அகல்யாவுக்கு மருத்துவமனையில் அன்று வேலை நேரம் முடிய சில நிமிடங்களே இருந்தது. ஹரிக்கு அடுத்த வாரம் முதல் கடைசி செமஸ்டர் பரிட்சை துவங்க இருக்கிறது.
அவனை எப்படியாவது உட்கார வைத்து படிக்க வைக்க வேண்டும். அவன் மட்டும் பாசாகி விட்டால் போதும். ஏதாவது நல்ல கம்பெனியில் வேலைக்கு சேரச் சொல்ல வேண்டும்.
இவனை இப்படியே விட்டால் சந்தானம் ஒரு படத்தில் சொல்வது போல “எதற்காக வந்தான் என்பதையே மறந்து நிஜ சமையல் காரணாகி விட்டான்.. “.. என்பது போல இவன் வார்டு பாயாகவே செட்டில் ஆகி விடுவான். என்று எண்ணிக் கொண்டவள் கடிகாரத்தைப் பார்த்தாள்.
Advertisement
மணி ஆறு முப்பது என்று காட்ட.. அவனுக்கும் பணி நேரம் முடிவடைந்து இருக்கும். அவன் எண்ணுக்கு கைப் பேசியில் அழைத்தவள்.. “எங்கடா இருக்க”.. என்றாள்.
“ அகல் நீ வீட்டுக்கு போ. ஹாஸ்பிடல் வேலையா சென்னை வரை வந்து இருக்கேன். நான் வர ரொம்ப லேட் ஆகிடும். நீ சாப்பிட்டு தூங்கு” . என்றான்.
“ஹாஸ்பிடல் வேலையா?”. ஆம்புலன்ஸில் போக வாய்ப்பு இல்லையே.. ஆம்புலன்ஸ் இங்க நிக்குது. எந்த எமர்ஜென்சி கேசும் வரவில்லை. என்று சந்தேகங்கள் மனதில் தோன்ற..
Advertisement
“என்ன ஹாஸ்பிடல் வேலை?. யாரு உன்ன சென்னைக்கு அனுப்பினா?.. உனக்கு பரிட்சை இருக்கு ஹரி. முடியாது என்று சொல்லி இருக்க வேண்டியது தான”.. என்று அவள் கோபத்தில் கத்த..
Advertisement
“அகல்.. இங்க சிக்னல் இல்லா. நான் வேகமா வந்துடுவேன்”.. என்று அவன் வைத்து விட அதற்கு மேல் அவன் எண் செயல் இழந்து போனது.
அவளுக்கு அப்படி ஒரு ஆத்திரம். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாமல் வீட்டில் அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தாள். இரவு ஒரு மணிக்கு அவன் வரும் அரவம் கேட்க.. அவள் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டாள்.
“அகல்.. இன்னும் தூங்கலையா??. “.. என்றவன் கண்ணில் எரிமலையாய் முறைத்துக் கொண்டு இருப்பவள் மிரட்ட..
Advertisement
“சாரி அகல் லேட் ஆகிடுச்சு. காலையில என்ன நடந்ததுன்னு சொல்றேன். தூக்கம் வருது. குட் நைட் .”.. என்று அவன் படுக்கப் போக..
“எவ கூட டா.. இந்நேரம் வரை ஊரைச் சுத்திட்டு வர்ற”.. என்று அவள் கத்த..
ஏற்கனவே அயர்ந்து போய் வந்தவனுக்கு அவள் சொற்கள் மேலும் எரிச்சலை கூட்டியது.
“சும்மா நல்லவன் மாதிரி பேசாத.. அந்த ரிசெப்ஷெனிஸ்ட் கோமதி கூப்பிட்டாள்னு .. பல்ல இளிச்சுட்டு சென்னை வரை போய் இருக்கியே உனக்கு வெட்கமா இல்ல?”.. என்று அவள் எகிற.
