Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேயனின் நேசமினிது

நேயனின் நேசமினிது – 1

இனிய நேசம் – 1.2 

 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்த குடும்பச் சூழ்நிலையின் நெருக்கடி அவனை அப்படி ஒரு முடிவினை எடுக்க வைத்தது! 

 



Advertisement

“நான் பி.ஜி. படிக்கணும் ண்ணா. ப்ளீஸ். எனக்கு ஐ.டி. எல்லாம் வேண்டாம்” என்று கெஞ்சியவளை வற்புறுத்தி, குடும்பத்தின் நிலையை எடுத்துச் சொல்லி இந்தப் பணியில் அவளை சேரச் சொன்னான் இளமாறன்.  

 

“இனி படிப்பைப் பத்தி எல்லாம் யோசிக்காத வர்ஷா. நீ எவ்வளவு சீக்கிரம் வேலையில சேர முடியுமோ சேரு. அது தான் நமக்கு நல்லது. என்னோட எட்ஜுக்கேஷன் லோன் கட்டணும். அம்மாவோட மெடிக்கல் எக்ஸ்பென்ஸ் இருக்கு. அது போக நம்மள பெத்தவரு குடிக்கிறதுக்கும், சீட்டாடுறதுக்கும் அந்தக் கந்து வட்டிக்காரன் கிட்ட வாங்கியிருக்க கடனையும் அடைக்கனும். இதெல்லாம் என் ஒருத்தன் சம்பளத்துல மட்டும் பண்ண முடியாது. அதனால தான் உன்னையும் வேலைக்கு அப்ளை பண்ண சொல்றேன். ‘ஸ்மார்ட் ஹைய்ரிங்’ பிராசஸ் மூலமா ‘Non – Engineering Graduates’ ஐ ஐ.டி. கம்பெனீஸ் ஹையர் பண்ணுவாங்க. நீ அந்த எக்ஸாம்கு ப்ரிப்பேர் பண்ணு. நான் ஹெல்ப் பண்றேன். நீ கண்டிப்பா பாஸ் ஆகிடுவ” என்றவன் சொன்னது போல் தங்கையை ஆறு மாதம் படிக்க வைத்து, தேர்ச்சி பெற வைத்து, அவளை ஐ.டி. வட்டத்திற்குள் நுழைத்தும் விட்டான்.  

Advertisement

 

Advertisement

இந்த நான்கு ஆண்டு காலமாக ஒரே கம்பெனியில் வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் ‘இன்க்ரிமென்ட்’டுடன் அவளது பணி தொடர்கிறது.

 

ஆரம்பத்தில் இப்பணி மிகவும் சிரமமாக இருந்தாலும் இந்த இரண்டு ஆண்டுகளாக, ஐ.டி வட்டத்திற்கு ஏற்றபடி கொஞ்சம் தன்னை மெருகேற்றிக் கொண்டாள் இனியவர்ஷினி. 

Advertisement

 

ஆனாலும், இனியவர்ஷினிக்கு இந்த வேலை அவ்வளவு பிடித்தமில்லை! 

அண்ணனின் கட்டாயத்திற்காகத்தான் சென்று கொண்டிருக்கிறாள். 

 

இப்போது அவர்கள் அடைப்பதற்கு எந்த விதக் கடன்களும் இல்லை. கடனை ஏற்படுத்தக்கூடிய தந்தையுடனும் அவர்கள் இல்லை. 

 

குடியும், சீட்டாட்டமும் அவரின் வாழ்க்கையாகிப் போக, அப்படிப்பட்ட நீ எங்கள் வாழ்க்கைக்கு வேண்டாம் என்று அவரை தனித்து விட்டு, அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரான திண்டுக்கல்லில் இருந்து தங்கை மற்றும் அன்னையுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கே குடி வந்து விட்டான் இளமாறன்.

 

இப்போது இனியவர்ஷினிக்கு இருபத்தைந்து வயது நிறைவடைந்து விட்டது. அவளுக்கு திருமணம் செய்யலாம் என்று அண்ணனும் அன்னையும் முடிவெடுத்திருந்தனர். 

 

ஆனால், பெண்ணின் விருப்பமோ ‘இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்’ என்பதாக இருந்தது! 

 

கடந்த ஒரு வாரமாக திருமணத்திற்கு அவளை ஒப்புக்கொள்ளச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தனர் சந்திராவும், இளமாறனும். 

