Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் வேண்டிநிற்கும் வரம் நீயே

வரம் நீயே 19

வரம் நீயே 19

விசேஷம் அப்போதிருந்தே களைகட்ட ஆரம்பித்து விட்டது. அக்கம் பக்கமிருந்தவர்கள் வந்து போக, நாளை நடக்க இருக்கும் விருந்துக்கான ஏற்பாடுகளும் நடந்தது.

அரசன் அந்த பக்கம் சென்று விட, பார்த்தசாரதி பொறுப்பை எடுத்துக் கொண்டான்.

மகாலட்சுமியின் குடும்பமும் வந்திருக்க, அவரது கணவரும் மருமகனும் உதவிக்கு வந்தனர்.



Advertisement

ஆளுக்கொரு வேலையை செய்து கொண்டிருக்க, ஒரு வயதானவர் வந்தார். எல்லோரிடமும் பேசி விட்டு அங்கிருந்த வைசாலியை பார்த்தார்.

“இந்த பொண்ணு யாரு?” என்று அருகே நின்றிருந்த அமுதவல்லியிடம் கேட்க, “வைசாலி.. புள்ளைங்களோட..” என்றவரை அவசரமாக இடைமறித்தாள் வைசாலி.

“அத்தை.. இப்படியா சொல்லுவாங்க? என் மருமக வைசாலி. அரசனோட வருங்கால மனைவி.. பொண்டாட்டினு சொல்லுவீங்களா? மொட்டையா வைசாலினா அவங்களுக்கு என்ன தெரியும்?” என்று கண்ணடித்து வைத்தாள்.

Advertisement

அவளது வார்த்தையில், அஞ்சனா கையிலிருந்ததை கீழே போட்டு விட்டு வாயைப் பிளந்து பார்த்தாள். அமுதவல்லியின் முகம் சட்டென மலர்ந்து மின்னியது.

Advertisement

“ஆமா.. என் மருமக வைசாலி.” என்று ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டார்.

அவ்வளவு தான் விசயம் ஊர் முழுவதும் பரவ ஆரம்பித்தது.

“அமுதா மருமக என்னமா பேசுதுங்குற? அமுதாவே புத்தியில நிக்கிறாப்புல பேசும். மருமக அத விட தெளிவா இருக்கு. டாக்டராம். பார்க்க அம்புட்டு லட்சணமா இருக்கு. விசேஷத்துக்கு வந்து தங்கி இருக்காங்க.” என்று அவர் ஊரே பரப்பி இருக்க, ஆளுக்கொரு காரணத்தோடு வீட்டு வாசலில் வந்து நின்றனர்.

Advertisement

“வேலை நடக்குதுல.. ஒத்தாசைக்கு வந்தேன் அமுதா அக்கா” என்றவர்களின் பார்வை மொத்தமும் வைசாலியை மொய்த்தது.

“பொண்ணு நல்லா இருக்குல? அரசனுக்கு ஏத்தாப்புல?” என்று தங்களுக்குள் பேசிக் கொள்ளவும் செய்தனர்.

இரவுக்குள் மொத்த ஊருக்கும் விசயம் பரவியிருந்தது.

“அரசனுக்கு பொண்டாட்டினு சொல்லுச்சாம்ல? எங்க அந்த புள்ளைய பார்ப்போம்” என்று வந்து சேர்ந்தவர்களை சமாளிக்க முடியாமல், அமுதவல்லியே திகைத்து விட்டார்.

“இப்படியா ஊர் முன்னாடி உடைப்ப?” என்று வைசாலியை கேட்க, “எல்லாம் ஒரு ஜாலிக்கு தான் அத்த.” என்று சிரித்து வைத்தாள்.

வயதில் பெரியவர்கள் எல்லோரும், வைசாலியிடம் நேராகவே பேசினார்கள்.

“எங்க அரசனுக்கு பொண்டாட்டியா நீ?” என்று கேட்க, “ஆமா” என்றாள் கெத்தாக.

“எப்ப ஆத்தா கல்யாணம் பண்ண?”

“நீங்க சொல்லுங்க நாளைக்கே பண்ணிக்கிறேன்” என்று வம்பு பேசினாள்.

