Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 27 1

                                                                                     27

     தங்கையின் பார்வை சுழன்ற திசையில் விழிகளைச் செலுத்திய அப்பெண்ணின் இதயம் ஒரு நொடி சந்தோஷத்தில் திளைத்து மறு நொடி ஆழ்ந்த துக்கத்தைத் தழுவிக் கொண்டது.

     ‘ரஞ்சி..!!!!???’ என்று மனதுள் அவன் பெயரை உச்சரித்துப் பார்த்தவள், கண்கள் ஒரு நொடி கலங்கியது.

     ஆனால் அதை யாரும் அறியா வண்ணம், கண்ணில் தூசி விழுந்ததைப் போல் அவள் துடைக்க முயன்ற சமயம், ரஞ்சன் தன் மேல்கோட்டை கூட வாங்க மறந்து அங்கிருந்து விருட்டென்று எழுந்து சென்றான்.



Advertisement

     அதை பார்த்திருந்த அந்த இருபெண்களில், சின்னவள், தன்னருகே அமர்ந்திருந்த தாய், தந்தையரிடம், “ஏக் மினிட் ரகோ!” என்று சொல்லி எழ, பெரியவள், ‘வேண்டாம்!’ என்று கண்களால் ஜாடைக் காட்டினாள்.

     ஆனால் அதையும் மீறி சின்னவள், சகஜமாக எழுவது போல் எழுந்து நடந்து, அவர்கள் கண்பார்வையிலிருந்து மறைந்ததும் நடையை வேகமெடுத்து,

     “ரஞ்சு மாமா…! ரஞ்சு மாமா…!” குரல் கொடுத்துக் கொண்டே அவனைப் பின்தொடர்ந்தாள்.

Advertisement

     அவள் குரல் அவன் காதில் விழுந்தாலும், அதைக் கேளாதவன் போல் அவன் விறுவிறுவென தன் காரை நோக்கி முன்னேறினான்.

Advertisement

     “மாமா… ப்ளீஸ் நில்லுங்க..!” என்று கத்தியபடியே ஓடி வந்தவள், அவனை நெருங்கி அவன் கைப்பிடித்து நிறுத்த முயன்றாள்.

     “லீவ் இட் சகு..!” என்றான் அவன் கோபமும், அழுத்தமும் சேர.

     “மாமா…!” என்று அவள் தயக்கத்துடன் அவன் முகம் பார்க்க,

Advertisement

     “ஐ செட் லீவ் இட்!” என்று அவன் மேலும் குரலை உயர்த்திச் சொல்ல, அவள் அரண்டு போய் அவன் கையை விட்டாள்.

     அவள் கையை விட்டதும், அவள் முகத்தைக் கூட பார்க்க மறுத்து, தன் காரில் ஏறிவன், புயலெனக் காரைக் கிளப்பினான்.

     அவன் கார் தன் கண்ணை விட்டு மறையும் வரை அதனையே வெறித்திருந்தவள், “ம்ம்ம்!” என்று பெருமூச்சுடன் சுயஉணர்வு பெற்று அங்கிருந்து நகர்ந்தாள்.

     அவள் தன் இருக்கைக்குத் திரும்பியதும், “கியா ஃவுவா ஃபேட்டி?!” என்று அவளது தந்தை வினவ,

     இனி வரும் உரையாடல்களை தமிழில் வழங்குகிறேன்.

     “என்னோட பிரெண்ட் மாதிரி இருந்தது பப்பா.. அதான் போய் பார்த்தேன். ஆனால் அவ இல்லை!” என்றாள் உள்ளதை மறைத்து.

     “ஓ! சரி உனக்கு வேண்டியதை ஆர்டர் பண்ணு ஃபேட்டி!” என்றார் அவளது தந்தை.

     ‘என்ன நடந்ததோ!’ என்று பெரியவளின் உள்மனம் அடித்துக் கொண்டாலும், அனைவரும் அங்கிருந்ததால், வாய்விட்டு கேட்க முடியாமல் அமைதி காத்தாள்.

     சகோதரிகள் இருவருக்கும் அம்மாலைப் பொழுதின் விருந்து சுத்தமாக இனிக்கவில்லை. இருவர் மனதிலும் பெறும் குற்ற உணர்ச்சியும், வருத்தமும் சூழ்ந்திருந்தது.

     அங்கு காரைச் செலுத்திக் கொண்டிருந்த ரஞ்சனும், கோபத்திலும், வேகத்திலும் தன்னை மறந்திருந்தான்.

     வீடு, மனைவி, உறவுகள் எல்லாம் மறந்து அவ்வொருவளின் துரோகம் மட்டுமே அவன் நெஞ்சை நிறைத்திருந்தது.

     ‘ஏன் ஏன் அவ என் கண்ல மறுபடியும் பட்டா?! யாரை என் வாழ்நாள் முழுவதும் சந்திக்கவே கூடாதுன்னு நினைச்சேனோ! அவ இன்னிக்கு மறுபடியும் என் கண்ணெதிரில!” என்று எண்ணியவனின் மனம் நினைக்கவே கூடாது என்று நினைத்த அன்றைய நினைவுகளை நோக்கி நகர்ந்தது.

     எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று கூட யோசிக்காமல் கண்ணில் தெரிந்த பாதையை நோக்கி காரைச் செலுத்திக்கொண்டே இருந்தான். அவன் போன் மணி ஒலித்தது ஒலித்தபடியே இருந்தது கேட்பாரற்று!

     பிறந்தநாள் விழா முடிவடைந்து வந்திருந்த உறவினர்கள் எல்லாம்  விடைபெற்றுச் செல்லவும் தொடங்கிவிட்டார்கள். ரஞ்சன் மட்டும் வரவேவில்லை.

     அவள் என்னவாயிற்றோ என்று பயந்து போய் பதட்டத்துடன் காத்திருக்க, அவள் மனம் உணர்ந்த நிரு, அவளருகே வந்து, “நிலா… இப்ப ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற?! ஏதாவது முக்கியமான வேலை வந்திருக்கும் அதான் வர முடியாப் போயிருக்கும்!” என்று சமாதானப் படுத்த முயன்றான்.

     “இல்ல… நிரு நேரமாகும்னா ஒரு போனாவது செய்து சொல்லியிருப்பானே!? நான் போன் பண்ணாக் கூட எடுக்க மாட்டேங்கறான்! எனக்கு என்னமோ பயமா இருக்குடா…!” என்றாள் கலக்கமாக.

     “ப்ச் அதெல்லாம் ஒண்ணும் இருக்காது நிலா… நீயா எதையாவது யோசிச்சு மனசைக் குழப்பிக்காத! வா வந்து சாப்பிடு!” என்று அவள் கைப்பிடித்து  அழைத்துச் சென்றான்.

     “என்னக்கா  மாமா வரலைன்னு வாசலையே பார்த்துகிட்டு இருக்கீங்களா?! ஏதாவது வேலையா இருந்திருப்பார். இல்லன்னா இந்நேரத்துக்கு வந்திருக்க மாட்டாரா?! நீங்க வந்து சாப்பிடுங்க நான் அவருக்கு போன் பண்றேன்” என்ற யாஷினி அவன் கைபேசிக்கு அழைப்பு விடுக்க, அப்போதும் அவன் அழைப்பை ஏற்கவில்லை.

     “பிசியா இருப்பாங்க போல க்கா…! எடுக்க மாட்டேங்கறார்!” என்று சொல்ல, நிலாவின் வயிற்றை பயம் கவ்வியது.

     மரியாதை நிமித்தம் பெயருக்காகச் சாப்பிட்டுவிட்டு, தங்கள் வீட்டினருடன் நிலா வீடு திரும்ப, அங்கே அவர்கள் அறையில் ரஞ்சன் தலையைப் பிடித்தபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

     ‘அப்பாடா!!’ என்றிருந்தது அவளுக்கு.

     “ரஞ்சு…!!!??? நீ இங்கதான் இருக்கியா?! எவ்ளோ முறை போன் பண்றது உனக்கு?! ஏன் போன் எடுக்கலை?! நான் எவ்ளோ பயந்து போயிட்டேன் தெரியுமா?!” என்று கேட்டபடியே அவனருகில் வந்தமர்ந்த நிலா,

     ஏதோ போலிருக்கும் அவன் முகத்தைப் பார்த்து, “ரஞ்சு… என்ன ஆச்சு..! ஏன் ஒரு மாதிரி இருக்க?! உடம்புக்கு முடியலையா?!” என்று கேட்டபடி அவன் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.

     “நார்மல் டெம்பரச்சர்தானே இருக்கு!” என்று யோசனையாய் கேட்டவள், அவன் முகம் பார்த்து, “வொர்க் டென்ஷனா ப்பா..?!” என்றாள்.

     ஆனால் அவனிடமிருந்து எந்த எதிரொலியும் இல்லை!

     “ம்ம்! சார் ஏதோ பயங்கர மூட் அவுட்ல இருக்கீங்க போல! சரி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. நான் போய் டிரஸ் சேயிஞ் பண்ணிட்டு வந்திடறேன்” என்று எழுந்து சென்றவள் உடை மாற்றி வந்த பின்னும் அவன் அதே நிலையல் இருப்பதைக் கண்டு,

     “ரஞ்சு… என்னப்பா ஆச்சு!? நியூ பிரான்ச் கட்டுற விஷயத்துல ஏதாவது பிரச்சனையா?!” என்றாள் கவலையுடன்.

     “ம்ஹும்!” என்று தலை மட்டும் மறுப்பாக அசைந்தது.

     “அதை வாயைத் திறந்து சொன்னாதான் என்னவாம்?! முத்து உதிர்ந்திடுமா என்ன?!” என்று செல்லமாய் அவனை முறைத்தவள், அவன் தோளில் சாய்ந்து அவன் மார்பைச் சுற்றிவளைத்தபடி வாகாகப் படுத்துக் கொள்ள, அப்போதும் அவனிடம் எந்த அசைவும் இல்லை.

