Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கவிபாடும் கானகமயிலே

கானகமயில் -18

கானகமயில் -18



Advertisement

அழகன் கார் நின்றிருந்த இடத்திற்கு ஒரு வழியாக வந்து சேர்ந்த போது கிட்டத்தட்ட 32 வயதை அடைந்த ஒருவர் அவர்களுடன் நின்று இருந்தார்.

“சார் வந்துட்டார் சார்” என்று சாகர் மகேஷிடம் சொன்னதும், இவன் வந்த திசையில் திரும்பி மகேஷ், “எவ்வளவு தடவை போன் பண்றது. எடுத்தாவது நான் வந்துட்டு இருக்கேன்னு சொல்லலாம்ல”..

“இல்லடா பாதி தூரத்துக்கு சிக்னல் கிடைச்சுச்சு, அதுக்கப்புறம் சிக்னலே கிடைக்கல அதனால தான் உனக்கு போன் பண்ண முடியல. ஆமா இவர் தான் நம்மளைக் கூட்டிட்டு போக போறவரா?”

Advertisement

“ஆமா. சார் பேரு தவசீலன். அக்கம் பக்கத்துல இருக்கிற மலை கிராமங்களுக்கும் வெளி உலகத்துக்கு இருக்கிற ஒரே தொடர்பு இவர்தான். ஏதாவது தேவைன்னா இவர் அவர்களை போய் பார்ப்பாராம், அதே மாதிரி அவங்களும் இவர்கிட்ட ஏதாவது தேவைன்னா சொல்லி விடுவாங்களாம்.‌ விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டதால தான் இவர்கிட்ட உதவி கேட்டேன். இவரும் உதவி செய்யறேன்னு சொன்னார.  அது மட்டும் இல்லாம நம்மளோட நோக்கம் புரிஞ்சதுனாலையும் உதவி செய்ய ஒத்துக்கிட்டாரு. இங்க இருக்கிற மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் வரக்கூடாது, எந்த தொந்தரவும் தரக்கூடாதுங்கிற நிபந்தனையோட தான் உதவி செய்ய ஒத்துக்கிட்டாரு.

Advertisement

நாம தங்குறதுக்கு அவங்கக்கிட்ட பேசி குடிசை கூட ஏற்பாடு பண்ணிட்டதா  சொன்னாரு. இங்க இருக்கிற மக்களுக்கு பொருளாதார ரீதியா ஏதாவது நல்லது செய்ய முடியுமான்னு அவரும் யோசிச்சுக்கிட்டு தான் இருந்தாராம். நான் இந்த யோசனையை சொல்லவும் உடனே சம்மதிச்சுட்டாரு. இங்க இருக்கிறவங்க சில அடிப்படை தேவைகளுக்காக சிரமப்படுவதா சொன்னாரு, நம்மளால முடிஞ்ச உதவியைச் செஞ்சு கொடுத்தா நமக்கு என்ன உதவின்னாலும் அவங்க செஞ்சு தருவாங்கன்னும் சொன்னாரு”

“ஓ அப்படியா..  முதல்ல இடத்தைப் போய் பார்ப்போம். அங்க இருக்கிற மக்கள்கிட்ட பேச முயற்சி பண்ணுவோம். இங்கே என்னென்ன கிடைக்கும்னு தெரிஞ்சுகிட்டோம்னா அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்” என்றான் அழகன்,

“நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க. ஆனா இங்க இருக்கிறவங்க அவ்வளவு சீக்கிரம் வெளியாளுங்களை ஏத்துக்க மாட்டாங்க. அவங்களுக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்குது, வரைமுறைகள் இருக்குது. அதே மாதிரி அவங்களுக்கும் சில எல்லைகளும் இருக்குது அதை தாண்டி அவங்களும் வர மாட்டாங்க, நீங்களும் போக கூடாது. உங்களுக்கு தேவையான எல்லாத்தையும் அவங்க செய்வாங்க‍, இன்னும் சொல்லப்போனா நாம பேசுற தமிழ் கூட அவங்களுக்கு புரியும் தான்.

