Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 21.2

“என் பொண்ணு கல்யாணத்துக்கு நான் ப்ளான் பண்ணக்கூடாதாடா?”

“பண்ணக்கூடாது. எனக்கு உங்ககிட்ட பேசவோ, ஆர்கியூ பண்ணவோ விருப்பமேயில்ல. ஆனாலும் இவ்வளோ பேசுறேன்னா அதுக்கு ஒரே காரணம்… நீங்க என் கல்யாணத்துக்கு வரக்கூடாதுனு சொல்லத்தான். கல்யாணத்துக்கு மட்டுமில்ல, இனி எப்போவும் என்னை பார்க்கவோ, உறவு கொண்டாடவோ உரிமை எடுத்துக்கவோனு எதுவும் கூடாது”

“வேணாம்டா செல்விம்மா. எனக்கு இவ்வளோ பெரிய தண்டனை வேண்டாம்” என்றார் மன்றாடலாக.

“இது தண்டனை இல்ல, மன்னிப்பு. நீங்க மன்னிக்க முடியாத தப்பை செய்திருந்தாலும் பதிமூணு வருசம் உங்க மகளா இருந்துருக்கேன்ல? அதுக்காக மன்னிக்கிறேன்”



Advertisement

“தகப்பன்ற ஸ்தானத்தை இழக்குறது மன்னிப்பாடா?”

“அதை நீங்க இப்போ இழக்கல, பத்து வருசம் முன்னாடியே இழந்துட்டிங்க”

“உன்னை பார்க்காம என்னால இருக்க முடியாதுனு தெரிஞ்சும் நான் வேண்டாம், தாத்தா பாட்டி வேண்டாம்னு அம்மா மட்டும் போதும்னு நீதான வந்துட்ட?”

Advertisement

“யாரும் வேண்டாம்னெல்லாம் நான் வரல. பத்து வருசத்துக்கும் முன்னாடி எனக்கு எல்லாரும்தான் வேணும். ஆனா நீங்க, தாத்தா பாட்டி மூணுபேரும் அம்மாவை திட்டிட்டே இருப்பிங்கனு நல்லா தெரியும். அம்மா பாவம்னுதான் அம்மா கூட வந்தேன்.

Advertisement

ஆனா என்னை பார்க்கக் கூட வரமாட்டிங்கனு நினைக்கல. எனக்கு ஸ்கூல் ஸ்பாயிலாகிடும்னு யோசிக்கல. அம்மாயி வீட்டுல எனக்கு வசதி பத்தாதுனு யோசிக்கல”

“நான் உன்னை கூப்பிட்டேனேடா”

“கூப்பிட்டிங்க, என்னை மட்டும் கூப்பிட்டிங்க. அம்மாவைப் பத்தி விசாரிக்க கூட இல்ல. கார் அனுப்பி வைக்கிறேன் வந்துடுனு சொன்னிங்க. நீங்க அம்மாவை பார்க்க வரலையேன்ற கோபத்துல இருந்ததால வரமாட்டேனு சொன்னேன்.

Advertisement

அதுக்காக பர்த்டேக்கு கூட பார்க்க வரமாட்டிங்கனு நினைக்கல. போன்ல கூட விஷ் பண்ணல, பதிமூணு வயசுல அது என்னை ரொம்ப பாதிச்சது. இத்தனை வருசம் அப்படியே விட்டுட்டிங்கதானே? இப்போ மட்டும் எதுக்கு வந்திங்க?”

“தப்புதான், பெரிய தப்பு பண்ணிட்டேன், என்னை மன்னிக்க வேண்டாம். நான்தான் தப்பு பண்ணினேன், தாத்தா பாட்டி பாவம்ல? உன்னை பார்க்கவும் உன் கல்யாணத்தை பார்க்கவும் ரொம்ப ஆசையா இருக்காங்க, அவங்களை வந்து ஒருமுறை பாரு செல்விம்மா”

“தாத்தா பாட்டி என்னை பார்க்க ஆசைப்படுறாங்களா? ஹ ஹா… நல்ல ஜோக்”

“உண்மையைதான்டா சொல்றேன்”

“நான் வராம அண்ணன் மட்டும் உங்ககிட்ட வந்த பின்னாடி பாட்டி சொன்ன வார்த்தை… பொட்டக் கழுதைக்கு இவ்வளோ திமிரா? கொழுப்பு குறைஞ்சா தன்னால வந்திடுவா. என்னை கழுதைனு சொன்னது உங்களுக்கு கோபம் வரல. என் அம்மாவை போல என்னையும் உங்கப்பாம்மாகிட்ட ஈஸியா விட்டு கொடுத்திட்டிங்க. அவங்களை நான் வந்து பார்க்கனுமா?”

