மான்விழி – 17
சித்தார்த் தன்னை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் வருவதை பார்த்து நேத்ராவிற்கு கால்கள் நடுங்கியது. அவள் கண்களில் தெரிந்த பயம் அவனுக்கு சுவாரசியமாக இருந்தது.
“நான் என்னவோ இவளை கடிச்சு முழுங்க வர்ற டிராகன் மாதிரி பார்த்து பயந்து நடுங்கிறாளே” என்று மனதிற்குள் நினைத்தவன், மிகவும் நெருக்கமாக நின்று அவள் கண்களை உற்று நோக்கினான்.
Advertisement
கண்ணாடி சிறைக்குள் மாட்டிக்கொண்ட பட்டாம்பூச்சியாய் அவளின் இமைகள் படபடத்தன. சிறிது நேரம் அவள் இமை சிறகுகளின் படபடப்பை ரசித்தவன், மெல்ல அவளுடைய கண்ணாடியை கழட்டினான்.
சட்டென்று பின் வாங்கினாள் நேத்ரநயனி. “என்ன? என்ன பண்ண போறீங்க?” என்றாள் எச்சிலை விழுங்கியபடி.
Advertisement
Advertisement
“ஏன்? உனக்கு தெரியாதா?” என்று அவளை அழுத்தமாக பார்த்தபடி மேலும் நெருங்கினான்.
அவள் பின்னாலேயே செல்ல செல்ல, அவன் மேலும் அவளை சீண்டும் விதமாக நெருங்கி கொண்டே இருந்தான். கடைசியாக சுவரின் மீது மோதி நின்றாள்.
Advertisement
கண்களை இறுக்கமாக மூடியபடி அப்படியே நின்று விட்டாள். உடல் லேசாக உதற தொடங்கியது. கால்விரல்களை பூமியில் அழுத்திய படி நின்றிருந்தவளின் கைவிரல்களும் கைகளுக்குள் இறுக்கமாக அழுத்திக் கொண்டிருந்தது. நயனியின் அருகே வந்து மிகவும் நெருக்கமாக நின்று அவளின் நிலையை பொறுமையாக பார்த்தபடி நின்றிருந்தான். சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தவன் அவளின் காதருகே குனிந்து மீசை ரோமங்கள் உரச, “குட் நைட்” என்றான்.
அவள் விழி விரித்து அவனை ஆச்சரியமாக பார்க்க, “என்ன பார்க்கிறே? குட் நைட் சொல்ல தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு குறுஞ்சிரிப்போடு தன் படுக்கையை நோக்கி சென்றான்.
அவன் சென்ற பின்பு தான் அவளுக்கு மூச்சே வந்தது. அவசரமாக ஓடிச்சென்று தனக்கான படுக்கையில் படுத்துக் கொண்டாள். படுக்கையில் படுத்த பின்பும் படபடப்பு மட்டும் அடங்கவே இல்லை. மெல்ல திரும்பி பிளாஸ்டிக்கா கண்ணாடியா என்று பிரித்தறிய முடியாத அந்த தடுப்பு சுவரின் வழியே மங்கலாகத் தெரிந்த சித்தார்த்தின் வரிவடிவத்தை பார்த்தாள்.
அவன் தலையணைக்கு மேல் தன் கைகளை மடக்கி வைத்து அதில் தலைவைத்து அண்ணாந்து படுத்தபடி விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான். என்ன நினைத்தானோ சட்டென்று அவன் தலையை இவள் பக்கமாக திருப்பவும், அவசரமாக தன்னை போர்வைக்குள் மறைத்துக் கொண்டாள்.
மறுநாள் காலை, சித்தார்த் எழுந்திருக்கும் முன்பு நேத்ரா எழுந்து குளித்து தயாராகி இருந்தாள். அவளை ஆச்சரியமாக பார்த்து, “குட்மார்னிங்” என்று புன்னகைத்தான்.
வசீகரமான அவன் முகத்தில் தெரிந்த அவளுக்கான முதல் புன்னகையை ஆச்சரியத்தோடு பார்த்தாளே தவிர, பதில் வணக்கம் சொல்லவில்லை. அதன்பிறகு அவனும் தயாராகி வந்து, அவளை கீழே டைனிங் டேபிளுக்கு கூட்டிச் சென்றான்.