Advertisement

ஆனா அவங்களோட இன்னொரு மொழியும் அவங்க பேசுவாங்க அதுல நீங்க தலையிடவும் கூடாது, என்னன்னு தெரிஞ்சுக்க நினைக்கவும் கூடாது. இன்னொரு முக்கியமான விஷயம் இங்க இருக்கிற பெண்களை நீங்கள் அறவே தொந்தரவு செய்யக்கூடாது. இங்க இருக்கிற மக்கள் பெண்கள் விஷியத்துல ரொம்ப கட்டுப்பாடானவங்க. இதையெல்லாம் உங்களுக்கெல்லாம் நான் சொல்றதுக்கு காரணம் அவங்களோட தண்டனைகளும் ரொம்ப வித்தியாசமானதாவும் இருக்கும்‍ கடுமையானதாவும் இருக்கும். நான் உங்களை கூட்டிட்டு போறேன் அப்படிங்கும் போது என் பொறுப்புல நீங்க இருக்கீங்க, அது மட்டும் இல்லாம இங்க இருக்கிற மக்களும் என்னை நம்புறாங்க. அந்த நம்பிக்கை நான் காப்பாத்தணும், உங்களுக்கு எந்த ஆபத்தும் வராம சேஃபா கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வரணும் அதுக்காக தான் இதெல்லாம் சொல்றேன்” என்றார் தவசீலன்.

“சரிங்க சார் நீங்க சொல்றதெல்லாம் நாங்க செய்ய தயாரா இருக்கோம். இதுல உங்களுக்கு நாங்க என்ன செய்யணும்னு சொல்லவே இல்லையே” என்று அழகன் கேட்க,

“பெருசா எதுவும் செய்ய வேண்டாம். அவங்களுக்கு எதாவது நல்லது செஞ்சீங்கன்னாவே போதும். எனக்கு தேவையானது எல்லாமே ஆண்டவன் அருளால கெடச்சுட்டு தான் இருக்குது. நான் பெருசா எதுக்கும் ஆசைப்படுறது கிடையாது. உங்களோடு நோக்கம் நல்லது அதனால நான் உதவி செய்ய நெனைக்கிறேன்.”

“உங்களுடைய இந்த நல்ல மனசுக்கு கண்டிப்பா நீங்க கேட்டது, கேட்காது எல்லாத்தையுமே ஆண்டவன் கொடுப்பான். இப்போதைக்கு நாம போகலாமா?” என்று மகேஷ் சொன்னதும்,

“நான் முன்னால போறேன் என் பின்னால வாங்க. இதுக்கு மேலே காரை கொண்டு போக முடியாது நீங்க கார் சாவியை என்கிட்ட குடுங்க, நான் என்னுடைய இடத்துக்கு காரை எடுத்துட்டு போயிடறேன். மறுபடியும் நீங்க இங்க இருந்து போகணும்னாலோ, வேற எதாவது வாங்குறதுக்கு போகணும்னாலோ சொல்லுங்க நான் காரை கொண்டு வர்றேன். ஏன்னா காரை இங்க நிறுத்துறது பாதுகாப்பு இல்ல. ஏதாவது விலங்குகள் உங்க வண்டியை சேதப்படுத்தலாம் அதுக்காக தான் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அவர் முன்னே நடக்க அவருக்கு அடுத்து மகேஷ், அடுத்து சாகர், கடைசியாக அழகனும் சென்றான். நால்வரும் ஏதேதோ பேசியவாறு முன்னேறினார்கள்.

தவசீலனோ, “இந்த காட்டுல இருக்கிற எல்லாமே உங்களுக்கு உபயோகப்படும். ஆனா எதை எப்படி உபயோகப்படுத்தணுங்கிற முறை தெரிஞ்சா உங்களால சுலபமா உங்களோட வேலையைப் பார்க்க முடியும். அதுக்கு இந்த கிராமத்து வாசிகள் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வாங்க. மேற்கு தொடர்ச்சி மலைகள் எப்படி வரிசையா தொடர்ந்து இருக்குதோ அது மாதிரி இந்த மலைக்கும் பக்கத்து மலைக்கும் இடையில தொடர்புகள் இருக்குது. தொடர்ந்து சின்ன சின்ன மலைகள் இது மாதிரி தொடர்ந்து இருக்குது, கூடவே பார்க்க அழகாவும் இருக்கும்.