பெரியவர்கள் எல்லோரும் வெளிப்படையாக பேசுவது போல் மற்றவர்கள் பேசவில்லை. அவர்கள் தங்களுக்குள் வைசாலியை பார்த்து கணக்கு போட்டுக் கொண்டனர்.

ஆனால், மொத்த ஊருமே அரசனுக்கு திருமணம் பேசி விட்டதில் சந்தோசப்பட ஆரம்பித்து விட்டது.

ஊரில் இருக்கும் பாதி பேர் அரசன் குடும்பத்திற்கு சொந்தம். மற்றவர்கள் நண்பர்கள். எல்லோருமே விசயம் அறிந்து சந்தோசப்பட, ஒரு குடும்பம் மட்டும் அதிர்ந்து போயிருந்தது.

_________

காலை வேலை முடிந்து கிளம்பிய அரசன், அமுதாவிற்கு செய்தியை மட்டும் அனுப்பி வைத்திருந்தான். அழைத்துப்பேச நேரமில்லை. அவ்வளவு வேகமாக கிளம்பி விட்டான்.

இங்கிருக்கும் வேலைகளை செய்ய ஆட்கள் உதவுவார்கள் என்றாலும், வீட்டு பிள்ளையாய் அவன் இருக்க வேண்டுமல்லவா?

வேலை முடிந்ததும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கிளம்பி இருந்தான். பறந்து வந்து ஊருக்குள் நுழைய, பாதையில் வழியை மறித்து நின்றான் நண்பன் ஒருவன்.

“டேய்.. என்ன வழிய மறிச்சுட்டு நிக்கிற?”

“நீயெல்லாம் ஒரு ஃப்ரண்டாடா? ஒரு வார்த்தை சொன்னியா?”

“எத பத்தி? முதல்ல வழிய விடு.. வேலை இருக்கு. அப்புறம் பேசலாம்”

“எது உன் கல்யாண வேலையா? அவ்வளவு அவசரமா? எனக்கு பதில் சொல்லாம விட மாட்டேன். எப்படா நடந்தது?”

“என்ன உளறல் இது? எனக்கு கல்யாணம்னு உனக்கு யார் சொன்னா?”

“நடிக்காத.. ஊரே சொல்லுது.. பொண்ண பார்த்து வீட்டுலயும் கூட்டிட்டு வந்து வச்சுட்டு.. போலீஸ்காரன்னா லவ்வ கூட ரகசியமா தான் பண்ணுவீங்களோ? இரு மகனே.. விசேஷம் முடியட்டும் உன்ன பார்த்துக்கிறேன்” என்று முறைத்து விட்டு அவன் பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

அரசன் தான் அவனது பேச்சில் அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தான்.

‘யார் பார்த்த வேலை இது? அம்மாக்கும் அஞ்சுக்கும் மட்டும் தான தெரியும்? அவங்க ஒரு வருசமா விட்டுட்டு இப்பவா உளற போறாங்க?’ என்று புரியாது குழம்பி விட்டு, வேகமாக வீடு நோக்கிச் சென்றான்.

காலையிலேயே பூஜைக்காக குடும்பம் மொத்தமும் கிளம்பிச் சென்றிருக்க, வீடு வெறுமையாக இருந்தது.

யோசனையுடனே குளித்து விட்டு கிளம்பியவன், கைபேசியை எடுத்து அஞ்சனாவை அழைத்தான். அவள் எடுக்கவில்லை.

‘யார் உளறி இருப்பா?’ என்ற யோசனையோடு கிளம்பி வெளியே வந்தான்.

வந்தவனை பக்கத்து வீட்டு பெண் பிடித்து விட்டார்.

“என்ன அரசா சொல்லவே இல்ல? கல்யாண களை இப்பவே வந்துடுச்சு” என்று நெட்டி முறிக்க, அரசனுக்கு‌ குழப்பம் தான் மிஞ்சியது.

“பொண்ணு இந்த அரசனுக்கேத்த அரசியாட்டம் இருக்கா.. சரி சரி கிளம்பு.. கோவிலுக்கு நேரமாகுது” என்றார்.

அரசன் நடந்தே கோவிலுக்கு வர, பார்த்த அத்தனை பேரும் அவனை வாழ்த்தி விட்டனர். ஒரு சிலர் வாழ்த்தி விட்டு கேலியும் செய்ய விசயம் விளங்கி விட்டது.

