Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மழை வரப் போகுதே

மழை 9

“எதுக்காக என்னை தவிர்க்குற கௌசி?” கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவேன் என்ற பாவத்தில் நின்றுக்கொண்டிருந்தான் ஹரி.

“இப்படி ரோட்ல வழி மறிச்சு நின்னா யாராது பார்த்து பிரச்சனை ஆகும்!” முன்னும் பின்னும் அவஸ்தையுடன் பார்த்துக்கொண்டே சொன்னாள் கௌசி.

“அதான் தனியா பேசலாம் வா’ன்னு மூணு நாளா கூப்பிடுறேன்… நீ என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்குற?” சலித்தவனுக்கு துளிர் கோபம் கூட வந்தது.

அவன் அத்தனை தைரியமாய் தன்னிடம் பேச, அதற்கு இடம் கொடுத்த தன்னை மானசீகமாய் கடிந்துகொண்டவள், முகத்தை கடுமையாக்கி, “இங்க பாருங்க! நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது! முன்ன பின்ன தெரியாத உங்ககிட்ட நான் நின்னு பேசுறதே தப்பு! இதுல எந்த தைரியத்துல என்னை தனியா கூப்பிடுறீங்க?” என்றாள்.



Advertisement

அவள் பேச்சில் திகைத்து நின்றான் அவன்.

“மரியாதையா வழியை விடுங்க! இல்லன்னா என் அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்!” அவன் முகம் பார்க்காது மிரட்ட,

“என்ன கௌசி என்னென்னவோ பேசுற? உனக்கும் என்னை பிடிக்கும் தானே? பார்த்து பார்த்து சிரிச்சியே! நான் லவ் சொன்ன பிறகு கூட சிரிக்க தானே செஞ்ச? இப்ப திடீர்ன்னு ஏன் யாரோ மாறி பேசுற?”

Advertisement

ஹரி கேட்க கேட்க கௌசிக்கு முகத்தை எங்கே கொண்டு வைப்பதென்றே விளங்கவில்லை.

Advertisement

தான் செய்ததை தானே அவன் சொல்கிறான்!

மறைமுகமாய் ‘சம்மதம்’ என்பதை போல நடந்துக்கொண்டுவிட்டு இப்போது அப்படியே மாற்றி பேசினால் பாவம் அவனும் என்ன தான் செய்வான்!?

அவனுக்காய் வக்காலத்து வாங்கியது அவள் மனம்.

Advertisement

வியர்த்த கைகளை பிசைந்துக்கொண்டு நின்றாள்.

இருபுறமும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த அந்த சாலையில் ஆள் நடமாட்டம் இருப்பது போலவே தெரியவில்லை.

யாரேனும் வந்தால் கூட அது சாக்கிட்டு ஓடிவிடலாம் என்று மனம் சொன்னாலும், ‘ஐயோ யாரேனும் இதை பார்த்துவிட்டு தந்தையிடம் சொல்லிவிட்டால்?’ என்ற ஐயமும் உடன் சேர்ந்து கையறு நிலையில் நின்றாள் பெண்.

“நான் உன்னை உயிருக்குயிரா லவ் பண்றேன்… நீ இல்லன்னா நான் செத்துடுவேன் கௌசி” கெஞ்சல் கடந்து கண்ணீர் குரலில் மன்றாடவே ஆரம்பித்துவிட்டான்.

‘என்ன சாவா?’ ஸ்தம்பித்துப்போனாள்.

‘எனக்காக உயிரை கூட விடுவானா? நான் அப்படி என்ன செய்துவிட்டேன் அவனுக்கு?’ பேதைக்கு அவன் பிதற்றல் பேரன்பாய் தெரிந்தது.

கண்ணீர் திரையிட்ட அவன் விழிகளை கண்டு அவள் தடுமாறி நின்ற கணம், தூரத்தில் பைக்கின் ஹாரன் ஒலி கேட்டது.

“யாரோ வராங்க… நான் போறேன்” நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை தள்ளிக்கொண்டு அவள் நகரப்போக, அதை தடுத்துப்பிடித்தவன், “எனக்கொரு பதில் சொல்லிட்டு போ கௌசி” என்றான்.

“யாராது பார்த்துட்டா பிரச்சனை ஆகிடும்! வழியை விடுங்க” அவள் கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவன் விடுவதாய் இல்லை.

சத்தம் வெகு அருகே கேட்க துவங்க, வருபவன் முகமறியா அந்நியனாய் இருக்க வேண்டும் என அவள் அவசர வேண்டுதல் வைத்த கணத்தில், பைக் ப்ரேக் அடித்து அவள் அருகே நின்றது.

