Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 15

அத்தியாயம் 15

யஷ்வந்த் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தவன், ஆசிரமத்தில் வளர்ந்தாலும், தன் படிப்பின் மீது வைத்திருந்த ஆர்வத்தினால் பத்தாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பிலும் மாநிலத்தில் முதலிடம் பெற்றான். அவனது இந்தத் திறமையினால் மேல் படிப்பு படிக்க, இலவசமாகவே சீட்டு கிடைத்தது. படிப்பை முடித்து, புகழ்பெற்ற சாஃப்ட்வேர் கம்பெனியில் மேனேஜராகப் பதவி வகித்தான்.



Advertisement

​தன் அலுவலக வேலை முடிந்து வரும் சமயம் தான் ஸ்மிருதியை முதல் முதலாகக் கண்டான். கண்டதுமே காதல் என்பது போல், ஸ்மிருதியின் மீது முதல் பார்வையிலேயே காதல் கொண்டான். ஸ்மிருதியுடன் விஷ்ணுவை ஒருநாள் கண்டவன், அவன் அவளின் தமையன் என்பதையும் புரிந்துகொண்டான். விஷ்ணுவைப் பற்றிய தகவலைத் தெரிந்துகொண்டவன், அவனைச் சந்திக்கச் சென்றான்…

​தன்னைப் பற்றியும், தன் நிலையைப் பற்றியும் சொல்லியவன், ஸ்மிருதியைத் தனக்குக் கல்யாணம் செய்து கொடுக்கும்படி நேரடியாகவே கேட்டுக்கொண்டான். விஷ்ணுவிற்கு யஷ்வந்த்தின் இந்த நேர்மையான பேச்சு மிகவும் பிடித்துப் போனது. ஸ்மிருதியை காதல் கீதல் என்று சொல்லி கட்டாயப்படுத்த விரும்பாமல், தன்னிடம் வந்து பெண் கேட்க்கும் அவனின் குணம் பிடித்துப் போனது.

Advertisement

Advertisement

ஸ்மிருதியும் அப்பொழுது கல்லூரிப் படிப்பை முடித்திருந்த சமயம். வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலமும் நடந்து கொண்டு தான் இருந்தது. ஆகவே விஷ்ணு, யஷ்வந்த்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான். விசாரித்த வரைக்கும் அனைவரும் நல்லவிதமாகவே சொல்ல, பெரியவர்களின் சம்மதத்தால், அவர்களின் திருமணமும் இனிதே நடந்து முடிந்தது…

​யஷ்வந்த் ஸ்மிருதியைத் தன் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டான். அவர்கள் இருவருக்காகவே தன் உழைப்பில் ஒரு சொந்த வீடும் வாங்கினான். ஸ்மிருதிக்குத் தேவையான அனைத்தையும் அவள் கேட்கும் முன்பே செய்து கொடுப்பான். தன் உயிருக்கும் மேலாக அவளை நேசித்தான். ஸ்மிருதியும் அவனுக்குச் சளைத்தவள் இல்லை. கல்யாணம் முடிந்த அன்றிரவே யஷ்வந்த்தின் கண்ணியத்தை அறிந்து கொண்டாள். நாட்கள் கடக்க கடக்க அவனது அன்பில் அவளும் ஐக்கியமாகிப் போனாள்.

Advertisement

அவனுக்குப் பிடித்தமான உணவுகளை விதவிதமாய்ச் சமைத்துக் கொடுப்பாள். ஸ்மிருதியின் சமையல் என்றால் அவனுக்கு அமிர்தம் போல் இருக்கும். அவனுக்கு அம்மா அப்பா இல்லாத குறையை, அவளது அன்பினால் பூர்த்தி செய்தாள். இவர்களின் வாழ்க்கை எந்தவிதக் குறையுமின்றி இரண்டு வருடங்கள் சந்தோசமாகத் தான் கடந்தது…

​சென்னையில் முக்கியமான கிளைன்ட்டைச் சந்திக்கப் போவதாகக் கூறி, அன்று ஸ்மிருதியிடம் கெஞ்சலுடனும் கொஞ்சலுடனும் அவளிடமிருந்து சம்மதம் வாங்கியவன், “சீக்கிரமே வந்துடுவேன்,” என்ற மலர்ந்த முகத்துடன் அன்று ஸ்மிருதியை அவளின் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றான்…