“நான் அரசனோட பொண்டாட்டினு எம்புட்டு தோரணையா சொல்லுது பேத்தி” என்று ஒரு பாட்டி சிரிக்க, அரசனின் விழிகள் விரிந்தது.

“இப்ப சொல்லுங்க நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுது.. என்ன அரசா.. பொண்ணுக்கு இருக்க அவசரம் உனக்கு இல்லையா?”

ஆளாளுக்கு நேற்று வைசாலி பேசிய அத்தனையும் சொல்லியபடி வர, அரசனுக்கு சந்தோசத்தை மறைப்பது பெரும்பாடாக இருந்தது.

வேகமாக கோவிலுக்குச் சென்று வைசாலியை பார்க்க வேண்டும் போல் இருந்தாலும், அவள் பேசியதை மற்றவர்கள் சொல்லும் போது நின்று நிதானமாக கேட்டு விட்டே சென்றான்.

கோவிலில் கூட்டம் அதிகமில்லை. அவர்களது குடும்பமும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருந்தனர்.

அரசன் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் பார்த்து விட, அரசனின் பார்வை மெல்ல சுழன்றது. அமுதவல்லி கண்ணில் விழ அவர் அருகே வைசாலி.

‘லாலி..’ என்று அவன் மனதில் சந்தோசமாய் அழைக்க, வைசாலி உடனே திரும்பி பார்த்தாள்.

“அத்த.. வந்துட்டாரு” என்று அமுதவல்லியிடம் சொல்லி விட்டு, அரசனை பார்வையை சந்திக்காமல் திரும்பி விட்டாள்.

அமுதவல்லி மகனை அழைத்து அருகே நிறுத்தினார். சிறப்பு வழிபாடு ஆரம்பமானது.

அரசன் நடுவில் நிற்க, ஒரு பக்கம் அமுதவல்லியும் மறுபக்கம் வைசாலியும் நின்றனர்.

வழிபாடு முடியும் வரை யாரிடமும் பேச்சில்லை. பயபக்தியோடு நின்றிருந்தனர்.

எல்லாம் முடிந்து அஞ்சனாவிற்கும் பார்த்தசாரதிக்கும் மாலை கொடுத்தனர்.

“மாத்திக்கோங்க” என்றதும் இருவரும் மாலையை மாற்றிக் கொண்டனர்.

அடுத்த ஜோடி மாலை அரசன் வைசாலி பக்கம் திரும்ப, அதிர்ந்து விட்டனர்.

“எடுத்து போடு அரசா” என்று பூசாரி சொன்னதும், அரசன் வைசாலியை தான் பார்த்தான்.

அவள் ஏகத்திற்கும் அதிர்ந்து போய், தன் பெற்றோரை பார்த்தாள்.

நேற்றிலிருந்து அரசனின் மனைவி நான் என்று ஊரெல்லாம் சொல்லும் போது வராத தயக்கம், இப்போது வந்து விட்டது.

‘மாலைய மாத்தனுமா?’ என்று அதிர்வோடு பெற்றோரையும் அரசனையும் மாலையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றாள்.

அரசன் அமுதவல்லியை பார்க்க, அவர் கண்ணால் எடுக்கச் சொன்னார். உடனே எடுத்துக் கொண்டான்.

“நீயும் எடுமா” என்று பூசாரி கூற, அவளது விரல்கள் நடுங்கியது.

‘அடேய்.. என்னடா உடனே கல்யாணம் பண்ணி வச்சுடுவீங்க போலயே’ என்று பதறிப்போய் பார்த்தாள்.

“நேத்து என்னமோ நாளைக்கே கல்யாணம் பண்ணுறேன்னு வீர வசனம் பேசுன பொண்ணு? இப்ப மாலைய எடுத்து போடு பார்ப்போம்” என்று மகாலட்சுமியின் மகள் கிண்டல் பேச, வைசாலி அரசனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் முகத்தில் மறைக்க முடியாத சிரிப்பு நிறைந்து இருந்தது.

சித்ரா மகளை பார்த்து, “எடுமா” என்று கூறிய பிறகே மாலையை எடுத்தாள்.

“ஐஐ.. மாமாவுக்கு கல்யாணம்..” என்று மணிகர்ணிக்கா ஒரு பக்கம் குதித்தாள்.

