Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் – பாகம் 1 – அத்தியாயம் 16 – அருள்மொழிவர்மர்

பதினாறாம் அத்தியாயம் – அருள்மொழிவர்மர்

இன்றைக்குச் சுமார் (1950ல் எழுதப்பட்டது) 980 ஆண்டுகளுக்கு முன்னால் கோ இராசகேசரிவர்மர்பராந்தக சுந்தர சோழ மன்னர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கி வந்தார். நம் கதைநடக்கும் காலத்துக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் சிங்காசனம் ஏறினார். சென்ற நூறாண்டுகளாகச்சோழர்களின் கை நாளுக்கு நாள் வலுத்து வந்தது. சோழ சாம்ராஜ்யம் நாலா திசையிலும் பரவி வந்தது. எனினும் சுந்தர சோழர் பட்டத்துக்கு வந்த சமயத்தில் தெற்கேயும் வடக்கேயும் விரோதிகள்வலுப்பெற்றிருந்தார்கள். சுந்தர சோழருக்கு முன்னால் அரசு புரிந்த கண்டராதித்தர் சிவ பக்தியில்திளைத்துச் ‘சிவஞான கண்டராதித்தர்’ என்று புகழ்பெற்றவர். அவர் இராஜ்யத்தை விஸ்தரிப்பதில்அவ்வளவாகச் சிரத்தை கொள்ளவில்லை. கண்டராதித்தருக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த அவருடைய சகோதரர்அரிஞ்சயர் ஓர் ஆண்டு காலந்தான் சிம்மாசனத்தில் இருந்தார். அவர் தொண்டை நாட்டிலுள்ள ‘ஆற்றூரில்துஞ்சிய’ பின்னர், அவருடைய புதல்வர் பராந்தக சுந்தர சோழர் தஞ்சைச் சிம்மாசனம் ஏறினார்.

பேரரசர் ஒருவருக்கு இருக்க வேண்டிய எல்லாச் சிறந்த அம்சங்களும் சுந்தர சோழசக்கரவர்த்தியிடம் பொருந்தியிருந்தன. போர் ஆற்றல் மிக்க சுந்தர சோழர் தம் ஆட்சியின்ஆரம்பத்திலேயே தென் திசைக்குப் படையெடுத்துச் சென்றார். சேவூர் என்னுமிடத்தில் சோழ சைன்யத்துக்கும்பாண்டிய சைன்யத்துக்கும் பெரும் போர் நடைபெற்றது. அச்சமயம் மதுரை மன்னனாயிருந்த வீரபாண்டியனுக்குத்துணை செய்வதற்காகச் சிங்கள நாட்டு அரசன் மகிந்தன் ஒரு பெரிய சேனையை அனுப்பியிருந்தான். சோழர்களின் மாபெரும் வீர சைன்யம் பாண்டியர்களுடைய சேனையையும் சிங்கள நாட்டுப் படையையும் சேவூரில்முறியடித்தது. வீரபாண்டியன் படையிழந்து, முடியிழந்து, துணையிழந்து, உயிரை மட்டும் காப்பாற்றிக்கொண்டு போர்க்களத்திலிருந்து ஓடித் தப்பித்தான். பாலை நிலப் பகுதியொன்றின் நடுவில் இருந்த மலைக்குகையில் ஒளிந்து கொண்டு காலங்கழிக்கலானான். சேவூர்ப் போரில் ஈழத்துப் படை அநேகமாகநிர்மூலமாகி விட்டது. எஞ்சிய வீரர்கள் சிலர் போர்க்களத்தில் புகழையும் வீரத்தையும் உதிர்த்துவிட்டு,உயிரை மட்டும் கைக்கொண்டு ஈழநாட்டுக்கு ஓடிச் சென்றார்கள்.

