Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 9 2

அத்தியாயம் 9.2

மூன்று மாதங்கள் கழித்து…

மல்லி தான் இப்போது சாவித்திரி வீட்டில் சமையலை பார்த்துக் கொள்வது. சாவித்திரியின் பெற்றோர் இப்போது இரண்டாம் மகள் உண்டாகி மசக்கையில் அவஸ்தைப் படுவதால் அவள் வீட்டில் இருந்தனர்.

காலையில் எழுந்ததும் சாவித்திரி முகம் கழுவிக் கொண்டு லேப்டாப் எடுத்து வைத்துக்கொண்டாள். இது தினமும் நடக்கும் நிகழ்வு தான்.



Advertisement

லேப்டாப் திறந்து மல்லிஸ் கிச்சனில் அன்று வந்திருந்த ஆர்டர்களை சாவித்திரி கணக்கெடுத்துக் கொண்டிருக்க இருவருக்குமாக காபி கலந்து கொண்டு வந்து மல்லி பக்கத்தில் அமர்ந்தாள்.

கூடவே ஒரு சிறு குறிப்பு புத்தகம். சாவித்திரி அன்று மல்லிஸ் கிச்சனுக்கு வந்த ஆர்டர்களை படித்து சொன்னாள்.

“வல்லி ! இன்னிக்கி லஞ்சுக்கு நூறு சிக்கன் பிரியாணி, அம்பது மட்டன் பிரியாணி, எழுபது சிக்கன் 65 ஆர்டர் வந்திருக்கு. ராத்திரிக்கு இருநூறு இட்லி, ஐம்பது தோசை, நூறு செட் சப்பாத்திக்கு ஆர்டர் வந்திருக்கு..”

Advertisement

மல்லி சாவித்திரி சொல்ல சொல்ல குறிப்பு எடுத்துக் கொண்டாள்.  தினமும் காலை ஆறு மணிக்கு மல்லிஸ் கிச்சனுக்கென்று வல்லி தொடங்கி இருக்கும் இணைய தளத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி ஆர்டர் செய்து விட்டால் குறிப்பிட்ட நேரத்தில் உணவு அவர்களை சென்று சேர்ந்து விடும்.

Advertisement

இந்த மூன்று மாதங்கள் மல்லிக்கு மிகவும் கடினமான காலம். இந்த மூன்று மாதங்களில் பல பிரச்சனைகளை அவள் சந்திக்க வேண்டியிருந்தது.

மல்லி யார் வீட்டுக்கோ போய் சமைப்பதில் அவளை விட சாவித்திரிக்கு தான் உடன்பாடு அறவே இல்லை.

அதை ராஜனிடம் சொல்லி வருத்தப்பட அவன் கொடுத்த யோசனை தான் இது.

Advertisement

“அவங்க ஏன் இன்னொரு வீட்டுக்கு போய் சமைக்கப்போகனும்? அதை விட அவங்க சாப்பாட்டை தேடி கஸ்டமரை வர வைப்போமே..!” என்று அவன் சொல்லவும் சாவித்திரி நிமிர்ந்து அமர்ந்தாள்.

“”சாவி! இப்ப க்லௌட் கிச்சன் என்று ஒரு முறை பிரபலமா இருக்கு. இத தமிழ்ல  ‘பேய் சமையலறை’ என்று சொல்றாங்க. அதாவது ஹோட்டல் ஆரம்பிக்கும் அளவுக்கு வசதி இல்லாதவங்க பெரிய சமையல் அறையில் உணவு சமைச்சு அதை கஸ்டமர் இருக்கும் இடத்துக்கே போய் டெலிவரி பண்ற இந்த வழில தொழில் செய்றாங்க. இதுக்கு அவங்க எங்கயும் வேலைக்கு போக வேணாம்…”

சாவித்திரிக்கு அவன் சொன்ன முறையில் மல்லி தொழில் செய்தால் யார் வீட்டிலும் போய் சேவகம் செய்ய வேண்டியதில்லை என்ற அளவில் பிடித்திருந்தாலும் அவளுக்கு பல சந்தேகங்கள் இருந்தன.

“ராஜன்! பெரிய அளவுல சமைக்கணும் என்றால் பெரிய அடுப்புகள், பாத்திரங்கள், கிரைண்டர், இப்படி பல சாமான்கள் வேணும். அது போக சமையலறை வைக்க இடம் வேணும். மளிகை சாமான், காய்கறிகள் இதெல்லாம் கூட தேவை. இதுக்கெல்லாம் வல்லி கிட்ட காசு இல்லை. அட என் வல்லிக்காக நான் இதெல்லாம் செய்து கொடுக்க ரெடி தான். ஆனா கஸ்டமரை எங்கருந்து பிடிக்கறது ராஜன்? “

சாவித்திரி கவலையோடு கேட்க ராஜன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.

“கஸ்டமரை நான் கொண்டு வரேன்..” என்று புஜத்தை பயில்வான் போல மடக்கி மார் தட்ட சாவித்திரி அவனை முறைத்துப் பார்த்தாள்.