ஒவ்வொரு மலைக்கும் ஒவ்வொரு பேர் உண்டு. இந்த மலைக்கு திவ்ய மலைன்னு பேரு. இது கிடைக்கிற ஒவ்வொரு பொருளுமே இங்க இருக்க மக்களுக்கு ரொம்ப முக்கியமானது. அதை வச்சு தான் அவங்க உயிர் வாழுறாங்க. முழுசா எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களை உங்களுக்கு நான் சொல்லி தர்றேன். இன்னும் கொஞ்ச தூரம் உள்ள போனதும், ஒரு ஓடை ஒன்னு வரும் பொதுவா இந்த ஓடையை கடக்கிறதுக்கு ஆறு பாலம் இருக்குது. இப்ப நம்ம போற வழியிலையும் ஒரு பாலம் இருக்குது. இதை விட்டுட்டு நீங்க காட்டுக்குள்ள போயிட்டீங்கன்னாவோ, வழிமாறி  தெரியாம வேற பக்கம் போயிட்டீங்கன்னாவோ ஓடையைக் கடப்பது ரொம்ப சிரமம்.

ஓடையைப் பத்துன விவரம் தெரிஞ்சவங்களால மட்டும் தான் ஓடைக்குள்ள இறங்கி மறுக்கரைக்கு போக முடியும். தெரியாதவங்க உள்ளே இறங்குனா, எங்கன ஆழம் அதிகமா இருக்குது, எங்கன பாசிகள் இருக்குது, எங்கன வழுக்குப் பாறைகள் இருக்குன்னு தெரியாம முழுகி போகவும் வாய்ப்பு இருக்குது. அதே மாதிரி அங்க படிந்திருக்கிற பாசிகள்லையோ அல்லது குழியிலையோ கால் விட்டு வழுக்கி விழுந்து உயிர் போறதுக்கும் வாய்ப்பு இருக்குது, அதனால எப்ப எங்க போனாலும் கவனமா போங்க. இப்ப வர்ற பாதையை நல்லா நியாபகம் வச்சுக்கோங்க” என்று தவசீலன் சொல்ல அதை எல்லாம் மூவரும் நன்றாக புரிந்து கொண்டார்கள்.

அழகனுக்கோ, ‘ஒருவேளை நான் பார்த்த பொண்ணு இந்த பகுதியை சேர்ந்தவளா இருந்தா ஓடையில இறங்கி எப்படி போகணும்னு அவளுக்கு தெருஞ்சுருக்கும். அது மாதிரி அவள் அங்கிருந்து போயிருக்க வாய்ப்பு  இருக்குது’ என்று நினைத்தவாறு நடை பயின்றான்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு, திவ்ய மலையின் ஆரம்ப கட்டத்தை அடைந்தார்கள். சுற்றிலும் ஆளு உயரத்திற்கும் மேல் எழுப்பப்பட்டிருந்த வேலியை அடைந்தார்கள்.

ஒரு ஆள் உயரத்தை விட இன்னும் சற்று உயரமாய் நீள நீள தடித்த குச்சிகளால் அமைக்கப்பட்டிருந்த வளைய வடிவ வேலியை பார்த்தவாறு நால்வரும் நின்றனர். தவசீலனோ, “இங்க இருந்து தான் இவங்களோட கிராமம் ஆரம்பிக்குது.  பெருசா இந்த கிராமத்துக்கு வேறு எந்த பெயரும் இல்லை. ஆனா இங்க இருந்த இவங்களோட முன்னோர்களது வழிமுறைகளை பின்பற்றி வருவதால் திவ்ய கிராமம்னு கூட சொல்லுவாங்களாம்.

