Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 6

6

வாசலில் நின்று, “ரோஷிணி… ரோஷிணி” என சத்தமிட்டவனின் வருகை இரு பெண்களுக்கும் கைகால்களில் நடுக்கத்தை உண்டுப்பண்ண, “என்னடி வரமாட்டான்னு சொன்ன?” நடுங்கிக்கொண்டே வினவினாள் சங்கவி.



Advertisement

“எனக்கென்னடி தெரியும் இப்படி வந்து நிப்பான்னு?” என்றவள், “கத்துறவன் உன் பேரையும் சேர்த்து சொல்ல வேண்டியது தானே? நாசமா போறவன், என்னை மட்டும் ஏலம் போடுறான்” என்ற ரோஷிணிக்கு நெஞ்சுக்கூடே தடதடத்தது, தூரத்தில் அவள் தந்தையின் பைக்கை கண்டதும்.

“போச்சு… நான் செத்தேன்! என் கடைசி ஆசை கூட என்னன்னு கேட்காம உயிரோட புதைச்சுடுவானுங்களே! நான் என்ன செய்வேன் பெருமாளே!” அப்படியே மடங்கி அமர்ந்து தலையை தாங்கிக்கொண்டவளை கண்டு அவள் அருகே அமர்ந்த சங்கவி,

Advertisement

Advertisement

“என்னை மட்டும் கோர்த்துவிட்டுடாதடி… புதைக்குற வரைக்கும் கூட நானெல்லாம் உயிரோட இருக்க மாட்டேன்! என் அப்பா பாத்தாலே போதும்.. அங்கேயே நான் செத்துடுவேன்!” கண்களில் கண்ணீர் திரள சொன்னாள்.

வெடுக்கென நிமிர்ந்து அவளை முறைத்த ரோஷிணி, “இந்த அறிவு ஊரு சுத்தனும்ன்னு மூக்கை உறிஞ்சும்போது எங்கடி போச்சு?” என்று சூடாக கேட்க, கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது சங்கவிக்கு.

Advertisement

அந்நேரம் இன்னொரு பைக் சத்தமும் கேட்க, இருவரும் எழுந்து பார்த்தனர். தெரு முனையில் இருவரின் தந்தையும் பைக்கில் அமர்ந்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

கீழே, “ரோஷிணி…!” மீண்டும் சத்தம் எழ, ஒரு முடிவோடு, “சங்கவி, பணத்தை எடு!” என்றாள்.

“எதுக்குடி?”

“அப்பாங்க வர முன்னாடி அவன்கிட்ட கொடுத்து அனுப்பிடலாம்! இந்த பணத்துக்காக தானே இங்க நின்னுட்டு இருக்கான்!” என்றதும், சங்கவி வேகமாய் பணத்தை எடுத்து கொடுக்க, இருவரும் மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

அந்த பழங்காலத்து பெரிய வீட்டில் மச்சிலில் இருந்து இறங்கி கூடத்தை கடந்து முன்புறம் ஓடி, வாசல் படியில் இறங்குவதற்குள் இரு தந்தைகளும் வந்துவிட்டிருந்தனர்.

ஓடி வந்த பெண்களின் கால்கள் சடன் ப்ரேக் போட்டு நின்றது.

சங்கவி மிகவும் நடுங்கிப்போய், “மாட்டுனோம் டி” என்று சொல்ல, “விடு! அவன் பேசுறது புரிஞ்சா தானே? இங்க யாருக்கு இங்க்லீஷ் தெரிய போகுது” என்றாள் ரோஷிணி.

அந்த ஒரு விஷயத்தில் கொஞ்சமாய் ஆசுவாசமடைந்தவர்கள், மெல்ல நடந்து பத்தடியில் இருந்த வாசலை நோக்கி சென்றனர்.

அதற்குள், “யாருப்பா நீ? என்ன வேணும்?” பார்க்க வெள்ளைக்காரனை போல இருக்கும் ஒருவனை தன் வீட்டின் முன்னே கண்ட குழப்பத்தில் பரமேஸ்வரன் கேட்க,

அவனோ, “ரோஷிணி!” என்றான் தயங்காமல்.

