Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ09_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் 9_2

 

 

இருவர் தூக்கம் துரப்பதினால் விடியல் தாமதிப்பதில்லை. ஞாயிறு காலை விடிந்தது. எல்லா ஞாயிறு போல் அன்றும் எபியின் வீடு பரபரத்தது.



Advertisement

 

“எபி.. சர்ச்சுக்கு நேரம் ஆச்சு.. கிளம்பு கிளம்பு”, ஞாயிறு காலை ஆராதனைக்கு குடும்பமாகக் கிளம்பிக் கொண்டிருந்தது எபி-யின் குடும்பம். மழை, வெயில், ஜுரம் என்று எதுவும் அவர்கள் ஆலயத்திற்குப் போவதை இன்று வரை தடுத்தது இல்லை.

 

Advertisement

தினம் இருமுறை வேதபுத்தகம் குடும்பமாக வாசித்து, ஜெபித்துவிடுவர். எஸ்தர் இதில் மட்டும் அலட்சியம் காட்டவிட மாட்டார்.

Advertisement

 

இவனோ அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருக்க.. சூரியன் முகத்தில் அறைந்த பின்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்க விருப்பமில்லாது அலர்விழி சுருண்டு படுத்திருந்தாள்.

 

Advertisement

இரவு தூக்கமின்மைக்கும் சேர்த்து தூங்கத் தோன்றியது. இன்று வகுப்புக்குப் போகும் நோக்கமில்லை. அவன் வரமாட்டான் என்று தெரியும் என்பதாலேயே போகவும் மனம் இல்லை. அங்கு சேர்ந்த இத்தனை நாட்களில் அவள் கவனித்திருந்தாள், அவன் ஞாயிறு வருவதில்லை என்பதை.

 

அவன் அவன் அவன்… அவன் பெயர் தான் என்ன? எபி? அதென்ன பெயரோ? அடுத்த முறை பார்த்ததும் அவனிடமே அவன் முழு பெயர் கேட்டுவிட வேண்டும்.. எண்ணிக் கொண்டாள். வேண்டும் என்றால் மையத்தில் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம்… ஏன் அவனிடமே கேட்டிருக்கலாம்.. எல்லாம் அவன் பாராமுகம் செய்த வேலை! மறக்க நினைப்பவன் ஊர் பெயரெல்லாமா விசாரிப்பார்கள்? தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் இன்று? நிலையே வேறு… மறக்கும் நிலையெல்லாம் கடந்தாயிற்று. அவன் சவ்வு மிட்டாயை மெல்வது போல் அவளையும் முழுவதுமாக மென்று ஏப்பம் விட்டுவிட்டானே. இனி தூர நின்றுக் கொண்டு அவனுக்கு தெரியாமல் சைட் அடிக்க வேண்டாம்… எதிரிலேயே நின்று ஆசை தீர பார்க்கலாம்… மெத்தையில் படுத்திருந்தவளுக்கு எழும்பும் எண்ணமில்லாமல் கண் மூடி அவனையே அசைப்போட்டு கொண்டிருந்தாள்.

 

“அக்கா..”, கதவு தட்டும் ஓசைக்கு எழுந்து வந்தவளை சௌமி வித்தியாசமாக பார்த்தாள்.

 

“என்ன சௌமி?”

 

“பிரேக் ஃபர்ஸ்ட் க்கா.. க்ளாஸ் போக கிளம்பிட்டு இருப்பேன்னு பார்த்தேன்!”

 

“ரொம்ப டயர்டா இருக்கு சௌமி. வீக் டேஸ் எக்ஸ்ட்ரா டைம் சென்டர்ல்ல இருந்துக்கிறேன்.. எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து வச்சிடேன்… நான் ஒரு மணி நேரம் படுக்க போறேன்.”

 

மீண்டும் படுத்தவள் மனம் முழுவதும் அவன் தான். அவன் மந்தகாச புன்னகையும்.. ‘விழி’ என்ற ஊடுருவும் விளிப்பும். அவனை நினைத்துக்கொண்டே படுத்து… நினைத்துக் கொண்டே கண்ணயர்ந்து… கனவிலும் அவனையே கண்டு.. இப்பொழுதும் அவன் நினைப்போடே எழுந்து குளித்து, இதற்கு மேல் சரி வாரது என்று எண்ணியவள் வீட்டுக்கு அழைத்துப் பேசினாள். பின் வசு.. மாதவனோடு பேசிக் கொண்டே காலை உணவை முடித்தாள்.

