Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 23

அங்கே நீல் வரும் காலடிச் சத்தம் கேட்டவுடன் அனன்யா அமைதியானாள்.

 

அவர்களின் மனதைப்போல் ஆரவாரமின்றி இருந்த கடலும், அந்த கடலின் உப்புக்காற்றும் ஒருவித அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தின. எதுவும் சரியில்லை என்பதுபோன்ற படபடப்பு நெஞ்சினுள் குடிக்கொண்டிருந்தது.

 



Advertisement

“உனக்கு அந்தக்கல் என்கிட்ட எப்படி வந்ததுன்னு தெரியனும் அவ்வளவுதானே…” என்று மெதுவாக அவள் அருகில் முட்டி போட்டு அமர்ந்து கேட்டான் நீல். அவன் கைகள் துப்பாக்கியை பிடித்திருந்தன. அவ்வளவு பக்கத்தில் அவனைப் பார்த்ததும் பயம் மீண்டும் அவர்களுக்கு உதறலைக் கொடுத்தது.

 

“மணிமேகலையை கைது செஞ்சு அழைச்சுட்டு போனபிறகு, நான் அங்க போய் இந்திரநீலத்த எடுத்துட்டேன். மயங்கியிருந்த பேட்ரிசியோவையும் தூக்கிட்டு அந்தக்கல் உதவியோட இங்கே வந்துட்டேன். அதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல…. ஆனா நீங்க எப்படி வந்தீங்கன்னு தான் நான் யோசிச்சு யோசிச்சு குழம்பிகிட்டு இருக்கேன்” என்று நீல் சொன்னான்.

Advertisement

 

Advertisement

இந்த கேள்வியை எதிர்பார்க்காத அனு சற்று தடுமாறினாள். சித்தர் பற்றி இவனுக்கு தெரியுமா தெரியாதா… தெரியலன்னா நாம சொல்லி மாட்டிக்க கூடாது.

 

அப்படி தெரிஞ்சிருந்தும் இவன் இந்த கேள்வியை கேட்டா, அதில் ஏதோ சூழ்ச்சியிருக்கு.

Advertisement

 

எப்படியும் அவன்கிட்ட சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.

 

“அது எங்களுக்கும் தெரியல… ஒருவேளை புராணத்தில் சொல்றதுபோல மணிமேகலையின் சக்தியா கூட இருக்கும்” என்று திடமாக தான் சொல்வது பொய்யென்று முகத்தில் துளியும் வெளிக்காட்டாமல் சொன்னாள்.

 

“என்னால இதை முழுசா நம்ப முடியல..” அவள் கண்களை நேராகப் பார்த்து நீல் சொல்ல, அந்த கூர்மையான பார்வை உண்மையை வெளியில் எடுக்கும் ஆயுதம்போல் தோன்றியது அனுவுக்கு.

 

கண்களை வேறுபக்கம் திருப்ப முயன்றவளின் தாடையைப் பிடித்து வலுக்கட்டாயமாக தன் முகத்துக்கு நேரே திருப்பினான் நீல்.

 

“இந்த விஷயத்துல நீ விரும்பினாலும் விரும்பலன்னாலும் என்கிட்ட எல்லா உண்மைகளையும் சொல்லித்தான் ஆகணும். இல்லன்னா உங்கள விட மாட்டேன்…” என்றான் தன் இறுகிய முகம் இன்னும் விகாரமாகும்படி பல்லை கடித்துக்கொண்டு. அவன் வலிமையான பிடியில் அனுவின் கன்னத்தில் விரல்கள் அழுத்தியதால் பதிந்த சிவப்பு தெரிந்தது.

 

“என்ன நீ பாட்டுக்கு மேல மேல அடுக்கிட்டே போற… உனக்கு தேவை அந்த கல்… அவ்ளோ தானே… ஒழுங்கா அவமேல இருக்க கைய எடுடா… இவ்ளோ நேரம் வயசுக்கு மரியாத குடுக்கணும்னு நெனச்சேன். உனக்கு அதுக்கு தகுதியில்ல…” இனியா பயத்தை உடைத்து கோபத்தை உமிழ்ந்தாள்.