“அப்போ எதோ தெரியாம பேசிட்டாங்கடா, இப்போ ரொம்ப மாறிட்டாங்க. உன் அம்மாவை நினைச்சும் வருந்துவாங்க” என்றார் உண்மையாக.

“அவங்க வருந்தினாலும் கூட அதுலயும் எதாவது சுயநலம் இருக்கும், இதுக்கு மேல உங்ககிட்ட பேச ஏதும் இல்ல. கிளம்புங்க” என்று தந்தையை விடுத்து அன்னையிடம் வந்தவள், “ம்மா காபி எப்போ கேட்டேன்?” என்றாள்.

தந்தை என்றாலே அத்தனை கோபம் கொள்பவள் இன்று இத்தனை பொறுமையாக பேசியதோடு எங்கும் தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசியதில் சாம்பவியின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருந்தது.

“ம்மா எதுக்கு அழற?” என பதறினாள் செல்வி.

அன்னையின் மீதான மகளின் பாசத்தில் பிரம்மித்தார் தாமோதரன். இதெல்லாம் சாம்பவி சொல்லிக்கொடுத்து பேசவில்லை. மகள் உணர்ந்து பேசுகிறாள். தாமோதரனிற்கும் சாம்பவியின் அருமை தற்போது புரிகிறதுதான்.

ஆனால் அதை வெளிப்படுத்த அத்தனை தயக்கம். வெளிப்படுத்தினாலும் சாம்பவி தன்னோடு வருவாளா என்பது பெரும் சந்தேகமே. தான் அழைத்தும் வரவில்லை என்றால் என்ன செய்வதென்று யோசித்தவர், தயக்கம் உடைத்து சாம்பவியிடம் மன்னிப்பு கேட்டால் மகள் மனம் இறங்குவாளா என்ற யோசனையோடு சாம்பவியைப் பார்த்தார்.

கழுத்தில் தான் அணிவித்த தாலிக்கொடி இல்லை. திருமணத்தின்போது சாம்பவியின் அன்னை போட்ட ஐந்து பவுன் சங்கிலி அணிந்திருக்கிறாள் என்பதை பார்த்ததும், சற்று முன் மனைவியிடம் இறங்கிப் போகலாம் என்று நினைத்ததெல்லாம் மறந்து போனவராக, “நான் செத்தா போய்ட்டேன்? தாலியை கூட கழட்டிட்ட?” என்றார் கோபமாக.

கணவனின் கோபத்தை கண்டுகொள்ளாமல், மகளிடம் “என் அப்பாம்மா கூட எனக்காக பேசினதில்ல, பேசுறது என்ன? உங்கப்பாக்கு எதிரா பேச யோசிச்சது கூட இல்ல. இன்னைக்கு நீ எனக்கு அம்மாவாகிட்ட” என்றார் கண்ணீரோடு.

“ம்ப்ச் ம்மா” என அணைத்து விடுவித்தவள், “உயிரோட இருக்கோமா இல்லையானு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சு போல, செத்தா போய்ட்டேனு கேட்குறார். கண்ணை துடைச்சிட்டு அவருக்கு பதில் சொல்லு, நீ சொல்ற பதில்ல அவரோட சந்தேகத்துக்கு தீர்வு கிடைச்சிடனும்” என்றாள் அமர்த்தலாக.

மகள் சொன்னதை கேட்ட தாமோதரனிற்கு தற்போதே பாதி உயிர் போனது போல் இருந்தது.

