Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 17 2

“எங்களை மன்னிச்சிருங்க மாப்பிள்ளை. நான் ஒத்துக்குறேன். என் மூத்த பொண்ணையும் என் மகனையும் நான் சரியா வளர்க்கலை தான். ஆனா என் சின்னப் பொண்ணு அவங்களை மாதிரி இல்லை. அவ தங்கம். நான் பெத்த தகரம் ரெண்டும் இப்படி எல்லாம் நடந்திருக்கும்னு எனக்கு தெரியாது”, என்றார் மகேஸ்வரன்.

“செய்யுறதையும் செஞ்சிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா?”, என்று குதித்தான் மணிவாசகம்.



Advertisement

“அவங்க இறங்கி தானே பேசுறாங்க. பொறுமையா இரு டா”, என்றார் மணியம்மை.

Advertisement

“என்னத்த மா பொறுமையா இருக்குறது? நடந்தது என்ன சாதாரண விஷயமா?”, என்று கேட்டான் தம்பிதுரை.

Advertisement

“கண்டிப்பா சாதாரண விஷயம் இல்லைங்க. ரொம்ப அக்கிரமம் தான். இப்ப எல்லாரும் மன்னிப்பு கேக்க வந்திருக்கோம். மன்னிச்சிருங்க”, என்றாள் வள்ளி.

Advertisement

“என்னால யாரையும் மன்னிக்க முடியாது. உங்க மூத்த பிள்ளைங்க இருக்குற வீட்ல நான் இருக்க மாட்டேன். என் பொண்டாட்டியை மட்டும் இங்க விட்டுட்டு உறவை முடிச்சிட்டு போறதா இருந்தா போங்க. நீங்களும் சுதா அம்மாவும் வந்து அவளை பாத்துட்டு போனா நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா சுதாவை அங்க அனுப்ப மாட்டேன். இதுக்கு சம்மதம்னா சுதாவை விட்டுட்டு போங்க. இல்லையா கிளம்பி போய்கிட்டே இருங்க. சில சனியன்கள் நின்ன இடத்தை பினாயல் ஊத்திக் கழுவனும்”, என்று உறுதியாக சொல்லி விட்டான் வரதன்.

மகேஸ்வரனுக்கு மகள் வாழ்க்கை தான் முக்கியம் என்பதால் சுதாவை விட்டுவிட்டுச் செல்ல முடிவு எடுத்தார்.

“அப்பா அன்னைக்கு எங்களை சாக்கடைன்னு சொன்னாங்க. இன்னைக்கு சனியன்னு சொல்றாங்க”, என்று மேகலா புகார் வாசிக்க அவள் கன்னத்தில் ஒரு அரை வைத்தவர் “உன் வாயால தான் இவ்வளவு பிரச்சனை. இனி ஒரு வார்த்தை பேசின கொன்னு புதைச்சிருவேன். முதல்ல வெளிய போய்க் கார்ல ஏறு. உன்னை ஊர்ல போய் வச்சிக்கிறேன்”, என்று சொல்ல அவள் அமைதியாகச் சென்று சென்று விட்டாள்.

மகேஸ்வரன் இளங்கோவை கண்ணைக் காட்ட “எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. என்ன நடந்துச்சுன்னு தெரியாம அவசரப் பட்டுட்டேன்”, என்றான்.

அதைக் கேட்டு யாரும் ஒரு வார்த்தை கூட அவனுக்கு ஆறுதலாக பேச வில்லை. அதற்கு மேல் அங்கு இருக்க வேண்டாம் என்று எண்ணிய மகேஸ்வரன் “சரிங்க மாப்பிள்ளை நாங்க கிளம்புறோம். இனி சுதா எங்க பொண்ணு கிடையாது. உங்க வீட்டு பொண்ணு தான். மகளையும் மாப்பிள்ளையையும் நான் இப்போதைக்கு எங்க வீட்டுக்கு கூப்பிட மாட்டேன். பாக்கணும்னு தோணுச்சுன்னா நாங்க வந்து பாத்துட்டு போறோம். வரோம்”, என்றார். கேசவன் தலையாட்டினார்.

“வரோம் சம்பந்தியம்மா”, என்றதும் மணியம்மையும் தலையாட்டினார்.

“போயிட்டு வரோம் பாப்பா”, என்று சுதாவிடம் சொன்னதும் அவளும் கண்ணீர் மல்க பெற்றவர்களைப் பார்த்தாள். அப்போது மங்களத்தைப் பார்த்தார் மகேஸ்வரன்.

