Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 15 4

“உங்க ஐயா மனசுக்குள்ள இருக்குற லவ்வை வெளிய சொன்னா தான் என்னவாம்?”, என்று சிரிப்புடன் கேட்டான்.

“நீ சொன்னியா தங்கச்சி மேல வச்சிருக்குற லவ்வை? இல்லை தானே? வெளிப்படையா பேசினா எல்லாமே நல்லது தான். தங்கச்சியைப் பாக்கப் போகும் போது உன் லவ்வை சொல்லிரு என்ன? படத்துல வர மாதிரி பூ எல்லாம் வாங்கிட்டு போ”, என்றான்.



Advertisement

“நீ படத்துலே இரு”, என்று சொன்ன ஆதவன் ரங்கன் சொன்னவற்றில் இருந்த உட்கருத்தை கவனிக்க தவறி விட்டான்.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ஆதவன் சென்னைக்கு செல்லத் தயாரானான். கூட வருகிறேன் என்று சொன்ன ரங்கனை வேண்டாம் என்று மறுத்து விட்டான்.

Advertisement

Advertisement

ரத்தினம் தான் காரை எடுத்துக் கொண்டு செல்லச் சொன்னார். தயக்கத்துடன் தான் இங்கிருந்து கிளம்பினான். பயமாகவும் இருந்தது. சும்மாவே அவனை மதிக்காத ஏகாம்பரம் இப்போது மட்டும் எப்படி மதிப்பார் என்ற கேள்வி அவனுக்குள் எழத் தான் செய்தது. ஆனால் அவளுக்காக கிளம்பி விட்டான். எந்த அவமானம் வந்தாலும் அதை தாங்குவதாக முடிவு எடுத்து விட்டான்.

அவன் வீட்டில் இருந்து கிளம்பியதும் “அத்தை அத்தை”, என்ற படி ஆதவன் வீட்டுக்கு வந்தாள் பிரியா. அவளைக் கண்ட ரங்கன் கோபத்துடன் வெளியே சென்று விட்டான்.

Advertisement

“வா டா பிரியா? சாப்பிட்டியா?”, என்று கேட்டாள் மங்கை.

“சாப்பிட்டேன் அத்தை. ஆமா, எங்க யாரையும் காணும்?”, என்று கேட்ட பிரியாவின் கண்கள் ஆதவனைத் தேடியது.

“உன் மாமா வயலுக்கு போய்ட்டார். நான் இதோ இருக்கேன். ரங்கன் இங்க தான் இருந்தான், வெளிய போய்ட்டான் போல?“

“அத்தான் எங்க அத்தை? ஆளையே காணும்?”

“அவன் பொண்டாட்டியைப் பாக்க சென்னை போயிருக்கான் டி. நாளைக்கு தான் வருவான்”

“அப்படியா?”, என்று கேட்ட அவளது முகம் சோர்ந்து போனாலும் அதை மங்கையிடம் அவள் காட்டிக் கொள்ள வில்லை. சிறிது நேரம் வேண்டா வெறுப்பாக பேசிக் கொண்டிருந்து விட்டு சென்று விட்டாள்.

இங்கே சிந்துவோ ஆதவன் நினைவில் தான் கரைந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒவ்வொரு யுகம் போல கடந்தது. வீட்டினராலும், அஞ்சலியாலும் கூட அவளை சகஜமாக மாற்ற முடியவில்லை. ஆதவனின் அணைப்புக்காக, அவனது இதழ் முத்தத்திற்காக அவள் மனம் ஏங்கியது. ஏக்கம் நிறைவேறாததால் அவள் மனது மிகவும் சோர்ந்தது.

சரியான நேரத்துக்கு அமுதவள்ளி உணவு உண்ண வைக்க வில்லை என்றால் உணவையே மறந்திருப்பாள். அப்படிப் பட்ட மன நிலையில் இருந்தாள் சிந்து.

“இப்படியே இருந்தா என்ன அர்த்தம் சிந்து? வா கோவிலுக்கு போகலாம்”, என்று அழைத்தாள் அமுதவள்ளி.

“நான் வரலை மா”, என்று உடனடியாக மறுத்தாள் மகள்.

