மன்னவன் மஞ்சத்தில் 4
4.
மஞ்சம் – 4
அக்னி தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தான்.
அக்னி படித்ததே அக்ரிகல்சர் தான். விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டவன். சிறு வயதில் இருந்தே இந்த வேலை செய்வதால் ஒருநாளும் சோர்வாக, சலிப்பாக தோன்றியது கிடையாது. கொஞ்சம், கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்து கால் காணி இடம் வாங்கியவன் அதன் மூலம் தீவிரமாக உழைத்து இன்று மூன்று ஏக்கர் வாங்கி இருக்கிறான்.
Advertisement
இவன் மிகப்பெரிய ஆசையே விவசாயத்தில் புரட்சி செய்வது தான். மரவள்ளி கிழங்கை பார்க்க ஒரு செடி அருகில் சென்றவன் அதன் வேரின் மண்ணை தள்ளி பார்த்தான். கிழங்கு அறுவடைக்கு தயாராக இருந்தது.
உடனே பிடுங்கி கையில் எடுத்துக் கொண்டான் வீட்டில் வைத்து படைக்க,
தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவன்.
மரவள்ளி கிழங்கை எடுத்து வந்ததே வேறு ஒரு காரணம் தான்.
Advertisement
“பாட்டி கிழங்கு எடுத்துட்டு வந்து இருக்கேன். படைச்சிட்டு அவிச்சிடுங்க கொஞ்சம். ராத்திரிக்கு கருவாட்டு குழம்பு வைங்க. அம்மா எங்க?”
Advertisement
“அம்மா வரும்.” என்றவர் கிழங்கை எடுத்து சென்று படைத்து பேரன் கூறியது போல் செய்ய தொடங்கினார்.
“அக்னி அந்த பொண்ணு ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.”
புருவங்கள் முடிச்சிட அறைக்குள் சென்றான்.
நிவேதா கட்டிலில் சுருண்டு கிடந்தாள்.
Advertisement
“இந்த ரூம்ல அமெரிக்கா வா தெரியுது? எதுக்காக இதுக்குள்ள இருக்க?”
நிவேதா அமைதியாக இருந்தாள். எவ்வித பதிலும் சொல்லவில்லை.
அவள் அமைதி அவன் பொறுமையை சோதிக்க,
“நீயா எழுந்து வெளியே வரியா இல்லை என்னை தூக்கிட்டு போய் வெளியே போகவா?” என்றான் உயர்ந்த குரலில்.
“நீ என்னை தொட்டு தூக்குவியா? உனக்கு என்ன உரிமை இருக்கு? உன்னுடைய அதிகாரம், அக்கிரமத்தை எல்லாம் வெளியே வச்சுக்கோ. என்கிட்ட வச்சிக்காத. எனக்கு எப்படி இருக்க பிடிக்குமோ அப்படி தான் இருப்பேன். உன் பேச்சை கேட்கணும் அவசியம் கிடையாது.” என்றாள் வெகுண்டெழுந்து.
புருவம் உயர்த்தி மனைவியை பார்த்தவன் அவள் கை பிடித்து இழுத்து நிறுத்தி “உன்னை தொட்டு தூக்காமல் கயிறு கட்டியா இழுக்க முடியும்? எனக்கு என்ன உரிமை இருக்கா?” என பல்லை கடித்தபடி கேட்டவன் அவள் கழுத்தில் கிடந்த தாலியை வெளியே இழுத்தான்.
“இந்த தாலி சொல்லும் டி உனக்கு நான் யார். என்ன உரிமைனு. உன் புருஷன் நான். எனக்கு மட்டும் தான் உன்னை தொட உரிமை இருக்கு. வேற யாருக்கும் கிடையாது. இன்னொரு வார்த்தை உரிமையை பத்தி பேசாத. அப்புறம் முழு உரிமையை நான் எடுத்துக்க வேண்டியதா இருக்கும்.” என்றான் கட்டவிழ்த்து விட்ட காளையாக.
“என்ன மிரட்டி பாக்குறியா? என்னுடைய அனுமதி இல்லாமல் நீ…” என அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அக்னி அவள் பின்னந்தலையை பற்றி தன் அருகில் இழுக்க, அவன் நெருக்கம் பிடிக்காமல் முகம் சுழித்து முகத்தை திருப்பியவள் கொஞ்சமும் யோசிக்காமல் “பளார்!” என அவன் கன்னத்தில் அறைந்த விட்டாள்.
