Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 16

அத்தியாயம்                16

அழகான ரெட் கலர் புல்லட், வண்டி என்னமோ புதிதாகவே இருந்தது. அப்படியே அழகாக மெயிண்டன் செய்திருந்தான் மகி. பார்த்தவுடன் துர்காவிற்கு ஒரு பூரிப்பு வந்தது. ஏதோ தனக்காவே தன் கணவன் வண்டியை எடுத்து வந்தது போல் ஒரு எண்ணம்.

மகி வண்டி எடுக்கவும், அவன் பின் அமர்ந்தவள் ஒரு மோன நிலையில் இருந்தாள், அவளிற்கு அவனின் பேச்சோ, கவனிப்போ தேவையாக இருக்கவில்லை அமைதியாக வந்தாள்.



Advertisement

தூரம் என்னமோ குறைவு தான். ஆனால், மகி பொறுமையாக வண்டியை செலுத்தினான். ஏதோ யோசனை அவனிடம், தனது சைடு மிரர் பார்ப்பது, சுற்றியும் பார்ப்பது என அவன் அதனில் தான் கவனமாக இருந்தான்.

தன்னை ஒரு லாரி பின் தொடர்வதை உணர்ந்தான். அதனால் தான் இந்த பொறுமை மகியிடம். ஏதோ ஒரு உள்ளுணர்வு பொறுமை என்றதோ,. அமைதியாக சென்றான்.

துர்காவிர்க்கு இப்போது தான் நினைவு வந்தது “என்னங்க, கமலுக்கு ஒரே வாமிட்டிங்காமா, அது நிற்க டானிக் வாங்கனும், மெடிக்கல்ல வண்டி நிறுத்துங்க” என்றாள்.

Advertisement

மகி தனது யோசனையிலிருந்து வெளியே வந்து, அவளிடம் சிறய குரலில் “ம்” என்றவன் தொடர்ந்து, “அந்த வைபவ் வந்ததிருக்கானாம்” என்றான். ஏதோ சொல்ல வேண்டும் என்ற செய்தி போல சொன்னான்.

Advertisement

துர்கா இப்போது நிமிர்ந்து அமர்ந்தாள் ”நான் அவர்களிடம் பேசவா” என்றாள். ஒன்றும் சொல்லவில்லை மகி அமைதியானான்.

மெயின் ரோடு வரவும், அந்த ரவுண்டானா திரும்பி மெயின் ரோட்டில் வண்டியை, அந்த மெடிக்கல் ஷாப் இருக்கும் இடத்தில் நிறுத்தினான்.

நிறுத்தியவன், சுற்றும் முற்றும் பார்த்தான், சிறய குரலில் “நீ போய் வாங்கிட்டு அங்கேயே இரு, இதோ நான் வரேன்” என்றவன், வண்டியை யுடேர்ன் எடுத்தது, வந்த வழியே சென்று, தனக்கு பின்னால் வந்த, அந்த லாரியை நெருங்கினான்.

Advertisement

அந்த லாரி ஓட்டுனரிடம் சென்று ஏதோ பேசினான், வண்டியின் ஆக்சிலேட்டர் உறுமிய வண்ணமே இருந்தான், அடக்கப்பட்ட கோவம் தான் அதில் தெரிந்தது.

தன் வண்டியிலேயே அமர்ந்து கொண்டு. அந்த டிரைவரிடம் பேசி முடித்துக் கொண்டு இவன் வண்டியை எடுத்து இரண்டடி கடந்திருக்கும் நேரம், அவனிற்கு எதிர் புறமாக ராங் சைடில் வந்தது அந்த ஸ்கார்பியோ,  அடர் கருப்பு நிறத்தில்.

காற்றில் வரும் ஒரு அம்பின் வேகத்தோடு, சீறி தான் வருகிறது அவனை நோக்கி, மகிக்கு புரிகிறது, இது என்னை நோக்கி தான் வருகிறது என, ஆனால், தன் வண்டியை சைடில் ஓடிக்கவோ, நேரே செல்லவோ அவனது கண்கள் மறுக்கிறது, அந்த அளவிற்கு அந்த வண்டியின் முகப்பு விளக்கு அவன் கண்ணை கூசியது. அவனை நேரே தட்டியது, மோதியது. மகி தன் வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டான்.

மகி அங்கிருந்த டிவைடரில் அவனின் கால் இடித்து, லாரிக்கும் டிவைடர்க்கும் நடுவில் குப்புற வீழ்ந்தான் மகி.