நான் கேள்விப்பட்ட வரைக்கும் அக்கம் பக்கம் கிராமங்கள்ல இருக்கிறவங்க எல்லாம் இப்படி தான் சொல்லு‌வாங்களாம்.  இந்த கிராம மக்களுடைய நடைமுறை பழக்க வழக்கம், இன்னொரு கிராமத்தோட நடைமுறை பழக்கவழக்கங்களோட எந்த விதத்துலையும் தொடர்பு இல்லாத மாதிரி தான் இருக்கும். இங்க விசித்திரமான சில விஷயங்கள் நடக்கலாம், இவங்களோட நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் எல்லாமே வித்தியாசமா இருக்கும். முடிஞ்ச வரைக்கும் நீங்க அதுல தலையிட வேண்டாம் தள்ளி நின்னு பாருங்க, அதுக்குள்ள போய் மூக்கை நுழைக்க வேண்டாம்” என்று சொன்னவாறு ஓடையைக் கடப்பதற்காக இருந்த பாலத்திலேறி நடக்க ஆரம்பித்தார் தவசீலன்.

அவரை பின்பற்றி இவர்களும் சென்றார்கள். கொண்டு வந்த பேக்கை எல்லாம் மூவரும் பகிர்ந்து தூக்கிக்கொண்டு சென்றதால் அவர்களால் வேகமாக நடக்க முடியவில்லை. முன்னே சென்ற தவசீலன் கிராமத்திற்குள் நுழைவதற்கான நுழைவாயிலை அடைந்து கீழே கிடந்த குச்சி ஒன்றை எடுத்து வேலியில் கட்டியிருந்த ஓட்டைத் தட்ட, அடுத்த சில கணங்களில் இருவர் வேலிக்கு அந்த பக்கம் வந்து நின்றார்கள்.

“என்ன தவசீலரே யாரைக் காண்பதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று இருவரில் ஒருவன் கேட்க,

மற்றொருவனோ, “அப்பரைக் ஏதும் காண வந்திருக்கிறீரோ?” என்றதும்,

“ஆமாம் அவரைக் காண தான் வந்திருக்கிறேன். அப்பரிடம் ஏற்கனவே அவர்களைப் பற்றி கூறியிருந்தேன். இப்போது இவர்கள் வந்துவிட்டபடியால் அவர்களை‌ அறிமுகம் செய்து வைத்து விட்டு செல்லாமென அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். உள்ளே வர அனுமதி கிடைக்குமா?”

“இருங்கள் அப்பரிடம் கேட்டுவிட்டு வருகிறோம்” என்ற அந்த இருவரும், தவசீலனின் பின்னே நின்ற மற்ற மூவரையும் உறுத்து விழித்து விட்டு தான் உள்ளே ஓடினார்கள். சில கணங்களில் அவர்கள் ‘அப்பர்’ என்று சொல்லும் நபர் அங்கு மேடை போல் இருந்த ஒன்றின் மீது ஏறி நின்று கையசைத்திட பதிலுக்கு தானும் கையை அசைத்தார் தவசீலன்.

“வாங்க உள்ள போலாம். நமக்கு உள்ளே போக பர்மிஷன் கிடைச்சிருச்சு. ஆனா இப்ப உள்ள போற நீங்க வெளியில போகணும்னா அதுக்கு உங்களுக்கு ஸ்ட்ராங்கான காரணம் வேணும் அப்ப தான் அனுப்புவாங்க. நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க. தேவையில்லாம எந்த பிரச்சனையும் மாட்டிக்க வேண்டாம், அவங்க பெண்களுக்கு ஏதாவது ஒரு ஆபத்துன்னா உங்களை கொலை கூட பண்ண தயங்க மாட்டாங்க அதை ஞாபகம் வச்சுக்கோங்க” என்றதும் மூவரும் சரி என்று தலையாட்டினார்கள்.

உள்ளே ஓடிய இருவரும் மீண்டும் திரும்பி வந்து வாயிலை அடைத்திருந்த படலை திறந்து விட்டார்கள்‌. வாயிலைத் திறந்து விட்டதும் நால்வரும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களது தலைவர் மேடையில் ஏறி நின்றதும் ஆங்காங்கே தங்களது வேலையை கவனித்துக் கொண்டிருந்த ஆடவர்கள் எல்லாம் நின்ற இடத்தில் இருந்து இவர்களை திரும்பிப் பார்க்க, மேடையில் நின்று இந்த நபரோ, “வாருங்கள் தவசீலரே நலமாக உள்ளீரா?” என்று கேட்டார்.