​சென்றவன் தன் வேலை முடித்துவிட்டு, ஊர் திரும்பும் வேளையில் தான் யாரும் எதிர்பாரா விதமாக நடந்தேறியது அந்த கோர விபத்து. விஷயம் கேள்விப்பட்ட ஸ்மிருதி அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தாள். வீட்டில் அழுகைச் சத்தம் மட்டுமே கேட்டது. மிகவும் வற்புறுத்தி அவளை யஷ்வந்த்தின் உடலைக் காண, அவன் உடல் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்…

சிரித்த முகத்துடன் சென்ற அவனின் முகம் முழுக்க இரத்தம் மட்டுமே நிரம்பியிருந்தது. தன் கணவனை உயிரற்ற ஜடமாய் அந்த ஒரு நிலைமையில் பார்த்த ஸ்மிருதி மீண்டும் கண்கள் சொருகிச் சரிந்தாள். மயக்கம் தெளியாமல் போக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்…

​அதிர்ச்சி இதயம் வரை சென்றதால் மைல்ட் அட்டாக் என்று கூறினார் மருத்துவர். அக்குடும்பத்திற்கு ஸ்மிருதியின் இந்த நிலை மேலும் கவலைக்குள்ளாக்கியது. எழுந்தால் அவளின் நடவடிக்கை எப்படி இருக்குமோ என்ற பயத்தில், இரண்டு நாட்கள் மயக்கத்திலே வைத்திருந்தனர் அவளை. யஷ்வந்த்திற்கு ஸ்மிருதியின் குடும்பமே இறுதிச் சடங்கு செய்தார்கள்…

​ஸ்மிருதியும் கண்விழித்தாள். அவளை மிகவும் போராடி ஒரு நிலைக்குக் கொண்டு வந்தனர் குடும்பத்தினர் அனைவரும். மாதங்கள் கடந்தது. ஸ்மிருதி கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான நிலைக்குத் திரும்பினாள். தன் உறவுகளின் அன்பால் தன் வேதனையிலிருந்து சிறிது சிறிதாகவே வெளிவந்தாள். ஐந்தாவது மாதத்தில் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்காகத் தன் சிரிப்பை வெளிக்கொண்டு வந்தாள். இனி இவர்கள் மட்டும் தான் தனக்கு என்று நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தாள்…

​அடுத்த ஒருசில மாதத்தில், வீட்டில் அனைவரும் கூடி கூடிப் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தாள். அவர்களிடம் என்னவென்று விசாரிக்கும் போது தான், மறுமணத்தைப் பற்றி அவளிடம் தெரியப்படுத்தினர்.

​ருத்ரகாளியாய் மாறி வீட்டையே இரண்டாக்கினாள். கையில் கிடைத்த பொருளை வீசி எறிந்து தன்னால் இதற்கு ஒருநாளும் சம்மதிக்க முடியாது என்று அழுத்தமான குரலில் கூறினாள்.

நாட்கள் கடந்தது. அவர்கள் விடாமல் பல காரணங்களை முன்வைத்து அவளை மறுமணத்திற்கு ஒத்துக்கொள்ளும்படி கெஞ்சினர். ஆனால் அவள் தன் முடிவில் உறுதியாய் இருந்தாள்.

​இந்த பிரச்சனை போய் கொண்டிருக்க, அந்த ஒரு நாள் விஷ்ணு தனிமையில் ஸ்மிருதியைக் காண வந்தான்.

அவளருகில் அமர்ந்து தன்னால் முடிந்த வரை பேசிப் போராடினான். அவளோ இன்றும் தன் முடிவில் உறுதியாய் இருக்க, “நான் சொல்றதை மட்டும் கொஞ்சம் அமைதியா கேளு ஸ்மிருதி. என் ஃப்ரெண்ட் இப்போ உன்னுடைய நிலைமையில தான் இருக்கான். அவனால் தான் நான் இப்போ ஒரு நல்ல நிலைமையில் இருக்கேன். தன் மனைவி குழந்தைகளை இழந்து யாரும் இல்லா அனாதையாய்த் துவண்டு போயிருக்கிறான். எனக்காக, உன் அண்ணனுக்காக இந்த மறுமணத்திற்குச் சம்மதம் தா,” என்றவாறு, தன் தங்கை மற்றும் நண்பனின் வாழ்க்கைக்காக, அவள் காலில் விழுந்தான்..