“என்னப்பா ஏதாவது வேணுமா?”

“கொஞ்சம் பிள்ளையை பாத்துக்கோ மா”

“நாங்க பாத்துக்குறோம் பா. இனி எங்களுக்கு அவ தங்கச்சி தான்”

“ரொம்ப நல்லது மா. அப்புறம் அவ கையில காயம் இருக்கு. அது சரியாகுற வரைக்கும் கொஞ்சம் அவளைப் பாத்துக்கோங்க”

“என்ன காயம்?”

“மாப்பிள்ளை கிட்ட இருந்து அவளை பிரிச்சிருவோம்னு பயந்து கையில் சூடத்தை வச்சி கொழுத்திக்கிட்டா. அது கொப்பளிச்சு போய் இருக்கு. பாத்துக்கோங்க”, என்று சொல்லி விட்டு மகளை அங்கே விட்டுவிட்டு தன்னுடைய குடும்பத்துடன் கிளம்பினார்.

அவர்கள் சென்றதும் சுதா பாவம் போல நிற்க கேசவன் மங்களத்திடம் கண்ணைக் காட்டினார். அதை புரிந்து கொண்ட மங்களமும் அவள் அருகில் வந்து அவள் காயத்தைப் பார்த்தாள்.

வரதனுக்கும் அவள் காயத்தைக் கண்டு துடித்தது தான். ஆனால் எதுவும் சொல்ல வில்லை.

“அக்கா என்னை எல்லாரும் மன்னிச்சிருவீங்களா?”, என்று அழுத படி கேட்டாள் சுதா. “அதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சே. இப்படியா கையை புண்ணாக்குவ? சரி விடு. எல்லாம் மறந்துரு. இனி இது தான் உன் வீடு சுதா. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். வா. ஏதாவது சாப்பிட்டியா?”, என்று கேட்ட படி அவளை உள்ளே அழைத்துச் சென்றாள். அன்று முழுவதும் அனைவரும் அவளிடம் நன்கு பேச வரதனோ அவளை கண்டு கொள்ளவே இல்லை.

அவனுடைய அறைக்கு அவள் தூங்க வரும் போது கூட அவன் அவளிடம் எதுவும் பேச வில்லை.

“என்னை மன்னிச்சிருங்க”, என்று சுதா சொன்னதும் “பேசாம படு”, என்று சொன்னவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட்டான். அவன் அருகே அழுது கொண்டே படுத்தாள். சிறிது நேரத்தில் தன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதியில் உறங்கி விட்டாள். அதன் பின் அவளுடைய காயத்தைப் பார்த்தான்.

அவளுடைய உள்ளங்கையே பரிதாபமாக இருக்க அவளுடைய கரத்தில் ஒரு முத்தம் வைத்தவன் “கொஞ்ச நாள் எனக்காக பொறுத்து இரு டி. உன்னை உடனேயே என்னால ஏத்துக்க முடியாது”, என்று மானசீகமாக அவளிடம் பேசி விட்டு படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் காலையிலே பூங்கொடியை அழைத்தாள் சுதா.

அதை எடுத்து “சொல்லுங்கண்ணி”, என்றாள் பூங்கொடி.

“அண்ணி, நான் இங்க நம்ம வீட்டுக்கே வந்துட்டேன். அப்பா கொண்டு வந்து விட்டுட்டாங்க”

“ரொம்ப சந்தோஷம் அண்ணி. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு. அண்ணன் பேசினானா?”

“இல்லை”

“கொஞ்சம் பொறுமையா இருங்க. அவன் மனசு மாறும்”

“சரிங்கண்ணி”, என்று அவள் சொல்லும் போது அறைக்குள் வந்தான் வரதன். அவள் பேசியதைக் கேட்டு இளங்கோவின் மனைவியிடம் தான் பேசுகிறாள் என்று எண்ணி “யாரு போன்ல? என்ன சொல்லிட்டு இருக்க?”, என்று கோபமாக கேட்டான்.

அவன் கோபத்தில் பயந்து எழுந்து நின்றவள் “நான் இங்க வந்துட்டேன்னு பூங்கொடி அண்ணி கிட்ட சொல்லிட்டு இருக்கேன்”, என்று தயங்கிச் சொன்னாள். அதைக் கேட்டு அவன் முகம் அப்படியே மலர்ந்து போனது.

