Skip to content
Post Views: 14,760
ஒரு மாதம் முடிந்திருக்க, அதீத கோபத்தில் இருந்தான் அன்பரசு. அவனின் கோபம் புரியாமல், “ஷீட்டிங்லாம் எப்படி போனுச்சு அன்பு? சாப்பாடெல்லாம் நீ சாப்பிடற மாதிரி கிடைச்சதா? இல்ல வில்லன் நடிகர்தானேனு எதோ ஒன்னு போட்டாங்களா?” என அக்கறையாக விசாரித்தார் மாதவன்.
“நம்ம வீட்டளவுக்கு இல்லப்பா, இனி அப்படி எதிர்பார்க்கவும் முடியாது” என்றான்.
“ஏன்ப்பா இறுக்கமா இருக்க?”
“ப்ச்” என தலைகோதி சுவற்றில் லேசாய் குத்தியவன், “ஜனனிம்மா ஸ்கூல் கிளம்பின பின்ன சொல்றேன்ப்பா” என்றான் இறுக்கமாகவே.
Advertisement
பிறகு ஜனனி குளித்து வர, “அப்பா… எப்போ வந்திங்க?” என்றாள் மிகுந்த மகிழ்வோடு.
“இப்போதான்டா” என மகளை அணைத்து நெற்றி முத்தம் வைத்து, “போய் சீக்கிரம் யூனிஃபார்ம் போட்டுட்டு வா, ஸ்கூலுக்கு டைம் ஆகிடப்போகுது. ஈவ்னிங் நிறைய பேசலாம்” என்றவன், “அத்தை எங்கப்பா?” என்றான்.
“இங்க பக்கத்துல ஒரு காரியமாகிடுச்சு, அங்க போயிருக்கு. முன்னவே போய்டுச்சு, கொஞ்ச நேரத்துல வந்திடும்”
Advertisement
அரைமணி நேரத்தில் ஜனனி பள்ளிக்கு கிளம்ப, அன்பரசு குளித்து வந்தான். உண்ட பின்னே கேட்கலாம் என “சாப்பிட வா அன்பு” என்றார் மாதவன்.
Advertisement
“பசியே இல்லப்பா” என்றவன், “அந்த ரங்கசாமி பெரியவர் எதாவது சொன்னாராப்பா?” என்றான்.
தேவையில்லாமல் மகன் கேட்கமாட்டானே என யோசித்தவாறே “ஏன்ப்பா? ஒன்னும் சொல்லலையே” என்றார்.
“இங்க ஜிம்முக்கு வரவனுங்க யாரோ அவங்க பொண்ணை கிண்டல் பண்ணியிருக்கானுங்க” என்றான் கோபத்தோடு.
Advertisement
ரங்கசாமி பல வருடங்களாக சொல்வதுதான் என்பதால் “ப்ச் இவ்வளோதானா? நான் கூட என்னவோ ஏதோனு பயந்துட்டேன்” என்றார் அசால்ட்டாக.
“இல்லப்பா, முன்ன மாதிரி பிரச்சனையில்ல இது. உண்மையாவே எதோ வல்கரா பேசியிருப்பானுங்க போல, முன்னபோல அவர் கோபமா பேசல. உங்கப்பன் என்ன பெரிய பிஸ்த்தாவா? வயசான கிழவனால என்ன பண்ண முடியும் எங்களைனு அந்த பொண்ணுகிட்ட கேட்டுருக்கானுங்க. இன்னும் மோசமா பேசியிருக்கானுங்க. ரொம்ப வேதனையோட சொன்னார்ப்பா.
இதுல கொடுமை என்னனா? பழைய சண்டைகளை மனசுல வச்சுககிட்டு பசங்க அப்படித்தான் இருப்பாங்கனு நானும் சொல்லிடுவனோனு என்கிட்ட ரொம்ப பயந்து சொல்றார். அதான் எனக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு” என்றான் அவமானப்பட்ட உணர்வோடு.
“மத்தவனுங்க பண்ணினிதுக்கு நீ ஏன்ப்பா சங்கடப்படுற?” என தேற்றி, “எவன் பார்த்த வேலையிது? ஜிம்முக்கு வரவனுங்களா? இல்ல என் இன்ஸ்டியூட்க்கு வர பசங்களா?” என்றார் கோபத்தோடு.