“பாடைல போறவன்” பல்லைக்கடித்தாள் ரோஷிணி. அவன் அவள் பேரை சொன்னதுமே சத்தியநாதனின் கண்கள் மகளின் மீது தீ ஜூவாலையை கக்க ஆரம்பிக்க,

“அப்பா, இவன் யாருன்னே எனக்கு தெரியாதுப்பா!” என்றாள் அவள்.

இப்போது இரு தந்தைகளும் அவனின் முன்னே வந்து, “யாரு நீ? எதுக்கு ரோஷினியை கேட்குற?” என்றனர்.

பரமேஸ்வரன் வேட்டியை மடித்துக்கட்ட, சத்தியநாதன் நீளக்கை மடிப்புகளை சுருட்டிவிட சண்டைக்கு தயாராவதை போல அவர்கள் செய்ததில் அக்கம்பக்கம் இருந்தவர்கள் எல்லாம் கொஞ்சகொஞ்சமாய் இவர்கள் வீட்டு வாசலை நெருங்கினர்.

“என்னப்பா பிரச்சனை?”

“யாரு இந்த வெளிநாட்டு தம்பி?”

“என்ன வேணுமாம் இந்த பையனுக்கு?” ஆளாளுக்கு குரல் கொடுக்க, அவர்களை கை நீட்டி நிறுத்திய பரமேஸ்வரன், “யாரு நீ?” என்று சைகை செய்தார்.

அவன் வந்ததில் இருந்து நடந்தது அத்தனையும் ஒன்றுவிடாமல் கவனித்துக்கொண்டிருந்தான் ஜேகோப். ஒருவரிடமும் சிநேக பாவம் இல்லை. அவன் பார்த்த படங்களில் கூட ஒன்று இரண்டு முகம் சிரிப்பை ஏந்திக்கொண்டு ஓரமாய் நிற்கும். இங்கே அதற்குக்கூட வழி இல்லை. உள்ளிருந்து இருபெண்களின் தாய்மார்களும் சத்தம் கேட்டு வெளி வந்தனர்.

ரோஷிணியின் தாய் தேவிக்கு தான் ஜேகோப்’பை பார்த்ததுமே அடையாளம் தெரிந்தது. அவனை அங்கு கண்டதில் திகைத்துப்போனார்.  சங்கவி அன்னை ருக்மணி என்ன நடக்கிறது என்று புரியாமல் மகள் அருகே வந்து நின்றுக்கொள்ள, அங்கிருந்த ஒருவருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை.

ஜேகோப் பார்க்க ரிச்சர்ட் போலவே இருப்பது கூட முக்கிய காரணம்! ஆனால், அந்த வெளிநாட்டு சாயல் பரமேஸ்வரனுக்கு விரும்பத்தகாத பல நினைவுகளை கிளறிவிட,  சில வருடங்களுக்கு முன் இதே போல வாசலில் வந்து நின்ற ரிச்சர்டை நியாபகப்படுத்தியது.

அதை தொடர்ந்தே பல சில நிகழ்வுகளும் கண்முனே வர, அதுக்கொடுத்த எரிச்சலில், “யாரு நீ? எதுக்கு ரோஷினியை கேட்குற?” என்று கடுப்பாக வினவினார் பரமேஸ்வரன்.

ஜேகோப் ஒன்றும் சொல்லாமல் கையில் இருந்த அட்டையை நீட்டினான். புருவ சுளிப்போடு அதை அவர் வாங்கிப்பார்க்க, அந்த அட்டையில் ரோஷிணி என்ற பெயரோடு அவள் முழு விலாசமும் எழுதப்பட்டிருந்தது.

எட்டிப்பார்த்த ரோஷிணி, “பெரியப்பா! அது என் ஸ்கூல் பிரன்ட் ஒருத்திக்கு கல்யாணம்! அவதான் என் பேருக்கு பத்திரிக்கை அனுப்பி வச்சுருக்கா!” என்றாள்.

