நீண்ட வருடங்களுக்குப் பிறகு தங்கையோடு வாழும் இளவரசனுக்கு சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்தது பத்தவில்லை. திருமணத்திற்கு முன்னே தங்கையை பொள்ளாச்சிக்கு அனுப்ப மனமில்லைதான்.
ஆனால் இத்தனை நாள் அன்னையை காண விழையாதவர், நான் வீட்டில் இல்லாத நேரம் காண விரும்பினால் அம்மாவிற்கு பெரும் வலியை கொடுக்கும், பொள்ளாச்சியில் தங்கினால் பொற்செல்வன் பார்த்துக்கொள்வான் என்பதால் பொள்ளாச்சியில் தங்க அனுமதித்தான் இளவரசன்.
நவீனாவிற்காக ஏற்பாடு செய்த வீடு முன்பு தங்கியிருந்த வீட்டை விட வசதியாக இருக்கும் என்று சாம்பவியை அங்கே தங்க சொன்னான் பொற்செல்வன். முன்பு தங்கியிருந்த வீட்டிலேயே தங்கிக்கொள்வதாக சொல்லிவிட்டார் சாம்பவி.
ராகுலிடமிருந்து பொற்செல்வனுக்கு அழைப்பு வர, ஏற்றவன் “வாட்?” என்றான் அதிர்வோடு.
“ஆமாம் சார், வெளில வெய்ட் பண்ணிட்டிருக்கார், ஆன்ட்டி எங்க தங்கியிருக்காங்கனு கேட்குறார், அவங்க இங்க இல்லை, மகனோட இருக்காங்கனு சொன்னேன். என் மகனோடதான் இருந்தாங்க, இன்னைக்கு காலைல வந்துருக்காங்கன்னு நேர்ல பார்த்த மாதிரி சொல்றார் சார்”
Advertisement
“சரி நீ அட்ரஸ் சொல்லிடு, நான் பார்த்துக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்தவன், சாம்பவிக்கு அழைத்தான்.
Advertisement
“சேஃபா வந்துட்டோம் தம்பி” என தகவல் சொல்ல, பொற்செல்வன் தாமோதரனின் வரவை சொன்னான்.
“செல்வி ரோஜா தோட்டம் பார்க்கனும்னு சொன்னா, நான் அவளை அங்க அனுப்பி விட்டுடறேன்”
“செல்வியும் ஃபேஸ் பண்ணட்டும் ஆன்ட்டி”
Advertisement
“இல்ல, அவ டென்ஷனாகி என்னையும் பேச விடமாட்டா. பிரச்சனை வளரும்”
“ஆனா உங்க ஹஸ்பண்ட் வரது செல்விக்கு தெரியாம இருக்க வேண்டாம், பின்னாடி தெரிஞ்சா இன்னும் டென்ஷன் ஆகிடுவா”
“ஆமாம், மறைச்சாலும்தான் டென்ஷன் ஆகுவா. என்ன பண்றதுனு தெரியலையே” என புலம்பினார் சாம்பவி.
“யார்ம்மா? என்ன பிரச்சனை?” என்றாள் செல்வி.
தயங்கினாலும், “உன் அப்பா வராராம், செல்வா தம்பி சொல்றார்” என்றார்.
“எதுக்கு வரார்? அவரை உள்ள விடக்கூடாது” என்று செல்வி கோபமாக சொல்ல, “செல்விகிட்ட கொடுங்க ஆன்ட்டி” என்றான்.
சாம்பவி மொபைலை நீட்ட, “உன் அப்பாவை இன்னைக்கு உள்ள விடலைனா, நாளைக்கு வருவார். பிரச்சனை தீர என்ன செய்யனு யோசி. தப்பு செய்த அவரே தைரியமா உங்களை மீட் பண்ண நினைக்கும்போது நீ ஏன் பயப்படுற?”
“எனக்கு பயமில்ல, அவரை பார்க்க பிடிக்கல”
“பிடிக்கலனாலும் நீ அவர் பொண்ணுதான். சில விசயங்களை ஃபேஸ் பண்ணித்தான் ஆகனும், அவரைப் பத்தி உன் மனசுல என்ன கோபமிருக்கோ அதை வெளிப்படுத்து. இல்லைனா சூழ்நிலையை அவருக்கு சாதகமாக்கி உன் அம்மாவை குற்றவாளி ஆக்கிடுவார்”
“ஆமாம் அப்படி செய்தாலும் செய்வார். நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.
“குட்… உன்னை மட்டுமில்ல, ஆன்ட்டியையும் சேர்த்து பார்த்துக்கோ. எதாவதுனா கால் பண்ணு” என்று இணைப்பை துண்டித்தான்.
“செல்வி, நீ ரோஜா தோட்டம் பார்க்கனும்னு சொன்னயில்ல? போய் பார்த்துட்டு வா” என்றார் சாம்பவி.
“இன்னைக்கு என்னதான் நடக்கும்னு பார்த்திடுவோம்” என்று தந்தையை சந்திக்க மனதளவில் தன்னை தயார் படுத்தினாள்.