“பேர் தெரியலைனுட்டார். ஆனா டைப்புக்கு வர பசங்க இல்ல. அந்த பொண்ணு வர நேரம் நம்ம இன்ஸ்டியூட்க்கு ஸ்கூல் பசங்கதான் வராங்க. அவ்வளோ வல்கரா பேசியிருக்கானுங்கனா ஜிம்முக்கு வரவனுங்களாத்தான் இருக்கும். இங்க கேட்டாலும் எவனும் ஒத்துக்கமாட்டானுங்க, அதனால கேக்காம வாட்ச் பண்ணலாம்னு இருக்கேன், நீங்களும் பசங்ககிட்ட ஏதும் விசாரிக்காதிங்க, நான் ஊர்ல இல்லாத நேரம்தான் அதிகமா டீஸ் பண்றானுங்களாம்.
இன்னைக்கு சாயங்காலம் எக்ஸைஸ் பண்ணப்போறதில்ல. அந்த பொண்ணு காலேஜ்லயிருந்து வர ரூட்ல நிக்கப்போறேன், எவன் பண்றானு இன்னைக்கே எனக்கு தெரிஞ்சாகனும்” என கோபத்தோடு சொன்னவன், கல்பனாவை கண்டதும் “அத்தைகிட்ட சொல்ல வேணாம்” என்றான் கட்டளையாக.
“எப்போ வந்த அன்பு? நாளைக்குத்தானே வரேன்ன? உனக்கு சமைக்கலயே” என வருந்தியவர், “இரு குளிச்சிட்டு வந்திடறேன்” என அவசரமாய் குளியலறைக்கு போனார்.
அன்பரசு பிறக்கும் முன்னிருந்தே மாதவனிற்கும் ரங்கசாமி குடும்பத்திற்கும் அவ்வப்போது பிரச்சனை வந்துகொண்டேதான் இருக்கும். குடியிருக்கும் பகுதியில் டைப் இன்ஸ்டியூட் வைக்கலாமா? சைக்கிளை நடுவிலயே நிறுத்திடுறானுங்க, காரை உள்ள விடறதுக்குள்ள எத்தனை முறை இறங்குறது? ரங்கசாமி மாதவனிடம் முறையிடுவார்.
ரங்கசாமியின் காம்ப்ளக்ஸ் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில்தான் மாதவனின் வீடு. வாடகை வாங்க மாதம் ஒரு முறைதான் மாதவனின் வீட்டுப் பக்கம் வருவார். சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் முறையிடும் ரங்கசாமியை கண்டாலே பிடிக்காது மாதவனிற்கு.
வாடகை வாங்க வரதுக்கு டூவீலர்ல வந்தா என்னவாம்? எதோ சின்னப் பசங்க தெரியாம நிறுத்திடுறானுங்க, டைப் பண்ணிட்டிருக்கும்போது கூப்பிட்டு எடுக்க சொல்றது. என்று கடுப்பாவார் மாதவன்.
ஆனால் ரங்கசாமிக்கோ, தான் காரில் வர முடியாததோடு காம்ப்ளக்ஸில் கடை வைத்திருப்பவர்களுக்கும் வழியில் நிற்கும் வாகனங்கள் இடைஞ்சலாக இருக்கவே, ஓரிரு நாள் என்றால் பொறுத்துக்கொள்ளலாம், வருடம் அனைத்தும் என்றால் சிரமம் இல்லையா? மற்றவர்கள் சிரமத்தை பார்க்காமல் தான் சம்பாதித்தால் போதுமா?
வாடகை மட்டும் வாங்க வரிங்க? எங்க பிரச்சனைக்கு அந்த மாதவன்கிட்ட பேசமாட்டேங்கிறிங்க என்று முறையிடுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாதபோது மாதவன் மேல்தான் கோபம் வரும்.
பொறுக்க முடியாமல் மாதவனிடம் பல நாள் வார்த்தைகளால் வரம்பை மீறியிருக்கிறார் ரங்கசாமி. வரம்பை மீறிய வார்த்தைகளால் மாதவனிற்கும் கோபம் வர, உன் சொத்துல நிறுத்தல, கவர்மண்ட் இடத்துலதான் என் பசங்க சைக்கிளை நிறுத்துறாங்க. அப்படித்தான் நிறுத்துவாங்க, உன்னால ஆனதை பார்த்துக்கோ என்று போட்டியாகவே செயல்படுவார் மாதவன்.
டைப் இன்ஸ்டியூட்டினாலேயே இத்தனை பிரச்சனை வர, கடந்த நான்கு வருடமாக ஜிம் நடத்திவரும் அன்பரசுமேல் மேலும் கோபமானார் ரங்கசாமி.
