Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 2.2

“துவ் ண்ணா… துவ் ண்ணா ஸ்தாப்…”

பூர்வி சகோதரன் பின்னால் தன்னுடைய அழகிய பாதங்களை தத்தி தத்தி ஓடினாள். சகோதரனோ தங்கைக்கு போக்கு காட்டி அவ்வீட்டின் நீண்ட சோபாவினை சுற்றி ஓடினான்.

“பூர்வி கேட்ச் மீ…” சகோதரனுக்கும் சகோதரி வேகம் அறிந்து வேகமாக ஓடுவது போல் நடக்கவே செய்தான்.

“துருவ் கண்ணா, பாத்து மெதுவா போ ப்பா… குட்டிம்மா, கீழ பாத்து ஓடுங்க.”



Advertisement

வீட்டையே அழகிய நந்தவனமாய் மாற்றி அதில் பட்டாம்பூச்சியாய் பறக்கும் பேரன், பேத்தி இருவரையும் பார்த்திருந்த வித்யா, வயதிற்கு மீறி சுறுசுறுப்பாய் ஓடும் பேத்தியைப் பார்த்து சற்று பயம்தான் அவருக்கு.

வயதாயிற்றே, அவர்கள் பின்னால் ஓடவும் முடியவில்லை. கண்களைப் பேரப்பிள்ளைகள் மீது பதித்திருந்தவர், காதுகளை கூர்மையாக மருமகள் கூறும் ஆண்டாளின் அழகு சரித்திரத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அங்கு பூஜையறையில் வாசலில் மருமகளுக்கு எதிரில் அமர்ந்து பக்தி ரசம் சொட்ட சொட்ட கேட்டுக் கொண்டிருந்தார் ராஜேந்திரன் .

Advertisement

“இப்பத்தா வர்றா பெரியாழ்வார், பாத்தா ஆண்டாளை கானம். அழுகை வந்துத்தாம் அவருக்கு. சந்தோசம் கலந்த அழுகை. சந்தோசம் என்னனா, தன்னுடைய பெண் அடைய வேண்டியதை அடைஞ்சுட்டா.

Advertisement

ஆனா நான் உன் சரணத்தை அடையலையே… அழுறார் பெரியாழ்வார். மகாலக்ஷ்மி, போல வளர்த்தேன்.

ஒருமகள் தன்னையுன்னைய

ஒரு மகள் தன்னையுன்னைய

Advertisement

உலகம் நிறை புகழ

திருமகள் போல வளர்த்தேன்

சங்கண்மான் தான் கொண்டு போனான்

பெருமைகளை குடிவாய்ந்து

பெருமைகளை…”

மருமகளின் இன்னிசை குரலில் வரும் பாடல்கள் கூட கணீரென அவ்வீட்டையே நிறைத்தது. மெய் மறந்து ரசித்தனர் பெரியவர்கள் இருவரும்.

கண்களை மூடினால் ஆலயத்தில் இருப்பது போல் அமைதி மட்டுமே. சாம்பிராணி மணம் வீச, கற்பூர நறுமணம் காலை பொழுதின் அழகினை இன்னும் ரம்யமாக்கியது, சோர்வினை நீக்கி பக்திமயத்தில் ஆழ்த்தியது.

“உடனே ஒரு அசரீரி ஒலிச்சதாம், ‘பெரியாழ்வார், எமக்கும் ஆண்டாளுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்ல ஒரு கோவில் அமைச்சு, ஆண்டாள் வாழ்நாள்ல என்னென்ன உஸ்தவங்கள் கொண்டாடினாளோ, அந்த உஸ்தவங்கள்லாம் கொண்டாடும்படி செய்து, உலகம் பூரா கிருஷ்ண பக்தியை நிலைநாட்டி, பிறகு நீரும் என்னுடைய ஜோதில் கலப்பீராகட்டும்.’

அசரீரியின் உத்தரவின்படியே ஆண்டாள் கோவில் நிறுவப்பட்டது. பெரியாழ்வார் கிருஷ்ண பெருமானின் திருவடிகளை அடைந்தும்விட்டார்.

ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம்

ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் சரணம்

அரங்கன் திருவடிகளே சரணம் சரணம்…!”

