அ25_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
கொல்லை துளசி எல்லை கடந்தால் 25_2
கடலூர்:
அலர்விழியோடு பேசி முடித்தபின், பெண்ணை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆவல் பெற்றவர்களுக்கு என்றால்.. பாட்டிக்கோ, அவளைப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம். சௌந்தர்யா பெற்றாலும் மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்த அன்னை இவர் தானே.
Advertisement
சகுந்தலா பாட்டிக்கு முதுமையின் நோவுகள் அவ்வப்போது எட்டிப்பார்க்க, பேத்தியைக் காணவேண்டும் என்ற தவிப்பு அதிகமானது. ‘கண் மூடும் முன் பார்த்துவிட மாட்டோமா?’ என்ற தவிப்பு! உடலில் வலிகள் பல! அதிலும் அவரின் முட்டு வலி, அவரை படுத்தி எடுத்தது.
Advertisement
அன்றும் அவர் படுத்தே இருக்க, தினமும் முட்டிக்கு மருந்திடும் நகுநாவிற்கு பாவமாய் போனது.
Advertisement
“ப்பா.. அண்ணா சொன்ன டாக்டர பாப்போம் பா.. ரொம்ப அவஸ்தபடுறாங்க”, என்று தகப்பனிடம் வந்து நின்றாள்.
Advertisement
“மாதவன் பேசினான் மா. ரெண்டு வாரம் கழுச்சு தான் அவரப் பாக்க முடியுமாம். அது வரைக்கும் இப்போ பாத்துட்டு இருக்கவர் குடுக்கற மருந்த குடுப்போம்.. இருந்து வைத்தியம் பாக்க சொன்னா எங்க தங்குறது?”
முன்பெல்லாம் சென்னைக்கு வேலையாய் போனால் அண்ணன் வீட்டில் தங்கிக் கொள்வது வழக்கம். பெருமையோ? பீத்தலோ? உறவில் யார் சென்னைக்கு வந்தாலும் அங்கு தான் தங்கியாக வேண்டும் என்பதை திரு மற்றும் திருமதி வைத்தி, வழக்கப் படுத்தியிருந்தார்கள். ஆனால் மாதவன் திருமணத்தின் பின் அவர்களோடு சௌந்தர்யா அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை.
அதுவும் மாதம் முன்பு திருமண வீட்டில் பாக்கியாவும் அமராவதியும் பேசிக்கொண்டிருப்பதை கேட்ட பின் அவர்களோடு உறவு பாராட்டப் பிடிக்கவில்லை. அம்பிகாவைக் கொண்டு அமராவதியைக் கணித்திருந்த கணிப்பு தவறென்று அன்றுதான் கண்டுகொண்டார் சௌந்தர்யா.
இவர்கள் பெண் வீட்டார். மணப்பெண், குணசாலி. படித்தவள்.. நல்ல லட்சணம். பணத்தில் புரளவில்லை என்றாலும் சௌந்தர்யாவிற்குத் தெரிந்த அளவில் அவர்கள் யாரிடமும் கையேந்தியதில்லை. ஆனால் பாக்கியாவிற்கு, தான் பெண் வீட்டார் என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லாது, “பாத்திங்களா அண்ணி பொண்ணுக்கு வந்த வாழ்வ. அப்பன் இல்ல. அம்மாக்காரிக்குச் சல்லிக் காசு செலவு வைக்காம கலக்டர் பையன வளச்சுப் போட்டுக்கிட்டா.. சாமர்த்தியம் தான்”, என்று ஆரம்பிக்க..
“வசதி இல்லனதும் பெத்து மேய விட்டுடுறாளுங்க.. கண்ணுக்கு லட்சணமா வசதியா இருந்தா போதும் மயக்கி மடியில போட்டுக்க வேண்டியது. அவ காதலிச்சாளாம்… ஒடனே பெத்தவளும் அடுச்சுது லாட்டரின்னு அவன் தலையில கட்டிவைச்சாச்சு. இந்த சாமர்த்தியம் நமக்கு வருமா? அடுத்த பொண்ணையும் இப்பிடியே மேய விட்டுக் கரை சேத்துடுவா”, பாக்கியாவின் கூற்றுக்கு சற்றும் சளைக்காமல் அமராவதி பதில் கொடுத்துகொண்டிருந்தார்.
