Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Isaiyindri ennaven

இசையின்றி என்னாவேன் 11(1)

தமிழ் வீட்டிற்கு வந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, டிவி சிரியலில் மூழ்கிப்போயிருந்தார் கலைவாணி. ஏதும் பேசாமல் அவரருகே சென்று அமர்ந்தவன் அகத்திற்கு ஆறுதல் தேடும் விதமாக அன்னையின் மடியில் தலைசாய்த்துக் கொண்டான்.

கலை அவன் தலையை மென்மையாய் கோத, ஏனோ அன்னையின் ஸ்பரிசத்தில் அழுகையாய் வந்தது தமிழுக்கு. என்றோ அவருடன் இட்ட சின்ன சின்ன சண்டைகள், உதாசினம் செய்ததையெல்லாம் நெஞ்சம் நினைவு கூர்ந்து வருந்தியது.



Advertisement

அவன் நெருங்கிய வட்டத்திலேயே எழில் இசை என இருவருக்கும் அம்மா இல்லை, இவர்களை போல் எத்தனை பேர் இருப்பார்கள் என சிந்தத்தவன் அந்த வகையில் தான் எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று எண்ணிக் கொண்டான்.

இன்னிசையின் ஏக்கமும் அழுகையும் அவனை அந்த அளவிற்கு சிந்திக்க வைத்தது.

Advertisement

Advertisement

தன் அழுகையை மறைக்க நினைத்தவன் அன்னையின் மடியில் முகத்தை புதைத்துக் கொள்ள அவன் செயலில் சீரியலிலிருந்து மகனிடம் பார்வையை திருப்பிய கலைவாணி, “எங்க டா எரும சுத்தீட்டு வர?” என்று அதட்ட அவரின் இயல்பான பேச்சில் அதுவரையிருந்த இறுக்கம் நீங்கி தமிழின் இதழ்கள் புன்னகை பூத்தது.

“ஃபிரண்ட்ட பார்க்க போனே கலை” என்றவன் அவரை பார்த்து கண்களை சுருக்கி புன்னகைக்க “ஏன் மூஞ்சியெல்லாம் டல்லா இருக்கு?” என அவன் முகத்தை ஆராய்ந்தார் கலைவாணி.

Advertisement

அன்னை கண்டு கொண்டதில் சுதாரித்தவன், “அப்படியா.. இல்லையே நான் எப்பவும் போல தான் இருக்கேன்..”.

“பொய் சொல்லாதே டா..” கலை அதட்டதவும் தமிழ் அமைதியாகிவிட

“என்ன அந்த எழில் பையல பாக்க தான போயிட்டு வந்த.. ஏன் திரும்பவும் ரெண்டு பேரும் சண்ட போட்டீங்களா?”

“அதெல்லாம் இல்ல ம்மா..” என்ற தமிழின் பேச்சில் கலை அவனை நம்பாமல் பார்க்க “நெஜமாவே ஒன்னு இல்ல..” என சிரிப்புடன் அவர் கன்னத்தை கிள்ளினான்.

“நடிக்காத டா..” என அவன் கையை தட்டிவிட்டவர் இருக்கையிலிருந்து எழ, “எங்க ம்மா போற..” என‌ அவர் பின்னே சென்றான்.

“உனக்கு காபி குடுக்க தான்..” என்றவர் கிட்சனுக்குள் நுழைய காபி குடிக்கும் மனநிலையில் இல்லாதவன், “அதெல்லாம் வேண்டாம் ம்மா.‌.” என்றான்.

“என்ன வேண்டாம்?.. ஆல்ரெடி போட்டு வச்சாச்சு.. சூடு தான் பண்ண போறேன்.. வேஸ்ட் பண்ணாத” என மீண்டும் அதட்ட இதற்கு மேல் சொன்னால் கேட்கவா போறார் என நினைத்தவன் சரியென்றான்.

கலைவாணி காபியை சூடு செய்ய அன்னையின் அருகே சென்று அவர் தோள் சாய்ந்து நின்றவன், “சாரி ம்மா..” என்றான் மனதார உள்ளத்தில் ஆழத்திலிருந்து.

