Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அமிழ்தும் அணங்கும்

அமிழ்தும் அணங்கும் – 3(2)

பாகீரதி அபினவ்வை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் பரிசோதனைக்கு டாக்டர் வந்துவிட அந்த பேச்சு தடைப்பட்டது.

அவரின் கட்டியை மருந்து மூலம் கரைப்பது கடினம் என்றும் சிவப்பணுக்கள் மிக கம்மியாய் இருப்பது மேலும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் கூறினார். லேபரோஸ்கோப்பி சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை அகற்றி விடலாம் என்றும் , அந்த சிகிச்சை முறையில் வலி கம்மி என்றும் விளக்கி கூற, அதற்கு ஒத்துக் கொண்டனர். மறுநாளே அறுவை சிகிச்சைக்கான நேரம் குறிக்கப்பட்டு சிகிச்சை நன்றாக நடந்து முடிந்தது. திரிபுரசுந்தரி பெரிதாய் கட்டிபிடித்து அழுது கரையாவிட்டலும், நடக்கும் எல்லாவற்றிலும் முன் நின்று கவனித்துக் கொண்டாள்.



Advertisement

அபினவ் இரவு முழுவதும் வீடு வந்துசேரவில்லை. அமிழ்தினியனும், ரிபுவும் அவனுக்கு மாற்றி மாற்றி போன் போட்டாலும் அவன் அழைப்பை ஏற்கவேயில்லை. இப்பொழுதெல்லாம் பல நேரம் அவன் இரவு வெகு நேரம் கழித்து தான் வீடு திரும்புகிறான். முன்பு ஒரு நாள் கூட இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை, அதிகாலை தான் வந்தான் என்று ரிபு சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்தான்.

“ஏன் ரிபு என் கிட்ட சொல்லவேயில்லை?”

Advertisement

Advertisement

“ஆமா! அந்த டேஷ் எங்க போனா எனக்கென்ன? அது ஒரு வேஸ்ட் பார்ட்டி” யாரிடமும் அதிகம் ஓட்டுதல் இல்லாத ரிபு போன்றவர்கள் அரிதினும் அரிது தான்!

அமிழ்தினியன் அறிந்த வகையில் அபினவ் ரிபு போல அல்ல. மிக்க அமைதியான குணம். யாரிடமும் அதிகமாக பேச மாட்டான். அமிழ்தினியனிடமும் அளவாகவே பேசுவான். அவன் நடவடிக்கைகளில் ஒரு வேறுபாட்டை இதுவரை உணர்ந்ததில்லை. பின் ஏன் இப்படி??

Advertisement

பாகீரதியுடன் அவர் அறையில் ஒருவர் மட்டுமே தங்க முடியும் என்று கூறிவிட, திரிபுரசுந்தரியை வீட்டில் விட்டுவிட்டு, மீண்டும் மருத்துவமனைக்கே வந்து வராண்டாவில் உள்ள சேரில் அமர்ந்துக் கொண்டான். இரு பெண்களையும் தனித்து விட அவனுக்கு பயம்.

கண்களை மூடி அமர்ந்திருந்தவன் கண்ணயர்ந்துவிட, அவனை துரத்தும் கனவு மீண்டும் உயிர்த்தெழுந்து அவனை துரத்த ஆரம்பித்தது. கனவின் வேகத்தில் வாய்க்கு வந்ததை பிதற்ற ஆரம்பித்த அவனை, யாரோ பலமாய் உலுக்கவும் வியர்த்து போய் கண்விழித்து பார்த்தான். அபினவ் தான் அவனை உலுக்கிக் கொண்டிருந்தான்.

“என்னாச்சு இனியா?”

“ஏன்? என்னாச்சு?”

“ஏதோ கனவு கண்டு கத்திட்டுருந்தே??”

“கத்துனேனா? நானா? என்னனு கத்தினேன்?”

“ஏதோ ‘வேண்டாம் வேண்டாம். நான் இல்லை’னு கத்தினே. ஆமா என்ன கனவு?நியாபகம் இருக்கா?”