 

கல்லூரி பாடங்கள் படிக்க இருக்க.. அதில் மூழ்கிப் போனவளுக்கு மதியம் மூன்றுக்கு மீண்டும் கண்ணைச் சொருக.. அழுக்கு மூட்டையோடு மொட்டை மாடிக்குச் சென்றாள். அங்கு தான் துவைக்க கல்லும்.. துவைத்ததைக் காயப்போடக் கொடியும் இருக்கும்.

 

அவள் வரவுக்கே காத்திருந்தது போல் குட்டி நாய்க் குட்டி ஒன்று ஓடி வந்து அவள் மேல் பாய்ந்தது.

 

டிசம்பர் மாத மழைக்கு ஒதுங்கிய நாய்க் குட்டி அவர்கள் விடுதி காவலாளி ஆகிப் போனது.

 

இவள் தான் சௌமிக்காக ஜானகி ஆன்டி காலில் விழாத குறையாக விழுந்து புரண்டு அந்த அரை முழ உயர நாய்க் குட்டியை அத்தனை பெண்களுக்கும் காவலாளி ஆக்கி இருந்தாள்.

 

“உள்ள வரக்கூடாது உன் நாய். சாப்பாடு மூனு வேளையும் நீ தான் பாத்துக்கணும். வரவங்க காலையும் கையையும் நக்கிட்டு இருக்க கூடாது. செருப்பையோ காய வச்சிருக்கத் துணியையோ கடிச்சுப் பிக்க கூடாது. ரொம்ப முக்கியமா.. காம்பவுண்ட் குள்ள அசிங்கம் பண்ணக் கூடாது. இதில ஏதாவது நடந்தா.. நீயும் அது கூடவே பெட்டியைத் தூக்கிட்டு வெளியில போயிடணும்!”

 

அவர் கூறியதற்கு எல்லாம் ‘எஸ் ஆன்டி.. எஸ் ஆன்டி’ என்று மண்டையை நன்றாகவே ஆட்டி தான் உள்ளே கூட்டி வந்தாள்.

 

ஆனால் ஜான்சனுக்கு தான் இந்த விடயம் எதுவும் தெரியாமல் அவளைப் பாடாய்ப் படுத்தியது.

 

‘உள்ளே வர கூடாது!’  என்ற முதல் கட்டுப்பாட்டைக் கூட ஜான்சன் மதிக்கவில்லை. பிறகு தானே மற்றவை. சௌமியோடு எப்பொழுதும் சுற்றித் திரியும். அவள் இல்லாத நேரங்களில் அலர்விழி பின்னால்! மற்ற நேரங்களில் ஜானகி ஆன்டி தான் அதன் காவல்.

 

சௌமியும் அவளுமாக நாய்க் குட்டியைக் குளிப்பாட்டி… அவளும் தொப்பலாக நனைந்து, அதனோடு விளையாடிக் கொண்டே துணியை ஒரு வழியாகத் துவைத்து முடித்தாள்.

 

இந்த இந்த கொடி இந்த இந்த அறையினுடையது என்பது எழுதப் படாத சட்டம். துவைத்து, வாளியில் குவிந்திருந்த துணியைக் காயப் போட கொடியின் அருகே போனவள் பின்னோடே சென்றது ஜான்சன்! துணியைப் பிழிந்து அதை உதற… துள்ளிக் குதிக்கும் அந்த வெள்ளையும் கருப்பும் கலந்த நாய்க் குட்டி. இருவருக்கும் பிடித்த விளையாட்டு அது.

 

துணியின் நுனி வாயில் மாட்டினால்.. அது கிழியாமல் கிடைப்பது தெய்வச் செயல்.

 

“மரியாதையா ஓடிடு ஜான்சன்.. இல்ல என் கிட்ட அடி தான்..”, திட்டினாலே கேட்காது. அவள் கொஞ்சிக் கொண்டே கூறினால்?

