மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளிலும், என்.எஸ்.எஸ் சேவைகளிலும் அவள் வென்று வந்த வெள்ளிக் கோப்பைகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் பெரியசாமியின் வீட்டு வரவேற்பறையை அலங்கரித்தன.
ஒருமுறை மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று திரும்பியபோது, பள்ளியில் உள்ள முதலிடம் பெரும் பெயர் பலகையில் “மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்று நமது பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவி தங்கமயிலு” என்று தலைமை ஆசிரியர் தன் கைப்பட எழுதியபோது, மொத்தப் பள்ளியும் கைதட்டி ஆரவாரம் செய்தது!
அன்று மாலை வீட்டுக்கு வந்த மயிலுவின் தலையைத் தடவிக்கொடுத்து, ஆனந்தக் கண்ணீரோடு பெரியசாமி சொன்ன வார்த்தைகள் இன்றும் அவளது காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தன.
என் பொண்ணு சாதாரணப் பொண்ணு இல்ல பார்வதி… நாளைக்குக் காக்கிச் சட்டை போட்டுட்டு, இடுப்புல துப்பாக்கியோட கம்பீரமா வந்து நிப்பா பாரு! அப்போ இந்த அலங்காநல்லூர் மண்ணே என் பொண்ணுக்குச் சல்யூட் அடிக்கும்!”
Advertisement
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என எல்லாவற்றிலும் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று, கல்லூரிப் படிப்பையும் முடித்து, ஐ.பி.எஸ் தேர்வுக்கான (UPSC) பயிற்சியில் தீவிரமாக இறங்கினாள் தங்கமயிலு. அவளது கனவு கைகூடும் தருணம் மிக அருகில் வந்துவிட்டது என்று எல்லோரும் நினைத்திருந்த வேளையில்தான்…
கனகசுந்தரியின் வீட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்த தங்கமயிலு, தன் நினைவுகளிலிருந்து நிகழ்காலத்திற்குத் திரும்பினாள்.
கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தன் கணவன் வைரக்கண்ணுவையும், தோழி கனகசுந்தரியையும் நோக்கித் திரும்பினாள்.
Advertisement
“கனகா… என் அப்பா ஆசைப்பட்ட மாதிரி நான் காக்கிச் சட்டை போட வேண்டிய நேரம் நெருங்கிடுச்சுடி… ஆனா, எங்க ஊர்ல தலைமுறை தலைமுறையா இருந்த ஒரு பகை, என் கண்ணுல இருந்த வெளிச்சத்தையே பறிச்சுட்டுப் போயிடுச்சுடி!” என்று தங்கமயிலு உடைந்து அழுதபோது, அறையில் இருந்த மூன்று பேரின் கண்களும் கலங்கின.
Advertisement
அன்னலட்சுமி ஓடி வந்து மயிலுவின் தலையைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு, “அழாதம்மா… அழாத தங்கம். கடவுள் உனக்கு நல்ல வழியைக் காட்டுவாரு, இப்போ எதுவும் பேசி மனசைப் போட்டுக் குழப்பிக்காதம்மா,” என்று ஆறுதல் சொன்னார்.
கனகசுந்தரியும் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, சூழலைச் சற்று மாற்றுவதற்காக மயிலுவின் கைகளைத் தட்டிச் சிரித்தாள்.
“ஏய் மயிலு! ஞாபகம் இருக்காடி… நாம பத்தாம் கிளாஸ் படிக்கும்போது, அந்த கடைசி பெஞ்ச்ல உக்காந்துக்கிட்டு, கணக்கு வாத்தியார் கரும்பலகையில கணக்குப் போடும்போது, பின்னாடி இருந்து புளியங்கொட்டையை வச்சு விளையாடுவோமே!
Advertisement
ஒருநாள் வாத்தியார் கையில மாட்டிக்கிட்டு, ரெண்டு பேரும் மைதானத்துல வெயில்ல நின்னோமே!” என்று கனகசுந்தரி பழைய குறும்புகளை நினைவுபடுத்தினாள்.
அதைக் கேட்டதும், காலையிலிருந்து கண்ணீரும் கவலையுமாக இருந்த தங்கமயிலுவின் உதடுகளில், முதன்முறையாக ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. “அடியேய் கனகா… அப்போ கூட நீ என்னை மாட்டி விட்டுட்டுத் தப்பிச்சுட்டடி!” என்று மயிலு மெல்லிய குரலில் சிரித்தாள்.