 

இனியவர்ஷினியோ திருமணம் வேண்டாம் என்று முற்றிலும் மறுத்தாள்.

 

நேற்று இரவு தாய் மகன் கூட்டணி அவளை வீழ்த்த நினைக்க, அவளோ பிடிவாதமாக “இப்போதைக்கு எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்லமா” என்று தெளிவாகக் கூறவும், சந்திராவுக்கு கோபம் வந்து விட்டது. 

 

“என்னடி அதையே சொல்ற. இன்னும் எத்தனை நாளைக்கு உன்னை எங்க கூடவே வச்சிருக்கிறது? இருபத்தஞ்சு வயசாச்சு உனக்கு. நீ ஒரு இடத்துக்கு கிளம்பினேன்னா தான அடுத்து உன் அண்ணனுக்கு ஒரு பொண்ணு வரும். நீ இங்கேயே இருந்தா அவனுக்கு எப்படி பொண்ணு அமையும்? போதும் நீ இங்க இருந்தது. கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு பெட்டியை கட்டுற வழியைப் பாரு” என்று கோபத்தில் இரைந்திருந்தார் சந்திரா. 

 

அன்னையின் வார்த்தைகளில் காயப் பட்டுப் போனாள் இனியவர்ஷினி. 

 

“நான் இங்க இருக்கிறது உங்களுக்கு சுமையா இருந்தா சொல்லிடுங்க. நான் வெளிய பி.ஜி.ல கூட போய் தங்கிக்குவேன். ஆனா அதுக்காக எல்லாம் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க பார்க்காதீங்க. எனக்கு இஷ்டம் இல்ல” என்று முடிவாகக் கூறி இருந்தாள். 

 

மகளின் பிடிவாதத்தில் சந்திரா கண்ணீர் மல்க “ஏன்டி இப்படி பிடிவாதமா இருக்க? உன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணலாம்னா.. உன்னை ஒரு இடத்தில கரை சேர்க்காம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உறுதியா நிக்கிறான்” என்றவர், 

 

“அவன் சொல்றதுலயும் தப்பில்ல தானடி. தங்கச்சி உன்னை வச்சிட்டு அவன் எப்படி கல்யாணம் பண்ண முடியும்? ஆனா, நீ இப்போதைக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்ற. நான் என்ன தான்டி பண்றது? என் வாழ்க்கை தான் அள்ளித் தெளிச்ச கோலம் மாதிரி அலங்கோலமா போச்சு. உங்க வாழ்க்கையாவது நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன். நீ பிடி கொடுக்க மாட்டேங்குற. நீ கல்யாணம் பண்ணிக்காம உங்க அண்ணனும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான். கடவுளே…” என்று புலம்பித் தீர்த்திருந்தார் சந்திரா. 

 

அன்னையின் வார்த்தைகள் மனதை உருக்கினாலும் இதற்கு முன்பு அவர் இரைந்த வார்த்தைகள் மனதை ஆழமாகக் காயம் செய்திருக்க, பதிலேதும் சொல்லாமல் அறைக்குள் சென்று முடங்கி விட்டாள். 

இரவில் இருந்து விடியல் வரை அன்னையிடம் பேசவுமில்லை. 

 

அனைத்தையும் நினைத்தபடி தோழியுடன் அலுவலகம் வந்து இறங்கினாள் இனியவர்ஷினி. 

 

அவளது முகம் சோர்ந்து கிடப்பதை கண்ட வெண்ணிலா, “என்ன கேர்ள்..? இன்னைக்கும் வீட்ல கல்யாண பஞ்சாயத்தா..?” என்று கேட்க, “ஹ்ம்ம்.. அதே தான் நிலா” என்றாள் ஈரமாகி இருந்த ரெயின் கோட்டினை கழற்றியபடி. 

 

வண்டியின் மீதே ரெயின் கோட்டினை காயப் போட்டவர்கள், லிஃப்டினுள் நுழைந்தனர். 

 

அவர்கள் பணி புரியும் ஆறாம் தளம் வந்ததும் ப்ராஜெக்ட் வேலைகளை இழுத்துக் கொள்ள, “லஞ்ச் டைம்ல பேசலாம் நிலா” என்று வேலையில் மூழ்கினாள் இனியவர்ஷினி. 

 

வெண்ணிலாவிற்கு சோர்ந்து கிடந்த தோழியின் முகம் பார்க்க வருத்தமாக இருந்தது. பெருமூச்சுடன் தானும் வேலையில் மூழ்கிப் போனாள். 

