Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 18 2

மற்ற அனைவர் முகமுமே மலர்ந்தது. தங்கள் வீட்டுப் பெண்ணை கௌரவ படுத்தும் சுதாவை யாருக்கு தான் பிடிக்காது. அதற்கு மேல் போகாமல் இருப்பது சரியில்லை என்பதால் எழுந்து சென்ற பூங்கொடி சந்தனம் வைத்து அவளுக்கு வளையல் அணிவித்தாள்.

அணிவிக்கும் போது “அண்ணி, நம்ம வீட்டு ஆளுங்களை வளையல் போடச் சொல்லுங்க. பிளீஸ். நீங்க சொன்னா எல்லாரும் கேப்பாங்க”, என்றாள் சுதா.



Advertisement

“அவ்வளவு தானே? சொல்லிட்டாப் போச்சு”, என்று சொன்ன பூங்கொடி அன்னை மற்றும் மற்ற அண்ணிகளிடம் சுதாவுக்கு வளையல் போடச் சொன்னாள்.

இப்போது யாரும் மறுக்காமல் ஒவ்வொருவராக எழுந்து வந்து வளையல் போட்டு விட்டனர். அதில் தேவகியும் அடக்கம். இவர்கள் வீட்டில் அனைவரும் வளையல் போட்டதும் சுதாவின் அம்மா, அத்தை, பெரியம்மா என்று அனைவரும் வளையல் போட ஆரம்பித்தார்கள்.

Advertisement

Advertisement

சுந்தரி ஏற்கனவே வாங்கிய பல்பால் வளையல் போடச் செல்லாமல் ஒரு ஓரமாகவே நின்று கொண்டாள். கடைசியாக மேகலா சென்று வளையல் எடுக்க “நீ எதுக்கு வளையல் எடுக்குற?”, என்று கேட்டாள் சுதா.

“என்ன மா இப்படி கேக்குற? மேகலா உன்னோட அக்கா தானே? அவளும் போடலாம்”, என்றார் சுதாவின் பெரியம்மா.

Advertisement

“அக்கா போடலாம் தான் பெரியம்மா. ஆனா இவ போடக் கூடாது. கல்யாணம் முடிஞ்சு இத்தனை வருஷம் ஆகியும் ஒரு குழந்தையை பெத்துக்க முடியாத மலடி இவ. இவ வளையல் போட்டா எனக்கும் என் பிள்ளைக்கும் ஆகாது. வயிறு எரியுவா. இவ போட வேண்டாம்”, என்று தயவு தாட்சன்யமே இல்லாமல் சொல்ல அங்கே யாரும் எதுவும் பேச வில்லை.

மேகலா நடந்த அவமானத்தில் அழுது விட்டாள். “நான் மலடியா? எனக்கும் குழந்தை உருவானதே? அதை போய் அழிச்சேனே? அதை இப்ப வெளிய சொல்ல முடியுமா?”, என்று மனதுக்குள் எண்ணி வெளியே கண்ணீர் சிந்தினாள்.

“நீ சொல்றது சரி தான் சுதா. அவ உனக்கு வளையல் போட வேண்டாம். ஆனா எதுக்கு மா அவளை வர வச்ச?”, என்று கேட்டாள் சுதாவின் அத்தை.

“வேற எதுக்கு கூப்பிடுவாங்க? இத்தனை பேர் முன்னாடி அவளை அவமானப் படுத்த தான்”, என்று சுதா வெளிப்படையாகவே சொல்ல அனைவருக்கும் திகைப்பு தான்.

“சுதா என்ன இருந்தாலும் அவ உன் அக்கா. ஏன் இப்படி பண்ணுற?”, என்று கேட்டாள் வள்ளி.

“அக்காவா? அப்படி ஒரு உறவே எங்களுக்குள்ள இல்லை. நான் ஏன் தெரியுமா அவளை வர வச்சேன்? இப்ப நான் மலடின்னு சொன்னதும் கூனி குறுகி நிக்குறாள்ல? அதைப் பார்த்து ரசிக்க தான்”

“பிடிக்கலைன்னா விடு மா. ஆனா தப்பா எதுவும் பேச வேண்டாம்”, என்றாள் அதே அத்தை.