முல்லையின் பள்ளி காலம் வரை காரில் டிரைவரோடு அனுப்பி வைத்தார் ரங்கசாமி. பொறியியல் கல்லூரி வீட்டிலிருந்து இரண்டு மணிநேர பயண தொலைவில் இருக்கவே கல்லூரி பேருந்திலேயே வர மகளும் ஆசைப்பட, வேறு வழியில்லாமல் சம்மதித்தார்.
கல்லூரி முடிந்து மகள் வரும் நேரம் ஜிம்மிற்கு ஆண்கள் பயிற்சி செய்ய வரவே, அவர்கள் தன் மகளை பார்க்கும் முன்பாகவே பயம் உண்டானது ரங்கசாமிக்கு.
மாலை கல்லூரி முடிந்து வரும்போது பேருந்து கார் எடுத்துக்கொண்டு வந்திடுவார் ரங்கசாமி. பத்து நிமிஷம் நடந்தா வீடு வந்திடும், அதுக்கு காரா? என சக மாணவர்கள் கேளி செய்வதால், ஏதும் பிரச்சனை என்றால் சொல்கிறேன் என்று தந்தை வந்து அழைத்து செல்வதை மறுத்துவிட்டாள் முல்லை.
அடுத்தநாள் தனியாக வீட்டிற்கு நடந்து போகும்போதுதான் தந்தை எதற்காக கார் எடுத்து வந்தார் எனப்புரிந்தது முல்லைக்கு. ’அப்பா நல்லா தடிமாடாட்டம் இருக்கானுங்க, பார்க்கவே பயமா இருக்குப்பா, என்னைப் பார்த்து பாட்டு பாடுறாங்க’ என்று முல்லை பயத்தோடு தந்தையிடம் சொல்ல, பதறிப்போனார் ரங்கசாமி.
இதுக்கெல்லாம் பயப்படுவியா? என்ன செய்திடுவானுங்க? நல்லா திட்டிவிடு என்று ஜானகி சொல்ல, தந்தையின் பயம் பார்த்து அடுத்தநாள் வழியில் நடப்பதை அன்னையிடம் மட்டுமே சொல்வாள்.
ஒருநாள் சொன்னதற்கே தினமும் மகளிடம் விசாரிப்பார் ரங்கசாமி. தந்தையின் நிம்மதிக்காக நான் திட்டவும் யாரும் எதுவும் சொல்லலப்பா என்றிருந்தாள்.
நான்கு வருடமாக தன்னை கேளி செய்பவர்களை சமாளித்தவளால் அன்று நடந்ததை சமாளிக்கவும் முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க, வீட்டில் ரங்கசாமி இருந்தபோதும் அன்னையிடம் அனைத்தும் ஒப்புவித்தாள் அவமானத்தோடு.
தாளமுடியவில்லை ரங்கசாமியால். மாதவனிற்கும் தனக்கும் ஆகாதென்பதால், முரடனானாலும் அண்ணன் மகளை தன் மகள் போல் வளர்ப்பவன் மீது நம்பிக்கை வைத்து தன் மகளை கிண்டல் செய்தவர்களை அன்பரசிடம் முறையிட முடிவெடுத்து, அவன் வரவிற்காக பத்து நாள் காத்திருந்து இன்று காலையில் சொன்னார்.
ரங்கசாமி சொன்னதே மனதில் ஓட, மாலைவரை பொழுதை நெட்டித்தள்ளியவன் சரியாக மூன்றரை மணிக்கு முல்லை வரும் வழியில் காத்திருந்தான்.
நாலு மணிக்கு மேல்தான் அவளின் கல்லூரி பேருந்து வரும் என தெரியும். ஆனால் முல்லையிடம் யார் வம்பிளுப்பது என அறிந்து கொள்ளும் ஆவலில் முன்னமே வந்திருந்தான்.
அரைமணி நேரத்திற்கு பின்னே முல்லை வர, முல்லையையே பார்த்திருந்தவன் திடீரென அங்கு வந்த ஆதிராஜ் எந்த சந்தில் இருந்து வந்தான் என்று பார்க்கவில்லை. ரங்கசாமி சொன்ன அடையாளம் படி அன்பரசு எதிர்பார்த்தது கஜேந்திரனைத்தான்.
தன் கணிப்பிற்கு மாறாக முல்லையிடம் வந்து நின்ற ஆதிராஜை கண்டவன் வெகுவாய் அதிர்ந்துபோனான். ரங்கசாமி சொன்ன அளவிற்கு தரமற்று பேசுபவன் அல்ல ஆதிராஜ். ஆனால் அந்த நிகழ்விற்கும் ஆதிராஜ் பேசுவதற்கும் ஏதோ சம்மந்தம் இருக்கிறது என சரியாய் கணித்தபடி இருவரையும் பார்த்திருந்தான்.