“ரூமுக்குள்ளே அடைஞ்சு கிடந்தா உனக்கே நல்லா இருக்காது டி. வா”

“வரலை மா, பிளீஸ் என்னை விடு”

“இன்னைக்கு கோவில்ல சுமங்கலி பூஜை இருக்கு டி. இன்னைக்கு வேண்டி கிட்டா உன் புருசனுக்கு நல்லது. அதான் கூப்பிட்டேன். சரி வரலைன்னா விடு”, என்று சொல்லி மகளை ஆழம் பார்த்தாள்.

“அஞ்சு நிமிசத்துல கிளம்பி வரேன் மா”, என்று சொல்லி எழுந்து கொள்ள அமுதவள்ளிக்கு சிரிப்பாக வந்தது. சந்தோஷமாக மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்றாள். அன்று வார விடுமுறை என்பதால் ஏகாம்பரம் மட்டும் வீட்டில் இருந்தார். அசோக் வேலைக்குச் சென்றிருந்தான்.

அப்போது தான் ஆதவன் அங்கு வந்தான். அவனுக்கு தயக்கம் இருந்தாலும் மனைவி என்று வருகையில் வேறு வழி இருக்க வில்லை. அவர்கள் என்ன சொல்வார்களோ என்றும் குறிப்பாக ஏகாம்பரம் என்ன சொல்வாரோ என்றும் அவனுக்கு கலக்கமாக இருந்தது. இன்னும் தெளிவாகச் சொன்னால் ஏகாம்பரம் என்ன சொல்வாரோ என்று கூட அவனுக்கு பயம் இல்லை.

அதைக் கேட்டு தான் எப்படி அவருக்கு எதிர் வினை புரிவோம் என்பதே அவனுக்கு பயமாக இருந்தது. ஏதாவது மரியாதை இல்லாமல் பேசி உறவே முறியும் சூழ்நிலை வந்து விடக் கூடாதே என்று கடவுளிடம் பொறுமையை வேண்டினான். கூடவே சிந்து தன்னுடன் வருவாளா என்றும் அவனுக்கு கவலையாக இருந்தது. ஆனால் அவன் நினைக்காததெல்லாம் நடக்கும் என்று அவன் ஒரு சதவீதம் கூட எண்ணவே இல்லை.

சிந்து வீட்டில் இல்லை என்று அவனுக்கு தெரியாததால் மனைவியைக் காண உச்சக் கட்ட ஆவலில் இருந்தான். அவளை எப்படியாவது தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவில் தான் வந்திருந்தான்.

வீட்டுக்கு வந்ததும் திக் திக்கென்ற மனதுடன் காலிங் பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்தது ஏகாம்பரம் தான். அவனைக் கண்டதும் கொதித்துப் போனவர் “இங்க எங்க வந்த?”, என்று தான் கோபமாக கேட்டார்.

அவர் கத்தலில் மதியத்துக்கு சமைத்துக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண்ணும் யாரோ எவரோ என்று என்று எண்ணி எட்டிப் பார்த்தாள். திருமணத்தில் அவனைப் பார்த்ததால் அவளுக்கு அவனை நன்கு அடையாளம் தெரிந்தது. ஆனால் ஏகாம்பரம் இருக்கையில் தான் என்ன செய்ய முடியும் என்று எண்ணிக் அமைதியாக நின்று கொண்டாள்.

ஆதவனோ அவர் கேள்வியில் அப்படியே நின்று விட்டான். அவர் அப்படிப் பேசும் போது மாமா என்று அவரை அழைக்க அவனுக்கு வாய் வர வில்லை. அதனால் “நான் சிந்துவைப் பாக்கணும்”, என்றான். “கீழ வாடி”, என்று அவன் மனம் தவித்தது. ஆனால் அவளோ அங்கே இருந்தால் தானே வருவாள்?

“என் பொண்ணை நீ எதுக்கு பாக்கணும்? இனி உனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவ என் பொண்ணு மட்டும் தான். தயவு செஞ்சு இங்க இருந்து போ”, என்றார் ஏகாம்பரம்.

