மாலை நேரம்…பூங்காவின் ஒரு ஓரத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள் பிருந்தா. அவளுடைய பார்வை அடிக்கடி நுழைவாயிலை நோக்கித் திரும்பியது.
கைக்கடிகாரத்தையும் அவ்வப்போது பார்த்தாள். நேரம் மட்டும் கடந்து கொண்டிருந்தது.
‘பூபதி இன்னும் வரலையே… என்ன ஆச்சு?கடைசியாக பேசும் போது கூட ஏதோ வேலை என சொன்னானே’ என்றெல்லாம் யோசித்தாள்.
Advertisement
பூபதியைப் பார்க்க வேண்டும் என்ற தவிப்பு அவளுக்குள் அதிகரித்தது. காலையிலிருந்து அவனுக்காக காத்திருந்து ஏமாற்றம் மட்டுமே அவளுக்கு மிஞ்சியது.
மீண்டும் ஒருமுறை கைப்பேசியை எடுத்தாள். அவனுடைய எண்ணை அழுத்தினாள்.
மறுபுறம்…
Advertisement
சங்கீதா “என் மேல உனக்கு என்ன மேன் அவ்ளோ அக்கறை?”என பூபதியைப் பார்த்துக் கேட்டாள்.
Advertisement
பூபதிக்கு குடிக்காமலே போதை ஏறி தலை சுற்றுவது போல இருந்தது. கண்ணைக் கூட சிமிட்டாமல் அவளையே பார்த்திருந்தான்.சிறிது நேரத்திற்கு முன்பு தன் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறியோடு மணவரையில் அமர்ந்திருந்த பெண் இவள் இல்லையே எனவும்,இந்த இக்கட்டான நிலையை எப்படிக் கடந்து வருவது?எனவும் யோசித்தான்.ஒரு நிமிடத்தில் மூன்று பேரின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கி விட்டோமே என குழம்பினான்.
“என்ன மேன்… நான் பேசிட்டு இருக்கேன். நீ எங்கேயோ பார்த்துட்டு இருக்க?” – சங்கீதா
“ஒண்ணுமில்லை. சொல்லு…”- பூபதி
Advertisement
“நான் சொல்றதை நீ கவனிக்கவே இல்லை. இப்படித்தான் எப்பவும் இருப்பியா? இல்ல கல்யாணம் ஆன அதிர்ச்சில இப்படி மாறிட்டையா?”
அவளையே பார்த்தவன், ஒரு பெருமூச்சு விட்டான்.
அந்த நேரத்தில் கைப்பேசி ஒலித்தது.
திரையில் தெரிந்த “லவ்பக்” என்ற பெயரைப் பார்த்ததும் அவனுடைய முகம் மாறியது.அதை எடுத்துப் பேச ஒரு நொடி தயங்கினான்.
“யாரு போன் பண்றாங்க? எடு மேன்…” என்று ஆர்வமாக ஃபோனையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள் சங்கீதா.
அவளுக்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் அழைப்பை ஏற்றான்.
“ஹலோ…”
“பூபதி… எங்கே இருக்க? நான் உனக்காக எவ்ளோ நேரம் காத்திட்டு இருக்கே.”என்றாள் பிருந்தா.
அவளுடைய குரலில் இருந்த எதிர்பார்ப்பு அவனுக்குப் புரிந்தது.
“பிருந்தா…”என உற்சாகமே இல்லாமல் அழைத்தான்.
“என்னாச்சு பூபதி?நீ எப்போ வருவே? நான் இன்னமும் பார்க்லதான் இருக்கே.”
பூபதி கண்களை மூடி ஒரு நொடி அமைதியாக இருந்தான்.பின்”பிருந்தா… இப்போ என்னால வர முடியாது.” என்றான்
மறுபுறம் சில நொடிகள் மௌனம்.
“ஏன் பூபதி? ஏதாவது வேலையா?”
“ஆமா… கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. அப்புறம் பேசுறேன்.”
“நான் உனக்காக காத்திருக்கேன் பூபதி…”ஏனோ பிருந்தா இன்று மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளைக் கூற அது, அவனுடைய மனதை ஏதோ செய்தது.