“அகல்யா.. பார்த்து பேசு.. கோபம் வந்தா அப்புறம் எனக்கு என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”.. என்றான் தன் சினத்தை கட்டுப் படுத்த முடியாமல்.
“உனக்கு எதுக்குடா கோபம் வரணும்? பரிட்சை இருக்கு என்ற நினைப்பு இல்லையா. என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம உன்ன யாரு போக சொன்னது”.. என்று அவள் கத்த.
“ நிறுத்து டீ. நான் என்னமோ அவ கூட போய் ஊர் சுத்திட்டு வந்த மாதிரி பேசிட்டு இருக்க. அவ அண்ணனை பாவம் திடீர்னு போலிஸ் பிடிச்சிட்டு போய் இருச்சுன்னு அவ ஒரே அழுகை. பார்க்கவே பாவமா இருந்தா. அவளுக்கு அப்பாவும் இல்லையாம். அதான் உதவப் போனேன். “ என்றான் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கோடு.
“நம்ம ஹாஸ்பிடல்ல மொத்தம் நாலு வார்ட் பாய். ஆறு செக்யூரிட்டி ஆறு வாட்ச்மேன். அப்புறம் கிட்டத்தட்ட இருபது பேர் டிரைவர், மேனேஜர், நர்ஸ் என்று ஆண் பிள்ளைகள் பல பேர் வேலை பார்க்கிறாங்க. அங்க இருக்க அத்தனை பேரையும் விட்டு உன்னை மட்டும் ஏண்டா அவ இழுக்கணும்?
சரி.. அவ கூப்பிட்டாலும்.. உன் புத்தி எங்க போச்சு? எனக்கு பரிட்சை இருக்கு நீ வேற யாரையும் கூட்டிப் போ என்று சொல்ல வேண்டியது தான.. எப்படி சொல்லுவ?. உனக்கு எப்பவும் அவா மேல ஒரு கண்ணு. . இது தான் சாக்குன்னு அவா கூப்பிட்டதும் நாக்க தொங்க போட்டு அவ பின்னாடியே போயிட்ட..
என்று அகல்யா முடிக்கும் முன் அவன் கரம் அவள் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது.
அகல்யா அதிர்ந்து விட்டாள். முதல் முறையாக ஹரி அவளை அடித்து இருக்கிறான். அவள் அதிர்ந்து விழிக்க.. அவனோ எதுவும் பேசாமல் கட்டிலில் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.
அகல்யா விழிகள் தானாக நீர் சொரிய அவள் எதுவும் பேசாமல் அவன் முதுகையே வெறித்துக் கொண்டு இருந்தாள். எத்தனை நேரம் அப்படியே உட்கார்ந்து இருந்தாளோ.. அவளுக்கே தெரியாது.
காலையில் அவன் கண் முன் விழிக்கக் கூடாது.. என்று வேகமாக கிளம்பி வேலைக்குச் சென்று இருந்தாள். அவன் மீது அத்தனை கோபம். யாரோ ஒரு பெண்ணுக்காக அவளை எப்படி கை நீட்டி அடிக்கலாம்.. என்று யோசித்தவளுக்கு அவள் உதிர்த்த நஞ்சு வார்த்தைகள் வசதியாக மறந்து போனது.
ஹரி மனமும் கனத்து தான் போய் இருந்தது. தன் உயிரின் உயிரானவள் மீது எப்படி கை நீட்டலாம்.. என்று தன்னையே நொந்து கொண்டான். அதே நேரம் தன்னை அசிங்கப்படுத்தி எத்தனை கீழ்த்தரமான வார்த்தைகளை பேசி விட்டாள் என்ற கோபமும் சற்றும் குறைய வில்லை.
ஆனாலும் என்ன. வாக்கு வாதம் வந்தாலும் கை நீட்டி இருக்கக் கூடாது. இப்போது அவள் எந்த தப்பும் செய்யாதது போல அவன் தானே அவள் பின்னாடியே சென்று தாங்க வேண்டும். இது வழக்கமாக நடப்பது தான். ஆனாலும் அவன் ஒழுக்கத்தை தப்பாக பேசினால் அவன் சகித்துக் கொள்ள மாட்டான்.
