நாணல் – 11.1
கல்யாண வேலைகள் மிக மும்முரமாக நடந்துக்கொண்டிருந்தது அந்த பெரிய மண்டபத்தில். உறவுகள் பெரும்பாலும் வந்த வண்ணம் இருக்க இறுதியாக அனைத்தையும் பார்வையிடும் பொறுப்பு அனாயாவிற்கு. விசேஷங்களுக்கு சென்று அலகாரத்தினை பார்த்து திருத்தம் கூறிய நாவிற்கு இன்று தான் அதற்கு பின்னிருந்த வேலை புரிந்தது.
இரவு இருந்ததிற்கு முற்றிலும் மாறான அலங்காரம். விடிய விடிய வேலை நடந்தது. ஸ்ரீனி, பார்த்திபன் இருவரும் அவளை அனுப்ப துடித்தனர். பெண்ணோ முடியவே முடியாது என்றுவிட்டாள்.
அதிகபடியாக ஒரு மணி நேரம் உறங்கியிருப்பாள். பெரிய இடம், கறாரான பார்ட்டி என பார்த்திபன் சொல் கேட்டு தனக்கு வந்த முதல் வேலையை அதீத பொறுப்போடு செய்கிறாள்.
இரண்டாவது காரணம் வீட்டிற்கு செல்ல பிடிக்கவில்லை. அதற்கு இதுவும் ஒரு சாக்காக அமைந்துவிட பிடித்துக்கொண்டான். ஒரு மணி நேரத்திற்கு முன்பே பார்த்திபனும் வந்துவிட்டான். அனைத்து வேலைகளும் முடிந்த நிலை தான்.
Advertisement
விளக்குகள் ஒளிர்வித்து அதனை சரிபார்ப்பது மட்டும் தான் மீதம்.
“அனாயா நீ கெளம்பு” ஸ்ரீனி வந்தான், “வெளிய நம்ம வண்டி இருக்கு” என்று.
“இல்ல நான் இருக்கேன். கல்யாணம் பாத்துட்டு போறேனே” என்றவள் ஆசை புரிந்து சரி என்றுவிட்டான் ஸ்ரீனி.
Advertisement
“டேய் புது மாப்பிள்ளை நீ எங்கடா இங்க?” தனக்கு பின்னால் அமர்ந்திருந்த பார்த்திபன் குரல் கேட்டது.
Advertisement
“இனி தானே பொண்ணே பாக்க போறேன். அதுக்குள்ள ஏன்டா?”
தனக்கு நேர் பின்னே இருந்து வந்த விஷ்ணுவின் குரலில் அனாயாவின் உடலிருந்த அத்தனை ரோமங்களும் சிலிர்த்து நிற்க, அவன் குரலின் வெக்கம் அவளை அடியோடு கொன்றது. ஆக, அன்று அவன் தன்னை தவிர்ப்பதற்காக தான் நாளையே பெண் பார்க்க போவதாக கூறினானா? வலியில் துடித்தது காதல் கொண்ட மனம்.
“உங்கள யார் ண்ணா இங்க வர சொன்னது, ஜம்முனு ரெடியாகி வந்தா தான அண்ணி உங்கள பாத்து அழகுல மயங்குவாங்க” தன் பங்கிற்கு ஸ்ரீனியும் விஷ்ணுவை கலாய்த்தான்.
Advertisement
“டேய்…” மேலும் வெட்கம் தான் பெரியவனுக்கு, “ஸ்பீக்கர் எல்லாம் சரியா எடுக்குறாங்களானு பாக்க வந்தேன். தெரியாம வந்துட்டேன்டா. பார்த்தி வேகமா வாடா” வந்த வேகத்தில் சென்றும்விட்டான்.
“இவர் என்ன அத்திம்பேர் கல்யாணத்துக்கு முன்னாடியே இப்டி வெக்கபடுறார்” சென்றவனை பார்த்து ஸ்ரீனி சிரிப்போடு கேட்க பார்த்திபன் பார்வையோ உடல் இறுகி அமர்ந்திருந்த அனாயாவை பார்த்து மௌனம் ஆகியது.