இவ்விதம் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் நடக்கும் போர்களில் சிங்கள மன்னர்கள் தலையிட்டுப்பாண்டியர்க்கு உதவிப் படை அனுப்புவது சில காலமாக வழக்கமாய்ப் போயிருந்தது. இந்த வழக்கத்தைஅடியோடு ஒழித்து விடச் சுந்தர சோழ சக்கரவர்த்தி விரும்பினார். ஆகையினால் சோழ சைன்யம் ஒன்றைஇலங்கைக்கு அனுப்பிச் சிங்கள மன்னர்களுக்குப் புத்தி கற்பிக்க எண்ணினார். கொடும்பாளூர்ச் சிற்றரசர்குடும்பத்தைச் சேர்ந்த பராந்தகன் சிறிய வேளான் என்னும் தளபதியின் தலைமையில் ஒரு பெரும் படையைச்சிங்களத்துக்கு அனுப்பினார். துரதிர்ஷ்டவசமாக சோழர் படை சிங்களத்துக்கு ஒரே தடவையில் போய்ச்சேரவில்லை. அதற்குத் தேவையான கப்பல் வசதிகள் இல்லை. முதல் தடவை சென்ற சேனை முன்யோசனையின்றித் துணிந்து முன்னேறத் தொடங்கியது. மகிந்தராஜனுடைய தளபதி ஸேனா என்பவனின்தலைமையில் சிங்களப் படை எதிர்பாராதவிதத்தில் வந்து சோழப் படையின் பகுதியை வளைத்துக் கொண்டது.பயங்கரமான பெரும் போர் நடந்தது. அதில் சோழ சேனாதிபதியான பராந்தகன், சிறிய வேளான் தன்வீரப் புகழை நிலைநிறுத்திவிட்டு இன்னுயிரைத் துறந்தான்! ”ஈழத்துப் பட்ட பராந்தகன் சிறிய வேளான்’என்று சரித்திரக் கல்வெட்டுக்களில் பெயர் பெற்றான்.



Advertisement

இந்த செய்தியானது பாலைவனத்தில் மலைக் குகையில் ஒளிந்து கொண்டிருந்த வீரபாண்டியனுக்குஎட்டியதும் அம்மன்னன் மீண்டும் துணிவு கொண்டு வௌிவந்தான். மறுபடியும் பெருஞ் சேனை திரட்டிப்போரிட்டான். இம்முறை பாண்டிய சேனை அதோகதி அடைந்ததுடன், வீரபாண்டியனும் உயிர் துறக்க நேர்ந்தது.இந்தப் போரில் சுந்தர சோழரின் முதற் குமாரர் ஆதித்த கரிகாலர் முன்னணியில் நின்று பராக்கிரமச்செயல்கள் புரிந்தார்; ‘வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டத்தையும் அடைந்தார்.

எனினும், சிங்கள மன்னன் மகிந்தனுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்ற விருப்பம் சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு மட்டுமல்ல, சோழ நாட்டுத் தளபதிகள், சாமந்தகர்கள், சேனா வீரர்கள் எல்லாருடைய மனத்திலும் குடிக்கொண்டிருந்தது. படையெடுத்துச் செல்ல ஒரு பெரிய சைன்யமும் ஆயத்தமாயிற்று. அதற்குத் தலைமைவகித்துச் செல்வது யார் என்னும் கேள்வி எழுந்தது. சுந்தர சோழரின் மூத்த புதல்வர் -பட்டத்து இளவரசராகிய ஆதித்த கரிகாலர், அச்சமயம் வடதிசைக்குச் சென்றிருந்தார். திருமுனைப்பாடிநாட்டிலும் தொண்டை மண்டலத்திலும் சில நாளாக ஆதிக்கம் செலுத்தி வந்த இரட்டை மண்டலப் படைகளை(ராஷ்டிரகூடர்களை) முறியடித்து விரட்டி விட்டுப் புராதனமான காஞ்சி நகரைத் தமது வாசஸ்தலமாகச் செய்துகொண்டிருந்தார். மேலும் வடதிசையில் படையெடுத்துச் செல்லுவதற்கு ஆயத்தமும் செய்து கொண்டிருந்தார்.

இந்நிைமையில், ஈழமண்டலப் படைக்குத் தலைமை வகித்துச் செல்லச் சோழ நாட்டின் மற்றத்தளபதிகளுக்குள்ளே பெரும் போட்டி ஏற்பட்டது. போட்டியிலிருந்து பொறாமையும் புறங்கூறலும் எழுந்தன. பழந்தமிழ்நாட்டில் போருக்குப் போகாமல் தப்பித்துக் கொள்ள விரும்பியவரைக் காண்பது மிக அருமை. போர்க்களத்துக்குச் செல்வது யார் என்பதிலேதான் போட்டி உண்டாகும். அதிலிருந்து சில சமயம்பொறாமையும் விரோதமும் வளருவதுண்டு.

