Skip to content
Post Views: 4,360
24
யாரோ தன் அறைக்குள் வரும் ஓசை கேட்டு கண்திறந்த யாஷினி, தன் தந்தையைக் கண்டதும், “வாங்கப்பா…!” என்றபடி எழுந்தமர்ந்தாள்.
“என்னம்மா உடம்புக்கு ஏதும் முடியலையா?!” என்றார் பஞ்சாட்சரம் பரிவோடு அவள் தலை வருடி.
Advertisement
“ம் அதெல்லாம் இல்லப்பா… கொஞ்சம் சோர்வா இருந்தது! அதான் படுத்து ஓய்வெடுத்துட்டு இருந்தேன்” என்றவள், அவர் கையிலிருக்கும் அழைப்பிதழைக் கண்டதும் முக மாற்றம் கொண்டாள்.
“என்னம்மா பார்க்கிற உன் கல்யாணப் பத்திரிக்கைக்கான ப்ரூப் தான்!” என்றவர் பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லு!” என்றார்.
“அப்பா…?!” என்றவள் கண்ணில், கண்ணீர் வந்துவிடுவேனா என்றிருக்க,
Advertisement
“இங்க பாரு யாஷினி… நீ உன் முடிவைச் சொல்ல ரெண்டு நாள் டைம் தரேன்னு சொன்னேன், ஆனா ஒரு மாசத்துக்கு மேலாகியும் நீ எந்த முடிவையும் சொல்ல மறுக்கிற! இதுக்கும் மேல என்னால் தாமதிக்க முடியாதும்மா…! எனக்கு இதைத் தவிர வேற வழி தெரியலை!” என்றவர்,
Advertisement
“பத்திரிக்கையைப் பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லும்மா…!” என்று வலுக்கட்டாயமாக அவள் கையில் பத்திரிக்கையை கொடுத்தார்.
அவள் என்ன சொல்லுவாள்?! அவள் காதலுக்கு உரியவன்தான் அவளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறானே!
அன்று காலை ரஞ்சன் மிகவும் குஷியாக தங்கள் கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.
Advertisement
“என்ன?! இன்னிக்கு சார் இவ்ளோ குஷியா இருக்கீங்க?!” என்று தன் புத்தக அலமாரியை அடுக்கியபடியே நிலா கேட்க,
“நான் ஒரு மாசமாகவே குஷியாதான்டி இருக்கேன்!” என்றான் ரஞ்சன் தலைவாரியபடியே உதடுகள் குவித்து.
“சீ உங்ககிட்ட வாயே குடுத்திருக்கக் கூடாது!” என்று அவள் முகம் சிவக்க,
“ஏய் இப்படி வெட்கப்பட்டு வெளியே கிளம்புறவனை, போக வேண்டாம்னு சொல்றியா?!” என்றான் ரஞ்சன் குறும்பாக.
“அய்யா சாமி! நீங்க முதல்ல இங்கிருந்து கிளம்புங்க! உங்களை யாரும் இங்க இருக்க சொல்லிக் கெஞ்சலை!” என்று கையெடுத்துக் கும்பிட்டவள்,
“இந்த முசுடுங்களை மட்டும் நம்பவே கூடாது?! போன மாசம் வரைக்கும் என்னமா நல்ல புள்ள மாதிரி இருந்தான்! இப்போ என்னன்னா?!” என்று அவள் மெல்ல முனகியபடியே புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருக்க,
“இப்ப என்னன்னா இப்படி எல்லாம் பண்றாங்கறியா?!” என்றான் அவள் பின்னே வந்து அணைத்து.
“லேசா முனகினா கூட உங்களுக்கு எப்படிக் காது கேட்குது!?” என்று அவள் ஆச்சர்யத்துடன் கேட்க,
“நீ மனசுல நினைக்கிறதயே நான் கண்டுபிடிச்சிடுவேன்! இதெல்லாம் என்ன?!” என்றவன் கைகள் அவள் கன்னத்தை வருட, பட்டேன்று அவன் கையில் ஓர் அடி வைத்தவள்,
“ஒழுங்கா கடைக்குக் கிளம்புங்க…!” என்று மிரட்டி அவனைக் கிளம்பச் செய்தாள்.
