Skip to content
Post Views: 2,573
“எவ்ளோ நாள்?”
“பல வருஷம் லவ் போல, தெளிவா தெரியல” கைபேசியை எடுத்து ஏதோ செய்துகொண்டே கூறியவனிடம் ஒட்டுதல் இல்லாத பேச்சு.
“சஹானாக்கு தெரியுமா?” – உதய்
“டெய்லி காலேஜ் வாசல்ல தான் அவன் வண்டி நிக்கிது… தெரிஞ்சிருக்கும்” – ஆதி
Advertisement
“நீ என்ன முடிவு பண்ணிருக்க?” – உதய்
“என்ன முடிவு பண்ணிருக்கனா? என்ன கேக்குற” – ஆதி
“உனக்கு புரிஞ்சது” – உதய்
Advertisement
“சஹானா விருப்பம்” – ஆதி
Advertisement
“முழு மனசோட சொல்லு உன்ன மீறி ஆதவன், சஹானா ரெண்டுபேரும் எதுவும் செய்ய மாட்டாங்க”
மௌனம் சில நொடிகள் ஆக்கிரமிக்க, “நாளைக்கே சஹானா சம்மதம் இருந்தா அவன் கல்யாணம் கூட பண்ணிக்கட்டும்… என் கூட இருந்து அவளுக்கு தான் கஷ்டம், ஒரு அண்ணனா என்ன செஞ்சிருக்கேன் இது வரைக்கும் என் தங்கச்சிக்கு? இனிமேலாவது என் தங்கச்சி சந்தோசமா, பாதுகாப்பா இருக்கட்டும்” பெரிதாக அவன் பாதிக்கப்பட்டிருந்தது அமைதியான அவன் பேச்சிலே தெரிந்தது.
“உன்ன விட சஹானாக்கு யார் அதிகம் பாதுகாப்பா இருந்துட முடியும்?”
Advertisement
பார்வையை இருளிலிருந்து விலக்க இயலவில்லை, மனம் ரணமாய் வலித்தது, “நேரம் காலம் பாக்காம குடிக்கிறவன், நாடு ராத்திரி தனியா இருக்க தங்கச்சி கூட இல்லாம இப்டி தெருல சுத்திட்டு இருக்கவன் தான் பாதுகாப்பா?”
தன்னை மட்டுமே ஏசிக்கொள்ள வேண்டும்… இந்த அத்தனைக்கும் அவன் ஒருவன் மட்டுமே காரணமல்லவா? தன்னுடைய மன வேதனையை, வலியை மட்டுமே பார்த்து திருமண வயதில் இருக்கும் தங்கையைத் தனியாக வீட்டில் விடுவது மட்டுமல்லாமல் காரணமே இல்லாமல் வேதனைப்பட அந்த சிறு பெண்ணிற்கும் கொடுக்கிறான், இரவில் ஆதி வரும் வரை உறங்காமல் படுத்திருப்பவள் அவன் வந்ததும் அவனை உண்ண வைத்து அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பாள்.
சில நேரங்களில் ஆதி எவருடனும் சண்டையிட்டு வந்தால் கண்ணீர் சிந்திக்கொண்டே அவனுடைய காயங்களுக்கு கட்டிட்டு ஒரு வார்த்தை கேட்காமல் சென்று உறங்குபவளை இப்பொழுது நினைத்தாலும் மனம் வலிக்கும்.
“ரெண்டு வருஷம் முன்னாடியே வரன் பாக்கணும்னு ஆசை, ஆனா நான் சஹானாக்காக சேத்து வச்ச அந்த கொஞ்ச தங்கம் மட்டும் போதாதே, அது மட்டும் என் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கையை குடுத்துடுமா?