“ம்ம்ச்ச்! இப்போ அது ரொம்ப முக்கியம்!! உங்க அம்மாவை இங்க ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம். நாளைக்கு அவங்களுக்கு ஆபேரஷன். நைட் முழுக்க நீ வரலை. வந்து என்ன கனவுனு என்னை விசாரிச்சிட்டு இருக்க?”

“அது ஃப்ரெண்டு வீட்ல ஒரு க்ரூப் ஸ்டடி. அதான் போன் சுவிட்ச் ஆப் பண்ணியிருந்தேன். வீட்டுக்கு வந்து பார்த்ததும் தான் விஷயம் தெரிஞ்சுது”

“ஓ! இப்பலாம் அதிகமா க்ரூப் ஸ்டடி பண்ற போல?!! பார்த்து படிச்சு படிச்சு மூளை ரொம்ப சூடாயிட போகுது”

அழுத்தமாய் சொல்லிவிட்டு செல்லும் இனியனை பார்த்தபடி அமைதி காத்தான் அபினவ்.

பாகீரதி மூன்றாவது நாளே வீடு திரும்பினார். முழுவதுமாக ஓய்வு எடுக்க வேண்டுமென்பதில்லை என்றாலும் அதிக வேலை பளு இருக்கக் கூடாது, கனமான பொருட்களை தூக்கக் கூடாது,மாடி படி அதிகம் ஏறி இறங்கக் கூடாது என்று மருத்தவரின் அறிவுரைகளை கேட்டுக் கொண்டவர் அவைகளை பிடித்தார். சந்திரா இரவு தூங்க மட்டுமே அவர் வீட்டிற்கு செல்வார். மற்ற நேரங்களில் இரு வீட்டுக்கும் சேர்த்து சமையல் பாகீரதி வீட்டிலேயே செய்து விடுவார். பாகீரதிக்கு பழச்சாறு, சூப், உளந்தங்களி என்று சத்தான ஒன்றை கொடுத்து நல்லபடியாக பார்த்துக்கொண்டார்.

திரிபுரசுந்தரி வழக்கம் போல கல்லூரி சென்றுக் கொண்டிருந்தாள். பாகீரதியின் உடல் நிலை பொருட்டு அபினவ் அன்று இரவு வராததை பற்றி அவரிடம் தெரிவிக்கக் கூடாதென்று அமிழ்தினியன் கேட்டுக்கொண்டதற்கிணங்க யாரும் அதை பற்றி பேசவில்லை. அமிழ்தினியன் பெரும்பான்மை நேரங்களில் அங்கு தான் இருந்தான்.

அன்று இரவும் அங்கேயே தங்கச் சொல்லி சந்திரா கேட்டுக்கொள்ள அமிழ்தினியன் ஒத்துக்கொண்டான். எங்கே படுத்தால் தன்னை துரத்தும் கனவிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்று பயந்து ஹெட்செட்டுடன் மொட்டை மாடிக்குச் சென்றான்.

சிறு வயதில் அவன் அங்கேயே படுத்து தூங்கியதுண்டு. காலம் மாற மாற, சந்திராவும் மகனை அவ்வாறு அனுப்பவதில்லை, அமிழ்தினியனும் தன் எல்லைக்குள் இருந்துக் கொண்டான். பல நாட்களுக்கு பின்பு ஒரே வீட்டில் திரிபுரசுந்தரி, அபினவுடன் இருப்பது அவனுக்குள் சிறு வயது நினைவுகளை தூண்டி விட்டது.

பெரியவர்களை ரூமிற்குள் படுக்கச் சொல்லிவிட்டு ஹாலில் மூவரும் படுத்து தூங்கியது, அமிழ்தினயன் அபினவ் பக்கம் சென்று படுத்ததற்கு சண்டை போட்டுக் கொண்டு அவனை கட்டிபிடித்தபடி படுத்துத் தூங்கியது, அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பின்னாலிருந்து அவன் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்து ஓடுவது, அவன் குளித்துக் கொண்டிருக்கும் போது அவன் துணிகளை ஒளித்து வைத்துக் கொள்வது, சட்டை போடாமல் எடுத்த அவனின் சிறு வயது புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு அவனிடம் காரியம் சாதித்தது, அவன் வீட்டுக்கு கிளம்பும் போது, கிளம்பவே கூடாது என்று அழுது அழுதே காய்ச்சல் வர வைத்துக் கொண்டது என அவன் நினைவடுக்கில் முழுவதுமாய் ரிபு மட்டுமே நிறைந்திருந்தாள்.

