Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 17 1

அத்தியாயம் 17

தனிமை என்னை அழுத்திக்

கொண்டிருக்கும் போது உந்தன்



Advertisement

நினைவுகள் மட்டுமே சங்கீதமாய்!!!

மகேஸ்வரன் உடனே கேசவனை அழைத்தார். அதை கேசவன் எடுத்ததும் “என்னை மன்னிச்சிருங்க பெரிய மாப்பிள்ளை. இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை”, என்று மகேஸ்வரன் கதற அந்த பெரிய மனிதர் அழுவது சங்கடமாக இருந்தது கேசவனுக்கு.

Advertisement

Advertisement

“பிரச்சனையை உடனே மறக்குற அளவுக்கு சின்னது இல்லைங்க மாமா. கொஞ்ச நாள் ஆறப் போடுங்க. எதையும் பேசி முடிக்கிற நிலைமையில நாங்க இல்லை”, என்றார் கேசவன்.

கேசவன் அந்த அளவுக்கு பேசுவதே மகேஸ்வரனுக்கு போதுமானதாக இருக்க “சரி”, என்று சொல்லி போனை வைத்தார். எல்லாரும் மூளையில் சுருள வீடு வீடாகவே இல்லை. அடுத்த நாள்

Advertisement

ஊரில் ஆள் ஆளுக்கு ஏதேதோ பேசினார்கள். துக்க வீடு போல விசாரிக்க வந்தார்கள்.

சுதா வீட்டில் சூழ்நிலைக் கைதியாக தான் இருந்தாள். வாயில்லா பூச்சி அவள். யாராலுமே அவளை சமாதானப் படுத்த முடியவில்லை.

சுதாவின் தாய்மாமன்மார்கள் சமாதானம் பேசச் செல்லலாம் என்று மகேஸ்வரனிடம் சொல்ல “கொஞ்ச நாள் ஆகட்டும்”, என்று சொல்லி பிரச்சனையை ஆறப் போட்டார்.

மனது கேட்காமல் சுதா வரதனை அழைத்தாள். அவனோ போனை கட் பண்ணி விட்டான். பின் பூங்கொடியை அழைத்தாள். அதே நேரம் பூங்கொடி சோகமாக அமர்ந்திருந்தாள். ஏனென்றால் இன்னும் சிறிது நேரத்தில் மணிமாறன் கிளம்பி விடுவான்.

அவளை இறுக அணைத்துக் கொண்டு அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தான் மணிமாறன். அவள் மனது அவனுக்கு தெளிவாக தெரிந்தது.

இப்போது அவள் மனதில் வீட்டில் நடந்த பிரச்சனைகள் எதுவும் இல்லை. சற்று நேரத்தில் அவன் கிளம்பி விடுவான் என்பதிலே இருந்தது.

அவன் நெஞ்சில் சாய்ந்து அவள் கண்ணீர் வடிக்க “என்ன கொடி இது? இப்படி அழுதா எனக்கும் கஷ்டமா இருக்காதா?”, என்று கேட்டான்.

“இனி எப்ப வருவீங்க?”

“இன்னும் நாலு மாசத்துல டிரைனிங் முடிஞ்சிரும் டி. அப்புறம் உன் கூட தான் இருப்பேன். அழக் கூடாது சரியா?”

“ம்ம்”

“சமத்து”, என்று அவளைக் கொஞ்சி அவள் மனதை மாற்றி விட்டு குளிக்கச் சென்றான்.

அப்போது சுதா அழைக்கவும் அதை எடுத்து “சொல்லுங்க அண்ணி”, என்றாள்.

“என்னை மன்னிச்சிருங்க அண்ணி. அண்ணன் கிட்டயும் மன்னிப்பு கேக்கணும்”

“மன்னிக்கிற அளவுக்கு நீங்க ஒரு தப்பும் செய்யலை அண்ணி. அப்புறம் உங்க அண்ணன் குளிக்கிறாங்க”

“அவங்க வந்ததும் நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லுங்க”

“நீங்க ஒரு தப்பும் செய்யலை அண்ணி”

“அன்னைக்கு நான் அமைதியா இருந்தது தப்பு தானே?”

“நீங்க என்ன செய்வீங்க? அதை விடுங்க. அண்ணன் கிட்ட பேசுனீங்களா?