“ஏன் அரசா நிக்கிற? மாலை பிடிக்கலனா சொல்லு.. நேரா தாலியே ரெடி மண்ணுறோம்.” என்று மீண்டும் யாரோ பேச, வைசாலிக்கு அதிர்வில் இதயம் படுவேகமாக துடித்தது.

‘அடேய் ஜெட் ஸ்பீட் கேள்வி பட்டுருக்கேன் இது அத விட வேகமா இருக்குடா’ என்று மனதில் மட்டுமே அலறிக் கொண்டு இருந்தாள்.

“மாலைய போடு அரசு” என்று பார்த்தசாரதி சொன்னதும், அரசன் புனன்கையுடன் போட்டு விட்டான்.

வைசாலி கையில் வைத்துக் கொண்டு விழிக்க, அரசன் மெல்ல தலைகுனிந்தான். அதில் எழுந்த புன்னகையில் வைசாலியும் போட்டு விட, மணிகர்ணிக்கா தான் கை தட்டி குதித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு எல்லாமே வேடிக்கையாக இருந்தது.

“அப்புறம் ஐயரே தாலிய எடுத்துக் கொடுங்க” என்று கூட்டத்தில் குரல் கேட்க, வைசாலியின் முகத்தில் கலவரமே வந்து விட்டது.

ஆனால் கூட்டம் மொத்தமும் சிரிக்க, ‘அடேய்.. என்னை விட்டுருங்கடா’ என்ற பார்வை பார்த்து விட்டு, குனிந்து கொண்டாள்.

மற்ற வேலைகள் எல்லாம் முடிந்து கிளம்ப, அரசன் தன் மாலையை கழட்டி வைசாலியின் கையில் கொடுத்து விட்டு நகர்ந்தான்.

வைசாலியும் தன் மாலையை கழட்டி கையில் பிடித்துக் கொண்டாள்.

அஞ்சனாவும் அவளும் காரில் ஏற, பார்த்தசாரதி அவர்களை மட்டும் வீட்டில் இறக்கி விட்டான்.

“நீ வீட்டுல இருப்பியாம் வைசாலி. அத்த சொன்னாங்க. அஞ்சு நீ ஃப்ரஸ்ஸாகி இரு. நானே வந்து பிக்அப் பண்ணிக்கிறேன்” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான்.

“அப்ப நான் மண்டபம் வர வேணாமா?”

“வேணாம்டா.. சும்மாவே ஊர் கண்ணு எல்லாம் உன் மேல தான் இருக்கு. மாலைய வச்சுட்டு கொஞ்ச நேரம் படு. சாப்பாடு கொடுத்து விட சொல்லுறேன்” என்று அஞ்சனா சொன்னதும், வைசாலி ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள்.

“என்னமா?” என்று அஞ்சனா பரிவாக கேட்க, “தாலிய ரெடி பண்ணுறேன்னு சொன்னதும் பயந்தே போயிட்டேன் ஃபைவ் அண்ணி” என்றாள் நெஞ்சில் கை வைத்து.

அஞ்சனா அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

“என்னமோ நான் தான் அரசனோட பொண்டாட்டினு ஊரெல்லாம் சொல்லிட்டு இருந்த.. தாலி கட்ட பயமா?” என்று அவள் தலையை பிடித்து ஆட்டினாள்.

“ஏன் சொல்ல மாட்டீங்க ஆறு? நான் சொல்லும் போது நல்லா தான் இருந்துச்சு. அதுக்காக இன்ஸ்டண்ட்டா கல்யாணமே பண்ண சொன்னா? ஆமா இந்த மாலை மாத்துற ஐடியா யாரோடது?”

“எனக்குத் தெரியாதே”

“பொய்.. நீங்க தான் சொல்லியிருக்கனும்”

“நான் இல்ல. நாங்க.. அம்மா, நான், உங்க அண்ணன். எல்லாரும்.. உங்க அம்மா அப்பா கூட”

“எல்லாரும் பண்ண கூட்டு சதியா? ஹார்ட் வாய்க்கு வந்துடுச்சு தெரியுமா? அங்கயே பயந்து மயங்கி விழுந்துருக்கனும். அப்புறம் தெரிஞ்சுருக்கும்”

“நீ ஸ்ட்ராங்க் கேர்ள் லாலிபாப்.. அப்படியே விழுந்தாலும் ஊரே பார்க்க அரசன தூக்கச் சொல்லி இருப்பேன்”

வைசாலி பெரிய கும்பிடாக போட்டு, “போங்க சார்.. போய் உருப்படியான வேலைய பாருங்க சார்” என்றாள்.