“என்ன ராஜன் ?  நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ விளையாடற…?”

“இதோ பாரு..! கஸ்டமர் கொண்டு வரது, தொழில்ல இருக்கிற லாஜிஸ்டிக்ஸ்(நெளிவு சுளிவுகள்)  எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ இப்ப என்ன செய்யறே? மல்லிஸ் கிச்சனுக்கு நான் சொல்ற மாதிரி ஒரு சைட் ரெடி பண்ணு…”

என்றவன் தன் தேவைகளைக் கூற அடுத்த ஒரு வாரம் மூவருக்கும் நிற்க நேரமில்லை. சாவித்திரி தன் தோழிக்கு என்கவும் உட்கார்ந்து சைட்டை இழைத்து ஜம்மென்று தயார் செய்தாள். ராஜன் மதுரை மல்லிஸ் கிச்சன் என்று பெயர் வைத்தது தான் அவளுக்கு பிடிக்கவில்லை.

அந்த சுந்தர் வைத்த பெயர் எதற்கு என்று கோபம். ஆனால் அந்த பெயர் தான் கவருவது போல இருக்கும் என்று அடித்து பேச முணுமுணுத்துக் கொண்டே தான் வைத்தாள்.

அவள் இதை செய்த நேரத்தில் ராஜன் மல்லியை அழைத்துக் கொண்டு போய் தங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த காலி இடத்தை காட்டினான்.

ராஜனுக்கு உறவென்று அம்மா மட்டுமே. அப்பா அவன் சிறு வயதிலேயே இறந்து விட கூடப்பிறந்தவர்களும் யாரும் இல்லாத நிலையில் மல்லியை அவன் தன் சகோதரியாகவே ஏற்றுக் கொண்டான்.

ஆரம்பத்தில் அவனிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் என்று இருந்த மல்லி அவனின் ஈடுபாடும் அக்கறையும் அவள் தொழில் நன்றாக வர அவன் எடுக்கும் முயற்சிகளும் பார்த்து அவனிடம் சரளமாக பேச ஆரம்பித்தாள்.

ராஜன் எம்பிஏவில் படித்தது மார்க்கெட்டிங் தான். அதனால் மல்லியின் தொழிலை சந்தைப்படுத்துவது அவனுக்கு எளிதாகவே வந்தது.

அவளிடம் முக்கியமான உணவு வகைகளை லிஸ்ட் கொடுத்து சமைக்க வைத்தவன் அதை கவரும் விதங்களில் புகைப்படம் எடுத்தான்.

அந்த படங்களை சாவித்திரி உருவாக்கிய இணையத்தளத்தில் போட்டு வாடிக்கையாளர்களை இழுக்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்தான்.

பிறகு யூட்யூப் மூலம் அவர்களின் உணவை படம் எடுத்து வாடிக்கையாளர்கள் அதை பாராட்டி பேசுவது போல வீடியோ எடுத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வெளியிட்டான். அதில் ஒரு புதிர் சொல்லி அதற்கான விடையை தளத்தில் சொல்லும் முதல் பத்து பேருக்கு விலை குறைப்பு செய்தான்.

நவீன சந்தைபடுத்துதலில் உள்ள அத்தனை முறைகளையும் பயன்படுத்தியதோடு அவனுக்கு நண்பர்கள் உள்ள கம்பெனியில் முறை வைத்து சிறு சிறு உணவு பொட்டலங்களை இலவசமாக வழங்கி மார்க்கெட் பிடித்தான்.

சிறு அளவில் செய்யும் வரை மல்லி சாவித்திரி வீட்டில் உள்ள சமையல் அறையை தான் உபயோகித்தாள். ஆனால் ராஜனின் முயற்சியில் மெல்ல மெல்ல வியாபாரம் வளர ராஜனே தான் அவன் வீட்டுப் பக்கத்தில் உள்ள காலியிடத்தில் கிச்சன் அமைக்க ஏற்பாடு செய்தான்.

மல்லி அவர்கள் இருவரின் உதவிகளையும் நன்றியோடு ஏற்றுக்கொண்டாலும் முதலீட்டில் அவர்கள் உதவியை ஏற்க ஒத்துக்கொள்ளவில்லை. தன்னிடம் இருந்த ஆறு பவுன் தாலி சரடை எடுத்து விட்டு தாலியை ஒரு மஞ்சள் கயிறில் கோர்த்து அணிந்து கொண்டாள்.

அதையும் கையில் இருந்த வளையலையும் சாவித்திரியிடம் கொடுத்து விற்க செய்தாள். ராஜன் அதை நல்ல விலையிலேயே விற்றுக் கொடுக்க  அவனிடம் வாடகை கொடுத்து விடுமாறு கூறி ராஜனே அந்த காலி இடத்தில் சிறு ஷெட் அமைத்துக் கொடுத்தான்.