தூரத்தில் நின்று இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வைரக்கண்ணுவின் மனதிற்குள் ஒரு இனம்புரியாத நிம்மதி பரவியது.
காலையிலிருந்து மரண வேதனையில் துடித்துக்கொண்டிருந்த தன் மனைவியின் முகத்தில், அந்தச் சின்னச் சிரிப்பைப் பார்த்த நொடி, அவனது நெஞ்சில் இருந்த பாரம் பாதி குறைந்தது போல இருந்தது.
‘இவள் சிரிக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாள்! இந்தச் சிரிப்புக்காகவே நான் என் வாழ்க்கையை அர்ப்பணிக்கலாம்!’ என்று அவன் மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டான்.
இரவு மணி எட்டைத் தாண்டியிருந்தது. பெரியார் நகர் தெருக்களில் இரவு நேரத்து அமைதி மெல்லக் குடியேறத் தொடங்கியிருந்தது. அன்னலட்சுமி சமையலறையில் சுடச்சுடச் சப்பாத்தியும், உருளைக்கிழங்கு மசாலாவும் தயார் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, கனகசுந்தரியின் வீட்டு வாசலில், “வண்டியின் ஹாரன் சத்தம் பாம்… பாம் …” என்று ஒலித்தது!
“யாரு இந்த நேரத்துல?” என்று யோசித்தபடியே வைரக்கண்ணு வாசல் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தான்.
அங்கே… வாசலில் நின்றிருந்த புத்தம் புதிய பைக்கின் மீது சாய்ந்துகொண்டு, கண்களில் கண்ணீரும், முகத்தில் பதட்டமும், அதே சமயம் தன் நண்பனைக் கண்டுபிடித்துவிட்ட நிம்மதியுமாக நின்றிருந்தான் சுந்தர்!
டேய் மாப்பிள்ளை!” என்று கத்திக்கொண்டே ஓடி வந்து வைரக்கண்ணுவை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டான் சுந்தர்!
“சுந்தர்! நீயா… நீ எப்படிடா இங்க வந்த? நான் இங்க இருக்கேன்னு உனக்கு எப்படிடா தெரியும்?” வைரக்கண்ணு அதிர்ச்சியோடும், ஆச்சரியத்தோடும் நண்பனைப் பார்த்தான்.
“பின்ன என்னடா நினைச்ச? நீ என்னை விட்டுட்டு எங்கேயோ ஓடிப் போயிடுவ, நான் சும்மா உட்கார்ந்திருப்பேன்னு நினைச்சியா?
மண்டபத்துல இருந்து நீ கிளம்புன வாடகைக் கார் நம்பரை வச்சு, டிரைவர் மாடசாமி அண்ணன் போன் நம்பரைப் பிடிச்சு, அவர்ட்ட விசாரிச்சுத்தான்டா இங்க வந்து சேர்ந்தேன்!” என்று மூச்சு வாங்கப் பேசினான் சுந்தர்.
உள்ளே இருந்து சத்தம் கேட்டு வெளியே வந்த கனகசுந்தரியும், தங்கமயிலுவும் சுந்தரின் குரலைக் கேட்டார்கள்.
சுந்தர் அண்ணா வந்துட்டாங்களா?” என்று மயிலு ஆச்சரியத்தோடு கேட்க, சுந்தர் உள்ளே வந்து மயிலுவையும், கனகசுந்தரியையும் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான்.
“வாங்க தம்பி, உள்ள வாங்க… நீங்கதான் வைரக்கண்ணு தம்பியோட நண்பரா? வாசலில் நிக்காம உள்ள வந்து பேசலாமே,” என்று அன்னலட்சுமி சுந்தரை அன்போடு வரவேற்றார்.
கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்த சுந்தர், தன் நண்பனின் கைகளைப் பிடித்துக்கொண்டு கலங்கிய குரலில் பேசினான்:
“டேய் வைரக்கண்ணு… மண்டபத்துல நடந்த எல்லா விஷயமும் எனக்குத் தெரியும்டா. பெரியசாமி ஐயாவும், உங்க அப்பாவும் சேர்ந்து பண்ணின காரியத்தைக் கேட்டதும் எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்துச்சு.
ஆனா… உங்க அப்பா எதுக்காக அந்த முடிவை எடுத்தாருங்கிற உண்மையைக் கேட்டப்போ, என் நெஞ்சே உடைஞ்சு போச்சுடா!”
