Skip to content
Post Views: 4,695
26
நிரு, சொல்வதறியா பரவசத்துடன் யாஷினியை எதிர்பார்த்து தன் அறையில் காத்திருக்க, தன் காதல் கை சேர்ந்து விட்ட மகிழ்ச்சியில், கண்ணில் கனவுகளோடு, இதுவரை அறியா உணர்வுடன், யாஷினி, மெல்ல தன் கொலுசொலி சிணுங்க அடிமேல் அடிவைத்து தன் மணாளனின் அறைக்குள் நுழைந்தாள்.
அவள் உள்ளே வருவதைப் பார்த்ததும் நிரு எழுந்து அவளை வரவேற்கச் செல்ல, யாஷினி நடையை மறந்து, நாணத்துடன் தலை குனிந்து, தரையிலிருந்து பார்வையை எடுப்பேனா என்று சபதமிட்டது போல் நின்றிருந்தாள்.
Advertisement
அவள் அருகே வந்த நிருவோ, “அட யாருப்பா இந்த வேலையைப் பண்ணது?! இத்தனை நாளா என்னைத் துரத்தி துரத்திக் காதலிச்ச பொண்ணை விட்டுட்டு, யாரோ ஒருத்தியை எனக்கு கல்யாணம் செய்து வைச்சு இங்க அனுப்பியிருக்காங்க?!” என்றான்.
அப்போதும் அவள் நாணத்தை மொழியாக்கி நின்றிருக்க, “ஆனாலும் அந்தப் பொண்ணை விட இந்தப் பொண்ணு ரொம்ப அடக்கமா, அம்சமாதான் இருக்கா? இவளே எனக்கு ஓகேதான்” என்றான் குறும்பாக.
“ச்சு போங்க நிரு…!” என்று அவள் வெட்கத்தில் முகம் சிவக்க, “அடடா இது நிச்சயமா வேற பொண்ணேதான்!” என்று அவன் மீண்டும் சீண்டினான்.
Advertisement
“அய்யோ!! போங்க நிரு…!” என்று அவள் தன் ஒரு கையால் முகத்தை மூடிக் கொள்ள, நிரஞ்சன் அவள் அருகே வந்து அவள் கைப்பிடித்தான்.
Advertisement
அவன் தீண்டலில் அவள் மெய் சிலிர்க்க, அவள் கண்மூடி அத்தீண்டலை ரசித்தாள்.
அவளை மெல்ல அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்த நிரு, தானும் அருகே அமர்ந்து அவள் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.
“தாங்க்ஸ் யாஷினி…!” என்றான் மனதார.
Advertisement
“எதுக்கு?!” என்று அவள் அவன் கண்ணோக்க,
“எல்லாத்துக்கும்!” என்றான்.
சில நொடிகள் அமைதிகளில் கழிய, “என்னைப்போய் எப்படி ம்மா… உனக்குக் காதலிக்கத் தோணுச்சு?!” என்றான் நிரு எங்கோ பார்வையைச் செலுத்தியபடி.
“அதென்ன என்னைப் போய்?! உங்களுக்கு என்ன?!” என்றவள், தன் இருகைகளைக் கொண்டு அவன் முகம் நிமிர்த்தி,
“நிரு…. இதை நான் சொல்லியே ஆகணும்! நீங்க அவ்ளோ அழகு தெரியுமா?! அப்படியே ஸ்வீட்டா கியூட்டா அமுல் பேபி மாதிரி…!” என்று காதலுடன், வாரணமாயிரம் சூர்யா பாணியில் அவள் சொல்ல, அவன் கலகலவென சிரித்துவிட்டான்.
“வாலு…! இது சூர்யா சொன்ன டைலாக்” என்று அவன் செல்லமாக அவள் கன்னத்தைத் தட்ட,
“என்ன பண்றது?! எப்படியும் நீங்க என்னைப் பார்த்து சொல்ல மாட்டீங்கன்னு தெரியும்! அதான் நானே சொல்லிட்டேன்!” என்று அவள் பாவம் போல் சொல்ல,
“சே சே அப்படியெல்லாம் இல்லடா… உன்னை நான் எவ்ளோ ரசிச்சிருக்கேன் தெரியுமா?! உன்னோட பேச்சு, சிரிப்பு, குறும்பு, எதையுமே எடுத்தோம் கவிழ்தோம்னு எடுக்கிற முடிவு, அதிலும் ஒரு அடம்! இதையெல்லாம் விட உன்னோட காதல்! இப்படி ஒவ்வொன்னையும் நான் ரொம்பவே ரசிச்சிருக்கேன் டா….! ஆனா அதை வெளிக்காட்டத்தான் எனக்கு தைரியம் வரல..! ஆனா அதையும் மீறி நான் முழுசா என் காதலை உணர்ந்து உன்னை நேசிக்க ஆரம்பிச்சபோது…!” என்று அவன் நிறுத்திவிட,
“அந்த வில்லன் வீரப்பன் தடுத்துட்டார்!” என்று யாஷினி தன் தந்தையைக் குறை சொல்ல,
“சே சே அவர் நிலைமையில இருந்தும் நீ யோசிச்சு பாரு யாஷினி…!” என்றான் நிரு.