 

மதியம் வரை வேலை சரியாக இருக்க, 

இடைவெளி நேரத்தில் இரவில் நடந்த அனைத்தையும் வெண்ணிலாவிடம் சொல்லி வருத்தப்பட்டாள் இனியவர்ஷினி. 

 

“விடு இனி. பெரும்பாலான பெத்தவங்களுக்கு பொண்ணுங்க எல்லாம் இருபது வயசு வரைக்கும் தான் ஓவியம்! அதுக்கப்புறம் நாம எல்லாம் சுமைதான்! யாரு தலைலயாவது நம்மள கட்டி வச்சா தான் அவுங்களுக்கு நிம்மதின்னு நினைப்பு!” என்று தன் சொந்த அனுபவத்தில் பேசினாள் வெண்ணிலா.

 

“அண்ணனுக்கு கல்யாணம் பண்ணனும்னா முதல்ல அவனுக்கு கல்யாணம் பேச வேண்டியது தான. அதுக்கு ஏன் என்னைத் துரத்த நினைக்கணும். கஷ்டமா இருக்கு நிலா” என்று கண்ணீருடன் கூறினாள் இனியவர்ஷினி. 

 

“ஹே கேர்ள். இதுக்கெல்லாம் அழாத. அம்மா ஏதோ கோபத்துல பேசி இருப்பாங்க. நான் இந்த வீக்கென்ட் உங்க வீட்டுக்கு வர்றப்ப அம்மா கிட்ட பேசுறேன்” என்று தோழியை தேற்றினாள் வெண்ணிலா. 

 

“ஹ்ம்ம். நீ பேசுனா எங்க அம்மா கொஞ்ச நாளைக்கு இந்தப் பேச்சை எடுக்க மாட்டாங்கதான்” என்ற இனியவர்ஷினி, “இந்த ஒரு வாரமா ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு நிலா. அப்படியே மண்டை வெடிக்காத குறை. சரி வீட்ல தான் இப்படி இருக்குன்னா ஆஃபிஸ்லயும் இந்த ப்ராஜெக்ட் தொல்லை. என்னால முடியல” என்றாள் அயர்வுடன்.

 

தோழி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பது புரிந்து வருத்தம் கொண்டாள் வெண்ணிலா. 

 

“இந்த ப்ராஜெக்ட் எல்லாம் ஜுஜுபி மேட்டர் இனி. இன்னும் ரெண்டு மணி நேரம் டைம் இருக்கு. அதுக்குள்ள டெஸ்டிங் முடிச்சு புரொடக்ஷன் டீம்கு ஃபைலை பாஸ் பண்ணிடலாம். நீ டென்ஷன் ஆகாத” என்றாள் வெண்ணிலா. 

 

“ஹ்ம்ம். இன்னைக்கு ஆஃபிஸ் முடிஞ்சதும் எங்கயாவது வெளிய போகலாமா நிலா?” என்று இனியவர்ஷினி கேட்க, “போகலாமே. எங்க போகலாம். நீயே ஸ்பாட் சொல்லு” என்றாள் வெண்ணிலா. 

 

“எங்கேயாவது போகலாம் நிலா. ஆனா, எனக்கு வீட்டுக்கு சீக்கிரம் போக வேண்டாம். இன்னைக்கு அண்ணா மேரேஜ்க்கு என்னை ஓகே சொல்ல வைக்கிறதா அம்மா கிட்ட உறுதியா சொல்லி இருக்கான். வீட்டுக்கு சீக்கிரம் போனா இன்னைக்கும் அதே பேச்சு தான் வரும். எனக்கு மறுபடியும் ஸ்ட்ரெஸ் ஆகும்” என்றாள் இனியவர்ஷினி சோர்வுடன். 

 

“ஓகே. எங்கேயாவது போகலாம். நானே ஸ்பாட் யோசிச்சு சொல்றேன்” என்ற வெண்ணிலா, உணவை உண்டு கொண்டே அலைபேசியை உயிர்பித்தாள். 

 

‘புக் மை ஷோ’ ஆப் மூலமாக அவளுக்கு ஏதேதோ அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்க, கண்கள் மின்ன தோழியை நிமிர்ந்து பார்த்த வெண்ணிலா, “ஹே இனி.. இன்னைக்கு ஈவ்னிங் ஏதாவது ஸ்டான்ட் அப் காமெடி ஷோக்கு போகலாமா?” என்று உற்சாகமாகக் கேட்டாள். 

