Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 18

கலாட்டா – 18

“இதோ இங்க இருக்கேன் ப்பா” என்று குரல் கொடுத்துக் கொண்டே மாடிப்படியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த அஞ்சலியை கண்டு காமாட்சி ஆசுவாசப் பெருமூச்சு விட,



Advertisement

சந்தனபாண்டியோ தன் மகளை ஆசையாய் பார்த்துக்கொண்டே, ” வாடா கண்ணு.. உன்னை ஒரு நாளெல்லாம் காணாம மனசே ஒரு மாதிரி இருந்துச்சு.. இப்போ தான் நிம்மதியா இருக்கு.. ” என்று அஞ்சலியின் கன்னம் வழித்து செல்லம் கொஞ்சியவர், பின் அங்கு இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தன் மனையாளைக் கண்டு,

Advertisement

” ஏட்டி பிள்ளை மேல தான் இருக்குனு சொல்றதுக்கு தான் அம்புட்டு ரோசனையா உனக்கு.. எங்க எங்கன்னு கேட்டுகிட்டு இருக்கேன் வாயில வரக்காப்பியை ஊத்திக்கிட்ட மாதிரி வாயைத் தொறக்காம நின்னுகிட்டே இருக்கவ.. அம்புட்டு ஏத்தம் கூடிபோச்சா??” என்று அவரை அதட்ட,

Advertisement

அவர் பதில் கூறும் முன் இடையில் புகுந்த அஞ்சலி, ” நான் தான் ப்பா லேசா தலைவலின்னு தூங்குறேன் எழுப்பாதிங்கன்னு சொல்லிட்டு போனேன் . அதான் அம்மா உங்ககிட்ட சொன்னா எனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதருவீங்கனு சொல்ல தயங்கிருப்பாங்க.. அப்படித்தானே மா” என்று காமாட்சியை காப்பாற்ற,

Advertisement

அவரும் தன் கணவனுக்கு பயந்து ” ஆமாங்க ஆமாங்க” என்று வேகமாய் மண்டையை ஆட்டினார்.

சந்தன பாண்டியன் அவரை கண்டுகொள்ளாமல் தன் மகளின் பக்கம் திரும்பியவர், ” என்னாச்சு குட்டி?? வா ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்திடுவோம்.. ரொம்ப வலிக்குதா கண்ணு” என்று அக்கறையுடன் வினவ,

” இல்லைப்பா இப்போ நான் நல்லாத்தான் இருக்கேன்.. தூங்கி எழுந்ததுமே சரியா போச்சு” என்று அஞ்சலி பதிலளித்தாள்.

” நிஜமா வலி இல்லைல கண்ணு” என்று இன்னும் அவர் நம்ப மாட்டாமல் வினவ,

” சத்தியமா நான் சூப்பரா இருக்கேன் அப்பு” என்று அவரின் மீசையை பிடித்து ஆட்டிக்கொண்டு அஞ்சலி செல்லம் கொஞ்ச,

அவரும் புன்னகையுடன், ” என் செல்லக்குட்டி” என்று அவளைக் கொண்டாடினார்.

இருவரின் கொஞ்சல்களையும் காதில் புகை வராத குறையாய் பார்த்துக் கொண்டிருந்தார் காமாட்சி.

சற்று நேரத்தில் சந்தனபாண்டியன் ஓய்வெடுக்க தனதறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொள்ள, முகத்தை பாவமாக மாற்றிக்கொண்ட அஞ்சலி தன் அன்னையிடம் சென்றாள்.

கோவிலில் பார்த்த காளியம்மனை விட உக்கிரமாக இருந்த காமாட்சி தன்னருகே வந்த அஞ்சலியின் காதைப் பிடித்து வலிக்குமாறு திறுகிக் கொண்டே,

” ஏண்டி இங்க ஒருத்தி உன்னைக் காணோமே புள்ளைக்கு என்னாச்சுன்னு பதறிகிட்டு வாசலையே பார்த்துக்கிட்டு கிடக்கேன் நீ ஒய்யாரமா மேல இருந்து இறங்கி வந்து உங்க அப்பாருகிட்ட செல்லம் கொஞ்சிக்கிட்டு இருக்கவ.. அவர் இவ்வளவு நேரம் நீ எங்க எங்கன்னு என் உயிரை போட்டு வாங்கிட்டாரு.. ஏச்சு மட்டும் எனக்கு கொஞ்சல் பேச்செல்லாம் உனக்கா??  நல்லா இருக்குடி உங்க நியாயம்” என்று அவர் கணவனின் கோபத்தில் உண்டான ஆதங்கத்தில் பேச,

