Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ31_2 – Shoba Kumaran’s – கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 31_2

 

இலக்கியா கிளம்பவும் பிரவீன் வந்து சேர்ந்தான். அவனும் முடிந்தவரை அலர்விழியை படுத்தக் கூடாது என்று நினைக்கத்தான் செய்தான்! நாய் வாலை நிமிர்த்த முடியாதென்பதால் அவன் நினைப்பும் அப்படி தான் போனது.

 



Advertisement

மதிய உணவு முடியும்முன் மெல்ல மெல்ல முதுகு வலி ஏறிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் அது கழுத்து தலை என்று கிளை பரப்ப ஆரம்பித்தது. வலி பொறுக்க முடியாது மருத்துவன் முன் நின்றாள்.

 

“ஒரு பெயின் கில்லர் தாங்க டாக்” என்று கேட்க, அவனோ மருத்துவராய் கேள்விகள் பல கேட்டு, நாடி ஆராய்ந்து, “பிரஷர் கொஞ்சம் அதிகமா இருக்கு. கண்ணு வரைக்கும் சிவந்திருக்கு. ஏன் இவ்வளவு ப்ரெஷர் எடுத்துக்கிற? உன் ஹெரிடட்ரி படி உனக்கும் ஹை-பிரஷர் வாய்ப்பு அதிகம். மெடிடேஷன் பண்ணு.

Advertisement

வலிக்குக் காரணம் தெரிஞ்சு தான் மாத்திரை சாப்பிடணும். வர வலிக்கெல்லாம்  பெயின்-கில்லர் போடாத. இப்போ உனக்கு ஸ்ட்ரெஸ் தான். ரெஸ்ட் எடுத்தா போதும்.” என்று கூறி, அவள் உடல் நிலை, வேறு மாத்திரை மருந்தேனும் உட்கொண்டாளா என விசாரித்து, “இத போட்டுட்டு கொஞ்ச நேரம் படு. அப்புறம், கண்டிப்பா எங்கிட்ட கேக்காம வேற எந்த மாத்திரையும் மருந்தும் இதோட எடுக்கவே கூடாது. சில மருந்து இதோட சேராது, அதுக்கு தான். மறந்திடாத! ரொம்ப ரொம்ப ஆபத்தில முடிஞ்சுடும்!” என்று மாத்திரை ஒன்றை தந்தனுப்பினான். 

Advertisement

 

மருத்துவன் உடனே அங்குப் பிரபலமாக, மார்க்கும் அவன் பங்கிற்குச் சிறிது நேரம் மருத்துவ ஆலோசனை பெற்று, ஆட்ரேயோடு விடை பெற்றான்.

 

Advertisement

“அந்த மாதிரி நாலு குடுங்க டாக். இப்போ எல்லாம் ஆஃபீஸ்ல ஓவர் வேலை. ஸ்ட்ரெஸ் ஏற ஏற கழுத்து இழுத்து பிடிக்குது!” என்று மருத்துவனிடம் மீண்டும் சென்று நிற்க,

 

“முதல்ல இத நான் உனக்குக் கொடுக்கவே கூடாது. அதுவே அஃபென்ஸ்(குற்றம்)! பாவம் பாத்து கொடுக்க நினைச்சா கூட என்ட்ட இருந்த கடைசி மாத்திரை அது! இது ப்ரிஸ்க்ரிப்ஷன்(prescription) மாத்திரை. ஓவரா ஸ்ட்ரெஸாகி டிப்ரெஷன் ஆகிறவங்களுக்கு கொடுக்கிறது.

சில நேரம் வரிசை கட்டி சர்ஜரி இருக்கும். முடியும் போது, போதும் டா-ன்னு தோணும். அப்போ மசில் ரிலாக்ஸ் ஆக நான் எடுத்துகிற மசில்-ரிலாக்சென்ட்(muscle relaxant) இது. சும்மா எல்லாம் எடுக்கக் கூடாது வெரி டேஞ்சரஸ் மெடிசின். நீ ஸ்ட்ரெஸ குறை. இல்ல வேலையை விட்டுட்டு ஊருக்கு வா! பொம்பளை பிள்ளையா வீட்ட மட்டும் கவனிச்சுகிட்டா போதாதா? எதுக்கு இந்த வேலை எல்லாம்?” என்று அனுப்பி வைத்தான்.