இவன் என்ன கேட்கிறான்? அவள் ஏன் அதிர்ந்து பார்க்கிறாள்? பின்னே பயத்தை காட்டுகிறாள்? என்ற யோசனையோடு முல்லையை நோக்கி சென்றான் அன்பரசு.
ஆதிராஜ் முதுகு பக்கமாக வந்த கஜேந்திரன் “பத்து நாளா எங்க காணோம்?” என்றான்.
“ஸ்டடி ஹாலிடேஸ் விட்டுருந்தாங்க. இன்னைக்கு எக்ஸாம் போய்ட்டு வந்தேன். நான் கிளம்பறேன்” என்று ஆதிராஜிடம் சொன்னவள் கண்ணில் அன்பரசு பட, இன்னும் அதிர்வாய் விழித்தாள்.
ஜிம்மிற்கு வரும் அனைவருக்கும் தன்மேல் தவறான அபிப்ராயம் இருக்குமோ என நினைத்தவளுக்கு கண்ணீர் வரப்பார்க்க, முயன்று கட்டுப்படுத்தியவள், “நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நானில்ல” என்று அன்பரசை பார்த்தவாறு கஜேந்திரனிடம் கோபமாக சொல்லி கிளம்பியிருந்தாள்.
முல்லையின் பயந்த பார்வை திசை நோக்கியவன், அன்பரசை பார்த்து அதிர்ந்தாலும் “அண்ணா எப்போ வந்திங்க?” என்றான் இயல்பாக.
வேக நடையோடு இருவரையும் நெருங்கியவன், “என்ன நடக்குது ஆதி?” என்றான் கோபமாக.
“ஒன்னுமில்லண்ணா” என அவசரமாய் பதிலளித்தான் கஜேந்திரன்.
கஜேந்திரன் பதட்டத்திலேயே இவன்தான் முல்லையிடம் பேசியிருக்கிறான் என கணித்தாலும், முழுமையாய் விசயத்தை அறிந்துகொள்ள, “இந்த பொண்ணுகிட்ட உங்களுக்கு என்ன பேச்சு?” என்றான் இருவரிடமும்.
“சும்மா ப்ரப்போஸ் பண்ணினேன்ண்ணா, பயந்துட்டா போல, பத்து நாளா ஆளே காணோம். அதான்… பயப்படாதனு தைரியம் சொல்லிட்டிருந்தேன்” என்று கஜேந்திரன் சொல்ல, அன்பரசு ஆதிராஜை பார்த்த பார்வையில் சிரம் தாழ்த்தினான் ஆதிராஜ்.
“நீயும் அந்த பொண்ணை ட்ரை பண்றியா ஆதி?” என முறைக்க, “அச்சோ இல்லண்ணா” என ஆதிராஜ் பதறி சொல்ல, “சரி வாங்க இரண்டுபேரும்” என்று வேக நடையோடு தனது ஜிம்மிற்குள் நுழைந்தான்.
மனதில் உதறலெடுத்தது கஜேந்திரனுக்கு. என்ன சொல்லலாம் என யோசித்தவாறே உள்ளே வந்தான்.
ஆதிராஜும் உள்ளே வர, “நீ போய் ஸ்டார்ட் பண்ணு கஜா” என அவனை அனுப்பி, “அந்த பொண்ணை உன் ஆதிலஷ்மியா (தங்கை) நினைச்சு நடந்ததை சொல்லு ஆதி” என்றான் உள்ளடக்கிய கோபத்தோடு.
ஆதிராஜ் சொல்ல சொல்ல, இங்கே கஜேந்திரனுக்கு உதறல் எடுக்க, பெண்ணின் தகப்பனாக தன்னிடம் சொல்ல முடியாமல் சில விசயங்களை மறைத்திருக்கிறார். திருமணமாகாவிட்டாலும் தகப்பன் என்ற உணர்வை ஜனனி மூலம் ஏழு வருடமாய் அனுபவிக்கிறான் அல்லவா?
ரங்கசாமியை நினைக்க மனம் வலித்தது. கஜேந்திரனின் பேச்சிற்கு அவனை வெட்டி போடும் ஆத்திரம் இருந்திருக்கும். ஆனால் வயது மூப்பு கொடுத்த இயலாமை அவருக்கு எத்தனை மன வேதனையை கொடுத்திருக்கும்? என ரங்கசாமியை நினைத்தவாறே கஜேந்திரனிடம் சென்றான் ஆத்திரத்தோடு.
error: Content is protected !!