“எதுக்கு டா..?”

“சொல்லனும்னு தோணிச்சு..” என்று தமிழ் புன்னகைக்க மகனின் தெளிவில்லா கலங்கிய முகத்தை கண்டு சலனம் கொண்டவர், “என்னாச்சு இனியா?” என கவலையுடன் கேட்டார்.

“ஒன்னுமில்ல ம்மா.. சும்மா தோணிச்சு” தமிழ் மழுப்ப “இல்ல நீ சரியில்ல.. ஏன் ஒரு மாதிரி இருக்க? ஏதாவது பிரச்சனையா?” கேள்வி கேட்க தொடங்கிவிட்டார் கலைவாணி.

“ஐயோ.. ஒரு பிரச்சினையுமில்ல நான் நல்லா தான் இருக்கேன்..” என்றவன் “காபி ரெடிய?” என பேச்சை மாற்ற சூடான காபியை டம்ளரில் ஊற்றி அவனிடம் குடுத்தவர், “என்னமோ இருக்கு.. கேட்டா மட்டும் நீ சொல்லவா போற” என குறைப்பட்டு கொள்ள

“ஒன்னுமில்ல ம்மா.. ஏதாவது பிரச்சனையா இருந்தா உங்கிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்ல போறேன்” என்றவன் அன்னையை சமாதானம் செய்து மேலும் அவருடன் ஓர் அரைமணி நேரம் அரட்டை அடித்துவிட்டு அவர் இயல்பான பின்பே தன் அறைக்கு சென்றான்.

குளித்து உடை மாற்றி வந்து கட்டிலில் சரிந்தவனின் மனதை மீண்டும் முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தாள் இன்னிசை. அவள் அழுகை வேறு கண்களுக்குள்ளேயே நின்று அவனை இம்சித்தது.

அவளுடனான உரையாடலில் இசை அவனுக்கு ஏதாவது அறிவுரை கூறினால் கூட ‘இவளுக்கென்ன சுலபமாக சொல்லிவிட்டாள்.. என் இடத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே என் பிரச்சனைகள் என் உணர்வுகள் புரியும்’ என நினைத்தவன் அவள் வாழ்வில் இப்படியொரு பேரிழப்பு இருக்குமென நினைத்ததில்லை. அவளும் இதுவரை சொன்னதில்லை.

அதைவிட இவள் இதையெல்லாம் எப்படி கடந்த வந்தாள் என்பதே அவன் மனதில் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. தமிழ் அறிந்தவரை இசை சாதுவானவள் மனதளவில் மிகவும் மென்மையானவள் சிறிய சிறிய விஷயத்திற்கு கூட அதிகமாக சிந்திப்பாள் வருந்துவாள். அப்படிப்பட்டவள், முழுமையாக இல்லையென்றாலும் இதை கடந்து வந்ததே வியப்பாக தான் இருந்தது அவனுக்கு.

தமிழால் பேச்சிற்கு கூட தன்னை அவளிடத்தில் வைத்து பார்க்க முடியவில்லை.

அவளை சுற்றியே எண்ணங்கள் ஒட அதற்கு மேல் தாங்காமல் அவளை தொலைபேசியில் அழைக்க அதுவோ அனைத்து வைக்கப்பட்டதாக வந்தது.

“ஸ்விச்ட் ஆஃப்னே வருதே.. வீட்டிற்கு போயிட்டாளா.. இன்னும் அழுதுட்டு இருக்காளோ.. என்ன மைண்ட் செட்ல இருக்கானு ஒன்னும் தெரியல” என புலம்பியவனுக்கு அதன் பிறகு வேறு எதிலும் மனம் லயக்கவில்லை, இசையையே சுற்றிக் கொண்டிருந்தது. அவளுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனான்.

கலைவாணி இரவு உணவுக்கு அழைக்கவும் சாப்பிட சென்றவனுக்கு, “இசை சாப்பிட்டிருப்பாளா? என்ன செய்து கொண்டிருக்கிறாள்?” என்ற கேள்விகளே மனதில் ஓட உணவும் உள்ளிறங்கவில்லை, சாப்பாட்டை அளந்து கொண்டிருந்தான்.