“யார் நிலைமையில இருந்தும் இப்ப யோசிக்க வேண்டாம்! நமக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சு அதனால இப்போ நம்ம நிலைமையை கொஞ்சம் யோசிங்க!” என்று அவள் குறும்புடன் கூற, அவன் புன்சிரிப்புடன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.
பார்த்தவன் பார்த்தபடியே சில நொடிகள் அவள் கனிமுகத்தை ரசித்திருக்க, “போங்க நிரு…. எனக்குத் தூக்கம் வருது!” என்று சிணுங்கினாள் பாவை.
“ஓ தூங்கலாமே!” என்றவன் மெல்ல அவளை நெருங்கி அணைத்து, அவளது பிறைநெற்றியில் முத்தம் பதித்து, தாம்பத்தியத்தின் இனிய துவக்கத்தை ஆரம்பித்து வைத்தான்.
இரு ஜோடிகளும் தத்தம் தாம்பத்திய வாழ்வை இனிமையாக வாழ்ந்து கொண்டிருக்க, அதில் ஒரு ஜோடிக்கு அன்றைய நாள் கசப்பின் சுவடாக விடிந்தது.
அன்று அதிகாலையே நிலாவிக்கு விழிப்பு வந்துவிட, உறக்கம் கலைந்தவள், உறைந்த புன்னகையுடன் தன்னருகே உறங்கிக் கொண்டிருக்கும் மன்னவனின், கன்னத்தை மென்மையாக வருடினாள்.
“யூ மேட் மை லைப் ஸோ பியூட்டிபுல் நிலா..!” என்று, அன்று ரஞ்சன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதை நிறைத்தன.
“ம்ஹும்… நான் இல்லை! நீதான்டா என் வாழ்க்கையை ஓர் அழகான வானவில் போல மாத்திட்ட..!” என்று சொல்லி, இமை மூடி கனவில் ஆழ்ந்திருந்த அவன் விழிகளில் முத்தமிட்டாள்.
அவள் கன்னத்தை வருடியதுமே அவளின் காதல் கள்வன் உறக்கம் களைந்து எழுந்துவிட்டலும், தினமும் அவன் மனையாள் கொடுக்கும் இனிய இமை முத்ததிற்காக கண்மூடியபடி தவமிருந்தான்.
அவள் கொடுத்த அம்முத்தத்தை அனுபவித்து ரசித்த கணவன், முத்தமிட்டுவிட்டு எழப் போனவளை, தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தான்.
“சோ விடுங்க ரஞ்சு…!”என்று அவள் கொஞ்ச,
“ஏய் உண்மைய சொல்லு நிஜமா விடணுமா?!” என்று அவன் கள்ளச் சிரிப்போடு கேட்க, அவன் மார்பில் முகம் புதைத்தாள் நங்கை.
தன்னிடம் சரண் புகுந்தவளின் தலைமுடியை அவன் மென்மையாக வருடிக் கொடுக்க, அவளும் அவ்விதம் கொடுத்த இன்பத்தில் கண்மூடித் திளைத்திருந்தாள்.
சில நிமிடங்கள் இந்நிலையிலையே கரைய, நேரமாவதை உணர்ந்த நிலா, “ரஞ்சு..!” என்றாள்.
“ம் என்ன பேபி…?!” என்று ரஞ்சன் கேட்க,
“பேபி பேபின்னு கூப்பிடாதீங்கன்னு எத்தனை முறை சொல்றது!” என்று அவள் அவன் பிடியிலிருந்து விலக முயல,
“ஏன் பேபி… பேபின்னு கூப்பிட்டா இவ்ளோ கோபம் வருது உனக்கு?!” என்றான் எப்போதும் போல்.
“சொல்லிட்டா கூப்பிட மாட்டியா?!” என்று அவள் தலைசரித்துக் கேட்க,
“ம்!” என்று தலையசைத்தான்.