“அதை அவளே சொல்லட்டும்”, என்று அவன் தெனாவெட்டாக சொல்ல “அவ உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு தானே இங்க வந்திருக்கா. அதிலே தெரிய வேண்டாமா அவ மனசுல என்ன இருக்குன்னு?”, என்று கேட்டார்.

அதற்கு மேல் அவரிடம் கெஞ்ச அவன் தன்மானம் இடம் கொடுக்க வில்லை. அவரிடம் சண்டை போட சிந்து மீது அவன் வைத்திருக்கும் காதல் இடம் கொடுக்க வில்லை. அதனால் வாசலோடு திரும்பிச் சென்று விட்டான். அவன் கார் கிளம்பிச் சென்றதும் கொதித்த மனதுடன் சோபாவில் வந்து அமர்ந்தார் ஏகாம்பரம்.

பூஜை முடிந்து கோவிலில் அமர்ந்திருந்த அமுதவள்ளி மகளுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொன்னாள். மனது அமைதியாக இருந்ததால் ஒரு வேளை ஆதவன் பக்கமும் நியாயம் இருக்குமோ என்று முதல் முறையாக சிந்தித்தாள் சிந்து. பின் இருவரும் வீட்டுக்கு வந்த போது பயங்கரக் கோபத்தில் இருந்தார் ஏகாம்பரம்.

“என்ன ஆச்சுங்க? போகும் போது நல்லா தானே இருந்தீங்க?”, என்று அமுதவள்ளி கேட்க சிந்துவும் கேள்வியாக தந்தையைப் பார்த்தாள்.

“லீவ் நாள் வீட்ல நிம்மதியா இருக்கலாம்னா சனியன் தேடி வருது. என் நிம்மதி போச்சு”, என்றார்.

“வீட்டுக்கு யார் வந்தா?”, என்று அமுதவள்ளி கேட்க அவர் பதில் சொல்ல வில்லை. அதனால் வேலைக்காரியை அழைத்து “தேவி வீட்டுக்கு யார் வந்தா”, என்று கேட்டாள்.

“அதுங்க மா…. நம்ம சின்னயா தான்”

“சின்னயாவா? அசோக்கா வந்தான்?”

“இல்லை இல்லை, நம்ம சின்னம்மாவோட வீட்டுக்காரர்”, என்று தேவி சொன்னதும் “என்னது மாப்பிள்ளை வந்தாரா?”, என்று ஆர்வமாக கேட்டாள் அமுதவள்ளி. அதைக் கேட்டு சிந்துவின் கண்களும் ஒளிர்ந்தது.

“என்னங்க மாப்பிள்ளையையா நீங்க சனியன்னு சொன்னீங்க?”, என்று கோபமாக கேட்டாள் அமுதவள்ளி.

“ஆமா, அதுக்கென்ன? சிந்துவைக் பாக்க வந்தான். மரியாதை இல்லாம பேசி அனுப்பிட்டேன். முகத்தை தொங்க போட்டுட்டுப் போய்ட்டான்.”, என்று ஏகாம்பரம் சொல்ல கணவரை வெறித்துப் பார்த்தாள் அமுதவள்ளி. .

அதையும் அவர் பெருமையாக சொல்ல “அப்பா என்ன சொன்னீங்க அவரை?”, என்று கத்தினாள் சிந்து. அவளுக்கு மனது வலித்தது. தன்னை அவன் தேடி வந்து விட்டான் என்று அவள் சந்தோஷப் பட்டால் அவரோ அவனை அவமானப் படுத்தி அனுப்பி இருந்தார்.

அவளை, அவள் கோபத்தை அவர் புரியாத பார்வை பார்த்தார். அவர் உண்மையைத் தெளிவாக சொல்ல மாட்டார் என்பது புரிய “தேவி என்ன நடந்துச்சு?”, என்று கேட்டாள் அமுதவள்ளி.

அவள் நடந்ததை புட்டு புட்டு வைக்க “உங்களால எப்படிப்பா அவர் கிட்ட இவ்வளவு மோசமா நடந்துக்க முடிஞ்சது?”, என்று கண்களில் கண்ணீருடன் கேட்டாள் சிந்து.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!