மகனிடம் பேசியிருக்கிறார், செல்வனை சந்தித்திருத்திருக்கிறார் என்றதுமே என்றைக்கானாலும் தன்னைக் காண வருவார் என எதிர்பார்த்துதான் இருந்தார் சாம்பவி.
“சில விசயங்களை உன் முன்னாடி என்னால பேச முடியாது செல்வி, புரிஞ்சிக்கோ” என்றார்.
“நான் எங்கேயும் போக மாட்டேன், நீங்க தனியா இருக்குறது சரி வராது. உங்களை திட்டுவார், நீங்களும் வாங்கிட்டிருப்பிங்க”
“அது அந்த காலம், இப்போ எனக்கும் வாய் இருக்கு. நீ கவலைப்படாம தோட்டத்துக்கு போய் வா”
“முடியாதும்மா, இன்னைக்கு நான் எங்கேயும் போகமாட்டேன், எனக்கு காபி போடு” என்றாள்.
“சரி அவர் வந்தா ரூம்க்குள்ளயாவது போய்டு” என்றார் கெஞ்சலாக.
வாசலில் கார் சத்தம் கேட்டதும் செல்வி அறைக்குள் சென்றாள்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் சாம்பவி வீட்டின் முன்னே போய் நின்றது.
தாமோதரன் உள்ளே வர, “ஓ… கதவு திறந்திருந்ததா?” என்றார் எள்ளலாக.
“நான் நாயாடீ? எங்கிருந்து வந்தது உனக்கு இவ்வளோ தைரியம்?”
“தைரியம் என் ரத்தத்துலயே ஊறியிருக்கு. அதனாலதான் மிருகத்தோட வாழ்ந்து இரண்டு பிள்ளையை பெத்துருக்கேன்”
“ஏய்” என்று கையை ஓங்க, சாம்பவி திடமாய் நின்று முறைத்ததிலும், அறையினுள் மகள் இருப்பாள் என்ற நினைவிலும் தாமோதரன் கையை கீழிறக்கினார்.
“என்ன விசயமா வந்துருக்கிங்க?”
“என் பொண்ணை பார்க்க வந்தேன், செல்விம்மா” என அங்கிருந்த அறைக் கதவை திறந்தார்.
செல்வி நிமிராமல் அமர்ந்திருந்தாள். கையை கிழித்துக்கொள்வேன், தன்னை காண வந்தால் செத்துப்போவேன் என்று முன்பு சொன்னதை போல் இல்லாமல் செல்வி அமைதியாக இருப்பதே தாமோதரனிற்கு தைரியத்தை கொடுக்க “செல்விம்மா” என்று மகளை கண்களால் நிறைத்தபடி உள்ளே வந்து மகளருகே அமரப் போக,
“இது என் அம்மா உழைப்புல வாங்கின கட்டில், இதுல உக்கார உங்களுக்கு உரிமை இல்லை” என்றதும் அமர மடங்கிய கால்கள் நேராக நின்றது.
தந்தை தனதறையில் இருப்பதும் பிடிக்காமல் போகவே, “இந்த வீட்டுக்கு என் அம்மாதான் வாடகை கட்டுறாங்க” என்றாள்.
மகளின் கோபத்தில் நிதானித்து, “நான் சண்டை போட வரலைடா. இவ்வளோ நாள் உங்களை தனியா விட்டுருக்கக்கூடாதுனு வருத்தத்தோடதான் வந்தேன். உள்ளே வந்ததும் நான் நாய்ன்ற மாதிரி உன் அம்மா ஜாடை பேசினதுல கோபம் வந்துடுச்சு” என்றார்.
“வாழ்க்கையை இழந்தவங்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்”
“என்னால உன் அம்மா வாழ்க்கை போகல, உன் அம்மாக்கு பெரியவங்களை அனுசரிச்சு வாழ்ற வாழ்க்கை பிடிக்கல, சுதந்திரமா வாழலாம்னு வெளில வந்துட்டா, அவ ஆசைக்கு உன்னை பலியாக்கிட்டா. நீ இந்த வீட்டுல இருக்க வேண்டிய பொண்ணாடா? முதல்ல இது வீடா? நம்ம வீட்டு பாத்ரூம் சைஸ்ல இருக்கு”
“சின்ன வீடா இருந்தாலும் இங்க என் அம்மா தன்மானத்தோட நிம்மதியா வாழ்றாங்க”
“இதுக்கு பேரு தன்மானம் இல்லைடா, திமிரு”
“எனக்கு அது திமிரா தெரியலை, என் அம்மாவை குறை சொல்லத்தான் வந்திங்களா?”
உங்களுக்கு காய்ச்சல் வந்திருந்தாலோ, இல்ல உங்கப்பாம்மாக்கு காய்ச்சல் வந்திருந்தாலோ என்ன செய்திருப்பிங்க? அதே வீட்டுலதான இருந்திருப்பிங்க? அப்போ மத்தவங்களுக்கு காய்ச்சல் ஒட்டாதா?
