்று அந்த கொட்டகையில் ஒரு வேலையாள் கூட இல்லை.தோல்கள் மட்டும் அமைதியாக மேசையின் மீது கிடந்தன.

பார்வையிலேயே மூலத் தோல்களின் எண்ணிக்கையை கணக்கிட்டவாறே அடுத்த பகுதியில் நுழைந்தான்.

Advertisement

அடுத்து தோல்களை நீரில் ஊறவைக்கும் பகுதி.பிரம்மாண்டமான நீர்த் தொட்டிகள் வரிசையாக இருந்தன .

Advertisement

அந்த தொட்டிகளுக்குள் முழுவதுமாக மூழ்கியிருந்த தோல்கள் மெதுவாக அசைந்துகொண்டிருந்தன.

மூலத் தோல்களில் ஒட்டியிருந்த மண், இரத்தக்கறை ஆகியவற்றை அகற்றுவதற்காக பல மணி நேரம் அவற்றை தண்ணீரில் ஊற வைப்பார்கள்.பெரிய சுழலும் இயந்திரங்கள் தோல்களின் மீது தண்ணீரை பரவலாக படரவிட்டு சரியான பதத்திற்கு கொண்டு வரும்.

ஒரு தொட்டியின் அருகில் சென்று அதில் மிதந்த கொண்டிருந்த தோலை தொட்டுப் பார்த்தான்.இன்னமும் இரண்டு மணி நேரம் ஊறினால் சரியாக இருக்கும் என மனக்கணக்கு போட்டான்.

Advertisement

அடுத்ததாக தேவையற்ற சதை, முடியை அகற்றும் பகுதியில் நுழைந்தான்.அங்கு பெரிய பெரிய உருளை இயந்திரங்கள் அவனை வரவேற்றனர்.

ஊறிய தோல்கள் அந்த பெரிய இயந்திரங்களுக்குள் செலுத்தப்படும். தோலில் ஒட்டியிருக்கும் கொழுப்பு, சதை, தேவையற்ற முடி அனைத்தையும் அந்த இயந்திரம் மெதுவாக பிரித்து விடும்.

வழக்கமாக”ற்ர்ர்ர்ர்ர்…”என்ற சத்தம் காதைக் கிழிக்கும்.ஆனால் இன்று… அந்த இயந்திரங்களும் உறங்கிக் கொண்டிருந்தன.

அதற்கு அடுத்த பிரிவு உப்பு கொண்டு பதப்படுத்தப்பட்ட தோல்களை உலர்த்தும் பகுதி. இதுதான் விவி நேசனல் லெதர் ஃபேக்டரியின் இதயம். இங்கு உப்புகளால் பதனிடப்பட்ட தோல்கள் கயிறுகளில் தொங்கவிடப்படும்.பின் அவை வெட்டும் பதத்திற்கு வந்ததும் அடுத்த பிரிவிற்கு அனுப்பபப் படும்.இன்று பெரிய பெரிய தோல்கள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.விலங்குகளின் காய்ந்த தோல்களும்,அதன் மீது தடவப்பட்ட உப்பின் வாசனையும் கலந்து,அந்த இடத்திற்கு ஒரு தனி மணத்தை தந்தது.

அதன் பின் சாயப் பிரிவு வந்தது. இங்கு தான் தோல்களுக்கு நிறம் ஏற்றப்படும். பெரிய பெரிய உருளும் டிரம்கள் இருந்தனர்.அந்த டிரம்களில் தோல்களுக்கு சாயமேற்ற நீலக்கலவை கலக்கி வைக்கப்பட்டிருந்தது.

அந்த டிரம்களின் அருகில் சென்று,அந்த நீல நிறக் கலவையை ஆராய்ந்தான். அது மெதுவாக அசைய, நீல நிற கடல் போல காட்சியளித்தது. சில டிரம்களில் இருந்து வழிந்த சாயத்துளிகள்… தரையில் நீலக்கறைகளாக மாறியிருந்தன.நீல நிறம் பிருந்தாவிற்கு ரொம்ப பிடித்த நிறம்.அதனாலோ என்னவோ தனது ஃபேக்டரியின் சிக்நேச்சர் நிறமாக அதையே மாற்றி விட்டான்.