Advertisement

ஈழநாட்டுக்குச் சென்று மகிந்தனைப் பழிக்குப் பழி வாங்கிச் சோழரின் வீரப்புகழை நிலைநாட்டுவது யார் என்பது பற்றி இச்சமயம் சோழ நாட்டுத் தலைவர்களிடையிலே போட்டி மூண்டது. இந்தப் போட்டியை அடியோடு நீக்கி அனைவரையும் சமாதானப்படுத்தும்படியாகச் சுந்தர சோழ மன்னரின் இளம் புதல்வர் அருள்மொழிவர்மர் முன்வந்தார்.

Advertisement

“அப்பா! பழையாறை அரண்மனையில் அத்தைகளுக்கும் பாட்டிகளுக்குமிடையில் இத்தனை நாள் நான் செல்லப்பிள்ளையாக வளர்ந்தது போதும். தென் திசைச் சைன்யத்துக்கு மாதண்ட நாயகனாக என்னை நியமனம் செய்யுங்கள். ஈழப் போருக்குத் தலைமை வகித்து நடத்த நானே இலங்கை சென்று வருகிறேன்!” என்றார் இளங்கோ அருள்மொழிவர்மர்.

அருள்மொழிவர்மருக்கு அப்போது பிராயம் பத்தொன்பதுதான். அவர் சுந்தர சோழரின்கடைக்குட்டிச் செல்வப் புதல்வர்; பழையாறை அரண்மனைகளில் வாழ்ந்த ராணிமார்களுக்கெல்லாம் செல்லக்குழந்தை; சோழ நாட்டுக்கே அவர் செல்லப்பிள்ளை. சுந்தர சோழ மன்னர் நல்ல அழகிய தோற்றம்வாய்ந்தவர். அவருடைய தந்தை அரிஞ்சயர், சோழ குலத்துக்கு எதிரிகளாக இருந்த வைதும்பராயர் வம்சத்துப்பெண்ணாகிய கலியாணியை அவளுடைய மேனி அழகைக் கண்டு மோகித்து மணந்து கொண்டார். அரிஞ்சயருக்கும்கலியாணிக்கும் பிறந்த சுந்தர சோழருக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் பராந்தகர். அவருடையதோற்றத்தின் வனப்பைக் கண்டு நாட்டாரும் நகரத்தாரும் “சுந்தர சோழர்” என்று அவரை அழைத்து வந்தார்கள்அதுவே அனைவரும் வழங்கும் பெயராயிற்று.

அத்தகையவருக்குப் பிறந்த குழந்தைகள் எல்லோருமே அழகில் மிக்கவர்கள்தான். ஆனால்கடைசியில் பிறந்த அருள்மொழிவர்மர் அழகில் அனைவரையும் மிஞ்சி விட்டார். அவருடைய முகத்தில்பொலிந்த அழகு, மனித குலத்துக்கு உரியதாக மட்டும் இல்லை; தெய்வீகத்தன்மை பொருந்தியதாக இருந்தது. அவர் குழந்தையாக இருந்தபோது சோழ வம்சத்து ராணிமார்கள் அவரை முத்தமிட்டு முத்தமிட்டுக் கன்னம் கனியச்செய்து விடுவார்கள்.எல்லாரிலும் அதிகமாக அவரிடம் வாஞ்சையுடனிருந்தவள் அவருடைய தமக்கையாகியகுந்தவை.அருள்மொழிக்கு இரண்டு பிராயந்தான் மூத்தவளான போதிலும் தம்பியை வளர்க்கும் பொறுப்பு தன்தலைமேலேயே சுமந்திருப்பதாகக் குந்தவைப்பிராட்டி எண்ணியிருந்தாள். குந்தவையிடம் அருள்மொழியும்அதற்கிணையான வாஞ்சை வைத்திருந்தார். தமக்கை இட்ட கோட்டைத் தம்பி தாண்டுவது கிடையாது. (Modafinil) இளையபிராட்டி ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்; அதற்கு மாறாகப் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும்சேர்ந்து வந்து சொன்னாலும் அருள்மொழிவர்மர் பொருட்படுத்த மாட்டார். தமக்கையின் வாக்கே தம்பிக்குத்தெய்வத்தின் வாக்காயிருந்தது.