கேட்டுக் கொண்டிருந்த சௌந்தர்யாவிற்குத் தலை சுற்றியது. மனித உருவில் யார் இவர்கள் என்ற எண்ணம் வராமலில்லை. பெண்ணை எங்கோ பார்த்து, பிடித்து.. பையன் வீட்டிலிருந்து அவர்களாகவே முன்வந்து பேசி முடித்த திருமணம் இது. எல்லாம் தெரிந்தும் இது என்ன பேச்சு? அப்படியே இது பெண் விருப்பப்பட்டு அதனால் நடக்கும் திருமணம் என்றாலும் இவர்களுக்கு என்ன வந்தது? மனசாட்சியை அடகு வைத்துவிட்டுப் பேசுவார்களோ?
“இப்பிடி பேசி பேசியே பெத்த மகன் இல்லன்னு ஆகிடுச்சு! இந்த பொம்பளைக்கு இன்னும் அறிவு வரல பாரேன்..”, கேட்டுக் கொண்டிருந்த தியாகுவிற்கும் மனவருத்தம் தான்.
அன்றோடு, இருந்த கொஞ்ச நஞ்ச தொடர்பும் பாக்கியா குடும்பத்தோடு விட்டுப் போனது. எதிரில் பார்த்தால் இரண்டொரு வார்த்தை. அவ்வளவே!
“முதல்ல பாட்டிய அவர்ட்ட காட்டுவோம் பா. என்ன சொல்றாங்கன்னு தான் பாப்போமே. அவசரத்துக்கு பக்கத்திலேயே ஏதாவது ஹோட்டல் இல்லாமலா போயிடும். பாத்துக்கலாம் பா..”, மகள் தெம்பூட்டினாள்.
இரண்டு வாரங்களுக்குப் பின், மகளுக்குத் துணையாய் அப்பா இருக்க, காரை வாடகை எடுத்து மாமியாரோடு மருமகள் சென்றார் சென்னைக்கு, மருத்துவரைக் காண.
மணித் துளிகள் கரைந்தது. மருத்துவரைக் கண இயலவில்லை. கூட்டம் வழிந்தது. வந்து இரண்டு மணி நேரம் ஆகியும் காத்திருப்பு தொடர்ந்தது. மாமியார் வேதனை காணச் சகிக்கவில்லை என்றாலும் சௌந்தர்யாவிற்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
“என்ன அத்த இன்னும் எவ்வளவு நேரம் தெரியலியே. நமக்கு முன்ன வந்தவங்க கூட நகர காணம்.. இன்னும் ரெண்டு மூணு மணி நேரமாது ஆகிடும் போல!”
“மாதவன் இவனைத் தான் சொன்னானா மா?”
“ஆமாத்த. பெரிய டாக்டர். அப்பாயின்மென்ட்டே மாதவன் ஃப்ரெண்டு தான் வாங்கி தந்தான்..”
“வந்தாச்சு. என்ன பண்ண. காத்திருப்போம். ஒரு கப் காபி கிடைக்குமா பாக்கிறியா மா. பசிக்க ஆரம்பிக்குது”
உதவிக்கு தெம்போடு யாரேனும் இருந்திருக்கலாம் என்றிருந்தது சௌந்தர்யாவிற்கு. அவருக்கும் பயண களைப்பு ஒரு பக்கம்.. இரண்டு மணி நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் வேதனை என்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். தங்க வேண்டியிருந்தால் மாமியாருக்கு தன் உதவி வேண்டுமென்று தியாகுவை அனுப்பாமல் தானே வந்திருந்தார்.
வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தவர் கண்ணில் பட்டான் பிரபல மருத்துவன். அவன் வாகனம் விட்டு இறங்கவும் கார் கதவைத் திறக்க ஓடிச் சென்றான் காவலாளி. எந்த அலட்டலும் இல்லை அவனிடம். சின்ன தலையசைப்பு காவலாளியைப் பார்த்து. கூட்டத்தில் தனியே தெரிந்தான். மதிக்கத் தக்க குணமும், உருவமும், பதவியும்!