” அய்யோ வலிக்குது மா.. கையை எடு.. ” என்று அவரிடமிருந்து தன் காதை காப்பாற்றிக் கொண்ட அஞ்சலி பின் அவரைக் கட்டிக்கொண்டு, ” சாரி ம்மா.. அதான் நீ திட்டு வாங்குறதுக்கு முன்னாடி வந்துட்டேன்ல.. இன்னும் ஏன் பதட்டமா இருக்க” என்று கேட்க,

“இந்தக்காலத்தில பொம்பளை பிள்ளையை தனியா அனுப்பவே பயமா இருக்கு.. இதுல அந்த கலவரத்துல ஏதும் நீங்க மாட்டிக்கிடுவிங்களோன்னு எம்புட்டு பயந்தேன் தெரியுமா.. நல்லவேளை நான் கும்பிட்ட சாமி என்னை கைவிடலை… ஆமா ஏதோ புஸ்தகம் வாங்க போறேன்னு சொன்னியே வாங்கிட்டியா?? தேனியில எந்த சினேகிதி இருக்கா யார் வீட்டுல தங்கிருந்த?? மீனாக்கு போன் பண்ண தெரிஞ்ச உனக்கு என்கிட்ட சொல்லத் தோணலையா??  அது இருக்கட்டும் இப்போ யார் கூட வந்த??” என்று அவர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,

” போதும் மா.. முடியலை.. கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசு.. இப்படி வரிசையா கேள்வி கேட்டுட்டே இருக்க.. கேள்வி கேக்குறது ஈசி.ஆனா அதுக்கான கரெக்டான பதிலை சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..யோசிக்க கொஞ்சம் டைம் கொடு..” என்று அஞ்சலி மொழிய,

அவளை சந்தேகமாக பார்த்த காமாட்சி, “நடந்ததை சொல்ல எதுக்குடி யோசிக்கணும்?? உண்மையை சொல்லு நீ புக்கு வாங்க தான் தேனிக்கு போனியா??” என்று விசாரிக்க,

‘ அய்யோ கண்டுபிடிச்சுட்டாங்களே ‘ என்று திருட்டு முழி முழித்த அஞ்சலிக்கு தாயிடம் உண்மையை மறைக்க மனம் வரவில்லை என்றாலும் இப்போது அஸ்வத்தைப் பற்றி கூறினால் இன்னும் தான் அவர் பதறுவார் என்பதை உணர்ந்து வேறு வழி இல்லாமல் பின்பு சரியான சமயம் பார்த்து தன் மனதில் அஸ்வத் தான் இருக்கிறான் என்பதை தெளிவுபடுத்தி விடவேண்டும்  என்று முடிவெடுத்தாள்.

” கீதுவோட ஃப்ரெண்ட் மா.. கலவரம் ஆனதும் அவ தான் அவ ஃப்ரெண்ட் வீட்டுக்கு கூட்டிட்டு போனா.. இப்போ கூட அவங்க தான் கார்ல வந்து இறக்கி விட்டுட்டு போனாங்க.. சரி எனக்கு உன் கூட பேசி நிஜமாவே தலை வலிக்குது.. நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்” என்று அடுத்து காமாட்சி ஏதும் விசாரணையை தொடங்கும் முன் அங்கிருந்து பறந்திருந்தாள் அஞ்சலி.

செல்லும் அவளையே யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்த காமாட்சிக்கு ‘நிச்சயம் அவள் தன்னிடமிருந்து ஏதோ மறைக்கிறாள் ‘ என்று தோன்ற,

என்று இருந்தாலும் அது தானாக வெளி வந்து தான் ஆகும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து அங்கிருந்து நகர்ந்து தன் வேலையை கவனிக்கச் சென்றார் அவர்.

தங்கள் காதலிகளை இறக்கி விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த நம் நாயகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருவதைப் போல் வாசலில் ஒன்றாய் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ராமனும் பரமசிவனும் காட்சி தந்தனர்.