 

“எதுக்கு சுத்திட்டு இருக்க? கொடுத்த மாத்திரையை போட்டுட்டு படு விழி”, என்றவனிடம், “மூனரைக்கா போடுறேன் மனோ. அப்போ இவர் நாலு மணிக்கா கிளம்பவும் படுக்கச் சரியா இருக்கும்” என்று கூறி சென்றுவிட்டாள்.

 

சற்று நேரத்தில் அலர்விழிக்கு கைப்பேசி அழைப்பு வர, “நீ பேசு. நானும் வீட்டுக்கு ஒரு காள் போட்டு பேசிட்டு பொறுமையா வரேன்” என்று பாயலும் கிளம்பிவிட்டாள்.

 

வீட்டில் மூன்று மக்கள், அவரவர் வேலையை கவனித்துக்கொண்டு! ஒருத்தி அடுக்களையில், கைப்பேசியோடு. ஒருவன் சாப்பாடு மேசையில், ‘டேப்’போடு. மற்றவன் சோஃபாவில் அலுவலக மடிக்கணினியோடு.

 

அலர்விழி:

‘ஹப்பா.. முடிஞ்சுது! இன்னும் ரெண்டு மணி நேரம் தான். இவன் போனதும் மனோவ முதுக அமுக்கி விட சொல்லி நல்லா குறட்டை விடணும்! நாளைக்கு முழு நாளும் தூங்கியே கழிக்கணும்!’ அவள் கனவு கண்டுகொண்டிருக்க ஷிவானி அழைத்தாள்.

அவளுக்கு என்ன பிரச்சினையோ… அலுவலக வேலையைப் பிடித்துக் கொண்டு எப்பொழுதும் போல இவளிடம் சத்தம் போட, அலர்விழிக்கு இருந்த களைப்பிற்கும், வந்த கோபத்திற்கும், அவளும் தன் பங்கிற்கு ஷிவானியை வாங்கு வாங்கு என்று வாங்கிக் கொண்டிருந்தாள்.

அடுக்களையில் முழு எரிச்சலில் குட்டி போட்ட பூனை போல் நடந்து கொண்டிருந்தவள் கால்விரல் இடிபடவும், அது ஒரு பக்கம் வலி கொடுக்க, கோபம் முழுவதும் ஷிவானி தலைமேல் இறங்கியது.

பெண் அறிய வாய்பில்லை, அறைவாயிலிருந்த கண்ணாடி கப்போர்ட் அடுத்திருந்த அறைக்கு அவள் பிம்பத்தை பிரிதிபலித்து கொண்டிருப்பதை.

 

 பிரவீன்:

சாப்பாட்டு மேசை மேலிருந்த ‘டேப்’பில் பார்வையும், காதுகளில் ஹெட்-ஃபோனுமிருக்க, அலர்விழி அலறிக்கொண்டிருப்பதை அவன் அறியவில்லை.

ஏதோ யோசனையோடே தலை திருப்பியவன் பார்வையில் விழுந்தது கண்ணாடி கப்போடில் தெரிந்த அலர்விழியின் பிம்பம். பெண் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். கண்கள் உருட்டினாள்! பேசுவது போல் தெரியவில்லையே! எதிர்முனையில் இருப்பவரைத் திட்டிக் கொண்டிருப்பாள் போலும்.  குட்டிப்போட்ட பூனை போல் அங்கும் இங்கும் சென்றவள் திடீரென்று குதித்தாள். கையை உதறினாள். அவள் செய்யும் சேட்டைகளை பார்த்தவன் பார்த்தபடி புன்முறுவலோடு அமர்ந்திருந்தான்

 

எபி:

அலுவலக வேலையில் மூழ்கியிருந்தவன் பெருமூச்சோடு கைகள் கால்களை நீட்டி நெட்டி முறித்து கழுத்தை நாலா பக்கமும் திருப்ப, பார்வையில் விழுந்தான் முதுகு காட்டி அமர்ந்திருந்த மருத்துவன்.

தலை திருப்பி எதையோ பார்த்துக் கொண்டிருந்த மருத்துவன் முகத்தில் புன்முறுவல். ‘முத்தி போச்சு… லூசு சுவர பாத்து சிரிக்குது!’ நினைத்தவன் எழுந்தான் நீர் அருந்த!