​பதறிப் போனவள், “அண்ணா என்ன செய்றீங்க?” என்றபடி அழுதவள், “ஏன்ண்ணா இப்படியெல்லாம் பண்றீங்க, நீங்க போய் என் காலுல,” என்றவள், அதற்கு மேல் பேச முடியாமல் கதறி அழுதாள்…

சில நிமிடம் யோசித்தவள், தன் தமையனிற்காக, “நான் சம்மதிக்கிறேன் அண்ணா,” என்றபடி அதே அழுகையுடன் கூறினாள். தனக்காக தன் தங்கை இதற்குச் சம்மதித்ததில், கண்ணீருடன் நெகிழ்ந்தவன், அவளை ஆரத்தழுவிக் கொண்டான்…

​அடுத்த முகூர்த்திலேயே, அஜய் மற்றும் ஸ்மிருதியின் மறுமணம் நெருங்கிய சொந்தக்காரர்களின் முன்னிலையில் நல்லபடியாக நடந்தேறியது. மறந்தும் அவள் அவன் புறம் திரும்பாமலேயே இருந்தாள். அஜய்யின் வற்புறுத்தலின் பெயரில் முதல் இரவு என்று எந்தவிதப் பூ அலங்காரமும் செய்யக் கூடாது எனச் சொல்லிவிட, அவர்களின் இப்போதைய நிலை கருதி, அதனைச் செய்யாமல் விட்டுவிட்டனர்…

​அன்றிரவு, பெரியவர்களின் கட்டாயத்தின் பெயரில், மறுமணம் ஆன இருவரும் அறையில் தனிமையில் இருந்தனர். இருவரும் எந்த ஒரு பேச்சு வார்த்தையுமின்றி இருக்க, ஸ்மிருதி தரையிலும், அஜய் கட்டிலுலும் படுத்துக் கொண்டனர். தன்னைக் கல்யாணம் செய்துகொண்ட இவனும் தன்னைப் போல் பாதிக்கப்பட்டவன் தான் என்ற எண்ணத்தில் தான் ஸ்மிருதி இருந்தாள். அதனால் அஜய்யிடம் தன் கோபமான முகத்தைக் காட்டாமல் இயல்பாகவே தான் இருந்தாள்…

​நாட்கள் கடந்தது. கல்யாணத்திற்கு வந்த உறவினர்கள், ஸ்மிருதியை இந்த வாழ்க்கை நல்ல முறையில் கடப்பது உன் கையில் தான் இருக்கு, கூடிய சீக்கிரம் அவருடன் இல்வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடு, என சில பல அறிவுரைகளை சொல்லிவிட்டு விடைபெற்றனர்…

​நாட்கள் கடந்து கொண்டே போனாலும், ஸ்மிருதி பறிகொடுத்தது போலவே அமர்ந்திருந்தாள். அவள் உடல் அங்கு இருந்தாலும், மனது வேறெங்கோ இருப்பதை போலவே திரிந்தாள். அஜய் அங்கிருந்த நாட்களில் அவள் மறந்தும் கூட ஒரு வார்த்தை பேசாமல் இருந்தாள். அறைக்கு அவன் வந்தாலும் கூட, எதுவும் பேசாமல் தரையில் சென்று படுத்துக் கொள்வாள்…

​அன்று தான் அஜய் அப்பார்ட்மெண்ட்க்குப் போவதைப் பற்றி, ஸ்மிருதியின் வீட்டில் மெல்லமாகப் பேச்சை ஆரம்பித்தான். வீட்டிலுள்ளவர்களும் அவர்களுக்குத் தனிமை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சம்மதம் தந்தனர்…

ஸ்மிருதியும் இதற்குக் மறுப்பு தெரிவிக்கவில்லை. சம்மதத்துடன் தன் உடமைகளை எடுத்து வைத்துத் தயாரானாள். அந்த நேரம் தான் அவளின் காதில் அஜய் யாருடனோ போனில் உரையாடிக் கொண்டிருப்பது காதில் சரியாக விழுந்தது. தன் காதைக் கூர்மையாக்கியவள் அவன் பேசுவதைக் கேட்க ஆர்வமானாள்.

​”இல்ல, அவளுக்கு விஷயம் எதுவும் தெரியாது. இப்போ வரைக்கும் என் மனைவியும் குழந்தைகளும் இந்த உலகத்துல இல்லைனு தான் நினைச்சிட்டு இருக்கா. என் முதல் மனைவி என்னைப் பிடிக்காம விவாகரத்து கொடுத்த விஷயம் இப்போ வரைக்கும் அவளுக்குத் தெரியாது,” இந்த வார்த்தைகளால் ஸ்மிருதி உச்ச கட்ட கோபத்திற்குச் சென்றாள்…

‘என்னை போல அவனும் தன் சரிபாதியை இழந்துவிட்டான் என்ற ஒரே காரணத்தினால் தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தேன். ஆனா இவன் விவாகரத்தானவனா? இவனைப் பிடிக்காம தான் அவனின் மனைவி அவனை விட்டு போயிட்டாளா? இல்ல இதை என்னால் ஏத்துக்க முடியாது,’ என வேகமாக விஷ்ணுவைத் தேடிச் சென்றாள்.