“உங்களுக்கு விஷயம் தெரியாது அத்தை. இவளை எல்லாம் முச்சந்தியில வச்சு தான் அசிங்கப் படுத்தணும்”

“இந்த அளவுக்கு அக்கா மேல வன்மம் வளத்துக்க காரணம் என்ன மா?”

“காரணம் இருக்கு அத்தை. பூங்கொடி அண்ணி மனசளவுல குழந்தை மாதிரி அவங்களை இவ அசிங்கப் படுத்தினா. அதுக்கு திருப்பி கொடுக்க வேண்டாம்?”

“உன் நாத்தனாரையா?”

“ஆமா அத்தை”, என்று சுதா சொன்னதும் “ஏன் மேகலா, உன் தங்கச்சியை கட்டிக் கொடுத்துருக்குற வீட்ல போய் உரண்டை இழுக்கலாமா? அவளுக்கு நாள பின்ன பிரச்சனை வரும்னு ஏன் நினைக்கலை?”, என்று கேட்டாள் சுதாவின் அத்தை.

மேகலா அதற்கு என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருக்க “இவங்க மட்டும் இல்லை அத்தை. எங்க அண்ணன், அப்புறம் அவன் பொண்டாட்டியும் சேந்து தான். இவங்க எல்லாரும்  பேசின பேச்சுக்கு பதிலடி கொடுக்க தான் இவங்களை வரச் சொன்னேன்? ஆனா இவ்வளவு அசிங்கப் படுத்தியும் இவங்க ஏன் இங்க இருக்காங்கன்னு தெரியலை. ஒரு வேளை மானங்கெட்டு போய்ச் சோறு திங்க நிக்குறாங்களோ என்னவோ?”, என்று சுதா கேட்க அடுத்த நொடி மேகலா அழுது கொண்டே வேனுக்கு சென்று விட்டாள்.

சுதா இளங்கோவைப் பார்க்க அவன் சுந்தரியின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு சென்று விட்டான். சுந்தரி கூனி குறுகி அவனுடன் சென்றாள்.

இந்த அவமானம் அவர்களுக்கு தேவை தான் என்று மணியம்மை, தேவகி, மங்களம், தாரணி, மைதிலி எண்ண பூங்கொடிக்கு தான் மனது பாரமானது.

“ஏன் அண்ணி இப்படி பண்ணுனீங்க? அவங்க செஞ்சதையே திருப்பி நாமளும் செஞ்சா என்ன அர்த்தம்? எனக்காக நீங்க இப்படி பேசனுமா?”, என்று சுதாவிடம் கேட்டாள் பூங்கொடி.

“உங்களுக்காக நான் இதை அன்னைக்கே பேசிருந்தா இத்தனை நாளும் நான் குற்ற உணர்ச்சில இருந்துருக்க மாட்டேன் அண்ணி. இப்ப தான் என் மனசுக்கு அமைதி வந்த மாதிரி இருக்கு. அன்னைக்கு அவங்க பேசினப்ப நீங்களும் அண்ணனும் வேதனைப் பட்டதை நான் பாத்தேன் தானே? அதை என்னால மறக்க முடியுமா? அதுக்கு தான் அவங்களை வர வச்சேன். இப்ப என் மனசுல இருந்த பாரம் எல்லாம் போயிருச்சு”, என்று சொல்ல அவளை அணைத்துக் கொண்டாள் பூங்கொடி.

“என்னை மன்னிச்சிரு தாயி. நான் கூட ஒரு நிமிஷம் உன்னைத் தப்பா நினைச்சிட்டேன். ஆனா நீயும் என் மத்த மருமகளுங்களுக்கு சலைச்சவள் இல்லைன்னு காட்டிட்ட. நீ நல்லா இருக்கணும் டா”, என்று சொன்னார் மணியம்மை.