“சாப்பிடாம என்ன யோசனை?” என்ற கலையின் துளைக்கும் பார்வையில் சுதாரித்து கொண்டு சாப்பாட்டில் கவனம் செலுத்தியவன் வேகமாக தன் உணவை முடித்துவிட்டு அறைக்கு திரும்பியதும் மீண்டும் இசையை தொடர்பு கொள்ள முயற்சிக்க அது அனைத்து வைக்கப்பட்டதாகவே வந்தது.

நேரம் செல்ல செல்ல இசை அழைப்பை ஏற்காதது தமிழுக்கு பயத்தை கொடுக்க தூக்கம் தொலை தூரம் சென்றிருந்தது.

இவன் உறக்கத்தை திருடியவளோ நித்திரை தேவியின் மடியில் நிம்மதியான உறக்கத்திலிருந்தாள்.

விடியும் தருவாயில் துயில் கொண்டவன் காலை கண்விழித்ததும் முதல் வேளையாக இன்னிசையை தொடர்பு கொள்ள அப்போதும் அது அனைத்து வைக்கப்பட்டதாகவே வர உள்ளுக்குள் உதறல் எடுக்க தொடங்கியது தமிழுக்கு. மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைத்துக் கொண்டே இருந்தான்.

மதியத்தை கடந்தும் இசையை தொடர்பு கொள்ள முடியாமல் போக பொறுமையிழந்தவன், எழிலை பார்க்க கிளம்பிவிட்டான்.

————————————

“வா டா இனியா..” தமிழை வரவேற்று அவனுக்கு தண்ணீர் கொடுத்த கோபால் “பிரியாணி செஞ்சேன் டா.. உனக்கு புடிக்கும்ல எடுத்து வைக்கட்டா?” என கேட்க “இல்ல ப்பா கொஞ்ச நேரம் ஆகட்டும்” நாசுக்காக மறுத்தவன், “எழில் எங்க?” என தேட “உள்ள தான் இருக்கான்” என அறையை காட்டினார்.

“சரி ப்பா..” என்றவன் அறைக்குள் நுழைய, எழிலும் விதுரனும் ஏதோ கேம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

தமிழை கண்டதும், “வா டா” என்ற எழில் மீண்டும் கேமில் கவனமாகிவிட விதுரனும் “வாங்க ண்ணா” என்று வரவேற்றான்.

தமிழ் அவனருகே வந்து அமரவும், “என்னாச்சு.. உன் முகறையே சரியில்லயே?” என்று எழில் நண்பனின் முகத்தை ஆராய அவனுக்கு பதிலளிக்காமல் விதுரனை கண்காட்டினான் தமிழ்.

புரிந்து கொண்ட எழில், “டேய் ஹால்ல போய் விளையாடு..” என விதுரனை துரத்த “முடியாது.. இந்த ரூம்ல எனக்கும் ஈகுவல் ரையிட்ஸ் இருக்கு” என்ற விதுரன் தன் விளையாட்டை தொடர்ந்தான்.

அவன் பேச்சில் கடுப்பான எழில், “ஒரு தடவ சொன்னா நீ கேட்க மாட்டியா..” என அதட்ட விதுரனும் பதிலுக்கு பதில் பேச இருவருடையே வாக்குவாதம் வலுக்க “டேய் கொஞ்சம் சும்மா இருங்க டா..” என இருவரையும் அடக்கிய தமிழ், “விது பிளீஸ் டா.. கொஞ்சம் பர்சனல்லா பேசணும்..” என்றான் கெஞ்சலாக.

“அப்படி அமைதியாக சொன்னா போகப் போறேன்.. இவன் என்னமோ ஓவரா அதட்டுறான்” என எழிலை முறைத்த விதுரன் அங்கிருந்த தலையணையை தூக்கி அவன்மீது வீசிவிட்டு அறையிலிருந்து வெளியே சென்றான்.

