வைகை நதிக்கரையின் தென்றல் தன் ஈரப்பதத்தை மெல்ல இழந்து, பொழுது சாயத் தொடங்கிய அந்திசாயும் நேரத்தில், ஊர் எல்லையில் இருந்த மருத மரங்களின் நிழல்கள் செம்மண் சாலைகளில் நீளத் தொடங்கியிருந்தன.
மேற்குத் திசையில் மலை முகட்டிற்குப் பின்னால் சூரியன் தன் பொற்கதிர்களைச் சுருக்கிக்கொண்டு மறையத் தயாராக, வானம் முழுவதும் செக்கச் சிவந்த வண்ணம் பூசியிருந்தது.
Advertisement
பகல் பொழுதின் பரபரப்பை முடித்துக்கொண்டு கூடுகளை நோக்கித் திரும்பும் பறவைகளின் கீச்சொலி காற்றில் மிதந்து வர, அந்த அமைதியான கிராமத்து எல்லையைத் தாண்டிப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பறந்துகொண்டிருந்தது மணமக்கள் பயணிக்கும் வாடகைக் கார்.
காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த டிரைவர் மாடசாமி, கண்ணாடியின் வழியே பின்னால் அமர்ந்திருந்த மணமக்களை அவ்வப்போது பரிதாபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
தாலி கட்டிய ஈரம் கூடக் காயாத புது மண தம்பதி, பெட்டி படுக்கை கூட இல்லாமல், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஊரை விட்டுப் போவதைப் பார்த்து அவருக்கு விஷயம் ஓரளவுக்குப் புரிந்து போயிருந்தது.
Advertisement
மெதுவாக வைரக்கண்ணுவிடம், “தம்பி… கோச்சுக்கலன்னா ஒண்ணு கேட்கலாமா? என்றார்.
Advertisement
இதுக்கு மேல என்ன இருக்கு கோச்சிக்கமாட்டேன் கேளுங்கண்ணா.
அது வந்துப்பா,எந்த ஊருக்கு
வண்டியை விடணும்? மதுரை டவுனுக்குப் போகணுமா, இல்ல திண்டுக்கல் பக்கம் போகணுமா?” என்று மாடசாமி தயங்கியபடியே கேட்டார்.
ஜன்னல் வழியே வெளியே ஓடிக்கொண்டிருந்த பனைமரங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன்,
பெருமூச்சு விட்டான்.
Advertisement
பின்பு, “மதுரை டவுனுக்குப் போங்கண்ணே. பெரியார் பஸ் ஸ்டாண்டு பக்கத்துல எங்கயாவது சின்னதா வாடகைக்கு வீடு கிடைக்குமான்னு பார்க்கணும்,” என்றான்.
அவர்களின் மண நிலைமை மாற்ற மாடசாமி அண்ணன் வண்டியின் முகப்பில் பொருத்தப்பட்டிருந்த வானொலிப் பெட்டியிலிருந்து, இசைஞானியின் உயிரை ஊடுருவும் வயலின் இசையோடு, மெல்லிய காதல் கீதம் ஒன்றை துவங்கி வைத்தார்.
“பூவுக்குள்ளே வாசம் இருந்தும்… காத்துக்கிட்ட பேச முடியல!
கண்ணுக்குள்ளே பாசம் இருந்தும்… காண வழி ஏதும் தெரியல!
விதி போட்ட கோலத்திலே… விழி ரெண்டும் இருட்டாச்சே!
வழித்துணைக்கு வந்தவனும்… வாய் பேச மறந்தாச்சே!
தாலி கட்டும் நேரத்திலே… தடம் மாறும் வாழ்க்கையடா!
தாயைப் பிரிஞ்சு தவிக்குதடா… தர்மம் கொண்ட நெஞ்சமடா!”
என்று வரிகளை கேட்டதும்,
பின் இருக்கையின் ஓரத்தில் கதவை ஒட்டி அமர்ந்திருந்த தங்கமயிலு, முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு
விம்மி விம்மி அழத்
தொடங்கினாள்.
வைரக்கண்ணுவோ திரும்பித்
விம்மிகொண்டிருக்கும் தன் மனைவியைப் பார்த்தான். காலை உணவிற்கு பிறகு எந்த ஆகாரமும் இல்லாமல் ஒரு வாய் தண்ணீர் கூடக் குடிக்காமல் அழுது கொண்டிருந்ததால், அவளது உதடுகள் வறண்டு போயிருந்ததை கவனித்தான்.