அன்று அவள் பள்ளிக்கு விடுமுறை என்பதால், அவன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றதும், தங்கள் அறை முழுவதையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள்.
திடிரென்று அவள் பின்னே ஏதோ நிழலாட, சட்டென்று திரும்பியவள், நிரஞ்சன் அங்கே நின்றிருப்பதைக் கண்டாள்.
“நிலா…?!” என்று அவன் அழைக்க, அவள் காதில் வாங்காதது போல் தன் வேலையில் கவனம் செலுத்தலானாள்.
“நிலா.. ப்ளீஸ் இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீ இப்படி என்னோட பேசாம போராட்டம் பண்ணப் போற?!” என்றான் நிரஞ்சன்.
“……” அப்போதும் அவள் மௌனமாகவே இருக்க,
“நிலா… இங்க பாரு?! அப்படி என்ன நான் தப்பு செய்திட்டேன்?! என்னோட வாழ்கையை முடிவெடுக்கிற உரிமை கூட எனக்கில்லையா?!” என்றான் ஆதங்கத்துடன்.
அவன் வார்த்தையில் கோபம் கொண்ட நிலா, “ஓ எஸ்! தாராளமா இருக்குங்க சார்…! ஆனா அது உங்க மனசுக்கு பிடிச்ச முடிவாயிருந்தா நான் என்னிக்குமே அந்த முடிவுக்கு குறுக்க நிக்க மாட்டேன்! ஆனா நீ ஒரு கோழை நிரு…!” என்றாள் முதன் முதலாக அவன் மனம் நோகும் படி.
“நிலா…?!” என்று அவன் வேதனையுடன் அழைக்க,
“முதன் முதலா உன் செயலை நினைச்சு நான் வெட்கப் படுறேன் நிரு…!” என்றவள் தொடர்ந்து,
“யாஷினி உன்னோட வாழ்க்கையில வரது உனக்கு பிடிக்கலைன்னா முதல்லையே அவளை நீ முகத்தில அடிச்ச மாதிரி சொல்லித் தவிர்த்திருக்கனும்! அப்பல்லாம் அவளை பேசவிட்டு ரசிச்சிட்டு, இப்ப ஏதோ ஒரு காரணத்துக்காக அவளைத் தவிர்க்கற! அதுக்கு என்ன காரணம்னு என்கிட்ட கூட சொல்லத் தோணலை இல்லை உனக்கு?!” என்றாள் அவன் கண்களை நோக்கி.
அவள் கேள்விக்கு பதில் கூற இயலாமல் தலைகவிழ்ந்த நிரஞ்சன், ’நீ கூட என்னைப் புரிஞ்சிக்கலையே நிலா…?!’ என்று மனதுள் நொந்தவாறே அங்கிருந்து வெளியேறினான்.
‘உன் மனசு எனக்கு நல்லாவே புரியும் நிரு…! இருந்தாலும் நீயா உன் மனசை வெளிப்படுத்தனும்னு ஆசைப்பட்டேன் ஆனா…?!’ என்றவள் கண்ணில் நீர் துளிர்த்தது.
‘கடவுளே ஏன் எங்க நிருவுக்கு இப்படி ஒரு குறையைக் குடுத்த?! அதனாலதானே அவன் தன்னோட மனசுக்குள்ள இருக்க ஆசையை எல்லாம் தனக்குள்ளயே புதைச்சிக்க பார்க்கிறான்! நீதான் அவன் வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக் கொடுக்கணும்!’ என்று கண்ணீர் பெருக வேண்டினாள்.
தலைப் பிரசவதிற்காக தன் தாய் வீடு வந்திருந்த நிவி, நிலாவோடு சேர்ந்து தானும் இரவு விருந்தைத் தயாரிப்பதாகச், சொல்லி வீட்டையே அல்லகொலப் படுத்திக் கொண்டிருந்தாள்.