“நான் நலம் ஐயா. தாங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள், உடல்நிலை சரியில்லையென்று கேள்வியுற்றேன் இப்பொழுது தங்களுக்கு பரவாயில்லையா”

“நான் நலமாக உள்ளேன். எங்கள் தெய்வம் கொற்றைக்கால் அன்னை இருக்கையில் எங்களுக்கு என்ன கவலை. அனைத்தையும் அவள் பார்த்துக் கொள்வாள். அவளின்றி அணுவும் அசையாது, அவ்வாறு இருக்கையில் எங்களுக்கு எதை எப்பொழுது தர வேண்டும் என்பதையும் அவளே அறிவாள். நீங்கள் இவர்களைப் பற்றித்தான் கூறியிருந்தீர்களா என்ன?”

“ஆமாம் ஐயா இவர்கள் மூவரைப் பற்றியும் தான் உங்களிடம் கூறிவிட்டு சென்றிருந்தேன். இவர்கள் மூன்று பேரும் தான் தங்கள் தொழில் தொடர்பாக சில தகவல்களை சேகரிப்பதற்காக வேறு ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள்..

“இவர் மகேஷ், இவர் சாகர், இவர் அழகன் மூன்று பேரும் தான் உங்களிடம் தேவைப்படும் தகவல்களைக் கேட்டு தெரிந்து கொள்ள வந்திருக்கிறார்கள் ”

“மிக்க மகிழ்ச்சி. எங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள், அதுவே எங்களுக்கு பெரிய மனமகிழ்வு தான். வாருங்கள், உங்களை எங்களது திவ்யவனம் சார்பாக வரவேற்கிறோம்” என்றார் ஆதிநாதர். மகேஷ் சாகர் அழகன் மூவரும் அவரைப் பார்த்து புன்னகைத்தனர்.

“அகண்டா..” என்று  அவர் அழைத்ததும் எங்கிருந்தோ ஓடோடி வந்தான் கிட்டத்தட்ட 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன். அவன் கையில் மலர்களினால் தொடுக்கப்பட்ட மாலைகள் இருந்தன.

“வந்து விட்டேன்  அப்பரே. சற்று கால தாமதம் ஆகிவிட்டது மன்னியுங்கள்” என்றவன் சரசரவென்று மகேஷ், சாகர், அழகன் மூவரது கழுத்திலும் ஒவ்வொரு மாலையாக அணிவித்து விட்டவன், இரு கரம் கூப்பி,

“எங்களது திவ்யவனத்திற்கு உங்கள் மூவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறோம்” என்று கூறி முடிக்கும் முன்னே சிறு சப்தத்தோடு மேளம் ஒன்று இசைக்கப்பட்டது. அந்த சத்தத்தில் ஆங்காங்கே நின்றிருந்த ஆடவர்கள் எல்லாம் வலது காலை மேலே உயர்த்தி, பின்பு சில நொடி தாமதத்திற்கு பிறகு இடது காலை மேலே உயர்த்தி லேசாக ஆட தொடங்கினார்கள்.

தாளத்தின் இசைக்கேற்ப மாறி மாறி அவர்கள் தங்கள் கால்களை மேலே உயர்த்தியும், கீழே வைத்தும், கரங்களை அகல விரிந்தும், சுருக்கியும் ஆட ஆரம்பித்திட, அந்த சத்தத்தில் வீட்டிலிருந்து சிறு குழந்தைகள், பெண்கள் என அனைவரும் நொடியில் அந்த கருங்கல்லாலான மேடையின் அருகில் வந்தார்கள்..

