Skip to content
Post Views: 3,991
14
நிலாவுக்கும், ரஞ்சனுக்கும் நாட்கள் சிறு பிள்ளைத்தனமான சண்டைகளுடன் நகர்ந்து கொண்டிருந்தது.
திருமணம் முடிந்த ஒருவாரத்திற்குப் பின் நிலா தன் பள்ளிக்குக் கிளம்பினாள்.
Advertisement
திருமணத்திற்கு பின்னும் தான் வேலைக்குச் செல்லவும், தனது ஊதியத்தில் பாதியை தன் தாய் வீட்டிற்கு கொடுக்கவும் அனுமதி வேண்டும் என்று நிலா, ரஞ்சன் வீட்டுப் பெரியவர்களிடம் வேண்டுகோள் விடுத்து, அதற்கு அவர்களின் முழு சம்மதமும் பெற்றிருந்தாள்.
அவள் கிளம்பும் நேரம் பார்த்து ரஞ்சனும் தங்கள் கடைக்குக் கிளம்ப,
“டேய் ரஞ்சு அப்படியே நிலாவையும் ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டுப் போடா…!” என்றார் காமாட்சி.
Advertisement
“இல்ல பாட்டி… எனக்கு டைம் ஆகிடும்!” என்று அவன் நிலாவை முறைத்தபடியே பதிலளிக்க,
Advertisement
“இல்ல வேணாம் பாட்டி.. பக்கத்துலதானே ஸ்கூல், நான் நடந்தே போய்டுவேன், இத்தனை நாள் அப்படித் தானே பாட்டி போனேன்..!” என்றாள் நிலா.
“நீ சும்மா இரும்மா.. கல்யாணத்துக்கு முந்தி வேற, இப்பதான் இவன் இருக்கானே..! ஒரு ஐஞ்சு நிமிஷம் ஆகுமா? கார்ல கூட்டிப் போய்விட!” என்றவர், ரஞ்சனைப் பார்த்து,
“அவளை ஸ்கூல்ல விட்டுட்டு நீ போ. நம்ம கடைதானே யாரும் உன்னை அங்க நிக்க வைச்சிக் கேள்வி கேட்கப் போறதில்லை!” என்றார் முடிவாக.
Advertisement
“ப்ச்! சரி சீக்கிரம் வரச் சொல்லுங்க!” என்றான்.
“ஏன்?! உன் பொண்டாட்டி தானே! நீயே சொல்லேன்!” என்று அவர் சொல்ல,
“சீக்கிரம் கிளம்பு!” என்றான்.
“நான் எப்பவோ ரெடி!” என்றாள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு.
‘பிளானோடதான் இருக்கா..!’ என்று நினைத்தவன், விறுவிறுவெனச் சென்று வண்டியை எடுத்தான்.
அவள் காரின் பின் இருக்கையில் அமரப் போக, “முன்னாடி உட்காரும்மா..!” என்றார் ராதா.
‘இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களே..?!’ என்று மனதுள் தாயையும், பாட்டியையும் சலித்துக் கொண்டவன்,
“முன்னாடி வந்து உட்காரு!” என்றான் அழுத்தமாக.
அவள் உட்கார்ந்த பின்னும் அவன் வண்டியை எடுக்காததால், “என்ன?!” என்பது போல் பார்த்தாள் நிலா.
“எந்த ஸ்கூல்ன்னு உங்கப்பா வந்து சொல்வாரா?!” என்றான்.
“ஓ! ஸாரி..” என்றவள் பள்ளியின் பெயரைச் சொன்னதும் அவன் வண்டியைக் கிளப்பினான்.
பள்ளியின் வாயில் அருகே வண்டியை நிறுத்தியவன், “ஐ ஹவ் எ டவுட்!” என்றான்.
வண்டியிலிருந்து இறங்கியவள், என்னவென்பது போல் பார்க்க,
“நீயெல்லாம் சொல்லிக் கொடுத்து பசங்க உருப்படுமா?!” என்றான்.
“ஹும்…!” என்று முறைத்தவள்,
“நீ வேலை செய்யிற இடமே உருப்படும் போது என் ஸ்டுடண்ட்ஸ் நிச்சயமா உருப்படத்தான் செய்வாங்க!” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
“திமிர் பிடிச்சவ!!” என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.