பார்த்திபனும் அதன் பிறகு நகர்த்திருக்க, “இப்போவாவது கெளம்பலாமே நீ” என்றான் ஸ்ரீனி.
சரி என்றவள், “விஷ்ணு சார் பொண்ணு… பொண்ணு பாக்க போறாங்களா?” சிரமப்பட்டு கேட்டுவிட்டாள்.
அவள் மாற்றத்தை கவனிக்காதவன், “ஆமா அனாயா பட்டீஸ்வரர் கோவில்ல தான் பொண்ணு பாக்க போறாங்க… மனுஷன் முகத்துல சந்தோசத்தை பாக்கணுமே நீ” என்றான் சிரித்தபடியே. அடுத்து அவள் நின்றது அதே பட்டீஸ்வரர் கோவிலில் தான்.
அனாயா வந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியது. கோவிலின் நுழைவாயிலின் எதிரில் அமர்ந்தவள் அயர்ந்து தவம் கிடந்தாள். முடியவில்லை.
இரண்டு நாட்களாக சரியான தூக்கமின்றி உடல் ஒரு பக்கம் பாடாய் படுத்த மனமோ அதற்கு மேல் தவித்தது. குறுகுறுக்கும் மனதின் செய்தி உணர்ந்து கண்களை திறக்க அந்த தவிப்பை மேலும் அதிகரிக்க அவள் என்றும் பாராத அழகோடு கோவிலின் உள்ளே நுழைந்தான் விஷ்ணு உறவுகள் சூழ.
அடர் பச்சை நிற சட்டையை டக் இன் செய்து, பழுப்பு நிற காற்சட்டையும் அணிந்து வந்தவனை பார்த்து கண்ணை வேறு எங்கும் திருப்ப முடியவில்லை.
நீ வேண்டவே வேண்டாம் என்றவனை இத்தனை காதலித்திருக்க கூடாது என்றது மனம். என்ன செய்வது, என்றேனும் ஒரு நாள் திரும்பி பார்ப்பான் என எண்ணி தானே அவளும் ஆசையை வளர்த்தது. அதெல்லாம் வெறும் கற்பனையில் மட்டுமே நிகழும் என விதி அவள் முகத்தில் அறைந்து விழிக்க வைத்தது. இதோ முன்னே நிற்கும் இது தான் நிஜம்.
மகிழ்ச்சி ததும்பியது விஷ்ணு முகத்தில். அவனோடு ஒரு பக்கம் பார்த்திபன், மறு பக்கம் விஷ்ணுவின் சகோதரன் என இரண்டு பக்கமும் கேலியோடு இடையிடையில் வெட்கத்தோடு கேலி செய்பவர்களை கெஞ்சிக்கொண்டு வந்தான்.
அனாயாவை தாண்டி அவர்கள் அனைவரும் உள்ளே செல்ல தன்னை போல் அவன் பின்னே நடந்தாள் பெண்ணும். அவனுக்கு அந்த பெண்ணை பிடித்துவிடுமோ? பிடித்தால் பிடிக்கட்டுமே…
இந்த பெண்ணை அவனுக்கு பிடிக்காவிடிலும் உன்னை அவனுக்கு ஒரு நாளும் பிடிக்காது தானே.
அவர்கள் செல்லும் திசையெல்லாம் அவள் கண்களும் சென்றது. ஒரு இடத்தில் நின்று அயராது அவனை உரிமையோடு கண்களில் நிரப்பிக்கொண்டாள்.