“பிருந்தா… ப்ளீஸ். இப்போ போனை வைச்சிட்டு வீட்டுக்கு போ.எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்” என அவளது பதிலுக்கு காத்திராமல்
அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
அவன் ஃபோனை வைத்த பின்பும் கூட பூங்காவில் கைப்பேசியையே பார்த்துக்கொண்டிருந்தாள் பிருந்தா. அவளுடைய முகத்தில் இருந்த புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.
மறுபுறம் சங்கீதா அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“யாரு மேன் ஃபோன்ல? உன் லவ்ரா?அது என்ன லவ்பக்? “- சங்கீதா
பூபதி அவளை முறைத்தான்.
“உனக்கு எதுக்கு அந்த விவரம்?”
“அடடா! கேள்வி கேட்டா உடனே கோபம் வருதே! சரி சரி விடு. ஆனா ஒண்ணு மட்டும் புரியுது. உன் வாழ்க்கைல இப்போ ஒரு பெரிய பிரச்சனை இருக்கு!”
அதற்குமேல் அவளுடைய பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் எழுந்து சென்றான் பூபதி.
அவனைப் பார்த்துக்கொண்டிருந்த சங்கீதா மெதுவாக முணுமுணுத்தாள்.
“ஐயோ கடவுளே… ஐஏஎஸ் ஆகணும்னு ஆசைப்பட்ட எனக்கு, ஏன் இப்படி ஒரு வாழ்க்கையே கொடுத்தே? இனி நான் எப்படி என் சர்மா முகத்துல முழிப்பேன்!”
அப்போது எழுந்து வெளியே சென்று கொண்டிருந்த பூபதி ஏதோ நினைவு வந்தவனாக மீண்டும் திரும்பி வந்தான்.
“என்ன சொன்ன?”
சங்கீதா திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
“நானா? ஒண்ணுமே சொல்லலையே!”
“இல்லை… ஏதோ சொன்னியே?”
“அது என் சொந்தப் பிரச்சனை மேன். அதுல நீ தலையிட வேண்டாம்!”
அவளுடைய பதிலைக் கேட்டு அவன் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே
“உன்னோட பேசுறதே எனக்கு பெரிய தலவலியா இருக்கு.”என்றான்.
“ஒரே சாரிடான் தலைவலி நீக்கிவிடும்” என அவள் பாட…
அவளை முறைத்தவன், அங்கிருந்த நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான்.
“சரி… உனக்கு என்ன பிரச்சனை?இப்ப உனக்கு என்கிட்ட இருந்து என்ன வேணும்”
“எனக்கா? உங்கிட்ட இருந்து எனக்கு என்ன வேணும். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. பிரச்சனையே நீதான்!”
“நானா?”
“ஆமாம்! காலையிலிருந்து எனக்கு என்ன நடக்குதுன்னே புரியல. கல்யாணம் பண்ணிட்டு என்னை இங்கே கூட்டிட்டு வந்துட்டே. இப்போ பார்த்தா உன் முகம் முழுக்க ஏதோ சோகக் காவியம் ஓடுது. உன் ரூம்ல ஒரு பொண்ணோட போட்டோ வேற இருக்கு. இப்போ போன்ல யாரோ லவ்பக்!” என அவள் ஒவ்வொன்றாக விரல் விட்டு எண்ணிக்கொண்டே பேசினாள்.
“இதெல்லாம் என்னன்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“அந்தப் போட்டோல இருக்கிறது யாருன்னு தெரியுமா உனக்கு?”
“தெரியாது. ஆனா அவங்க உனக்கு ரொம்ப முக்கியமானவங்கன்னு மட்டும் தெரியும்.”- சங்கீதா
“அவங்க பேரு பிருந்தா.”
“ஓஹோ… அப்போ லவ்பக் பிருந்தாவா?”
பூபதி ஒரு அதிருப்தியுடன் அவளை பார்த்தான்
“சரி சரி… பெயரைச் சொன்னதும் கோபம் வருது. நான் அப்படி என்ன தப்பா கேட்டுடே?”
“அவள் என் வாழ்க்கையில முக்கியமானவள்.”