திரும்பி பார்த்தவளுக்கு உடல் முழுவதும் நடுக்கம் ஓடி வியர்வை ஆறாய் பெருக, அவளை தடுத்து நிறுத்தியிருந்தவனுக்கோ அப்படி ஒன்றும் இல்லை. கவனமெல்லாம் அவளிடம் சம்மதம் பெற வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே!!!

‘மனோ மா..மா’ அவள் உதடுகள் தன்னியல்பாய் முணுமுணுத்தன.

வந்தவனை பார்த்து அவள் விதிர்த்து நிற்க, அவள் பார்வையை உணர்ந்தவன், எதிரே வாட்டசாட்டமாய் நிற்கும் புதியவனைக்கண்டு, “என்னங்க? ஒன்னும் பிரச்சனை இல்ல இங்க! நீங்க போங்க” என்றான்.

தலையில் இருந்த ஹெல்மெட்டை கழட்டி பெட்ரோல் டேன்க் மீது வைத்தவன், இருவரின் முகத்தையும் அளவிட்டபடி நிதானமாய் அவர்களை நெருங்க, கௌசிக்கு பயத்தில் உடல் தூக்கி வாரிப்போட்டது.

வருபவனின் திடகாத்திரமான தோற்றம் சற்றே கிலியை கூட்டினாலும் கௌசியின் முன்னே அதைக்காட்டிக்கொள்ள வழியின்றி தைரியம் போல நின்றிருந்தான் ஹரி.

கௌசியையும் அவள் சைக்கிள் மீது உடும்பாய் இருந்த அவன் கரத்தையும் கவனமாய் பார்த்த மனோகர், ஹரியை உறுத்து விழித்தான்.

அவன் பார்வையே அடிவயிற்றில் எதையோ உருள செய்தது அவனுக்கு.

இருப்பினும் தில்லாய், “அதான் சொல்றேன்ல இங்க ஒன்னும் பிரச்சனை இல்லன்னு… போங்க சார்!” என்றான்.

கௌசியை பார்த்த மனோ, “ஒன்னும் பிரச்சனை இல்லையா?” என்றான் இறுகிப்போன குரலில்.

“அது… மா…ம..” அவள் பேச ஆரம்பிக்கும் முன்னே, “அட என்ன நீங்க? அதான் நான் சொல்றேன்ல? நான் இவ முறை மாமன் தான்!” என்று ஹரி எகிறிய மறுநொடி,

“அப்போ நான் யாருடா?” என்று ஆவேசமாய் கேட்ட மனோகர் அடித்த அடியில் ஹரி சுருண்டு விழுந்தான் அச்சாலையில்.

அவனது எதிர்ப்பாரா அதிரடியில் மிரண்டுப்போய் ‘ஐயோ!’ என அலறிக்கொண்டு நின்றாள் கௌசி.

விழுந்துக்கிடந்தவனின் அருகே சென்றவன், “நீ இவளுக்கு முறைமாமனா? நாக்கை வெட்டிப்போட்டுடுவேன் ராஸ்க்கல்! இன்னொரு முறை சொல்லிப்பாரு தில்லிருந்தா!” உதட்டை மடக்கிக்கொண்டு மனோ கர்ஜனையாய் சொல்ல, தன்னைநோக்கி இரண்டெட்டு எடுத்து வைத்தவனை கண்டு பீதியில் இடுப்பால் உந்தி பின்னால் நகர்ந்தான் ஹரி.

“இன்னொரு வாட்டி உன்னை நான் பாக்கக்கூடாது! என் கண்ணுலையே படாம ஓடு! ம்ம்ம்!!” என்றதும், கிட்டத்தட்ட வாரி சுருட்டிக்கொண்டு ஓடினான் அவன்.

அவன் ஓடுவதை கோப மூச்சுகளோடு வெறித்த மனோகர், கௌசியின் புறம் திரும்பினான்.

அவள் முகத்தில் அப்பட்டமாய் பயம் தெரிந்தது. கை கால்கள் கூட லேசாக நடுங்க மிரண்டு நின்ற அவள் தோற்றத்தை கண்டு தன் முகத்தை இயல்பாக்க முயற்சித்தான் மனோகர்.

பைக்கில் ஏறி அமர்ந்தவன், “சைக்கிளை இங்கேயே நிறுத்தி பூட்டிட்டு என்னோட வா!” என்றான்.

மறுபேச்சின்றி சொன்னதை செய்தாள்.

வண்டி வீடு நோக்கி சென்றது.