     சிறிது நேரம் அந்நிலையிலயே இருந்தவள், சட்டென்று ஏதோ யோசனை வந்தவளாக, “பணம் எடுத்துட்டு வந்துட்டீங்களா ரஞ்சு…!” என்றாள்.

     அதுவரை அமைதியாக இருந்த ரஞ்சன், பணம் என்ற வார்த்தையைக் கேட்டதும், தன்னையறியாமல் ஆவேசம் கொண்டு, தன்னருகில் இருப்பவளைப் பற்றி நன்கு புரிந்தும், அவள் தன் உயிரின் பாதி என்பது தெரிந்தும், என்ன சொல்கிறான் என்பதைக் கூட உணராமல், வார்த்தைகளைச் சிதறவிட்டான்.

     அவள் அப்படிக் கேட்டதும், ஏற்கனவே உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருந்த கனலை தணிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த ரஞ்சன், அக்கனலை வார்த்தை ரூபத்தில் அவள்மேல் கொட்டினான். தன்னைப்பற்றியபடி தன்மேல் சாய்ந்திருந்தவளை ஆவேசத்தோடு ஒரே தள்ளாகத் தள்ளி,

     பற்களைக் கடித்தபடி, “பணம், பணம், பணம்!! சீ!! பணத்துக்காக நடிச்சிதான் நீயும் என் வாழ்கையில வந்தியாடி…??!!” என்றான் அருவருப்புடன் அவளை நோக்கி.

     அவன் தள்ளி விட்ட வேகத்தில் சோபாவின் மறுபுறம் விழுந்ததில் ஏற்பட்ட வலியை விட, அவன் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளின் வீரியம், துடித்துக் கொண்டிருக்கும் அவள் இதயத்தைக் குத்திக் கிழிப்பது போல் வலிக்கச் செய்தது.

      “எ எ என்ன..?! என்ன சொன்ன?! ப்ப ப பணத்துக்காகவா?! நானா??!” என்று கேட்டபடி நிலா அதிர்வுடன் அவனை நோக்கியதும்தான், தான் சொன்ன வார்த்தைகள் அவன் புத்திக்கு உரைத்தது.

      ‘அச்சோ!! என்ன வார்த்தை சொல்லிட்டேன் என் நிலாவைப் பார்த்து! என் நிலாவும் மத்தவங்களும் ஒண்ணா?!’ என்று தன்னையே நொந்து கொண்டவன்,

     “நிலா…. நிலா… நிலாம்மா…!” என்று அவள் கைகளைத் தன் கையில் எடுக்க முயல அதைப் பட்டென்று உதறிவிட்டவள்,

     “போதும்!” என்பதைப் போல் வார்த்தையால் அன்றி கண்ணசைவால் மட்டும் அவனுக்கு உணர்த்திவிட்டு, அங்கிருந்து விருட்டென்று எழுந்தாள்.

    வேகமாக எழுந்து சென்றவள், தன் உடைகள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் வார்ட்ரோபைத் திறந்து, அதிலிருந்து ஒரு பேக்கை இழுத்துப் போட்டுவிட்டு, விடுவிடுவென தனது உடைகளையும் எடுத்துக் கீழே போட்டாள்.

     “நிலா… என்ன பண்ற நிலா… ஏன் துணியெல்லாம் எடுத்து வைக்கிற?! ப்ளீஸ் நிலா… நான் ஏதோ டென்ஷன்ல… அப்படிச் சொல்லிட்டேன்! இருந்தாலும் அப்படி சொன்னது தப்புதான் என்னை என்னை மன்னிச்சிடு நிலா!” என்று அவன் கெஞ்சக் கெஞ்ச அதைச் சற்றும் கண்டு கொள்ளாதவள், கீழே போடப் பட்டிருந்த உடைகளைச் சுட்டிக் காட்டி,

     “இதெல்லாம் என் அப்பா வீட்ல இருந்து நான் கொண்டு வந்தது. இதை மட்டும்தான் எடுத்திட்டு போறேன்! நல்லா பாத்துக்கோ!” என்றாள் குரலில் அழுத்தம் கொடுத்து.

     அதைக் கேட்டவன் மனம் சுக்கு நூறாய் உடைய, “நிலா….?!” என்றான் வேதனை பொங்க.

     பின் துணிகளை எடுத்து பேக்கினுள் அடுக்கி, ஜிப்பை இழுத்து மூடியவள், அதனை எடுத்துக் கொண்டு வேகமாக நகர, அவளை வழிமறுத்து நின்றான் ரஞ்சன்.

     அவள் எதுவும் பேசாமல் அவனை முறைக்க, அப்பார்வையே வழியை விடு என்று மிரட்டுவது போல் இருந்தது.

     “நிலா…. ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளு… அதுக்கப்புறமும் என் மேல கோபமிருந்தா நீ எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. ஆனா தயவு செஞ்சு என்னை விட்டுட்டுப் போயிடாதா நிலா…!” என்றான் வேண்டுதலாக.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!