“ஏ நிவி உனக்கெதுக்கு இந்த வேலை?! நீ போ நானே எல்லாத்தையும் பார்த்துக்குவேன்!” என்று நிலா சொல்ல,
“போ நிலா… என் மாமியார் என்னை ஒழுங்கா சமைக்கக் கூடத் தெரியலைன்னு அடிக்கடி மட்டம் தட்டுறாங்க?! என் பிள்ளையோடு வீட்டுக்குப் போகும்போது, சும்மா ஒரு செஃப் ரேஞ்சுக்கு சமைக்கக் கத்துக்கிட்டு போகணும்!” என்று சொல்ல,
“அம்மா தாயே!? அப்போ கடைசி வரைக்கும் நான் எங்க வீட்டுக்கும் உங்க வீட்டுக்கும் அலையனுமா?!” என்றான் கார்த்திக் பயத்துடன்.
“சும்மா இருங்க என்னை அசிங்கப் படுத்த நீங்களே போதும்!” என்று நிவி முறைக்க,
“என்ன கார்த்திக்.. எங்க வீட்டுப் பொண்ணை என்னன்னு நினைச்சிக்கிட்டு இருக்கீங்க?! அவ நினைச்சா ஒரே மாசத்துல நளபாகத்தோட அருமையா சமையல் செய்யக் கத்துக்குவா?!” என்று நிலா நிவிக்கு பரிந்து சொல்ல,
“கேட்டுதா?!” என்றாள் தன் கணவனைப் பார்த்து.
அன்று இரவு அனைவரும் ஒன்றாக உணவுண்ண அமர, கார்த்திக் ரஞ்சனைப் பார்த்து, “மச்சான் இன்னிக்கு விருந்து உங்க மனைவியும், உங்க அன்புத் தங்கையும் தயாரிச்சது!” என்றான் வேண்டுமென்றே நிவியை வெறுப்பேற்ற நினைத்து.
“என் பொண்டாட்டி சமைச்சா ஓகே! ஆனா நிவியும் சேர்ந்தா?!” என்றவன் சீரியஸாக முகத்துடன்,
“என்ன நிவிம்மா உயிருக்கு ஒண்ணும் ஆபத்து வராதே?!” என்க, அவள் முகம் போன போக்கைப் பார்த்து அனைவரும் சிரித்துவிட்டனர்.
“போ அண்ணா… வர வர நீ என்னை ரொம்பதான் கேலி பண்ற?!” என்று நிவி அவன் முதுகில் ஆசையாக நான்கு மொத்து வைக்க, நிலா நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.
‘அடிப்பாவி புருஷன் அடி வாங்குறதுல உனக்கு இவ்ளோ சந்தோஷமா?!’ என்று நிலாவை ஓரக் கண்ணால் ரசித்தவாரே அவன் உண்ணத் துவங்க,
“மச்சான்.. இது என் தட்டு!” என்று தன் தட்டை இழுத்துக் கொண்ட கார்த்திக்,
“தங்கச்சி முகத்தையே பார்த்து சாப்பிடாம, அப்பப்போ சாப்பாட்டுத் தட்டையும் பார்த்து சாப்பிடுங்க மச்சான்!” என்றான் கேலியாக.
‘அச்சோ மானத்தை வாங்குறான்!’ என்று மனதுள் தன் கணவனை வைத நிலா, வெட்கத்துடன்,
“நான் போய் இன்னும் கொஞ்சம் சப்பாத்தி போட்டு எடுத்து வரேன்!” என்று சமையலறைக்கு விரைந்தாள்.
“அண்ணி… அண்ணி நில்லுங்க எங்க போறீங்க?!” என்று நிவி அவளை மேலும் வெறுப்பேற்ற,
“நிவி போதும் கேலி பண்ணது! விடுங்க அவளை!” என்று நிலாவிற்கு பரிந்து கொண்டு வந்தார் காமாட்சி.
“அப்பப்பா உங்க பேரன் பொண்டாட்டியை ஒண்ணு சொல்லிடக் கூடாதே?!” என்றபடியே சாப்பாட்டில் கவனம் செலுத்தலானாள் நிவி.
அனைவரும் சாப்பிட்டுமுடித்த பின் ரஞ்சனும், நிலாவும் சிறிது நேரம் தோட்டத்தில் நடந்துவிட்டு வரலாம் என்று செல்ல, அங்கு சென்ற சில நொடிகளிலேயே அவளின் தொலைப் பேசி அலறியது.
