“சித்தி கீதா எங்க?? காலையில இருந்து அவளை நான் பார்க்கவே இல்லை” என தன் சிற்றன்னையிடம் விசாரித்துக் கொண்டே வீட்டின் முற்றத்திற்கு வந்தாள் அஞ்சலி.
Advertisement
“அவ பிளவுஸ் ஃபிட்டிங்க் சரியில்லைன்னு காலையிலயே சொல்ல சொல்ல கேட்காம பக்கத்து ஊர்ல இருக்க டெயிலர் வீட்டுக்கு போய்ட்டாடா அஞ்சு.. இன்னைக்கு பங்க்ஷனை வச்சுட்டு வெளிய போகாதடின்னு அவ்ளோ சொல்றேன்.. நம்ம சொல்ற பேச்சையே கேட்க மாட்டேங்குறா.. நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய் என்னென்ன பண்ண போறாளோ.. எனக்கு நினைச்சாலே பயமா இருக்கு” என மீனாட்சி அஞ்சலியின் கேள்விக்கு பதிலளித்து விட்டு தன் மகளின் எதிர்காலத்தை குறித்த கவலையில் புலம்ப,
அவர் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்ட அஞ்சலியோ, “அதெல்லாம் கீது ரொம்ப சமத்து சித்தி.. நம்ம கிட்ட தான் இப்படி விளையாட்டுத்தனமா இருப்பா ஆனா அவ என்னை விட பொறுப்பானவ.. கண்டிப்பா எங்க போனாலும் சமாளிச்சுப்பா.. நீங்க அவளை நினைச்சு கவலை படாதீங்க” என அவருக்கு ஆறுதல் அளித்தாள் அஞ்சலி.
Advertisement
Advertisement
“அவள் சமாளிச்சுப்பான்னு எனக்கும் தெரியும்.. ஆனா அவ பண்ற சேட்டையை சமாளிக்க அந்த குடும்பம் கஷ்டப்படுமே.. அதான் என்னோட கவலையே” என தன் மகளின் குணத்தை அறிந்து மீனாட்சி சிரிப்புடன் கூற,
“ஹாஹா சித்தி!! உங்க பயம் என்னவோ யோசிக்கப்பட வேண்டிய விஷயம் தான்.. கீதாவை சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்” என அஞ்சலியும் மறுக்காமல் ஒத்துக் கொண்டாள்.
Advertisement
“சரி சரி நீ போய் ரெஸ்ட் எடு.. ஈவ்னிங்க் மூணு மணிக்கெல்லாம் உங்களுக்கு மேக்கப் போட ஆளுங்க வந்துருவாங்க..அதுக்குள்ள தலைக்கு குளிச்சு நல்லா தலையை காய வச்சிருங்க.. இல்லை தலைவலி வந்துரும்.. அப்பறம் போட்டோகிராபர் உங்களை தனியா ஸ்டில்ஸ் எடுக்கணும்னு சொல்லிருக்காரு அதுனால அஞ்சு மணிக்கெல்லாம் ரெடி ஆகிருங்க… எனக்கு உள்ள வேலை இருக்கு.. நீ போய் ரெஸ்ட் எடு அஞ்சு.. அப்பறம் ஊர்க்காரங்க எல்லாம் வந்து பேச ஆரம்பிச்சா உனக்கு ரெஸ்டே கிடைக்காது.. அதுனால ரூமுக்கு போ” என அவளுக்கு அறிவுருத்தியவர், தன்னுடைய வேலைகளை கவனிக்கச் சென்றார்.
அவர் சென்ற பின்பு தன்னறைக்கு வந்த அஞ்சலிக்கு நன்றாகவே புரிந்தது, ‘கீதா தன்னிடமிருந்து வரும் கேள்விகளுக்கு பயந்தே இப்படி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறாள்’ என.
“நீ எப்படி இருந்தாலும் வீட்டுக்கு தான வரணும் உன்னை அப்போ வச்சுக்குறேன்..” என கீதாவோடு மானசீகமாக பேசிக் கொண்ட அஞ்சலி, பின் இரவு பங்க்ஷனுக்கு தேவையான புடவை, நகைகளை எடுத்து வைக்கும் வேலையில் தன்னை புகுத்திக் கொண்டாள்.
“நிச்சயத்திற்கு முன்னாடி உன்னை தனியா மீட் பண்ணனும்” என கீதாவிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைக் கண்டு வெற்றிப் புன்னகை பூத்த அஜய்,
“முடியாது” என வேண்டுமென்றே அவளை சீண்டும் வகையில் பதில் அனுப்பி வைத்தான்.