அந்த நீல நிறத்தைப் பார்த்ததும் பிருந்தாவின் மலர்ந்த முகம் நினைவில் வர,அவனது இதழ்கள் மெதுவாக சிரித்து,வலது கண்ணத்தில் குழியை  உருவாக்கியது.

அடுத்து சாயமேற்றிய தோல்கள் உலர்த்தி முடிந்ததும்,பேக்,பர்ஸ்,பெல்ட், காலணி என மற்ற பொருட்கள் தயாரிக்க இயந்திரங்களின் உதவியால் தொழிலாளர்கள் அதனை மென்மையாக்குவர்.

சில சமயங்களில் உலர்ந்த தோல்கள் சற்று கடினமாக இருக்கும்.அவற்றை  பெரிய இயந்திரங்களில் செலுத்தி, மெதுவாக அழுத்தி…வளைத்து…
மீண்டும் மீண்டும் இழுத்து… மென்மையாக்குவார்கள்.

அப்போதுதான் அந்த தோல்…ஒரு நல்ல ஹேண்ட் பேக் ஆகவும்…ஷூ ஆகவும்… வாலட் ஆகவும் மாறும்.

தோல்கள் மென்மையாக மாறிய பின் வெட்டும் இடத்திற்கு வந்து விடும். இங்குதான் தோல்கள் தேவையான அளவுகளில் வெட்டப்படும்.அதற்கென பிரத்யேகமான மின்சார கத்திகள், அச்சுகள், அளவு கோல்கள்… என அந்த இடம் நிறைய இரும்புகளாலும் இயந்திரங்களாலும் நிரம்பி இருந்தது.

இன்று அவையெல்லாம் ஒரு ஒழுங்கு இல்லாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.மேலும் இயந்திரங்கள் அனைத்தும் கூட அசையாமல் நின்றன. ஒரு கத்தி கூட கீழே விழுந்து கிடந்தது.

“அவசரத்தில் யாரோ போட்டுவிட்டுச் சென்று விட்டார்கள் போல” என எண்ணிக் கொண்டே அதை எடுத்து டேபிளின் மீது வைத்து விட்டு அடுத்த பிரிவை நோக்கிச் சென்றான் பூபதி.

அடுத்து தையல் பிரிவு. இங்குதான் வெட்டப்பட்ட தோல்கள்… அழகான கைப்பைகளாகவும், பெல்ட்களாகவும், ஷூக்களாகவும்…தைக்கப்படும்.அந்தப் பிரிவில் சுமார் இருபது தையல் இயந்திரங்கள் இருக்கும்.

ஒவ்வொன்றின் முன்னும் ஒரு வேலையாள் அமர்ந்திருப்பார். இன்று அவை அனைத்தும் வெறுமையாக இருந்தன.சில இயந்திரங்களில் பாதி தைத்து முடிந்த தோல் துண்டுகள் இன்னமும் மாட்டிக் கொண்டிருந்தன. கடைசி நேரத்தில் போட்டதை போட்டபடி  விட்டு விட்டு தான் எல்லோரும் கிளம்பியிருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

இறுதியாக பேக்கிங் பிரிவு. இங்கு தயார் செய்யப்பட்ட பொருட்கள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, டிரக்குகளில் ஏற்றப்படும். இன்று அந்த பெட்டிகள் காலியாக கிடந்தன. சில பெட்டிகளில் “டெல்லி”, “மும்பை”, “சென்னை” என்று எழுதப்பட்டிருந்தது. இன்று அனுப்ப வேண்டிய பொருட்கள் தயாராக இருந்தும், யாரும் இல்லாததால் அப்படியே கிடந்தது.

பூபதி மெதுவாக ஒவ்வொரு பிரிவையும் மேற்பார்வை செய்து கொண்டே நடந்தான்.ஒவ்வொரு பகுதியிலும் அதன் தரத்தை தொட்டுப் பார்த்து உறுதி செய்தான். இந்த ஃபேக்டரியில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் அவர்களது வயதிற்கு ஏற்ப அவனுக்கு தந்தைகள், அண்ணன்கள்,தம்பிகள்,நண்பர்கள்.