அப்போதே ரிவர்ஸ் எடுத்த ஸ்கார்பியோ, வந்த வழியே சீறி பாய்ந்தது. சைடில் நின்றிருந்த லாரி அப்படியே நேரே சென்றுவிட்டது.

மணி ஒன்றும் பெரிதாக ஆகியிருக்கவில்லை பதினொன்றரை தான். இதனை ஆங்காங்கிருந்தோர் பார்த்து கூட்டம் கூடி விட்டனர்.

துர்காவிற்கு சத்தம் கேட்டது தெரியும். ஆனால், சற்றும் தன் கணவனாக இருப்பான் என்று நினைப்பே இல்லை.

அந்த கடையில் இருந்தவர், “அம்மா உங்கள இறக்கிவிட்டவர் போல இருக்கு “ என்றார்.

‘யார், எங்கே’ என அப்போது தான் பார்த்தாள் துர்கா, அவனின் அருகில் செல்ல செல்ல அப்போதே ஆம்புலன்ஸ் வந்திருந்தது.

மகி மயக்கமெல்லாம் ஆகியிருக்கவில்லை, ஒரு கலக்கத்தில் இருந்தான் எழ முடியவில்லை, வீசப்பட்டவன் கால் பகுதி அந்த இடத்தில் மோதியதால், நல்ல அடி காலில். விழுந்த வேகத்தில் தலையில் அடி இரத்தம் வந்து கொண்டிருக்கிறது.

கண்களை மூட துடித்துக் கொண்டிருந்தான், தன்னை சூழ்ந்த கூட்டத்தில், தனது மனையாளை தேடியது அவனது விழிகள், அவனது இருதயம் இப்போது ‘அவளை பார்த்தே ஆக வேண்டும்’ என மட்டுமே துடித்தது.

ஒதுங்கியே சென்று கொண்டிருந்தவன் இப்போதுதான், ஒத்து செல்ல தொடங்கியிருந்தான், அதனால் தான் இந்த அடம் அவனிடம். தனது காலையும், கையையும் அசைக்க முடியவில்லை.

தன்னை தூக்குகிறார்கள், மகியால் வாய் பேச முடியவில்லை. ஆனால் கண்களில் மட்டும் அந்த திடம் இருந்தது, மூடவில்லை அது, தேடியது அவளை.

வந்து விட்டாள் அவள். அந்த கடைகாரர் சொல்லியவுடன் வந்து விட்டாள், இவனை ஏற்றும் நேரம். அருகில் வந்தவள், வாயையே திறக்கவில்லை ஓடி வந்து அவன் கையை பற்றிக் கொண்டாள், அங்கிருந்தவர்கள், “யாரும்மா நீயி ” என்க. வாய் வரவில்லை அவளிற்கு.

ஏதோ சைகை செய்கிறாள், ஒன்றும் சொல்லவில்லை அவர்களும் புரிந்துகொள்கின்றனர். இப்போதும் மகியின் கண்கள் அவளையே பார்க்க, இப்போது துர்கா, அவன் கையை பிடித்துக் கொண்டு கண்ணை மூடி  அமர்ந்து கொண்டாள், அவன் எதிரில். அவனை இரத்த வெள்ளத்தில் பார்க்க முடியவில்லை அவளால்.

இவளின் இந்த செயலே அவனிற்கு போதுமானாதாக இருந்தது. தன் விழியை மூடிக் கொண்டான்.

அரை கிலோமீட்டரில் ஹோஸ்பிட்டல், வந்துவிட்டனர், துர்கா இறங்கி வழி விட்டாள், மகிக்கு இப்போது மயக்க நிலை. தீவிர சிக்கிசைக்கு கொண்டு சென்றனர்.

யாரும் உடன் இல்லை. இப்போது நர்ஸ் வந்து “அவர் பெயர் என்னங்க” என்க. வாய் பேச வரவில்லை. எனவே அவளை முதலில் பார்த்தார் அந்த பெண். குடிக்க தண்ணீர் கொடுத்து. சிறிது நேரம் விட்டு, விவரம் கேட்க

இப்போது தான் ஸ்மரணை வந்தது அவளிற்கு, கொஞ்சம் நினைவு வர, புரிந்தது எல்லாம். தன் கணவன் பற்றி விவரம் சொன்னாள், அவர்களிடம்.