 

“ஹ்ம்ம். போகலாம். ஆனா, யாரோட ஷோ?” என்று இனியவர்ஷினி கேட்க, 

வெண்ணிலா வரிசையாக இரண்டு மூன்று பெயர்களை சொல்லவும், “ப்ச்… போ நிலா. இவுங்க ஷோ எல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்ல. ஸ்டான்ட் அப் காமெடின்ற பேர்ல வரம்பு மீறி அசிங்க அசிங்கமா பேசுவாங்க” என்றாள் முகம் சுளித்து. 

 

“இவுங்களோடது எல்லாம் ஏஜ் லிமிட் எயிட்டீன் ப்ளஸ் தான கேர்ள். சோ, கண்டமேனிக்கு தான் பேசுவாங்க. இதெல்லாம் சாதாரணம் தான” என்ற வெண்ணிலா, “சரி.. இரு அகன் காமெடி ஷோக்கு டிக்கெட் இருக்கான்னு பாக்குறேன். அவரு ஷோதான் நீ எதிர்பார்க்கிற மாதிரி டீசன்ட்டா இருக்கும். அதே சமயம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற மாதிரி பேசுவாப்புல” என்றதும் இனியவர்ஷினி முகமும் ஒளிர்ந்தது. 

 

“எஸ் நிலா. அகன் ஷோ நல்லா இருக்கும். ஆனா நான் அவரோட ஷோ’வை யூ டியூப்ல பார்த்ததோட சரி. அவரோட ஷோ’க்கு டிக்கெட் கிடைக்கிறதே கஷ்டம் ஆச்சே. ஏற்கனவே நாம எவ்வளவு தடவை டிக்கெட் கிடைக்காம வேற ஷோ’க்கு போயிருக்கோம்” என்றாள் இனியவர்ஷினி சட்டென்று முகிழ்த்த சலிப்புடன்! 

 

“அவரோட அடுத்த ஷோ’க்கு கிடைக்குமான்னு பாப்போம் இனியா” என்ற வெண்ணிலா, ‘புக் மை ஷோ’வினுள் அவனது பெயரை டைப் செய்து தேடினாள். 

 

இன்று மாலை ஏழு மணிக்கு துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஆர்ட்ஸ் தியேட்டரில் அவனது நகைச்சுவை நிகழ்ச்சி நிகழவிருக்கிறது என்று ‘புக் மை ஷோ’ தகவல் காட்டியது. 

 

ஆனால், அனைத்து டிக்கெட்களும் விற்பனை ஆகி விட்டதை உணர்ந்து உதடு பிதுக்கி தோழியை நிமிர்ந்து பார்த்தாள் வெண்ணிலா.

 

“நான் தான் சொன்னேன்ல. அகனோட ஷோ’க்கு டிக்கெட் கிடைக்கிறது கஷ்டம்னு” என்றாள் இனியவர்ஷினி. 

 

“இரு கேர்ள். அவரோட வெப் சைட்லயும் போய் டிக்கெட் புக் பண்ண முடியும்னு அவரோட யூ ட்யூப் சேனல் ஷார்ட்ஸ்ல போட்டிருந்தாங்க. நான் போய் பாக்குறேன்” என்று வெண்ணிலா சொன்னதும்,“நானும் பாக்குறேன் நிலா” என்ற இனியவர்ஷினி, அகன் என்று அவனது பெயரை டைப் செய்து அவனது யூ ட்யூப் சேனலை திறந்து பார்த்தாள். 

 

“அகநேயன் கிருபாகரன்” என்று ஆங்கிலத்தில் இருந்த அவனது ப்ரோஃபைல் பெயரின் கீழ் “……The Agan Stand Up Comedy Show……” என்று குறிப்பிட்டிருந்த வலைதள திரியை தொட்டுத் திறந்தாள். 

 

அன்றைய ஷோவிற்கான டிக்கெட் நான்கு மட்டும் மீதமிருக்க, “ஹே நிலா.. டிக்கெட் இருக்குப்பா” என்றாள் இனியவர்ஷினி உற்சாகமாக. 

 

“புக் பண்ணிடு இனி. இன்னைக்கு கண்டிப்பா போறோம்” என்று வெண்ணிலா சொல்ல, அதற்கு மேல் தாமதிக்காமல் அகநேயனின் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு இரண்டு டிக்கெட்களை புக் செய்திருந்தாள் இனியவர்ஷினி. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!