“அது வந்து…!” என்று ஆரம்பித்தவள், தான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு ஆங்கிலோ இந்திய மாணவன், ‘பேபி பேபி’ என்று தன்னையே சுற்றி வந்ததையும், காதல் கடிதம் எழுதி அவளிடம் கொடுக்கும் சமயம், நிலாவுடன் படிக்கும் பெண், அதை வெடுக்கென்று பிடுங்கி, வகுப்பறைக்கே படித்துக் காட்டியதையும், அவன் பேபி பேபி என்று உருகி உருகி எழுந்தியிருந்தைக் கேட்டு அனைவரும் கேலி செய்து சிரித்ததையும், அவள் அவமானமாய் உணர்ந்து நின்றதையும் கூறினாள்.
“அன்னையிலிருந்து டிவியில எவனாவது பேபின்னு கூப்பிடுறதைப் பார்த்தாலே எரிச்சலா வருது! இதுல நீ வேற அப்பப்போ பேபி, ஹாபின்னு கிட்டு!” என்று அவள் கடுப்புடன் கூற, அவன் அடக்கமாட்டாமல் சிரித்தான்.
அவன் வயிற்றில் கைவைத்துக் கொண்டு விடாமல் சிரிப்பதைக் பார்க்கப் பார்க்க நிலாவிற்கு கோபம் பொங்கியது.
“ச்சு… போதும் நிறுத்து ரஞ்சு…! இதுக்குதான் இத்தனை நாள் உன்கிட்ட சொல்லாமயே இருந்தேன்!” அவள் சிணுங்க,
“ஹாஹா… ஹாஹா…!” என்று அவன் சிரிப்பைத் தொடர்ந்தபடி இருந்தான்.
“இப்ப நீ சிரிக்கறதை நிறுத்தறியா இல்லை நான் போகட்டுமா?!” என்று அவள் முறைக்க,
“ம் ஓகே ஓகே!” என்றவன் சிரிப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டு, “இனிமே உன்னை எப்பவுமே பேபின்னுதான் கூப்பிடுவேன் பேபி…!” என்று சொல்லிவிட்டு அவள் எழுவதற்குள், வேகமாக எழுந்து ஓடி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
“சே இவன்ட்ட சொல்லியே இருக்கக் கூடாது!” என்று புலம்பியவாரே நிலா, படுக்கையை சரி செய்தாள்.
அதன்பின் இருவரும் தயாராகி, காரில் வரும் சமயம், “ரஞ்சு இன்னிக்கு கண்டிப்பா பணம் கிடைச்சிடும் இல்ல..!” என்றாள் நிலா கவலையுடன்.
“கண்டிப்பா கிடைச்சிடும் நிலா… நாளைக்கு நீ அவங்ககிட்ட கொடுத்திடலாம் சரியா?!” என்றான் ரஞ்சு.
“ம்!” என்றவள் பள்ளி அருகே வந்துவிட காரிலிருந்து இறங்கி, புன்னகையுடன் சிறு கையசைப்போடு அவனுக்கு விடைகொடுத்தாள். அப்புன்னகைதான் அவள் அவனைப் பார்த்துச் சிந்தும் கடைசிப் புன்னகையோ!
அங்கு நிருவும், யாஷினியும், மாலையில் நடக்கவிருக்கும் தர்ஷினியின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக காலையே பஞ்சாட்சரம் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
மகளும், மருமகனும் மிகவும் சந்தோஷமாக தன் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகளை, தன் மகன், மருமகளுடன் இணைந்து செய்து கொண்டிருப்பதைக் காணும்போது பஞ்சாட்சரத்தின் மனம் நிறைந்துவிட்டது.
‘நான் பார்த்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்திருந்தால் தன் மகள் நிச்சயமாக இவ்வளவு சந்தோஷமாக இருதிருக்கவே முடியாது! உடலளவில் தான் என் மாப்பிள்ளைக்குக் குறை ஆனால் அவர் மனசு… அதுக்கு ஈடு இணையா இந்த உலகத்துல நிறைவான ஒண்ணு இல்லவே இல்லை!’ என்று எண்ணியவர்,
பர்த்டே பலூன்களை ஊதி ஒன்றாகக் கோர்த்துக் கொண்டிருந்த நிருவிடன் போய், “மாப்பிள்ளை நீங்க போய் ஓய்வெடுங்க! அவங்க இந்த வேலையெல்லாம பார்த்துக்குவாங்க!” என்றார்.