தனது போனை தேட, அதை காணம். அங்கு  வரவேற்பரை சென்று, தனது அப்பா எண்ணிற்கு அழைத்தாள் வேறு யார் எண்ணும் தெரியாது. விஷயம் சொல்லி. அந்த நேரத்திலும் தம்பியிடம் சொல்ல வேண்டாம் என சொல்லி. வரும் வழியில், அந்த மெடிக்கலில் இருந்து தனது கைபையை எடுத்து வருமாறு சொல்லி வைத்தாள்.

கண்ணில் நீர் இல்லை. கதறல் இல்லை. தெளிவான யோசனை, தான் தான் அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம். அது மட்டுமே அவளின் நினைவில் கொண்டு வந்தாள். இது மிகவும் அபூர்வம். எல்லோர்க்கும் அந்த நேரத்தில் வாராதது.

அவளின் தந்தையும் தாயும் அடுத்த பத்து நிமிடத்தில் வந்தனர். அவரிடம், தங்களின் குடும்ப மருத்துவர்க்கு அழைத்து பேச செய்தாள். அந்த கடைகாரரிடமிருந்து போனை வாங்கி வந்தனர் அவர்கள்.

அதனால், அவள் முதலில் அழைத்தது வினோவை தான். துர்காவின் என்னை பார்த்த வினோ, அவசரமாக எடுத்தான். அவள் விஷயம் சொல்லவும். கொதி நிலையிக்கு வந்தான் அவன்.

துர்காவிடம் எதுவும் காட்டாமல் “வரேன் “ என்றவன் வைத்து விட்டான். அடுத்தடுத்து அகில், ராஜேஷ் என போன் சென்றது. ராஜேஷ் உடனே கிளம்பி வந்துவிட்டான். வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டான்.

மகியின் சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வந்த, டாக்டர் முன் வந்து நின்றனர் ராஜேஷ், வரதராஜன்  இருவரும்.

“உயிர்க்கு ஆபத்தில்லை, காலில் எலும்பு முறிவு, கை பிசகி இருந்தது, நெற்றியில் தையல் போடுமளவு காயம். இடது புறமாக விழுந்ததில் அந்த கன்னத்து எலும்பில் லேசான முறிவு அதற்கான ஆப்பரேஷன் தான் நடந்து கொண்டிருந்தது. அடுத்து காலிற்கு.” என பொறுமையாக விளக்கினார்.

இதெயெல்லாம், வராதராஜன், தன் மகளிடம் சொல்லவும் கேட்டுக் கொண்டவள், அமைதியாக அடுத்த வேலையை பார்க்க சென்றாள். ராஜேஷ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘அ’ என பார்த்திருந்தான்.

வரதராஜனுக்கு தன் பெண்ணின் நிலை குறித்து தான் கவலையாகி போனது. கண்ணில் நீரே வரவில்லை. கணவன் என்றாலே, கொஞ்சம் பதருபவள், இப்போது பொறுமையாக இருக்கவும், கொஞ்சம் பயம் வந்தது அவற்கு.

நித்யாவிற்கு போன் செய்தவள் “அக்கா, கமலுக்கு ஜுரம், நீங்க வரும் போது அவனையும் கூட்டி வந்துடுங்க, அப்புறம் அத்தையும் தான், ராஜேஷ் முன்னாடி வந்துட்டார்க்கா” என்றாள்.

இங்கு வந்த வினோ, ஓர் ஓரமாக போய் அமர்ந்து கொண்டான். யார் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை, தானும் ஏதும் கேட்கவில்லை.

அடுத்த ஒருமணி நேரத்தில் நித்யா, அகில் வந்திருந்தனர் கமலுடன் , அவனையும் அதே ஹோஸ்ப்பிட்டலில் அட்மிட் செய்து கவனித்தனர். வைதேகி தான் கதறிவிட்டார். அவரை யாராலும் கட்டுபடுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் மயக்கமடைந்து அவரையும் கவனிக்கும் படிதான் ஆனது.

நித்யா தான் பயந்து கொண்டே வந்தாள், துர்காவின் நிலை என்னவோ எப்படியிருப்பாளோ என. ஆனால், வந்து பார்த்தால், தெளிவாக இருந்தாள், திடமாக தன் மகனை கையில் வாங்கி கொண்டாள். தானே சென்று அட்மிஷன் போட்டாள். தங்களுக்கான அறை ஒன்றை கேட்டு வாங்கி, தனது அம்மாவை அருகில் வைத்து, கமலை உறங்க வைத்தாள். பின்பே வெளியே வந்தாள்.

இதெல்லாம் நித்யாவை கவலை கொள்ள செய்தது.