பெண் பார்க்கும் படலம் சிறப்பாக நடைபெற்றது. அழகு பதுமை போல் விஷ்ணுவை முதல் பார்வையிலே அந்த பெண்ணும் வீழ்த்திவிட்டாள். இரு வீட்டினருக்கும் சம்மதமாய் பட, விஷ்ணுவும் அந்த பெண்ணும் தனியே சென்று பேச,
அவன் முகத்தில் இருந்த சிரிப்பு இனி உனக்கு அவன் வாழ்க்கையில் இடமில்லை என்பதை அழுத்தமாய் அனாயாவிற்கு சுட்டி காட்ட, மறைவாக அந்த கல் மண்டபத்தில் அமர்ந்து மௌனமாக கண்கள் மூடி கண்ணீர் வடித்தாள்.
சுற்றம் மறந்து, சுயம் துறந்து சுய கழிவிரகத்தில் தத்தளித்தது பெண். தன் அருகே அரவம் உணர்ந்து கண் விழிக்க முன்பு பார்த்திபனும், ஆரபியும் நின்றனர். ஆரபி முகத்தில் வருத்தம் அதிகமிருக்க, பார்த்திபன் வழக்கம் போல் உணர்ச்சி துடைத்து நின்றான்.
“விஷ்ணுவ பாக்க வந்தியா அனாயா?” கேட்டுவிட்டான் நேரடியாக.
ஆரபி கணவனை முறைத்து, “பார்த்தி என்ன இது?” என்றாள்.
“இல்ல ஆராமா… இது ரெண்டு பேருக்குமே பிரச்சனைல தான் வந்து முடியும். அவளும் ஒரு இடத்துக்கு வாழ போகணும்ல” என்றான் எதார்த்தத்தை எடுத்து.
“அதுக்குன்னு இப்படியா?” கண்டித்து அனாயாவிடம் மண்டியிட்டு அமர்ந்தாள், “சாரி ம்மா அவர் அவசரப்பட்டுண்டார். நீ அண்ணாவை பாக்க தான் வந்தியா?” மீண்டும் கண்களை மூடி தூணில் சாய்ந்து அமர்ந்தவள் கண்ணீர் கன்னத்தை அதிகமாகவே நனைத்தது.
பதறிய ஆரபி அவள் கைப் பற்றி தட்டி கொடுக்க, கண்ணை வேகமாக துடைத்து, “சாரி க்கா…” தயங்கி பிறகு, “அக்கா சொல்லலாம்ல?” ஆரபி அவள் கையை ஆதூரமாக வருட மேலும் தொடர்ந்தாள்.
“எனக்கு அவரை ரொம்ப புடிக்கும்” அனாயா பார்வை தூரத்தில் நின்ற விஷ்ணுவை தொட்டு மீண்டது.
“காரணமே இல்லாம புடிச்சது. நேர்மையும் உழைப்பும் இல்லாத ஆளுங்க மத்தியில வாழ்ந்துட்டு, அவரை மாதிரி ஒருத்தர் மேல ஆசை வந்து அவர் கூட வாழணும்னு நினைச்சது தப்பில்லையே க்கா?” என்றவள்,
“ஆனா நான் கண்டிப்பா உங்க ஃப்ரண்ட் வாழ்க்கைல என்னைக்கும் தலையிட மாட்டேன் சார்” உறுதியாக பார்த்திபனிடம் கூறினாள்.
“அவர் இன்னொருத்தருக்கு சொந்தமாக முன்னாடி அவரை பாக்கணும்னு ஆசைப்பட்டு தான் வந்தேன்” என்ன முயன்றும் அவன் பக்கம் செல்லும் பார்வையை மட்டும் தடுக்க முடியவில்லை.
