Skip to content
Post Views: 3,487
“என்னடா என்னவோ உனக்குன்னு ஒன்னும் இல்லாத மாறி பேசுற?” சத்தியன் கடிய,
“வீடு இல்லையேடா? இல்ல இத்தனை வருஷம் ஒண்ணா இருந்துட்டு இனிமே தான் கோச்சுக்கிட்டு தனியா போக முடியுமா?” தன் பேச்சுக்கு மரியாதை இன்றி தந்தை செய்துவிட்டது பரமுவால் தாளமுடியவில்லை.
“ப்ச்… என்ன நீ சும்மா போறதுலையே இருக்க? இன்னைக்கு வந்தவனுக்கு வீட்டை குடுத்துட்டு, நீ வெளில போவியா? அவன் பேரன்’னா நீ மகன்! உனக்கு அப்பறம் தான் அவனுக்கு உரிமை! நீ ஏன் உன் உரிமையை விட்டுக்கொடுக்கணும்?” சத்தியன் கேட்க, அது வேலை செய்தது.
Advertisement
“அதானே… நான் எதுக்கு அவனுக்காக வீட்டை விட்டு போகணும்… இது என் வீடு!”
Advertisement
“அதேதான்… உன் வீடு… உனக்கு தான் முழு உரிமை! நீ உள்ளே போ” சத்தியன் சொன்னதும் ஒரு நொடி தயங்கினாலும், மறுநொடி வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு திமிராக வீட்டிற்குள் சென்றார் பரமேஸ்வரன்.
Advertisement
ஜேகோபை அழைத்துச்சென்ற தாத்தா நேரே மனைவி இருந்த அறைக்கு சென்றார். அங்கே மாத்திரையின் வீரியத்தில் மயக்கத்தில் அவர் இருக்க, “இதான் உன் அம்மத்தா!” என்றார் ஜேகோபிடம்.
Advertisement
உடல் உபாதையில் தேகம் மெலிந்து, வாடிய தோற்றத்தில் அவர் இருந்தாலும், ஜேகோப் கண்களுக்கு தேவகியின் சாயலை அவரிடம் தேடி பெற முடிந்தது. அவன் பார்த்துக்கொண்டே இருக்க,
“அவ தூங்குறா! நாளைக்கு பேசலாம்!” என்றவர் வெளியே அழைத்து வந்தார். அந்த பெரிய கூடத்தின் நாற்பக்க தூண்களில் இரண்டை ரோஷிணியும் சங்கவியும் பிடித்துக்கொள்ள, மிச்சம் இரண்டை ருக்மணியும் தேவியும் ஆக்கிரமித்திருந்தனர். தேவி அப்போதும் தன் அலைபேசியை துண்டித்திருக்கவில்லை.
கூடத்தின் நாற்காலிகளில் பரமுவும் சத்தியனும் அமர்ந்திருக்க, அங்கே ஜேகோபை அழைத்துக்கொண்டு வந்த வீரைய்யன், “உன் பேர் என்ன?” என்றார். அவனிடம் தங்குதடையற்ற பேச்சு அவருக்கு வரவில்லை. தயக்கம் இருந்தது. ஒருவேளை அவன் தோற்றம் தேவகியை ஒத்திருந்தால், இந்த தயக்கம் இருந்திருக்காதோ என்னவோ?! அவன் தோற்றத்தில் முழு வெள்ளைக்காரனாய் இருக்க, மனதில் உடனே ஒட்ட மறுத்தது.
“ஜேகோபியன்” அவன் சொன்னதும்,
“என்ன?” என்றார் புரியாமல்.
பல்வரிசை காட்டாது சிரித்தவன், “ஜேகோப்… இல்லனா ஜாக்’ன்னு கூப்பிடுங்க தாத்தா” என்றான். ஆனால், அதுவே அவருக்கு கடினம் போலும்.
“ஜக்கா?” அவர் விளங்காது கேட்க, ‘களுக்’கென வந்த சிரிப்பை வேகமாய் வாயை பொத்தி அடைத்தாள் ரோஷிணி. உண்மையில் ரோஷிணிக்கும் சங்கவிக்கும் வேப்பிலை அடிக்கும் அளவுக்கு அதிர்ச்சி.
தன்னை தேடித்தான் அவன் வந்திருக்கான் என்றே அவர்கள் நினைத்திருக்க, என்றோ ஓடிப்போன அத்தைக்கு இப்படி ஒரு அம்சமான மகன் பிறந்து, இத்தனை வருடம் கழித்து வாசலில் வந்து நிற்பான் என கனவில் கூட நினைக்கவில்லை அவர்கள். நடந்த கலவரத்தை வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது தான் லேசாக உணர்வு வந்திருந்தது.
“ஜக் இல்ல… ஜாக்…” அவன் திருத்த, அப்போதும் வீரைய்யனுக்கு பெயர் ஒப்பவில்லை.