“இவனுக்கு வர வர திமிரு ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு..” எரிச்சலுடன் முணுமுணுத்து விட்டு தமிழிடம் திரும்பிய எழில், “என்னாச்சு எரும உன் மூஞ்சிய சரியில்ல?” என்று கேட்க “எழிலு.. இசை கால் பண்ண அட்டென்ட் பண்ண மாட்டிங்கிறா டா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..” நண்பனிடம் மொத்தமாய் உடைந்தான் தமிழ்.

அவன் பதட்டத்தை கண்டவன், “டென்ஷன் ஆகாத டா.. வேற ஏதாவது வேலையா இருப்பா இன்னோரு டைம் டிரை பண்ணு” என்று கூற

“டேய்.. நேத்துல இருந்து நூறு தடவைக்கு மேல கால் பண்ணீட்டேன் கான்டேக்ட்டே பண்ண முடியல ஸ்விட்ச் ஆஃப்னே வருது.. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.. ” தவிப்புடன் கூறியவன், “பாவம் அழுதுட்டே இருந்தா.. நான் வேற கோவத்துல திட்டீட்டேன்” என புலம்பினான்.

“ஏன் ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா?” எழில் தெளிபடுத்திக் கொள்ள கேட்க இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான் தமிழ்.

அதில் கடுப்பானவன், “என்ன பிரச்சினைனு வாய திறந்து சொன்னாதான தெரியும்?” என கடுகடுக்க நேற்று இசையை சந்தித்ததை சுருக்கமாக கூறினான் தமிழ்.

அனைத்தையும் கேட்டு முடித்த எழிலுக்கும் அதிர்ச்சிதான், கஷ்டமாக இருந்தது. தன்னை போல் ஒருத்தி என நினைக்கையிலே இசையின் மீது தானாய் ஒரு பரிவு. “பாவம் அவளும் என்ன மாதிரி தான் போல” எழிலின் வார்த்தைகள் வேதனையுடன் வர தமிழுக்கு மேலும் வருத்தமானது.

“பயமா இருக்குடா.. எனக்கு இசைய இப்பவே பாக்கனும்” தமிழ் மீண்டும் புலம்ப, காய்ச்சி எடுத்துவிட்டான் எழில்.

“ஏன் டா உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா.. அந்த பொண்ணு எந்த மனநிலையில இருக்குனு தெரிஞ்சும் திட்டியிருக்க.. அப்படியென்ன கோவம் உனக்கு.. மண்ணாங்கட்டி கோவம்..” எழில் கோவத்தில் பல்லை கடிக்க

தமிழும், “அதெப்படி நான் அவள தனியாவிட்டுட்டு போவேன்.. இத்தன நாள்ல இந்த அளவுக்கு கூடவா அவ என்ன புரிஞ்சிக்கல” என்றான் ஆதங்கத்துடன் அவனுக்கு குறையாத கோவத்தில். இப்போது நினைத்தாலும் மனம் ஆறவில்லை அவனுக்கு.

“சத்தமா பேசுனா நீ பேசுறதெல்லாம் சரினு ஆகிறாது.. அவ்ளோ நல்லவன் அந்த பொண்ணு பஸ் ஏறுர வரைக்கும் கூடவே போயிருக்கனும்.. அங்கதான நின்னுட்டு இருந்த” எழில் காட்டமாக கேட்க பதிலளிக்காமல் தலை குனிந்தான் தமிழ்.

“ஒருதர் உங்கிட்ட அவங்க கஷ்டத்த சொல்லும் போது அவங்களுக்கு ஆறுதல் சொல்லலைனா கூட பரவாயில்ல.. இப்படி ஹர்ட் பண்ணாத”

“டேய் நீ இவ்ளோ சொல்ற அளவுக்கு நான் ஒன்னும் ஹார்ஷா பேசல டா.. கோவத்துல லேசா குரல் உயர்த்துனேன் அவ்ளோதான்.. நீ இப்படி திட்டுறது எனக்கு ஏதோ பெரிய தப்பு பண்ணீட்ட மாறி கில்டா இருக்கு..” தமிழ் தன் மனநிலையை விளக்க முயல விடுவதாக இல்லை எழில், எத்தனை கோவம் இருந்திருந்தாலும் அப்போது இன்னிசையிருந்த மனநிலையில் தமிழ் அவளிடம் குரலை கூட உயரத்தியிருக்க கூடாது என்பதே அவனின் எண்ணம்.