என் தங்கச்சிய சுத்தி அப்பா அம்மா தாத்தா பாட்டி, தாய்மாமா இப்டி எல்லாரும் இருக்கனும், புகுந்த வீட்டுக்கு அவ போறப்ப ஆயிரம் பத்தரம் சொல்லியாவது அனுப்ப ஒரு குடும்பம் வேணாம்? என்னால அண்ணனை தாண்டி அவளுக்கு வேற எதுவாவும் இருக்க முடியல…
இத்தனை வருஷம் என்னால அவ அனுபவிச்ச வேதனைக்கு ஒரு நிறைவான கல்யாணத்தை குடுக்காம இருந்தா நான் என்ன அண்ணண்?
என் வாழ்க்கை எப்படி போகுமோ தெரியல ஆனா என்ன இந்த உலகம் பேசுற மாதிரி என் தங்கச்சிய யாரும் அனாதைன்னு ஒரு வார்த்தை சொல்லிட கூடாது… அவன்கிட்ட சொல்லிடு கல்யாணத்துக்கு அப்றம் என் சஹானாவை யாரும் தப்பா பேச கூடாது அவளுக்கு அவ அண்ணண் நான் எப்பயும் இருப்பேன்”
தன்னையும் மீறி அனுமதியில்லாமல் சில கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் உருண்டோடியதை உடனே துடைத்துக்கொண்டான் சஹானாவின் சகோதரன்.
உறவுகளின் அவசியம் தெரியாதவர்களுக்கு உறவுகள் நூறு இருக்கும் ஆனால் தனியாய் நின்று போராடும் மனிதர்களுக்கே ஏசுவதாக இருந்தாலும் போற்றுவதாக இருந்தாலும் ஒரு உறுதுணையின் அவசியம் தெரிந்திருக்கும். அதை அறியாதவனா உதய்?
ஆதிக்கு எதுவும் இல்லை என்ற ஏக்கம், உதய்க்கு அனைத்தும் இருந்தும் இல்லையென்ற வலி… இரண்டும் ஒன்று ஒன்று விஞ்சி நின்று இதிலும் போட்டியோடு தான் நின்கின்றது.
ஆனால் இருவரும் அறிவர் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தால் எதைப் பற்றியும் மனமோ மூளையோ யோசிக்காது, சமூகத்தில் பேச்சுகளும் எண்ணங்களும் ஒன்றும் அவர்களுக்குப் பொருட்டாகாதென்றும். வண்டியிலிருந்து இறங்கி வந்தவன் ஆதிக்கு அருகிலிருந்த இடத்தில் உதய் அமர அவன் கைகள் தன்னுடைய தோளில் சுற்றிப் போட்டு சில முறை தட்டிக்கொடுக்க ஏங்கியதை ஆதியின் உள் மனம் மட்டுமே அறிந்த ஒன்று.
“டென்த் ஸ்டாண்டர்ட் பப்ளிக் தமிழ் எக்ஸாம் அன்னைக்கு புட்பால் மேட்ச், செலக்ட் ஆனா ஸ்டேட் லெவல் ட்ரைனிங் பிளஸ் ஸ்பான்ஸர்ஷிப். எக்ஸாமா மேட்சா-னு கேட்டப்ப மேட்ச்ன்னு சொன்னவன், சரியா மேட்ச் அன்னைக்கு தங்கச்சிக்கு வந்த லேசான காய்ச்சல் தான் ஆனா அதுக்கு அந்த மேட்ச்ச விட்டுட்டு ரெண்டு நாள் தூங்காம அவ சரியாகுற வர தங்கச்சி பக்கத்துலயே இருந்து அம்மாவா கவனிச்சுக்குட்டான்”
“ச்ச்…” உச் கொட்டி ஆதி முகத்தை வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
ஆனாலும் விடாமல் தொடர்ந்த உதய், “அன்னைக்கு தங்கச்சி மேல பாசமா, கண்ணுக்குள்ள வச்சு பாதுகாப்பா பாத்துக்குட்டே இருந்த அதே அண்ணன தான் இன்னைக்கும் பத்து நிமிசத்துக்கு ஒரு தடவ வீட்டுல இருக்க கேமரால தங்கச்சி பத்தரமா இருக்காளான்னு வாசலையே பாத்துட்டு இருக்கான்”
வந்ததிலிருந்து உதய்யும் ஆதியின் ஒவ்வொரு செயல்களையும் பார்க்கிறான், சில நிமிடங்களுக்கு ஒரு முறை கைப்பேசியை எடுத்து பார்த்துக்கொண்டே தான் உதய்யிடம் பேச்சை வளர்கிறான்.