அஞ்சனா சிரித்து விட்டு, “சேலை வேணாம்னா சுடிதாருக்கு மாறிக்கோ. நான் இதை கழட்டிட்டு வேற சேலைக்கு மாறனும். கசகசனு இருக்கு” என்று சென்று விட்டாள்.

வைசாலி கையில் இருந்த மாலையை பார்த்துக் கொண்டிருந்தாள். அரசன் போடும் போது அவளையும் மீறி உடல் சிலிர்த்து இருந்தது. அதை நினைத்தவளுக்கு உள்ளே பூரிப்பாகவும் இருந்தது.

மாலையை ஓரமாக வைத்து விட்டு உடைமாற்ற தயாரானாள். ஆனால், சேலையை மாற்றி சுடிதார் போட மனமில்லை.

காலையிலேயே சித்ரா நூறு முறை சொல்லி இருந்தார்

“சுடிதார்ல கைய வச்ச.. பிச்சுடுவேன். சேலை மட்டும் தான் கட்டனும்”

“இதெல்லாம் ஓவர் ரூல்.. உங்கள யாரு சேலைய எடுத்துட்டு வர சொன்னது?”

“நீ எடுத்துட்டு வர மாட்டனு தெரியுமே. அதுனால தான். ரெண்டுல ஒன்ன கட்டி ரெடியாகு” என்று சேலையை திணித்து இருந்தார்.

“எல்லாரும் உன்ன பார்க்க வர்ராங்க. சின்ன பிள்ளை மாதிரி சுடிதார்ல நேத்து நின்னதே எனக்கு என்னவோ மாதிரி இருக்கு. இன்னைக்கு சேலை தான் சொல்லிட்டேன்”

சித்ராவின் வார்த்தை காதில் ஒலிக்க, “சேலைய கட்டுனு அவ்வளவு டார்ச்சர் பண்ணது இந்த மாலைக்கா மம்மி? ஒரு வார்த்தை முன்னாடியே சொன்னீங்களா?” என்று புலம்பிக் கொண்டாள்.

ஆனாலும் சித்ராவின் பேச்சை மீறாமல், வேறு சேலையை தான் மாற்ற முடிவு செய்தாள். அஞ்சனா அதற்குள் தயாராகி இருக்க, அவளை அழைக்க பார்த்தசாரதி வந்து விட்டான்.

அவனோடு அஞ்சனா கிளம்பிச் சென்றதும், வீட்டை பூட்டி விட்டு வைசாலி தன் வேலையை பார்த்தாள்.

மாலையிடம் அடிக்கடி கண் சென்று வர, உடனே முடிவு செய்து, அதை தன் கைபேசியில் விதவிதமாக படமெடுத்தாள். நன்றாக வந்த ஒரு படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைத்து, “எஸ்” என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எழுதி இருந்தாள்.

பார்த்த அத்தனை நண்பர்களும் என்னவென்று விசாரிக்க, அவர்களுக்கு பதில் சொல்வதில் நேரம் கடந்தது.
____

மண்டபத்தில் உணவு தயார் செய்யும் இடத்தில், அரசன் நின்று கொண்டிருந்தான். அரைமணி நேரத்தில் பந்தி ஆரம்பித்து விடும். அதற்கான வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்க, அரசனின் கைபேசி அதிர ஆரம்பித்தது.

எடுத்துப்பார்த்தான். அவனோடு வேலை செய்யும் ஒருவன். உடனே எடுத்து காதில் வைத்து பேசினான்.

“சார்.. நேத்து செத்தவன் டீடைல் உங்களுக்கு வாட்ஸ் அப்ல அனுப்பி இருக்கேன். பார்த்து சொல்லுங்க”

“அந்த எவிடண்ஸ் என்ன ஆச்சு?” என்று ஆரம்பித்து பேசி முடித்தான்.

விவரங்களை பார்க்க வாட்ஸ் அப் செயலியில் நுழைந்தவன், எல்லாம் பார்த்து முடிக்கும் போது வைசாலியின் ஸ்டேட்டஸ் கண்ணில் விழுந்தது.