“கால் பண்னினேன். கட் பண்ணி விட்டுட்டாங்க”

“கொஞ்சம் பொறுமையா இருங்க அண்ணி. அண்ணனுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அவங்க கட்டாயம் உங்க கூட சேந்து வாழ்வாங்க”, என்று பூங்கொடி சொன்னதும் சுதா தைரியமாக இருந்தாள். மேலும் சில வார்த்தைகள் பேசி விட்டு போனை வைத்தாள் பூங்கொடி.

அவளிடம் பேசியதும் சுதாவுக்கும் தெம்பாக இருந்தது. அந்த தைரியத்தை பூங்கொடி அவளுக்கு கொடுத்திருந்தாள். ஆனால் அவளது தைரியத்தை குலைக்கும் விசயங்களும் பின் வரும் நாட்களில் நடந்தது..

இங்கே மணிமாறன் ஊருக்கு கிளம்பிச் செல்ல பூங்கொடி காலேஜ் சென்று வந்து கொண்டிருந்தாள். ஆனால் அன்னை வீட்டுக்கு மட்டும் செல்ல வில்லை.

வரதன் அவளை வீட்டுக்கு அழைக்க “நீ அண்ணியை கூட்டிட்டு வா. அப்ப வரேன்”, என்று சொல்லி விட்டாள்.

தங்கைக்காக கூட சுதாவின் வீட்டுக்கு செல்ல அவன் நினைக்க வில்லை. ஆனால் சுதாவாக வீட்டுக்கு வந்தால் வரட்டும் என்ற மனநிலைக்கு வந்திருந்தான்.

கிட்டதட்ட ஒரு வாரம் கழித்து “என்னப்பா மகேஸ்வரா? பொண்ணை இன்னும் வீட்ல வச்சிருந்தா நல்லாவா இருக்கு? என்னன்னு கேட்டுட்டு விட்டுட்டு வரலாம் பா”, என்றார் சுதாவின் சின்னத் தாத்தா.

“எனக்கும் புரியுது சித்தப்பா. ஆனா அவங்க பொறுமையா இருக்கச் சொல்றாங்களே?”

“பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கணும்ல? இதை உடனே கேட்டு தான் ஆகணும்? நாங்க தான் தப்பு பண்ணினோம். ஆனா சுதா என்ன பண்ணினா? அவளை எதுக்கு கூப்பிட வராம இருக்கணும்”, என்று இளங்கோ தூண்டி விட மகேஸ்வரன் அவனை முறைத்துப் பார்த்தார்.

சின்னத் தாத்தாவுக்கு மகேஸ்வரன் பயப்படுவார் என்பதால் அவர் முன்னிலையில் தந்தை ஒன்றும் சொல்ல மாட்டார் என்று எண்ணி தைரியமாக பேசினான் இளங்கோ.

“இந்த கல்யாணமே வேண்டாம் தாத்தா. வெட்டி விட்டுறலாம். அங்க போனாலும் சுதா நல்லா இருக்க மாட்டா”, என்று மேகலா சொல்ல அதைக் கேட்டு மற்றவர்கள் அதிர்ந்து போனார்கள். சுதாவோ கண்களில் கண்ணீரோடு தந்தையைப் பார்த்தாள்.

“வாயை மூடு டி. என்ன வார்த்தை பேசுற? என் பிள்ளை வாழவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள?”, என்று மகளின் முதுகில் நான்கு போடு போட்டாள் வள்ளி.

“அவ சொன்னதுல என்ன மா தப்பு இருக்கு? சுதாவுக்கு வேற நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். நான் கூட்டிட்டு வரேன். முதல்ல விவாகரத்துக்கு அப்ளை பண்ணச் சொல்லுங்க”, என்று இளங்கோவும் சொல்ல மகேஸ்வரனோ எதுவும் சொல்லாமல் யோசனையில் இருந்தார்.

அவர் ஒன்று நினைக்க சுதாவோ “என்ன அப்பா அமைதியா இருக்காங்க? அப்படின்னா அண்ணனும் அக்காவும் சொல்றதுக்கு சரின்னு சொல்லப் போறாங்களோ? விவாகரத்து செய்யணுமா? அவரை விட்டு பிரிய என்னால எப்படி முடியும்?”, என்று அதிர்வாக எண்ணியவள் அடுத்த நொடி சாமி அறைக்குச் சென்றாள்.