இறைவனை மனமார கண்களை மூடி ஆரபி வேண்டியிருக்க, அடுத்த சில நிமிடங்களில் வீட்டினருக்கு துளசி தீர்த்தம் வந்தது ஆரபியின் மூலம்.

“அருமை ம்மா, எத்தனை முறை கேட்டாலும் சலிக்க மாட்டிக்கிது.” என்றார் ராஜேந்திரன் பூரிப்பாக.

“ம்மா ஆ ஆ…” என மகளும், “சித்தி இன்னும்…” என துருவ்வும், தங்கள் சிறிய கைகளை நீட்டி இன்னும் இன்னும் வேண்டி நின்றனர் அவள் முன்பு.

இருவருக்கும் சிரிப்போடு கொடுத்தவள், “எல்லாம் மாதவனோட செயல் தான் மாமா. இந்தாங்க சீரக ஜலம்.” அவர் தினமும் குடிக்கும் சீரக தண்ணீரை ஒரு கையில் கொடுத்து, மற்றொரு கையில் இன்றைய நாளிதழை ஒப்படைத்தாள்.

“அத்தம்மா உங்களுக்கு டீ போடவா, இல்ல காபியா?”

“எல்லாருக்கும் நானே போட்டுட்டேன் ம்மா, நீ பார்த்திபனுக்கு காபி கொண்டு போய் குடு. அப்போவே அவன் மேல போய்ட்டான்.” என்றார் வித்யா.

கணவனுக்காக காபியோடு ஆரபி அறையினுள் நுழைய, ஈரத்தலையை கூட சரியாக துவட்டாமல் சில காகிதங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது வேலையை ஒதுக்கி வைத்து, கோப்புகளுக்கு பதில் காபியை திணித்தவள் அவன் தலையை, தன்னுடைய புடவை தலைப்பைக் கொண்டு துவட்ட துவங்கினாள்.

இந்த நொடிக்காக தானே வேண்டும் என்றே தலையை உலர்த்தாமல் இருந்தான். மனைவி வசமாக சிக்கிவிட, கையிலிருந்த காபி கோப்பை இடம் மாறியிருந்தது. மனைவியை இடையோடு கட்டி அவள் வயிற்றில் முகம் புதைத்தான்.

“ஏன்னா நான் சமைக்கணும்.”

“ஒன்னும் பண்ணலடி, கொஞ்ச நேரம் சும்மா இரு. இன்னைக்கு அட்வான்ஸ் குடுக்க போறேன், அதான் உன்னை கட்டி புடிக்கணும் தோனுச்சு.”

கணவனது விருப்பம் புரிந்து அவன் அடர்ந்த சிகையில் அழுத்தமாய் முத்தம் ஒன்று கொடுத்தாள், “உம்ம மனசுக்கு எல்லாமே நன்னதே நடக்கும். எப்பவும் பகவான் உமக்கு துணையா இருப்பா!”

“எனக்கு உன் பகவான் எல்லாம் வேணாம், நீ போதும். இருப்பியா?”

தன் முகம் பார்த்து கேட்பவன் மீசையை திருகிவிட்டு, “எப்பவும், இந்த சரீரத்துல ஆத்மா இருக்குறவர…”

“ப்ச்… இருப்பேன், இல்ல இருப்பேன்னு மட்டும் சொல்லுடி. அது என்ன தேவையில்லாதது எல்லாம் பேசிட்டு இருக்க?”

கோவம் வந்து அவனோ அவளை முறைக்க, மனைவிக்கு சிரிப்பு, “அது என்ன ரெண்டு ஆப்ஷனும் இருப்பேன்னு தானா?”

“ம்ம்ம்… உனக்கு வேற ஆப்ஷன் வேற தருவாங்க… யு ஆர் ஸ்டக் வித் மீ ஃபார் எவர். சரி, நான் சரியா தானே பண்றேன்?” அவள் கை பிடித்து தன்னுடைய கழுத்தில் போட்டு கேட்டான்.

பார்த்திபன் முகத்தில் தெரிந்த சிறு கலக்கம் அவளுக்கு புதிது. எதையும் அலசி ஆராயாமல் செய்ய மாட்டான் பார்த்திபன். ஒரு முறைக்கு பலமுறை ஒரு செயலின் பின்விளைவுகள், அதனால் வர போகும் நன்மைகள் என அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்துவிடுவான்.