மகளுக்கு காபி கலந்து கொடுத்து தனியறைக்குள் சென்று வந்தவர், “செல்விக்கு பதிமூணு வயசிருக்கும்போது உங்களை விட்டு பிரிஞ்சு வந்தேன். பிரிஞ்சு வந்தாலும் ஒரு வருசம் வரைக்கும் இதை போட்டுட்டுத்தான் இருந்தேன். ஒரு வருசம் கழிச்சு, செப்டம்பர் பதினேழாம் தேதி விடியகாலை நாலு மணிக்கு இதை கழட்டிட்டேன். இதை கழட்டி ஒன்பது வருசமாகுது, ஏதும் அசம்பாவிதம் நடக்காம நல்லாத்தான் இருக்கிங்க. வச்சுக்கோங்க” என்று தாலிச்சங்கிலியை நீட்ட, உறைந்து போனார் தாமோதரன்.

செப்டம்பர் பதினாறாம் தேதி தாமோதரனிற்கு பிறந்தநாள். உடல் மனைவியைத் தேட, தனது ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணிற்கு அழைத்து தனது விருப்பத்தை தெரிவித்தார். பணத்திற்கு ஆசைப்பட்டு அப்பெண்ணும் சம்மதம் தெரிவிக்க, ஹோட்டலிலோ வெளியிலோ அறையெடுத்து தங்கினால் விசயம் வெளியே போகும்.

இளவரசன் அப்பொழுது பனிரண்டாம் வகுப்பில் இருந்தான். பள்ளி, சிறப்புப் பாட வகுப்புகளை முடித்து வீட்டிற்கு வந்து உண்டுவிட்டு அறைக்குள் சென்றால் அடுத்த நாள் காலையில்தான் வெளியில் வருவான் ஆதலால் அப்பெண்ணை தனது வீட்டிற்கே வர சொல்லியிருந்தார் தாமோதரன்.

தாமோதரன் அறைக்குள் சாம்பவி, மற்றும் மகன் மகள் தவிர வேறு யாரும் செல்லமாட்டார்கள். தொழில் விசயமாக பேசுவதற்கென்று கூட இதுவரை வீட்டிற்கு யாரும் வந்ததில்லை.

அப்படியிருக்க இருபத்திஐந்து வயது மதிக்கத்தக்க பெண் தாமோதரனின் அறைக்குள் சென்றதும் அதிகாலையில்தான் அப்பெண் கிளம்பியதையும் கவனித்துவிட்டார் வேலைக்கார பெண்மணி. சாம்பவி மீதுள்ள அன்பில் மனம் கேளாமல் அதிகாலையிலேயே சாம்பவிக்கு அழைத்து விசயத்தை சொல்லிவிட்டார்.

கணவன் தன்னை மதிக்கமாட்டார் என்று தெரியும். ஆனால் பிறந்த நாள், திருமணநாள், பண்டிகை நாள்கள் என்று சிறு விஷேசம் என்றாலும் பட்டுப்புடவை, நகை என பரிசளிப்பார். தொழில் நிமிர்த்தமாக வெளியூர் சென்றால் அங்கே எது சிறப்பானதோ அதை மனைவிக்கு வாங்கி வருவார். அதெல்லாம் உண்மையான அன்பு என்று நினைத்துத்தான் அத்தனை வருடம் தாமோதரனோடு வாழ்ந்தார்.

வேலைக்கார பெண்மணி சொன்ன தகவலில் உடைந்து போனவர், அதன் பின்னேதான் இனி எப்போதும் கணவனோடு சேர்ந்து வாழக்கூடாது என்று திடமாக முடிவெடுத்து, மாங்கல்யத்தையும் கழற்றினார்.

வேறொரு நாளாக இருந்திருந்தால் சாம்பவி குறிப்பிடும் நாள் எதுவென்று தாமோதரன் மறந்துபோயிருப்பார். தனது பிறந்தநாளிற்கு அடுத்தநாளை சொன்னதும், விடியும் முன்னே இவளுக்கு தகவல் வந்துவிட்டதா? என்று அதிர்ந்தவருக்கு பேச்சு வரவில்லை.

“பிடிங்க” என்று சாம்பவி அதட்ட, தாமோதிரன் பாவமாக பார்க்க, “இப்போவே வாங்கிட்டு போய்ட்டா பரவால்ல. இல்லைனா கோர்ட் மூலமா கொடுக்க வேண்டியதாகிடும்” என மிரட்ட, பயந்தபோதும் தாலிசங்கிலியை வாங்கவும் கை வராமல் போக, அப்படியே  நின்றிருந்தார் தாமோதரன்.