பத்திரிக்கையை அவளிடம் கொடுத்தவர், “அதை எதுக்கு இவன் எடுத்துட்டு வந்தான்?” என்றார் பொதுவாய்.

சுற்றி நின்றவர்களுள் ஒருவர், “அதை ஏன் கேக்குற பரமு? நம்ம போஸ்ட் மேனு சுந்தரம் மாத்தல் வாங்கிட்டு போன பிறகு இப்போ புதுசா வந்துருக்கானே ஒருத்தன்… அவன் ஒரு தபாலும் ஒழுங்குமுறையா குடுக்குறதே இல்லை! எதாவது வந்தா நம்ம தான் நேர்ல ஆபீஸ் போய் வாங்கிக்கிட வேண்டியதா இருக்கு… இல்லையா இப்படி ரோட்’ல வரவன், போறவன் கிட்ட எல்லாம் குடுத்துப்புடுறான்!” என்று சாடியவர்,

“அவனை பத்தி சர்காருக்கு ஒரு லெட்டர் எழுதி போட்டாதான் சரிவரும்” என்று முடிக்க, அவரை தொட்டே, “ஆமா கணேஸா, என் எல்.ஐ.சி ரசீது கூட நாலஞ்சு மாசமா வீட்டுக்கு வரலன்னு போய் கேட்டா, சாவதானமா எடுத்து நீட்டுறான்” என்றார் இன்னொருவர்.

இந்த பேச்சு இப்படியே நீள, புதியவனை ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்த பரமேஸ்வரன், “அதான் கொடுத்தாச்சு’ல? போக சொல்லு!” என சொல்லிவிட்டு உள்நோக்கி திரும்பினார்.

“எக்ஸ்க்யூஸ் மீ?” ஜேகோப் வாயை திறக்க, அவன் குரலில் சலசலப்பு அடங்கி, எல்லோரும் அவனை கவனிக்க ஆரம்பித்தனர்.

திரும்பிய பரமேஸ்வரனுக்கு அவன் முகத்தை பார்க்க முடியாமல் ஏதோ ஒரு உணர்வு வந்து உள்ளுக்குள் அடைத்தது. பாசம்… அதை மீறிய கோபம்…! வேண்டும்… ஆனால், வேண்டாம்! அப்படியொரு கலவையான உணர்வு. அவனை நேர்க்கொண்டு பார்த்து அதை வளர்த்துக்கொள்ள அவர் விரும்பவில்லை.

“ஐ’யம் ஜேகோபியன், இன் ஷார்ட் ஜேகோப்! ஐயம் கம்மிங் ப்ரம் ஆஸ்ட்ரேலியா” சரளமான அவன் ஆங்கிலத்தை புரிந்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு மொழியறிவு இருந்திருக்கவில்லை.

சத்தியநாதன், “என்ன சொல்றான்?” என்று கேட்க, “அது ப்பா! அவன் பேரு ஜேகோப்பாம், ஆஸ்ட்ரேலியா’ல இருந்து வரானாம்!” என்றாள் ரோஷிணி. அவளுக்கு உள்ளுக்குள் சந்திரலேகா ட்ரம் பீட் ஒலித்துக்கொண்டிருந்தது.

“அதுக்கென்ன பண்ணனுமாம்! போக சொல்லு அவன” என்றார் அவர்.

“சரிப்பா!” என்றவள், “ப்ளீஸ் கோ… ப்ளீஸ் ப்ளீஸ் கோ!” என்றாள் கண்களால் கெஞ்சிக்கொண்டு.

அவனோ, “நோ, ஐ வான்ன டாக் டு தெம்” என்றான்.