“சரி பேசு”, என்று அவன் சொல்ல “சொல்லுங்கண்ணி”, என்றாள்.

“அண்ணன் என்ன மிரட்டுறானா?”, என்று கேட்டாள் பூங்கொடி.

“ம்ம்”

“அவன் கிட்ட போனைக் கொடுங்க”, என்று பூங்கொடி சொன்னதும் “அண்ணி உங்க கிட்ட பேசணுமாம்”, என்று சொல்லி போனைக் கொடுத்தாள்.

அதை வாங்கியவன் “சொல்லு டா”, என்று பாசமாக பேசினான். சுதா இதே போல தன்னிடம் எப்போது பாசமாக பேசுவான் என்று ஏங்கினாள்.

“எங்க அண்ணியை ரொம்ப மிரட்டுறியா அண்ணா?”

“அப்படி எல்லாம் இல்லை டா”

“அவங்க ரொம்ப பாவம். ரொம்ப அப்பாவி. அவங்களை எதுவும் சொல்லாத. உடனே நீ சரியாகுன்னு சொல்லலை. ஆனா மத்தவங்க மேல உள்ள கோபத்தை அவங்க கிட்ட காட்டாத”, என்றாள் பூங்கொடி.

“சரி மா, வீட்டுக்கு வரியா?”

“சாயங்காலம் வரேண்ணே’

“காலேஜ்க்கு கூப்பிட வரவா?”

“வேண்டாம், நானே வந்துறேன். அண்ணி கூட நல்லா பேசு”

“சரி மா. மாப்பிள்ளை அங்க போயிட்டு பேசினாரா?”

“பேசினாங்கண்ணா”

“எங்களை மன்னிச்சிட்டாரா?”

“அதை பத்தி எல்லாம் பேசலைண்ணா”

“அவரை கஷ்டப் படுத்திட்டோமோனு இருக்கு மா”

“அதை விடுண்ணே. நீ அண்ணியை நல்லா பாத்துக்கோ. சீக்கிரம் என் மருமகனையாவது மருமகளையாவது பெத்துக் கொடு”

“சரிங்க பெரிய மனுஷி. வைக்கிறேன். நீ சாயங்காலம் வா”, என்று சொல்லி போனை வைத்தான்.

போனை சுதாவிடம் நீட்டினான் வரதன். தயங்கிய படியே அதை வாங்கியவள் கட்டிலில் அமர்ந்தாள்.

“என்ன உக்காந்துட்ட? நான் கடைக்கு போக வேண்டாமா? எனக்கு சாப்பாடு பரிமாறுற உத்தேசம் இருக்கா இல்லையா?”, என்று அவன் கேட்டதும் அவசரமாக எழுந்தவள் “என் கையால சாப்பிட மாட்டீங்களோன்னு நினைச்சேன்”, என்றாள்.

“பொண்டாட்டி கையால சாப்பிட எந்த புருசனுக்கு கசக்குமாம்? வா, வந்து எடுத்து வை“, என்று சொல்ல அவள் முகம் மலர்ந்தது. மனதார பூங்கொடிக்கு நன்றி சொன்னவள் வேகமாக அவனுக்கு உணவு எடுத்து வைக்கச் சென்றாள். அவன் இந்த அளவுக்கு பேசியதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. சுதா உணவு பரிமாற வரதன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அனைவருக்குமே மனதில் நிம்மதி வந்தது.

சுதாவிடம் “போய்ட்டு வரேன்”, என்று சொல்லி விட்டே வேலைக்கு கிளம்பினான். சுதா முகம் மலர்ந்தது. அதன் பின் மகேஸ்வரன் மற்றும் வள்ளிக்கு அழைத்து வரதன் மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் தன்னிடம் நன்கு பேசுகிறார்கள் என்று சொன்னாள். அதைக் கேட்டு பெரியவர்களுக்கும் நிம்மதியே.

மகேஸ்வரனும் “மேகலாவை அவ புருஷன் வீட்டுக்கு அனுப்பிட்டேன் மா. கதிரையும் தனிக் குடித்தனம் அனுப்ப போறேன்னு சொன்னேன். பொண்டாட்டியும் புருசனும் காலுல விழுந்துட்டாங்க. அதனால என்னால அவங்களை விரட்ட முடியலை. என்ன இருந்தாலும் மகனாச்சே”, என்றார்.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!