என் அம்மா நல்லா இருக்கும்போது உங்களுக்கு சேவகம் செய்ய பக்கத்துலயே இருக்கனும், அவங்களுக்கு உடம்பு முடியலைனா அவங்கம்மா வீட்டுக்கு போய்டனும்.
“எத்தனை வேலைக்காரங்க இருந்தாலும் காலைல காபி கொடுக்குறது, என்ன டிபன் வேணும்னு கேட்குறது, பரிமாறுறதுனு எல்லாமும் என் அம்மாதான் செய்யனும்.
அதுக்கப்புறமும் பத்து நிமிஷம் ரூம்ல படுத்துட கூடாது. வேலைக்காரங்க வேலை ஒழுங்கா செய்யிறாங்களானு பார்க்கனும், சாப்பிடும்போது பக்கத்துலயே இருக்கனும். எல்லாரும் ஒரே நேரத்துல சாப்பிடவும் மாட்டாங்க.
பசிச்சாலும் பாட்டி தாத்தா சாப்பிட்ட பின்னாடிதான் என் அம்மா சாப்பிடனும். முக்கியமா அவங்க பேசும்போது அம்மா சமமா உக்கார்ந்து பேசக்கூடாது. நின்னுகிட்டுதான் பதில் சொல்லனும்.
அதுவும் எப்படி திட்டுவிங்க? உன் கனவுல கூட நினைச்சுப் பார்க்காத வாழ்க்கையை உனக்கு கொடுத்திருக்கேன், என் அப்பாம்மாவோட சும்மா பேசிட்டிருக்கிறதுக்கு வலிக்குதானு திட்டுவிங்க.
கூப்பிடறது கூட ஏய் சாம்பவிதான்… அம்மாக்கு மரியாதை கொடுத்து எனக்கு விபரம் தெரிஞ்சு ஒரு நாள்கூட நான் பார்த்ததில்ல. வீட்டுல வேலை செய்யிறவங்களுக்கு என் அம்மா ஒரு ஹெட் வேலைக்காரியா இருந்திருக்காங்க. ஆனா உங்களுக்கு இது எதுவுமே தப்பா படல.
மருமகள்னா இதெல்லாம் பார்த்துத்தான் ஆகனும்னு ஈஸியா சொல்றிங்க, நானும் கல்யாணம் பண்ணி போகத்தான்போறேன். அங்க எனக்கும் இதே நிலைமை வந்தா அது சரினு நினைப்பிங்களா?” என்றாள்.
“நீ என் இளவரசிம்மா, உனக்கு பலகோடி சொத்து தரப்போறேன், உன்னை தப்பா நடத்தா எவனுக்கு துணிச்சல் இருக்கப்போகுது?” என பொங்கினார் தந்தை.
“அப்போ… சொத்திருந்தாத்தான் மரியாதை கிடைக்கும்?”
“அப்படியில்லடா” என சமாளிக்க, “நான் உங்ககிட்ட சொத்து வாங்கிக்கப்போறதில்ல. ஆனாலும் என்னை கட்டிக்கப்போறவர் நீங்க என் அம்மாவை நடத்தின மாதிரி என்னை நடத்தமாட்டார். அவரோட அப்பாம்மாவும் உங்க அப்பாம்மா மாதிரி கிடையாது” பெருமையாக.
பெற்றோரை இழிவாக சொன்னதும் தாமோதரன் முகம் கோபத்தை காட்ட, “நான் சொல்றது அத்தனையும் உண்மைதான்னாலும் உங்கப்பாம்மாவை சொன்னதும் கோபம் வருது. ஆனா என் அம்மாவை பொண்டாட்டியா இல்லைனாலும் மனுஷியா கூட மதிக்கமாட்டிங்க” என்றாள் உள்ளடக்கிய கோபத்தோடு.
அன்னைக்காக மகள் இத்தனை பேசுவாள் என்றெல்லாம் நினைக்கவில்லை. சாம்பவியை குறை சொன்னால் மகளை நெருங்க முடியாது என்று “சாரிடா, எல்லாம் என்னாலதான்” என்றார்.
எவ்வளோ ஈஸியா சாரி சொல்றார் என்ற கோபத்தில் செல்வி இருக்க, மகளின் அமைதியை சமாதானமாக எடுத்துக்கொண்டு, “இந்த இடம் பொற்செல்வனோட இடம். அவங்க இடத்துல இருந்து கல்யாணம் செய்தா நல்லா இருக்காது. நம்ம வீட்டுக்கு போலாம். அங்கயிருந்து எல்லாம் முறைப்படி பண்ணலாம்” என்றார்.
“சாரி சொன்னிங்க, நான் மன்னிச்சேனா இல்லையானு கூட தெரிஞ்சுக்காம நீங்க பாட்டுக்கு ப்ளான் பண்றிங்க?” என்று செல்வி கேட்ட தோரணையில் தவித்து போனார் தாமோதரன்.