சில நாட்கள் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி நகர்ந்தன. அன்று தமிழக மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் துவங்கியிருந்ததால், நிலா வேறொரு பள்ளிக்கு மேற்பார்வையாளராகச் சென்றிருந்தாள்.
தேர்வு முடிந்த பின், அவள் மாணவர்களின் பரிட்சைத் தாள்களை சேகரித்துக் கொண்டு அப்பள்ளியின் அலுவலக அறையில் ஒப்படைக்கச் சென்றாள்.
அவள் தாள்களை ஒப்படைத்துவிட்டு கிளம்பும் சமயம், யாஷினி அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.
அவளை அங்கே கண்ட நிலாவுக்கு ஆச்சரியம் என்றால், யாஷினிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“நீ.. நீ இங்க என்ன பண்ற?!” என்றாள் நிலா.
“நான் அது வந்து…! நீங்க எப்படி இங்க?!” என்று யாஷினி இழுக்க,
“நான் இன்விஜிலேடரா உங்க ஸ்கூல்க்கு வந்திருக்கேன்!” என்றாள் நிலா.
அதற்குள் வேறொரு ஆசிரியை யாஷினியின் அருகில் வந்து “என்ன மிஸ்… உங்க வேலையெல்லாம் முடிந்ததா? சாப்பிடப் போகலாமா?” என்றார்.
“ஆம் முடிஞ்சிடுச்சு…! இவங்க என் பிரெண்ட் நிலா… நம்ம ஸ்கூல்க்கு இன்விஜிலேடரா வந்திருக்காங்க..!” நான் அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வர்றேன், நீங்க போய் சாப்பிடுங்க!” என்றாள்.
அவ்வாசிரியை நிலாவிடம் நட்போடு தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள, நிலாவும் அவரிடம் இன்முகத்துடன் நட்பு பாராட்டினாள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அந்த ஆசிரியை விடைபெற்றுச் செல்ல, நிலா யாஷினியிடம்,
“நீ இங்க எவ்ளோ நாளா வேலை பார்க்கிற?!” என்றாள்.
“அது வந்து… இப்போ ஒரு டூ மந்த்ஸாகத்தான்!” என்றாள் யாஷினி.
“அப்போ.. அன்னிக்கு நீ நிரு வீட்டுக்கு வந்திட்டு போன பிறகுல இருந்தா?!” என்று கேள்வியோடு நோக்கினாள் நிலா.
யாஷினி மெளனமாக இருக்க, “என்கிட்ட சொல்ல விருப்பமிருந்தா சொல்லு, இல்லைன்னா வேண்டாம்…!” என்றாள் நிலா.
“அய்யோ அப்படி எல்லாம் இல்ல…!” என்றவள்,
“இங்க வேண்டாம், வாங்க வெளியே போய் பேசலாம்” என்று நிலாவை அவர்கள் பள்ளியில் அமைந்திருந்த பார்க்கிற்கு அழைத்துச் சென்றாள்.
“என்ன நடந்தது யாஷினி?!” என்றாள் நிலா.
“அது வந்து… அன்னிக்கு நான் உங்க வீட்டுக்கு வந்துட்டு போன பிறகு..” என்று ஆரம்பித்து அன்று நடந்ததை சொல்லி முடித்தாள்.
“ஆனா அதுக்கும் நீ இப்போ இங்க வேலை செய்யிறதுக்கும் என்ன சம்மந்தம்?!” என்றாள் நிலா.
“அடுத்த நாள் காலையில நான் வீட்டை விட்டு வெளியில வந்துட்டேன்!” என்றாள்.
“என்ன?!” என்று நிலா அதிர்ச்சியோடு நோக்க,
“அப்பா… நான் அவர் பார்த்து வைச்ச மாப்பிள்ளையைதான் கல்யாணம் செய்துக்கணும்னு ரொம்ப பிடிவாதமா இருக்காரு…! அதான்…” என்று அவள் நிறுத்த,
“என்னயிருந்தாலும் நீ வீட்டை விட்டு வெளியேறி இருக்கக் கூடாது யாஷினி!” என்றாள் நிலா.