பின்பு அவளது தோள்கள் குலுங்குவதைப் பார்த்ததும், அவனது நெஞ்சுக்குள் இருந்த இறுக்கம் மெல்லக் கரைந்து,
அதன் பிறகு ஒரு ஆழமான இரக்கமும், அதைத் தாண்டிய கருணை கொண்ட காதலும் துளிர்க்கத் தொடங்கியது என்னமோ உண்மைதான் ஏனென்றால் அவனோட குணம் அப்படி.
தீர்கமாக யோசித்தவன் பிறகு
சற்று நகர்ந்து அவளது அருகில் அமர்ந்தான். அவளது நடுங்கும் கையைத் தன் உள்ளங்கையால் மென்மையாகப் பற்றினான்.
பிறகு “ஏங்க… எதுக்கு இப்படி அழுதுக்கிட்டே இருக்கீங்க? அழாதீங்க…”
அந்த மென்மையான குரலைக் கேட்டதும் தங்கமயிலு அதிர்ச்சியோடு நிமிர்ந்தாள்.
“எ… என்னை மன்னிச்சுடுங்க… நான் ஒரு பாவிங்க…” என்று அவள் மறுபடியும் விம்ப, திடீரென மூச்சுத் திணறுவது போலத் தவித்து, “அம்மா…” என்ற மெல்லிய முனகலோடு மயங்கிச் சரிந்து, கணவனின் மடி என்றரியாமல் அவனது மடியில் சரிந்தாள்!
அடுத்த கணம் அவளின் கண்ணங்களை பற்றிக்கொண்டு “மயிலு! என்ன ஆச்சு? கண்ணைத் திறங்க!” என்று பதறிப்போனான்.
ஏதும் பேசாமல் இருந்தவளின் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் தன் விரல்களால் மிக மென்மையாகத் துடைத்துவிட்டான். இவ்வளவு நேரமாகியும் கண் விழிக்காததால் பயந்தவன்,
பத்து நிமிடங்களில் கார் மதுரையில் உள்ள மிகப்பெரிய தனியார் மருத்துவமனை வாசலில் நின்றது. மயங்கிக் கிடந்த மனைவியைத் தன் கைகளில் ஒரு பூவைப் போல மென்மையாக ஏந்திக்கொண்டு உள்ளே ஓடினான்.
அங்கே பரிசோதித்த டாக்டர், “பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்ல தம்பி. காலையில இருந்து எதுவும் சாப்பிடாததாலயும், லோ-பிரஷர் ஆகி மயங்கிட்டாங்க. ஒரு குளுக்கோஸ் பாட்டில் ஏத்திட்டு, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகிடும்,” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
படுக்கையில் கண்களை மூடிப் படுத்திருந்த தங்கமயிலுவின் அருகிலேயே ஒரு ஸ்டூலைப் போட்டு அமர்ந்தவன், அவளது கையில் ஏறிக்கொண்டிருந்த குளுக்கோஸ் சொட்டுக்களைப் பார்த்தபடியே, அவளது கையைத் தன் கையால் ஆதரவாகப் பிடித்துக்கொண்டான்.
அரை மணி நேரம் கழித்து, தங்கமயிலுவின் விரல்கள் லேசாக அசைந்தன. மயக்கம் தெளிந்து மெல்லத் தலையை அசைத்தவள், தன் வலது கையை யாரோ இதமாகப் பிடித்திருப்பதை உணர்ந்து பதறினாள்.
“அம்மா… அண்ணி… நான் எங்க இருக்கேன்?” என்று அவள் பயந்த குரலில் கேட்க,
அவளவனோ அவளது கையை மென்மையாக அழுத்திப் பிடித்தான். “பயப்படாதீங்க மயிலு… நான் தான் இருக்கேன். மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க, அதான் ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கேன்.”
தன் கணவனின் குரலைக் கேட்டதும், தங்கமயிலுவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது. தன் கையை உருவிக்கொள்ள முயன்றவளிடம், “அசையாதீங்க, கையில ஊசி போட்டிருக்கு,” என்று தடுத்தான்.
அவள் மனதில் வைத்திருந்த மிக பெரிய கேள்வியை இப்போது கேட்டுவிட்டாள். ஏங்க… என் மேல உங்களுக்குக் கோபமே வரலையா? என் குடும்பம் உங்களை இவ்வளவு பெரிய துரோகம் பன்னிருக்காங்க… என்னை அப்படியே நடுத்தெருவுல விட்டுட்டுப் போக வேண்டியதுதானே?
எதுக்குங்க என்னை ஆஸ்பத்திரிக்கு எல்லாம் தூக்கிட்டு வந்து கஷ்டப்படுறீங்க?” என்றவள் கதறினாள்.