இந்த காட்சியைக் கண்டு தங்கள் கைகளையே கிள்ளிப் பார்த்துக் கொண்ட நம் நாயகர்கள் நடப்பது கனவா நனவா என்று புரியாமல் பார்த்திருக்க,

நடப்பது நிஜம் தான் என்பது போல அவர்களை நோக்கி வந்த ராமன், ” எங்கடா போனிங்க ரெண்டு பேரும்??” என்று விசாரிக்க,

அவர்கள் பதில் கூறும் முன் அங்கு வந்த பரமசிவன், “நம்ம சின்ன வயசுல வீட்டுல பொய் சொல்லிட்டு எங்கேயாச்சும் போய் சுத்த்திட்டு வருவோம்ல அதே மாதிரி எங்குட்டாச்சும் போய்ட்டு வந்துருப்பாங்க அண்ணே.. அப்படித்தானே டா” என்று சிரித்துக் கொண்டே வினவியவரைக் கண்டு இருவருக்கும் மயக்கம் வராத குறை தான்.

” நீங்க .. எப்போ .. எப்படி???” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்று அறியும் ஆவலில் அஸ்வத் கேட்க,

அப்போது அங்கு பிரசன்னமான மதுரம், ” அந்த கேடுகெட்ட கதையை கேட்காதடா அஷு.. அப்பறம் நொந்து போய்டுவ” என்று அவனை எச்சரித்தார்.

தங்கள் அன்னையை முறைத்த பரமசிவன், ” அவங்க கெடக்குறாங்க அஷு.. நான் சொல்றேன் என்ன நடந்ததுன்னு” என்று காலையில் நடந்ததை சொல்லத் துவங்கினார்.

அதைக்கேட்டு கடுப்பான அஜய், ” கேவலம் ஒரு அடில ஒன்னு சேர்ந்துட்டிங்களா?? இதெல்லாம் ஒரு கதைன்னு இதை வேற சொல்லிட்டு இருக்கிங்க.. நீங்க இவளோ டம்மி பீஸ்னு தெரிஞ்சிருந்தா நானே நம்ம ஜீவாவை வச்சு அடிக்க விட்டு ஒன்னு சேர்த்திருப்பேனே” என்று அவன் மதுரம் மனதில் நினைத்ததை வெளிப்படையாய் சொல்லிவிட,

அவனிற்கு ஹைஃபை கொடுத்த மதுரம், ” நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டடா என் செல்லம்” என்று அவனை உச்சி முகர்ந்தார்.

இருவரையும் கண்டு கோபமாய் புசு புசுவென மூச்சு விட்ட பரமசிவன், “வர வர வாய் ரொம்ப நீளுது அஜய் உனக்கு.. பார்த்து இருந்துக்கோ.. அம்மா உங்களுக்கும் தான்” என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து தன் அண்ணனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.

“வாயெல்லாம் வளராது மை டாடி.. வேணும்னா டேப் கொண்டு வந்து அளந்து பார்த்துக்கோங்க” என்று செல்லும் அவரைப் பார்த்து அஜய் குரல் கொடுக்க,

” அட விடுடா பாவம் அவரு” என்று அஸ்வத் தான் அவனை அடக்கினான்.

“டேய் பேராண்டிகளா எங்கடா காலையில இருந்து போய் தொலைஞ்சிங்க?? உங்க அப்பனுங்க அலப்பறை தாங்க முடியலை டா என்னால.. அதான் நாங்க இப்போ ஒன்னா தான இருக்கோம் வாங்க சென்னைக்கு போலாம்னு என்னை படுத்தி எடுத்துட்டாங்க” என்று மதுரம் அலுத்துக் கொண்டார்.

” அச்சோ இப்போவே சென்னை போய்ட்டா எங்க லவ் என்னாகுறது??” என்று அஸ்வத் பதற,

” அதானே என் அவதார் குட்டி வேற இப்போ தான் என்கிட்ட கொஞ்சம் பேசுது.. அதுக்குள்ள நான்லாம் அங்க வர மாட்டேன்.. நீங்க வேணும்னா போய்ட்டு வாங்க.. என் அவதார் குட்டியை கல்யாணம் பண்ணி கன்னி கழியாம இங்க இருந்து நான் வரவே மாட்டேன்” என்று அஜய் கழண்டு கொண்டான்.

” டேய் லூசு பாட்டிக்கிட்ட என்ன பேசுற??” என்று அஸ்வத் கண்டிக்க,

” அட விடுடா.. ரொம்ப நல்லவனா இருக்காத டா ப்ரோ. அப்பறம் உன் தலையில மிளகாய் அரைச்சிட்டு போய்டுவாங்க..” என்று அவனிற்கு இலவச ஆலோசனை வேறு வழங்கினான் அஜய்.