இதோடு இருபது முறை அவள் கைபேசிக்கு அழைத்தாயிற்று. பதிலே இல்லை. நாற்பது சாரி மெசேஜ் கூட அனுப்பி விட்டான். ப்ளூ டிக் வந்தாலும் பதிலே இல்லை. அய்யோ இவ ரொம்ப பண்ணுவாளே என்று எண்ணியபடியே மருத்துவமனைக்கு அவனும் கிளம்பினான்.
அன்று நிறைய நோயாளிகள் அட்மிஷனில் இருந்ததால் ஹரிக்கு அகல்யாவைத் தேடிச் சென்று பார்க்க நேரமே கிடைக்கவில்லை. ஆம்புலன்சில் இருந்து ஸ்ட்ரெட்ச்சரில் நோயாளிகளை உள்ளே தள்ளிக் கொண்டு வருவது. தேவைப்பட்டால் நோயாளியை தூக்கி ஐசியூ படுக்கையில் மாற்றுவது.
தேவைபட்டால் நோயாளிகளை வீல் சேரில் அவர்கள் அறைக்கு தள்ளிக் கொண்டு செல்வது என்று ஓடிக் கொண்டு இருந்தான். மதிய வேலையில் மெஸ்ஸில் ஆர்டர் போட்டு இருந்த உணவை டிராலியில் அவர்கள் அறைக்கு போய் கொடுத்து வருவான்.
அவன் அவ்வாறு இன்று மாடியில் ஒரு நோயாளியின் அறையைத் தட்டி உள்ளே சென்று அங்கு இருந்த மேஜையில் உணவை வைத்து விட்டு செல்லப் போனான். ஆனால் எதிர்பாராத விதமாக அங்கு விளையாடிக் கொண்டு இருந்த அவர்கள் குழந்தை பந்தை போட அது மேஜையில் இருந்த சாம்பார் டப்பாவை கீழே தள்ளி விட்டு இருந்தது.
ஆறு மாத கர்ப்பிணி பெண் பாவம் கால் உடைந்த கணவனுக்காக அத்தனை சேவையும் செய்து கொண்டு இருந்தாள். அதில் குழந்தை வேறு வேலை வைத்ததைப் பார்த்து கோபமாக அந்த குழந்தையை அடிக்க வர.
“அக்கா சும்மா இரு அக்கா. சின்ன புள்ளை ஏதோ தெரியாம பண்ணிட்டா. நீ அப்படி உட்காரு. நான் சுத்தம் செஞ்சிடறேன். என்றவன் மட மட வென்று சுத்தம் செய்யத் துவங்க..
அதே நேரம் அந்த நோயாளிக்கு ஊசி போட வந்த அகல்யா கண்ணில் தரையை துடைத்துக் கொண்டு இருந்த ஹரி தான் கண்ணில் பட்டான். தம்பி ரொம்ப தாங்க்ஸ் பா. இந்தா இதை வச்சுக்கோ என்று அந்த பெண் ஒரு அம்பது ரூபாய் நோட்டை நீட்ட. இல்லக்கா அதெல்லாம் வேணாம் என்றவன் அப்போது தான் அகல்யாவை கவனித்தான்.
அவன் எதுவும் பேசாமல் வெளியேறி விட. என்ன தான் கணவன் மீது கோபம் இருந்தாலும் அவன் செய்த செயலைப் பார்த்தவளுக்கு கண்களில் நீர் கோர்த்தது. எப்படி இருக்க வேண்டியவனை என்ன வேலை பார்க்க வைத்து விட்டாள் என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.
அந்த நோயாளிக்கு ஊசி போடும் போது .. “சிஸ்டர் பெரிய டாக்டர் எப்போ பார்க்க வருவாங்க”.. என்று அந்த நோயாளியின் மனைவி கேட்க..
“இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்தில் வந்து விடுவாங்க” .. என்று முடிக்கும் முன் ஒரு பெண் உள்ளே வர.
“அண்ணி.. அண்ணா எப்படி இருக்காங்க”.. என்று ஒரு பெண் குரல் கேட்டது.
அந்த புதிய பெண்ணின் குரல் எங்கோ கேட்டது போல் தோன்ற. திரும்பி பார்த்தாள் அகல்யா. அவள் உடன் படித்த பெண் தான் வள்ளி.
“அகல்யா.. நீ இங்க என்ன டீ பண்ற”.. என்று ஆச்சரியமாக அவளைப் பார்க்க..
“யூனிஃபார்ம் பார்த்தா தெரியலையா?.. நான் இங்க நர்ஸ் டீ”.. என்று மலர்ந்த முகமாக அகல்யா சொல்ல.
“ஓ.. நர்ஸா நீ. சூப்பர் டீ. நான் பேங்க்ல வேலைக்கு சேர்ந்துட்டேன். என் கணவர் சென்னை ஐடி கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கார். கார். வீடுன்னு வசதியா இருக்கோம். உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு போல?. நெத்தியில் குங்குமம் வச்சு இருக்க?. உன் கணவர் என்ன பண்றார்?. உன் அழகுக்கும், உங்க வீட்டு வசதிக்கும் நிச்சயம் பெரிய இடமா தான் பார்த்து இருப்பாங்க.”
அகல்யாவுக்கு முதல் முறையாக தன் கணவனை எப்படி அறிமுகப் படுத்துவது என்று தெரியவில்லை. அவள் வார்ட் பாய் என்று சொன்னால் நிச்சயம் வள்ளி முகம் சுழிப்பாள் என்று தெரியும்.
அதற்குள் “வள்ளி.. மாப்பிள்ளை வரலையா?.. என்று அவள் அண்ணன் அழைக்க.
அவளும் அது தான் சாக்கு என்று.. வள்ளி நான் உன்னை அப்புறம் பார்க்கிறேன் என்று அகல்யா நழுவி ஓடி விட்டாள்.
வள்ளிக்கு பள்ளி நாட்களில் எப்போதும் அகல்யா மீது பொறாமை இருக்கும். இவள் மட்டும் தன்னை விட அழகாக இருக்கிறாள். அதிலும் விலை உயர்ந்த உடை அணிகலன் எல்லாம் இவளுக்கு கிடைக்கிறதே என்று ஆற்றாமை இருக்கும்.
அதன் பிறகு அவள் அப்பாவுக்கு பணி மாற்றலாகி வெளியூர் சென்றதால் அகல்யா காதல் கதை அவளுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. இத்தனை வருடங்களுக்கு பின் அவளை பார்த்ததும் சந்தோஷம் இருந்தாலும்.. அவள் கணவன் யாராக இருக்கும்?
பெரிய தொழில் அதிபரை மனம் முடித்து இருப்பாளோ?.. நிச்சயம் பெரிய பணக்காரனை தான் முடித்து இருப்பாள். யாராக இருக்கும்?.. அதற்கு விடை தெரியாமல் எப்படி இங்கு இருந்து போவது.. என்று மருத்துவமனையை மூன்று முறை சுற்றி அவளைத் தேடி விட்டாள்.
அகல்யாவும் அவள் கண்ணில் பட்டு விடக் கூடாது என்று மறைந்து கொண்டாள். ஆனாலும் அவள் தோழி சுமதி உடன் பேசிக் கொண்டு இருக்கும் போது வள்ளி வந்து விட்டாள். “ஹே அகல்யா.. இங்க தான் இருக்கியா?.. உன்ன எங்க எல்லாம் தேடிட்டு இருந்தேன் தெரியுமா?
உன் வீடு எங்க இருக்கு. உன் வீட்டுக்காரர் என்ன பண்றார்? எதுவும் சொல்லாம ஓடிட்ட”.. என்று அவள் கேட்க.