இதை கேட்ட வைரக்கண்ணு தன் வேட்டி நுனியால் அவளது கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டான். அவனது தொடுகையில் இருந்த அன்பையும், மென்மையையும் உணர்ந்த தங்கமயிலு ஒரு நொடி சிலையாகிப் போனாள்.
இங்க பாருங்க மயிலு… உங்க
அப்பா பண்ணுன தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? நீங்களும் என்னை மாதிரி ஒரு பலிகடா
தானே! எனக்குப் பார்வை இருக்கு, நான் எங்க போனாலும் உழைச்சுப் பொழைச்சுக்குவேன்.
ஆனா, உங்களுக்கு இந்த உலகமே இருட்டா இருக்கு. தாலி கட்டுன நானும் உங்களைக் கைவிட்டா, நீங்க யார்கிட்ட போய் நிப்பீங்க? இனிமே நீங்க அழக் கூடாது. உங்களுக்குக் கண்ணுக்கு கண்ணா நான் இருப்பேன்!”
வைரக்கண்ணுவின் அந்த வார்த்தைகளைக் கேட்டதும், தங்கமயிலுவின் நெஞ்சுக்குள் அதுவரை இருந்த பயம் நீங்கி, தன் கணவன் மீது ஒரு தெய்வீகமான மரியாதையும் அன்பும் பிறந்தது!
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ஆனால் அங்கே… ஊருக்குள்
இருந்த அந்தத் திருமண மண்டபத்தில், பெரும் புயலே வீசிக்கொண்டிருந்தது!
தன் மூத்த மகன் “சொல்லி சென்ற வார்த்தையின் அதிர்ச்சியில், மண்டபத்து நடுஹாலிலேயே தலையில் அடித்துக்கொண்டு தரையில் விழுந்து கதறினார் வைரக்கண்ணுவின் அம்மா மீனாட்சி.
அய்யோ… என் ராசா போயிட்டானே! இத்தன வருஷமா இந்தக் குடும்பத்துக்காக மாடா உழைச்சு, ஓடா தேஞ்ச என் பையன், கடைசியில அனாதை மாதிரி ஊரை விட்டே போயிட்டானே!” என்றவர் மாரில் அடித்துக்கொண்டு அழுத அழுகை அங்கிருக்கும் அணைத்து தாய் உள்ளங்களையும் ஒருநிமிடம் கதிகலங்க வைத்தது.
தங்கச்சிங்க அல்லியும், பூங்கொடியும், செவ்வந்தியும் அம்மா பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, “அம்மா… அண்ணனைக் கூப்பிடுங்கம்மா… அண்ணன் இல்லாம நாங்க இருக்க மாட்டோம்மா!” என்றார்கள்.
இதனை கண்டு மண்டபத்தில் நின்றிருந்த சொந்தக்காரர்களும், அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களும் என்ன நடந்தது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.
ஏய்! என்னப்பா நடக்குது இங்க? கல்யாணம் முடிஞ்ச கையோட மாப்பிள்ளை எதுக்குப் பொண்ணை இழுத்துக்கிட்டுப் போறாரு? சம்பந்தி அம்மா எதுக்கு இப்படித் தரையில விழுந்து புரண்டு அழுறாங்க?” என்று பார்வதியின் அக்கா பஞ்சவர்ணம் கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே வந்தார்.
அது ஒன்னுமில்லக்கா என்று, அப்போதுதான், மண்டபத்தின் ஓரத்தில் நின்றிருந்த பார்வதியும், பெரியசாமியும் பதறிப்போய் அருகில் வந்து,
“சம்பந்தி, அழாதீங்க… இப்போ எதுக்கு நாலு பேர் முன்னாடி இப்படித் தரையில உக்காந்து அழுதுக்கிட்டு இருக்கீங்க? மாப்பிள்ளை கோபம் குறைஞ்சதும் அவரே திரும்பி வந்துடுவாரு, எழுந்திருங்க…” என்று பார்வதி ஆறுதல் சொல்லக் கையை நீட்டினார்.
அவ்வளவுதான்! அதுவரைக்கும் தன் நெஞ்சுக்குள் அடக்கி வைத்திருந்த அத்தனை ஆத்திரமும் மீனாட்சிக்குப் பீறிட்டுக் கொண்டு வந்தது! ஆவேசமாக பார்வதியின் கையைத் தட்டிவிட்டவர்!
“கையை எடுடி! யாரைச் சம்பந்தின்னு கூப்பிடுற? உன்னாலதான்டி என் புள்ள என்னை விட்டுட்டுப் போனான்!” என்று மீனாட்சி ஆவேசமாகக் கத்த, மண்டபமே ஒரு நொடி நிசப்தமானது!