அதை உணர்ந்த பார்த்திபன், “நான் உன்ன தப்பு சொல்ல வரலமா. அவனுக்கு உன் மேல ஆசை வருமான்னும் சொல்ல முடியாது. ப்ராக்டிகலா உங்க ரெண்டு குடும்பத்துக்கும் செட் ஆகாதுன்னு அவன் யோசிக்கிறான். பிடித்தம் ரெண்டு பக்கமும் வேணும், அதே நேரம் நிம்மதியான வாழ்க்கை வேணும்னு அவன் நினைக்கிறான் ம்மா”
பார்த்திபன் பேச்சை கேட்டு தலையை ஆட்டினாள், “ரொம்ப சந்தோசமா இருக்கார்ல க்கா?” தன்னுடைய கேள்விக்கு தானே தலையை ஆட்டி, “உண்மை தான் என் கூட இருந்தா இந்த சந்தோசம் எல்லாம் அவருக்கு கெடைக்காது. பாவ மூட்டையை அளவுக்கு அதிகமா தோள்ல சுமந்து நிக்கிறேன்.
ஒரு நாள் ஒரு பொழுது ஆர்வத்துல கூட அவர் பார்வை என் மேல பட்டது இல்ல. அப்பயே புரிஞ்சிருக்கணும் நான். தேவையில்லாம ஆசைப்பட்டு ஆசையை வளர்த்து… ம… மனசு ரொம்ப வலிக்கிது” கேவல் ஒன்று அடி தொண்டையிலிருந்து வெடிக்க முகத்தை மூடி தேம்பி அழுதாள்.
அவளது அழுகையை பார்த்து ஆரபிக்கும் கண் கலங்க இளையவள் தோள் அணைத்து முதுகை வருடி ஆதரவு கொடுக்க முயன்றாள். எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது.
“கல்யாணம், குழந்தை-னு திரும்பி வர முடியாத தூரத்துக்கு கற்பனைலயே போய்ட்டேன்… அவரை மறக்க முடியாதே க்கா. ஏன் க்கா இப்படிப்பட்ட குடும்பத்துல பொறந்தேன்? மனசுக்கு புடிச்சதை செய்ய கூட என் குடும்பம் தான் தடையா நிக்கிது, இதுல நான் எங்க தப்பு பண்ணேன்? எதுக்கு எனக்கு இந்த தண்டனை?”
தன்னுடைய தோளில் சாய்ந்து தன்னை கட்டி அழுகும் பெண்ணிடம் என்ன ஆறுதல் கூறவென்று தெரியவில்லை ஆரபிக்கு, கணவனை கண்ணீரோடு பார்த்தாள் ஏதாவது செய்ய முடியுமா என்ற கேள்வியோடு.
தலையை திருப்பி தன்னுடைய பதிலை கொடுத்தவன் அவ்விடத்தை விட்டு அகன்று தண்ணீரோடு வந்தான். அதனை வாங்கி அனாயாவிற்கு ஆரபி கொடுக்க தண்ணீரை குடித்து,
“சாரி ஒரு வருத்ததுல ஏதேதோ பேசிட்டேன். இங்க நிக்கிறது காரணம் கூட உண்மைய என் மூளை ஜீரணிக்கணும்னு தான்.. ப்ளீஸ் நீங்க போங்க, என்னால யாருக்கும் எந்த பாதிப்பும் வராது” வம்படியாக இருவரையும் அனுப்பிவைத்தாள்.
அந்த பக்கம் இருவீட்டினருக்கும் முழு சந்தோஷமாகிவிட நல்ல நேரம் கடந்திருந்த காரணத்தினால் ஒரேடியாக பூ வைப்பதை ஐப்பசி மாதம் செய்திடலாம் என்ற முடிவோடு வெறியேற, தன்னிலை மீட்க இயலாமல் அதே இடத்தில் தத்தளித்தாள் அனாயா.
பார்த்திபன் கூறிய வேறு வாழ்க்கை என்பதை நினைக்கவே கசந்தது. இவனோடு தான் வாழ்க்கை என இரண்டு வருடங்களாக மனதில் அழுத்தி அழுத்தி எழுதிவிட்டாள், இனி எங்கு சென்று அதனை மாற்றி அமைப்பது?