இருவரையும் கண்டு புன்னகைத்த மதுரம், “ரெண்டு பேரும் அவங்க கேரக்டரை விட்டு மாறாதிங்க.. அஷு இப்படி அம்மாஞ்சியா இருக்கது தான் அழகு.. அதே போல அஜூ, நீ இப்படி அடாவடியாக இருப்பது தான் அழகு .. என்னைக்கும் நீங்க இப்படியே ஒற்றுமையா சந்தோஷமா இருக்கணும்” என்று இருவருக்கும் திருஷ்டி கழித்தார் அவர்.

” பாட்டி இந்த சென்டி எல்லாம் வேண்டாம்.. நீ ஏதாவது சொல்லி இங்கேயே தங்க பிளான் போட்டிருப்பியே என்னாச்சு” என்று அஸ்வத் ஆர்வமாய் வினவ,

” ஹாஹா கண்டுபிடிச்சிட்டியா?? அவன் போணும்னு சொன்னா உடனே கிளம்பிருவானா?? அவங்களை இங்க வரவச்ச நான்  அவங்க எப்போ போகணும்னு முடிவு பண்ணாமையா வர வச்சிருப்பேன்.. அவங்க கிடக்குறாங்க நான் கொஞ்ச நாள் இங்க தான் இருக்கணும்ன்னு சொல்லிட்டேன்.. நீங்க அதை விடுங்க.. போன காரியம் என்னாச்சு??” என்று மதுரம் கேட்க,

” அதுக்கென்ன சிறப்பா ஃபைட்டிங் சேஸிங்னு திவ்யமா போச்சு” என்று அஜய் நக்கலாக பதிலளித்தான்.

” என்னது சண்டையா?? என்ன அஜு சொல்ற.. அந்த கலவரத்தில ஏதும் மாட்டிக்கிட்டிங்களா??” என்று மதுரம் சற்று பதட்டத்துடன் வினவ,

” அதெல்லாம் இல்லை பாட்டி..இது வேற” என்று கூறிய அஸ்வத் தங்கள் இணைகளின் வீர தீர சாகசங்களைப் பற்றி விளக்கிவிட்டு, காட்டிற்குள் மாட்டிக்கொண்டு எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்று அனைத்தையும் அவரிடம் விளக்கிக் கூறினான்.

அனைத்தையும் கேட்டு பெரிதாய் புன்னகைத்த பாட்டி, ” பரவாயில்லை என் பேத்திங்க ரொம்ப தைரியசாலியா தான் இருக்காங்க ” என்று மெச்சிக் கொண்டவர் வாசுதேவர் அழைக்கவும் அங்கிருந்து உள்ளே சென்று விட்டார்.

அவரைத் தொடர்ந்து அஸ்வத்தும் உள்ளே சென்று விட, அஜய் மட்டும் அங்கிருந்து சற்று தள்ளிச் சென்று ஜீவாவிற்கு அழைத்தான்.

எதிர்முனையில் அழைப்பை ஏற்றதும், “என்ன மாப்ள நான் சொன்ன வேலை முடிஞ்சதா??” என்று தீவிரமான குரலில் கேட்க,

ஜீவாவோ அங்கு ஒருவனின் முதுகில் லத்தியால் விளாசிக் கொண்டே, “ரொம்ப நேர்மையா இருக்கானுங்க மாப்ள.. நானும் அடி பின்னி எடுத்துட்டேன் ஒரு பயலும் வாயைத் திறக்க மாட்டேங்குறாங்க” என்று அவன் கூறிக் கொண்டிருக்கையிலே ஒருவன் வலி தாங்க முடியாமல் கதறுவது இங்கிருந்த அஜய்க்கு கேட்டது.

கீதாவை ஒருவன் கொல்ல வந்ததை அடுத்து, ‘ யார் அவன்?? அவனால் தன்னவளுக்கு இனி அடுத்து எந்த வித ஆபத்தும் வரக்கூடாது ‘ என்றெண்ணிய அஜய் கோவிலில் இருந்து கிளம்பும் போதே ஜீவாவிற்கு அனைத்தையும் தகவல் அனுப்பி விட்டான்.

அஜய் நினைத்ததைப் போல் அடிவாங்கி கிடந்த அந்த தடியர்கள் மீண்டும் எழுந்து அவர்களை பின் தொடர அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கீதா சொன்ன வழியை விட்டு வேண்டுமென்றே காட்டுக்குள் வண்டியை திருப்பியிருந்தான் அஜய்.