“கூட இருக்கனும்” நூறு முறை கைப்பேசியில் பார்த்துக்கொண்டே இருந்தாலும் நேரிலிருந்து பார்த்துக்கொள்வது போல் வராதல்லவா?
“அப்ப போடா ஏன் இங்கையே நிக்கிற?”
அது தான் ஆதிக்கும் பதில் தெரியவில்லை, இந்நேரம் உதய் இங்கு வராமல் இருந்தால் நிச்சயம் இந்நேரம் கிளம்பியிருப்பான், இப்பொழுதும் முகத்தில் அடித்தது போல் பேசிவிட்டுக் கிளம்பலாம் தான்… ஆனால் ஒரு ஆறுதல் தேவை ஆதிக்கு, மனதில் இருக்கும் சோர்வு நீங்கி உத்வேகம் வர வேண்டும், அதற்கான வழி தான் தன் அருகில் இருக்கும் உதய் மாதவன்.
தமிழ், கெளதம் அல்லது அவர்கள் குடும்பம், இவர்கள் அனைவரும் ஆதியின் சிரமான நாட்களில் அவனுக்குப் பக்கபலமாய் தான் இருந்துள்ளனர், இருக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் ஆதியின் மனதைத் தமிழ், கெளதம் இருவரும் புரிந்துகொள்ள முயலாமல் போகும் நிலையில் தான் உதய் இருக்கும் பழைய வீட்டிற்கு வருவான்… இத்தனை ஆண்டுகளில் பல முறை வருவது உண்டு ஆனால் இந்த சில நாட்களில் தான் உதய் இங்கு இருக்க, அவனை அடிக்கடி காணும் நிலை ஆதிக்கு ஏற்பட்டுள்ளது.
“எல்லாமே தெரிஞ்சும் நீ இன்னும் போகாம இருக்கனா கண்டிப்பா சஹானா புரிஞ்சுக்குவா உனக்கு தனிமை தேவைப்படுதுன்னு அதை புரிஞ்சு தான் சஹானாவும் உனக்கு இன்னும் கால் பண்ணல”
அமைதியாகத் தான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவன் கால்கள் இன்னும் தன்னையே அறியாமல் ஆடிக்கொண்டிருக்கப் புரிந்தது உதய்க்கு சஹானா மட்டும் அவன் மன உளைச்சலுக்குக் காரணமில்லை என்று. ஜெயன் மூலம் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆதி வங்கியில் கடன் வாங்க அலைவது பற்றி கேள்வியுற்றுள்ளான். அது காரணமாக இருக்குமோ?
“ஆனா இந்த மாதிரி இருட்டையே வெறிச்சு பாத்துட்டே இருந்தா எல்லாமே சரியாகிடுமா? மனசுக்கு கஷ்டம் இருக்கும், நிராகரிப்பு இருக்கும், வலி வேதனை ஒதுக்கல் எல்லாமே இருக்கும். தாங்கி தான் ஆகணும். நெனச்ச ஒடனே எல்லாமே நடந்துடா நம்மள பத்தி நமக்கே தெரியாம போய்டும்.