ஒரு நடுத்தர வயது பெண்மணி நின்று கொண்டு இவர்கள் இரண்டு பேரையும் பார்த்திருந்தாள், “சரோக்கா, இவங்க தான் என் மனைவி நேத்ரநயனி” என்றவன், மனைவியிடம் திரும்பி, “நயனி, இவங்க தான் நம்ம வீட்டில் சமையல் செய்யறவங்க, பேரு சரோஜா, நான் சரோக்கானு கூப்பிடுவேன்” என்று அறிமுகம் செய்து வைத்தான்.
நேத்ரா சரோஜாவைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தாள். ஆனால் அவரோ, சித்தார்த்தையும் நேத்ராவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். இருவரின் ஜோடிப் பொருத்தத்தையும் கண்களால் எடை போடுகிறார் என்பது நேத்ராவுக்கு நன்றாகவே புரிந்தது. சித்தார்த்தின் பளிச்சென்ற நிறத்திற்கு நேத்ராவின் மாநிறம் பொருத்தமாக இருக்காது என்பது அவள் அறிந்தது தானே.
மெளனமாய் நின்றிருந்தவளை பார்த்து முறைத்தான் சித்தார்த், “உட்கார்ந்து சாப்பிடு” என்று அதட்டினான். கணவனின் அதட்டலுக்கு கட்டுப்பட்டு அமர்ந்து உண்ண தொடங்கினாள். நேத்ராவின் முகவாட்டத்தை யோசனையுடன் பார்த்தபடி சாப்பிட்டு முடித்தான் சித்தார்த்.
அவன் கிளம்பும் போது, அவளும் அவன் பின்னால் சென்றாள். திரும்பி பார்த்து, “எங்கே வர்றே?” என்றான்.
“ஹாஸ்பிட்டலுக்கு” என்றாள்.
“மறுபடியும் அங்கே வந்து நர்ஸ் வேலை பார்க்க போறீயா? பார்த்தவரைக்கும் போதும். சித்தார்த்தின் மனைவியா இருந்துட்டு இனி நீ அங்கே நர்ஸ் வேலை பார்க்க கூடாது” என்றான்.
“அப்போ வேறே ஆஸ்பிட்டல்ல வேலைக்கு சேர்ந்துக்கட்டுமா? என் பிரண்ட் சுதா வேலை செய்யற ஆஸ்பிட்டல்ல கூட ஆள் தேவைனு சொல்லியிருந்தாள். அங்கே போகட்டுமா?” என்றாள்.
“நயனி” என்று கோபமாக அதட்டினான். “நலமுடன் மருத்துவனை முதலாளியோட மனைவியா இருந்துட்டு, வேறே இடத்தில் நர்ஸ் வேலைக்கு போறேன் சொல்றீயே, உன்னையெல்லாம்?” என்று பல்லை கடித்தான்.
“ஏற்கனவே தங்க இடம் கொடுத்திருக்கீங்க, இதுல வீட்டில் தண்டமா சாப்பிட்டு இருக்க சொல்றீங்களா? இதுக்கெல்லாம் கொஞ்சமாச்சும் ஈடு செய்ய நான் எதாவது வேலை செய்ய வேண்டாமா?” என்றாள் ஆற்றாமையுடன்.
நேத்ராவை அழுத்தமாக பார்த்து விட்டு “நீ ஒரு விஷயத்தை மறந்துட்டே, நீ என் மனைவி. உன்னோட எல்லா தேவைக்கும் கணவனான நான் தானே பொறுப்பு. ஒரு வேளை இதுக்கெல்லாம் ஈடு செய்யணும்னு நீ நினைச்சா மனைவியா நடந்துக்க முயற்சி பண்ணு. நேத்து மாதிரி பயந்து நடுங்காம இன்னிக்கு ராத்திரி தயாரா இரு” என்று அவன் நேத்ராவை பார்க்க, அவளோ புரிந்தும் புரியாத பாவனையில் நின்றிருந்தாள். ஒரு பெருமூச்சுடன், “நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.
சித்தார்த்தின் வார்த்தைகளை உள்வாங்கி அதன் அர்த்தம் புரிவதற்குள், அவன் காரில் ஏறி அதை இயக்கி கொண்டிருந்தான். என்னவென்று புரியாத ஒரு உணர்வில் சில கணங்கள் அப்படியே சிலையென நின்றிருந்தாள்.
அதன்பிறகு சமையலறைக்கு சென்று சரோஜாவுடன் சேர்ந்து சமையலாவது செய்யலாம் என்று நினைத்து சமையலைறையை நோக்கிச் சென்றாள். அப்போது சரோஜா வேலுவிடம் பேசுவது அவள் காதில் விழுந்தது.