சத்தியநாதன் எரிச்சலாய், “இப்போ என்னவாம்?” என்று கேட்க, “அதுப்பா… ஊருக்கு திரும்ப போக காசு இல்லையாம்! ஹெல்ப் கேக்குறான்” என்றவள், “பாவமா இருக்குப்பா! ஏதாவது குடுப்போமே” என்றதும், சலித்துக்கொண்டு சட்டை பாக்கெட்டை தடவியவரை தடுத்தவள்,

“நான் கைல வச்சுருக்கேன்ப்பா… நான் குடுக்குறேன்” என்று சொல்லி, கையில் சுருட்டி வைத்திருந்த காசை கையில் மறைத்துக்கொண்டே அவனிடம் நீட்டி, கண்களால், “ப்ளீஸ்…ப்ளீஸ்” என கெஞ்சினாள் அவள்.

காசுக்காக தானே நிற்கிறான்? கொடுத்தால் போய்விடுவான் என்று நினைத்தவர்களும் அப்படியே அங்கிருந்து கலைய, தேவிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

அன்று காலை கூட தேவகி பேசினார் தான்! ஒருவார்த்தை மகன் வரப்போவதை பற்றி தன்னிடம் சொல்லவில்லையே என்ற மனத்தாங்கல் இருந்தது தேவிக்கு. ஆனாலும், கண்முன் நிற்பவனை அப்படியே திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற பதைபதைப்பு அதிகமாய் இருந்தது.

அதற்கு தகுந்தாற்போல எல்லோரும் கலைந்துப்போகவும் செய்வதறியாது நின்றார் அவர்.

ஜேகோப் ரோஷிணியின் முகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. பார்த்தால் தானே அவள் கெஞ்சல் புரிய!?

“டேக் யுவர் மணி, ப்ளீஸ் கோ” சின்ன குரலில் அவனுக்கு மட்டும் கேட்க்கும்படி அவள் சொல்ல, வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்த பரமேஸ்வரனை பார்த்தபடியே நின்றவன்,

“லெட் மீ கம் இன்சைட்!” (என்னை உள்ள வரவிடுங்க) என்றான் சத்தமாக. அதில் திரும்பி பார்த்தவர் முகத்தில் அப்பட்டமான எரிச்சல்.

“என்ன சொல்றான்?” அடிக்கவே வருவது போல அவர் கேட்க, ரோஷிணி பயந்துப்போய், “இதோ போய்டுறேன்னு சொல்றான் பெரியப்பா” என்றாள்.

“இல்லையே, அவன் அப்டி சொல்ற மாதிரி இல்லையே” என்ற பரமேஸ்வரன், “யாருடா நீ?” என்றார் அவனை நெருங்கி.

“ஐயம் யுவர் நெப்ஃயூ”

“என்னா?” என்றவர் ரோஷினியை பார்க்க, அவளுக்கு பெரிதாக அர்த்தம் விளங்கவில்லை. ஊருக்குள் இருக்கும் அரசாங்க பள்ளியில் தமிழ்வழி கல்வி, அடுத்து ஊரில் பெருமை பேச வேண்டி மட்டுமே ஊரின் கடைக்கோடியில் காட்டு பங்களா போல பெயருக்கு மட்டும் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பட்டபடிப்பு!

அவள் அறிந்த மொழியறிவு இவ்வளவு தான்!

“அதாவது ப்பா… அவன்…” ரோஷிணி சமாளித்து சொல்ல வருவதற்குள்,

“நான்…உங்க…மருமகன்னு…சொன்னேன்!” அழுத்தமாய் பிசிறின்றி அவன் வாயில் இருந்து வார்த்தைகள் வெளிவர, கண்விழி தெறித்து விழும் அளவுக்கு மூச்சு விட கூட மறந்து அப்படியே நின்றாள் ரோஷிணி.

இங்கு வந்ததில் இருந்து அவள் முகத்தை கொஞ்சமும் ஏறிட்டு பார்த்திராதவன், இப்போது அவளை நன்றாக பார்த்தான். அவன் விழிகள் ஆயிரம் வசைப்பாடல் பாடியது. அவன் பார்வை வீச்சில் நா உலர எச்சில் கூட்டி விழுங்கினாள்.