மாறாத… மாத்திக்கவும் செய்யாத, எதுக்காகவும் யாருக்காகவும்… முட்டி மோதி தான் வழிய கண்டுபுடிக்க முடியும், ஒரே வழி மட்டும் இல்ல பல வழிகள் இருக்கு, முன்னாடி காயம் தந்த பழைய வழிகள் இப்ப நம்பிக்கையும் தரும். அவசரப்படாம நிதானமா யோசி”
நிதானமாக ஆழ்ந்த குரலில் பேசிய உதய்யின் வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்ட ஆதிக்கு அதன் அர்த்தம் தான் புரியவில்லை ஆனால் அந்த இடத்தில் ஆதி முன்னேறிச் செல்ல ஒரு பாதையே காட்டியிருந்தான். ஆதி யோசனையில் இருக்க உதய் ஆதியின் சட்டையைப் பின்புறமாகத் தூக்கினான் திடீரென.
“என்னடா பண்ற?” திமிறி ஆதி உதய்யின் கையை பிடித்து நிறுத்த, ஆதியை முறைத்த உதய், “கைய எடு” என்றான் கோவமாக.
சளைக்காமல் அப்படியே ஆதி நிற்க, அவன் கையை முறுக்கி உதய் ஆதியைச் சற்று தன் வசப்படுத்தியிருந்தான். நண்பனுக்காகத் தளர்வாக ஆதி நிற்க, அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட உதய் சட்டையை மேலே தூக்கிவிட்டு அரிவாளால் வெட்டுப்பட்டிருந்த காயத்தை ஆராய்ந்தான்.
சில நாட்களுக்கு முன் தான் கட்டை எடுத்திருப்பான் போலும். காயம் சிறிதே ஆற துவங்கியிருந்தது. விரலால் புண்ணைத் உதய் தொட்டுப் பார்க்க, வலியில் ஆதியின் தேகம் இறுகியது, அதுவே அவன் முகத்திலும் பிரதிபலிக்க கோவம் உதய்க்கு தலையைத் தொட்டது.
“அறிவில்ல? இப்டியா தண்ணி படுற மாதிரி டெய்லி குளிப்ப? ஏன் அந்த ரெண்டு தடி மாடுகள ஒரு வாரம் ஹெல்ப் பண்ண சொல்ல வேண்டியது தான? இல்ல நீயே பெரிய இவன் மாதிரி நானே பாத்துக்குறேனு சொன்னியா? டேப்லெட் சாப்பிட மாதிரி தெரியல, சரியா ட்ரெஸ்ஸிங் பண்ண மாதிரி இல்ல.
ஊர்ல இருக்கவன் கூட எல்லாம் சண்டையை இழுத்து வச்சுக்குறது, அப்றம் வந்து அவன் வெட்டாம உனக்கு வந்து சேவகம் பண்ணுவானா? கொஞ்ச நேரம் ஒக்கார முடியல வலில நெளிஞ்சிட்டே இருக்க… இல்ல தெரியாம கேக்குறேன் நீ என்ன தான் மனசுல நினைக்கிற உன்ன நம்பி இருக்கவங்களுக்காக ஆவது அமைதியா இருக்க வேணா?”
ஜெயன் பக்கம் திரும்பியவன், “ஜெயன்” என்று அழைக்க, இவ்வளவு நேரம் அமைதியாக இருவர் உரையாடலும் நிகழ்ந்திருக்க, இறுதியாக உதய் பேசிய கோப வார்த்தைகள் ஜெயனை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இது போன்ற வார்த்தைகளை எந்நாளும் பயன்படுத்தாதவன் இன்று இப்படிப் பேசியது மட்டுமல்லாமல் இவ்வளவு குரலை உயர்த்திப் பேசியதும் அதிர்ச்சி தான்.
“சார்…” வேகமாக உதய் அருகில் வந்து நின்றான்.
“மெடிக்கல் கிட் வீட்டுல போய் எடுத்துட்டு வாங்க ஜெயன்” ஜெயன் வேகமாகச் செல்ல ஆதி உதய்யின் பேச்சில் இறுகிய முகத்துடன் தன்னுடைய கையை அவனிடமிருந்து விடுவித்து வண்டியை நோக்கி நகர்ந்தான்.