அவன் சொன்னதும் சங்கீதாவின் முகத்தில் இருந்த குறும்புப் புன்னகை சற்றே மறைந்தது.
“அப்போ… என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது?”
அந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் அமைதியானான் பூபதி.
“அதுதான் எனக்கும் புரியலை கீதா. நான் ஏன் அப்படிச் செஞ்சேனு எனக்கே தெரியல.”
“அப்படியா? அப்போ நாம ரெண்டு பேரும் ஒரே படகுலதான் இருக்கோம்!”
“படகா. என்ன சொல்ற?”
“ஆமா நடு கடல்லே கவிழ போற படகு.. நமக்கு ஏன் கல்யாணம் ஆச்சுன்னு தெரிலே…பிருந்தாவோட உன்னோட வாழ்க்கை எங்கே போய் முடியும்னு உனக்கு தெரிலே.எனக்கு என்னோட வாழ்க்கை என்ன ஆகப்போகுதுன்னு தெரியல.இரண்டுமே ஒரே மாதிரிதானே?”
இங்க பாரு பூபதி நான் சொல்றதே தெளிவா கேட்டுக்க,நான் பிறந்ததும், என் அம்மா மேல போய்ட்டாங்க… அப்பாதான் என்னை வளர்த்துனாங்க…
அதுவும் ரொம்ப ரொம்ப பாசமா வளர்த்துனாங்க…
இந்த கல்யாணத்துல எனக்கு சுத்தமா விருப்பமில்ல.அப்பா மனசு கஷ்டப்படுத்த வேண்டாமேனு இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட.பட் என்னால சர்மாவை மறக்க முடியலே. நம்ம ஊரு டவர் பத்திதா உனக்கு தெரியுமே.லைட்டா காத்து அடிச்சா கூட புஸ்ஸுனு போய்ரும் அதுல இந்த சர்மாக்கு லைன் போல… சரி நானே களத்துல இறங்கி ரிஸ்க் எடுத்தே.நீ வந்து காப்பாத்தறேனு மாட்டிக்கிட்டே…
பூபதிக்கு அவளுடைய பேச்சைக் கேட்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“சரி… உனக்கு ஐஏஎஸ் ஆகணும்னு சொன்னியே. அதைப் பத்திச் சொல்லு.”
அடுத்த நொடியே அவளுடைய முகம் மலர்ந்தது.
“அதைக் கேளு மேன்! அதுதான் என்னோட வாழ்க்கையில ஒரே ஒரு தெளிவான விஷயம்.”
“மறுபடியும் மேனா?”
“சரி… மிஸ்டர் பூபதி! இப்போ சந்தோஷமா?”
“முதல்ல நீ பேசுறதை முழுசா பேசி முடி.”
“நான் எட்டாவது படிக்கும் போது நம்ம ஜில்லா கலெக்டர் எங்க ஸ்கூல்கு வந்தாரு.அவரே பாத்தும் எனக்கு கலெக்டர் ஆகணும்னு ஆசை. கலெக்டர் ஆகி நிறைய விஷயங்களை மாத்தணும். முக்கியமா என்னை மாதிரி வீட்டுல உட்கார்ந்து கனவு காண்ற பொண்ணுங்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கணும்.எனக்கு எப்படி கல்யாணமோ அப்படி எங்க அப்பாவுக்கு என்னோட கலெக்டர் லட்சியத்துலையும், சர்மா மேலையும் விருப்பமில்ல.”
சரி சர்மா யாரு?
அது…வந்து…உனக்கு எப்படி ‘லவ்பக்’கோ அந்த மாதிரி சர்மாவும் என்னோட வாழ்க்கையில முக்கியமான ஆள்.
ஃப்ரிலிம்ஸ் எழுதும் போது ரெண்டு பேருக்கும் பிடிச்சிருச்சு….லவ் ஸ்டார்ட் ஆயிடுச்சு.சர்மா பாஸ் பண்ணிட்டான். நான் ஃபெயில் ஆயிட்டேன் என தலையை சொரிந்தவாறே கூறினாள்.