விதியின் சதி தான் எத்தனை கொடுமையானது. காதலில் அவனை நெகிழச்செய்து அதன் பலனாய் இனிமையான வாழ்க்கையை வேண்டி வாழலாம் என இறுமாப்போடு சுற்றி திரிந்தவளை ஒரே மாதத்தில் வேரோடு சாய்த்து தேற்றுவாரின்றி அழுக வைத்துவிட்டதே. மனிதனை போல விதிக்கும் இதயம் கல்லாகி தான் போனது.
கோவில் சென்று வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த ஆரபிக்கு மனமே சரியில்லை. அனாயா அழுகை, தவிப்பு, வருத்தம், மன குமுறல் என யோசிக்கவே மனம் பாடாய்ப்பட்டது. அனைவரும் சென்ற பிறகு பார்த்திபன் அவ்விடம் விட்டு அகலவில்லை.
ஏனோ அனாயாவை விட்டு தனியாக வர அவளது கண்ணீர் அனுமதிக்கவில்லை. தூரம் நின்று அவள் சென்ற பிறகு நாம் கிளம்பலாம் என்றான்.
“இப்டி தள்ளி நிக்கிறதுக்கு அவாளுக்கு ரெண்டு ஆறுதல் வார்த்தை சொல்லலாமோன்னோ” அனாயாவை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்த ஆரபியின் கை பிடித்து தடுத்துவிட்டான்.
“நாம போய் பேசுறது ஏதாவது ஒரு வகைல அவளுக்கு நம்பிக்கை குடுக்க வாய்ப்பிருக்கு ஆராமா” என்றுவிட்டான். அதன் பிறகு எங்கு அவளை நெருங்குவது? அமைதியாக நின்றுவிட்டாள்.
இப்பொழுது கிளம்புவாள் அப்பொழுது கிளம்புவாள் என எதிர்பார்க்க நகரவே இல்லை. இரண்டு மணி நேரங்கள் அசையாமல் கண் மூடி சுருங்கிய முகத்தோடு முற்றும் சோர்வடைந்து இருந்தவளை கோவிலில் இருந்து வம்படியாக வெளியே அனுப்பி வைக்கவும் தான் நகர்ந்தாள். அவள் செல்லவும் தான் இவ்விருவரும் வீட்டிற்கு பயணப்பட்டனர்.
“ஏன்னா நீங்க கொஞ்சம் விஷ்ணு அண்ணாகிட்ட பேசுறேளா? அவா படுற பாட்ட பாக்க மனசு தாளல”
“அவன்கிட்ட எல்லாம் பேச முடியல ஆரபி. அவன் விருப்பம் இல்லனு சொல்றான்”
“ஏன்வாம்?”
“என்னடி ஏன்வாம்?” கோவமாக கேட்டவன், “அவனுக்கு புடிச்சா தானே அவன் என்ன ஏதுனு பாப்பான்?”
ஆரபி, “நேக்கும் அதான் ஆரம்பத்துல உங்கள புடிக்கல. அப்றம் புடிச்சதோன்னோ”
பார்த்திபன், “ஏய் மாமி…”
“சும்மா இடக்கா பேசாதேள். நான் என்ன எடுத்த எடுப்புலயே உங்களுக்கு ஓகே சொல்லின்டேனா? இல்லைல்ல?”
“ஹே அதுவும் இதுவும் வேற வேற ஆரா. உனக்கு என்ன புடிச்சது, என்னக்கு உன்ன புடிச்சது”
ஆரபி, “நேக்கு உங்கள எப்படி புடிச்சதுனு தெரிஞ்சது? நான் ஒரு நாள் திரும்பி கூட பாத்தது இல்லையே”
குறுஞ்சிரிப்பு பார்த்திபனிடம் அந்த நாட்களின் நினைவில், “பாத்தா தான் பிடித்தமா? நான் அங்க தான் இருக்கேன், தினமும் உன்ன தான் பாக்குறேனும் தெரிஞ்சும் நீ டெய்லி அதே கோவிலுக்கு வந்தியே ஆராமா அதை விடவா எதுவும் உன்னோட எண்ணத்தை சொல்லிடும்?”