 

அலர்விழி:

கால் விரல் இடிபடவும், வலியில் குதித்தாள். நின்ற வாக்கிலேயே புடவையை உயர்த்தி குனிந்து விரலை ஆராய்ந்தாள். வலி மட்டும் தான். வீக்கமோ, இரத்தமோ இல்லை. பட்டென்று நிமிரத் தலை விண்ணென்றது. குனிந்து நிமிர்ந்ததில் தலை சுற்றுவதுபோல் தோன்றியது. கழுத்து நரம்பெல்லாம் இழுக்க, வலி அதிகரித்தது.

இனி தாங்காது என்று மாத்திரையை விழுங்கி ஒரு எட்டெடுத்து வைக்க, புடவை தடுக்கியது. ‘ஆ இது வேற!’

கொசுவம் சொருகியிருந்த இடத்தை சரி செய்து கொண்டே நடந்தாள், நடுக்கூடம் நோக்கி.

 

பிரவீன்:

பெண் புடவையைச் சரி செய்யவும் திரும்பிக் கொண்டான்.

 

எபி:

நீர் குடிக்க, உணவு மேசை அருகே வந்தவன், ‘என்னத்த லூசு பாத்து சிரிச்சுது’ என்று பார்க்க, கண்ணாடியில் அலர்விழியின் பிம்பம், குனிந்து புடவையைச் சரிசெய்து கொண்டு! எபியால் ஏனோ பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

 

எபி, அலர்விழியின் பிம்பத்தைப் பார்த்துவிட, கண்கள் தன்போல் மருத்துவனை நோக்கியது. பிரவீன் சுதாரிக்கும் முன், தன் மேல் தவறில்லை என்று கூற வாய்ப்பு கிடைக்கும் முன், எபி விட்ட அறையில் மருத்துவன் அமர்ந்திருந்த வாக்கில் கீழே விழப் போக, பிடிப்பிற்காக கை துழாவ அருகிலிருந்த மேசை விரிப்பு கையோடு வர, பிரவீன் விழுந்து, மேசை விரிப்போடு பூசனியும், பூ கொத்தும், தண்ணீர் குவளையும் கீழே விழுந்தது.

 

சத்தம் கேட்டு அலர்விழி ஓடி வர பார்த்ததெல்லாம், மனோ கீழே கிடந்த பிரவீனை சட்டை பற்றி இழுத்து எழுப்பி, பளார் என்று முகத்தில் அறைந்ததை. பெண், கை கால் நடுங்க நின்றுவிட்டாள்.

 

“என்ன டா சொன்னேன் நேத்து? அவ பக்கம் உன் பார்வை போக கூடாதுன்னு சொன்னேனா? வாயால சொன்னா புரியாதா உனக்கு? சாகடிச்சுடுவேன் ஜாக்கிறத!”

 

உதறிவிட்டு தள்ளிப் போனவனை மீண்டும் அடிக்கப் போனவனுக்கு  இடையே புகுந்தவளுக்கு என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை. திடீர் அதிர்ச்சியில் தலை வெடித்துவிடும் போல் வலிக்க பெண்ணிற்கு பார்வை மங்க ஆரம்பித்தது. ஏற்கனவே வலித்துக்கொண்டிருந்த முதுகோடு தோள்பட்டையும் பிடரியும் தலையும் சேர்ந்துகொள்ள, அலர்விழிக்கு நிற்கவும் திராணி இல்லாமல் போனது.

 

“என்ன நடந்தது மனோ? ஏன் மனோ?” என்றவளுக்குச் சொட்டு ஜீவன் இல்லை உடலில்.

 

“அவனும் அவன் பார்வையும்! இவன் சரியில்லன்னு சொன்னேன் கேட்டியா டி?” முழு கோபத்தையும் குத்தகைக்கு எடுத்தவனாக, எபி!

 

“தேவ இல்லாம பேசாத எபெனேசர். என்னை என்ன உன்ன மாதிரி எப்பவும் ஒருத்தி மேல விழுந்து கிடக்கிற பொறிக்கின்னு நினைச்சியா?” சண்டைக்குத் தயாரானான் மருத்துவன்.