அக்னி எதிர்பாராத நிகழ்வு இது. கண்கள் சிவக்க மனைவியை முறைக்க, அதே நேரம் சூடாமணி புயலென அறைக்குள் நுழைந்தவர் மகன் மீது கொண்ட பாசத்தால் “யார் மேல கை வைக்கிற?” என நிவேதா கன்னத்தில் “சப்.” என அறைந்தார்.
அவர் அறைந்ததில் வேகம் இல்லை.. வலியும் இல்லை. ஆனால் அவர் அறைக்கு எதிர் மாறாக அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.
இதுவரை தவறு செய்தால் கூட மகனை அடித்தது கிடையாது. அப்படி பட்ட மகன் அடிவாங்கி நிற்கும் போது எந்த தாய்க்கும் தாங்க முடியாது தான்.
நிவேதா தன் கன்னத்தை தாங்கி பிடித்தபடி அதிர்ந்து பார்க்க, அக்னி கை முட்டியை இறுக்கி பிடித்தபடி சிலை போல் நின்று இருந்தான்.
“யார் மேல கை வைக்கிற? என் வீட்டு சிங்கம் டி என் அக்னி. நீ ஒரு வீணா போனவன் பிள்ளையை சுமந்துட்டு நிக்கிற.. உனக்கு என் மகன் வாழ்க்கை கொடுத்ததுக்கு அவனையே அடிப்பியா?” என ஆக்ரோஷமாக கேட்டவருக்கு கோபத்தில் அவளை கொன்று விட தோன்றியது.
“இன்னைக்கு இவ்வளவு பேசுற நாய். என் மகன் தாலி கட்டும் போதே தாலியை பிடுங்கி போட்டுட்டு போய் இருந்தா நீ நல்ல பொண்ணு. அப்பல்லாம் வாய் இல்லாத பூச்சி மாதிரி நின்னுட்டு இப்போ கை நீட்டுற. யார் கொடுத்த தைரியம் டி. கையை உடைச்சிடுவேன்.
“உன்னை தொட என் மகனுக்கு தகுதி இல்லையா? அந்த வார்த்தையை சொல்ல கூட உனக்கு தகுதி கிடையாது. அசிங்கமா இல்லையா உனக்கு. உன் ஆத்தா என் மகன் காலை பிடித்து கெஞ்சி இந்த வீட்டுக்கு அனுப்பி இருக்கா. தகுதி, உரிமை எல்லாம் பத்தி பேச மொத்த குடும்பத்துக்கும் தகுதி இல்லை.” என்றவர் அடங்காத கோபத்துடன் வெளியே வந்து அமர்ந்து கொண்டார்.
அவள் மீது கொட்டிய வெறுப்பு கொஞ்சம் தான். அவளுக்கு அவர் மனம் கொஞ்சம் இளகி வந்தது தான் ஆனால் மகன் அடிவாங்கி நிற்பதை கண்ட நொடியே இவர்களை பிரிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்.
நிவேதா தலை நிமிர முடியாமல் குனிந்தபடி நின்று இருந்தவள் அப்படியே மடங்கி தரையில் அமர்ந்து அழுதாள்.
அவமானத்தில் கூனி குறுகி போனாள். தன் வயிற்றில் இருக்கும் சிசுவை தனக்கு ஆறுதலாக நினைத்துக் கொண்டவள் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.
அவள் அழுகையை முகம் இறுக பார்த்துக் கொண்டு நின்று இருந்தவன் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. சிறு வயதில் இருந்தே தாய் வளர்ப்பால் தன்மானத்தை அதிகமாக நேசிப்பவன் பெண்ணவள் கை பட்டு குறுகி போனான். அவளை திருப்பி அடிக்க நீண்ட நேரம் ஆகாது. ஆனாலும் அதை செய்ய அவன் மனம் விரும்பவில்லை. அவள் அடித்ததை அவன் மனம் ஏற்கவில்லை.