ஜீவாவும் அவன் அனுப்பிய இடத்தை டிராக் செய்து தேனியில் தனக்கு தெரிந்த போலீசார் ஒருவரின் உதவியுடன் ஒரு குழுவாக இவர்களைப் பின் தொடர்ந்து வந்த அந்த தடியர்களை கையும் களவுமாகப் பிடித்தனர்.

அதன் பின் அஜய் காட்டிற்குள் இருந்து அவனிற்கு காரை இங்கு கொண்டு வருமாறு குறுஞ்செய்தி அனுப்பி ஜீவாவை அங்கு வரசெய்து அவனுடைய காரில் அங்கிருந்து கிளம்பி வந்து சேர்ந்தார்கள்.

அதன் பின் ஜீவா அங்கு பிடித்து வைத்திருந்த தடியர்களை பார்த்து, ” யார் அவர்களை அனுப்பியது?” என்று அடித்து தோலை உரித்து விட்டாலும் அவர்கள் வாயைத் திறக்காமல் இருக்க, வேறு வழியில் இதை கண்டுபிடிக்க முயற்சி செய்து அவர்களின் அலைபேசி எண்ணை வைத்து யார் யார் இவர்களுடன் இந்த இரண்டு நாளாக தொடர்பில் இருந்தனர் என்று ஆராய்ந்து பார்க்க சொல்லியிருந்தான்.

” அவனுங்க நம்பர் வச்சு செக் பண்ணி பார்த்ததுல அந்த MP கூட இருக்க அல்லக்கை ஒருத்தன் மட்டும் ஒரு டைம் கூப்பிட்டு இருக்கான் மாப்ள.. மத்தபடி வேறெந்த காலும் வரலை.. எனக்கென்னமோ SP சார் மேல இருக்க கோபத்துல  இது அந்தாள் பண்ணின வேலையா தான் இருக்கும்னு தோணுது” என்று ஜீவா தன் மனதில் தோன்றியதை கூற,

அதை குறித்துக் கொண்ட அஜய், ” இருக்கலாம்.. ஆனா கன்ஃபார்மா சொல்ல முடியாது.. எதுக்கும் அந்த காட்டெருமைங்களை கொஞ்ச நாள் கஸ்டடிலயே வைக்க சொல்லு.. எனக்கென்னமோ நெருடலாவே இருக்கு .. சரி பார்ப்போம்.. ஆமா என் காருக்கு ஸ்டெப்னி மாத்த சொன்னேன்ல பண்ணிட்டியா??” என்று அவன் கேட்க,

அதுவரையில் ஒரு போலீசாக இருந்த ஜீவா இப்போது அவனின் நண்பன் அவதாரத்திற்கு மாறி, ” டேய் நாதாரி.. நீயெல்லாம் மனுஷனா டா.. அந்த அத்துவான காட்டுக்குள்ள ஒரு பச்சை பிள்ளையை தனியா விட்டுட்டு வந்ததும் இல்லாம காரை ஸ்டெப்னி மாத்தலையான்னா கேட்குற?? நேர்ல வந்தேன்னு வை.. நீ செத்த டா” என்று வசைபாடினான்.

அதை சிரிப்புடன் கேட்டுக்கொண்ட அஜய், ” நீ என்ன தனியாவா இருந்த ?? நீ போலீஸ் படையோட தான வந்த.. அந்த பெரிய ஆலமரத்துக்கு பின்னாடி ஜீப் நிக்கிறதை பார்த்துட்டு தான் விட்டுட்டு வந்தேன்… சும்மா என் காதுல பூ சுத்தாத.. கார் எங்க?? ரெடி பண்ணியா இல்லையா ?? அதை முதல்ல சொல்லு வெட்டிக்கதை பேசாம” என்று அதிலேயே குறியாக இருக்க,

” பண்ணியாச்சு பண்ணியாச்சு” என்று சுரத்தே இல்லாமல் பதிலளித்தான் ஜீவா.

அதன்பின் அவனுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு அழைப்பை துண்டித்த அஜயின் மனதில் இருந்ததெல்லாம் அவனின் அவதார் குட்டி மட்டுமே.

” உன்னால மத்தவங்களுக்கு ஏதும் ஆக விடாம காப்பாத்தனும் அவதார் குட்டி.. என்னா அடி அடிக்குற!!!” என்று அவளைக் கொல்ல வந்தவர்களை அவளிடமிருந்து காக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்று விட்டான் அஜய்.

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!