“என்ன நியாயம் பேசுனாலும் நீ பண்ணது தப்புதான்..” என்று எழில் பாரபட்சம் பார்க்காமல் கூற “தப்பு தான்.. நான் புரிஞ்சிக்கிட்டேன்.. ஆல்ரெடி இசை என்ன பண்றா எப்படியிருக்கானு தெரியாம எனக்கு பைத்தியம் பிடிக்குது.. ராத்திரியெல்லாம் தூங்கவே இல்ல.. நீ இன்னும் என்ன டென்ஷன் பண்ணாத” என இறைஞ்சலாக தொடங்கி எரிச்சலுடன் முடித்தான் தமிழ்.

அவன் சிவப்பேறிய கண்களே அவன் தூக்கமின்மையை கூற மேலும் அவனை திட்டவில்லை எழில்.

“சரி டென்ஷன் ஆகாத டா.. இன்னோரு டைம் இசைக்கு கால் பண்ணு..” என்று எழில் கூறவும், தமிழ் மீண்டும் ஓர் முறை இசையை தொடர்பு கொள்ள முயற்சிக்க அப்போதும் அனைத்து வைக்கப்பட்டதாகவே வந்தது.

“ஸ்விட்ச் ஆஃப்னே வருது டா.. நல்லா தான இருப்பா..” என பரிதவிப்புடன் கேட்டவனை காண எழிலுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. “நல்லா தான் டா இருப்பா..” என தேற்றியவன் “ரொம்ப யோசிக்காத.. ஃபோன்ல கூட ஏதாவது பிரச்சனையா இருக்கலாம்” என்றான்.

தமிழின் முகம் தெளிவில்லாமல் இருக்க எழிலின் மனதில் மின்னலென மலரின் நினைவு, “டேய்.. மலர் கிட்ட கேட்டியா?”.

“ஹே மலர் இருக்கால..” இசையை தொடர்பு கொள்ள வழி கிடைத்ததும் உற்சாகமானவன் “செம ஐடியா டா.. எனக்கு அது தோணவே இல்ல” என்று கூற “உனக்கு அந்த அளவுக்கு அறிவு வேலை செஞ்சிருந்தா தான் அதிசயம்” நக்கலடித்தான் எழில்.

“ஓவரா ஓட்டாத டா..” என அவன் வாயை அடைத்தவன் உடனே மலரை அழைக்க, அவளையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. “ரிங்கே போகல டா..” என்றான். உடனே தமிழிடமிருந்து ஃபோனை பிடுங்கிய எழில், மலரை மேலும் இரண்டு முறை அழைக்க ரிங்கே போகவில்லை.

“ரிங்கே போல மச்சான்” என்ற எழிலை ஏகத்திற்கும் முறைத்த தமிழ், “இப்போ நான் என்ன கொரியன்லயா சொன்னேன்” என திட்ட, அவனை சட்டை செய்யாமல் ஃபோனை ஆராய்ந்து கொண்டிருந்தான் எழில்.

“டேய் என்ன ஃபோன் வச்சிருக்க உன்ன மாதிரியே எதுக்கும் லாய்க்கில்ல.. சிக்னலே இல்ல.” தமிழை திட்டியவிட்டு ஃபோனை அவனிடமே கொடுத்தவன் தன் ஃபோனில் இருந்து மலரை அழைக்க பொறுமை இழந்த தமிழும், “இப்போ எதுக்கு சும்மா சும்மா ஏதாவது சொல்லீட்டே இருக்க” என்றான் எரிச்சலுடன்.

அதற்கும் பதிலளிக்காத எழில் “டேய் கால் போகுது..” ஃபோனை நீட்ட தமிழும் மேற்கொண்டு வம்பு வளர்க்காமல் ஃபோனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டான்.

புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் ஏற்கலாமா வேண்டாமா என்று தயங்கிய மலர் பின் ட்ரு காலரில் எழிலின் பெயரை கண்டதும், “இவன்லா நமக்கு கால் பண்ண மாட்டானே” என யோசனையுடன் அழைப்பை என்றாள்.