சித்தார்த்தும் நேத்ராவும் வெளிப்பக்க வாசலை நோக்கி செல்வதை பார்த்து தான் சமையலறையில் சாப்பிட வந்த வேலுவிடம் தன் பேச்சை தொடங்கியிருந்தார் சரோஜா.
“என்ன வேலு? நம்ம சித்தார்த் ஐயா, அழகுக்கும் கலருக்கும், சினிமா ஹீரோயின் போல ஒருத்தி தான் பொண்டாட்டியா வருவாள்னு நினைச்சிருந்தேன்.
இந்த பொண்ணு கொஞ்சம் கூட நம்ம ஜயாவுக்கு பொறுத்தமே இல்லையே? ஜோடி பொருத்தம் கொஞ்சம் கூட நல்லாவே இல்லை, இதுல கண்ணாடி வேறே போட்டிருக்கு. ஆளை பார்த்தால் ரொம்ப ஏழைவீட்டு பொண்ணா இருக்கும் போலயே” என்றாள் சரோஜா.
“நமக்கென்ன வந்துச்சு சரோக்கா, வேலையை பாருங்க” என்றான் வேலு,
“இல்ல, வேலு நான் எவ்வளவு கற்பனை பண்ணி வச்சிருந்தேன் தெரியுமா? இந்த வீட்டில் கல்யாணம் ஆனா, எனக்கு பட்டுபுடவை எல்லாம் எடுத்து தருவாங்க. பெரிய வீட்டு மருமகள் வந்தால் அவங்களும் தனியா எதாவது எனக்கு சலுகை தருவாங்கனு நினைச்சேன், என் கற்பனை எல்லாம் வீணா போச்சே. அதுதான் மனசு தாங்கல” என்றாள் சரோஜா.
“இங்கே வீட்டு வேலை செய்யறே நீ உன் கற்பனை வீணா போச்சுனு புலம்பறியே? இந்த வீட்டோட முதலாளி நம்ம சித்தார்த் ஐயாவோட நிலைமையை நினைச்சு பார்த்தியா? அவரோட ஆசை எல்லாம் கூட தான் மண்ணா போச்சு. அவரே சும்மா இருக்காரு. நீ என்னமோ புலம்பறீயே” என்றான்.
“என்னா சொல்றே வேலு” என்றாள் சரோஜா ஆர்வமாக.
“நம்ம சித்தார்த் ஐயா, பாரின்ல இருக்கும் போது யாரோ ஒரு பொண்ணை லவ் பண்ணியிருக்காரு. இங்கே வந்த பின்னாடி அந்த பொண்ணுகிட்ட இங்கிலிஷ்ல பேசுவாரு, நான் அவரோட ரூமுக்கு போகும் போது பார்த்திருக்கேன். அவரோட காதல் கனவே நிறைவேறலை. இதுல உங்க கற்பனைய நினைச்சு புலம்பறீங்க” என்றான் வேலு நக்கலாக.
சித்தார்த்திற்கு வேறொரு பெண் மேல் காதல் இருந்ததா? இதைக் கேட்ட நேத்ரா அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.
“என்னா வேலு சொல்றே? நிஜமாவா? அப்புறம் ஏன் இந்த பொண்ணை கல்யாணம் கட்டிகிட்டாரு” என்றாள் சரோஜா, தாடையில் கைவைத்தபடி.
“வெள்ளைக்காரியை எங்கே மகன் கல்யாணம் பண்ணிட்டு வந்திடுவானோனு நம்ம மகேந்திரன் ஐயா பயந்து போய் இருந்தாரு. அந்த சமயத்துல அவரோட பிரண்ட் சிவானு ஒருத்தர் வருவார் இல்ல, அவரோட பொண்ணுக்கு கல்யாணம்னு இரண்டு பேரும் போயிருந்தாங்க. அங்க இந்த பொண்ணு கல்யாணம் நின்னு போயிருக்கு, இது தான் வாய்ப்புனு நம்ம பெரிய ஐயா, சித்தார்த் ஐயாவை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வச்சுட்டாரு” என்றான் வேலு.
“அடக்கடவுளே, இந்த பெரிய ஐயா அவசரப்பட்டு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத பொண்ணை கட்டி வச்சிட்டாரே, சரி இந்த பொண்ணும் டாக்டரா?” என்றாள் சரோஜா.