 

“ஐயோ அத்தான்… ஏன் அதையே சொல்லிட்டு இருக்கீங்க. அவர் அப்பிடி எல்லாம் கிடையாது. கொஞ்சம் சும்மா இருங்களேன்.” பெண் பதறினாள்.

 

“அவன பத்தி தெரியாம பேசுற அலர்விழி. அவன் ஒரு கேவலமானவன்” தன்னை ஒழுக்கம் கெட்டவன் என்றவனின் ஒழுக்கத்தை கடைபரப்பும் நோக்கம் மருத்துவனிடம்.

 

“தயவு செஞ்சு சும்மா இருங்கத்தான். அவரோட இருந்த பொண்ணு யாருன்னே தெரியாம அவர பத்தி தப்பா பேசாதீங்க ப்ளீஸ். அவர் கூட நான்…” அவள் கூற முயல, “அவனுக்குப் புரியவைக்க உன்ட்ட நான் சொன்னேனா… போடி உள்ள…” அவன் பங்கிற்கு எபி கத்தினான்.

 

இவன் கத்த… அவன் கத்த… இடையே ஜீவனற்று நின்றிருந்த பெண்ணிற்குத் தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

 

பிரவீன் வாயில் இரத்தம் வழிய… ஓடிச் சென்று துணிக்குள் மூட்டையாய் ஐஸ் கட்டிகளோடு விழி வர, அதைப் பார்த்த எபிக்கு கோபம் உச்சத்திற்குச் சென்றது. அதைப் பிடுங்கித் தூர எறிய, அது சென்றதோ, கண்ணாடி பேழையை நோக்கி.

 

சில்லு சில்லாக விழுந்த கண்ணாடி துகள்களுக்கு இடையே பதப்படுத்தப்பட்ட மலர்க்கொத்துகள். பார்த்தவள் நின்றுவிட்டாள்.

 

நடுக்கூடம் முழுவதும் உடைந்த கண்ணாடி துகள்கள், உடைந்த கோப்பையிலிருந்து தண்ணீர், சிதறிக்கிடந்த பூக்கள்! உக்கிரமாக ஒருத்தன். இரத்தம் சொட்ட ஒருவன். காரணம்? மருத்துவன் தன்னை பார்த்தான்!

 

‘நேற்று இரவு தானே சிறு குழந்தைக்குக் கூறுவது போல் கூறினேன்!’

‘ஏன் மனோ?’ பார்த்தவளை, “போடி அந்த பக்கம்” எனவும், “சண்டை வேண்டாம் மனோ. ப்ளீஸ் உள்ள போகலாம் மனோ” என்றாள் சத்தமில்லாமல்… வேண்டுதலாய்.

 

அவளை கவனிக்கும் நிலையில் அவனில்லை! அவன், மருத்துவன் தலையை உடைக்க தயாராக நிற்க, “ப்ளீஸ் அத்தான்… தயவு செஞ்சு உள்ள போங்க. சண்டை போடாதீங்க ரெண்டு பேரும். எனக்கு திராணி இல்ல!” எனவும் இருவரையும் பார்த்தவன், “என் மேல சத்தியமா, நான் தப்பான எண்ணத்தில உன்ன பாக்கல அலர்விழி! நீ புடவையில கை வச்சதும், உன் மேல சத்தியமா நான் திரும்பிட்டேன்! இதில நீ என்னை நம்பி தான் ஆகணும்!” என்றவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்ல, இருந்த தலை வலியோடு இந்த புது வலியும் சேர்ந்து கொள்ள, நின்றிருந்தவள் பெலனெல்லாம் வடிய தலையை பிடித்துக் கொண்டு, நின்ற இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

 

“விழி… கீழ கண்ணாடி.. எழுந்திரி” என்றவன் சத்தம் கேட்டதும், அலர்விழியின் பொறுமை அதன் எல்லையைக் கடந்திருந்தது.