செப்டம்பர் பதினாறாம் நாள் தந்தையின் பிறந்த நாள் என்று தெரியும். அடுத்த நாள் அன்னை மாங்கல்யம் கழற்றி வைத்ததும் தெரியும். தந்தையின் பிறந்த நாளிற்கு கூட தன்னை அழைக்கவில்லை என்று அன்னை வருந்துகிறார் என்றுதான் அப்பொழுது நினைத்தாள்.

செல்வியின் பனிரண்டாம் வகுப்பு பொதுப்பரிட்சை முடிந்த பின்னே ஓர் நாள் காலை சாம்பவிக்கு அழைப்பு வர, சாம்பவி குளித்துக்கொண்டிருப்பதால் அந்த அழைப்பை செல்வி ஏற்றாள்.

பேசுவது தன் வீட்டின் வேலைக்கார பெண் என்பதும், தந்தையின் போக்கும் அப்பொழுதுதான் செல்விக்கு தெரிய வந்தது. ஏதும் பேசாமல் இணைப்பை துண்டித்தவள், அன்னையிடமும் அவ்விசயத்தை பற்றி பேசியதில்லை. ஆனால் அன்றிலிருந்து தந்தையின் மீதான அன்பு மொத்தமாக முறிந்து போனது.

தந்தை முன்னே தோரணையாக அமர்ந்து காபியை அருந்தினாள்.

“இதை வாங்கப்போறிங்களா இல்லையா?” என சாம்பவி மீண்டும் மிரட்ட, “என்னை மன்னிச்சிடு சாம்பவி” என்று இரு கை கூப்பி வணங்கியதோடு, காலில் விழப்போவது போல போக, எங்கே அன்னை தந்தையை மன்னித்திடுவாரோ என்று அஞ்சிய செல்வி “ம்மா அவரை போக சொல்லுங்க” என கத்தினாள்.

மகளின் கத்தலில் பயந்து போன சாம்பவி “செல்வி எதுக்கு கத்துற?” என மகளருகே வர, செல்வியின் உடலில் லேசான நடுக்கம் இருப்பதை உணர்ந்தார்.

செல்விக்கு மன அழுத்தம் இருந்தாலும் இருக்கலாம் என்று அன்று பொற்செல்வன் சொன்னது நியாபகம் வர, “ரிலாக்ஸ் செல்வி” என்று மகளின் கேசம் வருடிக்கொடுக்க, “அவருக்கு கொடுக்க வேண்டிய விளக்கம் கொடுத்தாச்சில்ல? இன்னும் எதுக்கு இங்க இருக்கார்? போக சொல்லும்மா” என மீண்டும் கத்தினாள்.

வீட்டிற்கு வெளியே உள்ள தோட்டக் காவலர் பொற்செல்வனுக்கு அழைத்து செல்வியின் சத்தத்தைப் பற்றி சொல்ல, செல்விக்கு அழைத்தான் பொற்செல்வன்.

“ம்மா அவர்தான் கூப்பிடறார்” என்ற செல்வியின் உடலில் சற்றுமுன் இருந்த நடுக்கம் இல்லை.

செல்வி அறையிலிருந்து மொபைலை எடுத்து வந்து சாம்பவி கொடுக்க, வாங்கியவள் “வீட்டுக்கு வாங்க” என்றாள்.

“செல்வி… நான் இங்க” என்று பொற்செல்வன் தயங்க, “வீட்டுக்கு வாங்க” என்றாள் மீண்டும்.

பொற்செல்வனின் பைக் சத்தம் கேட்க, “ம்மா வந்துட்டார்” என்று உற்சாகமாக வாசலுக்கு விரைந்தாள்.

“அஞ்சு நிமிஷம் கூட ஆகல, வந்துட்டிங்க. பக்கத்துலதான் இருந்திங்களா?” என கேட்டுக்கொண்டே பொற்செல்வனின் கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தவள், “என் பிரச்சனையை நானே ஹேண்டில் பண்ணினேன், பயந்துக்கல. காஃபியை அவர் மூஞ்சிலயே ஊத்தலாம் போல கோபம் வந்துச்சு. ஆனா அப்படி பண்ணல, என்னை நானே கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். அம்மாகிட்ட கேட்டுப் பாருங்க” என்றாள்.