 

“எனக்கு தேவை அந்த இந்திரநீலம் மட்டும் தான்… மரியாதை இல்ல.. சொல்லப்போனா நீ அவசியமே இல்ல… இவள வரவைக்க உன்ன நடுவுல இழுக்க வேண்டியதாயிடுச்சு… வேலை முடியற வரை அமைதியா இல்லன்னா உன் சத்தத்த என் ஒரு தோட்டா நிறுத்திடும்..” எழுந்து நடந்தபடி துப்பாக்கியை காட்டினான்.

 

அடி மனதின் ஆழத்தில் இருந்த பயத்தை தொண்டைக்குழிக்குள் கொண்டுவந்து நிறுத்தியது அவன் பேச்சு.

 

இதற்கு மேல் இவனிடம் பேசுவது இன்னும் சூழ்நிலையை கடினமாக்கும். அதனால் அமைதியே நலம் என்று இருவரும் முடிவு செய்தனர்.

 

◆◆◆

 

இனியா யோசித்துப்பார்த்தாள்….

 

கோதை அவ அப்பாவை அழைச்சிட்டு வந்து இந்திரநீலம் மித்ரன் மற்றும் அவன் நண்பர்கள் கிட்ட தான் இருக்குன்னு ரெண்டுபேரும் சேர்ந்து சொல்லி இனியாவ நம்ப வச்சாங்க.

 

முதல்ல இனியா பிரச்சனை வேணான்னு சொன்னாலும், பிறகு கோதை அந்த இந்திர நீலத்த அரசாங்கத்துல குடுக்காம சட்டத்துக்கு புறம்பாக இவங்களே வச்சுக்க போறாங்கன்னு சொன்னதும் தான் இனியா, வா போகலாம்ன்ன்னு எழுந்து போனா…

 

அங்க போய் மித்ரன்கிட்ட பேசிட்டு அவங்க அறைக்குத் திரும்பும் போது நீல் இந்திரநீலத்த கையில் வச்சு பாத்துக்கிட்டு இருந்தான்.

 

வெளியிலிருந்து விடியற்காலை சூரிய ஒளி அந்த இந்திரநீலத்தின் மேல்பட்டது. அது உள்ள வேகமா வந்து தண்ணி பாட்டில் எடுத்துக் குடிக்கப் போன இனியாவோட கண்ணுல படவும் அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.

 

இது தானே அவங்ககிட்ட இருக்குன்னு சொன்னாங்க… நம்மள நம்பவச்சு ஏமாத்திட்டாங்கன்னு நினைக்கும்போதே தவறுதலாக கையில் இருந்த பாட்டில் நழுவி கீழேவிழுந்தது.

 

அந்த ஓசை கேட்டதும் நீல் அவள் பக்கம் திரும்பினான். இனியா அந்த நேரம் அவன் முகத்தை பார்த்தபோது பயந்தே போனாள். அவள் சற்றுமுன் கோதையுடன் பார்த்த முகத்தில் இருந்த அப்பாவிபோன்ற பாவனை மாறி, ஒரு குரூரம் தெரிந்தது.

 

அவள் ஓட முயன்றபோது, கால் தரை விரிப்பில் தடுக்கி கீழே விழுந்தாள். நீல் இனியாவின் அருகில் மெல்ல மெல்ல நெருங்கி வந்து ஒரு நயவஞ்சக புன்னகையுடன் அவள் முகத்தில் ஒரு கைக்குட்டையை வைத்து அழுத்தினான். இனியா பேச்சு மூச்சற்று அந்த இடத்திலேயே மயங்கிப்போனாள்.

 

அவன் சொன்னதை வச்சு, அனுவுக்கும் இதே தான் நடந்துருக்கும்னு அவளால ஊகிக்க முடிஞ்சுது.

 

◆◆◆

 

“ஆதி… உனக்கு நீச்சல் தெரியும்ல…”மித்ரன் கேட்டவுடன் ஆதி திடுக்கிட்டு “எனக்கு நீச்சல் ஒன்னும் பிரச்சனை இல்ல… ஆனா ஆழம் தான் கொஞ்சம் பயம்” என்றான்.

 

தனக்கும் அதுதானே பிரச்சனை என்று தோன்றியது மித்ரனுக்கு.

 

“முதல்ல நாம பூம்புகாருக்கு போகணும். உனக்கு இந்த கப்பல செலுத்த தெரியுமா..?” என்று கேட்ட ஆதியிடம்,

 

“எனக்கு அதுல பயிற்சி இருக்கு… ஆனா இந்த கப்பல் சாதாரண கப்பல் இல்லையே..” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மாலுமி கப்பல் முழுதும் சுற்றி சரிபார்க்க அனுப்பியிருந்த ஆள் அங்கு வந்து சேர்ந்தார்.