ஜித்தேஷுடனான அவனின் புகைப்படத்தை கண்டதில் இருந்தே பலவாறான குழப்பத்தில் இருந்த கீதா, இறுதியில் தெளிவாக ஒரு முடிவெடுத்திருந்தாள்.
அஜய் தன்னை விரும்புவதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்த கீதா, நிச்சயத்திற்கு முன் அவனை எப்படியாவது தனியே அழைத்துப் பேசி அவனை தானும் காதலிக்கும் உண்மையை அவனிடம் கூறி, அதை வைத்து ஜித்தேஷைப் பற்றி அஜய்க்கு என்னென்ன தெரியும் என்பதை அறிந்து கொண்டு, ஒருவேளை உண்மை அனைத்தும் தெரிந்திருந்தால் தன் காதலை பகடைகாயாய் உபயோகித்து அஞ்சலியின் விஷயத்தை வெளியே யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம் என அவள் திட்டம் தீட்டி இருந்தாள்.
ஆனால் இவ்வளவு விவரமாக திட்டம் தீட்டியவள், ‘ அஜய்க்கு ஜித்தேஷை பற்றி தெரிந்திருந்தால் அதை அஸ்வத்திடம் சொல்லாமல் இருந்திருப்பானா?? மேலும் ஜித்தேஷுடன் எப்படி அவன் இவ்வளவு நெருக்கமாக புகைப்படம் எடுத்தான்??” என்பதைப் பற்றி மட்டும் தனக்கிருந்த குழப்பத்தில் சிந்திக்கத் தவறிவிட்டாள்.
இப்போது தன் திட்டத்தை செயலாற்ற அவளாகவே தன் ஈகோவை விட்டொழிந்து சந்திக்கலாமா எனக் கேட்டும், அவன் முடியாது என்று கூறியது அவளின் கோபத்தை அதிகரிக்க,
“சரியான திமிர் பிடிச்சவன்” என மனதிற்குள் அஜயை திட்டித் தீர்த்தவள்,
தனக்கு வேலை ஆக வேண்டும் என்பதால் மீண்டும் முயன்று வரவழைத்த பொறுமையுடன், “ப்ளீஸ்.. மீட் பண்ணியே ஆகணும்” என அனுப்பி வைத்தாள்.
ஆனால் அதற்குள் ப்ளைட் கிளம்பி விட்டதால் அஜய் அவளிற்கு பதில் அளிக்காமல் போனை அணைத்து வைத்துவிட்டு அவளை வெறுப்பேற்றி மகிழ்ந்தான்.
அவன் மெசேஜை பார்த்துவிட்டதன் அறிகுறியாக ப்ளூ டிக் காண்பித்தாலும் அவன் இன்னும் பதில் அனுப்பாதது கீதாவை மேலும் சோதிக்க, அவனை அர்ச்சித்துக் கொண்டே அவனுக்கு மீண்டும் அழைக்க முற்பட்ட நேரம் மீனாட்சி அவளை அழைத்திருந்தார்.
“ஏய் எருமை ஒரு ப்ளவுஸ் அல்டெர் பண்ண இவ்ளோ நேரமா?? இப்போ நீ வீட்டுக்கு வரியா இல்லை அப்பாவை வர சொல்லவா??” என அழைப்பை ஏற்றவுடனே மீனாட்சி பொரியத் துவங்க,
அஜய் மீதிருந்த கடுப்பெல்லாம் இப்போது மீனாட்சி மீது திரும்ப, “இப்போ என்ன நான் வராம யார் கூடயாச்சும் ஓடிப்போய்ட்டேனா?? ஏன் மா போன் பண்ணி என் உயிரை வாங்குற?? நிம்மதியா ஒரு பிளவுஸ் தைக்க கூட வரக்கூடாதா ச்சை என்ன குடும்பமோ இது” என இன்னும் ஏதோதோ கத்தியவள் மீனாட்சி பதில் பேசும் முன்னே அழைப்பை துண்டித்துவிட்டு அங்கிருந்து தன் இல்லம் நோக்கி கிளம்பியிருந்தாள்.
” தீராத நேரம்!! உன் கூடப் போதும்!!
மாயாத நாள் மட்டும் நாம் வாழ வேண்டும்!!!
மாறாத ஆசை!! ஓயாமல் தோன்றும்!!