அவன் முகம் வருடி கண்கள் பார்த்தாள், “சந்தேகம் வர கூடாதே ன்னா, ரெட்டை மனசோட இருக்கேளா?”

“இல்லடி, பாப்பாக்கு சேர்த்து வச்ச மொத்த காசையும் எடுக்குறேன்…”

அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து ஆசுவாச மூச்சுவிட்டான். ஆசை தீண்டல் அல்லாது ஆறுதலை தேடிய கணவனது ஆழ்ந்த மூச்சில், மனைவி அவனது தைரியமாக மாறினாள். ஆரபியின் கைகள் கணவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டது.

“பாப்பாக்கு என்ன நாளைக்கேவா விவாஹத்துக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிப்பேள்? வயசு கெடக்குது… பூர்வி அப்பா, பூர்விக்கு கணக்கு வழக்கிலாத சொத்து சுகம் தேடி தருவா, அதை விட கல்வி அறிவு நல்லா தருவா. தருவேள் தானே?” என்றாள் மனைவி.

“ஆமாம்” என்றான் தன்னை தோள் சாய்த்தவளிடம்.

“எதை பத்தியும் யோசிக்காதேள், மண்ணுல போடுற காசும் பொன்னுல போடுற காசும் என்னைக்கும் வீணாகாது. அட்வான்ஸ் எவ்வளவு குடுக்க போறேள்?”

“ரொம்ப போட்டி இருக்கு, அதான் ஒரு சி இல்லனா ரெண்டு சி கொடுக்கலாம்னு யோசிச்சேன்.” என்றான்.

“பயம் இல்லல?”

“ம்ஹும்… அவர் ரொம்ப தெரிஞ்சவர் தான்…”

“ம்ம்ம்… செத்த பொறுங்கோ நல்ல நேரம் பாத்து சொல்றேன்.”

அறையில் இருந்த நாட்காட்டியை எடுத்து ஆராய்ந்து, அதனை பார்த்து அன்னையிடமும் அழைத்து கேட்டுக்கொண்டாள். முகம் தெளிந்து, பார்த்திபன் காபியை எடுக்க அது நீராய் ஆறியிருந்தது.

“வேணாம், கீழ வாங்கோ சூடு பண்ணி தர்றேன். பாப்பா வேற உங்கள அப்போவே தேடிட்டா.”

இருவரும் கீழே வந்த நேரம், தனக்கும் தன்னுடைய கணவனுக்கும் தேநீரை எடுத்து வந்த கமலவல்லி, பார்த்திபனைப் பார்த்து கணவனுக்கு மட்டும் கொடுத்து, “எடுத்துக்கோங்க தம்பி, சூடா தான் இருக்கு” என்றாள்.

“இல்ல அண்ணி, ஆரபி சூடு பண்ண போயிருக்கா.” என்றுவிட்டான்.

கிரிக்கு அருகில் அமர்ந்த பார்த்திபன், “ண்ணா என்ன இன்னைக்கு ஆஃபீஸ் இல்லையா?” என்றான்.

“இன்னைக்கு லீவ் பார்த்திபா”

“வெள்ளைக்கிழமை, இன்னைக்கென்ன லீவ்?”

“கிருஷ்ண ஜெயந்திடா…”

“ஓ… அதான் காலைல ஆண்டாள் புகழ் ஒலிச்சதோ வீட்டுல? ஆனாலும் உன் ஆஃபீஸ்ல தீபாவளி கூட வர சொல்லுவாங்களே?”

“இல்லடா, நான் ஆஃபீஸ் மாறிட்டேன். சொல்லணும்னு நினைச்சேன், மறந்துட்டேன். இங்க சனிக்கிழமை எல்லாம் லீவ் தான்.” என்றான் சகோதரன்.

“அப்போ இனிமேல் வாரம் வாரம் டூர் தான்…”

“டேய் சும்மா இருடா, அவ காதுல விழுந்தா ஒடனே கெளம்புன்னு சொல்லிடுவா.” கிரி தம்பியை அமைதி படுத்தினான் பீதியோடு.