அவளை திரும்பி கூட பார்க்காமல் வீட்டை விட்டு செல்ல, அவன் பாட்டி பேரனை தடுக்க முடியாமல் கண்ணீரோடு நின்று இருந்தார்.
“என் குடும்பத்தை குருவி கூடு மாதிரி காப்பாத்திட்டு வந்தேன். என் மகன் மனசு வலிக்க கூட ஒரு வார்த்தை பேசி இருக்க மாட்டேன். இன்னைக்கு கண்ட கண்ட நாய்லாம் என் மகனை கை நீட்டி அடிக்குது. அவள் கழுத்தை அறுத்து இரத்தத்தை குடிக்க சொல்லுது மனசு. பெத்த வயிறு பத்தி எரியுது.” என சூடாமணி நெஞ்சில். அடித்துக் கொண்டு புலம்பி கொண்டிருக்க, பாட்டியோ நிவேதா தங்கி இருந்த அறைக்குள் வந்தவர்,
“உன்னை நான் நல்ல விதமாக நினைத்து இருந்தேன். ஆனா வந்த அன்னைக்கே எல்லார் வெறுப்பையும் சம்பாரிச்சிட்ட. உன்னை தொட என் பேரனுக்கு உரிமை இல்லனா.. அவனை தொட மட்டும் உனக்கு யார் உரிமை கொடுத்தா? என் பேரன் வாழ்க்கையை நீயும், உன் அம்மாவும் சேர்ந்து
நாசம் பண்ணிட்டீங்க. உங்க குடும்பத்தால் என் பொண்ணு வாழ்க்கை நாசமா போச்சு. அடுத்து என் பேரன் வாழ்கையை நாசம் பண்ண தான் நீ வந்தியா?” ஆதங்கமும், கோபமும் ஒருசேர அவர் பங்குக்கு கொட்டி விட்டு சென்றார்.
நிவேதா தன்னை தானே வெறுத்து, புழுங்கி கொண்டிருந்தவள் உதட்டிலோ கசந்த புன்னகை.
அக்னி குளத்தக்கரை கட்டையில் அமர்ந்து நீரை வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தவன் காதுகளை தீண்டியது “மச்சான்..!” என்ற இனிமையான குரல்.
ஐயோ! உயிரை உருக்கி இழுக்கும் காதல். நெஞ்சை சுண்டி இழுக்கும் ஆசை.. மனதை கொள்ளை கொண்ட வார்த்தை. இவனை முழுதாக மயக்கிய வார்த்தை. மச்சான்.. என்ற அழைப்பில் இப்போதும் அக்னி ரோமங்கள் சிலிர்த்து எழுந்தது.
காதல் மிகப் பெரிய மாயை. அதில் சிக்கி நல்வழி பட்டவர்கள் சித்திரம் வரைந்ததும் உண்டு.. அதில் சிக்கி பேதலித்து தெருவில் திரிந்ததும் உண்டு.
சிலிர்த்த கைகளை வருடிக் கொண்டவன் முகத்தில் தன்னை அறியாமல் சிறு புன்னகை கீற்று. இரும்பாக இறுகி போனவனுக்கும் சிரிக்கத் தெரியும் என்று உணர்த்தியது அவள் தான். அவளை பற்றி யோசிக்கும் ஒவ்வொரு நொடியும் உணர்வின் பிடியில் சிக்கி தவிப்பான்.
ஆனால் அனைத்தும் ஒரு நாளில் மாறி போனது. காதல் அழிந்து போனது.
ஆறு நிறைய தண்ணீர் ஓடும் போது சுற்றிலும் பசுமையாக ரசிக்க ரசிக்க திகட்டாமல் இருக்கும். அதே நீர் வற்றி விட்டால் அதன் பிறகு அங்கு என்ன வேலை?
அதே தான் மனிதன் வாழ்வும் காதல் என்ற உணர்வு மனிதனை அழகாக்கும், ரசிக்க வைக்கும், முன்னேற வைக்கும், போராட வைக்கும், உயிர் வாழ தூண்டும், அடுத்த நாளை நினைத்து ஏங்க வைக்கும். அதே காதல் இல்லை என்றால் ஒவ்வொரு நாளும் அர்த்தம் இல்லாமல் போகும். ஏன் வாழ்கிறோம்? நம் வாழ்வின் குறிக்கோள் என்ன என்ற பிடிப்பு இல்லாமல் செல்லும்.