Advertisement

தம்பியின் முகத்தைத் தமக்கை அடிக்கடி உற்று நோக்குவாள். விழித்துக் கொண்டிருக்கும்போதுமட்டுமல்லாமல் அவன் தூங்கும் போது கூட நாழிகைக் கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பாள். “இந்தப்பிள்ளையிடம் ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறது! அதை வௌிப்படுத்திப் பிரகாசிக்கச் செய்ய வேண்டியதுஎன் பொறுப்பு!” என்று எண்ணமிடுவாள். தம்பி தூங்கும்போது அவனுடைய உள்ளங்கைகளை அடிக்கடி எடுத்துப்பார்ப்பாள். அந்தக் கைகளில் உள்ள ரேகைகள் சங்கு சக்கர வடிவாக அவளுக்குத் தோன்றும். “ஆகா!உலகத்தை ஒரு குடை நிழலில் புரந்திடப் பிறந்தவன் அல்லவோ இவன்!” என்று சிந்தனை செய்வாள்.

ஆனால், சோழ சிங்காதனத்தில் இவன் ஏறுவான் என்று எண்ணுவதற்கே இடமிருக்கவில்லை. இவனுக்கு மூத்தவர்கள் – பட்டத்துக்கு உரியவர்கள், இரண்டு பேர் இருந்தார்கள். பின், இவனுக்கு எங்கிருந்து ராஜ்யம் வரப்போகிறது! எந்தச் சிம்மாசனத்தில் இவன் ஏறப் போகிறான்? கடவுள் சித்தம் எப்படியோ, யார் கண்டது? உலகம் மிக்க விசாலமானது எத்தனையோ தேசங்கள், எத்தனையோ ராஜ்யங்கள் இந்நிலவுலகில் இருக்கின்றன. புஜபல பராக்கிரமத்தினால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாடு சென்று சிங்காதனம் ஏறி ராஜ்யம் ஆண்டவர்களைப் பற்றிக் கதைகளிலும் காவியங்களிலும் நாம் கேட்டதில்லையா? கங்கை நதி பாயும் வங்க நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட இளவரசன் படகிலேறி இலங்கைக்குச் சென்று அரசு புரியவில்லையா? ஆயிரம் வருஷமாக அந்தச் சிங்கள ராஜ வம்சம் நிலைத்து நிற்கவில்லையா?

இவ்விதமாகக் குந்தவைப்பிராட்டி ஓயாது சிந்தித்து வந்தாள். கடைசியாக, இலங்கைக்கு அனுப்பும்சைன்யத்துக்கு யார் தளபதியாகப் போவது என்பது பற்றி விவாதம் எழுந்த போது அதற்குரியவன்அருள்மொழிதான் என்ற முடிவுக்கு வந்தாள்.

“தம்பி, அருள்மொழி! உன்னை ஒருகணம் பிரிந்திருப்பதென்றாலும் எனக்கு எத்தனையோ கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆயினும் நானே உன்னைப் போகச் சொல்ல வேண்டிய சமயம் வந்து விட்டது. இலங்கைப் படையின் தலைவனாக நீதான் போக வேண்டும்!” என்றாள்.

இளவரசர் குதூகலத்துடன் இதற்குச் சம்மதித்தார். அரண்மனை வாழ்விலிருந்தும் அந்தப்புரமாதரசிகளின் அரவணைப்பிலிருந்தும் எப்போது தப்புவோம் என்று அருள்மொழிவர்மரின் உள்ளம் துடித்துக்கொண்டிருந்தது. அருமைத் தமக்கையே இப்போது போகச் சொல்லிவிட்டாள்! இனி என்ன தடை? குந்தவைதேவிமனம் வைத்து விட்டால் சோழ சாம்ராஜ்யத்தில் நடவாத காரியம் ஒன்றுமே கிடையாது! சுந்தர சோழசக்கரவர்த்திக்குத் தம் செல்வக் குமாரியிடம் அவ்வளவு ஆசை; அவ்வளவு நம்பிக்கை!