உடனே திறந்து பார்த்தான். அந்த “எஸ்” இன் அர்த்தம் விளங்க, அரசன் இன்பமாய் அதிர்ந்தான்.

வைசாலி வீட்டில் இருக்கிறாள் என்று தெரியும். உடனே ஓடிச் சென்று பார்க்க தூண்டியது மனம். ஆனால் காரணமில்லாமல் போய் நிற்க முடியாது.

வேகமாக அஞ்சனாவை தேடினான்.

“அஞ்சு.. வீட்டுக்கு போறேன் எதாவது எடுத்துட்டு வரனுமா?”

“அம்மா தான் எதையோ வீட்டுல மறந்து வச்சுட்டதா சொல்லிட்டு இருந்தாங்க கேளேன்”

உடனே அமுதவல்லியிடம் சென்று கேட்டு விட்டு, பைக்கை எடுத்துக் கொண்டு பறந்து இருந்தான்.

வைசாலி, அரசன் பார்த்து விட்டு அமைதியாய் இருந்ததில் யோசனையானாள்.

“ஒரு வேளை புரியலையோ?” என்று பார்த்தவள் கைபேசியை போட்டு விட்டு, அமைதியாய் அமர்ந்து விட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து கதவு தட்டும் சத்தம் கேட்க, “யாரு?” என்று கேட்ட படி வந்து திறந்து பார்க்க, அரசன் நின்றிருந்தான்.

வைசாலி அவனை ஆச்சரியமாக பார்க்க, அவளை கவனித்தும் கண்டுகொள்ளாதது போல் அரசன் அவளைத்தாண்டி உள்ளே சென்றான்.

“என்ன இங்க வந்துட்டீங்க?” என்று வைசாலி அவன் பின்னால் செல்ல, “அம்மா சிலத வீட்டுல வச்சுட்டாங்களாம். எடுக்க வந்தேன்” என்று அவள் முகம் பார்க்காமல் பேசினான்.

வைசாலியின் முகம் காற்றுப்போன பலூனாக தொங்கி விட்டது.

‘புரியவே இல்ல. இவன் எப்படி படிச்சு போலீஸானான்? இந்த சின்ன விசயம் கூட புரியல. மக்கு’ என்று மனதில் நன்றாக திட்டிக் கொண்டு நின்று இருந்தாள்.

எடுக்க வேண்டியதை எடுத்து விட்டு கிளம்பிய அரசன், “என் கூட அங்க வர்ரியா லாலி?” என்று கேட்டான்.

“ஹான்.. அத்த வேணாம்னு..”

“ப்ச்.. வர்ரியா இல்லையா?” என்று கேட்க, வைசாலி அவனை அசையாமல் பார்த்து நின்றான்.

உடனே அருகே வந்து நெருங்கி நின்றவன், “போகலாமா?” என்று புன்னகைத்தான்.

அந்த நெருக்கத்தில் முதல் முறையாக வைசாலிக்கு வெட்கம் வந்தது. அதையும் மீறி சம்மதமாக தலையாட்டி விட்டாள்.

“வா” என்று கையைப்பிடித்து வெளியே அழைத்து வந்தவன் பைக்கில் ஏற, வைசாலி “பைக்கா?” என்று அதிர்ந்தாள்.

“ஆமா.. உட்காரு”

‘போச்சு.. ஏற்கனவே அந்த ஓட்டு ஓட்டிட்டாங்க. இவனோட பைக்ல போனா இன்னும் பேசுவாங்களே’ என்று வைசாலி தயங்கி நிற்க, “அப்ப கையைப்பிடிச்சுட்டு நடந்து போவோமா?” என்று அவளது மனதின் கேள்விக்கு அரசன் பதில் சொன்னான்.

“ஆத்தி” என்று அதிர்ந்தவள் உடனே ஏறி அமர்ந்து விட, அரசன் ‌சிரிப்போடு கிளம்பினான்.

மண்டபத்தில் பந்தி ஆரம்பித்து விட்டது. அந்நேரம் ஜோடியாக வந்து இறங்கியவர்களை பார்த்து, ‘இதுக்குத்தான் அவசரமா போனானா?’ என்று அஞ்சனா வாயைப்பிளந்து நின்றாள்.

வரம்‌ கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!