வேக நடை போட்டு வந்துகொண்டிருந்தவன் முகத்தில் யோசனை ரேகை. கூடவே தீவிரம். குடிக்கொண்டிருந்த தீவிரம் மறைந்தது எதிரில் பார்த்த சௌந்தர்யாவைக் கண்டு. “அத்த.. யாருக்கு என்ன ஆச்சு? இங்க?”. தனித்து நின்றவருக்குப் பிடிமானமாய் மாறினான்.
அடுத்த பத்தாவது நிமிடம் எலும்பு மருத்துவரைப் பார்த்து, ஊடுக்கதிர், எம்.ஆர்.ஐ. உடனே எடுக்கப்பட்டது. பண முடிப்பு பாதி காலியானதும், மூட்டழற்சி (ஆர்த்ரட்டீஸ்) என்றார் மருத்துவர். குணப்படுத்த முடியாது. வலியைக் குறைக்க மருந்து சீட்டு எழுதி தரப்பட்டது.
‘இதுதான் முன்பே தெரியுமே.. இதற்கு தானா?’ என்றிருந்தது மாமியாருக்கும் மருமகளுக்கும்.
அவனுக்கான அறையில் காத்திருக்க, மருந்து சீட்டின் மருந்தும் , பசிக்கு உணவும் சௌந்தர்யாவின் கையில் வந்து சேர்ந்தது.
“ரொம்ப தாங்க்ஸ் பிரவீன்”, என்றவரை முறைத்தான்.
“என்ன அத்த? யாரோ மாதிரி தாங்க்ஸ் எல்லாம்?”
புன்னகைத்தார். அவன் உயரத்திற்குச் சற்றும் தன் குடும்பம் பொருத்தமல்ல என்று இவனிடம் எப்படிக் கூறுவதென்று அவருக்குத் தெரியவில்லை. முன் தோன்றாத எண்ணம் அன்றொரு நாள் அபிராமியின் பேச்சுக்குப் பின் தோன்றியது. நல்ல வேளையாக இன்றுவரை இவன்தான் ‘அந்த மருத்துவன்’ என்று மகளிடம் கூறி அவள் மனதில் ஆசையை வளர்க்கவில்லை!
“வீட்டுல எல்லாரும் எப்பிடி இருக்காங்க அத்த?”, அக்கறையோடு கேட்டான். அதில் அலர்விழியை பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகம்.
“அலர்விழி எப்பிடி இருக்கா அத்த? அங்க எல்லாம் செட் ஆகிடுச்சா?”
அவன் வாஞ்சை அவருக்குள் மணி அடிக்க, கூறிவிட்டார். “பிரவீன், உங்கள மாதிரி ஒருத்தர் என் பொண்ணுக்கு மாப்பிள்ளையா வந்தா அவள மாதிரி கொடுத்து வச்சவ இருக்க முடியாது. ஆனா உங்க வீட்டுக்கு மருமகளா என் பொண்ணு போனா அவ சந்தோஷமா இருக்க முடியும்ன்னு எனக்கு தோணல”
அவன் முகம் மாற.. “அத்த என்ன பேசறீங்க? அலர்விழிய நான் நல்லா பாத்துக்க மாட்டேன்னு எப்பிடி நீங்க நினைக்கலாம்?”, உரிமையோடு சண்டையிட்டான்.
“நான் உங்க வீட்டு மருமகன்னு சொன்னேன் தம்பி. உங்க அம்மா அப்பாட்ட உங்க விருப்பம் பத்தி சொல்லி பாருங்க. அவங்க சம்மதிப்பாங்கன்னு உங்களுக்கு தோணுதா? நீங்களும் இத்தன வருஷமா சொல்றீங்க… உங்க வீட்டு சார்பா உங்க சித்தி தான் பேசினாங்க. ஏன் உங்க அம்மா அப்பா பேச வரல?”
“அவ்வளவு தானே அத்த? ஒரு நல்ல நாள் சொல்லுங்க. குடும்பமா வரோம்.”
“சரி படாது தம்பி. அவங்க விருப்பமே இல்லாம தான் சரி சொல்லுவாங்க. பின்னாடி உங்க அம்மா அவள காயப்படுத்தினா… பச்! வேண்டாம் பா”
“அத்த ப்ளீஸ். நாலு வருஷத்துல என் மனசு பூர உங்க மக தான். உங்க பேச்ச மீறி அவட்ட நான் ஒரு வார்த்தை கூட என் மனசுல இருக்க விருப்பத்த சொல்லலை. என்னை மீறி யாரும் ஒரு வார்த்தை அவள சொல்ல மாட்டாங்க. நான் பாத்துக்கிறேன். நம்புங்க… அத்த.”