“எங்க போற?” ஆதியின் கையை பிடித்து அருகில் அமர வைத்துக்கொண்டான் உதய்.
“உன் வீட்டுக்கு ஒன்னும் போகல போதுமா?”
எரிச்சலோடு ஆதி பேச அவனைப் புரிந்துகொண்ட உதய், “கூட்டிட்டு போக எந்த காரணமும் எனக்கு தெரியல”
“வண்டி சாவி தா” பிடிவாதமாய் ஆதி நிற்க உதய் அவனைச் சட்டையே செய்யவில்லை.
“இவ்ளோ பிடிவாதமா இருக்காதன்னு சொல்லிருக்கேன் உன்கிட்ட” – ஆதி
“அதையே தான் நானும் சொல்றேன் பிடிவாதம் புடிக்காத அமைதியா ஒக்காரு”
அதற்கு மேல் ஆதியைப் பேசவிடாமல் உதய் கைப்பேசி சிணுங்க அதை எடுத்து ஏதோ ஒரு மொழியில் உதய் பேசிக்கொண்டிருக்க ஆதி ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து தூரம் சென்று நின்றுகொண்டான். சிறிது நேரத்தில் ஜெயன் வர ஜெயனிடம் கைப்பேசியை ஒப்படைத்தவன் ஆதியைப் பார்த்து நிற்க, வேண்டும் என்றே பொறுமையாக அந்த சிகரெட் காலியாகும் வரை பொறுத்திருந்து பிறகு தான் வந்தான்.
“சட்டையக் கழட்டு”
“வேணாம் மருந்து தா நானே வீட்டுல போய் போட்டுக்குறேன்” வம்படியாக அவனை அமரவைத்து அவன் காயத்திற்கு மருந்தையும் தானே போட்டு விட்டு மீதமிருந்த மருந்தையும் அவனிடம் கொடுத்தான் தினமும் மறக்காமல் போட்டுக்கொள்ளும்படி.
“ஆமா யாரு அந்த பொண்ணு?” – ஆதி
“எந்த பொண்ணு?” – உதய்
“அது தான் அன்னைக்கு பார்ட்டில கறியோட பிரியாணி சாப்புடுறதுக்கும் வெறும் குஸ்கா மட்டும் சாப்புடுறதுக்கும் இருக்க வித்யாசத்தை கால் மணி நேரம் கிளாஸ் எடுத்துச்சே… டேய் சாத்தியமா சொல்றேண்டா ரெண்டு பீஸ் மட்டும் தான் எடுத்து சாப்பிட்டேன்… புடிச்சிடுச்சு அவ்ளோ தான். அந்த பிள்ளை எடுத்த கிளாஸ்ல பிரியாணியவே வெறுத்துட்டேன்… என்ன வாயி அப்பா…” அந்த நாள் நினைவில் இன்றும் பெருமூச்சு ஆதியிடம்.
“அந்த பொண்ணு அப்டி தான்…”
“பேர் என்ன?” – ஆதி
“யாழினி” – உதய்
“உன்னோட அசிஸ்டன்ட்டா?” – ஆதி
“ம்ம்ம் ஆமா லாஸ்ட் ஒன் மந்த்தா தான் ஒர்க் பன்றா”
“பார்ட்டில ஏன் அந்த பொண்ணையே அடிக்கடி உன் கண்ணு பாத்துட்டே இருந்துச்சு?” ஆதி சந்தேகமாய் உதய்யை ஓரக்கண்ணால் பார்க்க உதய் முகத்தை வேறு பக்கம் திருப்பி நின்றான்.
“யாழினி கைல தான் நெறைய ஒர்க் குடுத்தேன்… கொஞ்சம் சொதப்புவா அதுக்கு தான் என்ன பன்றான்னு கவனிச்சிட்டே இருந்தேன்” ஆதியின் கேள்வி வழியை மறைத்து நிறுத்தினான்.