அவள் போனை எடுத்துபேச, “தொலைப்பேசின்னு பேர் வைச்சதுக்கு பதில் தொல்லைப் பேசின்னு பேர் வைச்சிருக்கலாம்!” என்று அவன் மெல்ல முனக,
நிலா போனை அட்டென்ட் செய்து, “ஹாய் இளா எப்படி இருக்கீங்க?!” என்றாள் உற்சாகத்துடன்.
“நான் ரொம்ப நல்லா இருக்கேன்! நீங்களும், மிஸ்டர் ரஞ்சனும் எப்படி இருக்கீங்க?!” என்றான் இளமாறன்.
“ம்! அவருக்கென்ன சூப்பரா இருக்காரு!” என்றவள், இன்னும் சில நிமிடங்கள் அவனிடம் உரையாடிவிட்டு வர,
“என்னவாம்?!” என்றான் ரஞ்சன்.
“என்ன என்னவாம்?!” என்றாள் நிலாவும்.
“இந்நேரத்துக்கு எதுக்கு போன்?!”
“ஓ! அதுவா திடீர்னு உங்க ஞாபகம் வந்திருக்கும் அதான் போன் பண்ணியிருப்பாரு!” என்று அவள் சொல்ல,
“இவனுக்கு வேற வேலையே இல்லையா?!” என்றான் கடுப்பாக.
“ரஞ்சு மரியாதையா பேசு அவர் உனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிற டாக்டர்!” என்று நிலா சொல்ல,
‘ஆமாம் அப்போ எனக்கு போன் பண்ணி பேச வேண்டியதுதானே!’ என்று நினைத்தவன், “அந்த டாக்டர் போன் பண்ணாலே எனக்கு டென்ஷன் ஆகுது!” என்றான்.
“சே சே ரொம்ப நல்ல மனிதன்!” என்று நிலா, இளமாறனிற்கு நற்சான்றிதழ் கொடுக்க,
“அப்போ நாங்கல்லாம்?!” என்றவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது.
‘அச்சோ பாவம்!’ என்று மனதுள் அவனைக் கொஞ்சியவள், “சே சே நீ ரொம்ப… கெட்டவன் ப்பா..!” என்று முகம் சுளித்தாள்.
“ஹா!” என்று அவன் முறைக்க, “பின்ன லூசு மாதிரி கேள்வி கேட்ட அப்படிதான் பதில் வரும்!” என்றாள்.
“உனக்கொன்னு தெரியுமா நிலா… முதன் முதலா உன்மேல எனக்கு மட்டும்தான் உரிமை இருக்குன்னு தோணினதே, அன்னிக்கு நீ அந்த டாக்டர் கிட்ட சிரிச்சுப் பேசும்போது எனக்கு வந்த கோபத்தை வச்சிதான்!” என்றான் உண்மையை ஒளியாமல்.
“ஓ! அப்போவே சாருக்கு என்மேல லவ் வந்துடுச்சா?!” என்றாள் ஆச்சர்யமாக.
“அதெல்லாம் தெரியலை! ஆனா உன்கிட்ட எனக்கு மட்டும்தான் உரிமை இருக்குன்னு தோணுச்சி!” என்றான்.
காதலுடன் அவன் முகத்தை நோக்கியவள், “அன்பு இருக்க இடத்துல உரிமை தன்னால வந்திடும் ரஞ்சு..!” என்றாள் அவன் தோள்சாய்ந்து.
மறுநாள் மாலை நிரஞ்சன் வீடு திரும்பும் நேரம், அவன் சற்றும் எதிர்ப்பார்க்காத புதிய விருந்தாளிகள் சிலர் வந்திருந்தனர்.
அவர்களைக் கண்டு விவரிக்க முடியாத ஆச்சர்யத்துடன் வீட்டினுள் நுழைந்தவன், ஹாலில் தன் குடும்பத்தினரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களை வரவேற்பதா வேண்டாமா, என்ற குழப்பத்துடன் சம்பிரதாயத்திற்காக அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அவன் வீட்டினுள் நுழையும்போது சந்தோஷமாக இருந்த அனைவரின் முகமும் இப்போது மாற்றம் கொண்டிருந்தது.