 

“ரெண்டே ரெண்டு மணி நேரம் மனோ… முடியல உங்களால. அப்பிடி என்ன பெரிய பேரழகியா நான். இந்த கிளியோபட்டராவை பாக்கிறத தவிர அந்தாளுக்கு வேற வேலையே இல்லையா? ஏன் மனோ ஏன்?” பித்துப் பிடித்தது போல் அவள் கத்த,

 

“வாய மூடு! எல்லாம் உன்னால தான். நடு வீட்டில நின்னு தான் நீ புடவை கட்டுவியா? அது தான் அவன் அப்பிடி பாக்கிறான்… உன்ன சொல்லணும்!” அவன் வள்ளென்று விழ

 

‘எது நடந்தாலும் தான் தான் காரணமா?’  முழுவதுமாக அடிவாங்கிப் போனாள்.  “ஸ்டாப் இட் மனோ! நாலு பேரு நடுவில நடக்கும் போது தடுக்கிற புடவையைச் சரி பண்ற அளவுக்குத் தான் நான் அட்ஜஸ்ட் பண்ணினேன். எதையும் யாருக்கும் திறந்து காட்டல! என் லைஃப்ல இத விடக் கேவலமா என்னை யாரும் பேசியிருக்க  மாட்டாங்க!” உள்ளும் புரமும் வலிக்க, பெண் முழு உணர்ச்சி குவியலாக மாறியிருந்தாள்.

 

சண்டையை முடித்திருக்கலாம். சத்தியம் செய்தவனை நம்பாமல் இருக்க முடியவில்லை. எல்லாம் கைமீறிவிட்டிருக்க, யோசிக்காமல் அவள் மேல் எரிச்சலைக் காட்டினான்.

 

“அந்த கேடுகட்ட ஜென்மம் உன்னப் பாத்து பல்ல காட்டுறான். அது கூட தெரியாம… வீட்டில வேற ஆள் இருக்கது கூட நினைவில்லாம அடுக்களையில நின்னு தான் புடவையை கட்டுவியா? கேட்டா, கேவல படுத்துறேன்னு சொல்லுவியா?” சீறினான்.

 

கனல் மேல் சருகு விழ, வீசிய காற்றில், மெல்லப் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது சருகு!

 

ஒருவர் பொறுமை காத்திருக்கலாம்! ஒருவருக்கொருவர் எதிலுமே சளைத்தவர்கள் இல்லை என்பதால் வார்த்தைகளும் வாக்குவாதமும் தடித்தது.

 

தலையை உளியால் உடைத்துக் கொண்டிருந்த வேதனை, வார்த்தைகள் ஏற்படுத்திய காயம், அவமானம்… பெண்ணும் நிதானமிழந்தாள்.

 

“ஏன் இந்த புத்தி உங்களுக்கு! ஒரு தரம் உங்க முன்ன தெரியாம அவுத்து போட்டுட்டு நின்னேங்கிறதுக்காக அதைத்தான் எல்லார் முன்னாடியும் செய்ற மாதிரி அசிங்கமா பேசறீங்க!

நான் என்னமோ நடு வீட்டில அவன் என்னை பாக்கணும்னு வேணும்ன்னே நின்ன மாதிரியே பேசறீங்க! ஊர்ல் இருக்கவன் எல்லாம் பொறுக்கியும் இல்ல! உங்கள மாதிரி எப்போ இவ அவுத்து போடுவா… பாக்கலாம்ன்னு வெயிட் பண்றதுமில்ல!”

 

வார்த்தைகள் விழுந்துவிட்டது. கொட்டியவளாலும் அள்ள முடியவில்லை. கேட்டவனாலும் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

 

“என்ன சொன்ன?”

 

என்ன சொன்னாள்? எழுதி வைத்துப் படித்துச் சொல்லவில்லையே. என்றோ உள்ளே சென்று உறைந்து போன கசப்பான சம்பவம். மறந்துபோன நிகழ்வு! ஏன் இன்று வெளிவர வேண்டும்? தெரியவில்லையே…

 

பெண் முகம் விழுந்து போனது. அவனை காயப்படுத்த நினைக்கவில்லை. என்றோ அவள் பட்ட காயம் உள்ளேயே ஆராமல் இருந்திருக்க வேண்டும்! கவனமின்றி  வார்த்தையாய் வந்துவிட்டது.

 

“மனோ… ப்ளீஸ் மனோ. யோசிக்காம பேசிட்டேன். தப்பு தான். சாரி மனோ!” சண்டையை வளர்க்கவும் விருப்பமில்லை. இறுமாப்பைத் தூக்கிச் சுமக்கவும் திராணி இல்லை பெண்ணிற்கு!