 

அவரிடம் “ ஒரு பிரச்சினையில் மாட்டிருக்கோம். கப்பல் தலைவர் வந்தாதான் எங்களை காப்பாத்த முடியும்ன்னு அவர்கிட்ட கொஞ்சம் சொல்றீங்களா..? ஆனா நாங்க பேசினது காமிச்சுககாம கப்பல முழுசா நீங்க சுத்தி பார்த்துட்டு கீழே போங்க…”என்று ஆதி அவரிடம் கெஞ்சும் தோரணையில் பேசிக்கொண்டிருந்தான்.

 

அவனிடம் நடந்தவற்றை சொல்லி இவர்கள் உதவி கேட்பதை கண்காணிப்பு அறையிலிருந்த திரையில் நீல் பாத்துக்கொண்டிருந்தான்.

 

மாலுமியின் உதவியாளர் இவர்கள் இருந்த அறையிலிருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்து துப்பாக்கி சுடும் ஓசை ஒன்று கேட்டது.

 

அந்த ஓசையின் அதிர்வலைகள் ஓயும் நேரத்தில், ஏதோ கடலில் தொம்மென்ற சத்தத்துடன் ஒரு கனத்த பொருள் விழுந்தது.

 

அப்போது கப்பலின் அறிவிப்பு ஒலிபெருக்கிகள் சர் சர் என்று சத்தமிட்ட பின்,

 

“முட்டாள் தனமா ஏதாவது செஞ்சு, கடலுக்கு அடுத்த பலி கொடுத்துடாதீங்க..

 

மித்ரன்… !!!

 

சொல்லி தானே அனுப்பினேன்.

 

புத்திசாலித்தனமா காரியம் ஏதும் செஞ்சு தப்பிக்க பாக்காதன்னு… மறந்துபோச்சா..?” என்று கடுமையாக ஒலித்தது நீலின் குரல்.

 

◆◆◆

 

 

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ஆதியின் மனம் படபடவென்று அடித்துக் கொள்ளத்தொடங்கியது. அது யாராக இருக்கும் என்ற கேள்வி மனதை துளைத்தெடுத்தது.

 

மித்ரன் நீலின் செய்கைகளை நேரில் பார்த்ததால் அவன் எதற்கும் துணிந்தவன் என்பதை உணர்ந்திருந்தான்.

 

பேட்ரீசியோவுக்கோ இது முன்பே பரிச்சயமான ஒன்று. எனவே மூவரும் அங்கே ஓட முயற்சிக்க, மறுபடியும் ஒலிப்பெருக்கி சப்தமிட்டது.

 

“இப்போ கீழே விழுந்தது, துணை மாலுமி தான். உங்களுக்கு இந்தப் பொண்ணுங்க உயிரோட வேணும்னா, மேலும் நேரத்தைக் கடத்தாம விரைவா செயலில் இறங்குங்க… இதுதான் கடைசி எச்சரிக்கை… இனியும் தப்பிக்க முயற்சி செஞ்சா விளைவுகள் மோசமா இருக்கும்.” என்று எச்சரித்தான்.

 

மித்ரனுக்கு இனி அவன் தான் கப்பலை எப்படியாவது செலுத்தியாக வேண்டும் என்பது புரிந்தது.

 

வேறு எவரையும் உதவிக்கு அழைப்பது இந்நேரத்தில் ஆபத்தாகும் என்று நன்றாக அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

 

மூவரும் பூம்புகாருக்கு சென்றபின் கடலுக்குள் குதிப்பதாக முடிவு செய்தார்கள். மித்ரன் தன் மனதை ஒருநிலைபடுத்திக்கொண்டான்.

 

◆◆◆

 

கப்பலை இயக்குவதற்கு தயார் நிலையில் மாலுமி அறைக்கு சென்றான். மீண்டும் மீண்டும் அனன்யாவும் இனியாவும் அங்கு கட்டப்பட்டு இருப்பதை பார்த்த போது அவன் உள்ளம் வலிக்கத்தான்செய்தது.

 

இருந்தும் அவன் செய்தே ஆக வேண்டிய கடமை கண்ணுக்கு முன்னே காத்திருந்தது. இவர்களைக் காப்பாற்ற அவனுக்கு வேறுவழியில்லை.

