Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேயனின் நேசமினிது

நேயனின் நேசமினிது – 1

இனிய நேசம் – 1 

 

மழை மேகங்கள் பகலவனுக்கு வழி விடாமல் ஆகாயத்தை ஆக்ரமித்திருந்தன. 

 



Advertisement

விடிந்து இரண்டு மணி நேரங்கள் ஆகியும் விடியாத பொழுதாக மெல்லிய இருளுடன் காட்சி அளித்தது பூமி.  

 

பேரிடியின் முழக்கங்கள் பெரு மழையின் வரவை பறைசாற்ற, தன் கையில் இருந்த தேநீர் கோப்பையை சலிப்புடன் ஒரு பார்வை பார்த்தவள், அதே சலிப்புடன் நிமிர்ந்து கார்மேகங்கள் சூழ்ந்திருந்த ஆகாயத்தை பார்த்தாள். 

Advertisement

 

Advertisement

இதோ வந்துவிட்டேன் உன்னைத் தொட என்பது போல் சில மழைத்துளிகள் நிமிர்ந்து பார்த்த அவளது முகத்தில் பொட்டுப் பொட்டாக பட்டுத் தெறிக்க, “ப்ச்..” என்ற பிடித்தமின்மை நிறைந்த முனங்கல் அவளிடம்! 

 

அவள் கையில் இருந்த சூடான தேநீர் அவளது வாய்க்குள் செல்லக் காத்திருக்க, அவளோ மழையின் வருகையை பிடிக்காதவளாக அதைப் பொழியவிருக்கும் மேகங்களை முறைத்தபடி நின்றிருந்தாள். 

Advertisement

 

“இந்த மழை இப்ப தான் வரணுமா?” என்று அதிருப்தியுடன் முணுமுணுத்தபடி, அந்த மேற்கூரை இல்லாத நீண்ட மொட்டை மாடிப் பகுதியில் நடந்து கொண்டே கையில் இருந்த சூடான தேநீரைப் பருகத் துவங்கினாள். 

 

“மழை வர்ற மாதிரி இருக்கு. உள்ள வந்து டீயைக் குடி வர்ஷி..” அவளது அன்னை சந்திராவின் குரல் செவியை வந்தடைய, அதனைக் கண்டு கொள்ளாமல் இந்த மழையை மீறி சூரியன் உதயமாகும் வாய்ப்புகள் உள்ளதா எனும் ஏக்கத்துடன் மீண்டும் வானத்தைப் பார்த்தாள் அவள்!  

 

கூடிப் போன இடிகளுடன் வானம் சடசடவென மழையைப் பொழியத் துவங்கியிருக்க, பேயிடம் இருந்து தப்பி ஓடுவது போல் அந்த தூறல்களிடம் இருந்து தப்பி மாடிக் கதவை சாற்றி விட்டு மாடிப்படிகளுக்கு இடது புறம் இருக்கும் தங்கள் வீட்டினுள் நுழைந்தாள். 

 

வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அவளது

மனநிலையையும் மாற்றி இருந்தது! 

 

மழை மனதிற்குள் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் ஏராளம்! உணர்வுகளோடு கலந்து உறவாடும் வல்லமை கொண்டது இம்மழை! 

 

அவளது உணர்வுகளோடும் இந்த மழை கலந்து உறவாடும். ஆனால் கசப்புடன். 

 

இந்த மழையும் மழைத் துளிகளும் அவளுக்கு அறவே பிடிக்காது. 

மழை தரும் ஈரமும் குளிர்ச்சியும் கூட அவளுக்குப் பிடிக்காது. 

 

நேசம், மோகம், இன்பம், துன்பம், என பல விதமான உணர்வுகளைத் தூண்டும் சக்தி மழைக்கு உண்டு! 

 

அப்படிப்பட்ட இம்மழை அவளுக்குள் கசப்பான சில காட்சிகளை நினைவு கூர வைத்து, அவளது துன்பத்தை அதிகரிக்கும். 

 

மழையை முற்றிலுமாக வெறுப்பவள். 

 

அவள்.. இனியவர்ஷினி! 

 

நனைந்து வந்திருக்கும் மகளைக் கண்ட சந்திரா முறைப்புடன் துவாலையை எடுத்து அவளிடம் கொடுக்க, மறுப்பேதும் சொல்லாமல் அதனை ஒரு கையால் வாங்கிக் கொண்டவள், மற்றொரு கையிலிருந்த தேநீரை தொண்டையில் சரித்தாள். 

 

துவாலையை தோளில் போட்டுக் கொண்டு, ஹாலை தாண்டி இடது புறத்தில் உள்ள அடுக்களைக்குள் சென்று தேநீர் கோப்பையை கழுவி அதன் தாங்கியில் மாட்டி விட்டு, நனைந்த முகத்தை துவட்டியபடி தன் அறைக்குள் சென்று மறைந்தாள். 