நாள் நேரம் பாராமல் தோள் சாய வேண்டும்!!!”
என அஞ்சலியின் செல்பேசியில் அஸ்வத்திற்கென்று பிரத்யேகமாக பதிந்து வைத்திருந்த பாடல் இசைத்து, அஸ்வத் அழைக்கிறான் என்பதை அஞ்சலிக்கு தெரியப்படுத்த,
முகம் முழுக்க புன்னகையோடு அந்த அழைப்பை ஆசையுடன் ஏற்று போனை காதிற்கு கொடுத்தாள் அஞ்சலி.
“அஞ்சலி!!!!” என பெயருக்கே வலித்துவிடும் போல் காதலில் தோய்த்து எடுத்த மென்மையான குரலில் அஸ்வத் அழைக்க,
அவன் குரலில் வழிந்த காதல் அவனின் காதலியின் காதில் அமிர்தமாக இறங்க,
” சொல்லுங்க அஷ்!!” என சற்று நேரத்தில் அவனுடையவள் ஆகபோகிறோம் என்கிற பூரிப்பு பாதியும் நாணம் மீதியுமாக அஞ்சலி கூற,
” உங்க வீட்டுக்கு பேக் சைட் இருக்க, தென்னம் தோப்புக்கு வரியா பிளீஸ்” என அவன் கெஞ்சல் மொழியில் வினவினான்.
அதுவரை அவன் குரலில் கட்டுண்டு இருந்தவள் இப்போது பதறிப்போய், ” என்ன விளையாடுறீங்களா அஸ்வத்?? டைம் இப்போவே மூணு ஆய்டுச்சு.. எனக்கு மேக்கப் பண்ண வந்துருவாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல தான் மீட் பண்ண போறோமே அப்பறம் என்ன அவசரம்.. வீட்டுக்கு தெரிஞ்சா நான் செத்தேன்” என அவள் தன் குடும்பத்தை கருத்தில் கொண்டு வர மறுக்க,
அதையெல்லாம் கண்டுகொள்ளாத அஸ்வத், “அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நீங்க உடனே தென்னந்தோப்புக்கு வந்து சேருங்க.. எனக்காக.. ப்ளீஸ்” என்று அவள் மறுக்க வாய்ப்பே அளிக்காமல் அழைப்பை துண்டித்து விட,
“ஹலோ ஹலோ ஹலோ!!!.. நான் வரலை” என அஞ்சலி இங்கு கத்திக் கொண்டிருந்ததற்கு பதிலாய் , “பீப் பீப்” என அழைப்பு துண்டிக்கபெற்றதன் அடையாளமான ஒலியே வர, எரிச்சல் கொண்ட அஞ்சலி போனை மெத்தையில் தூக்கி எரிந்து விட்டு அதன் அருகிலே பொத்தென்று அமர்ந்து விட்டாள்.
“ஏன் சார் இன்னும் ஒரு மூணு மணி நேரம் பொறுக்க மாட்டாரா?? அதுக்குள்ள என்ன அவசரமாம்?? இத்தனை நாளா ஒரு போன் கூட பண்ணலை இப்போ மட்டும் வந்துருன்னு ஆர்டர் போட்டா, உத்தரவு அய்யான்னு அவர் பின்னாடியே போய்ரணுமா.. நெவர்.. அஞ்சலி நீ போகக் கூடாது” என தனக்குத் தானே பேசிக்கொள்ள,
அப்போது “எக்ஸ்க்யூஸ் மீ..மே ஐ கம் இன்” என அனுமதி கேட்டுக் கொண்டு எட்டிப்பார்த்த அவளின் காதல் கொண்ட மனம், “ஏய் லூசு எலி!! அவர் ஏதோ முக்கியமான விஷயம் இருக்கப்போய் தான கூப்பிடுறாரு.. இப்போ மட்டும் நீ போகலைனா அவர் எவ்ளோ வருத்தப்படுவாரு.. அந்த முட்டாள் மூளையோட பேச்சை கேட்காம ஒழுங்கா கிளம்பி போ” என அறிவுருத்தி அஞ்சலியை நன்றாக குழப்பி விட்டது.
மூளைக்கும் மனதுக்கும் நடந்த போரில் மனமே இறுதியில் வெற்றி பெற, பல தில்லாலங்கடி வேலைகள் செய்து யார் கண்ணிலும் படாமல் அஸ்வத் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்த அஞ்சலி அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து போய் சிலையானாள்.