“வா நிரஞ்சன், எப்படி இருக்க?! சில மாசங்களா நம்ம வீட்டுப் பக்கமே வரதில்லை!?” என்று தாமோதரன் கேட்க,
“சாரிங்க சார் கொஞ்சம் வேலையா…?!” என்று இழுத்தவனிடம்,
“பரவாயில்லை விடு நிரஞ்சன்! எனக்கு புரியுது!” என்றவர், தன் நண்பனைப் பார்த்து,ம் “என்னடா நிரஞ்சன்கிட்ட பேசமாட்டியா?!” என்றார்.
“ஆங்! அப்படியெல்லாம் இல்லை!” என்ற பஞ்சாட்சரம், “எப்படி இருக்கீங்க நிரஞ்சன்?!” என்றார் அவனைப் பார்த்து.
“நிரஞ்சன் இவர் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயாமாகியிருக்கு! கல்யாணப் பொண்ணு உங்க வீட்டுக்கும் கண்டிப்பா பத்திரிக்கை கொடுக்கணும்னு சொன்னதனால முதல் பத்திரிக்கை உங்க வீட்டுக்குதான் கொண்டு வந்திருக்கோம்!” என்று அவர் சொல்லச் சொல்ல நிரஞ்சனின் முகம் தன்னையறியாமல் வாட்டத்தைக் காட்டிவிட்டது.
அவன் பதிலேதும் உரைக்காது மௌனமாய் அமர்ந்திருக்க, “என்ன நிரஞ்சன் பேசவே மாட்டேங்கற?! உனக்கு இதில ஏதும் கஷ்டமா?!” என்றார் அவன் தாத்தா இராமநாதன்.
“எ எனக்கு என்ன தாத்தா கஷ்டம் இருக்கப் போகுது?! என்றான் நிரஞ்சன் தன்னை சமாளித்துக் கொண்டு.
“ஓ! அப்ப சரி!” என்றவர், பஞ்சாட்சரத்தைப் பார்த்து, ‘யாஷினியையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே?! ரொம்ப நாள் ஆச்சு பிள்ளையைப் பார்த்து!” என்றார்.
“கல்யாணம் முடிவாகிடுச்சுங்க இல்லையா.. அதான் வெளில எங்கயும் கூட்டிட்டு வர வேண்டாம்னு நினைச்சோம்!” என்று பஞ்சாட்சரம் சொல்ல,
‘இனி யாஷினியைப் பார்க்கக் கூட முடியாது இல்ல…!?’ என்று நினைத்தவனின் இதயத்தில் சொல்லொணா வலி எழுந்தது.
“நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு வரேன், நீங்க பேசிட்டு இருங்க!” என்று அவன் எழப் போக,
“அட என்ன நிரு… விருந்தாளிங்க வந்திருக்கும் போது இப்படி மரியாதை இல்லாம எழுந்து போகலாமா?!” என்று தடுத்து அமரச் செய்தார் காமாட்சி.
அவன் பதிலேதும் பேசமுடியாமல் அமைதியாய் அமர்ந்து கொள்ள, அவன் முன்னிலையிலையே யாஷினியின் திருமணப் பத்திரிகையை அவன் தாத்த பாட்டியிடம் வழங்கினார் பஞ்சாட்சரம்.
“நீங்க எல்லோரும் சேர்ந்துதான் இந்தக் கல்யாணத்தை நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்!” என்றார் பஞ்சாட்சரம் புன்னைகையுடன்.
“கண்டிப்பா…!” என்றனர் ராமநாதனும், காமாட்சியும்.
‘யாஷினி…! இனி அவ என் வாழ்கையில வரவே மாட்டா…! என் யாஷினி என்னை விட்டு ரொம்ப தூரம் போகப் போறா! இல்ல இல்ல.. அவ என் யாஷினி இல்ல.. இனி அவ வேறொருவரோட மனைவி..!’ என்று எண்ணியவன் மனம் மீளாத் துயர் கொண்டது.
இன்னும் சில நொடிகள் அங்கு இருந்தாலும் தன் மனம் வெளிப்பட்டு விடுமோ என்று அவன் பயம்கொள்ள அங்கிருந்து எழுந்து வேகமாக தன் அறை நோக்கிச் செல்ல முயன்றான்.
error: Content is protected !!