“எனக்குக் கூட அண்ணா, காவ்யா, தர்ஷினி இவங்க எல்லோரையும் விட்டுப் பிரிஞ்சி இருக்கறது ரொம்ப கஷ்டமாதான் இருக்கு! ஆனா என் அப்பாவைவிட்டு தூரமாயிருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு! எத்தனைநாள் நான் அவர் அன்புக்காக ஏங்கித் தவிச்சிருக்கேன் தெரியுமா நிலா! இப்போ நானே அவர் எனக்கு வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டேன்! அவர்தான் என்மேல அன்பு காட்டலை…! இப்ப என் நிருவையும் என்கிட்டே இருந்து பிரிக்கலாம்னு பார்க்கிறாரு!” என்றாள் சிறுபிள்ளையாய் கண்களில் கண்ணீர் ததும்ப.
“ம்!” என்று நிலா சிரிக்க,
“என்ன நிலா நீங்க?! நான் எவ்ளோ சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க இப்படி சிரிக்கிறீங்க?!” என்று யாஷினி செல்லமாக முறைக்க,
“இல்ல… நீ எல்லா விஷயத்துலையும் ரொம்ப சின்னப் பிள்ளை மாதிரியே நடந்துக்கறியே?! அதை நினைக்கும் போது சிரிப்பு தானா வருது!” என்றாள் நிலா.
“ம்!” என்று யாஷினி முகத்தை தொங்கப் போட்டுக் கொள்ள,
“நீ ஹாஸ்டலுக்கு வந்த பிறகு உன் அப்பா உன்னை வந்து பார்க்கவே இல்லையா?!” என்றாள் நிலா.
“ம் நாலைந்து முறை வந்தாரு… என்னை வீட்டுக்கு வரச் சொல்லி ரொம்ப அன்பா இருக்க மாதிரி பேசினாரு! இனிமே அடிக்கவே மாட்டேன்னு சத்தியம் கூட செய்தாரு! ஆனா நிருவை மட்டும் வேண்டாம்னு சொல்றாரு!” என்றாள் சோகமாய்.
“நீ நிஜமாகவே நிருவை நேசிக்கிறதானே…!?” என்றாள் நிலா.
“என்ன நிலா…?!” என்று யாஷினி பாவமாகப் பார்க்க,
“அப்போ நீ முதல்ல உங்க வீட்டுக்கு கிளம்புற வழியைப் பாரு…! உங்கப்பா உன்மேல நிறைய அன்பு வைச்சிருக்காரு! இல்லைன்னா உன்னைத் தேடி வந்து இத்தனை முறை அழைச்சிருக்க மாட்டாரு! சிலருக்கு அன்பை வெளிக்காட்டத் தெரியும்… சிலருக்கு அதை மனசுக்குள்ள மட்டும்தான் வைச்சிக்கத் தெரியும்! எல்லோருமே ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க இல்லையா…!?” என்று கேள்வியோடு நிறுத்தி அவள் முகம் பார்த்தவள், மேலும் தொடர்ந்து,
“அதுக்காக அவர் பணம் சம்பாதிக்கணும்னு உங்களை தனிமையில வளர விட்டது சரின்னு நான் சொல்ல மாட்டேன். ஆனா அவர் பணம் சம்பாதித்ததே உங்களுக்காகதான்னு நீயும் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு யாஷினி!” என்றாள் நிலா பொறுமையாக அவளுக்கு எடுத்துச் சொல்லி.
“ம்..! நீங்க சொல்றதும் சரிமாதிரிதான் இருக்கு! இப்போ நான் செய்ய?!” என்றாள் யாஷினி.
“முதல்ல உங்க வீட்டுக்கு போ..! எடுத்தோம், கவிழ்த்தோம்னு இல்லாம பொறுமையா உங்கப்பாகிட்ட பேசி நீ நிரு மேல வைச்சிருக்க அன்பைப் புரிய வை!” என்றாள் நிலா.
“ம்! ஆனா இப்போ நானே எங்க வீட்டுக்குப் போனா என் இமேஜ் டாமேஜ் ஆகிடுமே!?” என்றாள் பாவமாக.
“அது சரி…!” என்று சிரித்த நிலா,
“ம் ஒண்ணு செய்… எப்படியும் உங்க அண்ணாவும், அப்பாவும் மறுபடியும் உன்னை வந்து கூப்பிடுவாங்க…! அப்போ நீ சாமதானம் ஆகிப் போற மாதிரி அவங்க கூடப் போயிடு..!” என்று நிலா ஐடியா கொடுக்க,
“ஐ என் கியூட் நிலா…!” என்று நிலாவின் கன்னம் பிடித்து கொஞ்சிய யாஷினி,
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?!” என்றாள்.
