” சாத்தானை நினை உடனே வந்து நிற்கும் ” என்பது போல் அஜயைப் பற்றி யோசித்து அவன் வேண்டாம் என கீதா முடிவெடுத்த சமயம் சரியாக அவனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு வர,
Advertisement
பரபரக்கும் விழிகளுடன் அவசரமாய் அதை திறந்து பார்த்த கீதாவிற்கு பூமியே அவள் காலடியில் நழுவியது.
யாருக்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்றெண்ணி அவள் இந்த திருமணத்தை மறுக்கிறாளோ அவனே ஜித்தேஷுடன் புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தால் பாவம் அவளும் என்ன தான் செய்வாள்.
Advertisement
Advertisement
அதிலும் நாளை அஜயுடன் ஜித்தேஷும் வருகிறான் என்கிற செய்தியை படித்து விட்டு கீதாவிற்கு மயக்கம் வராத குறை தான்.
அதிர்ச்சியில் அவள் கைகளில் இருந்து போன் நழுவி கீழே விழுந்து டெம்பர்ட் கிளாஸ் உடைந்தது கூட தெரியாமல் பேயரைந்ததைப் போல் நின்றிருந்தாள் அவள்.
Advertisement
” இந்த கிராதகன் எப்படி அந்த ஜித்தேஷை பார்த்தான்?? முதல்ல இவன் தான் ஜித்தேஷா?? அஜய் எருமைக்கு எப்படி ஜித்தேஷை தெரியும்?? அப்போ அவனுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சா?? அப்படி தெரிஞ்சிருந்தா அஞ்சலியோட வாழ்க்கை?? அய்யோ பகவானே இப்போ நான் என்ன பண்றது???” என அவள் பலவாறாக யோசித்து குழம்பி தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.
இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என யோசித்து எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என அவளுக்கே தெரியவில்லை, இரவு முடிந்து கதிரவன் தன் வேலையை செவ்வனே செய்ய வந்துவிட்டதன் அறிகுறியாக சூரியக்கதிர்கள் காலதர்(ஜன்னல்) வழியாக அறைக்குள்ளே நுழைந்து அவள் முகத்தில் விழுந்த பின்பு தான் தன் சிந்தனையிலிருந்து கலைந்தாள்.
சூரியன் உதித்த நேரத்தில் கீதாவின் மனதிலும் இந்த பிரச்சனையை சமாளிக்க ஒரு யோசனை உதிக்க, அப்போது ‘ எதையும் சமாளித்து விடலாம் ‘ என்கிற பழைய உற்சாகமும் மீண்டிருக்க, புத்துணர்ச்சியுடன் அங்கிருந்து எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அந்த அழகான காலை வேளை மதுரம் குடும்பத்திற்கு மிகவும் பரபரப்புடன் புலர்ந்தது.
ராகு காலத்திற்கு முன் தங்கள் வீட்டிலிருந்து கிளம்பியிருக்க வேண்டும் என ராமன் அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தார்.
“சீதா, தாம்பூலத்துல வைக்க எல்லாம் எடுத்து வச்சுட்ட தான??” என்றபடி ராமன் சமயலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சீதாவிடம் வர,
“அதெல்லாம் ரெடி தாங்க” என்று தன் கணவருக்கு பதில் அளித்துக் கொண்டே தட்டில் வைக்க வேண்டிய தேங்காயில் மஞ்சள் பூசிக் கொண்டிருந்தார்.
போனில் யாருடனோ உரையாடிக் கொண்டே அங்கு வந்த பரமசிவன் தன் அண்ணனிடம், “அண்ணே பூவும், மாலையும் மட்டும் தேனியில சொல்லியிருந்தோம்ல, அவங்க தான் கூப்பிட்டாங்க.. சாயங்காலம் ஒரு அஞ்சு மணிக்கு எல்லாம் ரெடி ஆய்டும்னு சொன்னாங்க.. நாம போகும் போது அப்படியே வாங்கிட்டு போய்ரலாம் சரிதான ண்ணே” என்று அவரின் கருத்தை கேட்டார்.
“ஆமா அதான் சரி…. போறப்போ கையோட கொண்டு போய்ருவோம்.. ஆமா தேனியில ஒரு நல்ல ஹோட்டல்ல ரூம் போட சொன்னனே போட்டுட்டியா பரமா.. அப்பதான் பசங்க போய் ரெடியாக வசதியா இருக்கும்” என ராமன் வினவ,
“அதெல்லாம் போட்டாச்சு ண்ணே.. பத்து ரூம் போட்டிருக்கேன்.. நம்ம சொந்தக்காரங்கலாம் ஃப்ரெஷ் ஆக தேவைப்படும்ல” என்று பரமசிவன் அதற்கு பதில் மொழிந்தார்.
“அக்கா நிச்சய மோதிரமும் மருமகளுங்களுக்கு நெக்லஸும் நேத்து வாங்குனோமே அதை உன்னோட ஹேன்ட் பேக்லயே வச்சுட்டேன்.. வெளிய வைக்கிறது பாதுகாப்பு இல்லை” என்றபடி அங்கு வந்து சேர்ந்த தனம்,
அங்கிருந்தவர்களைக் கண்டு, “என்ன எல்லாரும் இங்க நின்னு என்ன பண்றீங்க.. சீக்கிரம் கிளம்புங்க லேட் ஆச்சு… ஆமா அத்தையும் மாமாவும் எங்க?” என இவர்களை கிளம்பச் சொல்லி துரிதப்படுத்தியவர், மதுரம்- வாசுதேவனை கண்களால் துலாவினார்.