 

மனதை கல்லாக்கிக்கொண்டு அவன் கப்பலை செலுத்தினான். ஒன்றரை மணி நேரத்தில் அவர்கள் பூம்புகாரை அடைந்தனர்.

 

முதல் நாள் இரவு அவர்கள் கப்பல் எங்கே இருந்ததோ, அதே இடத்தில் திசைகாட்டியின் துணைகொண்டு கப்பலை நிறுத்தினான். சற்று நேரத்திற்கெல்லாம் அது நீர்மூழ்கிக் கப்பலாக மாறியது.

 

கப்பலை நீருக்கடியில் இறக்கி, அந்த சுவர் எங்கே இருக்கிறது என்று ஆழம் பார்த்துக் கொண்டார்கள். அது நீர் மட்டத்திலிருந்து 25 மீட்டர் ஆழத்தில் இருந்தது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நேரடியாக நீருக்குள் செல்ல முடியாது.

 

அதனால் சரியாக அந்த சுவருக்கு மேலே நீர்மூழ்கி கப்பலை நிறுத்தி சாதாரண கப்பலாக மாற்றினான்.

 

பின்னர் இவர்கள் நீருக்குள் குதித்து இந்திரநீலத்தை எடுத்து வரவேண்டும். இந்திரநீலம் அந்த சுவரின் அடியில் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிவதே மிகப்பெரும் சவாலான ஒன்று.

 

 

 

ஆதியும் பேட்ரீசியோவும் நீச்சலுடைகளுடன் ஆயத்தமாய் நின்றிருக்க மித்ரனும் அவர்களோடு சேர்ந்துகொண்டான்.

 

நீல் முன்பு ஒரு முறை அங்கு சென்று வந்திருப்பதால் அவன் கட்டுப்பாட்டு அறையில் நின்றபடியே இவர்களுடன் தொடர்பில் இருந்தான்.

 

அவர்கள் அணிந்திருக்கும் நீர்புகாத உடையில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி வழியே அவனால் அனைத்தையும் பார்க்க முடியும்.

 

மூவரும் தொப்பென்று குதித்தவுடன் நீர்த்துளிகள் கப்பல் மேலே பட்டு தெறித்தன. நீர் தளும்பும் சத்தம் அனன்யாவுக்கு கேட்டது.

 

◆◆◆

 

“இந்த ஆள் சொல்றதால நடுக்கடலுக்குள் குதிச்சுருக்காங்க. உண்மைய தான் சொல்றானான்னு கூட தெரியல… எனக்கு ரொம்ப பயமா இருக்கு இனியா…. என்ன நடக்கும்னு தெரில…” என்று இனியாவிடம் அவள் தேம்பிக்கொண்டே சோல்ல இனியாவோ, “ஒன்னும் ஆகாது.. தைரியமா இரு அனு… எல்லாம் நல்லபடியாக நடக்கும்… இவன விடக்கூடாது… அந்த இந்திரநீலத்தை இவன் கைக்கு கிடைக்காமல் பார்த்துப்போம்” என்று அனுவுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு மெதுவாக சொன்னாள்.

 

அது நடக்குமா….?

 

◆◆◆

 

கடலுக்கு அடியில்…

 

இவர்கள் குதித்ததும் நீரில் அதிர்வலைகள் அடங்க சிறிது நேரம் ஆனது. அது அடங்கிய பின் நீருக்குள் மூழ்கி நீந்தத் தொடங்கினர். கடலின் ஆழத்துக்கு முன்னேறினர்.

 

“நீங்க போற திசை சரிதான்… அதேமாதிரி முன்னேறுங்க…”

 

“ஆழத்துக்கு போங்க… இன்னும்… இன்னும்…”

 

“அதோ அங்க ஒரு மேடு தெரியுதா… அதுதான் சரியான இடம்…”

 

இவ்வாறு நீல் தொலைத்தொடர்பு கருவி மூலம் இவர்கள் மூவரையும் வழிநடத்திக்கொண்டிருந்தான். அவன் கண்களில் பேராசை தாண்டவமாடிக்கொண்டிருந்தது. வாழ்நாள் கனவு நனவாகப் போகிறதென்ற உணர்வு குரூரத்தன்மையை குறைத்து பரபரப்பை அவனுள் ஏற்படுத்தியது.