 

வாளிக்குள் வாயை நுழைக்கப் போனவனை அதட்டி தள்ளி நிறுத்தி, வாளியை கைச்சுவர் மீது வைத்துவிட்டு, அவள் வேலையை ஆரம்பித்தாள். முதல் துணியை உதறவுமே அது சேட்டையை ஆரம்பித்தது. இருவருக்கும் விளையாட்டும் ஆரம்பமானது.

 

அவள் துணியை வேண்டுமென்றே அதன் வாய் முன் ஆட்ட.. அது அதைக் கடிக்க போகும் நேரத்தில் அவள் துணியை மேலே உயர்த்த.. நாய்க் குட்டி அதைக் கவ்வ ஆசைகொண்டு குதிக்க… அவள் அதைக் காயப் போடுவாள். மீண்டும் மீண்டும் இதே விளையாட்டு தொடர்ந்தது.

 

ஜான்சனுக்கு கடுப்பாகி இருக்க வேண்டும்.. அவன் அணிந்திருந்த கமீசை கடித்து இழுக்க ஆரம்பித்தது.

 

“டேய் விடுடா… எருமை மாடே… விடுடா..”

 

“அக்கா அது எருமை இல்ல… நாய்க் குட்டி”, எங்கிருந்தோ ஓர் குட்டி பெண் சத்தம்.

 

“ஓய் சௌமி.. வந்து உன் நாய்க் குட்டிய இழுத்துட்டு போ… டேய் விடு… துணிய கிழுச்சுடாத டா…”, அதன் வாயை அவள் ஒற்றைக் கைக் கொண்டு திறக்க.. அவள் மற்றக் கையிலிருந்த துணிக்கு அதன் பார்வை போக…

 

“போடா டேய்”, என்று துணியை மேல் தூக்க… அவள் தூக்கிய வேகத்தில் ஈரத் துணி கையை விட்டுப் பறந்து கீழ் நோக்கு சென்றது.

 

“டேஏஏஏய்…. என் துப்பட்டா மட்டும் மண்ணாகட்டும்… நீயும் அது மாதிரியே இப்போ பறப்ப.. சொல்லிட்டேன்”.

 

கத்திக் கொண்டே எட்டிப் பார்க்க.. அது கீழே நடந்து வந்து கொண்டிருந்தவன் தலையில்!

 

‘அச்சோ…’ என்று அவள் கலவர பட்டு முடிக்கும்முன்… அவன் மேலே பார்க்க… நாய்க் குட்டி அவளைப் போலவே கீழே பார்க்கும் ஆர்வத்தில் முன் கால்களை மேலே தூக்க… இம்முறை வாளி பறந்தது நேரே அவன் தலைக்கு!

 

ஒருவனை காயப்படுத்தவென்றே அவள் பிறப்பெடுத்திருக்க… அதை அறியாதவனோ, தானே வந்து தலையைக் கொடுத்தான்!

 

துணிக்காகப் பதற வேண்டுமா? கீழே நிற்கும் உருவத்திற்காகப் பதற வேண்டுமா? தெரியவில்லை.

 

“யார் பெத்தப் புள்ளையோ… இன்னைக்கு பக்கெட்ல வாங்கணும்ன்னு அது தலைல எழுதியிருக்கு.. கஷ்டப் பட்டு துவைச்சத் துணி எல்லாம் மண்ணாயிருக்கும். இரு உன்ன வச்சுக்கிறேன்..”, நாயைத் திட்டிக் கொண்டே அவன் முன் வந்து நின்றாள், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க!

 

கையில் மூட்டை துணியோடு நின்றிருந்தான் எபி!

 

மாடியில் இவள் முகம் பார்த்திராவிட்டால் நகர்ந்திருப்பானோ என்னவோ? அவள் முகம் பார்த்த பின் ஈரத்துணியைக் கட்டியணைத்து நின்றிருந்தான்.

 

சத்தியமாக இவனை இங்கு அவள் எதிர்பார்க்கவில்லை. உதடு தன்னால் விரிந்தது. துணியைக் குவியலாய் பிடித்திருந்தவன் கையிலிருந்து வாங்கக் கூட தோன்றாமல் பார்த்து நின்றாள்.