வைரக்கண்ணு புரியாமல் சுந்தரைப் பார்த்தான். “என்னடா சொல்ற? எங்க அப்பா எதுக்காக எந்த முடிவை எடுத்தாரு?”
“இப்போதைக்கு அதைப் பத்திப் பேச வேண்டாம்டா, முதல்ல எனக்கு வயித்து பசிக்குதுடா சாப்பாடு இல்லையா?
ஐயோ நான் ஒருத்தி வாங்க தம்பி நீங்க முதல்ல சாப்பிடுங்க அப்புறம் எல்லாத்தையும் நிதானமாப் பேசுங்க,” என்று அவனை டைனிங் ஹாலுக்க அழைத்து சென்றார்.
பிறகு அன்னலட்சுமி பரிமாறிய இரவு உணவை வைரக்கண்ணுவும், சுந்தரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்து, எல்லோரும் கூடத்தில் அமர்ந்தபோது, இரவு மணி பத்தை நெருங்கியிருந்தது.
கனகசுந்தரி, தங்கமயிலுவின் அருகில் அமர்ந்து அவளது கைகளைப் பற்றிக்கொண்டாள். சுந்தரும் வைரக்கண்ணுவும் எதிரே இருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள்.
மயிலு… இப்போ இங்க இருக்குற எல்லாருமே நம்ம உயிருக்கு உயிரானவங்கதான். உன் புருஷன் வைரக்கண்ணு அண்ணா, அவரோட உயிர் நண்பன் சுந்தர் அண்ணா, அப்புறம் நானும் எங்க அம்மாவும். இனிமே நீ எதையும் மனசுக்குள்ளயே பூட்டி வச்சு அழக் கூடாதுடி.
அலங்காநல்லூர்ல அப்படி என்னதான் நடந்துச்சு? உன் பார்வை பறிபோனதுக்குப் பின்னால இருக்குற காரணம் தான் என்ன? சொல்லு மயிலு…” என்று கேட்டாள்.
வைரக்கண்ணுவும் தன் மனைவியைப் பார்த்தான். “ஆமா மயிலு… உங்க வாழ்க்கையில என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கிற உரிமை எனக்கும் இருக்குல்ல? சொல்லுங்க… நான் கேட்குறேன்,” என்றான் அன்போடு.
தன் கணவனின் அந்த ஆதரவான குரலும், தோழியின் பாசமும் தங்கமயிலுவுக்குப் பெரும் தைரியத்தைக் கொடுத்தது. தன் நெஞ்சுக்குள் பல மாதங்களாக அழுத்திக்கொண்டிருந்த அந்த ரணத்தை, கண்ணீரோடு உடைக்கத் தொடங்கினாள் தங்கமயிலு!
“கனகா… எங்க ஊர் அலங்காநல்லூர்ல வருஷா வருஷம் நடக்குற ஜல்லிக்கட்டு திருவிழா எவ்வளவு பிரபலம்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.
ஆனா, அந்தத் திருவிழாவுக்குப் பின்னால, எங்க குடும்பத்துக்கும், ஊர்ல பெரிய பண்ணையாரா இருக்குற கருப்பையா தேவர் குடும்பத்துக்கும் இடையில முப்பது வருஷமா ஒரு பகை புகைஞ்சுக்கிட்டு இருந்துச்சு…”
அங்கு இருந்த அனைவரும் மூச்சு விடாமல் தங்கமயிலுவின் வார்த்தைகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள்!
“எங்க அப்பா மிலிட்டரியில இருந்து ஊருக்குத் திரும்பி வந்தப்போ, ஊர் பொது இடத்தை அந்தப் பண்ணையார் குடும்பம் ஆக்கிரமிச்சு வச்சிருந்ததை எதிர்த்துக் கேள்வி கேட்டாரு. அதுல ஆரம்பிச்ச பகை, போன வருஷம் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவுல உச்சத்துக்குப் போச்சு.
அந்தப் பகையில அவங்க என் அப்பாவைப் பழிவாங்க நினைச்சாங்க… ஆனா, அவங்க குறி வச்சது என் அப்பா மேல இல்ல, ஐ.பி.எஸ் ஆகணும்னு கனவு கண்டுக்கிட்டு இருந்த என் வாழ்க்கை மேல!” என்று தங்கமயிலு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழாவில் நடந்த அந்தக் கொடூரச் சதி என்ன? தங்கமயிலுவின் பார்வை பறிபோன அந்த இரவின் மர்மம் எது? –