நினைவுகளை அசைபோட்டவாறே, காதுகளில் ஹெட்போனை மாட்டி “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே’ என்று ஏழு சுவரங்களின் அரசியை ஒலிக்க விட்டபடி, மொட்டை மாடி நிலவை பருகிக்கொண்டிருந்தவனை பின்னாலிருந்து நங்கென்று கொட்டினாள் திரிபுரசுந்தரி!!

சாவதானமாய் திரும்பியவன், “வலிக்கவே இல்லையே” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்.

“ம்ம்ச்! போடா! சின்ன புள்ளைல நீ ஹைட் கம்மியா தான் இருந்தே ஈசியா கொட்டிட்டேன். இப்போ என்னடானா பைசா டவர் உசரத்துக்கு வளர்ந்து வச்சிருக்க. ஏணி போட்டு தான் கொட்டனும்”

“ஒய்! இஞ்சிமொரப்பா, நான் ஹைட் கிடையாது, நீ குட்ட கத்திரிக்காய்!!”

“யாரு நானு குட்ட கத்திரிகாவா? எங்க கிளாஸ்லேயே நான் தான் ஹைட் தெரியுமா?”

“அடபாவத்த! நீயே என் இடுப்பு உசரம் தான் வரே. உன் பிரண்ட்ஸ் உன்னை விட ஹைட் கம்மினா என் கால் உசரம் தான் வருவாங்க போலேயே. எல்லாரும் இப்படி மைக்ரோ மினி சைஸ்ல இருந்தா உங்களை கட்டிக்க போரவனுங்களாம் குனிஞ்சு முதுகே பென்ட் ஆகிடும் போலேயே?”

“ஹ்ம்ம். ஆமாம் அதிப்பா” அவன் சொன்னது அவள் மூளைக்கு சற்று நேரம் கழித்தே உரைத்தது.

“ஹேய்! நீ இப்போ என்ன சொன்ன?”

“ஹ்ம்ம். உன் ரீல்ஸ்க்கு ஒரு லைக் கூட வரலேன்னு சொன்னேன்”

“இல்லை, குனிஞ்சுனு ஏதோ டபுள் மீனிங்ல சொன்ன. அதிப்பா, நீயா இது? நீ இப்படியெல்லாம் பேச மாட்டியே? பூமர் அங்கிள் கணக்கா பேசுவியே!”

“ஹ்ம்ம் நீ தானே என்னை அப்பானு கூப்பிடுற அப்போ அந்த பொறுப்போட தானே பேச முடியும்?”

“ஆமா, நீ என் அப்பா தான். அதிலென்ன சந்தேகம்” என்றபடி அவன் கையை தன் கையோடு கோர்த்து கொள்ள, அவளின் கை வெம்மையும், நிலவின் குளிரும்,சன்னமாய் வீசும் காற்றும், அகமும் முகமும் மலர்ந்த அவளது சிரிப்பும் அவனுக்குள் வேறொரு உணர்வை கடத்த, மெல்ல அவளிடமிருந்து கைகளை உருவிக் கொண்டான்.

“ரொம்ப பனியா இருக்குது. வா கீழே போகலாம்” என்றபடி தன்னிச்சையாய் காற்றில் அலைந்த அவளின் சுருள் முடியை அவள் காதுக்கு பின்னே ஒதுக்கி விட, அது மீண்டும் காற்றில் பறந்தது.

“உன்னை மாதிரியே உன் முடியும் அடங்கவே மாட்டிக்குது”

ஏனோ இன்று மிக இலகுவான மனநிலையில் இருந்தான். ஒரு மனம் இப்படியே நின்று பேசிக்கொண்டிருக்கச் சொல்ல, பொறுப்பான அவனது மற்றொரு மனம் வேண்டாமென்றது. நேரம் தன் போக்கில் காற்றில் கரைந்துக் கொண்டிருந்தது. கீழே போகலாம் என்று சொன்னதையே செலக்டிவ் அம்னீசியா போல அவன் மனம் வசதியாய் மறந்து விட்டது. ஏன்? ஏனின்று இப்படி?