“இல்லை சரோக்கா, நர்ஸ் அதுவும் டிப்ளமா தான் படிச்சிருக்கு. ஐயாவோட மருத்துவமனையில் தான் வேலை செய்துட்டு இருந்து இருக்கு. இத்தனை நாள் எதுக்கு அவங்களை அங்கே விட்டு வச்சாரு, இப்போ ஏன் கூட்டிட்டு வந்திருக்காருனு தான் ஒன்னும் புரியலை” என்றான் வேலு.
“எல்லாம் குடும்ப கெளரவத்தை காப்பாத்த தான், வேறென்ன? சரி நமக்கெதுக்கு அவங்க வீட்டு கதை. விட்டு தள்ளு. மதியம் சமைக்க அந்த அம்மாவுக்கு என்ன வேணும்னு கேட்டு செய்ய சொல்லிட்டு போயிருக்கார் சித்தார்த் ஐயா. நான் போய் கேட்டுட்டு வர்றேன்” என்று வெளியே வந்த சரோஜா அங்கே கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த நேத்ராவை பார்த்து அதிர்ந்தாள்.
“அம்மா, அது வந்து” என்று திக்கி திணறிய சரோஜாவின் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் “ஐயாவுக்கு என்ன பிடிக்குமோ, அதையே செய்திடுங்க” என்று சொல்லிவிட்டு மாடிக்கு சென்றாள்.
இந்த பெண் இதுவரை பேசியதை எல்லாம் கேட்டிருப்பாளோ என்று ஒரு கணம் தயங்கி, அமைதியாக செல்வதை பார்த்தால் எதுவும் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டாள் சரோஜா.
நேத்ரநயனி படுக்கையில் விழுந்து புரண்டு அழுதுக் கொண்டிருந்தாள். இதுவரை தான் அவனுக்கு பொருத்தமானவள் இல்லை என்ற விஷயமே உறுத்திக் கொண்டிருந்தது. ஆனால் சித்தார்த் வேறொரு பெண்ணை காதலித்திருக்கிறான். கட்டாயத்தால் அவளுக்கு தாலி கட்டியவன் எப்படி தன் காதலியை மறந்து அவளுடன் வாழ தயாராகி விட்டான்?
அவளை வேலைக்கும் போக வேண்டாம் என்கிறான். ஒரு வேளை அவன் காதலி மீண்டும் வந்தால் அவள் நிலை என்னவாகும்? சும்மா இருக்கும் மனசு சாத்தானின் உலைக்களம் என்பது உண்மை தான் போலும். வேலைக்கு சென்றிருந்தால் கூட பரவாயில்லை, ஒட்டு கேட்பது என்றுமே நல்ல விஷயமாக இருப்பதில்லை. தெரியாமல் நேத்ராவின் காதுகளில் விழுந்த வார்த்தைகள் அவளின் மனதை குத்தி கிழித்து ரணமாக்கி கொண்டிருந்தன.
மதியம் சரோஜா சாப்பிட அழைத்ததற்கும் பசியில்லை என்று மறுத்துவிட்டாள். மாலை ஆனபின்பும் அவள் கீழே இறங்கி வரவே இல்லை. சித்தார்த் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கும் வந்து விட்டான்.
அவசரமாக அவன் வருவதற்குள் கிளம்பிடவேண்டும் என்று வாயிற்பக்கம் வந்த சரோஜாவை பார்த்து, “என்ன சரோக்கா, கிளம்பிட்டீங்களா?” என்றான் சித்தார்த்.
“ஆமாங்க ஐயா” என்று தலையை சொறிந்தாள்.
“நயனி கிட்ட கிளம்பறேன்னு சொல்லிட்டீங்களா?” என்றான்.
“இஇல்லைங்க ஐயா, நீங்க போனதும் உங்க அறைக்கு போனவங்க தான். இன்னும் கீழே இறங்கி வரவே இல்லை, எத்தனையோ முறை சாப்பிட கூப்பிட்டு பார்த்தேன், பசிக்கலைனு சொல்லிட்டாங்க” என்றாள்
“சரி நான் பார்த்துக்கிறேன், இனிமே அவங்க சாப்பிடலைனா எனக்கு போன் செய்யுங்க, புரியுதா?” என்றான்.
“சரிங்க ஐயா” என்று சொல்லிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினாள் சரோ. எங்கே தான் காலையில் பேசியதை அந்த பெண் கேட்டிருப்பாளோ, சித்தார்த் வந்ததும் அவனிடம் சொல்லிவிடுவாளோ என்று பயந்து போய் இருந்தாள் அவள்.