விஷயத்தைச் சொல்லி உண்மை எது எனக் கேட்டவளிடம் அவனுமே, அஜய்க்கு விவாகரத்து தான் ஆகிருக்கு என்று கூறினான். சில நிமிடம் அங்கு பூகம்பமே வெடித்தது என்று கூடச் சொல்லலாம்…

தன் தங்கையிடம்பேசி கெஞ்சி, இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடு என மிகவும் பிரயாதனப்பட்டு அவளை அஜய்யுடன் அனுப்பி வைத்தான் விஷ்ணு…

​மனதில் கோபம், வெறுப்பு மட்டுமே நிறைந்தபடி அஜய்யுடன் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தாள். இருவரும் தங்கள் உடைமைகளுடன் வீட்டில் நுழைந்தனர். வீட்டை ஒரு முறை ஆராய்ந்தவள், அங்கு ஒரே ஒரு அறை மட்டுமே இருப்பதைக் கண்டு அன்று முதல் முதலாக அஜய்யுடன் பேசுவதற்காக அவன் முன் வந்து நின்றாள்…

​”எல்லாம் பிளான் பண்ணி தான் என்னை இங்கு அழைச்சிட்டு வந்தியா?” என கோபமாக ஆரம்பித்தவள், “இங்க ஒரே ஒரு ரூம் தான் இருக்கு, இது ஒன்னும் என் வீடு இல்லை, மத்தவங்க தப்பா எடுத்துப்பாங்கனு சொல்லி, உன் கூட ஒரே ரூம்ல தங்குறதுக்கு,” என்றாள் கோபம் குறையாமல்…

​”உனக்கு நான் எந்த வித டிஸ்டர்பண்சும் கொடுக்க மாட்டேன். தாராளமா பயம் இல்லாம நீ இங்க இருக்கலாம். ரெண்டு நாள் மட்டும் பார். உனக்குக் கம்ஃபர்டபுளா இல்லைனா நான் வேற பிளாட் பார்க்கிறதைப் பற்றி யோசிக்கிறேன்,” என்றான் அஜய் மென்மையான குரலில்…

​”எல்லாம் தலையெழுத்து,” எனத் தலையில் அடித்துக் கொண்டவள், “நீ ஒரு விஷயத்தை எப்போதும் ஞாபாகத்துல வச்சிக்கணும். நீ என் கழுத்துல தாலி கட்டிருக்கலாம், அதுக்காக என் மேல எப்போதும் அட்வான்டேஜ் எடுத்துக்கவே கூடாது. ஒரே வீட்டுல நாம இருந்தாலும், இங்க நீ யாரோ, நான் யாரோ தான். இதை உன் மனசுல எப்போதும் ஞாபகம் வச்சிக்கணும். உனக்குனு ஒரு சின்ன உதவி கூட செய்ய மாட்டேன் நான். சமையல் செய்றதில இருந்து, வேற எந்த விதமான வேலையாக இருந்தாலும், உன் வேலையை நீ தான் பார்த்துக்கணும். நான் உன்னோட லைன்ல கிராஸ் பண்ண மாட்டேன், நீயும் என்னோட லைன்ல எப்போதும் கிராஸ் பண்ணவே கூடாது,” என உறுதியான குரலில் சொல்ல, மறு பேச்சு பேசாமல், அவள் சொன்ன அத்தனைக்கும், சரி எனச் சம்மதம் தந்தான் அஜய்….

​தன் கடந்த கால நினைவிலிருந்து ஒருபெருமூச்சோடு வெளிவந்தவள், தன் கன்னத்தில் வழிந்திருந்த நீரைத் துடைத்து விட்டு, தன் வழக்கமான வேலைகளில் ஈடுபடத் தயாரானாள்….

​மறுநாள் விடியலில் அஜய் கண் விழிக்க மணி எட்டைக் காட்டியிருந்தது. ‘இத்தனை நேரம் தூங்கிட்டேனா?’ எனத் தன் மீதிருந்த போர்வையை விலக்கிவிட்டு எழுந்தவன், ஸ்மிருதி இல்லாததை அப்பொழுது தான் கவனித்தான். வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவன், சமையலறையில் மும்முரமாக சமையலில் ஈடுபட்டு கொண்டிருந்த ஸ்மிருதியைக் கண்டு அவன் இதழ்களில் புன்னகை விரிந்தது,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!