“இதான் பேரா?” அவர் கேட்க, “ம்ம்ம்?” யோசித்தவன், “பப்பூ’ன்னு சொல்லுங்களேன்! டேட் அண்ட் மாம் அப்படி தான் அட்ரெஸ் பண்ணுவாங்க என்னை!” என்றிட, அவருக்கு அந்த ‘ஜக்கை’ விட இந்த ‘பப்பு’ பிடித்துப்போனது.
“பப்பூ!” சொல்லிப்பார்த்தவர், திரும்பி மருமகளை தேடினார். அவர் பின்னே தூணோடு தூணாக இருந்த ருக்மணியை கண்டதும், “அம்மாடி, பப்பூக்கு ஒரு ரூமு ரெடி பண்ணிக்குடு” என்று சொல்ல, இதற்கென்றே காத்திருந்ததை போல,
“வயசு பொண்ணு இருக்க வீட்டுல பையனை தங்க வைக்குற அளவு இங்க எல்லாருக்கும் புத்திக்கெட்டு போய்டுச்சு போல” என்று ஆக்ரோஷமாய் எழுந்தார் பரமேஸ்வரன்.
புருவங்களை சுருங்கி மகனை முறைத்த வீரைய்யன், “என்ன பேசுற நீ? கடல் மாதிரி வீடு கடக்கு… அதுல ஒரு அறைல இவன் இருக்குறதுல உனக்கென்ன பிரச்சனை?” கேட்க,
“கடல் மாதிரி வீடு கடந்தாலும் வெளில இருந்து பாக்குறவன் கண்ணுக்கு எல்லாரும் ஒரே வீட்ல இருக்குறதா தானே தெரியும்? இந்த பய இங்க தங்குனா நாளைக்கு என் மவளை எவன் கட்டுவான்?” பரமுவிற்கே தான் சற்று அதிகமாக தான் பேசுகிறோம் என தெரிந்தது. ஆனாலும் பேசினார்.
ஜேகோப், ‘ஸ்டே பண்ணா மேரேஜ் ஆகாதா? ஸ்ட்ரேஞ்’ என்று தோன்றியது.
ருக்மணிக்கு பயம், எங்கே தந்தைக்கும் மகனுக்கும் சண்டை மூண்டுவிடுமோ என்று!
“என் பேத்தி மேல எனக்கும் அக்கறை இருக்கு! அவளுக்கு ஒரு தலைகுனிவுன்னா அது நம்ம குடும்பத்துக்கும் தான்! என் பேரன் இங்க தங்குறது அவளை எந்த விதத்துலையும் பாதிக்காது” வீரைய்யன் திண்ணமாய் சொல்ல,
“அது சரி! உங்க வீடு உங்க இஷ்டம்! நாங்க எதாவது சொல்ல முடியுமா? அண்டி பொழைக்குறவங்க வாயை மூடிக்கிட்டு தான் இருக்கணும்” பரமு இப்படி வெடுக்கென்று சொல்லிவிட, வீரைய்யன் ‘என்ன பேசுறான் இவன்?’ என்பதை போல திடுக்கிட்டுப்போனார்.
சத்தியன், “பரமு, சும்மா இரு!” சன்னமாய் அதட்ட, “வாயை மூடிட்டேன் டா, வாயை மூடிட்டேன்! இனி பேசக்கூட நமக்கெல்லாம் உரிமை கிடையாது” என்று அதற்கும் அவர் பேச, வீரைய்யனுக்கு அப்போதான் உரைத்தது. தான் அத்தனை பேர் முன்னும் ‘இது என் வீடு’ என சொல்லியது மகனை தாக்கி விட்டது என்று!
அப்படி முகத்தில் அறைந்தார் போல பேசியிருக்கக்கூடாது என்று இப்போது புரிய, சற்று தணிந்தார்.
“வீடு தேடி வந்து நிக்குறான்… என்ன பண்ணனும்ன்னு சொல்லு” மகனிடமே அவர் கேட்க,
“இங்க அவன் தங்கக்கூடாது… மீறி தங்க வச்சா நான் என் பொண்ணை கூட்டிக்கிட்டு வேற எங்கானும் போறேன்” என்றுவிட்டார்.
“என்னடா நீ?” வீரைய்யன் நொந்தவராய் பேச வர, “மாமா… எங்க வீட்ல தங்கட்டுமே” என்று வாயை திறந்தார் தேவி. எங்கே அவனை திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற பதட்டம் இப்போதும் அவரை விட்டு போகவில்லை. அவனை இப்படி பந்து போல வைத்து எல்லோரும் விளையாடுவதும் பிடிக்கவில்லை என்றதால், கணவனை கூட கலந்தாலோசிக்காமல் அவர் கேட்டுவிட,
“உன் வீட்ல வயசு பொண்ணு இல்லையா?” என்றார் சத்தியநாதன். கேள்வி சாதாரணமாய் இருந்தாலும் அவர் கேட்ட தொனி, அவரது கோபத்தை தேவிக்கு காட்டியது. நாக்கை கடித்துக்கொண்டார். அவசரப்பட்டு பேசிவிட்டோம் என புரிந்தது.