“இல்ல நான் சொல்லுவேன்.”

பார்த்திபன் சிரிப்போடு வம்பிற்கு நிற்க, “கமல் தம்பிக்கும் காபி குடு.” சகோதரன் தம்பியை மாட்டிவிட்டான்.

“ண்ணா, நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்?” ரகசியமாக தம்பி அண்ணனிடம் கடிய, அங்கு ஆரபி விழி விரித்து பாலை சூடு கூட செய்யாமல் வெளியே ஓடி வர, அதற்குள் அவன் கையில் ஒரு டம்ளர் இருந்தது.

‘பாவம் தான்’ ஆரபி சிரிப்போடு அவ்விடம் விட்டு அகல,

“இன்னைக்கு மோசம் எல்லாம் இல்லடா, சுமாரா இருக்கு அமைதியா குடிச்சிடு.” என்றான் கிரி மெதுவாக.

சகோதரன் பேச்சை நம்பி ஒரு மிடறு குடித்த பார்த்திபனுக்கு புரையேறியது. “என்னாச்சு தம்பி?” என்றாள் கமலவல்லி.

“ஒன்னுமில்ல அண்ணி…” என்றவன் சகோதரன் பக்கம் சாய்ந்து, “ண்ணா, இவ்ளோ கேவலமா இருக்குறதையே சுமாரா இருக்குன்னு, அண்ணி உன்னை சொல்ல வச்சிட்டாங்களே. கிரேட் ண்ணா நீ!” சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் கிரியின் தோள் சாய்ந்து எவருக்கும் தெரியாமல் சிரித்து வைத்தான்.

“டேய் சும்மா இருடா…” கிரி, பார்த்திபனை அதட்டிய நேரம் வசந்த் வந்தான். அவனைப் பார்த்ததும் சூடாக தேநீர் வந்து வைத்தாள் ஆரபி.

“வசந்த் பிஸ்கட் எடுத்துட்டு வாயேன்.” பார்த்திபனிடம் அவன் கேட்டதை கொடுத்து தேநீரை குடிக்க, துப்பியே விட்டான்.

குழந்தைகளோடு வீட்டின் பெண்கள் இருக்க, இவர்கள் மூவரையும் கவனிக்காது அப்பொழுது தான் பார்த்தனர் அனைவரும். கிரி, பார்த்திபன் அடக்க முடியாமல் வீட்டையே சிரிப்பால் அதிர வைக்க, வசந்த் முகம் விகாரமாக இருந்தது.

“என்ன ஆரா இது, நல்ல டீ தர மாட்டியா என் தம்பிக்கு?” வசந்த்துக்கு நன்றாக புரிந்துபோனது, இந்த தேநீரை போட்டது யாரென்று.

“பார்த்தி, உனக்கு ஏன் இந்த கொலை வெறி?” பாவமாக கேட்டவன், “அண்ணி…” என்றான் வேகமாக ஆரபியிடம்.

மூவரையும் சன்ன சிரிப்போடு கடந்தவள், வசந்த் மற்றும் கிரிக்கு மீண்டும் தேநீரோடு வந்தாள்.

“ம்மா, இன்னைக்கு அட்வான்ஸ் போட போறேன் குடோன்கு. அப்பா பதினொரு மணி போல ரெடியா இருங்க, நான் வந்து உங்கள கூட்டிட்டு போறேன்.”

“நல்லது ப்பா, ஆனா நான் எதுக்கு?”

“ப்பா நீங்க வர்றிங்க, அவ்வளவு தான்.” மகன் அழுத்தமாக கூற, மறுக்க முடியவில்லை அவரால்.

“பணத்துக்கு ரெடி பண்ணிட்டியா?” மனைவி பார்வை புரிந்து தம்பியிடம் கேட்டான் கிரி.

“இல்ல ண்ணா, பண்ணிடுவேன்.”

“பண்ணிடுவேன்னு சொன்னா எப்படிடா பண்ணுவ? ஏதாவது ஹெல்ப் வேணும்னா…”

பார்த்திபன், “அப்டிலாம் ஒன்னுமில்ல ண்ணா, டைம் இருக்கு, நான் ரெடி பண்ணிடுவேன்.”