இளங்கோ அருள்மொழிவர்மர் தென்திசைச் சோழ சைன்யத்தின் மாதண்ட நாயகர் ஆனார். இலங்கைக்கும் போனார், அங்கே படைத் தலைமை வகித்துச் சில காலம் போர் நடத்தினார். ஆனால், போர்எளிதில் முடிகிறதாயில்லை. அவர் போர் நடத்திய முறைக்கும் மற்றவர்களின் போர் முறைக்கும்வித்தியாசம் இருந்தது. தாய்நாட்டிலிருந்து அவர் வேண்டியபடியெல்லாம் தளவாடங்களும் சாமக் கிரியைகளும்சரியாக வந்து சேரவில்லை. ஆகையால் இடையில் ஒரு தடவை தாய்நாட்டுக்கு வந்திருந்தார். தந்தையிடம்சொல்லித் தம் விருப்பத்தின்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டார். மறுபடியும் ஈழத்துக்குச் செல்லஆயத்தமானார்.

அருமைத் தம்பியைப் போர் முகத்துக்கு அனுப்புவதற்குக் குந்தவைதேவி பழையாறையின் பிரதானமாளிகையில் மங்கள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தாள். அருள்மொழித்தேவர் புறப்பட்ட போதுஅரண்மனை முற்றத்தில் வெற்றி முரசுகள் முழங்கின; சங்கங்கள் ஆர்ப்பரித்தன; சிறு பறைகள் ஒலித்தன;வாழ்த்து கோஷங்கள் வானை அளாவின. சோழ குலத்துத் தாய்மார்கள் அனைவரும் அரண்மனையின் செல்லக்குழந்தைக்கு ஆசி கூறி, நெற்றியில் மந்திரித்த திருநீற்றை இட்டு, திருஷ்டி கழித்து வழி அனுப்பினார்கள்.

அரண்மனை வாசலின் முகப்பில், அருள்மொழிவர்மர் வீதி வாசற்படியில் இறங்க வேண்டியஇடத்தில், குந்தவைதேவியின் தோழிப் பெண்கள் கைகளில் தீபமேற்றிய தங்கத் தட்டுகளை ஏந்திக் கொண்டுநின்றார்கள். தோழிப் பெண்கள் என்றால், சாமான்யப்பட்டவர்களா? தென்னாட்டிலுள்ள புகழ்பெற்றசிற்றரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பழையாறை அரண்மனையில் செம்பியன் மாதேவிக்குப்பணிவிடை செய்வதையும் குந்தவைபிராட்டிக்குத் தோழியாக இருப்பதையும் பெறற்கரும் பாக்கியமாகக் கருதிவந்திருந்தவர்கள். அவர்களிலே கொடும்பாளூர் சிறிய வேளானின் புதல்வி வானதியும் இருந்தாள். இளவரசர் சற்றுத் தூரத்தில் வருவதைப் பார்த்ததும், அந்தப் பெண்கள் எல்லோருமே மனக்கிளர்ச்சிஅடைந்தார்கள். இளவரசர் அருகில் வந்ததும் கையில் ஏந்திய தட்டுகளைச் சுற்றி ஆலாத்தி எடுத்தார்கள்.

அப்போது வானதியின் மேனி முழுதும் திடீரென்று நடுங்கிற்று. கையிலிருந்த தட்டு தவறிக் கீழே விழுந்து ‘டணார்’ என்ற சத்தத்தை உண்டாக்கியது. “அடடா! இது என்ன அபசகுனம்!” என்ற எண்ணம் எல்லாருடைய மனத்திலும் உண்டாயிற்று. ஆனால் தட்டு கீழே விழுந்த பிறகும் திரி மட்டும் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அனைவரும் நிம்மதி அடைந்தார்கள். ‘இது மிக நல்ல சகுனம்’ என்றே முதியவர்கள் உறுதி கூறினார்கள்.