ரோஷிணிக்கே இந்த நிலை என்றால், சங்கவியை கேட்கவும் வேண்டுமா? மயங்…கி மயங்….கி வருது, என ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டாள்.

இளம் பெண்களின் மீது வைத்த க்ளோசப்பில் பெரிய தலைகளை மறந்துவிடகூடாதே!?

அவன் ‘நான் உங்கள் மருமகன்’ என்றதும், “என்னடா சொன்ன?” என ராஜ்கிரண் போல அண்ட்ராயர் தெரிய வேட்டியை தூக்கிக்கொண்டு அவன் நெஞ்சில் மிதிக்க பரமேஸ்வரன் ஓடி வர,

“உங்க தங்கச்சி தேவகி பையன்!” என்ற அவனது அடுத்த தகவலில், செருப்பில் சாணிப்பட்டு விட்டதை போல கீழே இறங்காமல் அந்தரத்தில் அநாதரவாய் நின்றது அவரது கொழுத்த கால்கள்.

இந்த உவமை உருவகம் எல்லாம் ஜேகோப்’பின் மண்டைக்குள் உற்பத்தியானது. அவன் நடப்பதை எல்லாம் அவன் பார்த்த படங்களை வைத்தே ஒப்பிட, எதிரில் நிற்பவரை பார்க்க சிரிப்பு வரும்போல இருந்தது.

“தேவகி பையனா?” கூட்டத்தில் ஒருவர் கேட்க, அங்கே பெரும் சலசலப்பு. ஆளாளுக்கு பேச ஆரம்பித்தனர்.

ஜேகோப்’பின் பார்வை பரமேஸ்வரனை தாண்டவில்லை. அவர் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை படிக்க முயன்றுக்கொண்டிருந்தான்.

இந்த கலவரத்துக்கு இடையில் தேவி வேறு தேவகிக்கு ஃபோன் போட்டிருந்தார். நடப்பதை எல்லாம் அவர் வாயில் இருந்து அறிந்துக்கொண்டிருந்த தேவகிக்கு ஒரே படபடப்பு.

“எதுக்கு இங்க வந்த?” சில நிமிட அமைதிக்கு பின்னே பொறுமையை இழுத்துப்பிடித்து கேட்டார் அவர்.

“இது என் அம்மா வீடு. இங்க என் தாத்தா பாட்டி இருக்காங்க! அவங்களை பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டேன்! அதான் வந்தேன்!”

“எவனும் தேவையில்லன்னு தானே ஓடி போனா உன் ஆத்தா?” ஆங்காரமாய் கத்தினார் அவர். அவர் போட்ட சத்தத்தில் உள்ளிருந்த வீரைய்யன் வெளியே வந்துவிட்டார்.

“ஆமா!” என்றான் ஜேகோப் கூலாக.

“போனவங்களுக்கு திரும்ப இங்க என்ன வேல? உன்னை அனுப்பிவிட்டு திரும்ப ஒட்டிக்கலாம்ன்னு பாக்குறாளா உன் அம்மா? சொல்லிவை, எத்தனை வருஷமானாலும், ஏன் செத்தே போனாலும் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லன்னு!!!” அத்தனை அழுத்தமாய் அவர் கத்த, வீரையனுக்கு அவர் கண் முன்னே நிற்பவனையும், தன் மகன் சொல்வதையும் கூட்டி கழித்து பார்க்க, நம்பமுடியாத திகைப்பு!!!

‘தேவகி மகனா?’

 ‘என் மகளின் வாரிசா?’ கண் நிறைய அவனை நிரப்பிக்கொண்டிருந்தார்.

மனதுக்குள் திடீரென ஒரு நம்பிக்கை.

கமலம் பிழைச்சுடுவா! அவளுக்கு ஒன்னும் நடக்காது! இந்த எண்ணம் ஒரு நொடியில் விதையாய் விழுந்து விருட்சமாய் பரவியது.