“கடவுளே என்னை என் புருஷனோடு சேத்து வை”, என்று வேண்டியவள் அடுத்த நொடி கற்பூரத்தை எரிய விட்டு அதை எடுத்து தன்னுடைய வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டாள்.

திடீரென்று அவளைக் காணாததால் வள்ளி அவளைத் தேட அவள் கையில் நெருப்பு பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போய் “பாப்பா”, என்று அலறினாள்.

எல்லாரும் அங்கே கூட வேகமாக வந்த மகேஸ்வரன் அவள் கையில் இருந்த கற்பூரத்தை தட்டி விட்டார்.

சுதா அழுது கொண்டே இருக்க “என்ன மா இதெல்லாம்?”, என்று கேட்டார் மகேஸ்வரன்.

“அவங்க விவாகரத்து பண்ணச் சொல்றாங்க. எனக்கு அவர் இல்லாம வாழ முடியாது பா”

“அசடு, அவங்க சொன்னா நான் கேட்டுருவேனா?”

“நீங்களும் அமைதியா இருந்தீங்களே பா?”

“என்ன பண்ணலாம்னு யோசிச்சேன் டா. இங்க இருந்தா இவங்க உன்னை நிம்மதியா வாழ விட மாட்டாங்க. அதுக்கு என்ன பண்ணலாம்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன்”, என்று சொல்லி மகன் மற்றும் மூத்த மகளைப் பார்த்தார்.

“அப்பா, என்னை அங்க கொண்டு போய் விட்டுருங்க பா. எனக்கு அவர் வேணும்”,. என்று சுதா சொல்ல “உன்னை அசிங்கப் படுத்தினவங்க வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறியே? மானங்கெட்டவளே? அப்புறம் எதுக்கு டி இங்க வந்த?”, என்று கேட்டாள் மேகலா.

“நான் எங்க வந்தேன்? நீங்க எல்லாரும் சேந்து தானே இழுத்துட்டு வந்தீங்க? எல்லாத்துக்கும் காரணம் நீ தான். இனி நீ எனக்கு அக்காவே கிடையாது”

“எவனோ ஒருத்தனுக்காக என்னையே அக்கா இல்லைன்னு சொல்லுவியா?”

“அவர் ஒண்ணும் எவனோ ஒருத்தன் இல்லை. என்னோட வீட்டுக்காரர். இனி அவரை ஏதாவது பேசின வகுந்துடுவேன்”

“பாத்தீங்களாப்பா, இவ பேசுறதை?”, என்று மேகலா கேட்க “அவ சரியா தானே பேசுறா. நான் உன்னை எப்படி தலை முழுகன்னு நினைச்சிட்டு இருக்கேன். அதுக்கு முன்னாடி இப்ப எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பனும். எல்லாரும் அவங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும்”, என்றதும் இளங்கோ “சரி”, என்றான்.

“நான் வர மாட்டேன்”, என்றாள் மேகலா.

“அப்படின்னா அப்படியே வெளிய போயிரு. இனி என் வீட்டு வாசல் மிதிக்க கூடாது”, என்று மகேஸ்வரன் சொல்ல வாயை மூடிக் கொண்டாள் மேகலா.

அனைவரும் வரதன் வீட்டுக்கு சென்றார்கள். அவர்களை வரதன் வா என்று கூட கேட்க வில்லை. மனைவியை மட்டும் ஒரு பார்வை பார்த்தான்.

கேசவன் தான் அனைவரையும் வரவேற்றார். ஆனாலும் தன்னுடைய மனதில் இருப்பதை சொல்லியும் விட்டார். “உங்க மேல கோபம் இருக்கு தான். ஆனா நான் என் தம்பியையும் பாக்கணும். அதனால உங்களை மன்னிச்சு வீட்டுக்குள்ள சேக்க்குறேன். இதே தப்பை என்னோட மாமனார் குடும்பம் செஞ்சிருந்தா அப்படியே விலக்கி வச்சிருப்பேன். ஆனா அவங்க அப்படிச் செய்ய மாட்டாங்க. ஏன்னா என்னோட மனைவியும் சரி, என் தம்பி மனைவிங்களும் சரி எல்லாருமே அவங்க வீட்ல உள்ளவங்களால நல்ல விதமா வளக்கப் பட்டிருக்காங்க. ஆனா உங்க வீட்ல அப்படியா?”, என்று குத்திக் காட்டினார் கேசவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!