அக்னி இந்த இரண்டு நிலைகளிலும் இருக்கிறான்.
“மச்சான்?” என்ற வார்த்தையும், குரலும் ஒவ்வொரு நாளையும் அழகாக்கியது. அதே குரலும், வார்த்தையும் தன்னை தூக்கி போட்டு சென்ற நொடியில் இருந்து ஏங்காத நாட்கள் இல்லை.
மீண்டும் அழைப்பாளா? காதல் சொட்ட, சொட்ட. கண்களில் ஏக்கம் கொட்டி கிடக்க,
குழந்தை போல் தன் முன்பு வந்து நின்ற அவளை மீண்டும் காண்பேனோ?
ஏங்கி நிற்கிறது இவன் நெஞ்சம். யாசகம் கேட்கிறது இவன் குணம். அவள் அறைந்த கன்னத்தை தேய்த்து பார்த்தான். வாழ்வின் விசித்திரங்கள் அவனை அச்சுறுத்தியது.
அவனை சுற்றி இருக்கும் அடுக்கடுக்கான பிரச்சனைகளை சமாளிக்க அவனால் முடியும். ஆனால் அவன் தாயை நோகடிக்க முடியாமல் தவித்தான்.
இவனுக்கு இருக்கும் பிரச்சனைகள் பத்தாமல் அடுத்து இருக்கும் இன்னொரு பிரச்சனை வாசலில் வந்து நின்றது.
“சூடாமணி…!” வீடே அதிர்ந்து போனது அந்த குரலில்.
நெஞ்சில் நெருப்பை வாரி இறைத்தது போல் சூடாமணி வெளியே ஓடி வந்தவர் “அண்ணா…!” என அதிர்ந்து நின்றார்.
இவள் கூட பிறந்த அண்ணன் சந்திரன்.
“அண்ணா வா…”
“வந்து என்ன பண்ண? இந்த வீட்டுக்கு என் பொண்ணு தான் மருமகளா வரணும்னு உன் கிட்ட சொல்லி இருந்தேன். ஆனா நீ உன் வாழ்க்கையை அழிச்சவள் பெண்ணை தேர்ந்து எடுத்து இருக்க போல?” அதிகாரமாக மிரட்ட, சூடாமணி பதில் சொல்ல முடியாமல் திணறினார்.
“எல்லாத்தையும் மறந்துட்டியா? உன் நாத்தனாரால் நம்ம பட்ட அவமானம், உன் புருஷன் உன்னை விட்டு ஓடி போனது. எல்லாத்தையும் மறந்துட்டியா?”
“ஐயோ! அண்ணா! நான் எதையும் மறக்கல அண்ணா. என்னால் எப்படி மறக்க முடியும். இரண்டு பிள்ளைகளை வச்சிக்கிட்டு தனியா நின்னப்ப, நீயும் அம்மாவும் தானே என்னை காப்பாத்துனீங்க. அந்த நன்றி இந்த உடம்பில் உயிர் இருக்க வரைக்கும் போகாது அண்ணா. அக்னி இப்படி ஒரு காரியம் பண்ணுவான்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல.” கெஞ்சிக் கொண்டிருக்க, அவர் கொஞ்சமும் மனம் இறங்கவில்லை.
“நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்ட சூடாமணி.”
“அண்ணா…!!” என அலறினாள்.
“என் பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பதில்?”
“அமர் இருக்கான் அண்ணா.” என்றார் தைரியமாக.
“என் பொண்ணு விரும்புனது உன் மூத்த மகனை.” அழுத்தம், திருத்தமாக கூற,
“மாமா பரஞ்சோதி தான் இந்த வீட்டு மருமகள். என் அண்ணி. நீங்க கவலை படாதீங்க.” என அமர் வாக்கு கொடுக்க, அவர் முகத்தில் கொடூரமான சிரிப்பு தோன்றி மறைந்தது.
இவர்கள் குடும்பமே சிதைந்து போனது இவனால் என்று தெரியாமல் அவன் சொல்லுக்கு மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் மயங்கி போகிறார்கள்.
தொடரும்………