 

புருவம் உயர்த்தினான். ‘ஹாய்’ என்றான். அவன் நின்றிருந்த கோலம் கண்டு பல்லைக் காட்டிக் கொண்டே நின்றாள்.

 

“தாங்கஸ்” என்றான்.

 

‘ஏனாம்?’ குழம்பினாள் என்றது அவள் நயனம்!

 

“இரும்பு பக்கெட் போடாம.. ப்ளாஸ்டிக் பக்கெட் போட்டதுக்கு”, என்றான். முகத்தில் அதே குறுஞ்சிரிப்பு.

 

‘பக்’கென்று ஒரு சிரிப்பு அவளிடமிருந்து.

 

சௌமியிடமிருந்து தப்பித்து வந்த ஜான்சன்… அவள் காலுக்குப் பின் ஒளிந்துகொண்டு, அதன் கீச்சுக் குரல் கொண்டு புதியவனை பயமுறுத்த விழைந்தது.

 

“இவர் தான் புது வாச்மேனா..? பேரென்ன?”

 

“ஜான்சன்”

 

“ஜான்சன்..?”

 

“ஜான்சன்.. ட்வைன் ஜான்சன்”, கூறியவளாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை அவன் எம்மாத்திரம்?

 

“இது அவருக்குத் தெரியுமா?”, கால்களுக்கு நடுவே வாலை நுழைத்து நின்று கத்திக் கொண்டிருக்கும் நாய் குட்டியைப் பார்த்துக் கொண்டே கேட்டவனுக்கு இன்னும் சிரிப்பு அடங்கிய பாடில்லை.

 

“ட்வைன் ஜான்சன்?! ஹூம்! நான் கூட அர்னால்டா இருக்கும்ன்னு நினைச்சேன்…”

 

“இவன் அப்பா கிடைச்சா அதுக்கு கண்டிப்பா அர்னால்ட்ன்னு பேரு வைக்கிறேன்..”

 

எந்த பதட்டமும் இல்லாமல்.. படபடப்பு இல்லாமல் இனிமையாகப் பேச்சு ஆரம்பித்தது. தள்ளி நின்று தவிக்க முடியவில்லை அவனால். வந்துவிட்டான் அவளைத் தேடி.

 

“எல்லாம் இவனால தான்! இவன் தான் பக்கெட்ட தள்ளி விட்டான்.”, என்று பழியை ஒரு முழ நாய் மேல் போட்டாள்.

 

“முடிஞ்சவரை காப்பாதியிருக்கேன்.. ஒன்னு ரெண்டு தவறிடுச்சு!”, துணியை நீட்ட.. அவனிடமிருந்து அள்ளிக் கொண்ட துணியை அணைத்து நின்றாள்.

 

“க்ளாசுக்கு போகாம நாய் குட்டியோட விளையாட்டா..?”

 

“காலேஜ் வர்க் இருந்துது. டையர்டும் கூட…”. அவன் தான் இன்று அங்குச் சென்றிருக்க மாட்டானே… எப்படித் தெரிந்ததாம்? கேட்டாளில்லை.

 

அவள் கேட்டாலும், ‘உன்னைத் தேடிச் சென்றிருந்தேன்’ என்று அவன் கூறப்போவதும் இல்லை!

 

நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஜானகி ஆன்டியின், “ராசாத்தி யாருன்னு பாரு”, சத்தம் கேட்டது.

 

வலது கையை அவளை நோக்கி நீட்டினான். என்ன என்று புரியவில்லை என்றாலும் துணி மூட்டையை இடது கைக்கு மாற்றி அவளும் நீட்ட..

 

கையை பிடித்துக் குலுக்கியவன்.. “மனோவா எபிநேசர்”, தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.

 

உறைந்து நின்றுவிட்டாள்.

 

மனோவா எபிநேசர்! அதன் பின் அவன் கூறிய அவன் படிப்பின் விபரமும்.. வேலை செய்யும் விபரமும் அவள் காதில் விழவும் இல்லை. புத்தியில் எட்டவும் இல்லை.