“அதுக்கு முதல்ல நல்லா படிக்கணும்.”- பூபதி
“அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ என்னை ஊக்கப்படுத்தறையா? இல்ல அட்வைஸ் பண்றையா?”- சங்கீதா
“உனக்கு எது வேணும்?”
“ரெண்டுமே வேணும். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு கப் காபி வேணும்!”
“கீழே நடந்த களேபரங்களை நினைத்தவன்….இப்போ காபி எல்லாம் கிடைக்காது” என்றான்.
ஏன் கிடைக்காது?
எங்க அம்மா அப்பா குழப்பத்துல கீழே இருக்காங்க…இப்ப எப்படி?….என முடிப்பதற்குள்
“அதான் நீ இருக்கையே!”
“என்ன?”
“கணவன் என்ற முறையில் மனைவிக்கு ஒரு கப் காபி போட்டுக் கொண்டு வரக் கூடாதா?”
“கீதா…!”
“சரி சரி! கோபப்படாதே. காபி அப்பறம் குடிச்சிக்கறே. ஆனா ஒரு விஷயம்…”
“என்ன?”
“நான் கொஞ்ச நாள் வரை இந்த வீட்டுல இருக்க எனக்கு அனுமதி கொடு.நான் எப்படியாச்சு அப்பாவை சமாளிச்சு சர்மா கிட்ட போயிடுவேன்.அதுவரைக்கும் உன் வீட்டுல யாரும் என்னை தொந்தரவு பண்ணக்கூடாது. குறிப்பா கல்யாணம் ஆயிடுச்சு, குடும்பம் நடத்தணும், சமையல் செய்யணும்னு யாரும் சொல்லக்கூடாது.”
அவளுடைய பேச்சைக் கேட்டவன் தன் தாயை நினைத்தபடி தலையை அடித்துக் கொண்டான்.
சரி நீ ஐஏஎஸ் ஆக நான் ஹெல்ப் பண்றே.ஆனா இதெல்லாம் எப்படி சாத்தியம் எனக்கு ஒன்னுமே புரியல.
“ஃபிரியா இரு மேன்.அதெல்லா நான் பாத்துக்கறேன்.எனக்கு சர்மா,உனக்கு உன் லவ்பக்…டீலா நோ டீலா” என கட்டைவிரலை உயர்த்தி கேட்டாள்.
“உன்னோட வாயை அடைக்கவே முடியாது போல!”
“அது மட்டும் முடியாது. ஏன்னா என்னோட வாயை அடைச்சிட்டா, என்னோட உரிமைகளுக்கு நான் எப்படி குரல் கொடுப்பே!”
” தாயே,கொஞ்ச நேரம் உன்னால அமைதியா இருக்க முடியுமா?”
“முடியும். ஆனா அதுக்கு ஒரு நிபந்தனை.”
“என்ன?”
“எனக்கு காபி வேணும்! ரொம்ப பசிக்குது.காலைலே அந்த வீணாப் போன மாப்பிள்ளை பண்ணுன இரிட்டேட்டிங் னால சாப்பிட முடியாம போச்சு”
அவன் தலையைப் பிடித்துக்கொண்டான்.
“கடவுளே…!”
சங்கீதா சிரித்தபடி,”பாரு! கல்யாணம் ஆன முதல் நாளே என்னை நினைச்சு கடவுள்கிட்ட வேண்டிக்க ஆரம்பிச்சுட்டே. நல்ல தொடக்கம்!”என்றாள்.
கொஞ்ச நேரம் அமைதியா இரு.நான் கீழே போய் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்.
சீக்கிரமா வா…
மலைப் பிரதேசம் என்பதால் மாலை ஆறு மணி,இரவு ஏழு மணி போல காட்சியளித்தது.பூபதிக்காக காத்திருந்ததில் நேரத்தை மறந்தாள் பிருந்தா.வேக எட்டுக்களை வைத்து காரை நோக்கி வர முகத்தில் மற்றொரு காரின் லைட் அடித்து அவளது கண்களை கூசச் செய்தது.கண்களை சுருக்கியபடி பார்க்க…அன்று நலத்திட்ட உதவிகளை செய்ய வந்த அரசியல்வாதி நின்றிருந்தான்.