சித்தார்த் அவன் அறைக்குள் சென்று கதவை திறந்தான். அறையில் மின்விளக்கு கூட போடாமல் இருட்டாக இருந்தது. மின்விளக்கை போட்டபடி “நயனி” என்று அழைத்தான்.
கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்தவள் மெல்ல தலை நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் அழுது அழுது சிவந்து போய் இருந்தது. அந்த நிலையில் அவளை பார்த்ததும், “ஏய் நயனி, என்னாச்சு? ஏன் அழுதுட்டு இருக்கே?” என்றான் பதட்டத்துடன்.
“ஒண்ணுமில்லை” என்றபடி எழுந்து அமர்ந்தவள், “என்னை என் அப்பா வீட்டுக்கு அனுப்பிடுங்க” என்றாள்.
“ஓ, அப்பா நியாபகம் வந்துடுச்சா? நான் வேணும்னா அவரை வரச்சொல்லட்டுமா?” என்றான் பரிவுடன்.
“இல்லை வேணாம், நான் உங்களுக்கு பொருத்தமானவ இல்லை, நான் இங்கே இருந்து போயிடுறேன். நீங்க உங்களுக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து…” என்று அவள் கூறி முடிக்கும் முன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் சித்தார்த்.
அவன் அடித்த கன்னத்தை ஒரு கையால் அழுத்தி பிடித்தபடி, அதிர்ச்சியுடன் அவனையே விழி அகல பார்த்தாள்.
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின மனுஷனா இருக்க மாட்டேன், எது சொல்றதுனாலும் என்கிட்ட சொல்லாதே. நமக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு இல்ல, எங்கப்பா அவரையே வரச்சொல்றேன். எதுவானாலும் அவர்கிட்டயே பேசிக்க” என்றான் கோபமாக.
அப்போதே போனை எடுத்து அவன் தந்தைக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டான்.
“சொல்லு சித்து, இப்போ தான் அப்பா நியாபகம் வந்துச்சா? ஒரு போன் கூட பண்ண மாட்டேங்கிறே?” என்றார் மகேந்திரன்.
“உங்களுக்கு தான் உங்க மகளை பார்த்ததும் என்னோட நியாபகம் இல்லாம போச்சு” என்றான் கடுப்புடன்.
“என்னடா சித்து? திடீர்னு இப்படி எல்லாம் பேசறே?” என்றார் மகேந்திரன் பதட்டத்தோடு
“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டாடி, எப்போ இந்தியா வர்றீங்க? உங்க மருமகளுக்கு உங்க கூட பேசணுமாம்” என்றான் சமாதானம் செய்யும் குரலில்
“நீ வரச் சொன்னா அடுத்த ப்ளைட்ல வந்திட போறேன். அதுக்கென்ன? சரி சரி போனை என் மருமகள் கிட்ட கொடு” என்றார் மகேந்திரன்.
“நீங்க பேசறது எல்லாம் கேட்டுட்டா தான் இருக்கா, போன் ஸ்பீக்கரில் இருக்கு, பேசுங்க” என்று சொல்லி விட்டு உடை மாற்றி முகம் கழுவி வரச் சென்று விட்டான்.
“என்ன மருமகளே, எப்படி இருக்கே? என் மகன் உன்னை நல்லா பார்த்துக்கிறானா? இல்லைனா சொல்லும்மா, வந்து கவனிச்சுக்கிறேன் அவனை” என்றார் மகேந்திரன்.
“அஅப்படி எல்லாம் இல்லை மாமா, அவர் என்னை நல்லா தான் பார்த்துக்கிறார்” என்றாள் மெல்லிய குரலில்.
“ஆனா உங்க மருமகள தான் என்னை சரியா பார்த்துக்க மாட்டேங்கிறா” என்றபடி மீண்டும் நேத்ராவின் எதிரில் வந்து அமர்ந்தான் சித்தார்த்.
“என்னம்மா சொல்றான் அவன்?” என்றார் மகேந்திரன்.
“அஅது வந்து மாமா” என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறினாள்.
“செல்லமா வளர்ந்த பிள்ளை, நீ அவனை பார்த்துப்பேன்னு தான் கிளம்பி வந்தேன். எனக்கு சீக்கிரமா ஒரு பேரபிள்ளையை பெத்து கையில் கொடுத்திடும்மா, அது போதும்” என்றார்.