 

71 அங்குல உயரம்.. பார்த்ததும் கேசத்திற்குள் விரல் விடத் தூண்டும் வழவழப்பும் அடர்த்தியும்.. கண்டதும் சுண்டி இழுக்கும் கூர்மையான கண்கள்.. வரைந்து செதுக்கியது போன்ற ஆண்மை ததும்பும் முகம்.. பரந்து விரிந்த தோள்… நீள கைகளும் கால்களும்… மனதின் ஆழத்தில் பதிந்து போன உயிருள்ள சிற்பத்தின் பெயர் மனோவா எபிநேசர்!! ஏஏஏஏஏ..ன்? கத்த வேண்டும் போல் தோன்றியது!

 

“என்ன ஆராய்ச்சி முடிஞ்சுடுச்சா?”

 

குறும்பு புன்னகையோடு நின்றிருந்துவனை பார்க்கப் பார்க்க திகட்டவில்லை. தன்னிடம் மட்டுமே அவன் காட்டும் வசீகர குறுஞ்சிரிப்பையும்.. மந்தகாச புன்னகையும் காலம் முழுவதும் அருகிலிருந்து காண ஆசை கொண்டாளே..

 

இது எதுவுமே தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியாதா?  

 

“விழி? என்ன யோசன?”, அவள் அவனையே விழி எடுக்காமல் பார்க்க… ஆண்மகனுக்கும் கூச்சம் வரும் தானே.. தலைகோதி அழகாய் சிரித்து நின்றான்.

 

இனிமைக்கும், கம்பீரத்திற்கும், திமிருக்கும், நிதானத்திற்கும் சொந்தக்காரனும் தன்னை ஈர்த்து முற்றிலும் கொள்ளைக் கொண்டவனும் ஒரு கிறிஸ்தவனா? உள்ளுக்குள் அழுத்தி வலித்தது.

 

“எபி… வா வா..”, ஜானகி ஆன்டி வரவும்.. பதில் பேசாமலே அவள் நகர்ந்து போனாள். கண்கள் இரண்டும் காரணமே இல்லாமல் இதயத்தோடு சேர்ந்து கலங்கி குளம் கட்ட  ஆரம்பித்தது.

 

“சனி கிழமையானாலே வந்து நிப்ப.. இப்போ நாலஞ்சு மாசமா இந்த பக்கம் வரதே இல்ல! வேலையில ரொம்ப பிஸியா..? என்ன வேலை இருந்தாலும் உன் ஜானு ஆன்டிய மறப்பியா எபி..? அம்மா வரேன்னு சொன்னாளே.. வரலியா?”, கொஞ்சலாய் பேசிக் கொண்டே கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவர் சத்தம் அலர்விழி காதில் விழுந்து கொண்டிருந்தாலும்..

 

மனோவா.. எபிநேசர்… எபி… இந்த மூன்று வார்த்தைகளும் தான் அவளுக்குள் எதிரொலித்தது!

 

அவர்களுக்குள் நட்பு கூட இன்னும் மலரவில்லை… இருந்தும் அவளுக்குத் தோன்றியதெல்லாம்… ‘அம்மா இதுக்கு சம்மதிக்கவே மாட்டாங்களே’ என்று தான்!

 

அம்மா அவளைச் சுற்றி வரைந்து வைத்திருந்த கண்ணுக்குத் தெரியாத எல்லைக் கோடு அவளைப் பார்த்து கோரமாக சிரித்தது. அன்று, அவனை விரும்பும் தன் மனம் மேல்.. தன் பலவீனத்தின் மேல் எரிச்சல் வந்தது. இன்று, விரும்பத்தைக் வெளிக்காட்டத் தடையாயிருக்கும் எல்லைக் கோட்டின் மேல், தன் இயலாமையின் மேல் எரிச்சல்.. கோபம் வந்தது!

 

‘மனோ..’ மனம் சத்தமில்லாமல் அவன் பெயரை உச்சரித்துப் பார்த்தது. அவனைப் போலவே அவன் பெயரையும் மிகவும் பிடித்தது, அதனால் கண்கள் கரித்தது. அதனால் கன்னம் நனைந்தது.

 

எல்லை தாண்டுமோ கொல்லை துளசி?

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!