“என்ன?”
“நிரு கூட கொஞ்சம் கொஞ்சமா என்னை விரும்ப ஆரம்பிச்சிட்டார்…!” என்றாள் வெட்கத்துடன்.
“அது எனக்கு எப்பவோ தெரியும்!” என்றாள் கூலாக.
“எ எப்படி அ அவர் சொன்னாரா?!” என்றாள் ஆசையோடு.
“ம்ஹும்..! நீ அன்னிக்கு கோவில்ல அவனை விரும்பறதா என்கிட்டே சொன்னியே… அப்போ அவன் முகத்துல இருந்த ரியாக்ஷனை வைச்சு அவனும் உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டான்னு நான் தெரிஞ்சிகிட்டேன்!” என்றாள் நிலா.
“ஓ!” என்றவளின் முகம் வாடிப் போனதைக் கண்டு,
“சோர்ந்து போகாத யாஷினி….!” என்ற நிலா அவள் முகம் நோக்கி, “நான் உன்கிட்ட சில விஷயங்களை மனம் விட்டு பேசணும்னு நினைக்கறேன். பேசலாமா?!” என்றாள் பீடிகையுடன்.
“என்ன நிலா இப்படிக் கேட்கறீங்க?! நீங்க சொல்ல நினைக்கிறதை தயங்காம சொல்லுங்க” என்றாள் யாஷினி.
அவள் சம்மதம் கிடைத்தவுடன், நிலா, யாஷினியின் முகத்தை நேருக்கு நேர் ஏறிட்டு, “யாஷினி… நிறைய பேர் ஏதோ ஓர் ஈர்ப்பில், காதலிக்க ஆரம்பிச்சுடறாங்க…! ஆனா கல்யாணத்துக்குப் பிறகு ஒண்ணா சேர்ந்து வாழும்போது அவங்களுக்குள்ள பல வேறுபாடுகள் ஏற்பட்டு, ஒண்ணு… காலம் முழுக்க விதியேன்னு வாழ்க்கையை வாழறாங்க… இல்லை ஒத்துவராம பிரிஞ்சு போயிடறாங்க… கடைசி வரைக்கும் மனசொத்து வாழற தம்பதிகள் மிகக் குறைவே…! நான் பார்த்த வரைக்கும், நீ ரொம்ப விளையாட்டுதனமா பொண்ணாதான் தெரியுற…?! எல்லா விஷயத்துலயும் பட்டுன்னு முடிவெடுத்துடற… நாளைக்கு நிருவுக்கும் உனக்கும் கல்யாணம் ஆன பிறகு, ஒரு சின்ன மனவேறுபாடு ஏற்பட்டா கூட நீ இப்படிதான் பெட்டியைத் தூக்கிட்டு கிளம்பிடுவியா?! அப்படி மட்டும் ஏதாவது நடந்தா நிச்சயமா நிருவால அதைத் தாங்கிக்க முடியாது!” என்றாள் நிலா.
“நிலா….!?” என்று யாஷினி வேதனையோடு அவளின் முகம் நோக்க,
“ஸாரி யாஷினி உன் மனச கஷ்டப் படுத்தனும்னு நான் இப்படிக் கேட்கலை…! ஆனா நிருவோட வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கணும்! காலம் முழுக்க அவன் சந்தோஷமா வாழணும்னு நான் ஆசைப் படறேன்…! அவனும் எல்லோரையும் போல மனைவி, குழந்தைகள்னு சந்தோஷமா வாழணும்னு நான் எத்தனை நாள் கடவுள்கிட்ட வேண்டியிருக்கேன்… தெரியுமா?! நீ அவன விரும்பறேன்னு சொன்னபோது, நான் ரொம்ப சந்தோஷப் பட்டேன்… ஆனா… இப்போ உன் அப்பா உன்னை அடிச்சிட்டாருங்கறதுக்காக, நீ இப்படி வீட்டை விட்டு வந்ததைப் பார்க்கும் போது, கொஞ்சம் பயமா இருக்கு!” என்றாள் மனதை ஒளியாமல்.