“பரவாயில்லை மாமா நம்ம வீட்டு வேலையை செய்ய எனக்கு உரிமை இல்லையா என்ன?!” என்று நிரு கேட்டதும்,
“உங்க விருப்பம் மாப்பிள்ளை! தாராளாமா செய்யுங்க!” சிறு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
முதலில் மாமனார், மருமகன் இருவரும் உறவு முறை சொல்லி அழைக்கத் தயங்கினாலும் யாஷினி, அன்று மிரட்டிய மிரட்டலில் இருவருமே இப்போது உறவு முறை வைத்து அழைக்கத் துவங்கியிருந்தனர்.
மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சமயம், நிலாவிற்கு தன் அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்ததால் அவர்கள் வீட்டிற்க்குச் சென்றாள்.
வாசலிலேயே அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த வெங்கடேசன், “நிலா… வாம்மா.. எப்படி இருக்க?! உங்க வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?!” என்று ஆசையோடு வரவேற்றார்.
“எல்லோரும் நல்லா இருக்கோம் ப்பா…!” என்று அவள் முடிப்பதற்குள் அவள் குரல் கேட்டு, வெளியே எட்டிப் பார்த்த வேணி,
“நிலா… வாடி எப்படி இருக்க?! மாப்பிள்ளை எப்படி இருக்கார்?!” என்று நலம் விசாரித்தார்.
“அவருக்கென்ன ஜம்முன்னு இருக்கார்!” என்றவள், தந்தை அருகே வந்தமர்ந்து,
“அப்பா மாத்திரை எல்லாம் சரியா எடுத்துக்கறீங்க தானே?! உடம்புக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே!” என்றாள் அக்கறையோடு.
“ஏன் ம்மா இதைதான் தினமும் போன்ல கேட்கறியே? நேர்லயும் இதேதானா?!” என்றார் வெங்கடேசன் சிரித்தபடி.
“அப்பா…!” என்று அவள் சிணுங்க, அவளிடம், சுடச் சுட பில்ட்டர் காபியை நீட்டிய வேணி,
“பக்கத்துல கல்யாணம் செய்து கொடுத்தாலும் கொடுத்தோம், பிள்ளை ரெண்டுநாள் வந்து ஆசையா வீட்ல தங்கிட்டு போகக் கூட முடியலை! எதிர் வீடுங்கிறதுனால வந்து பார்த்துட்டு ஓடிடுது!” என்று சலித்துக் கொண்டார்.
“வேணும்னா சொல்லும்மா உங்க மாப்பிள்ளையை விட்டுட்டு ஒரேயடியா இங்கயே வந்து தங்கிடறேன்!” என்றாள் நிலா விளையாட்டாக.
“ச்சு! என்ன பேச்சு பேசறடி?!” என்று வேணி மிரட்ட,
“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் ம்மா…! அவர விட்டுட்டு என்னால மட்டும் இருக்க முடியுமா என்ன?!” என்ற நிலாவிற்கு தன் காதல் கணவனின் முகம் கண்முன் தோன்றி மறைந்தது.
“சும்மா பேச்சுக்கு கூட அப்படிச் சொல்லாத ம்மா..! நீயும், உன் அக்காவும் நல்லபடியா வாழறதைப் பார்க்கிறதுனாலதான், என் உயிர் உடம்புல ஓட்டிகிட்டு இருக்கு!” என்றார் வெங்கடேசன் உணர்வு பூர்வமாக.
“அப்பா…!” என்று அவர் கையைப் பிடித்துக் கொண்ட நிலா,
“உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் எப்பவுமே சந்தோஷமாதான் இருப்போம் கவலையே படாதீங்க!” என்றாள் உறுதியாக. அவளின் உறுதி எதுவரை நிலைக்கும்?!
“சரிங்கப்பா… நான் கிளம்பறேன். நாங்க எல்லோரும் யாஷினியோட அண்ணன் மகள் பிறந்த நாள் விழாவிற்குப் போகணும்!” என்று அவள் சொல்ல,
“மாப்பிள்ளை வந்து கூட்டிட்டுப் போவாரா ம்மா..!” என்றார் வெங்கடேசன்.
“இல்லப்பா… அவருக்கு ஒரு நியூ கிளையன்ட்டோட மீட்டிங் இருக்காம்! அவர் வர லேட்டாகும் நாங்க எல்லோரும் மட்டும் இப்போ கிளம்பறோம்!” என்று சொல்லி இருவரிடமும் விடை பெற்றுச் சென்றாள்.
மாலை ஏழு மணிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் துவங்கியிருந்தது. அனைவரும் விழாவில் பிசியாக இருந்தனர். நிலா மட்டும் ரஞ்சனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
ரஞ்சன் ஓர் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தன்னுடைய புது கிளையன்ட்டுடன், ஒப்பந்தம் முடித்து, அதில் கையெழுத்திடும் சமயம் அவன் கைப்பேசி ஒலித்தது.