“அப்ப அன்னைக்கு உன்னோட ரூம்ல இருந்து அந்த பொண்ணு எதுக்கு சிரிச்சிட்டே வந்துச்சு… பின்னாடி துரையும் சந்தோசமா வந்திங்க?”
இதை எல்லாம் எப்படி கவனித்தான், “நீ அங்க எப்படி வந்த?” கேள்வி உதய்யிடமிருந்து.
“உங்கிட்ட பிசினஸ் பேச வந்தேன்… உங்கள அப்டி பாத்ததும் வந்துட்டேன். சரி மழுப்பாம பதில் சொல்லு, இதுல அந்த பொண்ணு சாரீல இருந்து கீழ விழுந்த கர்சீப்ப எடுத்து நீ உன்னோட பாக்கெட் குள்ள எடுத்து வச்சுக்குட்ட… அந்த பொண்ணுகிட்ட அப்றம் குடுக்க தான்னு மட்டும் பொய் சொல்லாத நம்புற மாதிரி இருக்காது” என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை உதய்க்கு.
“ரெண்டு நாள் முன்னாடி மார்க்கெட்ல அந்த பொண்ண பாத்தேன், பின்னாடியே உன்னோட ரெண்டு கார்ட்ஸ். ஏதோ உன்கிட்ட வேலை பாக்குற பொண்ணு மேல இவ்ளோ அக்கறை உனக்கு இருக்காதுனு எனக்கு நல்லாவே தெரியும்” உதய் மௌனமாய் நிற்க ஆதியும் அவன் பேசுவதற்கு காத்திருந்தான்.
“தெரியல… ஆனா நடந்தா நல்லா இருக்கும். அதே நேரம் அதுக்கெல்லாம் நேரமில்லை” சூசகமாக தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து அதிலிருந்து விடுபட்டுமிருந்தான்.
“என்னடா நான் வேணா போய் பேசவா? எப்டியும் நீ ஒன்னும் பேசிக்க மாட்ட”
சூழலை மாற்றும் எண்ணத்தில் வாய் விட்டு சிரித்த உதய், “டேய் என்னடா மாமா வேலை பாக்க ஆரமிச்சிட்ட?”
‘அதுதான?’ என்றும் அப்பொழுது தான் தோன்ற தானும் சிரித்தான் ஆதி.
“ஒரு தடவ நியாபகம் இருக்கா? டென்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறப்ப தமிழ் டீச்சர் மேல எனக்கு பெரிய க்ரஷ்… அதுக்கு ஹெல்ப் பன்றேன்னு சொல்லி நீயும் கௌதமும் சேந்து லவ் லெட்டர் எழுதி அட்டெண்டென்ஸ் நோட் குள்ள வச்சு விட்டிங்க”
ஆதி சிரிக்க ஆமாம் என்று தலையை ஆட்டிய உதய், “இதுல ஹைலைட்டே வழக்கமா லெட்டர் எழுதுற நியாபகத்துல இப்படிக்கு கெளதம்-னு போட்டு வச்சது தான்”
உதய் விழுந்து விழுந்து அழகிய நாட்களை நினைத்து சிரிக்க, “அவன் மட்டும் சிகிட்டான்னு நாம எல்லாருமே பொய் நாங்களும் தான்னு சொன்னதுக்கு, பனிஷ்மென்ட்டா ரெண்டு நாள் கிரௌண்ட்ல தான் இருக்கணும்னு சொன்னாங்க பாரு… அட்டெண்டென்ஸ் ஓட ஹாலிடே டா அது” – ஆதி
“நீ அதோட விட்டியா? அந்த டீச்சர பாக்குறப்ப எல்லாம் சிரிச்சு சிரிச்சு ஸ்கூல் விட்டே ஓட வச்சியே” – உதய்
“காரணம் யாருடா நீங்க தான்… கிராஸ் பண்றப்ப எல்லாம் கூட படிக்கிற பொண்ண கிண்டல் பண்றமாதிரியே பேர சொல்லி கத்தி விட்டு என்ன சொல்ற… ஆனாலும் அப்ப ஸ்டார்ட் பண்ண மாமா வேலை இப்ப வர நடக்குது”
சிரித்துக்கொண்டே எழுந்த உதய், “சரி நேரமாச்சு நான் கிளம்புறேன்” அப்பொழுது தான் ஆதியும் நேரத்தைப் பார்த்தான் மணி இரண்டை தாண்டி பதினெட்டு நிமிடங்கள் ஆகியிருந்தது.