அதிர்ந்து போய் சித்தார்த்தை பார்த்தாள். அவன் குறும்புடன் புருவம் உயர்த்தினான். “என்னம்மா சத்தத்தையே காணோம். நான் எனக்காக மட்டும் கேட்கலை என் நண்பன் சிவாக்காகவும் கேட்கிறேன். உங்களுக்கு குழந்தை பிறந்தால் தான் எங்க இரண்டு பேருக்கும் நிம்மதியா இருக்கும். எங்களுக்கு அந்த பாக்கியத்தை தருவியாம்மா?” என்றார் மகேந்திரன் உணர்ச்சி பெருக்குடன்.
இப்படி பேசுபவரிடம் பிரிந்து போகிறேன் என்று எப்படி சொல்ல முடியும்? என்ற யோசனையுடன் இருந்தவளை, “சரினு சொல்லும்மா” என்றார் மகேந்திரன். தன்னையும் அறியாமல், “சரி மாமா” என்றாள்.
“ரொம்ப சந்தோஷம்மா, நான் அடுத்த வாரமே இந்தியா வரப்பார்க்கிறேன்” என்று சொல்லி போனை வைத்தார் மகேந்திரன்.
நயனியை அழுத்தமாக பார்த்தபடி, “வா சாப்பிட போகலாம்” என்றான்.
“இல்லை எனக்கு பசிக்கல” என்றவளை முறைத்தான்.
“மதியமே சாப்பிடலைனு சரோக்கா சொன்னாங்க. ஒழுங்கா சாப்பிடு. உனக்கென்ன இப்போ? சும்மா வீட்டில் இருக்கிறது தானே பிடிக்கலை? அதுக்கு நான் ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்றான்.
“என்ன அது?” என்றாள் அவள் சுரத்தே இல்லாமல்.
“அது என்னனு காலையில் சொல்றேன். அதுவரைக்கும் சஸ்பென்ஸ்” என்றான் அவன் புன்னகையுடன்.
யாருக்கு வந்த விருந்தோ, என்னவோ இருந்துவிட்டு போகட்டும் என்று நினைத்துக் கொண்டு தோள்களை குலுக்கி கொண்டாள்.
இருவரும் சாப்பிட்டு விட்டு, மீண்டும் அறைக்குள் நுழைந்தனர். முன்தினம் போலவே நேத்ரா தன் கட்டிலை நோக்கி செல்வதை பார்த்த சித்தார்த் தொண்டையை செருமிக் கொண்டு.
“நயனி” என்றான். அவன் அழைப்பில் அப்படியே நின்றாள். அவள் அருகே சென்று நெருங்கி நின்று அவள் கரத்தைப் பற்றி அழுத்தினான்.
“எங்கே போறே?” என்றான்
அவளின் படுக்கையை காட்டி, “தூங்க போறேன்” என்றாள் மெல்லிய குரலில்
“என் அப்பாகிட்ட கொடுத்த வாக்கை காப்பாத்த வேணாமா நயனி?” என்றான்
“என்ன வாக்கு?” என்றாள் குழப்பத்துடன்.
“அது தான் குழந்தை பெத்து கொடுக்க போறதா சொன்னியே, அங்கே போய் தனியா படுத்தா குழந்தை எப்படி வரும்?” என்றபடி பற்றியிருந்த அவள் கையை தன்னை நோக்கி இழுத்தான்.
எதிர்பாராத நேரத்தில் அவன் இழுத்ததால் நெருங்கி நின்றிருந்த கணவன் மீதே மோதி விழப்போனாள். அவள் கீழே விழாமல் மெல்லிடையை அழுந்தப் பற்றி தன் மேல் அவளை படரவிட்டான். அவள் தலை அவன் நெஞ்சில் புதைந்திருக்கவும், குனிந்து தன்னவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
“நயனி” என்றபடி அங்கே தன் இதழ்களை அவள் கழுத்தில் பதிக்கும் நேரம், “காதலிச்ச பொண்ணை இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டு எப்படி உங்களால என்கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்க முடியுது?” என்றாள்.
அவள் பேச்சில் துணுக்குற்றவன், சட்டென்று அவளை உதறி தள்ளி விட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டான். அவன் தள்ளிய வேகத்தில் அவன் கட்டிலின் மீதே தொப்பென விழுந்திருந்தாள். செல்லும் போது அறைந்து சாத்திய அறைக் கதவின் சத்தம் அவன் கோபத்தின் அளவை அவளுக்கு தெள்ள தெளிவாக விளக்கியிருந்தது.
(தொடரும்)