தன் மனைவியின் அழைப்பு என்று கண்டுகொண்டவன், அதற்கு செவிமடுத்து, “இப்பதான்ம்மா சைன் பண்ணப் போறேன் இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவேன்!” என்க,
“சரி சீக்கிரம் வந்துடுங்க..!” என்று போனை வைத்தாள் நிலா.
ரஞ்சன் அக்ரிமெண்டில் கையெழுத்திட்டுவிட்டு சிறிது நேரம் அவர்களுடன் தொழில் ரீதியாகப் பேசிக் கொண்டிருந்தான். பின் அவர்களுக்கு விடைகொடுத்துவிட்டு, தானும் கிளம்பினான்.
நேரமாகிவிட்டதே என்று அவன் சற்று வேக நடையிட்டு வர, எதிரே வந்த சர்வர் மீது, பிழையாக மோதிவிட்டான்.
அதில் சர்வர் கையிலிருந்த ஜீஸ் அவன் ரஞ்சனின் சூட்டில் கொட்டிவிட, “ஸாரி ஸாரிங்க சார்! தெரியாம….!” என்று அந்த சர்வர் முகம் வெளுத்துப்போய் திணற,
“இட்ஸ் ஓகே! நான்தான் கவனிக்காம வந்துட்டேன்!” என்றான் தனது கைக்குட்டையால் உடையைத் துடைத்துக் கொண்டே.
‘முன்பெல்லாம் சின்ன விஷயத்திற்குக் கூட கோபப் படும் இந்த சாரா இப்படி மாறிவிட்டார்?!’ என்று ஆச்சர்யப்பட்ட அந்த சர்வர், வியந்துபோய் அவனை பார்க்க,
“என்ன அப்படிப் பார்க்கறீங்க?! எப்ப இங்க வந்தாலும் சிடுசிடுன்னு எரிந்து விழுவானே அவனா இவன்னு பார்க்கறீங்களா?!” என்றான் ரஞ்சன் புன்னகையுடன்.
“ம் இ இல்லீங்க சார்!” என்று மறுத்த அந்த சர்வர், “உங்க சூட்டை கொடுங்க நான் வாஷ் பண்ணிக் கொண்டு வரேன்!” என்று மரியாதையுடன் அவனது மேல்கோட்டை வாங்கிச் சென்றான்.
அதனால் ரஞ்சன் வேறு வழியின்றி சிறிது நேரம் அங்கே காத்திருக்கும் படி நேர்ந்தது. அப்போது எதேச்சையாக, தன் எதிரே வந்து கொண்டிருந்த அந்த குடும்பத்தை கண்டான்.
நடுத்தர வயதான தம்பதியுடன் ஒரு பெண் ஏதோ பேசிச் சிரித்தபடி முன்னே நடந்து வர, அவர்களைத் தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண்ணை அவன் கணவன், தோளோடு சேர்த்தணைத்தபடி அழைத்து வந்துகொண்டிருந்தான்.
யாரையெல்லாம் இனி தன் வாழ்நாளில் எப்போதும் சந்திக்கக் கூடாது என்று எண்ணியிருந்தானோ அவர்கள் இப்போது குடும்பத்தோடு தன் எதிரே வந்து நிற்பதைக் கண்ட அவன் மனம் மிகுந்த ஆவேசம் கொண்டது.
அவர்களைக் கண்டதும் அந்த நாட்களில் நடந்த நிகழ்வுகள் தானே அவன் நினைவலைகளைத் தாக்க, அவன் முகம் ரத்தச் சிவப்பாய் மாறியது.
சிரித்தபடியே தன் தாய் தந்தையுடன் நடந்து வந்த அந்தப் பெண் கண்களில் அனல் தெறிக்க அமர்ந்திருக்கும் அவனைக் கண்டதும் சிரிப்பை மறந்து உணர்ச்சியற்றுப் போனாள்.
ஆனால் சில நொடிகளில் தன்னைச் சமாளித்துக் கொண்டவள், தன் குடும்பத்தினருடன் சேர்ந்து, ஏற்கனவே புக் செய்திருந்த மேஜையின் அருகே சென்று அமர்ந்தாள்.
அவள் முகமாறுதலை மற்றவர்கள கண்டுகொள்ளவில்லை என்றாலும் அவளின் உடன்பிறந்தவள் உடனடியாகக் கண்டு கொண்டு,
“என்னாச்சு…?!” என்று கண்களாலேயே தங்கையை வினவ, அவள் ரஞ்சன் இருந்த புறம் பார்வையைச் சுழற்றினாள்.
error: Content is protected !!