 

எழுந்ததில் இருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் செல்லும் மகளைக் கண்ட சந்திரா பெருமூச்சுடன் “இந்தக் கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று முனங்கியபடி அடுக்களைக்குள் நகர்ந்தார். 

 

தாயின் முனங்கல் அறைக் கதவை தாண்டி செவிகளை தீண்டினாலும் மீண்டும் கண்டு கொள்ளாமல் க்ளிப்பில் அடக்கி இருந்த கூந்தலை அவிழ்த்து அதில் தங்கி இருந்த ஈரத்தை துவாலையால் துடைக்கத் துவங்கினாள். 

 

ஜன்னல் வழி மழைச் சாரல்கள் எட்டிப் பார்க்க, “ப்ச்..” என்ற சலிப்புடன் ஜன்னல் கதவுகளை இழுத்துச் சாற்ற, உள்ளே நுழையாத மழை நீர் ஜன்னல் கம்பிகளை முத்தமிட்டதை எந்தவொரு உணர்வுமின்றி பார்த்தாள்.

 

இனியவர்ஷினியின் மனதிற்கு மழை இதம் சேர்க்கவில்லை! சேர்க்கவும் சேர்க்காது! 

 

மழை என்றாலே அவள் மனம் கசந்துதான் போகும்!

அதற்குக் காரணம் ஓர் மழை நாளில் அவள் தந்தையினால் அவள் பட்ட துன்பம்! 

 

கண்களை இறுக மூடி அந்த நாளின் நினைவுகளை விரட்டி அடித்தவள், குளித்து வேக வேகமாகத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்தாள். 

 

இவளுக்கு முன்பே முழு ஃபார்மல் உடையில் தயாராகி ஹாலில் உள்ள பெரிய சோஃபாவில் கையில் உணவுத் தட்டுடன் அமர்ந்திருந்தான் இளமாறன். 

 

இனியவர்ஷினியின் அண்ணன்! அவளை விட இரண்டு ஆண்டுகள் மட்டுமே மூத்தவன். 

 

தங்கையைக் கண்டதும் ஒன்றும் பேசாமல் தட்டில் இருந்த உணவினை உண்ணத் துவங்கினான் இளமாறன். 

 

இனியவர்ஷினியும் உடன் பிறந்தவனை கண்டு கொள்ளவில்லை. தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பாடலை ஒலிக்க விட்டு, இடது கையில் கடிகாரத்தை கட்டத் துவங்கினாள். 

 

சந்திரா மகளுக்கும் தட்டில் உணவோடு வர, அதனை வாங்கிக் கொண்டவள் சோஃபாவின் மற்றொரு மூளையில் சென்று அமர்ந்தாள். 

 

“மழை பெய்யுது வர்ஷா. உன்னை நானே ஆஃபீஸ்ல வந்து ட்ராப் பண்றேன்” தங்கையின் புறம் பார்வையைத் திருப்பாமல், அன்னை செய்து தந்திருந்த ரவா தோசையை மென்றபடி கூறினான் இளமாறன்.  

 

“வெண்ணிலா வர்றா. நான் அவ கூடவே போய்க்கிறேன்” ரவா தோசையை மென்றபடி அவளும் அண்ணன் புறம் பார்வையைத் திருப்பாமல் பதில் கூறினாள். 

 

பெருமூச்சுடன் தங்கையைப் பார்த்தான் இளமாறன்! 

 

வர்ஷினி அவனை கண்டு கொள்ளவில்லை. கொத்தமல்லி சட்னியில் ரவா தோசையை மூழ்கடித்து அதனை ரசித்து உண்டு கொண்டிருந்தாள்.

 

மகளை முறைத்த சந்திரா “அதான் அவனே கொண்டு வந்து விடுறேன்னு சொல்றான்ல. அப்புறம் என்னத்துக்குடி வெண்ணிலா கூட போற. ஒழுங்கா உங்க அண்ணன் கூடயே போ” என்றார் கோபமாக. 

 

தாயிடம் பதிலுரைக்காமல் உணவை விழுங்கினாள் இனியவர்ஷினி. 

மகளின் புறக்கணிப்பில் சந்திராவிற்கு கோபம் தலைக்கேறியது. மகளை முடிந்த அளவிற்கு முறைத்தபடி, மகனிடம் புகார் வாசிக்கத் தொடங்கினார். 

 

“பாத்தியாடா இவளுக்கு கொழுப்ப. இன்னைக்கு காலைல எழுந்திருச்சதுல இருந்து என்கிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டேங்குறா. அப்படியென்ன இவளுக்கு வீம்பு? நாம என்ன இவளுக்கு கெடுதலா பண்ண நினைக்கிறோம்? கல்யாணம் தான பண்ணி வைக்க நினைக்கிறோம். ஆனா, இவ..” என பேச்சினை முடிக்காமல் மகளைப் பார்த்தார். 