அகில் வந்து வரதராஜனிடம் “எவ்வளவு மாமா கட்டினீங்க “ என்று கேட்ட பின்பு தான் அவர்க்கே தோன்றியது தான் ஏதும் அமௌன்ட் கட்டவில்லையே என்று. ராஜேஷை கேட்க அவனும் “இல்லை” என்றான்.

அகில் வந்து துர்காவிடம் “நீங்க ஏதும் அமௌன்ட் கொடுத்திங்களா” என்றான். துர்கா “ஆமாம்” என்றாள்.

ஏதும் பேசவே மாட்டான் அகில் எப்போதும் தன் அண்ணியிடம். ராஜேஷ் போல், கலகலப்பாக இருக்கவே மாட்டான். அதனால் இவளிடம் கேட்க தயங்கி, அங்கே வரவேற்பரையிலேயே சென்று கேட்டு கொண்டான்.

தங்களின் குடும்ப மருத்துவரையும் அழைத்து பேசியிருந்ததால், அவர்கள் இந்த மருத்துவமனையையே தொடர்பு கொண்டு பேசியிருந்தனர். அதானல் அறுவை சிகிச்சையும் உடனே நடந்தது.

இப்படி எல்லோரையும் அந்த இரவு விட்டு வைக்காமல் வேலை வாங்கியது. எல்லோருக்கும் ‘மகி’ என்பவனே ப்ரதானமாக இருந்தான். எல்லோர் கண்களும் விழிப்பு நிலையிலேயே இருந்தது.

இன்று தான் நல்லது நடந்தது என்ற எண்ணம் கூட யார் முகத்திலும் இல்லை. இப்படியே சென்ற அவர்களுக்கு விடியலில் தான் மகியை, எல்லோரும் சென்று பார்க்க அனுமதித்தார் டாக்டர்.

அவனிற்கு நினைவு திரும்பவில்லை. ஒவ்வொருவராக சென்று வந்தனர். வினோவும், துர்காவையும் தவிர.

துர்காவிற்கு பயம், தன் கணவனை இப்படி கட்டுகளுடன், ஓய்ந்து  பார்க்கும் தைரியம் எனக்கில்லை’ என்றே எண்ணினாள், அதனால் அனைவரையும் அனுப்பி பார்க்க செய்தாள்.

வினோவிற்கு கோவம், ‘எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து விட்டான், எவ்வளவு தூரம் சொன்னேன்’ என அவனால் பொறுக்கவே முடியவில்லை. ‘இப்படி இழுத்து வைத்துவிட்டானே’ என்ற எண்ணம்.

‘ஏதாவது செய்தாக வேண்டும் அந்த விவேகனை, எப்படி என்று தான் தெரியவில்லை’ என எண்ணம் தான் வினோவிற்கு.

துர்காவின் தந்தையும், தாயும் மகியை பார்த்து விட்டு கிளம்பினர். அப்போதே மணி 5. அங்கு மகனையும் கவனிக்க வேண்டுமே.

பெரியம்மா மட்டும் இரவு வீட்டிலேயே இருந்தார். அங்குதானே அகிலின் குழந்தைகள் இருப்பதால். மற்ற அனைவரும் இங்கு மருத்துவமனையில் தான்.

காலை, துர்கா வீட்டிலிருந்து உணவு வந்தது.

காலை 9 மணிக்கு தான் நினைவு வந்தது மகிக்கு. டாக்டர் வந்து பார்த்து சென்றுவிட்டார். இன்று ஒருநாள் வரை icu வில், இருந்தான் மகி.

வைதேகி தான் முதலில் சென்றார். தன் மகனை வருடி சத்தமே இல்லாமல் அவர் அழுக, அகில் தான் அவரை தேற்றி வெளிவர செய்தான். மகி அவரிடம் செய்கையில் ‘எனக்கு ஒன்றுமில்லை’ என்றே திடப்படுத்தினான்.

ராஜேஷ் இப்போது தான் சென்று பார்த்து வந்தான். மகியின் கண்கள் யாரையோ தேடியது போலே இருந்தது. மகியை பார்த்த ராஜேஷிற்கே மனது கேட்கவில்லை.

அந்த கன்னத்து எலும்பு முறிவை இவர்கள் வாய் வழியாக அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவனால் பேச முடியவில்லை. அந்த முகத்தை ஓய்ந்து பார்த்ததே இல்லை ராஜேஷ். தன் தந்தை இறந்த போது கூட ஒதுங்கி இருந்தானே தவிர, இப்படி அந்த கண்கள் யாரையும் தேடியதில்லை என உணர்ந்தான்.