வீரைய்யன் அப்படியே அங்கிருந்த நாற்காலியில் தளர்ந்து அமர, சூழ்நிலையை கிரகித்துக்கொண்ட ஜேகோபிற்கு தான் இங்கே தங்குவதில் அவருக்கு இஷ்டம் இல்லை என புரிந்துப்போக, “தாத்தா, நான் வெளில ஸ்டே பண்ணிக்குறேன்! நீங்க பாதர் பண்ணிக்காதீங்க” என்றான். அவர் எந்தவித பதிலும் சொல்ல முடியாது அமர்ந்திருக்க, தேவி கண்களாலேயே கணவனிடம் கெஞ்சினார்.
அவர் கண்களும் உதடுகளும் சத்தமின்றி ஆயிரம் ‘ப்ளீஸ்’ போட, தொண்டையை செருமியவர், “பெரியப்பா…! என்ன இருந்தாலும் நம்ம வீட்டுக்குன்னு வந்த பையன்… வெளில தங்க விடுறது நல்லது இல்லை! நமக்கு கௌரவமும் இல்லை! அதுக்காக பரமுவை நோகடிச்சு இங்க தங்க வைக்கவும் முடியாது! அதனால, இருக்குறவரைக்கும் என் வீட்டுல இருக்கட்டும்…!” என்று சத்தியநாதன் சொல்ல, தாத்தா நிமிர்ந்து ஜேகோபை பார்த்தார்.
அவன், “எனக்கு ஓகே தாத்தா” என்றதும்,
“ரொம்ப தொலைவுல இருந்து வந்துருக்க, அலுப்பா இருக்கும்… நீ போய் படு, நாளைக்கு பொழுது ஆறமர பேசுவோம்!” என்றார் தாத்தா. அவருக்கு தெரியாதே அவன் இங்கே வந்து மூன்று தினங்கள் ஆகிவிட்டதென்று.
“தேவி? புள்ளையை கவனிச்சுக்கோ! என்ன சாப்பிடும் என்னன்னு கேட்டு பக்குவமா செஞ்சுக்குடு! புதுசா எதையும் குடுத்து உடம்புக்கு ஒத்துக்காம போயிடப்போகுது!” வீரைய்யன் அக்கறையுடன் சொல்ல, அதற்கே காத்திருந்ததை போல விரைந்து வந்த தேவி, ஜேகோப் கையில் இருந்து ட்ராலியை வாங்கிக்கொண்டு, “வா பப்பூ போலாம்” என்றார்.
“நோ ஆன்ட்டி… நானே கொண்டு வரேன்”
“இருக்கட்டும் இருக்கட்டும்… முதல்ல வா! வந்தவனுக்கு ஒரு வாய் தண்ணிக்கூட குடுக்கல இன்னும்” அவர் யதார்த்தமாய் சொல்லிவிட்டு வெளியேற, ருக்மணிக்கு சுருக்கென்றது. இருக்கும் நிலவரத்தில் தான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்திருந்தால் என்ன கலவரம் ஆகியிருக்கும் என உர்ரென்று அமர்ந்திருந்த கணவனை பார்த்து புரிந்துக்கொண்டவர் மௌனமாய் நகர்ந்தார்.
அவனை நிற்கவே விடாமல் தரதரவென இழுத்துக்கொண்டு பக்கத்து வீடான தங்கள் வீட்டிற்குள் வந்தார் தேவி உடன் சத்தியநாதனும்.
கூடத்திற்கு வந்தவருக்கு அவனை எங்கே தங்க சொல்வது என குழப்பம்! அவசரத்திற்கு எந்த அறையும் துப்புரவாக இல்லை.
அவர் தயக்கத்தை உணர்ந்ததைப்போல, “பெரியவன் ரூம்ல தங்க சொல்லு!” என்றார் சத்தியநாதன். அவ்வளவுதான் சில நொடிகள் ப்ரேக்கிட்டு நின்றிருந்த உற்சாகம் மீண்டுவிட, அவனை மாடியில் இருந்த ரோஷிணியின் அறைக்கு நேரெதிர் அறையில் தங்கவைத்தார் தேவி.
அவர் அவனுக்காக இரவு உணவு தயாரிக்க சென்றுவிட, பொத்தென ஓய்ந்து கட்டிலில் விழுந்தவன் அன்னைக்கு அழைக்க, சில நிமிடங்கள் முன்பு வரை தேவியின் ஒலிபரப்பை கேட்டு தாரை தாரையாய் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தவர், மகன் அழைக்கவும் புலம்பி தள்ளிவிட்டார். அதன்பின் அவரிடம் போராடி அழைப்பை நிறுத்தியவன், தன்னை மீறி விழி மூட தூக்கம் அவனை ஆட்க்கொண்டது.
error: Content is protected !!