“ஆமா அம்மா எங்க? நானும் காலையில இருந்து பார்க்கவே இல்லை” என ராமனும் கேள்வியெழுப்ப,
“அந்தக் கூத்தை ஏன் கேட்குறீங்க, வினோத் கூட்டிட்டு வந்த பியூட்டிசியனை கூட்டிட்டு காலையில ஆறு மணிக்கு ரூம்க்குள்ள போனாங்க.. இப்போ மணி எட்டாச்சு இன்னும் வெளிய வரலை” என சீதா அலுத்துக் கொண்டார்.
அப்போது, ” என்ன மருமகளே ரொம்ப அலுத்துக்குற மாதிரி இருக்கு.. நான் மேக்கப் போட்டு உன்னை விட அழகாயிருவேன்னு பொறாமையா இருக்கா??” என்றபடி மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார் மதுரம்.
அவரைக் கண்ட மற்ற நால்வரும் திறந்த வாயை மூடாமல் கண்களை அகல விரித்து பார்த்துக் கொண்டே நிற்க,
அவர்களின் திகைத்த முகத்தைக் கண்டு சிரித்துக் கொண்ட மதுரம் அன்ன நடையிட்டு ஒயிலாக படிகளில் இருந்து இறங்கி அவர்களை நெருங்கினார்.
காக்ரா சோலி அணிந்து அதற்கேற்றார் போல் சிகையலங்காரம் செய்து கொண்டு கண்ணைப்பறிக்கும் வகையில் ஆன கல் பதித்த நகைகளும் போட்டுக் கொண்டு மணப்பெண்களுக்கே சவால் விடும் அளவிற்கு பேரழகுடன் இறங்கி வந்த மதுரத்தைக் கண்டு உண்மையில் சீதாவிற்கும், தனத்திற்கும் லேசாக பொறாமை உணர்வு தோன்றியே விட்டது.
“அம்மா என்னம்மா வேஷம் இது?? ஏன் மா இப்படி மானத்தை வாங்குறிங்க?? நைட் நடக்கப்போற ஃபங்கஷனுக்கு இப்போவே இவ்ளோ மேக்கப் தேவையா?? இதைப் போட்டுட்டு எப்படி டிராவல் பண்ணுவீங்க??” என பரமசிவன் அவரை கேள்விகளால் துளைத்தெடுக்க,
“அட உங்க ரெண்டு பேத்தையும் எந்த நேரத்துல பெத்தேன்னு தெரியலை வாயைத் திறந்தாலே கேள்வியா கேட்டு உயிரை எடுக்க வேண்டியது.. இந்த கேள்வி கேட்குற வேலையெல்லாம் கோர்ட்டோட நிப்பாட்டிக்கணும்.. உங்க வக்கீல் புத்தியை நீங்க காட்டுனா அப்பறம் நான் கிரிமினல் புத்தியை காட்ட வேண்டி இருக்கும்” என மதுரம் மகனை தன் பேச்சால் வாயடைக்க வைத்துக் கொண்டிருந்த சமயம்,
“நீ ஆல்ரெடி கிரிமினல் தானே பாட்டி” என்றபடி அங்கு வந்து சேர்ந்தான் அஜய்.
அவனைக் கண்டதுமே பரமசிவனின் ரத்த அழுத்தம் எப்பொழுதும் போல் எக்கச்சக்கமாக எகிற, அஜய் அணிந்திருந்த உடையை சுட்டிக்காட்டி, “என்ன கருமம் பிடிச்ச டிரெஸ் டி இது.. நல்ல நாள் அன்னைக்கு கூட உன் மகன் என்னை நிம்மதியா இருக்க விட மாட்டானா?? என் உயிரை வாங்குறதுக்குன்னே எனக்குன்னு வந்து பொறந்துருக்கான்” என தனத்திடம் அவர் கத்தத் துவங்க,
தன் ஷார்ட்ஸையும், ஸ்லீவ்லெஸ் பனியனையும் குனிந்து பார்த்துக் கொண்ட அஜய் தன் தந்தையை புரியாத பார்வையுடன் நோக்கி, ” ஏன் இந்த டிரெஸ்க்கு என்ன குறை வந்துச்சு??” என குழப்பமாக வினவ,
“இதுல எல்லாமே குறை தான்.. ஒழுங்கா போய் நல்ல பேன்ட் சட்டையா போட்டுட்டு வரச்சொல்லு தனம்.. இன்னைக்கு அவன் தான் மாப்பிள்ளைன்னு கூடவா மறந்து போகும்” என தனத்தை வைத்து தன் மகனிடம் பேச,
அவரைப் போலவே அஜயும் தன் அன்னையிடம், “மாம் .. எனக்கு டிராவல்ல இதான் கம்ஃபர்டபிளா இருக்கும்.. அவருக்கு பிடிக்கலைனா அவரை என் கூட வரவேணாம்னு சொல்லிட்டு தனியா வர சொல்லுங்க.. இதுக்கும் மேல ஏதாவது சொன்னாருன்னா இதே டிரெஸோட தான் நிச்சயத்திற்கே வருவேன்” என அவன் மிரட்டல் விட,
அவன் சொன்னதை செய்து விடுவான் என்று உணர்ந்த பரமசிவனும், “என்னமோ பண்ணித்தொலை.. எல்லாம் என் நேரம்” என்று தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
அதன் பின் ஒவ்வொருவராக கிளம்பி வர, அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டு அங்கிருந்து விமான நிலையத்திற்கு கிளம்பிச் சென்றனர்.
சென்னையிலிருந்து மதுரை வரையில் விமானத்தின் மூலம் சென்றுவிட்டு அங்கிருந்து காரில் தேனிக்கு சென்று விடலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.
அதன் படி அவர்கள் அனைவரும் கிளம்ப, அவர்களின் உறவினர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் தேனியை நோக்கி தன் பயணத்தை தொடங்கியிருந்தது.