“இந்த வருஷம் ரெண்டு பொண்ணுங்களுக்கும் முடிக்கலாம்ன்னு நினைச்சிருந்தேன்! என்னவோ சரியா படலப்பா. கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க கூடவே இருக்க முடியுமா? உங்க அம்மா இப்போ ஒத்துகிட்டாலும் நீங்க இல்லாத நேரம் என் பொண்ண ஏதாவது சொன்னா.. அவ பொறுத்து போற டைப் இல்லப்பா. கண்டிப்பா அவளும் கூட பேசுவா. குடும்பத்தில நிம்மதி இருக்காது.”
“நான் இல்லாம, வேற பையனைப் பார்த்தாலும், அங்க அவ எப்பிடி இருப்பான்னு இப்போவே உங்களால சொல்ல முடியுமா? நீங்க பயப்படுற மாதிரி அங்க நடக்காதுன்னு சொல்ல முடியுமா உங்களால? வாழ்க்கைல நாளைய தினம் இருட்டுல தானே அத்த இருக்கு? என்னை நம்புங்க. அலர்விழி கண்டிப்பா சந்தோஷமா இருப்பா. எல்லாம் சரியா வரும் அத்த. அவ இருந்தா தான் நானும் நிம்மதியா இருப்பேன் அத்த. என் நிம்மதிய யாருக்காகவும் விட்டு கொடுப்பேன்னு நினைக்கிறீங்களா? அம்மாட்ட ரொம்ப முட்டிக்கிட்டா தனிக்குடித்தனம் போயிடப் போறோம். இப்போ எல்லாம் தனி குடித்தனம் சகஜம் தான? அப்புறம் என்ன அத்த?”
அவன் கூற்றில் பிழை இல்லையே.. அவர் அக்கா மகள், வாழ்க்கைப்பட்ட வீட்டில், திருமணம் வரை அவளைத் தாங்கியதென்ன? அடுத்த சில மாதங்களில் அவளைப் படுத்திய பாடு தான் என்ன? இவனுக்கு என்ன பதில் கூற.. நான்கு வருடமாக அவரின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்துக் காத்திருப்பவனிடம் என்ன சொல்ல? உண்மையிலுமே சௌந்தர்யா குழம்பிப் போனார். மகள் நிம்மதியோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தானே பெற்றோரின் ஆசை. அவர் யோசனையாய் அவனைப் பார்க்க,
“பாத்துக்கலாம் அத்த. சென்ட்ரல் மினிஸ்டர் பேர பிள்ளைகளுக்கு ஒரு மேஜர் சர்ஜரி, இன்னைல இருந்து ஒரு ஆறு மாசம் எடுக்கும் அது முடிய. அத முடிச்சு நான் ரிட்டர்ன் வந்த உடனே ரெண்டு கல்யாணமும் வச்சுக்கலாம். இப்போவே அம்மா அப்பாவும், சித்தி வீட்டில இருந்தும் வந்து பேசுவாங்க. அம்மா அப்பாவோட முழு சம்மதத்தோட நடக்கும். நீங்க கல்யாண வேலைய ஆரம்பிங்க. வேற எதையும் யோசிக்காதிங்க அத்த”
அபிராமியின் பேச்சைக் கேட்ட பிறகு தியாகு சம்மதிப்பாரா? மனிதன் உயிரே அவர் மக்கள் தானே? “சரியா வருமாப்பா? உன் மாமா ஒத்துக்கணுமே”
“நான் கிளம்பறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வரேன் அத்த. எல்லார் சம்மதத்தோட தான் இந்த கல்யாணம் நடக்கும்! அவ சந்தோஷமா என் கூட வழப்போரத நீங்க பாக்கதான் போறீங்க! நீங்க அலர்விழிட்ட பேசுங்க. இல்ல, நானே நேர்ல பார்த்து பேசறேன்.”
அவன் தீர்மானமாய் இருந்தான். அலர்விழியின் கரத்தை பிடிக்காமல் விடமாட்டான் என்று தோன்றியது.