ஆரபி, “ம்ம்ம் பாய்ண்டுக்கு வந்தேளா… அதை தான் நானும் சொல்றேன். அண்ணாக்கு அந்த பொண்ணை ஏதோ ஒரு வகைல புடிச்சிருக்கு”
பார்த்திபன், “புடிக்க எல்லாம் செய்யல. அந்த பொண்ணா கற்பனை பண்ணி வாழுறா. ரொம்ப நாளா ஆபீஸ் வெளிய, ஜிம், இப்டி எங்க எங்க போனாலும் அதிகம் அவன் பின்னாடி அவளை பாத்து நானே கேட்ருக்கேன். எதுவும் சொல்லாம பேச்சை மாத்திடுவான். சரி இந்த பொண்ண பாக்க போறப்போ திரும்ப கேட்டப்ப தான் சொல்றான். அந்த பொண்ணோட தாத்தா தான் இவங்க சொத்தை ஏமாத்தி வாங்கிருக்கார்”
“என்னன்னா சொல்றேள்…” அதிர்ந்து கணவன் பக்கம் முழுதாக திரும்பி அமர்ந்தாள்.
அவளிடம் தலையை ஆட்டி, “விஷ்ணு சொல்றதும் கூட எனக்கு நியாயமா தான் படுது ஆராமா. அவங்க குடும்பம் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க. இனிமேலாவது நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுறான். அந்த பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா அதோட முடியுமா அந்த பிரச்சனை?
அவ தாத்தா வீட்டுக்கு வருவார் போவார், அந்த குடும்பத்தோட நிலைமையை யோசி. சரி அவங்கள விடு, அந்த பொண்ணுக்கு அவ தாத்தா வந்தா மனசு என்னென்ன யோசிக்கும்? நிம்மதியா தலையை தூக்கி எல்லார் முன்னாடியும் நிக்க முடியுமா? எல்லாத்தையும் யோசிச்சு தான் அந்த எண்ணத்துக்கே அவன் போகல”
ஆரபி, “நீங்க சொல்றதை பாக்குறப்போ அண்ணாக்கு அந்த பொண்ணு மேல ஏதோ ஒரு பீல் இருக்குது”
பார்த்திபன், “ஆராமா கடிச்சு வச்சிடுவேன். ஏதாவது உலராத”
ஆரபி, “இல்ல பார்த்தி. அண்ணாக்கு அந்த பொண்ண ஏதோ புடிச்சிருக்கு. அவ தாத்தா விசியம் கேள்வி பட்டுண்டு தான் தன்னோட முடிவை மாத்திருக்கா” என்றாள் ஆணித்தரமாக.
“அப்டி இருக்கறவன் எதுக்கு இன்னைக்கு பொண்ணு பாக்க வரணும்?” எதிர்கேள்வி கேட்டு ஆரபியை அமைதியாக்கினான் பார்த்திபன்.
சற்று தயங்கியவள், “உங்க ஃப்ரண்டுக்கு உங்கள மாதிரியே பிடிவாதம் அதிகம். அதையும் மீறி கோவம் நிகித்தே. வேணும்னே ஆசையை மறைச்சு இப்டி பொண்ணு பாக்க வந்துருப்பார்”
பார்த்திபன், “போடி. அவனும் கேக்க மாட்டான், நீயும் புரிஞ்சுக்க மாட்ட” என்றவன் ஒரு உணவகத்தின் முன்பு வாகனத்தை நிறுத்தி மனைவியை பார்த்து சிரித்தான், “லாஸ்ட் டே ஆராமா… ஒரு தந்தூரி மட்டும் சாப்டுட்டு போகலாமா?” பற்களை காட்டி கணவன் சிரிக்க, மனைவிக்கும் தன்னை போல் அந்த சிரிப்பு ஒட்டிக்கொண்டது.
******