 

இனியவர்ஷினியோ ‘நீ என்னத்த வேணாலும் சொல்லு. எனக்கு ரவா தோசை தான் முக்கியம்’ என்பது போல் தோசையில் கண்ணாக இருந்தாள். 

கூடவே, பாடலின் அளவைக் கூட்டி வைத்தாள். 

 

நான் பெண் ஆனது கல்யாணம் தேடவா..

ஓர் கண்ணாளன் வந்து பூமாலை போடவா..

ஏன் அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்..

யார் வந்தாலும் என்ன திரும்பாது ஞாபகம்..

பூவிலங்கு தேவையில்லையே…!!! 

 

வாலியின் பாடல் வரிகள் ஆழியின் ஆழம் நிறைந்த அர்த்தத்தோடு இருக்க, அந்த அர்த்தங்களை உணர்த்தும் வகையில் ஆர்ப்பரித்து பாடிக் கொண்டிருந்தார் ஜானகி! 

 

இனியவர்ஷினி ஓரக் கண் பார்வையால் அன்னையையும், அண்ணனையும் பார்த்தாள். 

 

வாய் மொழியால் பதில் சொல்லாமல், பாடல் வழியால் பதில் சொன்ன மகனை முடிந்த அளவிற்கு முறைத்தார் சந்திரா. 

 

“என்னடி கொழுப்பா?” என்று சந்திரா கோபம் தணியாமல் கேட்க, வர்ஷினி ரவா தோசைக்காக மட்டுமே வாயைத் திறந்தாள். 

 

தங்கையிடம் அழுத்தமாக பார்வையை பதித்த இளமாறன், அன்னையிடம் 

“இந்த விஷயத்தைப் பத்தி சாயந்தரம் வந்து பேசிக்கலாம்மா. இப்ப நாங்க ரெண்டு பேருமே ஆஃபீஸ் கிளம்புறோம்” என்றவன், “இன்னைக்கு கண்டிப்பா வர்ஷா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியே தீருவா. அதுக்கு நான் பொறுப்பு” என்றான் உறுதியாக. 

 

அண்ணனின் உறுதியில் மனதினுள் கலக்கம் சூழ்ந்தாலும் வர்ஷினி எதுவுமே கூறவில்லை. 

 

மகனின் பேச்சிற்கு கட்டுப் பட்டு சந்திராவும் அடுத்துப் பேசவில்லை. மகன் உறுதியாகக் கூறியதில் அவருள் சிறு ஆசுவாசம்! 

 

இனி அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வான் என நிம்மதி அடைந்தவர் “சரி இளா..” என்றபடி தங்கள் மூவருக்கும் உணவினை பேக்’ செய்ய வேண்டி அடுக்களைக்குள் சென்று மறைந்தார்.

 

உணவை உண்டு முடித்த பின்னர் தனது அலுவலக பையினை தோளில் மாட்டிக் கொண்ட இனியவர்ஷினி அன்னை கொடுத்த லஞ்ச் பேகினை வாங்கியபடி, “வெண்ணிலா வந்துட்டாண்ணா. அவ ஸ்கூட்டி சவுண்ட் கேக்குது” என்றவள், சற்றும் தடுமாறாமல் அண்ணனின் முகத்தை ஏறிட்டு “இன்னைக்கு ஈவ்னிங் மீட்டிங் இருக்குண்ணா எனக்கு. நான் வர்ற லேட் ஆகும்” என்று மட்டும் கூறி விட்டு அண்ணனின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் இரண்டாம் தளத்தில் இருந்து கீழ் தளம் நோக்கி விறுவிறுவென இறங்கத் துவங்கி இருந்தாள். 

 

மகள் சொல்லி விட்டுச் சென்ற செய்தியில் சந்திரா மகளை திட்டத் தொடங்க, “விடுங்கம்மா. அவ எவ்வளவு லேட்டா வந்தாலும் இன்னைக்கு அவ கிட்ட பேச வேண்டியது என் பொறுப்பு” மீண்டும் தாய்க்கு உறுதி அளித்தவன், “நீங்களும் ரெடியாகி வாங்க. உங்களை ட்ராப் பண்ணிட்டு நான் ஆஃபிஸ் போறேன்” என்றான். 

 

சந்திராவும் மகளை வாயில் அரைத்தபடி வேலைக்குச் செல்ல தயாரானார்.