எவ்விதக் காரணமும் இன்றிப் பீதியும் கலக்கமும் அடைந்து தட்டை நழுவவிட்ட பெண்ணைப் பார்த்துப்புன்னகை புரிந்துவிட்டு இளங்கோ அருள்மொழிவர்மர் மேலே சென்றார். அவர் அப்பால் சென்றதும் வானதியும்மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்து விட்டாள். ‘ஆகா! இப்பேர்ப்பட்ட தவறு செய்து விட்டோமே’ என்றஎண்ணமே வானதியை அவ்வாறு மூர்ச்சையடைந்து விழும்படிச் செய்து விட்டது. குந்தவையின் கட்டளையின் பேரில்அவளை மற்றப் பெண்கள் தூக்கிச் சென்று, ஓர் அறையில் மேடையில் கிடத்தினார்கள். குந்தவைப்பிராட்டி தம்சகோதரர் புறப்படுவதைப் பார்ப்பதற்குக் கூட நில்லாமல் உள்ளே சென்று வானதிக்கு மூர்ச்சை தௌிக்கமுயன்றாள். வாசலில் நின்றபடியே வானதி சுருண்டு விழுந்ததைப் பார்த்துவிட்ட அருள்மொழிவர்மர் தாம்குதிரை மீது ஏறுவதற்கு முன்னால், “விழுந்த பண்ணுக்கு எப்படியிருக்கிறது? மயக்கம் தௌிந்ததா?” என்றுவிசாரித்துவர ஆள் அனுப்பினார். விசாரிக்க வந்தவனிடம் குந்தவைதேவி, “இளவரசரை இங்கே சிறிதுவந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லு!” என்று திருப்பிச் சொல்லி அனுப்பினாள். தமக்கையின் சொல்லைஎன்றும் தட்டியறியாத இளவரசர் அவ்விதமே மீண்டும் அரண்மனைக்குள் வந்தார். வானதியைத் தம் தமக்கைமார்பின் மீது சாத்திக் கொண்டு மூர்ச்சை தௌிவிக்க முயன்று கொண்டிருந்த காட்சி அவருடைய மனத்தைஉருக்கியது.

“அக்கா! இந்தப் பெண் யார்? இவள் பெயர் என்ன?” என்று இளங்கோ கேட்டார்.

“கொடும்பாளூர்ச் சிறியவேளாரின் மகள்; இவள் பெயர் வானதி; கொஞ்சம் பயந்த சுபாவமுடையவள்!”என்றாள் குந்தவை.

“ஆகா! இப்போது இவள் மூர்ச்சையாகி விழுந்ததின் காரணம் தெரிந்தது. இந்தப் பெண்ணின் தந்தைதானே இலங்கை சென்று மீண்டும் வராமல் போர்க்களத்தில் மாண்டார்? அதை நினைத்துக் கொண்டாள்போலிருக்கிறது!” என்றார் இளவரசர்.

“இருக்கலாம், ஆனால் இவளைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்! நான் பார்த்துக் கொள்கிறேன்! இலங்கை சென்று விரைவில் வெற்றி வீரனாகத் திரும்பி வா! அடிக்கடி எனக்குச் செய்தி அனுப்பிக் கொண்டிரு!” என்றாள் இளையபிராட்டி.

“ஆகட்டும்; இங்கே ஏதாவது விசேஷம் நிகழ்ந்தாலும் எனக்குச் செய்தி அனுப்புங்கள்!” என்றார் இளங்கோ.

இச்சமயத்தில், இளவரசரின் இனிய குரலின் மகிமையினால்தானோ என்னவோ, வானதிக்குமூர்ச்சை தௌிந்து நினைவு வரத் தொடங்கியது. அவளுடைய கண்கள் முதலில் இலேசாகத் திறந்தன. எதிரில் இளவரசரைப் பார்த்ததும் கண்கள் அகன்று விரிந்தன; பின்னர் முகமும் மலர்ந்தது. அவளது பவழச்செவ்வாயில் தோன்றிய புன்னகையினால் கன்னங்கள் குழிந்தன. உணர்வு வந்ததும் நாணமும் கூட வந்தது,சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். பின்னால் திரும்பிப் பா்த்தாள்; தன்னை இளையபிராட்டி தாங்கிக்கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டு வெட்கினாள், நடந்ததெல்லாம் ஒரு கணத்தில் நினைவு வந்தது.