“தயங்குறியாடா? கஷ்டப்பட வேணாம் பார்த்தி, என்கிட்ட கொஞ்சம் காசிருக்கு கமல் நகை வைக்கிறேன்.”

தம்பி அசரவில்லை, “சரி, அதுவும் உனக்கு ஒரு மாதிரி இருந்தா இதை கடனா நினைச்சுக்கோ. இல்லையா ஒரு பார்ட்னர் போல நினைச்சு ஷேர்கூட குடேன்.”

உள்ளுக்குள் குடைச்சல் பல இருந்தது, சுயநலத்தின் உச்சியில் இருப்பது போல் தவிப்பு. அன்று கலங்கி நின்ற பொழுது உதவியை எதிர்பாராதே என்று உரக்க தைரியமாக கூறிய மனது, இன்று எதற்காக தயங்குகிறது?

கிரிதரனுக்கு வார்த்தைகள் கூட தெளிவாக வரவில்லை. சற்று தடுமாறி தான் போனான். சகோதரன் முகத்தைப் பார்க்காத பார்த்திபனுக்கு அவன் நிலை புரிந்தது.

தன்னுடைய கண்களைப் பார்த்து பேசும் தமையன், இப்பொழுது கண்ணை பார்க்கவில்லையே. உடனே பார்வை தங்களுக்கு எதிரே நின்ற அண்ணி மீது விழுந்தது, நொடி நேர பார்வை கமலவல்லியை அலசிவிட்டது.

அவளுக்கும் கணவன் பேசியது அதிர்ச்சி தான். இதை தன்னாலே ஏற்க முடியாது, இதில் கொழுந்தன் எங்கு ஏற்பது என்ற அதிர்ச்சி பாவனை தான். எனில், இது சகோதரன் வெகு நாட்களாக யோசித்தது என புரிந்தது பார்த்திபனுக்கு.

“ஆரபி நகையே இருக்குது ண்ணா, அவ அப்பா வீட்டுல போட்டது. ஆனா எனக்கு அதெல்லாம் வேணாம்னு தான் நான் வெளிய தேடி போறேன்.”

கிரி, “டேய் அதுக்கில்லடா ஒரு பா… பார்ட்னர் மாதிரி கூட என்ன நினைக்க தோனல பாரு உனக்கு?” சகோதரன் முடிவில் சற்று கலங்கினான். இன்னும் அன்று தான் மறுத்ததை நினைவில் வைத்து பேசுகிறானோ என்று.

“இப்போ என்ன உன்னை நான் பார்ட்னரா சேர்க்கணுமா? சரி, அடுத்த பிஸ்னஸ் ஆரம்பிக்கிறப்போ நீதான் முதல் ஷேர் ஹோல்டர் சரியா? இப்போ இதை விடு, லீவ்வ என்ஜாய் பண்ணு.”

“என்ன சொன்னாலும் நீ கேக்க மாட்டல?”

“ண்ணா இது பிஸ்னஸ், எமோஷன்ஸ்க்கு இடம் குடுக்க முடியாது, புரிஞ்சுக்கோ. என்னால முடியலைன்னா உன்கிட்ட கேக்காம எங்க போக போறேன் சொல்லு. இப்போ என்னால பணம் ரெடி பண்ண முடியும், நீ எதுக்கு தேவையில்லாம அண்ணி நகையை எடுக்கணும்?”

அதற்கு மேல் யாராலும் பார்த்திபனிடம் பேச முடியவில்லை. கமலவல்லியின் பார்வை ஒப்பவில்லை மனதிற்கு.

அதைவிட தன்னுடைய மகளுக்கென சேமித்த பணத்தை எடுத்து, உபயோகிக்கும் தேவையின் பலன் லாபமோ, நஷ்டமோ முழுதாக தன்னையே, தன்னுடைய குழந்தையையே சேர வேண்டும் என்பது அவன் எண்ணம்.

“ஏன் பார்த்திபா, அதான் கிரி சொல்றான்ல…”

அன்னை வித்யா பேசும் பொழுதே பார்த்திபனின் கைப்பேசி அலற எடுத்து பேசியவன் செவிகளில் விழுந்த செய்தியில் ஸ்தம்பித்து போனான்.

 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!