வீட்டை நோக்கி உதய் நடக்க, “சார் கார வர சொல்லவா?”
முகத்தில் வற்றாத சிரிப்போடு நெட்டி முறித்தவன், “வேண்டாம் ஜெயன்… நடக்குறது ஒரு தனி சுகம்” இதுவரை ஜெயன் பார்க்காத ஒரு உதய் மாதவன் இவன்… பல பெரிய ஒப்பந்தங்களை எல்லாம் கைப்பற்றியபொழுது இல்லாத மகிழ்ச்சி இப்பொழுது இவன் முகத்தில்.
“மிஸ்டர் உதய் மாதவன்” ஓங்கி ஒலித்தது ஆதியின் கணீர் குரல் அந்த காலி தெருவில்.
உதய் திரும்பிப் பார்க்க வண்டியில் அமர்ந்து புறப்படுவதற்குத் தயாராக நின்றிருந்தான் ஆதி, “கொஞ்ச நேரம் சிரிச்சு பேசுன ஒடனே எல்லாத்தையும் நான் மறந்துட்டேன்னு மட்டும் தப்புக் கணக்குப் போட வேண்டாம். இறந்தவர் மேல பழியை போட்டு அதுல குளிர் காஞ்ச ஈன பிறவிக முகம் இன்னும் என் கண் முன்னாடி தான் நிக்கிது”
உதய்யின் இதழ்களில் குடிகொண்டிருந்த புன்னகை ஆதியின் வார்த்தைகளில் சட்டென மறைந்து இறுகியது, சட்டையில் தொங்கவிட்டிருந்த கூலர்ஸை அணிந்து, “என் கூட சண்டை போடுறவங்க உடல் அளவுல மட்டுமே பலமா இருந்தா பத்தாது மிஸ்டர் ஆதி கேசவன், மனசளவுல பலமா இருக்கனும். என் மொத்த சந்தோஷத்தையும் கொன்னுட்டு என்ன அனாதையா நிக்க வச்சவன நானும் இன்னும் மன்னிக்கல, நான் அனுபவிச்சதுல பத்து பர்ஷன்ட் கூட அவன் இன்னும் அனுபவிக்கலையே… அவர் ரிவென்ஜ் கேம் இஸ் ஸ்டில் ஆன்”
பளிச்சென முகத்தில் விழுந்த திருவிளக்கின் நிழலில் வெள்ளை சட்டையும், கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்து சுற்றிலும் இருளால் சூழ்ந்திருந்தாலும் அவன் நிற்பது கூட கம்பீரமாய், வசீகரமாய் நின்றவனைப் பார்த்து, ‘நீ என்னைக்கும் கெத்து தான்டா உதயா’ பெருமையாக நினைத்துக்கொண்டது மனம்.
வீடு கதவு வரை சென்றவன் தன்னையே பார்த்து நின்ற ஆதியைப் பார்த்து, “ஆல் தி பெஸ்ட்” இருளில் உதயின் சிரிப்பும் மறைய எதற்காக இந்த வாழ்த்து என்று புரிந்தும் புரியாமல் இல்லம் நோக்கிப் பயணித்தான் ஆதி. இருவரும் பல வருடங்களுக்கு பிறகு சுகமான உறக்கத்தை அனுபவித்தனர்.
ஹப்பா… எப்படி இருக்கு இந்த சாப்டர்?
மறக்காம கமெண்ட் பண்ணுங்க ப்ளீஸ்…
error: Content is protected !!