பெத்த தாய்க்குக் கூடத் தெரியாம, என் தங்கமான புள்ளையை ஏமாத்தி, உன் கண் தெரியாத பொண்ணைத் என் புள்ள தலையில கட்டிட்டியே! உனக்கு மனசாட்சியே இல்லையாடி? பொம்பளையா நீ? ஒரு தாயா இருந்துக்கிட்டு இன்னொரு தாயோட வயித்துல இப்படி நெருப்பை அள்ளிக் கொட்டிட்டியேடி!” என்று கத்தினார்!
“என்னது? பொண்ணுக்குக் கண்ணு தெரியாதா?” என்று கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியோடு வாயில் கையை வைத்தார்கள்.
மதுரை மண்ணுக்கே உரிய அந்தச் சூடும், ரோஷமும் அங்கே பற்றிக்கொண்டது! நாலு பேர் முன்னாடி தன் மகளைப் பார்த்து ‘கண் தெரியாத பொண்ணு’ன்னு சபையில் கத்தியதைக் கேட்டதும், பார்வதிக்கும் கோபம் தலைக்கேறியது!
ஏய்! என்னடி சத்தம் போடுற? நாங்க என்ன உங்க வீட்டு வாசல்ல வந்து கால்ல விழுந்து பொண்ணைக் கட்டிக்கோங்கன்னு கெஞ்சினோமா? என் பொண்ணுக்கு என்ன குறை? மகாலட்சுமி மாதிரி இருக்கா! உன் புள்ளைக்கே அவ ராணி மாதிரி வாழ்வா! சும்மா நாலு பேர் முன்னாடி எங்க குடும்ப மானத்தை வாங்காத!” என்று பார்வதியும் பதிலுக்கு எகிறினாள்!
“அடிப்பாவி! ஏமாத்துனதும் இல்லாம, எவ்வளவு திமிராப் பேசுற பாரு! அடியே பஞ்சவர்ணம்… உன் தங்கச்சி பேசுற பேச்சைக் கேட்டியா? ஊர் உலகத்துல இருக்குற அத்தனை பேரையும் ஏமாத்திட்டு, இப்போ எங்க குடும்ப மானத்தை வாங்குறாளே!” என்று மீனாட்சி பாய, பார்வதியின் நாத்தனார் மரகதம் குறுக்கே புகுந்தாள்.
இந்தாம்மா சம்பந்தி! வாயை அளந்து பேசு! நாங்க ஒண்ணும் இல்லாத குடும்பம் இல்ல. ஊருக்குள்ள பெரியசாமி அண்ணன் குடும்பம்னா என்ன மரியாதைன்னு எல்லாருக்கும் தெரியும்.
தாலி கட்டுன அப்புறம் உன் பையன் பொண்ணை இழுத்துக்கிட்டுப் போனான்னா, அது உங்க வளர்ப்பு சரியில்ல!” என்று மரகதம் வார்த்தையை விட, வைரக்கண்ணுவின் தம்பிகள் முத்துவும், மாணிக்கமும் ஆவேசமாக முன்னால் பாய்ந்தார்கள்!
“இந்தம்மா பெரியம்மா! யாரைப் பார்த்து வளர்ப்பு சரியில்லன்னு சொல்ற? எங்க அம்மாவையும் அண்ணனையும் எதிர்த்துப் பேசுற அளவுக்கு உங்களுக்குத் தைரியம் வந்துருச்சா?” என்று மாணிக்கம் கர்ஜிக்க,
பெரியசாமியின் மகன் கார்த்திக்கும், அவரது பங்காளிகள் நாலு பேரும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு முன்னால் வந்தார்கள்!
ஏலே தம்பி! வார்த்தையை அளந்து பேசு! பொம்பளைங்க சண்டையில நீங்க எதுக்குடா நடுவுல வர்றீங்க? இன்னைக்கு ஒரு கை பார்த்துடலாம் வாங்கடா!” என்று பெரியசாமியின் பங்காளிகள் எகிற, முத்து நாற்காலியைத் தூக்கப் போனான்!
மண்டபமே ஒரு போர்க்களமாக மாறியது! நாற்காலிகள் உருளும் சத்தமும், பெண்களின் ஆவேசக் கூச்சலும் சேர்ந்து அந்த மண்டபத்தையே ரணகளமாக்கியது. சொந்தக்காரர்கள் இரண்டு பக்கமும் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சண்டை போடத் தொடங்கினார்கள்!
அந்தநேரம் பார்த்து “நிறுத்துங்கடா! என்றது ஒரு குரல்!”