ஒவ்வொரு வேலையாளின் பேச்சும் அவனுக்கு பரிச்சயம்.அவர்களும் தங்கள் வயதிற்கேற்ப இவனை பூபதி என்றும்,அண்ணா,தம்பி என்றும் அழைப்பர்.

அனைத்தையும் கர்ம சிரத்தையோடு பார்த்து வந்தவன் பேக்கிங் செக்ஷன் வந்ததும்.கோபம் தலைக்கேறியது. காரணம் இன்று துபாய் அனுப்பப்பட வேண்டிய சரக்குகள் அப்படியே தேங்கி நின்றது.

வேகமாக ஆபிஸினுள் நுழைய அங்கு மேனேஜர் மூர்த்தியும்,அக்கெளண்டட் ஜோதியும் இருக்க…”எல்லாரும் எங்க போனாங்க? ஏன் இன்னமும் வேலைக்கு வரலே?”என கேள்விகளை அடுக்கினான்.

மூர்த்தி முன்வந்து,”பூபதி, எல்லாரும் சுந்தரம் பொண்ணோட கல்யாணத்துக்கு போயிருக்காங்கப்பா” என்றான்.

அதன்பிறகே அந்த திருமணம் நினைவில் வர,சற்று அமைதியானன்.

“சார் இன்னைக்கு துபாய்க்கு சரக்கு அனுப்பி ஆகனும்”

“எல்லாரும் இன்னமும் ஒருமணி நேரத்துல வந்துருவாங்க…வந்ததும் அனுப்பி விட்டறேங்க, பூபதி,”என்றாள்  அவனது கோபத்தின் விரியத்தை உணர்ந்த ஜோதி.

அவங்க வந்து.. அனுப்பி… அதெல்லாம் சாத்தியமே இல்ல…நானே  டிரான்ஸ்போர்ட் ஆபீஸ் கொண்டு போய் போட்டுட்டு வரேன்…என மீண்டும் வேக வேகமாக பேக்கிங் செக்ஷன் நடந்தான்.
மூர்த்தியும்,ஜோதியும் இவன் பின்னாடியே ஓடி வந்தனர்.

பூபதி, நீ ஏன்ப்பா டிரான்ஸ்போர்ட் ஆபீஸ்
போறே?நானே கொண்டு போய் போட்டுட்டு வரேன்ப்பா…

“ஆமா நீங்க மாட்டு வண்டி கணக்காக ஓட்டிட்டு போய் சேர்க்கறதுக்குள்ள அந்த துபாய் காரன் காண்ட்ராக்ட்டே க்ளோஸ் பண்ணிருவான்.நானே பார்த்துக்கறேன்”என அவன் பேசி முடிப்பதை கேட்பதற்குள் மூவரும் பேக்கிங் செக்சன் வந்தடைந்தனர்.

சுறுசுறுப்பாக சரக்குகளை பெட்டிகளில் போட ஆரம்பித்தான் பூபதி.

அவன் வேலை செய்வதைப் பார்த்து, “பூபதி! நீ இந்த ஃபேக்டரி ஓட ஓணர்ப்பா இந்த வேலை எல்லா நாங்க செய்றோம்” என அவனைத் தடுத்தார் மூர்த்தி.

சார், இந்த ஃபேக்டரியே பொருத்தவரை தொழிலாளி,முதலாளி எல்லாம் இல்ல..
எல்லாரும் சரிசமம்தான். இன்னைக்கு ஒருநாள் வேலையாட்கள் இல்லைனதும் எவ்வளவு கோடி நஷ்டம் நமக்கு.

அந்த பாகுபாடே நமக்குள்ள வேண்டாம். அது எல்லாம் இருக்க கூடாதுன்னு தான் நம்ம ஃபேக்டரிலே வேலை செய்றே ஒவ்வொருத்தரையும் நானும் அப்பாவும்  அண்ணன்,தம்பியா பாக்றோம்.

அதுமட்டுமல்ல நான் இந்த ஃபேக்டரியோட தொழிலாளி அந்த உறுதிமொழி யோடதான் இந்த ஃபேக்டரி நிர்வாகத்தை கையில எடுத்தேன்.தினமும் சும்மா மியூசியம் மாதிரி இதை சுத்தி பாத்துட்டு, தொழிலாளர் கிட்ட வேலை ஏவிட்டு கண்ணாடி ரூம்ல ஏசியோட உட்கார முதலாளி நான் இல்ல. இந்த ஃபேக்டரியோட அடிமட்ட தொழிலாளிகள்லே நானும் ஒருத்தன்.