மற்றவர்களும் சுதாவை புகழ தங்களின் மகளை அவர்கள் தாங்குவதை நினைத்து சந்தோஷப் படுவதா? இல்லை தன்னுடைய மகள், மகன், மருமகள் மூவரையும் அசிங்கப் படுத்தி விரட்டியதுக்கு கவலைப்படவா என்று தெரியாமல் நின்றார்கள் வள்ளியும் மகேஸ்வரனும்.

“சரி சரி, எல்லாரும் சாப்பிட வாங்க. முதல்ல சுதாவுக்கு ஊட்டுங்க”, என்று கேசவன் சந்தோசமாக சொல்ல அடுத்த நொடி அங்கே பரபரப்பு தொற்றியது.

அப்போது “எனக்கு சாப்பாடு வேண்டாம்”, என்றாள் சுதா. அனைவரும் திகைத்துப் போய் அவளைப் பார்க்க “ஏன் அண்ணி? இந்த பங்க்ஸனே உங்களுக்காக தான்”, என்றாள் பூங்கொடி.

“உங்க அண்ணன் வந்து வளையல் போடாம நான் இந்த சேர்ல இருந்து எந்திக்க மாட்டேன்”, என்றாள்.

“போச்சா? இந்த வரதன் எங்க போனான்னு தெரியலையே. டேய் மணி, தம்பிக்கு போனைப் போடு டா. நடந்ததைச் சொல்லு அவனே வருவான்”, என்று கேசவன் சொன்னதும் மணிவாசகம் வரதனை அழைத்தான்.

அதை எடுத்த வரதன் “சொல்லுண்ணே”, என்றான்.

“எங்க டா இருக்க? வீட்டுக்கு வா”

“நான் வரலை”

“நீ வளையல் போடாம சுதா சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கா டா”

“அவளுக்கு தான் வளையல் போட அவ சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க தானே? அப்புறம் நான் எதுக்கு?”

“டேய் வரதா, அவங்க யாரும் இங்க இல்லை. நீ வா. நம்ம பூங்கொடியை அவங்க அசிங்கப் படுத்தினதுக்கு நம்ம சுதா திருப்பி பதிலடி கொடுத்துட்டா. அதுக்கு தான் அவங்களை வர வச்சிருக்கா. அவங்க அழுதுட்டே வெளிய போயிட்டாங்க டா”

“நிஜமாவாண்ணா?”

“ஆமா டா, எங்க இருக்க?”

“நம்ம வீட்டுக்கு பின் பக்கம் தான் இருக்கேன். இதோ வரேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் அவசரமாக அங்கே வந்தான்.

சுதா அவனைக் கண்டு ஆசையாக பார்க்க அவனோ காதலாக அவளைப் பார்த்தான். இருவரும் சுற்றுப்புறம் மறந்து பார்த்துக் கொண்டிருக்க “அண்ணியை அப்புறம் பாக்கலாம். இப்ப சீக்கிரம் வளையல் போடு. என் மருமகனுக்கு பசிக்கும்”, என்று அவன் தோளைத் தட்டினாள் பூங்கொடி.

சிறு சிரிப்புடன் அவளுக்கு வளையல் போட்டு விட்டவன் “ரொம்ப தேங்க்ஸ் டி”, என்றான்.

“வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா?”, என்று அவள் முணுமுணுக்க அவன் இது வரை சொல்லாததைச் சொன்னான் “ஐ லவ் யு டி பொண்டாட்டி”, என்று. அதில் சுதா முகம் மலர்ந்து போனது.

அதன் பின் விருந்து ஆரம்பமானது. விதவிதமான சாதங்களைப் இலையில் பரிமாறி சுதாவை சாப்பிடச் சொல்ல அவளோ தயங்கினாள்.

மகள் மனதை அறிந்த வள்ளியும் “நானும் பெரியம்மாவும் தான் எல்லாம் செஞ்சோம். சுந்தரியும் மேகலாவும் எதுவும் செய்யலை. சாப்பிடு”, என்று சொல்ல அதன் பிறகு தான் உண்ண ஆரம்பித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!