மல்லி வைத்திருந்த பணத்தில் பெரிய அளவில் சாதம் வைக்க உதவும் பாய்லர், அடுப்புகள், பாத்திரங்கள் என்று முக்கியமாக தேவையானவைகளை மட்டும் வாங்கிக் கொண்டாள். மீதி இருந்த காசை மளிகை பொருட்கள் காய்கறிகள் வாங்க உபயோகித்துக் கொண்டாள்.

சாவித்திரியும் தன்னிடம் இருந்த பாத்திரங்களை கொடுத்து உதவ கிச்சன் தயாரானது. அடுத்த பிரச்சனையாக மல்லிக்கு வீட்டில் இரண்டு பேருக்கு சமைத்து பழகியவளுக்கு திடிரென ஐம்பது  பேருக்கு சமைக்க அளவு தெரியவில்லை.

ஆரம்பத்தில் ரொம்பவுமே தடுமாறியே போனாள். இதில் ராஜனோ சாவித்திரியோ அவளுக்கு எந்த வகையிலும் உதவ முடியாமல் போக ராஜனின் அம்மா தான் கை கொடுத்தார்.

ஒவ்வொரு உணவுக்கும் ஒருவருக்கு எவ்வளவு அரிசி மற்ற பொருட்கள் தேவை என்று அளந்து வைத்துக் கொண்டு பிறகு வரும் ஆர்டருக்கு ஏற்ப அதன் அளவை பெருக்கிக் கொண்டாள்.

கையில் இருந்த கையிருப்பெல்லாம் இதற்கே தீர்ந்து விட எல்லா வேலையும் மல்லியே செய்ய வேண்டியிருந்தது.

காய் வெட்டுவது முதல் சமைத்து பார்சல் செய்து பாத்திரங்களை சுத்தம் செய்வது வரை  எல்லாம் மல்லியே செய்ய வேண்டி இருந்தது.

மூன்று வேளையும் செய்தவளால் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. சாவித்திரி உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ள சொல்லியும் உணவை கொண்டு போய் கொடுக்க கல்லூரி மாணவர்கள் இருவரை வைத்துக் கொண்டவள் மற்றதற்கு மறுத்து விட்டாள்.

ராஜன் அம்மா பொழுது போக்காக உணவை பேக் செய்யும் வேலையில் மட்டும் உதவ அதுவே அவளுக்கு பெரிய உதவியாக இருந்தது.

சாவித்திரி சொன்ன யோசனையில் தொழில் இன்னும் கொஞ்சம் முன்னேறவும் காலை டிபனை விட்டு விட்டு மதியம் மற்றும் இரவு உணவுகளை மட்டும் தயார் செய்ய இப்போது கொஞ்சம் மூச்சு விட முடிந்தது.

இந்த மூன்று மாதங்களில் ஓரளவு தொழில் சூடு பிடிக்க இந்த மாதம் இருபதாயிரம் ரூபாய் மல்லி கையில் நின்றது. இனி இது கூடுமே தவிர குறையாது என்று ஆன பிறகு தான் மல்லியால் தன் ஓட்டத்தின் வேகத்தை குறைக்க முடிந்தது.

அதுவரை மகளை அவ்வபோது நினைத்தாலும் அவள் காலூன்றாமல் தன்னோடு வைத்துக்கொள்ள முடியாது என்றே  நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது மகளை கூட்டி வந்து தன்னால் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

இந்த மூன்று மாதங்களும் பிரியா எப்படி இருக்கிறாள் என்று நினைக்கும்போதே அவள் கண்களில் தானாகவே கண்ணீர் வடியும் தான். ஒரு முறை கூடவா தன் மகள் தன்னைத் தேடவில்லை என்று ஏக்கமும் வரும்.

சுந்தருக்கு தான் தான் தேவையில்லை என்றால் தன் மகளுக்குமா தான் தேவையில்லை என்று நினைக்கும் போதே எதற்காக வாழ்கிறோம் என்ற சலிப்பும் வரும். சுந்தர் கடைசியில் அவளிடம் தான் கோபத்தையும் பாராமுகத்தையும் காட்டி இருக்கிறானே தவிர மகளிடம் அவன் கோபம் காட்டியதே இல்லை.

அதனால் அவன் நன்றாக தான் தங்கள் மகளை பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது. அதோடு அவளே தன் காலில் நிற்க தடுமாறி கொண்டு இருக்கும் போது மகளை இங்கே கூட்டிக்கொண்டு வந்தால் தன்னால் பார்க்க இயலாது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள்.

மகளை அன்று அதிகம் ஞாபகம் வர இந்த வாரத்திற்குள் போய் மகளை கூட்டி வந்து விட வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்து கொண்டாள்.

அவள் நினைத்ததன் தாக்கமோ என்னவோ மல்லி மதிய உணவு பார்சல்களை அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்து சற்று ஓய்வாக அமர்ந்த நேரத்தில் வாசலில் காலிங் பெல் சத்தம்.

கதவைத் திறந்த மல்லி சுந்தரை அந்த நேரத்தில் அந்த வீட்டில் சுந்தரை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!