“தப்பு பண்ணது அவங்க தானே? நான் என்ன செஞ்சேன்? எனக்கு கொஞ்ச நாள் இங்க, உங்கக்கூட இருக்கனும்ன்னு ஆசையா இருக்கு! அதான் வந்தேன்!”

“வரவன் போறவன் எல்லாம் தங்க இது ஒன்னும் சத்திரம் சாவடி இல்ல!” இப்டி சொன்னதும், “வாட்?” என்றான் ஜேகோப்!

பரமேஸ்வரன் முறைக்க, “இல்ல, தமிழ் பேசுவேன்! ஆனா, இவ்ளோ டீடைல்’ட்டா புரியாது” என்று சொன்னதும்,

“பேசுற பாஷை கூட விளங்காத இடத்துல உமக்கென்னப்பா சோலி? வந்த வழியே கிளம்பு!” என்றார் முகத்தில் அறைந்தார் போன்று.

“பரமு? என்ன பேசுற? வீடு தேடி அவ்ளோ தொலைவுல இருந்து வந்துருக்கு! அதுக்கிட்டப்போய் பழம்பகை எல்லாம் பேசுறியே!?”

“அட விடப்பா! இன்னும் எந்த காலத்துல இருக்க நீயெல்லாம்?”

“வாசல்லையே நிக்க வச்சா எப்படி? உள்ள கூப்பிடு!” இன்னும் பல குரல்கள் இதே பொருள் கொண்ட உள்ளடக்கத்தில்  வெளிவர, கல்லை போல நின்றிருந்தார் பரமேஸ்வரன்.

“நீதான் ஏதாவது சொல்லேன் சத்தியா! சிலையாட்டம் நிக்குறியே!” வயதான கிழவி ஒன்று சொல்ல, காதிலேயே விழாததை போல நின்றிருந்தார் அவர்.

சத்தியநாதன் என்னதான் உறவுக்காரர், ஒன்றுக்குள் ஒன்று என்றாலும் இது பரமுவின்  ‘சொந்த குடும்ப பிரச்சனை’ என்றதால் குறுக்கே தலையிடவில்லை.

பரமு, “எல்லாரும் கொஞ்சம் நிறுத்துங்க! யாரும் என் வீட்டுக்கு வந்து நாட்டாமை பண்ண தேவையில்லை. இது என் வீடு. இந்த வீட்டுல யார் இருக்கணும், இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியவன் நான்!” என்றவர்,

“அந்த ஓடுகாலி மட்டும் இல்ல, அவ சம்பந்தப்பட்ட யாருக்கும்… எதுக்கும்… எப்பவுமே இந்த வீட்டுல இடம் கிடையாது… புரிஞ்சுதா?” அவர் வார்த்தைகளில் அத்தனை திண்ணம்.

நினைத்ததை விட கடினமாய் இருக்கும் மாமனை ஆச்சர்யமாய் பார்த்தான் ஜேகோப்!

ஒரு காதல் திருமணம் செய்வது என்ன அத்தனை பெரிய குற்றமா? நினைக்கவே சிரிப்பாக இருந்தது.

‘சில்லி பீபிள்’ என எண்ணிக்கொண்டான்.

இதற்கு மேல் நின்று போராட வேண்டாம் என தோன்றிவிட, அங்கிருந்து திரும்பி செல்ல போனவனை, “நீ உள்ள வா கண்ணு” என்ற குரல் அப்படியே நிறுத்த, கண்களில் நீர் தளும்ப, மெலிதான தள்ளாட்டத்துடன் அவனை நோக்கி சென்றார் வீரைய்யன்.

தந்தையின் இந்த செய்யலை எதிர்ப்பாராத பரமேஸ்வரன் அதிர்ந்துப்போய், “அப்பா?” என்று விளிக்க,

“இது இன்னமும் என் வீடு தான் டா!” என்ற ஒரே வரியில் மகனின் வாயை அடைத்தார் வீரைய்யன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!