அதே நேரம் தூரத்தில் ஹரி வர.. “இதோ வாரான் ல ஹரி. அவன் தான் இவ புருஷன்”.. என்று சுமதி சாதாரணமாக சொல்லி விட்டு சென்று விட்டாள்.
அவனை சீருடையில் பார்த்தவள் “வார்ட் பாயா?.. என்ன அகல்யா.. உன் புருஷன் ஒரு வார்ட் பாயா?.. “.. என்று வருந்துவது போல அவள் கேட்டாலும் அவள் கண்களில் அத்தனை ஆனந்தம் .
அகல்யாவுக்கு அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று புரியாமல் இல்லை. “நாங்க லவ் மேரேஜ் வள்ளி. திடீர் என்று கல்யாணம் ஆனதால் எம்பிஏ படிப்பை நிறுத்தி போஸ்டல்ல பண்றான். இப்போதைக்கு இங்க வேலை பார்க்கிறான்”.. என்றாள்.
“ஓ.. நீ ஒன்னும் கவலைப்படாத அகல்யா. எந்த வேலை பார்த்தால் என்ன? கொஞ்ச நாளைக்கு தான. உன் கணவர் எம்பிஏ முடிச்ச பிறகு சொல்லு. என் புருஷனே அவனுக்கு வேலை போட்டு கொடுப்பார்”. என்று நல்ல படியாகவே பேசினாள்.
தோழி முன் அவமானப். பட்டோம் என்று நினைத்தாலும்.. அவனுக்கு வேலைக்கு வாங்கித் தருகிறேன் என்று நல்ல படியாக தானே சொல்கிறாள். நாம் தான் தேவை இல்லாமல் அவளை சந்தேகப்பட்டு விட்டோம். என்று எண்ணிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் வள்ளியின் எண்ணை வாங்க மறந்து விட்டோமே என்று நினைவு வர.. அவர்கள் அறைக்கு சென்று கதவை தட்டப் போனாள். அப்போது அவர்கள் பேசும் சத்தம் வெளியே நன்றாக கேட்டது.
“அய்யோ அண்ணி.. அவ சரியான திமிரு பிடிச்சவா. ஏதோ பெரிய உலக அழகின்னு நினைப்பு. அத்தனை பந்தா பண்ணிக்குவா. அவங்க மாமா பெரிய அரசியல்வாதி. அதனால் அவளுக்கு டிரஸ் நகைன்னு அள்ளிக் குடுப்பாங்க. அவ அதை போட்டு என்ன அலப்பறை பண்ணுவா தெரியுமா?
நான் ரொம்ப பயந்தேன் ஏதோ பெரிய அம்பானி மாதிரி யாரையும் முடிச்சு இருப்பான்னு. ஆனா இப்படி ஒரு வார்ட் பாயை கல்யாணம் பண்ணி இருப்பான்னு நான் நினைச்சு கூட பார்க்கலை”.. என்றவளுக்கு அத்தனை சிரிப்பு.
“அந்த பையன் ஹரி இப்பதான் இந்த ரூமை சுத்தம் செய்து கொடுத்துட்டு போனான். ஆயாம்மாவை விட அவன் தான் சுத்தமா பண்ணுவான்.”. என்று அவள் அண்ணி சொல்ல.
“அதுவேறயா.. அப்போ அகல்யாவுக்கு ரொம்ப பிரகாசமான எதிர்காலம் காத்துட்டு இருக்குன்னு சொல்லுங்க. அதுலையும் அந்த லூசுகிட்ட என் புருஷன் கிட்ட சொல்லி வேலை வாங்கித் தர்றேன் என்று சொன்னதும் அவளுக்கு அத்தனை சந்தோஷம் . அவனாவது படிச்சு எம்பிஏ முடிக்கிறதாவது. காலம் முழுக்க அவன் வாழ்க்கை அந்த ஸ்ட்ரெச்சரை தள்ளுவது தான்,,”.. என்று வள்ளி சிரிக்க..
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அகல்யா கால்கள் தடுமாறத் தொடங்கின.