 

“என்ன சொன்னன்னு கேட்டேன் விழி?” ஒட்டு மொத்த கோபமும் வார்த்தைகளாய் வெளிவந்தது.

 

“இதோட போதும். என்னால முடியல மனோ! உயிர் போர அளவுக்கு மனசும் உடம்பும் வலிக்குது மனோ. சாரி ப்பா” என்றவளின் கண்ணீர் கன்னத்தைத் தாண்டி கீழே இறங்க ஆரம்பித்தது.

 

“ச்ச… உன்ன போய்… உங்கிட்ட போய்… போடி”

 

“யோசிக்காம மனோ… ப்ளீஸ் மனோ” இதற்கு மேல் அவளுக்கும் என்ன கூறவேண்டும் என்று தெரியவில்லை.

 

அவன் மறையாது ‘உன்னைப் பார்த்தேன்’ என்று கூறிய அன்றே அவள் சண்டையிட்டிருந்தால் பெரிதாக தெரிந்திருக்காது. இதே வார்த்தைகள் அன்று வலித்திருக்காது. ஆனால் இன்று? இவ்வளவு நெருக்கத்திற்குப் பின்…? அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதீத கோபம் வாயை அடைத்துவிடும். சுற்றத்தைப் புறக்கணிக்கச் செய்யும்! அவனுக்கும் அப்படி தான் ஆகிப்போனது. மனதிற்குள் பூட்டி வைத்திருந்தவளைத் திரும்பிப் பார்க்க கசத்தது.

 

‘அவ்வளவு கீழாகவா தன்னை பார்க்கிறாள்? என்ற கோபம். கூடவே சுற்றி திரிவதால் தானே மதிப்பில்லை?’ அறைக்குச் சென்றவன், தேவையான பொருட்களை எடுத்து மடிக்கணினி பையில் திணிக்க, அறை வாசலில் நின்றிருந்தவளுக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை.

 

அலமாரியிலிருந்த மோதிர டப்பா கண்ணில் பட, எரிச்சல் தாளாமல் அதைத் தூக்கி எறிய, அது சுவரில் பட்டு தெறிக்க, உடைந்த துண்டின் கூர்முனை பெண்ணின் கன்னத்தை முத்தமிட்டு விழுந்தது. அவசியமே இல்லாமல் இருவர் இரத்தத்தை அந்த நாள் பார்த்தது.

 

“திட்டுங்க மனோ… பேசாம இருந்தா என்ன அர்த்தம்?”

 

மனதிற்கு நெருக்கமானவர் புறக்கணிப்பு போல் வலி கொடுக்கக் கூடிய விஷயம் ஒன்றில்லை. அவள் பேசுவதை எதையுமே காதில் வாங்காமல், எதுவும் பேசாமல் அவளை முற்றிலும் புறக்கணித்து, பையோடு வெளியே செல்ல, பார்த்து நின்றவளுக்கு அழவும் திராணி இல்லாமல் போனது.

 

“அவ்வளவு தானா மனோ? நம்மக் காதலுக்கு இவ்வளவு தான் பலமா மனோ? ஒரு வாரத்தைல எல்லாம் இடிஞ்சு போயிடுமா? சாரி மனோ. ப்ளீஸ் போகாதீங்க மனோ. எனக்கு சத்தியமா முடியலை மனோ. விட்டுட்டு போகாதீங்க மனோ… மனோ…”

 

‘அவ்வளவு தானா நான் உனக்கு? என்னைப் புரியவில்லையே உனக்கு’ என்ற கோபம், அலர்விழியின் அழுகையும் இயலாமையும் அவனை எட்டவிடவில்லை. அவளை, அவனின் சரி பாதி என்று மனதில் ஏந்தியிருந்தவளை முற்றிலும் புறக்கணித்தான்!

 

அவன் வெளியே செல்ல, உள்ளே நுழைந்தாள் பாயல். சூறாவளியில் மாட்டிய பூஞ்சோலை நிலையிலிருந்த வீட்டை பார்த்தவள் எதையும் கேட்கவில்லை. யார் கண் பட்டதோ? பெருமூச்சோடு, அலர்விழியோடு சேர்ந்து இடத்தை சுத்தப்படுத்த ஆரம்பித்தாள். பிரவீன் வந்தான். வந்தவன் நேரே அறைக்குள் சென்றுவிட்டான்.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!