வாசலில் இறக்கி விட்டதும், “ஒருமணி நேரத்துல மாடிக்கு வா!” என்றவன் நிற்காமல் சென்றுவிட்டான்.

கௌசிக்கு மனம் ‘திக் திக்’கென அடித்துக்கொண்டது.

மனோகரிடம் இருந்து இப்படி ஒரு ஆக்ரோஷத்தை அவள் கற்பனை கூட செய்திருக்கவில்லை அதுவரை.

‘மாமா ரொம்ப ஸாஃப்ட்… சத்தமா பேசக்கூட மாட்டாங்க!!!’

இப்படிதான் நினைத்திருந்தாள்.

ஆனால் இன்று…?!

‘மாடிக்கு வா!’ என்றுவிட்டான். போகாமல் இருக்க முடியாது!

‘திட்டுவாரோ? அப்பாவிடம் சொல்லிவிடுவாரோ? ஒருவேளை அடித்தால்?’

‘ச்ச ச்ச… மாமா என்னை அடிக்க மாட்டாங்க!’ இதில் மட்டும் ஏதோ ஒரு நம்பிக்கை அவளுக்கு.

முகம் கைக்கால் கழுவி, உடை மாற்றி, புவனா கொடுத்த சிற்றுண்டியை கொறித்துவிட்டு நேரம் பார்த்தாள். நேரம் சிட்டாய் பறந்திருந்தது.

நகர மறுத்த கால்களை கடினப்பட்டு இழுத்துக்கொண்டு ஒவ்வொரு படியாய் நின்று ஏறி அவள் உபரிகை அடைகையில், அவன் அறை வாயிலில் கைக்கட்டி எங்கோ வெறித்த பார்வையுடன் நின்றிருந்தான் மனோகர்.

அவன் நின்ற தோற்றம் வெகு நேரமாய் அவளுக்காக காத்திருப்பதை போல தோன்ற, மேலும் தாமதிக்க வைக்காமல், ‘வருவது வரட்டும்!’ என்ற தைரியத்துடன், “மாமா?” என்று அழைத்திருந்தாள் கௌசி.

வெறுமையான முகத்துடன் அவளை திரும்பி பார்த்தான்.

அவன் கண்களை சந்திக்க முடியாது பார்வையை திருப்பினாள் அவள்.

சுற்றி வளைக்காமல், “யார் அவன்?” என்றான் மனோகர்.

முதல் கேள்வியே அணுகுண்டாய் அவளை தாக்க, தடதடக்கும் தாடையை சமாளித்து, “தெரியாது மாமா!” என்றாள்.

அவன் முகத்தில் கடுமை ஏறியதை போல தோன்றியது.

“தெரியாதவனோட தான் ரோட்ல நின்னு பேசிட்டு இருந்தியா கௌசி?”

அவனிடம் எப்படி சொல்லி தப்பிக்கலாம் என சிந்தித்து சிரத்தில் ஏற்றி வைத்திருந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

“சத்தியமா தெரியாது மாமா! நான் பாட்டுக்கு போயிட்டு இருந்தேன், குறுக்க வந்து வண்டியை நிறுத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க! நானே யாராது வந்து காப்பாத்த மாட்டாங்களான்னு வேண்டிக்கிட்டு இருந்தேன்! நல்ல வேளையா நீங்களே வந்துட்டீங்க!”

பல பாவனைகள் கலந்து சொல்லி முடித்தவளை உற்று பார்த்தவன், “பொய்!” என்றான்.

கௌசிக்கு திக்கென்றானது.

அவள் அதிர்ந்த தோற்றத்தை பார்த்தவன், “உண்மைய சொல்லு!” என்றான்.

அப்போதும் தன்னை சமாளித்துக்கொண்டு, “நிஜமாவே அதான் மாமா…” என்று அவள் சொல்ல,

“நீ சொல்றது தான் உண்மைன்னா காப்பாத்த வந்த என்னைப்பாத்து நீ ஏன் பயப்படனும்? நியாயமா என்னை பார்த்ததும் நீ என்க்கிட்ட தானே ஓடி வந்துருக்கணும்? அதே இடத்துல அசையாம நின்னு எதுக்கு என்னை பாத்து நடுங்குன?” என்றவன்,

“அவனை நான் அடிச்சப்போ நீ கத்துன! எவனோ ஒருத்தனை அடிச்சா உனக்கு வலிக்குதா கௌசி?” என்று கேட்க, அதற்குமேல் ஒன்றும் இல்லை என பொய் சொல்ல முடியாமல்/பிடிக்காமல் தன் பக்க தவறையும் சேர்த்து அத்தனையும் சொல்லி முடித்தாள்.