கிட்டத்தட்ட பத்து நிமிடத்திற்கு மேலாக அந்த இசை முழக்கம் கேட்டுக் கொண்டே இருந்தது. அங்கு இருந்தவர்களின் செவியை இதமாக தழுவும் வகையில் மெலிதாகவே இசைக்கப்பட்டது. அந்த மேள இசையில் மெய் மறந்து தான் நால்வரும் நின்றிருந்தார்கள். பின்பு தவசீலனே, “உங்கள் வசம் இவர்களை ஒப்படைத்து விட்டேன். இவர்களுக்கான தேவைகளை நீங்கள் தான் பூர்த்தி செய்திட வேண்டும். என் மனைவியின் பிரசவ காலம் நெருங்கி விட்டது இல்லை என்றால் நானும் இங்கேயே இருந்து விடுவேன். எனக்காக இவர்கள் கேட்பதை செய்து கொடுங்கள், இவர்களும் நம்பிக்கையானவர்கள் தான் நிச்சயம் உங்களுக்கு எந்த ஒரு தொந்தரவும் இவர்கள் தர மாட்டார்கள்” என்றவர் மகேஷ், சாகர் அழகன் மூவரிடமும்,

“பார்த்து பத்திரமா இருங்க. இங்க சிக்னல் கிடைக்காது. ஆனா வேலி படல் பக்கத்துல சிக்னல் கிடைக்கும்  ஏதாவதுன்னா அந்த இடத்துல நின்னு எனக்கு கால் பண்ணுங்க நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு அந்த கிராம தலைவரிடமும் வணக்கத்தை தெரிவித்துவிட்டு கிளம்பி விட்டார் தவசீலன்.

அவர் சென்ற பின்பு அங்கிருந்த மக்களை எல்லாம் பார்த்த ஆதிநாதர், “இவர்கள் நம் வனத்திற்கு வந்திருக்கும் விருந்தாளிகள். இவர்களுக்கான தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியது நம் கடமை. ஆகையால் தினம் ஒருவரது வீட்டில் இருந்து இவர்களுக்கு உணவு செல்ல வேண்டும். எப்பொழுதும் நாம் உண்ணும் உணவை விட சற்று பிரத்யேகமாக, சிரத்தை மேற்கொண்டு உணவை சமைப்பீர்களாக” என்றவர்,

”அகண்டா அந்த பச்சைக் குடிலை சுத்தம் செய்து இவர்களை அங்கே தங்க வைத்து விடு. அதேபோல் தென்மலரிடம் கூறிடு, இன்று இவர்களுக்கான இரவு உணவை கொடுத்தனுப்பிட வேண்டும் என்று”  என்று கட்டளை இட்டார்.

“இப்பொழுதே கூறுகிறேன் அப்பரே” என்று சொல்லி விட்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு நகர்ந்தான் அகண்டன்..

“வாருங்கள் உங்களுக்கான குடிலை சுத்தம் செய்வதற்கு சிறிது நேரம் ஆகும். அதுவரை தாங்கள் இந்த திண்ணையில் அமர்ந்திருங்கள்” என்று ஒரு குடிசை வீட்டின் இடது புறம் மண்ணால் செய்யப்பட்டிருந்த திண்ணை போன்ற இடத்தை சுட்டிக்காட்டியவன், “இதோ வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு நகர்ந்தவன்,

“தென்மலர்..மலர் எங்கே இருக்கிறாய் ” என்று அழைத்துக் கொண்டு அந்த குடிசைக்குள் நுழைந்திட,

“ம்.. இங்கு தான் உள்ளேன். ஏன் அழைத்தீர்கள் கூறுங்கள்” என்று சிறுகுரலில் கேட்ட பெண் குரலானது இவர்கள் மூவரது செவியையும் தீண்டியது.

அக்குரலை எங்கோ கேட்டது போல் உள்ளதென மகேஷ் நினைத்திருக்க, நொடியில் அக்குரலை அடையாளம் கண்டு கொண்ட அழகனோ, பதற்றத்தோடும், பயத்தோடும், ஒரு வித தவிப்போடும் அந்த வீட்டின் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தான்..

அதே கணம் வெட்டப்பட்ட விறகு கட்டைகளை சுமந்த வண்ணம் வந்த பெண்ணின் விழிகள் அழகனைக் கண்டு அதிர்ந்து, உறைந்து போனது. நொடியில் அவளுள் பயம் குடிகொள்ள, இதயம் தாறுமாறாக துடித்தது.

– கானகமயில் கவிபாடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!