“அதிப்பா!”

அதிப்பா என்று ஒவ்வொரு முறை அவள் அழைக்கும் போதும் அதில் அத்துணை வாத்சல்யம் நிறைந்திருக்கும். எல்லாரிடமும் முரண்டு பிடித்து யாரிடமும் ஒட்டாமல் இருக்கும் இந்த பெண் தன்னிடம் மட்டும் வித்தியாசம் காட்டுவதேன்? எந்த புள்ளியில் தான் மற்றவர்களிடமிருந்து விலகி நிற்கிறேன்?!

“அதிப்பா!” அவள் குரல் சிணுங்கலாய் ஒலித்தது!!

அவள் குரலின் குழந்தைத்தனம் அவனை நடப்புக்கு கொண்டு வந்தது. அவன் அப்பா அவளை கையில் கொடுத்து “இனிமே இவ உன் பொறுப்பு” என்றதும் பெரிய மனிதனாய் தான் உணர்ந்து அந்த பிஞ்சுக்கு தந்தை போல நடக்க முயற்சித்ததும் இன்று வரை அந்த பொறுப்பு தனக்கு இருப்பதையும் மீண்டுமொரு முறை நினைவுறுத்திக் கொண்டான். அவன் நினைவுகளின் அலைவரிசை பிடிபடாமல் அவள் தொடர்ந்துக் கொண்டே போனாள்.

“சின்ன வயசுல நாம ரெண்டு பேரும் எத்தனை தடவை இந்த மாடில விளையாண்டிருக்கோம். ஒரு நாள் நியாபகம் இருக்கா, மம்மி திட்டிட்டாங்கனு நான் தண்ணி டேங்க் மேல ஒளிஞ்சேன். நீயும் என் கூடவே உட்கார்ந்திருத்த, எல்லாரும் நம்மளை தேடிட்டே இருந்தாங்க. ரொம்ப நேரம் கழிச்சு தான் அவங்க முன்ன போய் நின்னோம்”

“ஆமா அப்போ உனக்கு சப்போர்ட் பண்ணனும்னு மட்டும் தான் தோனுச்சு. இது சரியா தப்பானு எல்லாம் யோசிக்க தோணலை. ஆனால் இப்போ சரி தப்பு தெரியுது, நீ செய்யுற எல்லாத்துக்கும் தலை ஆட்ட முடியாது. அந்த ஷேடோ…..”

“அதிப்பா! பிளீஸ் டோன்ட் ஸ்டார்ட் இட் அகைன். நாம இதை பத்தி நிறைய தடவி பேசிட்டோம்.இன்னும்….” கை நீட்டி அவளின் பேச்சை நிறுத்தியவன், கீழே கேட் திறக்கும் ஒலி கேட்டு திரும்பி பார்த்தான். அபினவ் தான் பைக்கை தள்ளிக் கொண்டு வந்துக்கொண்டிருந்தான். மெதுவாய் பூனை போல உள்ளே நுழைந்து பைக்கை நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைபவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அமிழ்தினியன்!!!

அபினவ்க்கு பின்னால் ஏதோ ரகசியம் ஒளிந்துள்ளது, அதை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும், இல்லையென்றால் ஷேடோ விஷயத்தில் தப்பு செய்தது போல் இவனும் கை மீறி போய்விடக்கூடும் என்று எண்ணினான். அவனின் ரகசியத்தை அறியும் நாளும் வந்தது!!!

காற்றி லெலாம் இன்பம் அந்தக்

கடல் முரசில் இன்பம்

ஆற்று வெள்ளம் ஊற்றுப்புனல்

அசைவி லெல்லாம் இன்பம்

நாற்றிசையும் இன்பம் இதோ

நல்ல நிலா தோட்டம்- அதில்

மாற்றமில்ல நம் காதல்

வாழ்க்கை எலாம் இன்பம் இன்பம்!

அமிழ்தம் கமழும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!