இப்படி வலியில் அவன் இருப்பதை பார்க்க அவனிற்கே ஒரு மாதிரியாக இருந்தது. அருகில் சென்று “ண்ணா, ரொம்ப வலிக்குதா” என்றான்.

மகியின் தலை “இல்லை” எனும் விதமாகவே அசைந்தது. “அண்ணிய கூப்பிடவா” என்றான். ஒன்றும் சொல்லவில்லை மகி. கண்களை மூடிக்கொண்டான்.

யாரையும் நீண்ட நேரம் அங்கு நிற்க விடுவதில்லை, அதனால் வெளியே வந்த ராஜேஷ், தன் அண்ணியை பார்த்தான். அவள் நித்யாவின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் துர்கா.

தன் அண்ணியிடம் சொல்ல என்னமோ போல் இருந்ததால், ராஜேஷ், வினோவிடம் “நீங்க போங்கண்ணா, மகிய பார்க்க” என்றான்.

அசையவில்லை வினோ, வீம்பாகவே அமர்ந்திருந்தான். ஒரு அரை மணி நேரம் கழித்து தானே எழுந்து அகிலிடம் சொல்லி சென்றுவிட்டான். வினோவிடம் கலக்கமும், ஒரு ஒதுக்கமும் தான் அகிலிற்கு தெரிந்தது.

ஆனால், அதை கேட்கும் நிலையில் இல்லை அகில். மகியின் எல்லாம் பார்த்துக் கொண்டான் வினோ. எதற்கும் அவன் அவர்களை தொந்தரவு செய்யவில்லை.

ராஜேஷ் தான் இப்போது, வினோவிற்கு துணையாக அலுவலகம் சென்றான்.

*********                 **********                      *********

விவேகன், இரவு அவனிடம் மகியை தாக்கி விட்டதாக வந்த செய்தி கேட்ட பிறகே வாயை திறந்தான்.

“ண்ணா, செய்துட்டோம், நம்ம வண்டியால தானேண்ணா, ஆனாலும் மகியவே, பரவாயில்லை ண்ணா, நான் சொன்னத விட நீங்க சூப்பரா செய்திட்டிங்க சூப்பர் ண்ணா” என கையெல்லாம் கொடுத்து சிரித்துக் கொண்டே இருந்தான். காரணம் தேவையாக இருக்கவில்லை அவனிற்கு.

துர்கா மட்டும் காரில் செல்லுவாள் என திட்டமிட்டு தான் லாரி ஏற்பாடு செய்திருந்தனர். மகியை பார்க்கவும் பின்வாங்கினான் லாரி ஓட்டுனர். அதனால் தான், கதிரின் திடீர் ஏற்பாடு இந்த ஸ்கார்பியோ.

அடிகள் அதிகம் இல்லை என கதிர் சொல்லியிருந்தான். விவேகனிடம், அவனிற்கு முன்பிருந்த கோவம் இப்போது இல்லை போலும் லேசான சிரிப்பு. நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.

கதிர் தான், “கிளம்பலாம் தம்பி “என்க. “ம். போலாம் ண்ணா” என இரு கை தூக்கி நெட்டி முறித்தவன். டேபிலேளில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். எழவே இல்லை அவன்.

ஆக மகியை இதிலிருந்து விளக்கியாயிற்று, எல்லோர்க்கும் இது தெரியும் படி சொல்ல வேண்டும்’ என்ற எண்ணமே இப்போது இருந்தது விவேகனுக்கு.

‘அந்த மகி சுதாரிப்பதற்குள், முடிக்க வேண்டும், என் திட்டத்தை முடித்தே விட வேண்டும். இனி எதற்கும் நேரம் கடத்த கூடாது. நாளையே அந்த வைவப் வை கொண்டு அந்த திட்டத்தை முடித்தே விட வேண்டும்.’

‘இன்னும் நான்கே நாட்களில், எல்லாம், செய்தாகி விட வேண்டும், முதல் அடி சரியாக நடந்து விட்டது. இனி எல்லையை சென்று சேர்ந்துவிடலாம்’ என்ற எண்ணம் தான் விவேகனுக்கு.

ஆனால் மகி என்ற வில் அனுப்பிய அம்பு எல்லாவற்றையும் சரி செய்தே திரும்பும் என விவேகனுக்கு தெரியவே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!