“நிலா….!?” என்று வேதனையோடு தலை குனிந்த யாஷினி,
“நிருவுக்காக நீங்க இந்த அளவுக்கு யோசிக்கிறதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. சொல்லப் போனா உங்களையும், நிருவையும் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு… இந்த வயசில உங்க ரெண்டு பேருக்கும் எவ்ளோ மனப்பக்குவம்?! எல்லா விஷயத்தையும் எவ்ளோ பொறுமையா டீல் பண்றீங்க?! ஆனா நான் எல்லா விஷயத்துலையும் சட்டு சட்டுன்னு முடிவெடுத்திடுவேன்!
எனக்கு சின்ன வயசில இருந்தே இது சரி, இது தப்பு, இப்படித்தான் நடந்துக்கணும், அப்படின்னு சொல்லிக் கொடுத்து வளர்க்க யாரும் இல்லை! எப்பவுமே ஒரு தனிமை, ஒரு வெறுமை என் மனசில இருந்துகிட்டே இருந்தது! அன்புக்காக ரொம்பவும் ஏங்கித் தவிச்சிருக்கேன். அம்மா, அப்பவோட அன்புதான் எனக்கு கிடைக்கலைன்னா.. அண்ணாவையும் ஹாஸ்டல்ல போட்டு அவனையும் என்கிட்டே இருந்து பிரிச்சிட்டார் என் அப்பா. அதனால என் அப்பா மேல மட்டும் எப்பவுமே எனக்கு ஒரு கோபம் இருந்தது. இன்னிக்கு நிருவையும் அவர் என்கிட்ட இருந்து பிரிச்சிடுவாரோங்கிற பயம்தான் என்னை இப்படி வீட்டை விட்டு வெளியேருற அளவுக்கு முடிவெடுக்க வைச்சது.
அப்புறம் நீங்க சொன்ன விளையாட்டுதனம்…! ம்..! என்னோட மனசில இருந்த தனிமையையும், வெறுமையையும் போக்கிக்கதான் நான் கொஞ்சம் கொஞ்சமா விளையாட்டுதானமா மாற ஆரம்பிச்சேன். அது இன்னைக்கி வரைக்கும் சில விஷயங்கள்ல தொடருது!
ஆனா என் காதல் நிச்சயமா விளையாட்டு இல்லை…! நான் முதல்ல நிருவைக் காதலிக்கறேன்னு உணர்ந்தப்போ எனக்கே அது ஆச்சர்யமா இருந்தது.
இது சாத்தியமா இல்லையான்னு எல்லாம் நான் யோசிக்கலை… காதல் எதையும் சாத்தியமாக்கும்! இன்னிக்கு நான் நிருமேல் வைச்சிருக்க காதல் என் உயிருள்ளவரை தொடரும்னு என் மனசு முழுசா நம்புச்சு! அதுக்கப்புறம்தான் நான் என்னோட காதலை வெளிப்படுத்தினேன்.
இப்பவும் உங்களுக்கு என்மேல முழு நம்பிக்கை வரலைன்னா…? உங்க எல்லாருக்கும் என் மேல முழு நம்பிக்கை வர வரைக்கும் நான் காத்திருப்பேன்!” என்றாள் உறுதியோடு.
அவள் சொல்வதைக் கேட்டு மனமுருகிப் போன நிலா, கண்கலங்க அவளைத் தன்னோடு சேர்த்தணைத்து,
“நான் உன்னை நம்பறேன் யாஷினி… முழுமையா நம்பறேன்…!” என்றாள்.
“ம்ம்…!” என்று யாஷினியும் கண்ணில் நீரோடு தலையசைத்தாள். அங்கே ஓர் ஆழ்ந்த நட்பின் உதயம் ஆரம்பமானது.
அன்று இரவு உணவு முடிந்த பின், சிறிது நேரம் ராதா, காமாட்சி இருவருடனும் பேசிக் கொண்டிருந்துவிட்டு, தங்கள் அறைக்கு வந்த நிலா, அங்கு ரஞ்சன் இல்லாததைக் கண்டு, ‘எங்க போயிருப்பான்?! ஒருவேளை பால்கனியில இருக்கானோ..?!’ என்று எண்ணியபடியே பால்கனியை நோக்கிச் சென்றாள்.
அங்கு ரஞ்சன் தன் கைப்பேசியையே வெறித்தபடி அமர்ந்திருக்க, அவன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவன் கைபேசியில் பட்டுத் தெறித்தது.
அவன் பின்னே நின்றிருந்த நிலா இக்காட்சியைக் கண்டு மனவேதனையுற்றாள்.
error: Content is protected !!