“அக்கா! இந்த மாதிரி செய்து விட்டேனே?” என்று கண்களில் நீர்மல்கக் கூறினாள்.

இதற்குக் குந்தவை மறுமொழி சொல்வதற்குள் இளவரசர், “அதற்காக நீ ஒன்றும் கவலைப்படவேண்டாம். வானதி! தவறுவது யாருக்கும் நேரிடுகிறதுதான். மேலும் உனக்கு அவ்விதம் நேருவதற்கு முக்கியக்காரணமும் இருக்கிறது; அதைத் தான் இளையபிராட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!” என்றார்.

வானதிக்குத் தான் காண்பது உண்மையா, கேட்பது மெய்யா என்ற சந்தேகமே வந்துவிட்டது. பெண்களைச்சாதாரணமாக ஏறிட்டுப் பார்க்காமலே போகும் வழக்கமுடைய இளவரசரா என்னுடன் பேசுகிறார்? எனக்கு ஆறுதல்மொழி கூறித் தேற்றுகிறார்? என் பாக்கியத்தை என்னவென்று சொல்வது? ஆகா! உடம்பு புல்லரிக்கிறதே!மறுபடியும் மயக்கம் வந்துவிடும் போலிருக்கிறதே!…

இளவரசர், “அக்கா! சேனைகள் காத்திருக்கின்றன, நான் போய் வருகிறேன். நீங்கள் எனக்குச் செய்தி அனுப்பும்போது இந்தப் பெண்ணுக்கு உடம்பு எப்படியிருக்கிறது என்றும் சொல்லி அனுப்புங்கள். தாய் தகப்பனில்லாத இப்பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

இவற்றையெல்லாம் குந்தவைதேவியின் மற்றத் தோழிப் பெண்கள் மேல் மாடங்களிலிருந்துபலகணிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்தார்கள். அவர்களுடைய உள்ளங்களில்பொறாமைத் தீ கொழுந்து விட ஆரம்பித்தது. அன்று முதல் குந்தவைப்பிராட்டி வானதியிடம் தனி அன்புகாட்டத் தொடங்கினாள். இணைபிரியாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தாள். தான் கற்றிருந்தகல்வியையும் கலைகளையும் அவளுக்கும் கற்பித்தாள். எங்கே போனாலும் அவளைத் தவாமல் கூட அழைத்துச்சென்றாள். அரண்மனை நந்தவனத்துக்கு வானதியை அடிக்கடி அழைத்துச் சென்று குந்தவைதேவி அவளிடம்அந்தரங்கம் பேசினாள். தன் இளைய சகோதரனுடைய வருங்கால மேன்மையைக் குறித்து, தான் கண்டு வந்தகனவுகளையெல்லாம் அவளிடமும் சொன்னாள்; அதையெல்லாம் வானதியும் சிரத்தையுடன் கேட்டாள்.

மேலே கூறிய நிகழ்ச்சிக்குப் பிறகு, வானதி இன்னும் நாலைந்து தடவை உணர்வு இழந்துமூர்ச்சையடைந்தாள். அப்போதெல்லாம் குந்தவைப்பிராட்டி அவளுக்குத் தக்க சிகிச்சை செய்து திரும்ப உணர்வுவருவித்தாள். மூர்ச்சை தௌியும்போது வானதி விம்மி விம்மி அழுது கொண்டே எழுந்திருப்பாள்.

“என்னடி, அசடே! எதற்காக இப்படி அழுகிறாய்!” என்று குந்தவை கேட்பாள்.

“தெரியவில்லையே, அக்கா! மன்னியுங்கள்!” என்பாள் வானதி.

குந்தவை அவளைக் கட்டிக் கொண்டு உச்சி மோந்து ஆறுதல் கூறுவாள். இவையெல்லாம் மற்றப் பெண்களுக்கு மேலும் மேலும் பொறாமையை வளர்த்துக் கொண்டிருந்தன. எனவே, குந்தவையும் வானதியும் ரதம் ஏறிக் குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குப் போன பிறது அப்பெண்கள் மேற்கூறியவாறெல்லாம் பேசிக் கொண்டது இயல்பேயல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!