“மாமா… நான் சிரிச்சது தான் மாமா என் தப்பு! மத்தபடி நான் எந்த தப்பும் செய்யல! அவர் அந்த போட்டோக்கடைக்காரருக்கு உறவு! அதுக்கூட அவரே சொல்லிதான் தெரியும்! நான் தனியா எங்கயும் போகல, பேசல, பழகல…” அழுகையோடு அவள் சொல்லிக்கொண்டே போக,

“உன்மேல தப்பு இல்லங்குறப்போ நான் கேட்டதுமே சொல்றதுக்கு என்னடா?” என்றான் மனோகர். அவன் குரலில் தான் அத்தனை கரிசனம். இந்த வீட்டிற்கு அவன் வந்த நாளில் இருந்து இப்படியொரு குரலில், தொனியில் அவன் பேசி இவள் கேட்டதாக நினைவு கூட இல்லை.

அதில் இன்னுமே அவள் அழுகை கூட, “பயமா இருந்துச்சு மாமா! அப்பாக்கிட்ட சொல்லிடுவீங்களோன்னு!” என்றாள் தேம்பிக்கொண்டே.

“சொன்னா தான் என்ன?” நிதானமாய் கேட்டவனை கலவரத்துடன் பார்த்த கௌசி, “அப்பா கொன்னே போட்டுடுவாரு! படிப்பையும் நிறுத்துட்டு உடனே கல்யாணம் செஞ்சு வைக்குறேன்னு சொல்லிடுவாரு மாமா! உங்களை கெஞ்சிக்கேட்குறேன்… தயவுசெஞ்சு அப்பாக்கிட்ட சொல்லிடாதீங்க மாமா! இனி நான் யார் பக்கமும் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன்… ப்ளீஸ்” முகமெல்லாம் சிவந்துப்போகும் அளவுக்கு அழுகையுடன் கெஞ்சினாள்.

அவள் அழுகையை காண சகியாதவனாய் முகத்தை திருப்பிக்கொண்டவன், “உன்னை அழவைக்கவோ, கெஞ்சவைக்கவோ நான் அப்படி கேட்கல… நம்ம செய்யுற சின்ன தப்பு, பெரிய விபரீதத்துல கொண்டுப்போய் விட்டுடும்ன்னு சொல்லத்தான் நினைச்சேன்! ஆனா, உனக்கே எல்லாம் தெரியுதுங்குறப்போ இனி நான் எடுத்து சொல்ல ஒன்னும் இல்லை!” என்றவன், மேலும்,

“இந்த வயசுல தான் தடுமாறாம திடமா நிக்கணும்! அப்படி ஒருவேளை தடுமாறிட்டா அதோட வலி காலாகாலத்துக்கும் நெஞ்சுல ரணமா இருக்கும்! இதை மட்டும் மனசுல வச்சு பார்த்து நடந்துக்கோ கௌசி” என்றான்.

குடும்ப கௌரவம், சாதிப்பெருமை, செல்வாக்கு, மரியாதை என சொல்லி வகுப்பெடுக்காமல், அவள் மனதை மட்டுமே முன்னிறுத்தி அவன் சொன்ன இரண்டொரு வார்த்தைகள் அவள் மனதில் ஒரு உறுதியை கொடுத்தது.

‘இனி என்ன நடந்தாலும் படிப்பை தவிர வேறெதிலும் மனதை அலைப்பாய விடவே கூடாது’ நன்றாய் மனதில் சொல்லிக்கொண்டாள்.

தன்னறைக்குள் வந்து அமர்ந்தவளுக்கு, மனோகர் ஒருவேளை இந்த விஷயத்தை வீட்டில் சொல்லியிருந்தால்…? என்று கற்பனை தோன்ற, நினைக்கவே உடல் நடுங்கியது.

அப்படி செய்யாமல் தன் மீது அக்கறை எடுத்து அவன் தணிவாய் பேசியதில் அவள் மனதில் அவன் மீதான நல்லெண்ணத்தை அது வலுவாய் கொடுத்திருந்தது.

ஆனால், மறுவாரமே அவளது உறுதியும், மனோகரின் மீதான நல்லெண்ணமும் துணிக்கொண்டு துடைத்ததை போன்று ஓடியிருந்தது, கைகால்களில் கட்டுடன் நின்றிருந்த ஹரியை கண்டதும்…

அதன் தொடர்ச்சி…

“என் மேல அக்கறைப்பட நீங்க யாரு?” என மனோகரிடம் முகத்தை சுழித்துக்கொண்டு நின்றிருந்தாள் கௌசி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!