“ஹலோ மலர்.. மலர் நான் தமிழ் பேசுறேன்..” என தமிழின் குரலில் ‘அதானே’ என நினைத்தவள், “சொல்லுங்க சீனியர்..” என்றாள்.

“மலர்.. இசைக்கு என்னாச்சு? ஏன் நான் கால் பண்ணா ஸ்விட்ச்னே வருது.. எந்த பிரச்சனையும் இல்லையே  நல்லாதான இருக்கா..” தமிழின் படபடப்பில், “சீனியர் ரிலேக்ஸ்.. ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க” என அமைதி படுத்தியவள் “எந்த பிரச்சனையும் இல்ல சீனியர்.. இசை நல்லா தான் இருக்கா. அவ ஃபோன்ல டிஸ்ப்ளே உடைஞ்சிருச்சு சர்வீஸ் பண்ண குடுத்திருக்கா. அதான் ஸ்விட்ச் ஆஃப்னு வந்திருக்கும்.. நீங்க பயப்பாடாதீங்க” என்று பொறுமையாக விளக்கினாள்.

“இசை இப்போ நல்லா தானே இருக்கா.. நேத்து ரொம்ப அழுதா” தமிழ் தவிப்புடன் கூற “அழுதாளா?” அதிர்ச்சியுடன் கேட்டாள் மலர்.

“ஆமா..” என்றவன் நேற்று இசையை சந்தித்ததை சுருக்கமாக சொல்லி முடிக்க, “நேத்தே ஏன் எங்கிட்ட சொல்லல?” என கோவமாக கேட்டாள் மலர்.

“எனக்கு தோணல மலர்.. இசை ஃபோன் எடுக்கலனதும் எனக்கு ஒன்னுமே ஓடல..” என்றவனிடம் மேற்கொண்டு கோவத்தை காட்டமுடியவில்லை.

“சரி நீங்க கவலைப்படாதீங்க நான் பாத்துக்கிறேன்”. மலர் பேசி முடிக்கும் முன் “மலர்.. மலர்.. ” என அவசரமா இடைமறித்த தமிழ் “ஒரே ஒரு ஹெல்ப்.. முடியாதுனு மட்டும் சொல்லாத” என பீடிகை போட ‘அப்படி என்ன கேட்க போகிறான்?’ என எழிலும் ஆர்வமாக பார்த்தான்.

“என்ன ஹெல்ப் சொல்லுங்க” மலர் கேட்க “எனக்கு இசைய இப்பவே பாக்கனும்.. பிளீஸ் முடியுமா” என்றான் கெஞ்சலாக.

“சீனியர்.. சான்ஸே இல்ல.. என்ன நெனச்சுட்டு இருக்கீங்க? அவங்க அப்பா இருப்பாரு”

“பிளீஸ் மலர்..”

“சீனியர் கால் பேச வைக்க வேணா டிரை பண்றேன்.. அதுவும் உறுதியா சொல்ல முடியாது.. பட் மீட் பண்ணலாம் சான்ஸே இல்ல” அவள் முடிவாக சொல்லவும் சரியென ஒத்துக் கொண்டவன், “ஏதோ ஒன்னு அவகிட்ட பேசுனா தான் எனக்கு நிம்மதி” என்றான்.

“சரி சீனியர்.. அப்போ நான் இசைய பார்த்துட்டு கால் பண்றேன்” என்று அழைப்பை துண்டித்தாள் மலர்.

அவன் பேசி முடிக்கவும், “என்ன டா பொசுக்குனு பாக்கனும்னு சொல்லீட்ட?” எழில் அதிர்ச்சியாக கேட்க “தோணுச்சு கேட்டுட்டேன்” என்று அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்தான் தமிழினியன்.

எழிலிற்கு தமிழின் இந்த தவிப்பு, ஏக்கம், பேச்சு, பிடிவாதம், இசையிடம் காட்டும் உரிமை என எதுவும் சரியாக படவில்லை. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ என எண்ணி அச்சம் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!