 

இனியவர்ஷினியின் உயிர்த் தோழி வெண்ணிலா ஸ்கூட்டியில் வந்திருக்க, ஆளை விழுங்கும் அளவிற்கான பெரிய ரெயின் கோட்டிற்குள் தன்னைப் புகுத்திக் கொண்டவள் 

ஸ்கூட்டியின் பின்னால் ஏறி அமர்ந்தாள். 

 

“நல்ல மழை பெய்யுதுடி இனி.. இன்னைக்குன்னு பார்த்து ப்ராஜெக்ட் சம்மிஷன் வேற. இல்லேன்னா ஒர்க் ஃப்ரம் ஹோம் அப்ளை பண்ணி இருந்திருக்கலாம்” என்று அலுப்புடன் கூறினாள் வெண்ணிலா. 

 

அவள் கூறியதை தலையசைத்து ஆமோதித்தபடி “ஶ்ரீ குட்டி ஸ்கூலுக்கு கிளம்பிட்டானா..” என தோழியின் நான்கு வயது மகனைப் பற்றி விசாரித்தாள் இனியவர்ஷினி. 

 

“பெய்யுற மழைக்கு ஸ்கூல் இன்னைக்கு லீவ் விட்டானுங்க இனி. சோ, அவனை என் ஆத்துக்காரர் கிட்ட ஒப்படைச்சிட்டு கிளம்பி வந்துட்டேன்” என்ற வெண்ணிலா வண்டியை அலுவலகம் நோக்கி செலுத்தத் துவங்கினாள். 

 

மாடியில் நின்றபடி தங்கை அவளது தோழியுடன் பத்திரமாக செல்வதை உறுதி செய்து கொண்ட இளமாறன், சந்திரா ஊழியராக பணி புரியும் ஓர் புகழ் பெற்ற ‘ஹைப்பர் மார்க்கெட்’டில் (ஹைப்பர் மார்கெட் – சூப்பர் மார்க்கெட் போலவே மளிகை பொருட்களை விற்கும் இடம். அது மட்டுமன்றி ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்கள், ஸ்டேஷனாரி பொருட்கள், குழந்தைக்கு தேவையான பொருட்கள், விளையாட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களை ஒரே இடத்தில் வாங்கக்கூடிய வசதியை கொண்டது) தாயினை இறக்கி விட்டு 

அவனது அலுவலகத்திற்குக் கிளம்பினான். 

 

இளமாறன், இனியவர்ஷினி இருவரும் இரண்டாண்டு கால இடைவெளியில் சந்திரா மற்றும் கணேசன் தம்பதியருக்கு பிறந்தவர்கள். 

 

இளமாறன் பொறியியல் பட்டதாரி. ஒரு புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தில் ‘DATA ANALYST’ஆக பணி புரிகிறான். மாதம் 

லட்சத்தை தொடும் அளவில் சம்பளம்! 

 

இனியவர்ஷினி பொறியியல் பட்டதாரி அல்ல! அவள் ரசாயன சாஸ்திரத்தில் (வேதியியல்) இளங்கலை பட்டம் பெற்றவள்! 

 

ஆனால், தற்போது வேலை பார்ப்பது அவளது அண்ணன் போலவே ஒரு மென் பொருள் நிறுவனத்தில்! அதுவும் ‘TESTER’ ஆக! 

 

இளமாறனைப் போல் இனியவர்ஷினிக்கு லட்சத்தை தொடும் அளவிற்கு எல்லாம் சம்பளம் இல்லை! இருபத்தைந்தாயிரம் தான் அவளது ஊதியம்! 

 

காரணம் அவள் படித்தது ஒரு பிரிவு! பணி புரிவது அதற்கு நேர் மாறான பிரிவில்! 

 

அவள் படித்தது பொறியியலைச் சாராத கோர்ஸ் என்பதால், அவளது வேலையின் ஊதியம் குறைவே! 

 

இந்த மென்பொருள் நிறுவனத்தின் வேலையும் இனியவர்ஷினிக்கு இனிமை தரக் கூடியதல்ல! 

 

அவளுக்கு பொறியியலே பிடிக்காது! அதைத் தவிர்த்து வேறெந்த பட்டப் படிப்பையும் படிக்கத் தயாராக இருந்தாள். 

 

அதன் படி அரசுக் கல்லூரியில் மிகக் குறைந்த கட்டணத்தில் வேதியியலும் படித்து அதில் தங்கப் பதக்கமும் வாங்கினாள். 

 

மேலும் அதில் முதுகலை படித்து, முனைவர் பட்டம் பெற்று, கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்ற வேண்டும் என்பதுதான் அவளது கனவு, ஆசை!

 

அப்படிப்பட்டவளின் கனவை கலைத்து அவளை ‘I.T’ வட்டத்திற்குள் கட்டாயப் படுத்தி நுழைத்து விட்டவன் இளமாறன்! 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!