செல்வியின் ஆக்ரோச பாவனை கண்டு பதறினாலும், “குட் செல்வி. நீ பேசுவனு தெரியும். நீ எவ்வளோ தைரியமான பொண்ணு. உன்னால எல்லாம் முடியும்” என்று பாராட்ட, அணைத்துக்கொண்டாள் செல்வனை.

சாம்பவி இருப்பதால் சங்கடம் கொண்டவன், “தோட்டத்துக்கு போலாம் செல்வி, போய் ரெடியாகிட்டு வா” என்று தன்னிலிருந்து பிரிக்கப் பார்க்க, “எனக்கு டையர்டா இருக்கு. அப்புறம் போலாம், ரூம்க்கு கூட்டிட்டு போங்க” என்று தூக்கக் கலக்கத்தோடு சொன்னவள், அடுத்த சில நொடிகளில் தனது மொத்த எடையையும் செல்வனை தாங்கச் செய்தாள்.

செல்வியை தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்று படுக்க வைத்து வெளியே வந்தவன், “டாக்டர்கிட்ட அப்பாய்ன்மண்ட் வாங்கியிருக்கேன், செல்வி எழுந்ததும் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போலாம்” என்றான்.

“இவ்வளோ நேரம் நல்லாதானே பேசிட்டிருந்தா, எப்படி தூங்கினா? இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கா?” என்று தாமோதரன் பதட்டமாக கேட்க, சாம்பவியும், செல்வனும் அவரை கண்டுகொள்ளவில்லை.

“போலாம் தம்பி” என்று சாம்பவி சொல்ல, ராகுலுக்கு அழைத்து தனது காரை எடுத்து வர சொன்னான்.

ராகுல் வர நேரமாகிட, “என் கார்ல போலாம்” என்று தாமோதரன் சொல்ல, “முதல்ல கிளம்புறிங்களா?” என கத்தினார் சாம்பவி.

“அரை மணி நேரமாவது தூங்குவா, பதட்டப்பட வேண்டாம் ஆன்ட்டி, செல்வி முழிச்ச பின்னாடி ஹாஸ்பிட்டல் போனா போதும்” என்று சாம்பவியை அமைதிப்படுத்தினான்.

எத்தனை சொல்லியும் தாமோதரன் அவ்விடம் விட்டு நகரவில்லை. “செல்வி முழிக்கிறதுக்குள்ள நாம சின்ன வாக் போய்ட்டு வரலாம், வரிங்களா?” என்றான்.

மருமகன் தன்னிடம் இயல்பாக பேசியதில் மகிழ்ந்து “போலாம்” என சம்மதித்தார் தாமோதரன்.

ஐந்து நிமிட நடை பயணத்திற்கு பின்னே, “பத்து வருசம் கழிச்சு வந்து ஒரே நாள்ல எல்லாத்தையும் சரி பண்ண முடியாது. உங்க பொண்ணு முழிக்கிற நேரம் நீங்க இருந்தா டென்ஷன் ஆகுவா. செல்விக்கு என்னனு தெரிஞ்சிக்கனும்னா  ஹாஸ்பிட்டலுக்கு வந்திடுங்க. செல்வியைப் பத்தி டாக்டர்கிட்ட கேட்டுக்கோங்க” என்று எந்த மருத்துவமணைக்கு செல்கிறோம் என்றும் சொன்னான்.

தாமோதரன் யோசிக்க, “உங்களுக்கு இந்த ஆப்ஷன் கொடுத்ததே பெருசு. இதுக்கு ஒத்து வரலைனா உங்களை உங்க கார்லயே கடத்திட்டு போய் உங்க வீட்டுல விட்டுடுவேன், திரும்ப என் எல்லை பக்கம் உங்களால எப்போவும் வர முடியாது.” என்றான்.

மகளுக்கு என்ன ஆனதென்று அறிந்துகொள்ள வேண்டும். அதோடு பொற்செல்வனை பகைத்துக்கொண்டால் சிறு வாய்ப்பும் கிடைக்காது என்று “நானே ஹாஸ்பிட்டலுக்கு வந்துடறேன்” என்று கிளம்பினார் தாமோதரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!