“எனக்கு அது நல்லா தெரியும்ப்பா. எல்லா வேலையாட்கள் மாதிரி நீயும் அஞ்சாந் தேதி வரிசையிலே நின்னுதானே சம்பளம் வாங்கறே…”என அவனை சமாதானப்படுத்தினார் மூர்த்தி.

வேகமாக மூவரும் பேக் செய்து லாரியில் ஏற்றினர்.பூபதியே லாரியில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.

சார் நீங்களும் ஜோதிக்காவும் கார்ல வாங்க…நான் சரக்குகளை ஏத்தி விட்டுட்டு லாரியை அங்கையே விட்டுட்டு கார்ல உங்ககூட வந்தறேன்.அப்பறோம் டிரைவரை போய் எடுத்துக்கச் சொல்லாம் என வண்டியை கிளப்பினான்.

மின்னல் வேகத்தில் அந்த லாரி டிரான்ஸ்போர்ட் ஆபீஸ் முன்பு வந்து நின்றது. அங்கிருந்த வேலையாட்கள் சரக்குகளை இறக்க இவனும் அவர்களுடன் இறக்க ஆரம்பித்தான்…

இரண்டு மூன்று முறை  ஃபோன் அடித்து அமைதியானது.யார் கூப்பிடுவார்? என முதலிலே அறிந்திருந்தால்…கவனத்தை முழுவதுமாக வேலையில் செலுத்தினான்.

மீண்டும் மீண்டும் அழைப்பு வர….எடுத்து “சொல்லு டார்லிங்!” என்றான்.

எங்கே இருக்கே?எப்போ வரே?என்றாள் கோபத்துடன் மிடுக்காக…

கொஞ்சம் வொர்க் டியர்…

“நான் முக்கியமா?வேலை முக்கியமா?” என வழக்கமான காதலிகளை போலவே இவளும் தன்னை நிலைநாட்டிக் கொண்டாள்.

“ஒரு முக்கியமான வேலை டியர் இன்னமும் பார்டி ஃபவ் மினிட்ஸ்ல உன்முன்னாடி நிப்பேன்…” என இவனும் கெஞ்சினான்.

இன்னமும் பார்டி ஃபவ் மினிட்ஸ்ஸா?நான் ஆல்ரெடி பார்க் வந்துட்டேன்..

சாரி டியர்…நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நான் வந்துட்டே இருக்கே…மிஸ் யூ!” என வழக்கமான காதல் வசனங்களை அள்ளித் தெளித்து விட்டு அவளை சமாதானப் படுத்தி, ஃபோனை வைத்தான்.

எக்ஸ்போர்ட் பில்லை கையில் வாங்கிய பின்னே..இயல்பு நிலைக்கு திரும்பினான்.காரில் மூர்த்தியும் ஜோதியும் வெயிட் செய்ய… வேகமாக…அதிவேகமாக…விரைந்து தானே காரை ஓட்டினான்…

பேசி சிரித்த படி சிறிது தூரம் கடந்திருப்பர்… சடாரென ப்ரேக் பிடித்தான் பூபதி…முன்னால் தலையை மோதி நிமிர்ந்து பார்த்தனர் ஜோதியும் மூர்த்தியும்…மயில்கள் கூட்டாக வலது புறமிருந்து..இடப்புறம் தாவினர்…

“இந்த பூபதி வண்டி வரும்போதுதான் இதுக ரோடு க்ராஸ் பண்ணனுமா?”என நக்கலாக கேட்ட படி ஸ்டேரிங்கை திருப்பினான்…

“மெதுவாவே போப்பா…”என்றார் மூர்த்தி.

“மெதுவாவா?…ஏற்கனவே பிருந்தா ருத்ரகாளியா மாறி சிங்கத்து மேல உட்கார்ந்து இருக்கா…இன்னமும் மெதுவா போனா அவ்வளவுதான்…”
என பழைய நினைவொன்றை அசை போட்டான்.

–தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!