 

அந்த சுவர் தற்போது ஒரு பவளப்பாறை போல காட்சியளித்தது. அங்கே இருக்கும் அனைத்தையும் இயற்கை அணைத்துக் கொண்டது. இப்படி பாசி பிடித்த இடத்தில் எவ்வாறு இந்திரநீலத்தைக் கண்டுபிடிப்பது என்று குழம்பிப் போனார்கள்.

 

 

 

அது பகலாகவே இருந்தாலும் ஆழம் என்பதால் வெளிச்சம் குறைவாகவே இருந்தது. இரண்டு வருடங்கள் அல்லது நான்கு வருடங்களுக்கு முன்புதான் நீல் இங்கே வந்திருப்பதால் பவளப்பாறை எங்கேனும் சிதைந்து இருக்கிறதா என்று ஆதி நோட்டமிட்டான்.

 

“நீ போற திசை சரிதான். கொஞ்சம் காலால ஒதச்சு அந்த பவள பாறையெல்லாம் ஒடச்சுவிடு.” நீல் சொன்னதை கேட்டு ஆதி திடுக்கிட்டான்.

 

இது இயற்கை கொடுத்த அறன் இல்லையா… இதபோய் உடைக்க சொல்றானே… வேற ஏதும் வழி இருக்கான்னு பாக்கணும் என்று நினைத்தான்.

 

ஆனால் நீருக்கடியில் அவர்களால் பேசிக்கொள்ள முடியவில்லை. இன்னொரு பிசகு என்னவென்றால், உடல்மொழியில் பேசிக்கொண்டாலும் நீலுக்கு தெரிந்துவிடும்.

 

அப்போது ஒரு இடத்தில் செங்கற்கள் சிறிதாக உடைந்திருப்பதுபோல் தென்பட்டன. அந்த இடத்தை நோக்கி அவர்கள் நீந்தும்போது வெகுதூரத்திலிருந்து நீல நிறத்தில், இருட்டில் ஒளிரும் தன்மையுள்ள ஏதோ தெரிந்தது.

 

இருண்ட வானத்தில் தோன்றும் நட்சத்திரங்கள் போல ஒளி குறைந்த அந்த இடத்தில் மின்னியது ஒரு நட்சத்திரக் கூட்டம்.

 

சற்றும் தாமதிக்காது, யாரும் எதிர்பாரா சமயத்தில் ஆதி அதனைநோக்கி நீந்திச்சென்றான்.

 

மித்ரன் இதனை கவனிக்காத நிலையில், பேட்ரீசியோ பதறிப்போனார்.

 

அவரால் பேச முடியவில்லை. நீச்சலில் நன்கு பயிற்சியுள்ளவர் என்பதால், ஆதிக்கு அருகில் நீதிச்சென்று அவன் காலைப் பிடித்தார்.

 

 

 

நீருக்குள் அழுத்தம் அதிகமிருப்பதால் நிலத்தில் இருப்பதுபோல் சுலபமாக முன்னேற இயலாது.

 

அருகில் சென்ற பின் தான் ஆதிக்கு அது என்னவென்று உறைத்தது. இந்நேரம் நெருங்கியிருந்தால் மரணம் நிச்சயம்.

 

அது இழுது மீன் அல்லது கடல் சொறி என்று அழைக்கப்படும் Jelly fish. நிலவு போலவே நீல நிறத்தில் இருப்பதால் இந்த வகை மீன்கள் நிலா இழுது மீன் என்று அழைக்கப்படுகின்றன.

 

அவை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்… ஆனால் இயற்கையின் விதியில் அழகு எப்போதுமே ஆபத்தின் அறிகுறி.

 

நெருங்கியிருந்தால் அதன் உணர் கொடுக்குகள் நொடிநேரத்துக்குள் நஞ்சை செலுத்தியிருக்கும்.அந்த நஞ்சு உடலில் மின்சாரம் பாய்ந்ததுபோல் ஆக்கி, மரணம் தந்திருக்கும்.

 

ஆதிக்கு இதயம் வெளியேறி விழுந்துவிடும் போல் அச்சம் தொன்டையை அடைத்தது. அதிவேகமாக நீந்தி மித்ரன் நிற்கும் இடத்திற்கு இருவரும் வந்தனர். ஆனால் மித்ரன் நீந்தாமல் நிலைகுலைந்து மூழ்கிக்கொண்டிருந்தான்.

 

◆◆◆

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!